Published:Updated:

ஊசிப்புட்டான் | ``இவனுக்குன்னு ஒரு புல்லட்டை எடுத்து மாத்திவெச்சிருக்கேன்” | அத்தியாயம் - 36

ஊசிப்புட்டான்

தண்டபாணி கட்டை அவிழ்த்துவிடச் செல்ல, “தாஸு, நீ போய் அந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துட்டு வந்து நம்ம ட்ரக்ஸோட ஹெட்லைட்டைச் சுடு. அப்புறமா அவனுங்ககிட்ட கொண்டுபோய் அந்தத் துப்பாக்கியைப் போட்டுடு.”

ஊசிப்புட்டான் | ``இவனுக்குன்னு ஒரு புல்லட்டை எடுத்து மாத்திவெச்சிருக்கேன்” | அத்தியாயம் - 36

தண்டபாணி கட்டை அவிழ்த்துவிடச் செல்ல, “தாஸு, நீ போய் அந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துட்டு வந்து நம்ம ட்ரக்ஸோட ஹெட்லைட்டைச் சுடு. அப்புறமா அவனுங்ககிட்ட கொண்டுபோய் அந்தத் துப்பாக்கியைப் போட்டுடு.”

Published:Updated:
ஊசிப்புட்டான்

வழுக்கம்பாறை மாதா கோயிலிலிருந்து ஐநூறு மீட்டர் தொலைவிலிருந்த தாமரைக்குளத்தின் அருகே பிரவீனும் தயாவும் கையும் காலும் வாயும் இறுகக் கட்டப்பட்ட நிலையில் இருத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் அருகே இன்ஸ்பெக்டர் சுகுமாரனும், அவரின் ஆஸ்தான காவலர்களான தண்டபாணியும் ஆண்டனியும் நின்றுகொண்டிருந்தார்கள்.

``உங்களை எதுக்காக இங்கே கொண்டாந்து போட்டிருக்கோம்னு உங்களுக்குத் தெரியுமால” சுகுமாரன் தனக்கே உரித்தான கடுகடுப்பான குரலில் பிரவீனைப் பார்த்துக் கேட்டார்.

கண்களில் பீதி பரவ, கட்டப்பட்ட வாயைத் திறந்து பேச வழியற்ற பிரவின் முனகலோடு இல்லையென்பதாகத் தலையை ஆட்டினான்.

“ஹூம்... உங்களுக்கு எப்படித் தெரியும்... உங்களைத் தூக்கணும்னு எங்களுக்கே இன்னைக்குக் காலைலதானே தகவல் வந்தது” என்று சொன்னபடியே அவர் அருகிலிருந்த ஆண்டனியைப் பார்த்துச் சிரிக்க, ஆண்டனியும் அவரைப் பார்த்துச் சிரித்தான்.

“சார் சின்னப் பயலுவலா இருக்கானுவ சார். பொடதில ரெண்டு தட்டு தட்டி அனுப்புறதுக்கு இல்லாம” என்று தண்டபாணி சலிப்போடு சொல்லவும், “என்ன பண்றது தண்டபாணி, பொண்ணைப் பெத்துவெச்சிருக்கேனே... காலா காலத்துல ஒரு நல்ல எடமா பாத்துக் கட்டிவெக்கணும், அதுக்குக் கல்யாண செலவெல்லாம் பார்க்கணும். முக்கியமா சீதனம் வேற குடுக்கணும். எவ்ளோ தேவைங்க இருக்கு... இவனுங்க தர்ற பிச்சைக்கார சம்பளத்துல அதெல்லாம் பார்த்துக்க முடியுமா... சொல்லுங்க” சுகுமாரனும் அதே சலிப்போடு தண்டபாணியிடம் கூறினார்.

``நடக்குறதை எல்லாம் பார்த்தா நாம ஏதோ அடியாளுங்க மாதிரியும், கூலிக்குக் கொலை பண்ற கூலி ஆக்கள மாதிரியும் தோணுது சார்.”

“நாம ஏன் தண்டபாணி அப்படி நினைக்கணும்... நாம களையெடுக்கிறோம். அதுக்குச் சம்பளம் வாங்கிக்கறோம்னு நினைச்சுக்கலாம்ல” என்று தன்னுடைய தவற்றை நியாயப்படுத்திக்கொள்வதைப்போல சுகுமார் பேசினார் என்றாலும், அவருக்குள்ளும் அதே நினைப்புதான் ஓடிக்கொண்டிருந்தது.

“சரி சார்... நாம ஆகவேண்டிய காரியத்தைப் பாப்போம் சார்” என்றார் தண்டபாணி.

“தாஸு அந்த வெப்பனை எடுத்துட்டு வந்திருக்கேல்ல?” சுகுமார் ஆண்டனியை நோக்கிக் கேட்டார்.

“ஆமா சார். ட்ரக்ஸுக்குப் பின்னாடி கிடக்கு” என்று பவ்யமாக பதிலளித்த ஆண்டனி, “சார் கட்ட அவுத்துவிட்டு ஓட விட்டுடலாமா சார்” எனக் கேட்டான்.

இல்லை என்பதாகத் தலையை ஆட்டியபடியே சுகுமார், “இல்லை தாஸு, சின்னப்பயலுகளா இருக்கானுங்க, ஓடவிட்டோம்னா அப்புறமா நம்மளால பிடிக்க முடியாம போனாலும் போயிடும். அப்படியே கட்டோட இருக்கட்டும்” என்று சொன்னபடியே தன்னுடைய ரிவால்வரை வெளியே எடுத்து மூன்று தோட்டாக்களை அதில் போட்டுக்கொண்டார்.

அங்கே நடப்பதை எல்லாம் கையும் வாயும் கட்டிய நிலையில் பார்த்துக்கொண்டிருந்த பிரவீனுக்கும் தயாவுக்கும் பயத்தில் அவர்கள் அணிந்திருந்த நிஜாரில் மூத்திரம் ஒழுகியது. கூடுதலாக தயாவுக்கு பேதியும் வெளியேறியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“மூத்திரம் போற அளவுக்கு பயப்படுற ஒங்களுக்கு கள்ள வெடி கேக்குது... என்னல...” எனக் கேட்டபடியே சுகுமார் தன் கையிலிருந்த ரிவால்வரை அவர்களை நோக்கிக் குறி வைக்காமல் அவர்கள் அருகே குறி வைத்துச் சுட்டார்.

தங்களுக்கு அருகில் தோட்டாவொன்று வெடித்ததும், அவர்கள் இருவரிடமுமிருந்து வெளிப்பட்ட பீதியின் ஒலி, வாயைக் கட்டிவைத்து விரையை அறுத்துச் சூடுவைக்கப்படும் பன்றியின் ஓலத்தை ஒத்திருந்தது.

“புடுக்கறுத்த பன்னிங்க கத்துற மாரி இருக்குல்ல?” எனக் கேட்ட சுகுமார் அப்படியே பொறுமையாக அவ்விருவர்களின் ஓலத்தையும் சில நொடிகள் கண்களை மூடிக் கேட்டார். பிறகு கண்களைத் திறந்தவர் கண்களில் துளியும் கருணையில்லாமலிருக்க, அடுத்த இரண்டு தோட்டாக்களும் அவர்கள் இருவர் மேலும் பாய்ந்தன.

அவர்கள் இருவர் உடலிலிருந்தும் வெளியேறிய குருதியின் வழி, அவர்களின் உயிரும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருக்க, சுகுமார்,

“தண்டபாணி, போய் அவனுங்க கட்டை அவுத்துவிடுங்க. அப்பதான் அவனுங்க துடிக்கிற துடிப்புல நாம கட்டுப்போட்டதோட தடத்தை அவனுங்களே அழிச்சிடுவானுங்க.”

தண்டபாணி கட்டை அவிழ்த்துவிட செல்ல, “தாஸு, நீ போய் அந்த நாட்டுத் துப்பாக்கிய எடுத்துட்டு வந்து நம்ம ட்ரக்ஸோட ஹெட்லைட்டைச் சுடு. அப்புறமா அவனுங்ககிட்ட கொண்டுபோய் அந்தத் துப்பாக்கியைப் போட்டுடு.”

ஆண்டனி கையோடு எடுத்துவந்திருந்த நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு அவர்கள் வந்திருந்த ட்ரக்ஸ் வண்டியின் ஹெட்லைட்டைச் சுட, ஹெட்லைட் வெடித்துச் சிதறியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“என்ன சுகுமார் பதிலையே காணோம்” போனின் மறுமுனையில் துரைமுருகனின் குரல் அதிகாரதொனி கலந்த நட்புரிமையோடு கேட்க, “இல்லயில்லை... டக்குன்னு வேற ஒரு வேலை நினைப்பு” என்று சமாளித்தார் சுகுமார்.

“ஆமா பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிவெச்சிட்டீங்க. ஏதும் விசேஷமிருக்கா..?” துரைமுருகனின் குசல விசாரிப்பில் தனக்கான தூண்டிலொன்று ஒளிந்திருப்பதை சுகுமாரால் உணர்ந்துகொள்ள முடிந்தது என்பதால், “ஏழு மாசம்” என்று சுருக்கமாகவே பதிலளித்தார் சுகுமார்.

“அடுத்ததா வளைகாப்புவெக்கணும்ல,” துரைமுருகனின் குரலில் மெலிதாக சந்தோஷத்தின் சாயல் தெரிய ஆரம்பிக்க, சுகுமார், ஆமாமென்றார்

“அப்படின்னா பணத்தோட தேவையிருக்குன்னு சொல்லுங்க” இம்முறை மீன் தன் தூண்டிலில் சிக்கிவிட்ட சந்தோஷத்தில் துரைமுருகன் கேட்க, சுகுமாரும், “இல்லை... தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்” என்றார்

“பணம் தேவைப்படலேன்னா என்ன, இதுக்கு முன்ன நகையா வாங்கிக்கிட்ட மாதிரி நகையா எடுத்துக்கோங்க.”

“முன்ன மாதிரி இல்லை தொர, இப்ப செலவு பண்ற ஒவ்வொரு புல்லட்டுக்கும் ஹ்யூமன் ரைட்ஸுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கு.

அதுமில்லாம நான் வீடு போட்டதுல எவனோ ஒருத்தன் மேல மொட்டயைப் போட்டு என்கொய்ரி அது இதுன்னு ரொம்ப அலைய விட்டுட்டானுங்க”

“இப்ப முடிவா என்னதான் சொல்ல வர்றீங்க சுகுமாரன்?”

“மறுபடியும் ஒருதரம் என்னால துப்பாக்கியைத் தூக்கிட்டு போக முடியாதுன்னு சொல்றேன்” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு, மனதினுள், “ஒத்த புல்லட்டு, கொஞ்சம் பேப்பர் வொர்க்கு அவளோதான். ஆனா இப்ப இருக்கிற நிலைமையில என்னால என்கொய்ரி அது இதுன்னு அலைஞ்சுட்டு இருக்க முடியாது” என நினைத்துக் கொண்டார்.

“ஓ முடியாதா... சரி நான் பார்த்துக்கறேன்” என்று துரைமுருகனிடமிருந்து கோபமாய் வார்த்தைகள் வெளிவரவும், “முன்ன மாதிரி இல்லை தொர. சொன்னா புரிஞ்சுக்கோ” எனச் சுகுமார் சற்று குழைவோடு சொல்ல, “அதான் முடியாதுன்னு சொல்லிட்டேல்ல... விடு, நானே பார்த்துக்கறேன். உனக்குக் கொடுக்கதுல பாதிகூட எனக்குச் செலவாகாது.” என்று சொல்லிவிட்டு சுகுமாரின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் மறுமுனை துண்டிக்கப்பட்டது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

துரைமுருகனின் இந்த நடவடிக்கை சுகுமாருக்கு எரிச்சலை மூட்ட, போன் ரிசீவரைக் கையில் வைத்தபடியே, “எங்கிருந்தாச்சும் ஒரு **** தள்ளிட்டு வந்துடவேண்டியது, ஊருக்குள்ள இருக்க சின்னப் பயலுகளை அவ தேடிப் போற அளவுக்கு அவளை ஒழுங்கா பண்ணுறதும் கிடையாது. கடேசில இங்க வந்து நின்னுட்டு என்கவுன்ட்டர்ல போட்டுத்தள்ளு... பணம் தரேன்னு பேரம் பேசவேண்டியது” என்று அவர் தனக்குள்ளேயே முனக, தண்டபாணி அவரிடம் வந்தார்.

“என்ன சார். தனியா ஏதோ பேசிட்டு இருக்கீங்க… போன்ல யாரு?”

“எல்லாம் அந்தத் தொரதான்.”

“நான்தான் எப்பவுமே சொல்லிட்டு இருக்கேன்ல சார். இவனுங்களுக்கு நாம ஏதோ கூலிப்படை வேலை பாக்குற மாதிரியே இருக்குன்னு...”

“இவனுக்குன்னு ஒரு புல்லட்டை எடுத்து மாத்திவெச்சிருக்கேன். நேரம் வரும்போது அதை அவன் தலையில பொதைச்சிட வேண்டியதுதான்” என்று கோபத்தில் சுகுமார் பேசப் பேச அவருக்குப் புஸூபுஸுவென்று மூச்சுவாங்க ஆரம்பித்தது.

**

குத்தவைத்து அமர்ந்து தன் கால் முட்டிக்குள் முகம் புதைத்து அழுதுகொண்டிருந்த தாமரைச் செல்வியின் முன்னால் ரவி அமர்ந்திருந்தான். அவன் கையில் அவள் குடித்தது போக மிச்சமிருந்த தண்ணீர் கோப்பை இருந்தது.

“இப்படி அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம் தாமரை... என்ன நடந்துச்சுன்னு சொல்லு” என்றான் ரவி.

“நீ இனி இங்கே வராத ரவி” என்று அழுகையினூடே தாமரைச்செல்வி கூற, ரவி அதிர்ந்துபோய்த் தன் கையிலிருந்த கோப்பையை நழுவவிட்டான். தண்ணீரோடு விழுந்த கோப்பை துள்ளிக் குதிக்காமல், தரையோடு உருண்டு தன்னுள் இருந்த தண்ணீரை அதன் பாதையெங்கும் பரவவிட்டது.

“உன் நல்லதுக்குதான் சொல்றேன் ரவி. நீ இங்கே வந்து போறது அவருக்குத் தெரிஞ்சுபோச்சு.” என்றாள் தாமரைச்செல்வி.

“அவெனென்னமோ உன்னைக் கட்டிக்கிட்டவன் மாதிரி சொல்ற... அவனே என்ன மாதிரி அப்பப்ப வந்து போறவென்தானே” என்று ரவி கோபத்தில் சொல்லி முடிக்கவும் அவன் கன்னத்தில் பொளேரென ஓர் அறை விழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“என்ன சொன்னே... உன்னை மாதிரியே அவனும் அப்பப்போ வந்து போறவன்னா… என்னிய என்ன வேசின்னு சொல்லுகியா” என்று தலைவிரி கோலத்தோடு அவள் கேட்க, ரவி ஒரு நிமிடம் ஆடிப்போனான்.

“இ… இ… இல்லை நா… நா…ன் அந்த அர்த்ததுல சொல்லலை. அவென் உன்னக் கட்டிக்கிட்டவன் இல்லேல்ல. எனக்கு ஒன்னை விட்டா வேற யாரும் இல்லை. எனக்கு நீ வேணும்” என்று தொடர்பு இல்லாமல் ரவி உளறினான்.

அந்தச் சிறு இடைவெளியில் நிதானத்துக்கு வந்திருந்த தாமரைச்செல்வியும், “இல்லை ரவி. உன் நல்லதுக்குதான் நான் சொல்லுகேன். எனக்கும் உன்னை விட்டா வேற யாருமில்லை. ஆனா அவென் ஒரு கொலகாரப் பாவி. உன்னை எதுனாச்சும் பண்ணிடுவானோன்னுதான் எனக்கு பயமா இருக்கு” என்று கண்களில் கண்ணீர் வழியப் பேசவும், ரவிக்கு சொல்லொணா துயரம் வந்து இதயத்தை அடைத்தது.

ரவி அமர்ந்திருந்தபடிக்கே ஊர்ந்து தாமரைச்செல்வியை நெருங்கினான். அவள் எதுவும் பேசாமல் அவனை மாரோடு அணைத்துக்கொண்டாள்.

அவளின் இரு மார்புக்கும் நடுவில் முகம் புதைத்தவன் மனதில், அவளது இரு மார்களும் அன்றவன் கண்டெடுத்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளின் நினைப்பைக் கொடுத்தன. இவனை அழிப்பதற்காகத்தான் அந்த இரு குண்டுகளும் அவன் கைக்கு வந்து கிடைத்ததோ என்கிற எண்ணமும் அவனுள் தோன்றியது.

இரு தரப்பினர் மட்டுமே தன் எதிரில் இருக்கும் எதிரியைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாதவர்கள். ஒருவர் எதிரி யார், அவன் பலம் என்ன என்று ஏதும் அறியாதவர். மற்றொருவர், அவனைப் பற்றி முழுமையாக அறியாதவரும், தன்னைப் பற்றிய ஒரு மிகப்பெரிய பிம்பத்தில் வாழ்பவரும். ஆனால் நிஜத்தில் எதிரியை வீழ்த்த நினைப்பவன், எதிரியைச் சாமானியமாக நினைக்காமல், அவனது பலமென்ன, பலவீனமென்ன என்பதைத் தெரிந்துக்கொண்டு, அதற்கேற்றவாறு தன்னைத் தயார்படுத்திக்கொள்வான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

துரைமுருகன் மேலகிருஷ்ணன்புதூரிலிருந்த அவனுடைய பாரில் அவனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த தனியறையில் அமர்ந்திருந்தான். அவனது மனதில் சுகுமார் அவனுக்கு உதவ மாட்டேன் என்று கூறியது மட்டும் ஓடிக் கொண்டேயிருந்தது.

“என்ன ஓசி மயிருக்கா அவனை பண்ணச் சொன்னேன். காசுக்குத் தான பண்ணச் சொன்னேன். பெரிய சத்தியசீலப் புடுங்கி மாதிரி முடியாதுன்னு சொல்லுகான்.” தன் முன்னிருந்த பிராந்தியை எடுத்து கல்பாகக் குடித்துக்கொண்டான்.

“அந்தப் பொடிப் பயலை முடிக்கிறேன். அப்புறமா உங்கிட்ட வரேன். என்கிட்டயே முடியாதுன்னு சொல்லிட்டேல்ல நீ... இந்த தொரமுருகன் யாருன்னு உனக்குக் காட்டுறேன்.”

அடுத்த கிளாஸ் பிராந்தியை அவன் குடித்துக்கொண்டிருக்கும்போதே, சரக்கல்விளை சிவா அவன் முன்னே வந்து நின்று, “அண்ணாச்சி வரச் சொல்லியிருந்தீங்க” என்று பவ்யமாகக் கேட்க, துரைமுருகன், “சுசீந்தரத்துல அக்காளுக்க வீடு ஒனக்குத் தெரியுந்தான?” என்றான்.

“தெரியும்ண்ணாச்சி.”

“அங்கே ஒரு பய அடிக்கடி வந்துப் போறதா எனக்கொரு தகவல் வந்திருக்கு. அவென் யாரு என்னன்னு எனக்கு விசாரிச்சு சொல்லு.”

“செரிண்ணாச்சி.”

“கவுன்ட்டர்லருந்து நூறு ரூவா செலவுக்கு வாங்கிக்கோ.”

“இல்லை. பரவால்லண்ணாச்சி. உங்களுக்காச்சட்டி இதைக்கூட நான் பண்ண மாட்டேனா...”

துரைமுருகனுக்கு சலாம் வைத்துவிட்டு சிவா அங்கிருந்து வெளியேறினான்.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism