Published:Updated:

ஊசிப்புட்டான் | ``முதல்ல அவெங்கிட்டருந்து ஒன்னய நீ காப்பாத்திக்கப் பாரு...” | அத்தியாயம் - 37

ஊசிப்புட்டான்

``கொல்ல வந்தவென் இப்படி தத்தி முண்டமாவா இருப்பான்... அவென மட்டும் கொன்னுருந்தான்னா நான் நிம்மதியா இருந்திருப்பேன்.” தாமரைச்செல்வியின் வார்த்தைகள் வருத்தத்தோடு அவளிடமிருந்து வெளியேறின.

ஊசிப்புட்டான் | ``முதல்ல அவெங்கிட்டருந்து ஒன்னய நீ காப்பாத்திக்கப் பாரு...” | அத்தியாயம் - 37

``கொல்ல வந்தவென் இப்படி தத்தி முண்டமாவா இருப்பான்... அவென மட்டும் கொன்னுருந்தான்னா நான் நிம்மதியா இருந்திருப்பேன்.” தாமரைச்செல்வியின் வார்த்தைகள் வருத்தத்தோடு அவளிடமிருந்து வெளியேறின.

Published:Updated:
ஊசிப்புட்டான்

நாட்டுவெடியைக் கையாள்வது என்பது அத்தனை சுலபமான காரியமில்லை. உள்ளங்கையில் வெடிமருந்தைவைத்து அதன் மேல் கயிறு சுற்றுகையில், அந்தக் கயிற்றின் இறுக்கமே அதை வெடிக்கவைக்கப்போதுமானது. அதேநேரம் கயிறு இறுக்கமாகச் சுற்றுப்படவில்லை என்றால், அந்தக் குண்டைக் கொண்டு எந்தப் பிரயோஜனமும் கிடையாது. ரவியின் கையிலிருந்த நாட்டுவெடி மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் வெகு சாதாரணமான நாட்டுவெடி என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அப்படியான மீன்பிடி வெடியைத்தான் ரவி தன் வீட்டின் பின்னால் பிளாஸ்டிக் கவரில் போட்டு மண்ணுக்குள் புதைத்துவைத்திருந்தான். அதை அவன் எடுத்துச் செல்வதற்கு முன்பாக, அதைச் சற்று வெயிலில் உலரவைத்திருந்திருக்க வேண்டும். நாட்டுவெடியைக் குறித்த எந்தவோர் அறிவுமற்ற அவன் அதையும் செய்யவில்லை. குழிக்குள்ளிருந்து தோண்டியெடுத்த கையோடு துரைமுருகன் ஓட்டி வந்த அம்பாசடர் காரின் மேல் விட்டெறிந்தான். அந்த வெடிகுண்டு சிறு கல்லின் அதிர்வைக்கூடத் துரைமுருகனின் காருக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக அவனுக்குள் அது மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கிவிட்டிருந்தது.

“எம்மேல நாட்டுவெடிய வீசுக அளவுக்கு எவனுக்குல தைரியம் வந்துட்டு... இன்னும் ரெண்டு நாளைக்குள்ள எறிஞ்சவென் எவங்கிற தகவலோ இல்லை ஆளோ இங்க வந்தாவணும்”

என்று கோபத்தோடு அவனது வலதுகரமான சகாதேவனிடம் கத்தினான்.

“வெளியருந்து எவனும் வந்திருக்க மாட்டாம்ணே. உள்ளூர்காரென் எவனோதான் இதெ பண்ணியிருக்கணும்” என்று எப்போதும் `சரிண்ணே’ என்று பதில் சொல்லும் சகாதேவன் நிதானமாக பதிலளித்தான்.

“எப்படிச் சொல்லுக?”

“ஏம்னா சம்பவம் நடந்த எடம் பணிக்கென் குடியிருப்பு பக்கத்துல. வெளியருந்து எவனாச்சும் இங்கே வந்தான்னா நம்ம செவிக்கு வராம போகாது. இது மொத காரணம். ரெண்டாவது அவென் எறிஞ்ச வெடி. கயிறு இறுக்கமா இல்லை. ஒண்ணு இந்த வெடியை செய்யத் தெரியாதவன் செஞ்சிருக்கணும், இல்லையா வெடியைப் பத்தி எதுவும் தெரியாதவென் இதை பத்திரப்படுத்திவெச்சிருந்திருக்கணும். உங்களைப் போடறதுக்குன்னு ஒருத்தன் வெளியருந்து வந்திருந்தான்னா இப்படிச் சொதப்பலா எல்லாம் வந்திருக்க மாட்டான். கார்ல நீங்க தனியாத்தானே வந்திய” எனக் கேட்டு சகாதேவன் நிறுத்த, துரைமுருகன் ஆமாமென்பதாகத் தலையை ஆட்டினார். “வெடி மிஸ்ஸாயிருந்துச்சுன்னா அவென் கைல பொருளு இல்லாமலா இருந்திருக்கும்...” சகாதேவனின் நிதானமான அலசல் துரைமுருகனை ஆலோசிக்கவைத்தது.

“நீ சொல்லுகது எல்லாம் சரிதாம்டே. ஆனா எதுக்கும் அசலூர்லருந்தும் எவனாச்சும் வந்தானான்னும் ஒரு ரவுண்டு பாத்துடு” என்றார் துரைமுருகன்.

“அதெப்படிண்ணே பாக்காம இருப்பேன்... இன்னும் ரெண்டு நாளைக்குள்ள யாரு, என்னன்னு துப்பெடுக்கேன். இல்லை ஆளையே தூக்கிட்டு வர்றேன்” என்று வாக்கு கொடுத்துவிட்டு சகாதேவன் அங்கிருந்து நகர, “டே சகா” என்று துரைமுருகன் அழைத்தார்.

சகாதேவன் நின்று திரும்பிப் பார்த்தான். “ஆமா பால்ராஜு உள்ளயா இல்லை ஊருக்குள்ளயா” என்று துரைமுருகன் சந்தேகத்தோடு கேட்க, “ஊருக்குள்ளதான். அவென் மேலயும் ஒரு கண்ணு இருக்குண்ணே” என்று சொல்லிவிட்டு சகாதேவன் அங்கிருந்து வெளியேறினான்.

**

“ஒனக்கு விஷயம் தெரியுமா ரெவி. நேத்து தொரமுருகனைக் கொல்லுகதுக்கு ஒருத்தன் முயற்சி பண்ணியிருக்கான்” என்று பாத்திரம் தேய்த்தபடியே தாமரைச்செல்வி ரவியிடம் சொல்ல, ரவி பதிலெதுவுமே பேசாமல் அமர்ந்திருந்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``அந்தப் பேதிலபோவான் எறிஞ்சதே எறிஞ்சான்... நல்லா வெடிக்கிற குண்டா எறிஞ்சிருக்கக் கூடாது... நமுத்துப்போன தீவாளி குண்டைத் தூக்கி எறிஞ்சிருக்கான். குண்டு வெடிக்கலை. ஆளு தப்பிச்சுட்டான்” என்ற தாமரைச்செல்வியின் குரலில் வருத்தம் மிகுந்திருந்தது.

அப்போதும் ரவி பேசாமலே அமர்ந்திருந்தான்.

``கொல்ல வந்தவென் இப்படி தத்தி முண்டமாவா இருப்பான்... அவென மட்டும் கொன்னுருந்தான்னா நான் நிம்மதியா இருந்திருப்பேன்.” தாமரைச்செல்வியின் வார்த்தைகள் வருத்தத்தோடு அவளிடமிருந்து வெளியேறின.

“ஏற்கெனவே வெறிபிடிச்ச நாய் மாதிரி அலைவான். இவென் என்னன்னா இன்னும் வெறியேத்தி விட்டுட்டுப் போயிட்டான்”

என்று சொன்னபடியே ரவியைப் பார்த்தாள். ரவியின் முகம் வெளிறிப்போயிருந்தது.

“என்ன ரெவி... மேலுக்கு ஏதும் முடியலியா… இப்படி வெளுத்துப்போயிருக்க” தன்னுடைய ஈரக்கையை உடுத்தியிருந்த சேலை முந்தானையில் துடைத்துவிட்டு, அவனது நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.

“காச்ச ஒண்ணுமில்லியே... அப்புறம் எதுக்கு உம்மூஞ்சி இப்படி வெளுத்துப்போயிருக்கு?”

“அ... அந்தப் பேதியில போவான் நான்தான்” என்று முணுமுணுப்போடு ரவி சொல்ல, தாமரைச்செல்வியின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது.

“ஏய் என்ன சொல்லுக?”

“நெசத்தத்தான் சொல்லுகேன். அவெனக் கொல்லப் பாத்தது நாந்தான்” என்றான் ரவி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரவியின் பதிலால் இடிந்துபோன தாமரைச்செல்வி, தலையில் கைவைத்தபடியே தரையில் அமர்ந்தவள், கோபமாக, “லேய் ஏம்ல இப்படி பண்ணுன... ஒனக்கென்ன பைத்தியாமல புடிச்சிருக்கு.”

“ஆமா உம்மேல.”

“பைத்தியங்கணக்கா பேசாதல நாயே. உண்மையச் சொல்லு நீயா அவென கொல்லுகதுக்கு பாத்த” என்று சந்தேகத்தோடு கேட்டவள், அந்தச் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தும்விதமாக, “நீ சும்மா சொல்லுகதான... நீ இப்ப எங்கிட்ட சொன்னது பொய்தான” எனக் கேட்டாள்.

``இல்லை... பொய்யெல்லாம் சொல்லலை. அவென நாந்தான் கொல்லுகதுக்குப் பாத்தேன். நீ என்னைப் பார்த்த அன்னிக்கு இந்த காக்கமூர் ஸ்கூல் கிரவுண்டுலருந்து கெடச்ச வெடியத்தான் அவெம் மேல வீசுனேன். நமுத்துப்போன வெடி” என இயலாமையின் எரிச்சலோடு பதிலளித்தான் ரவி.

“இப்ப எதுக்குல அவெனக் கொல்லுகதுக்கு பாத்த?”

“கொஞ்ச முன்னே சொன்னேல்ல... அவென் செத்திருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்னு. அதுக்குதான்” என்றான் ரவி.

ஒரு நொடி ரவியின் கண்களில் தெரிந்த கொலைவெறியை உற்றுப் பார்த்தவள், “உம்மனசுல என்ன பெரிய ஹீரோன்னு நெனப்பால?” என்று அவனை உதாசீனப்படுத்துவதைப்போலக் கேட்கவும், “ஆமா ஹீரோன்னுதான் நெனப்பு” என்று சத்தமாகக் கத்தியவன், எரிச்சல் மண்டிய குரலில், “எங்கூட இருக்கவனுக எல்லாம் மசைகளப் பாக்கப் போறப்ப என்னை அவனுககூடக் கூட்டிட்டு போவானுவ, ஆகா ஃபிகருகளைப் பாக்குகதுக்கெல்லாம் நம்மளைக் கூட்டிட்டு போறானுவளேன்னு சந்தோஷப்பட்டா, அவனுகளை அழகா காட்டுகதுக்கா வேண்டித்தான் என்னயக் கூட்டிட்டுப் போறானுவன்னு லேட்டாதான் தெரிஞ்சது. அவனுகதா என்னய ஒரு காமெடியனா நடத்தினானுவன்னு பாத்தா, பஸ் ஸ்டாண்டுல ஒருத்தி என்னை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி அனுப்பினா. ஆனா நீதான், நீ ஒருத்திதான் என்னை அணைச்சுக்கிட்டே. உனக்கு ஒண்ணுன்னா என்னால சும்மாயிருக்க முடியாது” என்று ரவி பேசப் பேச, தாமரைச்செல்வி ஒரே நேரத்தில் பரிதாபம், சந்தோஷம், கோபம் எனப் பலதரப்பட்ட உணர்வுகளுக்கும் ஆளானாள்.

``அதுக்காகக் கொல்லத் துணியுற அளவுக்கு போயிடுவியா... ஏற்கெனவே உன்னைப் பத்தி விசாரிச்சுதான் அன்னைக்கு என்னை அடி அடின்னு அடிச்சிட்டுப் போனான். இன்னைக்கு அவனைக் கொல்லப் பாத்தது நீயின்னு தெரிஞ்சா உன்னைக் கொன்னே போட்டுடுவான்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இந்த ஊரை விட்டுட்டு எங்கியாச்சும் போயிடு. அதுதான் உனக்கு நல்லது”

படபடவென்று பொரிந்து தள்ளினாள்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``உன்னைத் தனியா விட்டுட்டா” என்று கேட்டவனைக் கோபமாகப் பார்த்த தாமரைச்செல்வி, “முதல்ல அவெங்கிட்டருந்து ஒன்னய நீ காப்பாத்திக்கப் பாரு. அப்புறமா என்னயக் காப்பாத்துறதைப் பத்தி யோசி. நீ முதல்ல இங்கேருந்து கெளம்பிப் போ.”

தாமரைச்செல்வி இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி கும்பிடு போட்டாள்.

துரைமுருகனைக் கொல்ல எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது, இவனைப் புரிந்துக்கொள்ளாமல் தாமரைச்செல்வி நடந்துகொண்டது, ஏற்கெனவே அவனுடைய சிறு வயதிலிருந்து அவனுக்குக் கிடைத்த அவமானங்கள் என எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து முடிவுறாத வேதனைக்கு அவனைத் தள்ளின. அந்த முடிவுறாத வேதனை, தனக்கு ஒவ்வோர் இடத்திலிருந்து அநீதியே கிடைப்பதாக நினைத்துக்கொள்ள ஏதுவான ஒரு பாதையையும் போட்டுக் கொடுத்தது.

அநீதிகளின் துன்பம், முடிவுறாத வேதனை இரண்டும் எல்லாவிதமான அத்துமீறல்களுக்கும் சம்மதிக்கின்றன.

துரைமுருகனைக் கொல்வது மட்டுமே தன் வாழ்வின் லட்சியம் என அவன் முடிவெடுத்துக்கொண்டான்.

**

பூட்டிக்கிடந்த சின்னத்தம்பியின் கடைக்கு ரவி வந்தான். மாம்பட்டைக்குத் தடை என்கிற உத்தரவு வந்ததிலிருந்து, அவனுடைய கடைக்கு வாடிக்கையாளர்களின் வரத்தும் நின்றுபோனது. சின்னத்தம்பியின் கடைக்கு வெளியே அவன் எப்போதும் அமரும் மரப்பலகையில் அமர்ந்துகொண்டவன், அயற்சியோடு அந்த மரபெஞ்சில் சாய்ந்து படுத்து, தூங்கியும்போனான்.

அவன் கண்விழித்துப் பார்த்தபோது இருட்ட ஆரம்பித்திருந்தது. எழுந்தமர்ந்து கண்களைக் கசக்கிவிட்டுக்கொண்டான். மங்கலாயிருந்த பார்வை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவு பெற, அவன் தோளில் கையொன்று அழுத்தியது.

சட்டென அந்தக் கையிடமிருந்து தன்னை விடுவித்து, பெஞ்சிலிருந்து எழுந்து இரண்டடி விலகிச் சென்று படபடப்போடு திரும்பிப் பார்த்தான் ரவி.

“என்ன ரெவி. இப்படி பயந்து சாகுத... நாந்தான்” இருட்டிலிருந்து அந்த உருவம் ஓரடி முன் வந்து தன் முகத்தைக் காட்டியது.

பால்ராஜைப் பார்த்ததும் ரவிக்கு நிம்மதிப் பெருமூச்சொன்று வெளியேறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஊரெல்லாம் அடியெ வெச்சுக்கிட்டு சுத்துகதால ஒனக்குள்ள ஒறைஞ்சு போயிருக்க பயத்தை வெரட்டிட முடியாது ரெவி. இந்த மாதிரி தனியா இருக்க நேரத்துல அது தானா வெளிய வந்துடும்.”

“ந்நா… ந்நான்ன்… பயமெல்லாம படுகல. ஒரு எச்… எச்சரிக்கெலதான்...”

ரவியின் சமாளிப்பு பால்ராஜின் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது.

“பயமெது எச்சரிக்கெ எதுன்னு எனக்கே பாடமெடுக்குதியா நீ” பால்ராஜ் புன்னகைத்துக்கொண்டார்.

“உங்கப்பனும் நானும் சாராயத்த எடுத்துட்டு வருவோம். அப்ப எங்க பார்வ எங்களைச் சுத்தி நடக்குறவங்களைப் பாக்கேல, எவென் நம்மாளு எவென் நம்மளைப் பிடிக்க வந்த ஆளுன்னு பாக்கும். அதுதான் எச்சரிக்கெ. இப்ப உங்கண்ணுல நான் பாக்குகது பயத்தெ” என்றபடியே ரவி அமர்ந்திருந்த பெஞ்சில் அவர் அமர்ந்துகொள்ள, அதற்கு எதிரிலிருந்த பெஞ்சில் ரவி அமர்ந்துகொண்டான்.

“அன்னிக்கு மட்டும் உங்கப்பனைத் தனியா போகவிடாம கூடவே நானும் போயிருந்தேன்னாக்க, இன்னிக்கு நீ தகப்பன் இல்லாத பிள்ளையா வளந்திருக்க மாட்ட.” பேசும்போதே பால்ராஜின் குரல் தழுதழுத்தது. ஒரு முறை தன்னுடையத் தொண்டையைச் செருமிக்கொண்டார்.

“தங்கப்பாண்டியனுக்குத்தான சுத்துப் போடுகானுவ, தங்கசாமிக்கில்லையேன்னு நான் அசால்ட்டா இருந்தது என்னோட தப்பு

அது உன்னப் பாக்குக ஒவ்வொரு நாளும், லேய் உன்னாலதாண்டா அந்தப் பய இப்ப தகப்பன் இல்லாத பயலா நிக்கான்னு குத்த உணர்ச்சியா மாறி என்னெக் கொல்லும். நீயும் எங்கெள மாதிரி ஆயிடாம நல்லா படிச்சு மேல வரணுன்னுதான் நாங்க ஆசைப்பட்டோம்.”

ரவி நிமிர்ந்து பார்த்தான்.

“நாங்கன்னு நான் சொன்னது உங்கம்மையையும் சேத்துதான். எங்களைப் பத்தி ஊருக்குள்ள வேற மாதிரில்லா பேசுறானுவன்னு எங்களுக்கும் தெரியும். ஆனா நாங்க பாத்தது உனக்க வாழ்க்கைய மட்டும்தான். ஆனா நீ இப்படி வளந்து நிக்க” பேசிக்கொண்டிருந்தவர் தன் இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து ரவியின் முன்னே போட்டார். “நீ இப்பிடி ரௌடிப் பயலாத்தான் வளரணும்னு நெனச்சிருந்தேன்னாக்க, இந்தக் கத்தியால என்னெக் குத்திக் கொன்னுட்டு உன் வாழ்க்கையத் தொடங்கிக்கோ.”

ரவி கடையின் மறைவில் கிடந்த கத்தியைக் குனிந்து கையில் எடுத்தான். அதேநேரம் ஒரு சிறு விக்கலோடு விலாப்பகுதியிலிருந்து ரத்தம் வழிய அவன்மேல் சரிந்து விழுந்தார் பால்ராஜ்.

ரவியின் உருவம் கடையின் இருட்டில் மறைந்திருக்க, பால்ராஜ் அமர்ந்திருந்த பெஞ்சின் பின்னே கறுப்பாக நின்றிருந்த உருவம், “நாயே, அந்தத் தங்கசாமியக் கொன்னதுக்கு பழிதீக்க எங்கண்ணாச்சியைக் கொல்லுகதுக்கு பாமால போடுக பாமு... சாவுல” என்றது.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism