Published:Updated:

ஊசிப்புட்டான் | ``அந்தப் பொம்பளையப் பாத்தாலே ஒருமாதிரி திக்குன்னு ஆவுது மாப்ள”|இறுதி அத்தியாயம் (39)

ஊசிப்புட்டான்

“அவெனுக்கு மாத்து வெக்கியது எல்லாம் ரெண்டாம்த்தது. மொதல்ல அந்த ரெவிப் பயல எவென் கொன்னான்னு இப்ப தெரிஞ்சாவணும்.”

ஊசிப்புட்டான் | ``அந்தப் பொம்பளையப் பாத்தாலே ஒருமாதிரி திக்குன்னு ஆவுது மாப்ள”|இறுதி அத்தியாயம் (39)

“அவெனுக்கு மாத்து வெக்கியது எல்லாம் ரெண்டாம்த்தது. மொதல்ல அந்த ரெவிப் பயல எவென் கொன்னான்னு இப்ப தெரிஞ்சாவணும்.”

Published:Updated:
ஊசிப்புட்டான்

“வாழ்க்கையைப் பற்றிய இறுதியான உண்மைகளை உதிர்க்கும் ஒரு oracle அல்ல நான். I just shuffle the possibilities and deal. உங்கள் அனுபவத்தைப் பொறுத்து அது உங்களில் சில எதிரொலிகளை உருவாக்கலாம் அல்லது உருவாக்காமலும் போகலாம்."

- ஆதவன் (`என் பெயர் ராமசேஷன்’ எனும் நாவலிலிருந்து...)

சுசீந்திரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சுகுமாறனின் அறைக்குள் சுகுமாறனும், எஸ்.ஐ-யான தேவசகாயமும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள்.

சுகுமாறன் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு, “என்ன பண்றது சகாயம்” எனத் தேவசகாயத்தைப் பார்த்துக் கேட்டார்.

“சார் வேற வழியில்லை. இந்தக் கஞ்சாடாவ ஸ்பாட்லவெச்சு அரெஸ்ட் பண்ணிருக்கோம். செத்த பயலுக்கும், இவெனுக்கும் சொல்லிக்கிற மாதிரி முன்பகைன்னு எதுவுமில்லை. அதனால போதையைப் போடுறப்ப அவனுக்கும் இவனுக்கும் வாக்குவாதம் முத்தி இவென் அவென் தலெல கல்லத்தூக்கிப் போட்டுக் கொன்னுட்டான்னு சொல்லி 302-ல ஃபைல் பண்ணி ரிமாண்ட் பண்ணிடலாம் சார்” என்றார் தேவசகாயம்.

“ஆனா இவென் எந்த ஸ்டேட்மென்ட்டுமே தரமாட்டுங்கானே சகாயம்?”

“இதெல்லாம் நமக்கென்ன புதுசா சார்... இவென ஒரு அரெமெண்டல்னே டாக்டர்கிட்ட ஒரு சர்ட்டிஃபிக்கேட்டும் வாங்கிடலாம். கேஸு நிக்காது. ஆனாலும் நமக்கு ரிமாண்ட் பண்ணி கன்விக்ட் பண்ணுகதுக்கு ஒரு ஆள் வேணும்ல சார்... இவெனக் கொன்னு போட்டாக்கூட ஏன்னு கேக்க ஒருத்தனும் கெடயாது. அதுமில்லாம நேசமணி நகர் டேசன்ல ஏற்கெனவே இவென் மேல வழிப்பறி, செயின் பறிப்புன்னு ஏகப்பட்ட கேஸ் வேற இருக்கு.”

“சரி... அந்தப் பயலுக்க பாடிய?”

“பாடிய அவனுக்க அம்மெகிட்ட சப்மிட் பண்ணியாச்சு சார்.”

“ஓ...”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஆனாலும் பாடிய வாங்கிட்டு போறப்ப அந்தப் பொம்பள ஒரு சொட்டு கண்ணீருகூட விடலை சார்.”

“பாடிய ஐடென்ட்டிஃபை பண்ணது அந்தப் பொம்பளதான?”

“ஆமா சார்.”

“ஊருக்குப் பெத்துப்போட்டா இப்படித்தான் சாவு விழும். சரி அவளெ விடுங்க. நீங்க சொன்ன மாதிரியே இவென் மேல எஃப்.ஐ.ஆர் ரெடி பண்ணுங்க. ஆனா நான் சொன்னப்பறமா அதை ப்ரொசீட் பண்ணா போதும் சரியா?”

“சரி சார்” என்று சொல்லிவிட்டு தேவசகாயம் அங்கிருந்து வெளியேற, தன் கையில் கரைந்துபோயிருந்த சிகரெட்டை ஆஷ் ட்ரேயில் நசுக்கிவிட்டு, மறுபடியும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு, துரைமுருகனுக்கு டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய்க்கொண்டேயிருக்க, சுகுமாறன் நிதானமாக சிகரெட் புகையை இழுத்துவிட்டுக்கொண்டார். ஐந்து ரிங்குகளுக்குப் பிறகாக துரைமுருகன் போனை எடுத்து, “ஹலோ நான் துரைமுருகன் பேசுறேன்” என்றான்.

“வணக்கம் தொர, நாந்தா சுகுமாறன் பேசுறேன்.”

“சொல்லுங்க சார். என்ன இந்த நேரத்துல வழக்கமா பாட்டலு வேணுன்னாக்க சாய்ந்தரம்தான கால் பண்ணுவீங்க?”

“பாட்டிலுக்கு சாயந்தரம் கூப்பிட்டுக்கறேன். இப்ப கூப்பிட்டது அதுக்கில்லை” என்று சுகுமாறன் சொல்ல, துரைமுருகன் மனதுக்குள், ‘வேற எதுக்கு கூப்ட்டீரு’ என்று கேட்டுவிட்டு, போனில், “என்ன விசியம் சார்?” என்றான்.

“ஒண்ணுல்ல தொர... அர்ஜென்ட்டா எனக்கு ஒரு நாலு லச்ச ரூவா தேவைப்படுது.”

“அவ்ளோ பணமெல்லாம் இப்ப எங்கிட்ட இல்லை சார்” என்று துரைமுருகன் அதிருப்தியோடு பதிலளித்தான். பின் அவனே, “வேணுன்னா ஒரு லச்சம் வேணா தரேன். அதும் இன்னக்கில்லாம் முடியாது. இன்னும் ரெண்டு நாளாவும்” என்றான்.

“ஓ அப்படியா தொர. சரி ஒம் பேர ஏ1-லருந்து ஏ2-க்கு வேணா மாத்திக்கிறேன்” நக்கல் தொனியில் சுகுமாறன் சொல்ல, மறுமுனை மௌனமாக இருந்தது.

“நான் கேட்டதை நீ கொடுத்தேன்னாக்க, உம்பேரே உள்ள வராம பண்ணிடுவேன்” என்றார்.

“என்ன சார் வெல்லம் தின்னது ஒருத்தன், வெரல் சூப்புறது இன்னொருத்தனா?” வார்த்தைகள் கோபமாகவே துரைமுருகனிடமிருந்து வெளிவந்தன.

“நீ வெல்லத்த தின்னியா... வெரலை சூப்புனியான்னெல்லாம் எனக்குத் தெரியாது கேட்டியா... கேஸ்ல தொக்கா மாட்டிருக்க தொர. எங்கே அப்பன் கொலைக்கு பழிதீர்க்க வந்துடுவானோன்னு பயந்து அவனெ நீ கொன்னுட்ட. இல்லேன்னா ஒனக்க ஆசைநாயகியெ ரூட்டுவிட்டான்னு... அதுமில்லியா... உன்னைக் கொல்லுகதுக்கு முயற்சி பண்ணுனான், அதனால நீ அவனெ கொன்னுட்ட. இல்லியா மூணையும் சேத்து ஒரு எஃப்.ஐ.ஆர். நான் கேட்ட நாலு லட்சத்தைக் கொடுத்தேன்னாக்கா இதுல ஒண்ணுகூட உள்ளே வராது. எப்படி வசதி தொர?”

மறுமுனை மௌனம் காத்தது.

“சரி தொர, பணத்தை ரெடி பண்ணிட்டு சொல்லு. அதை எப்படி கைமாத்துறதுன்னு நான் சொல்றேன்.”

போன் ரிசீவரை வைத்ததும், துரைமுருகன் கோபமாக ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான்.

“லேய் சகா, அந்தச் சிவாப் பயல இன்னிக்கி சாயந்தரத்துக்குள்ள என்னை வந்து பார்க்கச் சொல்லுலே” என்று தன் அருகில் நின்றுகொண்டிருந்த சகாதேவனிடம் கத்தினான்.

சகாதேவன் தயக்கத்தோடு, “என்னாச்சுண்ணே. ஏன் இவ்வளவு கோவமா இருக்கீங்க… போன்ல யாருண்ணே பேசினது?” எனக் கேட்டான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“ஓன் அம்மெக்கெ ***** *****. நான் சொன்னதைச் செய்யிலே... போலே” என்று பதிலுக்கு துரைமுருகன் கத்த, சகாதேவன் பதிலெதுவும் பேசாமல் அங்கிருந்து நகரவும், துரைமுருகன், “லேய் சகா, கோச்சுக்காத. அந்தச் சுகுமாறன் ********* தான் போன்ல பேசினான்” என்றான்.

“ஏம்ணே... அவனுக்கு இப்ப என்னவாம்” என்று கோபத்தோடு சகாதேவன் கேட்கவும், “அவென் அம்மெக்கி ரெண்டாங் கல்யாணமாம் அதுக்கு பணம் வேணுமாம்” என்று அதே எரிச்சல் மண்டிய குரலில் துரைமுருகன் கூறினான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“என்னண்ணே சும்மா சும்மா பணம் பணம்னு கேட்டுட்டே இருக்கான். மொதல்ல அவனுக்கு மாத்து வெக்கணும்ணே.”

“அவெனுக்கு மாத்து வெக்கியது எல்லாம் ரெண்டாம்த்தது. மொதல்ல அந்த ரெவிப் பயல எவென் கொன்னான்னு இப்பத் தெரிஞ்சாவணும்.”

“அது அந்த நாராஜென் தான்ண்ணே.”

“அவென் கொன்னுருப்பான்னா நீ நெனைக்குறே. அவெனும் இவெனும் ரொம்ப குளோஸுலே...”

“இருக்கலாம்ண்ணே. ஆனா அந்த நாராஜெனுக்கு இவெம் மேல கொஞ்சம் கடுப்பும் இருக்கதாம்ணே செஞ்சுது”

துரைமுருகன் புகை கசியும் உதட்டோடு சகாதேவனைப் பார்த்தான்.

“ஆமாண்ணே. இந்த ரெவிப்பய அவென் கையை மீறி வளந்தது, அவெனெ இப்ப எவனுமே மதிக்காததுன்னு நிறைய வெப்ராளம் அவெனுக்குள்ள இருந்ததுண்ணே.”

“இருந்திருக்கலாம். அதுக்காகவேண்டி அவெனக் கொல்லுக அளவுக்கு இவென் போவானான்னு எனக்குக் கொஞ்சம் சந்தேகமாத்தாண்டே இருக்கு.”

“எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்குதுண்ணே. ஆனா அவெனத் தவிர வேற எவனு அங்கே வந்ததுக்கான அத்தாச்சி இல்லியேண்ணே...”

“ஒருவேள அந்த சிவாப்பய ஏதும்…” துரைமுருகன் சந்தேகத்தோடு இழுத்தான்.

“அவென் வெறுவாயி மட்டும்தாம்ணே. ஒருத்தனைக் கொல்லுக அளவுக்கெல்லாம் அவெனுக்குத் தெம்பு கெடயாது.”

“அப்பிடியெல்லாம் எவனெயும் அவ்ளோ சீக்கிரமா எடை போட்டுடக் கூடாது சகா. என்னயைக் கொல்லுகதுக்கு பாம் போட்டது அந்த ரெவிப்பயதானே... அவெனப் பாத்தா அவென் என்னயக் கொல்லுக அளவுக்குத் தைரியமானவனாவா தெரிஞ்சான்?”

சகா சற்றுத் தடுமாறினான். “எனக்கு எல்லாம் தெரியும்டே. ஒனக்க பழைய விரோதத்தைத் தீர்த்துக்க என்னைப் பயன்படுத்திகிட்டே. போட்டும்... அந்த பால்ராஜு சாவ வேண்டியவன்தான். என்ன... என் கையால சாவுகதுக்கு பதிலா உன் கையால செத்துத் தொலஞ்சிருக்கான்” என்று துரைமுருகன் நிதானமாகச் சொல்லவும், சகாதேவனும் நிதானத்துக்கு வந்தான்.

“அந்தப் பொடிப்பய கொலையில என்னய ஏ ஒன்-னா போட்டு எஃப்.ஐ.ஆர் போடப்போறானாம். அப்பிடி போடாம இருக்கனும்னாக்கா, நான் அவெனுக்கு நாலு லட்ச ரூவா லஞ்சமா கொடுக்கணுமாம்.”

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“என்னது நாலு லட்ச ரூவாயா?” அதிர்ச்சியோடு வாயைப் பிளந்தவன், “எவனுக்க அப்பன் வீட்டுக் காசாம்... இங்க நாம ராவும் பகலுமா இருந்து உண்டாக்குவோமாம்... அவென் நோவாம நொங்கெடுத்துட்டு போவானாமா… நான்தான் அன்னிக்கே சொன்னேம்லாண்ணே. இந்தப் போலீஸுகாரனுவெல்லாம் நல்லபாம்பு கணக்கான்னு.”

“இப்ப நமக்கு வேற வழியில்லைடே. அவெனுக்குக் கொடுத்துத்தான் ஆவணும். ஏன்னா அவென் கையில பாயின்ட் இருக்கு. எஃப்.ஐ.ஆரை அவெனுங்க ஸ்ட்ராங்கா எழுதிட்டானுவன்னா, நம்ம சோலிய முடிச்சிடுவானுவ. அப்புறமா இவென் கேட்டதுக்கும் நாலு மடங்கு நாம கேஸுக்குச் செலவழிக்க வேண்டியதாகிடும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறுபடியும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்ட துரைமுருகன், “இவெனெ எங்க போட்டுவிட்டு, எப்படி கொடுத்த பணத்தை வசூல் பண்ணணும்னு எனக்குத் தெரியும். சரி நீ அந்தச் சிவாப்பயல இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள என்னய வந்து பாக்கச் சொல்லு. அப்புறம் மேட்டர் என்னன்னு அவனுக்குத் தெரியேண்டாம் செரியா?” சகாதேவனிடம் சொல்லி முடித்த துரைமுருகனின் முகம் சட்டென எச்சரிக்கை தொனியோடு சகாவைப் பார்த்தது.

துரைமுருகனின் முகமாற்றம் சகாவைக் குழப்பத்தில் ஆழ்த்த, “என்னாச்சுண்ணே?” எனக் கேட்டான்.

**

“நான் போட்டுவெச்சிருந்த கணக்க, எவனோ முடிச்சிட்டான். ஆனாலும் தெளிவாத்தான் முடிச்சிவெச்சிருக்கான்” என்று சொன்னபடியே முத்தையா, சுகுமாறனின் எதிர் இருக்கையில் வந்தமர்ந்தார்.

“வாய்யா மாப்ள... ஒன்னயத்தான் தேடிட்டு இருந்தேன். டீயடிக்கியா” என்று கேட்டபடியே முத்தையாவின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சென்ட்ரியை அழைத்து இரண்டு டீ வாங்கி வரச் சொல்லிவிட்டு, “அப்பனுக்க மேலருந்த பகைய நீ தீர்த்துக்கலாம்னு பாத்தே. ஆனா போச்சே மாப்ள...”

“செரி விடு மாப்ள. இதேது என் லிமிட்ல அவென் பொணம் விழுந்திருந்துன்னா, இந்நேரத்துக்கு அவென் அம்மெய அலையோ அலைன்னு அலையவிட்டு என் ஆத்திரத்தைத் தீத்திருப்பேன்.”

“அட நீ வேற மாப்ள... அந்தப் பொம்பளயைப் பாத்தாலே ஒரு மாதிரி திக்குன்னு ஆவுது. கல்லு மாதிரி நிக்கா. கைய வச்சோம்னாக்கா நம்ம கையி தான் உடைஞ்சிடுமோன்னு…” என்று சுகுமாறன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “என்ன பயம் வந்துடுச்சாக்கும்” என்று கேட்டுவிட்டு சத்தமாகச் சிரித்த முத்தையா, “ஆமா அவென் அண்ணென், அந்தக் கஞ்சாடாவதான ரிமாண்ட் பண்ணிவெச்சிருக்க?”

“ஆமா மாப்ள. என்ன எளவைக் கேட்டாலும் ஓட்டப்பல்லு தெரிய சிரிச்சிட்டே இருக்கான். லூசுப்பய...”

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே டீயோடு வந்த சென்ட்ரி, “ஐயா விடியக்காலை பஸ்ஸுல அந்தப் பொம்பளையும் அவெ ரெண்டாவது பையனும் திரோந்த்ரம் போற பஸ்ல பாத்ததா நம்ம இன்ஃபாமர் ஒருத்தென் வந்து சொல்லிட்டுப் போறான்யா” என்றான்.

“தொல்லை ஒழிஞ்சுது” என்று சுகுமாறன் சொன்ன அதேநேரம், அடையாளம் தெரியாத வகையில் முகம் சிதைந்துபோயிருந்த ரவியின் உடலை வெவ்வேறு கோணத்தில் எடுக்கப்பட்டிருந்த போட்டோக்களைப் பார்த்துக்கொண்டிருந்த முத்தையாவின் முகம் கேள்விக்குறியானது.

“மாப்ள செத்தது அவென்தான்னு கன்ஃபர்மா தெரியுமா?”

**

தன்னை அதிர்ச்சியோடு பார்த்த சகாவைப் பார்த்து, “ஏண்டா சகா, செத்தது அந்த ரெவிப்பயதான்னு கன்ஃபர்மா தெரியுமா?” எனக் கேட்டான்.

“அவென் அம்மெதானண்ணே பொணத்த அடையாளங்காட்டினது.”

**

“அவெ எமகாதகி மாப்ள, இந்த ஒலகத்தயே வித்து கொசுவத்துல முடிஞ்சுவெச்சுக்குவா.”

**

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“என்னண்ணே சொல்லுகீங்க?”

**

“அந்தப் பயலுக்கு கூட்டெக்ஸ் போட்டுக்குற பழக்கமெல்லாம் கெடயாது மாப்ள. இந்தப் போட்டோவுல இருக்க செத்தவனுக்க கால் வெரலு கை வெரல எல்லாம் பாரு. கூட்டெக்ஸ் போட்டிருக்கு.”

**

கொல்லம் லெஷ்மி நடையிலிருந்த ஒரு வீட்டின் வாசலில் விஜயாவும் சந்திரனும் நின்றிருந்தார்கள். அந்த வீட்டினுள்ளிருந்து வந்தவர் அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

“சேச்சியிடெ பர்த்தாவு வந்நில்லே?” (உங்க கணவர் வரலியா?)

“பர்த்தாவு கொறே காலத்தினு முந்நே மரிச்சுப் போயி.” (கணவர் கொஞ்ச காலத்துக்கு முன்னால இறந்து போயிட்டாரு.)

“செச்சிக்குக் குட்டியெளு?” (உங்களுக்குப் பிள்ளைகள்..?)

“றண்டு குட்டியளா. இவென் சந்த்ரென் ரெண்டாம்த்தவனா” (இரண்டு பிள்ளைங்க... இவன் இரண்டாம் பையன்)

“இவென் ரெண்டாம்த்தவனெங்கில் மூத்த கொச்சி” (முதல் பிள்ளை எங்கே?) என்று அவர் கேட்க,

அவருக்கு பதில் சொல்லப்போன சந்திரனின் மணிக்கட்டை இறுக்கமாகப் பற்றி, “அவென் புறத்தா” (அவன் வெளியே) என்றாள்.

**

முத்தையாவும் சுகுமாறனும் குழப்பத்தோடு அமர்ந்திருக்க, நாகராஜனோ அவனுடைய ஓட்டைப்பல் தெரிய அவர்களைப் பார்த்துச் சிரித்தபடியே அமர்ந்திருக்க, விஜயாவோ சந்திரனின் கையை இறுக்கமாகப் பற்றியபடியே புது வீட்டினுள் குடியேறினாள்.

*************************************

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism