Published:Updated:

ஊசிப்புட்டான்: ``இப்ப யார் குடியைக் கெடுக்கப் போறே?” | அத்தியாயம் - 5

``அட என்ன மருமவனே நீ... எப்பப் பாத்தாலும் பேய் பிடிச்சவன் மாதிரியே பேந்தப் பேந்த முளிக்க?” முகம் நிறைய புன்னகையோடு கேட்ட பால்ராஜ், ``நாளைக்கு ஒடுக்கத்தி வெள்ளிக்கெழமயாச்சே... பதிக்கு போய் அன்னந்திங்கலாமான்னு கேட்டேன்” என்றார்.

ராமனின் பாதம் தொட்ட தூசிக்காகக் காத்திருந்த அகலிகையின் சாபத்தைப்போல அந்த இரவு ரவிக்கு மிக நீண்ட இரவாக இருந்தது. கணத்துக்கு கணம் நிலவின் ஒளியில் இரவின் அடர்த்தி அதிகமாக அதிகமாக வீட்டினுள்ளிருந்த சுவர் கடிகாரத்தினுள் தன் பாதம் தொட்ட தூசிக்காகக் காத்திருக்கும் அகலிகையின் நினைப்பு ஏதுமின்றி நிதானமாக நடை பயின்ற ராமனின் நிதானத்தோடு நடந்த நொடி முள்ளின் பாத ஒலி ரவியின் காதை நெருங்கியிருந்தது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். நிலவு சற்று மேலேறி, தென்னங்கீற்றுகளின் அசைவில் தன்னை மறைப்பதும் வெளிப்படுத்துவதுமாக அவனுக்குக் கண்ணாமூச்சிக் காட்டிக்கொண்டிருந்தது. `பால்ராஜ் மாமாவைப் பாத்ததும் ஏன் சின்னத்தம்பிண்ணே உடனே பேச்ச மாத்தினாவ..?’ அவனுள் எழுந்தது கேள்வியா அல்லது சந்தேகமா என்று இனம் பிரித்துப் பார்க்க அவனுக்குத் தெரியவில்லை. இருப்பினும், அந்தக் கேள்வியின் பின்னேயே பயணம் செய்ய அவன் மனம் முடிவெடுத்தது.

``ஏம் மருமவனே எப்ப பார்த்தாலும் இப்படி பயந்து நடுங்கிக்கிட்டே இருக்கே...” என்று கேட்டபடியே, ரவி அமர்ந்திருந்த பெஞ்சில் அவனருகில் அமர்ந்தவர், சின்னத்தம்பியைப் பார்த்துச் சற்று நட்பு கலந்த அதிகாரத் தோரணையில், “மாரி... ஒரு பாட்டல எடு” என்றார்.

வெளியே ஏதும் கேட்காதபடிக்கு முணுமுணுத்தபடியே சின்னத்தம்பி மாம்பட்டை பாட்டில் ஒன்றை எடுத்துக் கடையின் முன்னால் நீண்டிருந்த பலகையில் வைக்கவும், பால்ராஜ், ``மாரி என்ன முணுமுணுக்க...” கேட்டபடியே, சர்பத் கிளாஸ் ஒன்றை எடுத்து நன்றாக உதறி பாட்டிலினுள் இருந்த மாம்பட்டையை அதில் ஊற்றினார்.

``பழைய பாக்கியே ஒரு தொகைக்கு கெடக்கு பாத்துக்க...”

சர்பத் கிளாஸில் பட்டையை ஊற்றிக்கொண்டிருந்த பால்ராஜ் ஒரு நொடி ஊற்றுவதை நிறுத்திவிட்டு, சின்னத்தம்பியை நிமிர்ந்து பார்த்தார். பின்னர் பாட்டிலில் மீதமிருந்த திரவத்தையும் கடைசி சொட்டு வரையிலும் மொத்தமாக கிளாஸில் ஊற்றினார். சர்பத் கிளாஸ் விளிம்பு வரையிலும் பட்டை தளும்பி நின்றது. பார்வை முழுவதும் கோப்பையில் தளும்பி நிற்கும் பட்டையின் மீதிருக்க, மிகவும் கவனமாகக் கைநடுக்கம் ஏதுமின்றி கோப்பையை எடுத்து, வாயில்வைத்து ஒரே மடக்கில் மொத்தக் கோப்பையையும் காலி செய்துவிட்டு, கடையின் முன்பு தொங்கிக்கொண்டிருந்த பாளையங்கொட்டைப் பழத்தாரிலிருந்து ஒரு பழத்தைப் பிய்த்து, தோலுரித்து முழுவதுமாக வாயினுள் திணித்துக்கொண்டார்.

``மாரி... என்ன சொன்ன?” இரண்டு கன்னங்களிலும் நிறைந்திருந்த பழத்துண்டுகளை அதக்கியப்படியே கேட்ட பால்ராஜை முறைத்துப் பார்த்தான் சின்னத்தம்பி.

``ஒமக்க மொவ வயசுக்கு வந்துட்டாளான்னு கேட்டேன்...” என்று கூறிய சின்னத்தம்பியின் குரலில் ஒரு எள்ளல் இருந்தது.

``மாரி... அதைத் தெரிஞ்சு நீ என்ன மொற சீரு செய்யப் போறியா?” என்று ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டதைப்போலச் சத்தமாகச் சிரித்தார் பால்ராஜ்.

``இந்தச் சிரிப்பாணிக்கொண்ணும் கொறச்சலில்லை. பழைய பாக்கியே இங்க ஒரு தொகைக்கு கெடக்கு தெரியுமா” என்றான் சின்னத்தம்பி.

``ச்சவத்த பற்று என்ன... ஒரு பத்து நூறு கெடக்குமா” சிரித்த முகம் மாறாமல் கேட்ட பால்ராஜை எரிச்சலோடு பார்த்தான் சின்னத்தம்பி.

``மாரி... இன்னும் ரெண்டு நாளு பொறுத்துக்க. பழைய கணக்கைத் தீத்துட்டு புது கணக்குக்கும் சேர்த்து பணம் தாரேன்” என்று பால்ராஜ் சொல்லச் சொல்ல, சின்னத்தம்பியின் முகம் வேதனைக்குள்ளானது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``இப்ப யார் குடியைக் கெடுக்கப் போறே?” என்று கேட்ட சின்னத்தம்பியின் பார்வை ஒரு நொடி இந்த சம்பாஷனைக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதாக அமர்ந்திருந்த ரவியைத் தொட்டுத் திரும்பியதை ரவி கவனிக்கவில்லை என்றாலும், அதை கவனித்த பால்ராஜின் முகம் இறுக்கமானது.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்ட எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் அமர்ந்திருந்த ரவியின் மனதிலும் புத்தியிலும் சற்று முன் தேங்காய் வெட்டுபவனிடமிருந்து வாங்கிய பணத்தில் பதுக்கிய ஐம்பது காசும், சின்னத்தம்பி பேசிய துரோகம் குறித்த பேச்சுமே நிறைந்திருந்தன.

ஊசிப்புட்டான் - `நம்பிக்கை வெச்சவனை ஏமாத்துறது எவ்ளோ பெரிய துரோகம்!' | அத்தியாயம் - 4

`நம்மள நம்பித்தானே சின்னத்தம்பிண்ணே அவரு கடெய ஒப்படைச்சிட்டுப் போனாரு... அவரு கடெல இருந்தே காசைத் திருடியிருக்கோமே...’ என்கிற நினைப்பும், `அப்பா மேல எவ்ளோ அன்பைவெச்சிருக்காரு, அப்பா போட்டுக் குடுத்த கடெயிலயே கைவெச்சுட்டோமே’ என்கிற நினைப்பும் ஒன்று மாற்றி மற்றொன்று என அலையடித்துக்கொண்டிருந்தன.

பால்ராஜ் சின்னத்தம்பியின் பேச்சுக்கு எந்தவொரு மறுமொழியும் பேசாமல் ரவியின் அருகில் அமர்ந்தார். கண்களில் கருணை பொங்க ரவியைப் பார்த்துவிட்டு, சின்னத்தம்பியிடம்,

``சின்னப்பையன் இருக்கப்ப கண்டதையும் பேசாதன்னு ஒங்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருப்பேன்” எனக் கடிந்துகொண்டவர்,

ரவியிடம் திரும்பி, ``மருமவனே... நாளைக்கு ஒடுக்கத்தி வெள்ளிக்கெழம, மத்தியானம் அன்னச்சாப்பாடு சாப்பிட அம்பலப்பதி போவமா” எனக் கேட்டார்.

சட்டெனத் தன் மனக் குழப்பத்திலிருந்து வெளி வந்தவன் ஒரு திடுக்கிடலுடன், ``என்ன மாமா...” எனக் கேட்டான்.

``அட என்ன மருமவனே நீ… எப்பப் பார்த்தாலும் பேய் பிடிச்சவன் மாதிரியே பேந்தப் பேந்த முளிக்க…” முகம் நிறைய புன்னகையோடு கேட்ட பால்ராஜ், ``நாளைக்கு ஒடுக்கத்தி வெள்ளிக்கெழமயாச்சே பதிக்குப் போய் அன்னந்திங்கலாமான்னு கேட்டேன்” என்றார்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

அம்மாவோடு ஒவ்வொரு ஞாயிறும் பதிக்குச் செல்கையில் மாதத்தின் முதல் ஞாயிறு மட்டும் அங்கு வழங்கப்படும் அன்னம் தின்றிருக்கிறான். வழக்கமாகக் குருணை அரிசியில் சோறும், கிழங்கும் தின்பவனுக்கு அன்றைய நாள் மட்டும் வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். அந்த உணவின் மேல் அவனுக்கு அலாதி விருப்பம் உண்டென்றாலும், மறுநாளும் பள்ளிக்கு மட்டம் போடுவதற்கு ஏனோ தயக்கமாக இருந்தது. அதனால் சற்று தயக்கத்தோடேயே, ``இல்ல மாமா நாளக்கி ஸ்கூலுக்குப் போகணும்” என்றான்.

``மாரிய... ஸ்கூலு எங்கியும் ஓடிப் போயிடாது. அது அங்கயேதான் இருக்கும். ஆனா இந்த ஒடுகத்தி வெள்ளிக்கெழமய விட்டுட்டா இனி ஒரு மாசம் நீ காத்திருந்தாதான் அடுத்த ஒடுக்கத்தி வெள்ளிக்கெழம வரும்” என்று சொன்ன பால்ராஜின் வாயிலிருந்து எச்சில் தெறித்தது.

``ஏய் பால்ராஜி. அவந்தா பள்ளியோடம் போணும்னு சொல்றாம்ல, அவனை எதுக்குப் போட்டு தொந்தரவு பண்றே” என்றான் சின்னத்தம்பி.

சின்னத்தம்பி சொல்வது சரியெனத் தோன்றினாலும், பால்ராஜ், ``மாரி... அத அவஞ் சொல்லட்டுமே... அவனுக்கென்ன நீ அன்னாவியா” என்று கேட்டுவிட்டு ரவியைப் பார்த்தார்.

ரவியின் கண்களில் ஏக்கம் தெரிந்தாலும், அவன் எதுவுமே பேசாமல் இருக்கக் கண்டு, ``அட சும்மா சொல்லு மருமவனே, வர்றியா, வர்லியா” என மீண்டும் பாசத்தோடு கேட்டார் பால்ராஜ்.

``இல்ல மாமா, ஏற்கெனவே இந்த வாரத்துல ரெண்டு நாளு கட்டடிச்சிட்டேன். இதுக்கே வீட்லருந்து ஆள கூட்டிட்டு வரச் சொல்வாங்களோன்னு பயமா இருக்கு.”

``அட என்ன மருமவனே... எதுக்கெடுத்தாலும் இப்பிடி பயந்து சாவுத..?” எனக் கேட்டபடியே சட்டைப்பையிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டவரைப் பார்த்து, ``அம்ம என்னை வெட்டி வகுந்துடும் மாமா” என்றான் ரவி.

``அம்மெக்கு தெரிஞ்சாதான வகுந்துடும்” இடைவெளி விழுந்து கறுப்பேறிய பற்கள் தெரிய விஷமமாகச் சிரித்தவர், ``அப்படி உன்ன வீட்லருந்து ஆள கூட்டீட்டு வர சொன்னாக்க சொல்லு. நான் வர்றேன்” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும் தனக்கு ஏதும் பிரச்னை என்றால் தன்னுடைய துணைக்கு ஒரு பெரிய மனிதர் இருக்கிறார் என்ற நினைப்பு அவனுள் உருவானது. அந்த நினைப்பே ரவிக்கு மிகவும் ஆசுவாசத்தைக் கொடுத்தது.

``சொல்லு மருமவனே, நாளக்கி அன்னத்துக்கு போவமா வேணாமா?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி என்று சொல்வதைப்போலச் சந்தோஷமாகத் தலையாட்டினான் ரவி.

பால்ராஜ் ஒரு பெருமிதத்தோடு சின்னத்தம்பியைப் பார்க்க, சின்னத்தம்பியின் முகம் அதிருப்தியால் திரும்பிக்கொண்டது.

சின்னத்தம்பி அப்படி முகத்தைத் திருப்பிக்கொண்டது, ரவியை மீண்டும் சங்கடத்துக்கு உள்ளாக்கியது.

``அவங்கெடக்கான் விடு மருமவனே” என்றபடி ரவியின் முதுகில் தட்டிக் கொடுத்த பால்ராஜ், ``சின்னத்தம்பி இன்னொரு பாட்டலை எடு” என்று கேட்கவும், சின்னத்தம்பி கடையின் மூலையிலிருந்த கோணிப்பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து `டக்’ என்று சப்தம் எழும் வகையில் கடையின் முன்பக்கப் பலகையில் வைத்தான்.

``மாரிய... இப்ப எதுக்கு கோவப்படுத நீ” நன்றாகக் கனிந்திருந்த பாளையங்கொட்டைப் பழம் ஒன்றைத் தாரிலிருந்து பிய்த்து எடுத்தபடியே கேட்டார் பால்ராஜ்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``தங்கசாமியண்ணனைப் பத்தி என்னையவிட ஒனக்கு நல்லாவே தெரியும். அப்படியிருந்தும் அவம் பையனைக் கெடுக்குத பாத்தியா” என்று கேட்ட சின்னத்தம்பியின் குரலில் ஒரு நிஜமான வருத்தம் தொனித்ததை ரவியும் கவனித்தான். ஆனால் பால்ராஜோ இது எதையுமே கவனத்தில்கொள்ளாதவராகக் குப்பியிலிருந்த மாம்பட்டையின் கடைசி சொட்டு வரையிலும் மிக கவனமாக, ஏற்கெனவே தான் குடித்துவைத்திருந்த சர்பத் கோப்பையில் ஊற்றி, நிதானமாக ஒரே மிடறில் குடித்துத் தீர்த்தார். பின்னர் அதே நிதானத்தோடு கையிலிருந்த பழத்தைத் தோலுரித்து வாயில் போட்டுக்கொண்டார்.

பின்னர் எதுவுமே பதில் பேசாமல் மீண்டும் அவர் வந்து பெஞ்சில் உட்கார்ந்தபோது அவரது நடையிலும் உணர்விலும் ஒரு சிறு தள்ளாட்டம் தோன்றியிருந்தது.

சற்றே சாய்ந்த பார்வையில் ரவியைப் பார்த்தார் பால்ராஜ். அவரது கண்களில் ஒருவிதமான கலக்கம் தெரிந்ததை ரவியால் பார்க்க முடிந்தது. ரவியின் தலைமுடியை வாஞ்சையோடு கோதியவர், ``நீ என் மருமவன்டா” என்று சொன்னார். பின்னர் அதில் அதிருப்தி அடைந்தவராக,

``உனக்குன்னு எவனும் இல்லைன்னு நினைக்காத மருமவனே. நான் இருக்கேன் சரியா” சொல்லி முடிக்கையில் அவரது குரல் நெகிழ்ந்திருந்தது.

பால்ராஜ் அப்படி நெகிழ்வோடு பேசியது ரவியின் மனதை ஏதோ செய்தது. அவருக்கு இணையாக அதே நெகிழ்வோடு அவனுக்கும் பேசத் தோன்றியது. இருப்பினும் என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். சின்னத்தம்பி மட்டும் தனக்கு மட்டுமே கேட்கும்விதமாக, ``இன்னைக்கென்ன இவனுக்கு ரெண்டு பாட்டில்லயே சுதியேறிட்டு... தாமரக்கொளம் ஐட்டம் நல்ல ஐட்டம்போலதான் இருக்கு” என்று பேசிக்கொண்டான்

மனம் முழுக்க பாரத்தோடு ரவி வீட்டினுள் நுழைந்தபோது, வீட்டினுள் அடர்த்தியாகக் கவிந்திருந்த அமைதி அவனுள் ஏதோவொரு தவறு நிகழ்ந்துவிட்டிருப்பதாக உணர்த்தியது. சப்தமெதுவும் எழுப்பாமல் அமைதியாகச் சென்று வழக்கமாக தன்னுடைய புத்தகக் கூடையை வைக்கும் இடத்தில் புத்தகக் கூடையை வைத்தான். பின்னர் எதிர்மூலையில் அமர்ந்து அவித்த பனங்கிழங்கைக் கொறித்தபடியே அமர்ந்திருந்த சந்திரனைப் பார்த்து மிகவும் தாழ்ந்த குரலில், ``அம்மெய எங்கெல” எனக் கேட்கவும், சந்திரனோ எதுவும் பேசாமால், கண்களில் மிரட்சியோடு அடுக்களையைக் கைகாட்டினான். சந்திரனுடைய உடல்மொழி ரவியை இன்னம் அதிகமாகக் கலவரப்படுத்தியது.

அம்மா என்றழைக்கவோ அல்லது அடுக்களைக்குள் செல்லவோ ரவியின் நாக்கும் எழவில்லை; காலும் நகரவில்லை.

இப்போது அவன் மனம் ஏதோவொரு தவறு நிகழ்ந்துவிட்டிருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக அவனிடம் கூறியது. இனி என்ன செய்வது என்று தெரியாததால், நின்ற இடத்தைவிட்டு நகர முடியாமல் ரவி அங்கேயே நின்றிருக்க, ரவியின் பேச்சு சத்தம் கேட்டு விஜயா அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள். வந்தவளின் ஒரு கையில் கரிபடிந்து புகை எழுப்பியபடியே இருந்த கண்ணகப்பையும், மறுகையில்...

(திமுறுவான்...)

ஊசிப்புட்டான் - `பட்டைக்கு எப்பயுமே பாளையங்கொட்டைதான்!'|அத்தியாயம் - 3
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு