Published:Updated:

ஊசிப்புட்டான் | ``உங்கம்மைக்கும் அவனுக்குமான ஒறவு அப்படி"| அத்தியாயம் - 35

ஊசிப்புட்டான்

“பீதியதிக்கியா மக்கா” என்று தன் கையிலிருந்த பீடியை ரவியை நோக்கி நீட்டியவன், அடுத்த நொடியே, “நீயெல்லாம் பெதியாளாகித்த, எங்கித்தெருந்தெல்லாம் பீதிய வாங்குவியா” என்றபடியே நீட்டிய கையைப் பின்னிழுத்துக்கொண்டான்.

ஊசிப்புட்டான் | ``உங்கம்மைக்கும் அவனுக்குமான ஒறவு அப்படி"| அத்தியாயம் - 35

“பீதியதிக்கியா மக்கா” என்று தன் கையிலிருந்த பீடியை ரவியை நோக்கி நீட்டியவன், அடுத்த நொடியே, “நீயெல்லாம் பெதியாளாகித்த, எங்கித்தெருந்தெல்லாம் பீதிய வாங்குவியா” என்றபடியே நீட்டிய கையைப் பின்னிழுத்துக்கொண்டான்.

Published:Updated:
ஊசிப்புட்டான்

நான்கு வருட காலம் என்பது பலருக்கும் கண்மூடித் திறப்பதற்குள் கடந்துபோய்விட்டதாகத் தோன்றும். ஆனால் காலத்தைப் பொறுத்தவரையிலும் அது யாருக்காகவும் தன் வேகத்தை மட்டுப்படுத்திக்கொள்வதுமில்லை, தன்னை வேகப்படுத்திக்கொள்வதுமில்லை. அது தன் பாட்டுக்கு, யார் யாருக்குள் என்னென்ன மாற்றம் நிகழ வேண்டுமோ, நிகழ்த்தப்பட வேண்டுமோ, யார் யாருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட வேண்டுமோ அவை அனைத்தையும் எவ்வித சமரசமுமின்றி நிகழ்த்தியபடியே தன்னுடைய இயல்பான வேகத்திலேயேதான் சென்றுகொண்டிருக்கும்.

இந்த நான்கு வருட காலமென்பது ரவியினுள் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்திவிட்டிருந்ததைப்போலவே நாகராஜனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்திவிட்டிருந்தது, எவ்வித சமரசமுமின்றி மிகவும் குரூரமாக.

சிஇஓ ஆபீஸின் வராண்டாவில் உருக்குலைந்து போய் அமர்ந்திருந்த நாகராஜனை ரவி பார்த்தபோது அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. அமர்ந்திருப்பது நாகராஜன்தானா என்கிற சந்தேகத்தோடு, ரவி நாகராஜனை நெருங்கி “நாராஜண்ணே” என்று அழைத்தான். சத்தம் கேட்டு அவனை நோக்கித் திரும்பிய நாகராஜன், “லே தெவி எப்தி மக்கா இதுக்கே” என்று முகம் மலரக் கேட்டவன் வாயில் முன்பற்கள் இரண்டைக் காணவில்லை.

“என்னண்ணே ஏன்ணே இப்படியாகிட்ட” என்று அதிர்ச்சியோடு ரவி கேட்க, “அதெல்லாம் ஒது பெதிய கதெ மக்கா” என்றவன் வாயிலிருந்து தமிழின் கூரான வார்த்தைகளெல்லாம் அவனது உடைந்த பற்களின் வழியே வெளிவருகையில் தன் கூர் அனைத்தையும் இழந்து, மழுங்கிப்போய் ஈர மணலின் மென்மையோடு வெளிவந்தன. அப்படிக் கூர் மழுங்கிய எழுத்துகள் ரவியின் முகத்தில் எச்சிலாகத் தெறித்தன. ரவிக்கு அது எரிச்சலை உண்டு பண்ணினாலும், நாகராஜனின் உருவத்தோடு அவனுக்கு உண்டான பரிதாபம், அந்த எரிச்சலை அடக்கியது.

ரவி அவனைக் கடைசியாகப் பார்த்தபோது எந்த அளவுக்கு திடகாத்திரமானவனாக இருந்தானோ அந்த அளவுக்கு அவனது உடல் இப்போது சீரழிந்து, கொடியில் காயப்போடுவதற்கு முன்பு தொங்கப்போட்டிருக்கும் ஈரத்துணியைப் போன்று கசங்கி, சுருங்கிப்போயிருந்தது.

“அந்த எஸ்ஸே யிதுக்கான்ல மக்கா என் கொ*** பிதுக்கி வித்துத்தான், ஹிஹிஹி” என்று நாகராஜன் வித்தியாசமாகச் சிரித்தபடி சொன்னான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

அவன் எந்த எஸ்-ஸையைச் சொல்கிறான் என்பது ரவிக்குப் புரியவில்லை, போலவே அவன் என்ன சொல்கிறான் என்பதும் அவனுக்கு முழுவதுமாகப் புரியவில்லை. அதைவிடவும் அவன் ஏன் இப்படி சிரித்துக்கொண்டேயிருக்கிறான் என்பது அவனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை.

“அண்ணே... எந்த எஸ்ஸைய்ய சொல்லுகன்னும் புரியலை. அவென் என்ன பண்ணினான்னும் எனக்குப் புரியலை. அதெவிட இப்ப என்ன மயித்துக்கு இப்டி லூசு மாரி சிரிச்சிட்டிருக்கன்னு எனக்குச் சுத்தமாப் புரியலை” என்று குழப்பத்தோடு தன் மனதில் தோன்றியதை அப்படியே கேட்டான்.

“வெத இதுக்குல்லா மக்கா வெத, அதெ எலெல கலந்து தந்துத்தானுவோ. நானும் அது தெதியாம இழுத்துத்தே. ஹி ஹி ஹி” மீண்டும் அவன் எச்சில் தெறிக்கும் சிரிப்போடு சொன்னான்.

“எந்த வெதயண்ணே சொல்லுக நீ. என்ன ஆச்சி ஒனக்கு. ஏன் இப்டி இங்க வந்து உக்காந்திருக்க” என்று கேட்ட ரவியின் கண்களில் கண்ணீர் வழிய, அது எதையுமே கண்டுகொள்ளாதவனாக, நாகராஜன் தன் அழுக்கேறிய சட்டைப் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான்.

மண்டை வீங்கியிருந்த பீடியைப் பார்த்ததும், ரவிக்கு அது வெறும் பீடியல்ல என்பது புரிந்துபோனது. அதே கணத்தில் அவன் மனத்தினுள் பிள்ளையார்புரத்தில் வைத்து அவன் பீடியைப் பற்றவைத்த பாங்கும் நினைவில் வந்துபோனது.

பீடியைப் பற்றவைத்து ஓர் இழுப்பு இழுத்து அவன் ஊதினான். புகையிலிருந்த கஞ்சாவின் நெடி, ரவியின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எண்ணே... ஏம்ணே இப்டியாயிட்ட” என்று கேட்டபடியே ரவி, நாகராஜனின் சட்டையைப் பிடித்து உலுப்பினான்.

“பீதியதிக்கியா மக்கா” என்று தன் கையிலிருந்த பீடியை ரவியை நோக்கி நீட்டியவன், அடுத்த நொடியே, “நீயெல்லா பெதியாளாகித்த, எங்கித்தெருந்தெல்லாம் பீதிய வாங்குவியா” என்றபடியே நீட்டிய கையைப் பின்னிழுத்துக்கொண்டான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரவி எதுவும் பேசாமல் அவனருகே அமர்ந்துகொண்டான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்தபடியே இருந்தது.

“இந்த போலீஸுகாதவனுவள மத்தும் நம்பவே கூதாது மக்கா” என்று ரவி அருகிலிருப்பதைககூடக் கண்டுகொள்ளாதவனாக நாகராஜன் பேச ஆரம்பிக்க, ரவி உடனே “எந்த போலீஸ்காரனைச் சொல்லுதண்ணே” எனக் கேட்கவும். நாகராஜன் பேச்சை நிறுத்திக்கொண்டு ரவியைத் திரும்பிப் பார்த்தான். அதுவரையில் இல்லாத கூரொன்று அவன் பார்வையில் ஏறியிருந்ததை ரவி கவனித்தான்.

“நீ தனியாதா வந்துருதுக்கியா... இல்லாட்டி என்னை அதிக்க ஆளோட வந்திருக்கியா...” அத்தனை நேரமும் இருந்த கேலிச் சிரிப்பு அவன் முகத்தில் மறைந்துபோயிருந்தது.

“உன்னை அடிக்க எதுக்குண்ணே நான் ஆளைக் கூட்டிட்டு வரப் போறேன்...”

“அப்புதமா எதுக்குலே இந்த எதத்துக்கு இந்த நேதத்துல வந்த?” நாகராஜனின் கேள்வியில் ஓர் எச்சரிக்கையின் தொணி ஏறியிருந்தது.

“இங்க சுள்ளானைப் பார்க்க வந்தேன்ணே. அவனெக் காணம். சரின்னு இங்கே பாத்தா உன்னை மாதிரியே ஒருத்தன் உக்காந்திருக்கது மாதிரி தெரிஞ்சது. அதான் வந்து பாத்தேன்.” என்றான் ரவி.

“ஓ... இப்ப அவெங்கூததான் ஒனக்கிப்ப கூத்தா” என்றபடியே பீடியை ஒருமுறை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டான்.

நாகராஜனின் கேள்வியிலிருந்த நக்கல் ரவியின் மையத்தை லேசாக அசைத்துவிட, “ஏன் அவெங்கூட சுத்தினா ஒனக்கென்ன வந்துச்சு” என்றான்.

“நீ எவெங்கூத வேணுனாலு சுத்திக்க, எனக்கென்ன வந்தது. ஆனா ஒனக்கான நாள ரொம்ப சீக்கிதமா நீ நெதுங்கிதாத. என்னால அவ்ளோதா சொல்ல முதியும்.”

“எம்மேல கை வெக்கணும்னா இன்னொருத்தன் பொறந்துதான் வரணும்” ரவி அவனக்கு எகத்தாளமாக பதில் கொடுத்தான். ஆனால், அவனுடைய எகத்தாளத்துக்கு பதிலாக நாகராஜனிடமிருந்து நக்கலாகவும் விரக்தியாகவும் ஒரு சிரிப்பே பதிலாக வந்தது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“என்னண்ணே ரொம்ப நக்கலா சிரிக்குவா?”

“எங்கொ*** அந்தப் போலீஸுகாதன் புதுக்குன மாதி, எவநாச்சு வந்து ஒங்கொ*** பிதுக்கினா தெதியும். ஹி ஹி ஹி.”

இப்போதுதான் ரவிக்கு அவன் பேசுவதன் அர்த்தம் முழுவதுமாக விளங்கியது.

“நா ஒண்ணும் ஒன்னய மாதிரி இந்தா பிதுக்கிக்கோன்னு கவுட்டைய பொளந்துட்டு ஒண்ணும் நிக்க மாட்டேன் தெரிஞ்சிக்க.”

மீண்டும் நாகராஜனிடமிருந்து விரக்தியாக ஒரு சிரிப்பே பதிலாக வந்தது.

“என்னண்ணே... என்னையப் பார்த்தா ஒனக்கு நக்கலா இருக்கா?”

அதே சிரிப்பே அவனிடமிருந்து மீண்டும் பதிலாக வெளிவந்தது.

“ஏம்ணே இப்டி லூசு கணக்கா சிரிச்சிட்டே இருக்க... எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னைக் கொன்னுடலாம்போலத் தொணுது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டென நாகராஜனின் கண்கள் பிரகாசமடைந்ததைக் கண்டு ரவி திகைக்க, “கொல்லுகதுக்க முந்தி எனக்கு நல்ல பொத்தலமா ஒரு பொத்தலம் வாண்தி தந்துது. அதெ நான் வலிச்சி முதிச்சதும் என்னைக் கொன்னுது சதியா…!”

ரவி திகைப்பிலிருந்து வெளியே வராமல் அப்படியே அமர்ந்திருக்க, “பெதிய ஆளாயித்த மக்கா நீ. எவெங்கித்த கேத்தாலும் ஊசி தெவிங்காதுவானுவ. அன்னிக்கி சொந்த மாதிதி ஒனக்குன்னு ஒது பேர எதுத்துட்ட மக்கா” என்று சொன்னபோது நாகராஜனின் கண்களில் ஒரு நொடி பொறாமை மின்னலாக வெட்டிச் சென்றதை ரவி கவனிக்கவில்லை.

ரவி அமர்ந்திருக்க, நாகராஜன் அங்கிருந்து இறங்கி சிஇஓ ஆபீஸின் கேட்டை நோக்கி வலது காலை இழுத்திழுத்து நடந்து செல்ல ஆரம்பித்தான். அந்த நடை ரவிக்கு சின்னத்தம்பியின் நடையை நினைவுறுத்தியது. அப்படியே சுவரோடு தலை சாய்த்து அமர்ந்தான். அவன் மனதினுள் நாகராஜனைக் கடைசியாக, பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் காலேஜுக்கு முன்பாகச் சந்தித்த நாள் நினைவுக்கு வந்தது.

**

வழக்கமாக அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் திண்டில் நாகராஜன் அமர்ந்திருக்க, அவன் எதிரே ரவி அமர்ந்திருந்தான். “அந்தத் தல்லையத் தின்ன பால்ராஜு என்னைய அடிச்சுப் போட்டான்ணே” உணர்ச்சிப் பெருக்கில் ரவி கத்தினான்.

“இத்தனை நாளும் மாமாவா இருந்தவென் இப்ப உனக்குத் தல்லையத் தின்னவனாயிட்டானா” என்று நாகராஜனிடமிருந்து ஏளனமாக பதில் வந்தது.

அவனது இந்த ஏளனமான எதிர்வினை ரவிக்குக் கோபத்தை அதிகப்படுத்த, “நான் என்னத்தச் சொல்லிக்கிட்டு இருக்கேன்... நீ என்னத்தப் பேசிட்டு இருக்க?” என்றான்.

நாகராஜன் அமைதியாகவே இருக்க, ரவி, “எங்கம்மெய நினைச்சு அவென் ஏன் இவ்வளவு வருத்தப்படுதான்னு எனக்குத் தெரியலை. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு...” பேசியபடியே தன்னுடைய கையைத் தரையில் ஓங்கிக் குத்திக்கொண்டான்.

நாகராஜனிடமிருந்து இம்முறை அர்த்தபுஷ்டியோடு நக்கலான சிரிப்பொன்று பதிலாக வர, ரவி எரிச்சலோடு, “என்னண்ணே ஒரு மாதிரி நக்கலா சிரிக்க?” எனக் கேட்டான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“அதுவா... உங்கம்மைக்கும் அவனுக்குமான ஒறவு அப்படி” என்றான் நாகராஜன்.

ரவி ஒன்றும் புரியாமல் நாகராஜனைப் பார்த்தான்.

“என்னையப் பார்த்தாலே உங்கம்மைக்கு ஏன் ஆவ மாட்டேங்குதுன்னு நீ என்னைக்காச்சும் யோசிச்சு பார்த்திருக்கியா” என்று நாகராஜன் கேட்க, ரவி குழப்பத்தோடு இல்லை என்பதாகத் தலையாட்டினான்.

“உங்கப்பா எறந்ததுக்க அப்புறமா உங்கம்மா அவனெ தொடுப்பா வெச்சுக்கிட்டா, அது எனக்குத் தெரிஞ்சிடிச்சு. அதனாலதான் உங்கம்மைக்கு என்னைப் பார்த்தாலே ஆவலை. எங்கே நான் உங்கிட்ட இதெல்லாம் சொல்லிடுவேனோன்னு பயந்துதான்...” என்று நாகராஜன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவனது கன்னத்தில் பளாரென ஓர் அறை விழ, நாகராஜன் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தான். கண்களில் கொலைவெறியோடு ரவி அவன் முன்னே நின்றுகொண்டிருந்தான்.

“கொஞ்சம் விட்டா ஓவராத்தான் பேசிட்டு போற. எங்கம்மையப் பத்தி உனக்கென்னல தெரியும்” என்று ரவி கோபத்தோடு சீற, நாகராஜனும் விடாமல், “ஒங்கம்மையப் பத்தின உண்மையச் சொன்னதுக்கு ஒனக்கு அவ்ளோ கோவம் வருதால...” என்று பதிலுக்குச் சீறினான்.

“தோ பாருண்ணே... ஒனக்கு அவ்ளோதான் மரியாதை. இனி ஒரு வார்த்தை அம்மையப் பத்திப் பேசின...” பேசியபடியே ரவி அவன்மேல் பாய, நாகராஜன் அவனைத் தள்ளிவிட்டான்.

“லேய்... எம்மேல பாயதுக்கு பதிலு உங்கம்மைக்க மேலயும், அந்தத் தல்லையத் தின்ன பால்ராஜு மேலயும் போய் பாயுல. உண்மை என்னன்னு உனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு ரவியின் பதிலை எதிர்பார்க்காமல் அவன் விறுவிறுவென நடந்து சென்றதை ரவி விழுந்து கிடந்தபடியே பார்த்தான்.

**

ரவி திரும்பிப் பார்த்தான். நாகராஜன் அவன் பார்வையிலிருந்து மறைந்திருந்தான். ரவியின் மனம் ஏதோ அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்க, அங்கிருந்து எழுந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான்.

அவனுக்குத் தனியே எங்கேனும் சென்று அழ வேண்டும்போலிருந்தது. அதைவிடவும் அடிவயிற்றில் மூத்திரம் முடுக்கிக்கொண்டு வந்தது. பத்தல்விளை சாக்கடை அருகே வந்து நின்றான். ஒருகணம் அவன் கனவில் கண்ட தலை அந்தச் சாக்கடையில் மிதப்பதாகத் தோன்ற, சாக்கடையைப் பார்த்தான். ‘லிங்கமண்ணனுக்கத் தலைய இங்கதான் வெட்டிக் கொண்டாந்து போட்டிருந்தானுவ.’ அவனுக்கு அழுகை இன்னும் அதிகமாக முட்டிக்கொண்டு வந்தது. வீட்டுக்குப் போக வேண்டாமென முடிவு செய்து சுசீந்திரத்துக்கு பஸ் ஏறினான்.

அவன் தாமரைச்செல்வியின் வீடிருந்த தெருவை நெருங்கியபோது நேரம் கருக்கத் தொடங்கியிருந்தது. தளர்வாக நடந்து அவளது வீட்டை அவன் நெருங்க, அவளது வீட்டினுள் இருந்து துரைமுருகன் வெளியேறுவதைப் பார்த்தான். ஒருகணம் அவன் மனதினுள் துரைமுருகன் பால்ராஜாகத் தெரிந்தான்.

துரைமுருகன் தெருவைக் கடக்கும் வரையிலும் மறைந்திருந்தவன், அவன் தலை தெருவைவிட்டு மறைந்ததும், தாமரையின் வீட்டினுள் சென்றான். அங்கே அலங்கோலமாக கிடந்த தாமரையைப் பார்க்கையில், அவனுக்கு விஜயாவே அப்படிக் கிடப்பதாஜத் தோன்ற, ரவியின் மனதினுள் வீட்டினுளிருந்து வெளியேறியவனை வெட்டிக் கூறு போட்டுவிடும் எண்ணம் எழுந்தது.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism