Published:Updated:

ஊசிப்புட்டான் - `பட்டைக்கு எப்பயுமே பாளையங்கொட்டைதான்!'|அத்தியாயம் - 3

ஊசிப்புட்டான்

பகல் நேரங்களில் `அரிஷ்டம்’ என்று அரசாங்கத்தாலும், `மாம்பட்டை’ என்று பொதுமக்களாலும் அழைக்கப்பட்ட போதை வஸ்துவைக் குடிக்க அந்த ஊரிலிருக்கும், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களும் வருவர்.

ஊசிப்புட்டான் - `பட்டைக்கு எப்பயுமே பாளையங்கொட்டைதான்!'|அத்தியாயம் - 3

பகல் நேரங்களில் `அரிஷ்டம்’ என்று அரசாங்கத்தாலும், `மாம்பட்டை’ என்று பொதுமக்களாலும் அழைக்கப்பட்ட போதை வஸ்துவைக் குடிக்க அந்த ஊரிலிருக்கும், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களும் வருவர்.

Published:Updated:
ஊசிப்புட்டான்

`தவறு செய்கிறோம்’ என்கிற நினைப்போடு ஒரு செயலைச் செய்கையில்தான் குற்றவுணர்வு தோன்றும். அதே தவற்றை மீண்டும் மீண்டும் செய்யத் தொடங்கியதும், அந்தச் செயல் இயல்பென்றாகி, குற்றவுணர்வைக் காணாமல் போகச் செய்வதோடு, அதை நியாயப்படுத்தவும் செய்துவிடும். ரவியின் நிலையும் அப்படித்தான் ஆகியிருந்தது. முதன்முறையாக என்றைக்குப் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டு அம்பலப்பதிக்குச் செல்லும் வழியில் பால்ராஜைச் சந்தித்து பேசத் தொடங்கினானோ, அன்றிலிருந்து அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடத் தொடங்கினான். ஆரம்பத்திலிருந்த பயம், பதற்றம், குற்றவுணர்ச்சி போன்ற அனைத்தையும் தொலைத்துவிட்டு சின்னத்தம்பியின் பெட்டிக்கடைக்கு வந்து பால்ராஜைச் சந்திப்பதை வாடிக்கையாக்கிக்கொண்டான்.

சின்னத்தம்பியின் கடை என்பது அந்த ஊரிலிருக்கும் அனைத்துக் குடிமக்களுக்குமான `பார்’ஆகச் செயல்பட்டுவந்தது. பகல் நேரங்களில் `அரிஷ்டம்’ என்று அரசாங்கத்தாலும், `மாம்பட்டை’ என்று பொதுமக்களாலும் அழைக்கப்பட்ட போதை வஸ்துவைக் குடிக்க அந்த ஊரிலிருக்கும், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களும் வருவர். மாலை ஏழு மணிக்குப் பிறகாக ஒயின் ஷாப் சென்று விஸ்கியும் பிராந்தியும் வாங்கிக் குடிக்குமளவுக்கு வசதிமிக்க தனவந்தர்களும் வருவர்.

மாம்பட்டை அருந்த வருபவர்களுக்கும், விஸ்கி, பிராந்தி அருந்த வருபவர்களுக்கும் தொட்டுக்கொள்ளத் தேவைப்படும் அனைத்து உணவுப் பதார்த்தங்களும் அவனுடைய கடையில் இருக்கும்.

சொல்லப்போனால் அது மட்டும்தான் இருக்கும். இதில் அனைத்தும் என்று சொல்வதால், அந்தக் கடையொன்றும் அத்தனை பெரிய கடையெல்லாம் கிடையாது. எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய் சிறு சிறு பாக்கெட்டுகளாக நான்கைந்து வில்லைகள் தொங்கும். பாளையங்கொட்டை, பச்சை, பேயன், வெள்ளைத் துலுவன் அல்லது செந்துலுவன் என்று மூன்று நான்கு பழ வகைகளின் குலை தொங்கும். பின்னர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வகையறாக்கள். அவை போக சிறு சிறு குப்பிகளில் முறுக்கு, கடலைமிட்டாய், இறுகிப்போன மைசூர்பாகு போன்றவையும், குடித்தவர்கள் பிடித்துக்கொள்ள சொக்கலால், செய்யது பீடிகளும், சிசர் பிளெய்ன், கோல்டு பிளெய்ன் சிகரெட்களும் என்று சின்னத்தம்பியின் கடையிலிருக்கும் சாமான்களை ஒரு முழு நீளப் பேப்பரை நான்காக மடித்து அதன் பாதியில் அத்தனை கடைச் சரக்கையும் எழுதிவிடலாம். அவ்வளவுதான் அவன் கடையிலிருக்கும் வியாபாரப் பண்டம். ஒருமுறை பால்ராஜ், ரவிக்கு சின்னத்தம்பியின் கடையிலிருக்கும் மைசூர்பாகை வாங்கிக் கொடுத்தார். அதை அவன் கடித்துத் திங்க சிரமப்படுவதைப் பார்த்து, கடையின் அருகிலிருந்த வெற்றிலை இடிக்கும் உரலில்வைத்து இடித்துக் கொடுத்தார். அன்றிலிருந்து ரவி மைசூர்பாகு சாப்பிடுவதையே நிறுத்திவிட்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்றைய தினம் ரவி, சின்னத்தம்பியின் கடையை வந்தடைந்தபோது, பால்ராஜ் வந்திருக்கவில்லை. தன்னுடைய பாடப் புத்தகக் கூடையைக் கடையினுள் வைக்கச் சொல்லி சின்னத்தம்பியின் வசம் ஒப்படைத்துவிட்டு, தன் கையோடு கொண்டு வந்திருந்த மாற்றுத் துணியைக் கடைக்குப் பின்புறமாகச் சென்று மாற்றிக்கொண்டு வந்து பள்ளிச் சீருடைத் துணியையும் கூடையில் வைக்கச் சொல்லி சின்னத்தம்பியிடம் ரவி கொடுக்கவும், ``ஏன் ரவி இன்னிக்கும் நீ பள்ளியோடத்துக்கு போவலியா..?” என்று எந்தவிதமான அக்கறையோ, கரிசனமோ இல்லாத குரலில் பொழுதுபோக்கக் கேட்பதைப்போல ரவியிடம் கேட்டான் சின்னத்தம்பி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஸ்கூலுக்குப் போறதுக்கே செறையா இருக்குண்ணே...” என்று பதிலளித்தான் ரவி.

``அவனவன் பள்ளியோடத்துக்குப் போக வழியில்லாம உக்காந்திருக்கான்...” என சின்னத்தம்பி முணுமுணுத்தது ரவியின் காதுகளிலும் கேட்டது.

``ஸ்கூ்லுக்குப் போனா அவனவன் என் உருவத்தைவெச்சு `ஊசி ஊசி’ன்னு கிண்டல் பண்றானுக. வாத்தியான்கிட்ட போய் இதைச் சொன்னா…

என்னைக் கிண்டல் பண்ணினவனுங்களைக் கூப்பிட்டு என்ன ஏதுன்னு விசாரிக்கறதை விட்டுட்டு, என்னையே அடி சாத்துறானுங்க.

ஏன்னு கேட்டா, `அப்பனை மாதிரி வரலாம்னு பாக்கிறியால’ன்னு சொல்லி இன்னும் அதிகமா ரெண்டு அடி அடிக்குதானுவ. சரி. `வேற ஸ்கூல்ல சேத்துவிடும்மா’ன்னு வீட்ல அம்மைகிட்ட சொன்னா, `இந்த ஒரு வருஷம் இந்த ஸ்கூல்ல படி ரவி. அடுத்த வருஷம் உன்னை வேற ஸ்கூல்ல சேத்துவிடுறேன்’னு சொல்லுதா. இந்த வருஷம் ஸ்கூலுக்குப் போனாலும் ஃபெயிலாகத்தான் போறேன். போகலேன்னாலும் ஃபெயிலாகத்தான் போறேன். அதுக்கு ஸ்கூலுக்கே போகாம இருந்துட்டம்னா வாத்தியாங்கிட்டருந்து கெடைக்கிற அடியும் பேச்சுமாவது எனக்கு மிச்சப்படுமே...” ஒரே மூச்சில் சொல்லி முடித்த ரவியை ஆச்சர்யமாகப் பார்த்தான் சின்னத்தம்பி.

``ஏண்ணே அப்படிப் பாக்குறீங்க?’’

``ஒண்ணுல்ல ரவி, பத்து நாள் முன்ன உன்னை இந்தக் கடைக்கு பால்ராஜு கூட்டிட்டு வந்தப்ப

இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்ககுற கணக்குல நின்னுட்டுருந்த நீயா இப்படிப் பேசப் பழகிட்டேன்னு ஆச்சர்யமா இருக்கு”

என்ற சின்னத்தம்பி. பின்னர், ``ரவி எனக்கொரு சின்ன ஒதவி பண்றியா?” எனக் கேட்டான்.

``என்னண்ணே?”

``காலைல குடிச்ச பழங்கஞ்சியோ, சுண்டக்கறியோ வயித்துக்கு ஒத்துக்கலைன்னு நெனைக்கேன். கொல்லைக்கி முட்டிட்டு வருது. கொஞ்ச நேரம் கடையப் பாத்துக்கிடுதியா, நான் கொஞ்சம் ஒதுங்கிட்டு வந்துடுதேன்.”

``சரிண்ணே. நீங்க போயிட்டு வாங்க.”

கடைக்குள் போடப்பட்டிருந்த பள்ளத்திலிருந்து வெளியேறி, கடையின் வாசல் வழியே வெளியே வந்து, வலது காலை விந்தி விந்தி நடந்து சென்றவனைப் பார்த்தபடியே அமர்ந்திருந்த ரவி, கடையினுள் எட்டிப் பார்த்தான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

கடையின் தரைத்தளத்தில் இரண்டுக்கு இரண்டு நீள அகலத்தில் பள்ளமொன்று தோண்டப்பட்டிருந்தது. அந்தப் பள்ளம் ஏன் தோண்டப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கடையினுள் சென்றான் ரவி.

அந்தப் பள்ளம் சுமார் மூன்றிலிருந்து நான்கடி ஆழம் இருந்தது. அந்தப் பள்ளத்தினுள் காலைத் தொங்கலிட்டபடி அமர்ந்து பார்த்தான். இத்தனை நாள்களும் சின்னத்தம்பி கடையினுள் சம்மணங்காலிட்டோ அல்லது கால் நீட்டியோ அமர்ந்திருப்பான் என்று, தான் நினைத்திருந்தது எத்தனை பெரிய தப்பு என்று அவன் மனம் உணர்ந்தது. அதுவுமில்லாமல் அவன் விந்தி விந்தி நடந்து சென்றது ரவியின் மனதில் ஏதோவொருவிதமான இரக்கத்தையும் தோற்றுவித்திருந்தது. அப்படியே சுவரோரமாக முதுகு சாய்த்து, கடையை ஒரு முறை பார்வையால் அளந்தான்.

அவனுடைய இடது கையின் ஓரமாக மரத்தாலான ஒரு பெட்டி இருந்தது. முன்பின் தள்ளித் திறக்கும் வகையிலிருந்த அதன் மூடியைத் தள்ளிப் பார்த்தான். அந்தப் பெட்டி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் சில சில்லைறை நாணயங்களும், மறு பகுதியில் ரூபாய் நோட்டுகளும் கிடந்தன.

கடையின் முன்னாலிருந்த ஒவ்வொரு குப்பியின் மூடியையும் திறந்து பார்த்து மூடிவைத்தான். கடையின் உள்ளிருந்து வெளியே பார்ப்பதற்கு, இத்தனை நேரமும் அவன் பார்த்த வெளி உலகம் வேறு மாதிரியாக அவனுக்குத் தெரிந்தது. சின்னத்தம்பி காலையிலிருந்து இரவு வரையிலும் எப்படித்தான் இந்தக் கடையினுள்ளேயே அடைந்துகிடக்கிறானோ என்று தனக்குள்ளேயே நினைத்துக்கொண்ட ரவி, பேச்சுத்துணைக்கு யாரேனும் வர மாட்டார்களா என்று கடையிலிருந்து தலையை வெளியே நீட்டி சாலையின் இருமருங்கையும் பார்த்தான். மொத்தச் சாலையும் வெறிச்சோடிப்போயிருந்தது.

நேரம் நொடி நொடியாக நகர, அவனுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. பாடப் புத்தகங்கள் திணிக்கப்பட்டிருந்த புத்தகப்பையும், அதன் மேல் சுருட்டிவைக்கப்பட்டிருந்த பள்ளிச்சீருடையும் அவன் கண்ணில்பட்டன. ஒரு கணம் பள்ளிக்கே சென்றிருக்கலாமோ என்றுகூட அவனுக்குத் தோன்றியது.

`கொல்லைக்கி போயிட்டு வர்றதுக்கா இவனுக்கு இவ்வளவு நேரம்..?’ மனதினுள் கறுவிக்கொண்டான் ரவி.

``ஏந்தம்பி... சின்னத்தம்பி எங்க போனான்..?” கடை முகப்பில் கேட்ட சத்தத்தால் தன் நினைவு களைந்தான் ரவி.

``ஏந்தம்பி... சின்னத்தம்பி இல்லியா..? எங்க போனான்..?” மீண்டும் அவர் கேட்கவும், ``அண்ணே வீடு வரைக்கும் போயிருக்கார். உங்களுக்கு என்ன வேணும் அண்ணாச்சி?” எனக் கேட்டான் ரவி.

``ஒரு பாட்டிலும் ஒரு கப்பும்” என்று சொன்னபடியே தன் லுங்கியின் இடுப்பு மடிப்பிலிருந்த பீடிக்கட்டிலிருந்து ஒரு பீடியை உருவி, பல்லால் கடித்துப் பற்றவைத்துக்கொண்டார் அவர்.

சர்பத் கப் ஒன்றை எடுத்து அவர் முன்னால் வைத்தான். ஆனால் அவர் கேட்ட பாட்டில் எங்கே இருக்கிறது எனத் தெரியாமல் முழித்தவனைப் பார்த்து, ``அந்தா... உன் வலது பக்கம் இருக்கு பாருடே” என்றார் அவர். அவர் சொன்ன திக்கில் அழுக்கு இறுகிப்போய் கருமை நிறமேறியிருந்த கோணிப்பை ஒன்று தெரிந்தது. கோணியை விலக்கிவிட்டுப் பார்த்தான்.

உள்ளே இருமல் மருந்துக் குப்பியின் அளவைவிடவும் சற்று பெரிய அளவில் பதினைந்து குப்பிகள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

அதில் ஒன்றை எடுத்து அவர் கையில் கொடுத்தான்.

வாயில் கடித்துவைத்திருந்த பீடியை எடுக்காமலேயே அந்த பாட்டிலைத் திறந்து, சர்பத் கப்பை ஒரு முறை நன்றாக உதறி, அதில் துளியளவும் தண்ணீர் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மாம்பட்டையை அந்த கப்பில் ஊற்றினார்.

அழுகிய பழத்தின் நெடியோடு, ஈரப்பட்டையிலிருந்து கிளம்பும் ஊசிப்போன வாடையும் கலந்து ரவியின் நாசியைத் தாக்கின.

``நம்ம ஐட்டம்கூட துளித் தண்ணி சேந்தாலும் வயித்த கலக்கிரும். அப்புறமா போற வழியெல்லாம் பீச்சிக்கிட்டேதான் போகணும்” என்று கரகரப்பான் குரலில் தனக்குத் தானே பேசியபடி, அந்த முழுக் கோப்பைப் பட்டையையும் ஒரே மூச்சில் குடித்துவிட்டு, கோப்பையைக் கீழே வைத்த கையோடு பாளையங்கொட்டைப் பழமொன்றை உரித்து வாயில் போட்டுக்கொண்டார். ``என்னதான் சொல்லு பாளையங்கொட்டய அடிச்சுக்க ஒருத்தனாலயும் முடியாது” மீண்டும் தனக்குத்தானே பேசிக்கொண்டு, அணைந்து போகவிருந்த பீடியை நான்கைந்து இழுப்பு இழுத்து புகையை ஊதினார்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து, ``தம்பிய எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்குதே...” என்றார்.

ரவியின் மனதினுள் மாட்டிக் கொண்டோமா என்ற பயம் தோன்ற, இதற்கு என்ன பதில் சொல்லித் தப்பிப்பது என அவன் யோசித்த அதேவேளையில், ``பால்ராஜு கூட வருவேதான?” என்றார். ரவியும் நிம்மதிப் பெருமூச்சோடு, ஆமாமெனத் தலையாட்டினான்.

``ஆமா... பால்ராஜ் எங்க?”

``இன்னும் வரலை. வர்ற நேரம்தான்.”

``ஆமா பால்ராஜுக்கு நீ யாரு?” அடுத்த கேள்விக்கணை அவரிடமிருந்து வெளிப்பட்டது.

``அவரு என்னோட மாமா” என்றான்

``பால்ராஜ் மருமவனா நீ...” என்று சொல்கையில் அவரது குரலில் ஏற்கெனவே இருந்த கரகரப்பு தொலைந்து, ஒரு சிநேக தொனி உருவாகியிருந்ததை ரவியால் எளிதாக இனம் கண்டுகொள்ள முடிந்தது.

``ஆமா.”

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``பால்ராஜை சாயந்தரம் வந்து பார்க்குறேன்னு சொல்லு” எனச் சொல்லிவிட்டு தேங்காயிலிருந்து உரித்த நாரால் முடிச்சிடப்பட்ட நான்கு தேங்காய்களைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு, கறுக்கருவாளை இடுப்பில் தொங்கவிட்டு நடந்து செல்லும் அவரைப் பார்த்தபடியே அமர்ந்திருந்த ரவியின் கைகளில் அவர் கொடுத்துச் சென்ற ஐந்து ஒற்றை ரூபாய் மற்றும் இரண்டு ஐம்பது பைசா நாணயங்கள் இருந்தன.

கல்லாப்பெட்டியில் மொத்தக் காசையும் போடப் போனவன், ஏதோ யோசித்தவனாக ஐம்பது பைசாவைத் தன் கையில் வைத்துக்கொண்டு, மீதத்தை கல்லாவில் போட்டான்.

சரக்கைக் கைமாற்றி விற்றதில் ஈட்டிய முதல் வருமானம் அவனைப் பார்த்து பூடகமாகச் சிரித்தது.

(திமுறுவான்...)