Published:Updated:

ஊசிப்புட்டான் - `நம்பிக்கை வெச்சவனை ஏமாத்துறது எவ்ளோ பெரிய துரோகம்!' | அத்தியாயம் - 4

ஊசிப்புட்டான்

மாரி, அன்னிக்கு உன் அப்பா மட்டும் இல்லேன்னுவெச்சுக்கோ, இந்த சின்னத்தம்பியும் இல்லை, இந்தக் கடையும் இல்லை பார்த்துக்க” விரக்தியோடு பேசிய சின்னத்தம்பி, மீண்டும் தன் தலையைக் கடையிலிருந்து வெளிநீட்டி வெற்றிலைச் சாற்றைத் துப்பினான்.

ஊசிப்புட்டான் - `நம்பிக்கை வெச்சவனை ஏமாத்துறது எவ்ளோ பெரிய துரோகம்!' | அத்தியாயம் - 4

மாரி, அன்னிக்கு உன் அப்பா மட்டும் இல்லேன்னுவெச்சுக்கோ, இந்த சின்னத்தம்பியும் இல்லை, இந்தக் கடையும் இல்லை பார்த்துக்க” விரக்தியோடு பேசிய சின்னத்தம்பி, மீண்டும் தன் தலையைக் கடையிலிருந்து வெளிநீட்டி வெற்றிலைச் சாற்றைத் துப்பினான்.

Published:Updated:
ஊசிப்புட்டான்

ஒரு பெருமழைக்கு முன்பான புழுக்கத்தை ஒத்திருந்தது ரவியின் மனம். மிகவும் நிதானமாக ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணினான். பின்னர் நூறிலிருந்து ஒன்று வரையும் எண்ணிப் பார்த்தான். அந்த எண்ணிக்கை விளையாட்டு அவனுக்கு அலுப்பைக் கொடுத்ததேயன்றி உறக்கத்தைக் கொண்டுவரவில்லை. படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான். தென்திசை பார்க்க அமைந்திருந்த சுவரில், கண்ணாடிச் சட்டத்தினுள் தன்னுடைய அடர்த்தியான மீசையை அழகாக ஒதுக்கிவிட்டு மேல்வரிசைப் பற்கள் தெரிய புன்னகைத்துக்கொண்டிருந்தார் தங்கசாமி. அவரது தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த வெளிர் சிவப்பு நிற ஜீரோ வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தில், அவனுடைய அம்மா அறையின் மூலையில் சுருண்டு படுத்திருப்பது தெரிந்தது. தங்கசாமி இறந்ததிலிருந்தே விஜயா இப்படித்தான் அறையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொள்கிறாள். கால்நீட்டிக்கூடப் படுப்பதில்லை. ``ஏம்மா இப்படிச் சுருண்டு படுத்துட்ருக்க... கொஞ்ச கால்நீட்டிப் படுக்க வேண்டியதுதானம்மா” என்று ஒருமுறை ரவி கேட்கவும் செய்தான். அதற்கு அப்பாவின் புகைபடத்துக்கு நேராகக் கால்நீட்டிப் படுப்பது அவரை மரியாதைக் குறைவாக நடத்துவதைப் போன்ற செயல் என்று விஜயா பதிலளித்தாள். சுருண்டு படுத்திருக்கும் அம்மாவின் மேல் முதன்முறையாக அவனுக்கு இரக்கம் தோன்றியது. `பாவம் அம்மெ...’ என நினைத்துக்கொண்டான். அவன் எழுந்தமர்ந்த சற்று நேரத்துக்கெல்லாம் கண்களிரண்டும் அறைக்குள் இருந்த குறைந்த வெளிச்சத்துக்குப் பழகிவிட்டிருந்தன.

சுவரில் தொங்கிக்கொண்டிருந்த தங்கசாமியின் படத்தை நிமிர்ந்து பார்த்தான் ரவி. `என்னருந்தாலும் நீ இப்பிடி எங்களை அம்போன்னு விட்டுட்டுப் போயிருக்கக் கூடாதுப்போவ்.’

குவித்துவைத்திருந்த கதம்பையின் அருகில், பச்சை மூங்கில் மற்றும் தென்னை ஓலையால் முடைந்த பாடையின் மேல், பாதி முகம் மட்டும் வெளித் தெரிய மீதி உடலெங்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட வெள்ளைத்துணியால் பொதிந்து படுத்திருந்த தங்கசாமியின் உடலை ஈர உடையோடு சுற்றி வந்து ``யப்போ... யப்போ...” என்றபடி வாய்க்கரிசி இட்டபோது தோன்றாத ஒரு உணர்வு இப்போது அவனுள் தோன்றியதும், அவனது கண்களில் தன்னிச்சையாக நீர் திரண்டு அவன் பார்வையை மறைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

ரவிக்கு மூச்சடைப்பதைபோலிருக்க, பூனையைப் போன்று காலடி ஓசை எழும்பாமல் நடந்து, அடுக்களைக்குச் சென்று மண்பானையிலிருந்த நீரை மொண்டு குடித்தான். மண்பானையின் குளிர்ந்த நீர் அவனைச் சற்று ஆசுவாசப்படுத்தியது. யதேச்சையாக மண்பானையின் அருகிலிருந்த சட்டுவத்தில் சுண்டக்கறியும் சோறும் பிசைந்தமேனிக்கு அப்படியே இருந்ததைப் பார்த்தான். `அம்மெ சோத்த திங்காமலே படுத்துட்டாளா…!’ குற்றவுணர்வு மேலிட, `என்ன எளவுக்கு அம்மெகிட்ட ராத்திரி சண்டெய போட்டேன்... அம்மெக்கி சந்திரனையும் என்னயும் விட்டா வேற யாரிருக்கா..? ச்சே... தேவயில்லாம சண்டெயப் போட்டு... பாவம் அம்மெ ராத்திரி திங்காமலே படுத்திட்டா’ உள்ளுக்குள் உருவான குற்றவுணர்வு அப்படியே அவன்மேல் கோபமாக உருமாறியது.

மீண்டும் படுக்கைக்குச் சென்று படுக்கப் பிடிக்காமல் ஓசையின்றி கதவைத் திறந்து வெளியே வந்தான். கார்த்திகை மாத வளர்பிறை தசமியின் நிலவு நிலமெங்கும் தன்னுடைய கிரகணத்தைப் படரவிட்டிருந்தது. அந்த நிலவின் ஒளியில் நிலத்தில் தங்களுடைய நிழலைப் படரவிட்டிருந்த மரங்களின் கிளையோ, இலையோ எந்தவோர் அசைவுமின்றி இருந்தாலும், குளிர்ந்த காற்று மட்டும் எங்கிருந்தோ வீசியது. அப்படியே வீட்டின் வெளித் திண்ணையில் அமர்ந்தான் ரவி. வெளியிலிருந்த குளிர், அனல் வீசிக்கொண்டிருந்த அவனது மனதுக்கு இதமானதாக இருந்தது.

``மாரி, அன்னிக்கு உன் அப்பா மட்டும் இல்லேன்னுவெச்சுக்கோ... இந்த சின்னத்தம்பியும் இல்லை, இந்தக் கடையும் இல்லை பார்த்துக்க...”

என்று விரக்தியோடு பேசிய சின்னத்தம்பியின் குரலும், ``என் சீவனையும் ஆவியையும் எடுக்கவே என் வயித்துல வந்து பொறந்தியால நீயி... ஏற்கெனவே தகப்பனுக்குக் கொல்லிவெச்சிட்டே... அப்படியே இந்தத் தலைக்கும் கொல்லியவெச்சுட்டு ஒன் இஷ்டத்துக்குப் போக வேண்டியதுதான” என்று அழுத விஜயாவின் இயலாமைக் குரலும் ரவியின் செவிகளில் ஒன்று மாற்றி ஒன்று என ஒலித்தபடியே இருந்தன. அப்படியே சோர்ந்து திண்ணைச் சுவரில் சாய்ந்தமர்ந்தான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிழக்கு பார்க்க அமைந்த வீடென்பதால், மேற்கு நோக்கிய தசமி நிலவின் பயணம் இவன் பார்வையைவிட்டு மறையும் உயரத்துக்கு உயர்ந்திருக்கவில்லை. அதனால் கரிய வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களுக்கு நடுவே முக்கால் அளவு வளர்ந்து நின்ற நிலவை வெறுமே வேடிக்கை பார்க்க அவனால் முடிந்தது. நிலவும் குளிரும் அவனைச் சமநிலைப்படுத்த, அவனது மனம் அன்றைய நிகழ்வுகளை அசைபோட ஆரம்பித்தது.

கால் விந்தியபடியே வந்த சின்னத்தம்பி, ``வயித்தாக்குல போயிடிச்சிடே. சாரத்துலயே போயிடுமோன்னு பயந்துட்டே ஓடினேன். நல்லவேளை அப்பிடி யெதுவும் நடக்கலை” வெற்றிலைக் கறையேறிய காவிப் பற்கள் தெரிய ரவியைப் பார்த்து ஆசுவாசமாகச் சிரித்தான். “ச்சவத்த எங்க ஓடினேன். கிந்தி கிந்தித்தானே போனேன்” என்று தனக்குள்ளேயே அவன் முனகிக்கொள்வதைப்போலப் பேசிக்கொண்டாலும், ரவியின் காதுகளிலும் அவன் பேசியது தெளிவாக விழுந்தது.

ரவி எதுவுமே பேசாமல் கடைக்குள்ளிருந்து வெளியே வர, சின்னத்தம்பி கடைக்குள் சென்று அங்கிருந்த குழிக்குள் காலைப் போட்டபடியே, ``ஏன் ரவி, கடேல கச்சுவாடம் ஏதும் நடந்தாடே” எனக் கேட்டான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``ஒரு குப்பி அரிஷ்டம் மட்டும் ஒருத்தர் வாங்கினாருண்ணே” என்று ரவி சொல்லவும், சின்னத்தம்பியின் முகம் வாடியது.

``படிக்கிற பய உன்னைப் பட்டைய விக்கவெச்சிட்டேனே...” என்றான்.

ரவி பதிலேதும் பேசாமல் அமைதியாகக் கடை பெஞ்சில் அமர்ந்திருந்தான்.

``ரவி, நான் ஒண்ணுு சொன்னா கோச்சுக்கக் கூடாது.”

``சொல்லுங்கண்ணே...”

``கோச்சுக்க மாட்டேல்ல...”

``இல்லண்ணே...”

``இந்த பால்ராஜு கூடயிருக்க கூட்ட கொஞ்சம் கொறச்சிக்க மக்கா.”

ரவிக்கு ஏன் எனக் கேட்கத் தோன்றினாலும், எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

``ஒன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.”

ரவி எதுவுமே பேசாதிருக்கவும், ``ஒன் மூப்புலு மேல இருக்க மரியாதைக்காகத்தான் மக்கா நான் உங்கிட்ட சொல்லுதேன்.”

ரவி பதிலெதுவும் பேசாமல் அமைதியாயிருந்தான்.

``ஒன் மூப்புலுதான் மக்கா என்ன மொதமொதலா சின்னத்தம்பின்னு கூப்ட்டாரு. இப்ப அதுவே எம்பேராயிடிச்சு” என்று சின்னத்தம்பி சொல்லவும் ரவி நிமிர்ந்து பார்த்தான்.

``ஆமா பிள்ளே. எம்பேரு ராஜன். `பீப்பீ ராஜன்’னுதான் எல்லாவனுவளும் கூப்பிடுவானுவ. பீப்பீன்னா அர்த்தம் தெரியுமா?”

ரவி தெரியாது என்பதைப்போல இடவலமாக தலையாட்ட, ``பீப்பீன்னா பிக் பாக்கெட்.” கறையேறியப் பற்கள் வெளித் தெரிய சிரித்துவிட்டு, ``பாக்கெட்டடிச்சிட்டு ஓட ஆரம்பிச்சேன்னா ஒரு பய என்னை நெருங்க முடியாது தெரியுமால” அவன் கண்களில் தெரிந்த பெருமையை ரவி கவனித்தான்.

``அப்ப சுசீந்தரம் டேஷன்ல முத்தைய்யான்னு கெலக்கருந்து வந்த ஒரு போலீஸிருந்தான். அவன்தான் நீயென்ன அவ்ளோ பெரிய ஓட்டக்காரனாலேன்னு கேட்டு காலு நரம்ப அருத்து வுட்டுட்டான்” என்று கூறிய சின்னத்தம்பியின் கண்களில் சற்றுமுன் இருந்த பெருமையெல்லாம் வடிந்து கழிவிறக்கம் குடியேறியிருந்தது.

``ஆறடி ஒசரமிருக்க முள்ளு வேலியக்கூட ஒரே குதியில தாண்டிருவேனாக்கும். இப்ப பாரு அரை அடி தூரத்தைக்கூட கிந்தி கிந்தி நடக்கவேண்டிதா இருக்கு. நமக்க மூலதனமே ஓட்டம்தான மக்கா. கையாளு வேலைக்கோ இல்ல தங்கி வேலைக்கோ போலாம்னு பாத்தாக்கூட இந்த நொண்டி காலனுக்கு எவன் வேல கொடுப்பான் சொல்லு” பேசியபடியே தட்டிலிருந்த வெற்றிலை ஒன்றை எடுத்துக் காம்பு கிள்ளி வாயில் வைத்து அதக்கியபடியே, பாக்குவெட்டியால் கொட்டைப் பாக்கு ஒன்றின் தோலுரித்து, அதைச் சிறு வில்லையாக்கி வாயில் போட்டுக்கொண்டான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``அந்த நேரத்துல தாம்மக்கா மூப்புல பாத்தேன்.” வாய் பேசியபடியே இருந்தாலும் அவனுடைய கை, கடையின் முன்புறம் அடுக்கிவைக்கப்பட்டிருந்த குப்பிகளின் நடுவேயிருந்த பிளாஸ்டிக் டப்பாவில், காய்ந்து போயிருந்த சுண்ணாம்பை எடுத்துக்கொண்டது. ``எவம்ல் இப்டி பண்ணது? அந்த முத்தைய்யந்தானே... அவென் ரொம்பத்தான் வாலாட்டுதாம்ல. ஒருநாளத்த கொட அவனுக்கு இருக்கு” டப்பாவில் காய்ந்து போயிருந்த சுண்ணாம்பில் கொஞ்சமாய் நீர் ஊற்றிக் குழைத்து, தனது ஆட்காட்டி விரலால் எடுத்து வாயினுள் வைத்துக்கொண்டு பேசிய சின்னத்தம்பியின் குரல் தங்கசாமியின் குரலை ஒத்திருந்தது.

``சொன்ன மாதிரியே மூப்புலு அவனை, அதான் அந்த முத்தையனை சுசீந்தரங் கோயிலு தேரோட்டத்தன்னிக்கு கூட்டத்து நடுவுலவெச்சு நொங்கெடுத்துட்டார்ல. அதுக்கடுத்த மாசமே இந்த டேஷனும் வேணாம், இந்த ஊரும் வேணாம்னு சொல்லிட்டு மாத்தல் வாங்கிட்டுப் போயிட்டான்.” வெற்றிலைச் சாறு வாய் நிறைந்திருக்கச் சொன்னவன், கடையிலிருந்து தலையை மட்டும் வெளி நீட்டி, வாய் நிறைந்திருந்த வெற்றிலைச் சாற்றைப் புளிச்சென்று துப்பினான்.

``உங்கப்பாதான் இனியாச்சும் உக்காந்து பொளைப்ப பாருன்னு இந்த கடெய்க்கு மொதலு போட்டு தொடங்கிக் கொடுத்தாரு” சின்னத்தம்பி தங்கசாமியைப் பற்றிப் பெருமையாகச் சொல்லவும், ரவியும் தங்கசாமியை நினைத்துப் பெருமைபட்டுக்கொண்டான்.

``ஊருக்குள்ளருக்க அத்தன யாவாரிகளும் நம்ம கடெய்க்குதான் பாட்டலோட வருவானுவ. இங்கவெச்சுத்தான் பஞ்சாயத்தும் பேசித் தீத்துப்பானுவ.”

``அப்பாவாண்ணே உங்களுக்கு இந்த கடெயப் போட்டுக் குடுத்தாரு” கண்களில் ஆர்வம் பொங்க ரவி கேட்டான்.

``மாரி, அன்னிக்கு உன் அப்பா மட்டும் இல்லேன்னுவெச்சுக்கோ, இந்த சின்னத்தம்பியும் இல்லை, இந்தக் கடையும் இல்லை பார்த்துக்க” விரக்தியோடு பேசிய சின்னத்தம்பி, மீண்டும் தன் தலையைக் கடையிலிருந்து வெளிநீட்டி வெற்றிலைச் சாற்றைத் துப்பினான். பின்னர் சந்தேகப் பார்வையோடு கடையின் இருபக்கமும் பார்த்துக்கொண்டான்.

``இந்த பால்ராஜு வெங்கப்பயல எப்பருந்து உனக்குத் தெரியும் மக்கா..?”

``இப்பத்தாண்ணே. கொஞ்ச நாளா. ஏண்ணே?”

``ஒண்ணுமில்லை. சும்மாத்தான் கேட்டேன்” இதுவரையிலும் இல்லாத ஒரு தினுசாக அவன் குரல் ஒலித்ததை ரவியால் உணர முடிந்தது. ஆனபோதும் மீண்டும் ஒரு முறை ஏன் என்கிற கேள்வியைக் கேட்க ரவியால் முடியவில்லை.

``மாரி இந்த நம்பிக்கை துரோகம் பண்றது எவ்ளோ பெரிய துரோகம் தெரியுமா?”

ஒரு நொடி பேச்சை நிறுத்தியவன், சீவி வைத்திருந்த கொட்டைப்பாக்கில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.

``மாரி ஒருத்தன் மேல நம்பிக்கையெல்லாம் அவ்ளோ சுலுவால்லாம் வந்துடாது. அப்படியிருக்கப்ப நம்பிக்கைவெச்சவன ஏமாத்துறது எவ்ளோ பெரிய துரோகம். நீயே சொல்லு” தீர்க்கமான குரலில் சின்னத்தம்பி சொல்லி முடிக்கவும், ரவி தன்னுடைய சட்டைப்பையில் கிடந்த ஐம்பது பைசா நாணயத்தை பயத்தோடு தொட்டுக்கொண்டான்.

``நீ என்னை நம்பி இந்த கடெய ஒப்படைச்சிட்டுப் போறன்னுவெச்சுக்குவம், நான் இந்த கல்லாலருந்து பைசாவெடுத்து என் ஜோப்புல போட்டுக்கிட்டா உனக்கெப்படி இருக்கும்..?” அவன் பேசப் பேச ரவிக்குத் திணறத் தொடங்கியது.

``ஆனா இந்த பால்ராஜு வெங்கப்பயவுள்ள இருக்கானே...” ஒரு நொடி பேசுவதை நிறுத்திவிட்டு, வெற்றிலைச் சாற்றைத் துப்புவதுபோலத் தலையை வெளியே எட்டிப் பார்த்தான். சட்டென, தன்னைச் சூதாரித்துக் கொண்டவனாக, ``அப்புறம் ரவி நேத்து பள்ளியோடத்துல என்ன கத்துக் குடுத்தாங்க” என திடீரென்று தன் பழைய இயல்பு குரலில் அவன் பேசியது ரவிக்கு ஆச்சர்யமாக இருந்த அதே வேளையில், அவன் தோளில் ஒரு கை அழுத்தமாக விழுந்தது. கை வைத்தது யாரென அறியாத ரவியின் இதயமோ வெடித்துவிடுவதைப்போல துடிக்க, தலையைத் திருப்பிப் பார்த்தான். அங்கே…

(திமுறுவான்...)