Published:Updated:

ஊசிப்புட்டான்: ``இனி நாந்தா உன் மூத்தப்பா’’ | அத்தியாயம் - 7

ஊசிப்புட்டான்
பிரீமியம் ஸ்டோரி
ஊசிப்புட்டான்

``இவனுக்கு நீயென்ன அன்னாவியா..? ஏன் அத இவஞ்சொல்ல மாட்டானா..?” குரலை உயர்த்தி சின்னத்தம்பியிடம் கேட்டுவிட்டு, சாந்தமான குரலில், ``ஒம் பேரென்ன?’’ என ரவியிடம் கேட்கவும், நடுக்கத்துடன்கூடிய குரலில் ``ரவி” என்றான்.

Published:Updated:

ஊசிப்புட்டான்: ``இனி நாந்தா உன் மூத்தப்பா’’ | அத்தியாயம் - 7

``இவனுக்கு நீயென்ன அன்னாவியா..? ஏன் அத இவஞ்சொல்ல மாட்டானா..?” குரலை உயர்த்தி சின்னத்தம்பியிடம் கேட்டுவிட்டு, சாந்தமான குரலில், ``ஒம் பேரென்ன?’’ என ரவியிடம் கேட்கவும், நடுக்கத்துடன்கூடிய குரலில் ``ரவி” என்றான்.

ஊசிப்புட்டான்
பிரீமியம் ஸ்டோரி
ஊசிப்புட்டான்

எப்படி ஒருசில நிகழ்வுகள் நிஜத்தில் நடந்து முடிந்துவிட்டிருந்தபோதும் அது கனவாக இருந்துவிடக் கூடாதா என்கிற ஏக்கம் நம்முள் தோன்றுமோ, அதைப் போலவே ஒருசில கனவுகளுக்கும், கண்டவை கனவுதான் என்கிற உண்மையை அறிந்த பின்னும், அது கனவுதான் என்று ஏற்றுக்கொள்ள மனம் தடுமாறும் குழப்பநிலை ஒன்றும் வரும். அன்றைய தினம் முழுவதும், அம்மாதிரியான ஒரு குழம்பிய மனநிலையில்தான் ரவியும் இருந்தான். முந்தைய நாளின் இரவு, தான் கண்டது கனவுதான் என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவனுக்கு முழுமையாகக் கைகூடி இருக்கவில்லை. நிலவின் வெளிச்சத்தில் அவன் பார்த்த பால்ராஜின் முகமும், அந்த முகத்தில் தெரிந்த பாவங்களும் பொய்யாக இருக்காதென்றே அவன் நம்பினான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

முந்தைய நாளின் இரவில், அந்தக் கனவைக் கண்டு விழித்தெழுந்த ரவிக்கு நிலவின் ஒளி வீட்டின் முகப்பை நோக்கி இல்லாமல், வீட்டின் நிழலை வீட்டின் முன்னே விழச்செய்யும் அளவுக்கு உச்சியைத் தாண்டிப்போயிருந்தது உரைத்திருக்கவில்லை. அவன் படுத்திருந்த திண்ணைக்கு அருகில் அந்த உருவம் நின்றிருந்ததாக அவனுக்குத் தோன்றிய இடத்தில் ஏதேனும் காலடிச் சுவடுகள் பதிந்திருக்கின்றனவா என உற்றுப் பார்த்துக்கொண்டான். அப்படி அங்கே எதுவும் இல்லை. இருப்பினும், அடுத்ததாக வீட்டின் கதவைத் திறந்து பார்த்தான். வீட்டினுள்ளும் யார் ஒருவரும் வந்து போயிருந்த சுவடுமில்லை. ஆனபோதும், தான் கண்டது கனவுதானென நம்ப அவன் மனம் மறுத்தது. அப்படியே அதே குழப்பத்தோடு மீண்டும் வீட்டுத் திண்ணையில் வந்து படுத்தான். படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவனையும் அறியாமல் தூங்கியும்விட்டான். மறுநாள் காலையில் அவன் கண்விழித்தபோது, வழக்கமான காலையாகத்தான் அது விடிந்திருந்தது. முகம் கழுவிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். முந்தைய நாள் மாலையில் அவன் கழற்றி எறிந்திருந்த சட்டை அதே இடத்தில் யாரும் தொடாமல் அப்படியே கிடந்தது. அதை எடுத்து ஒரு முறை உதறிப் போட்டுக்கொண்டான்.

``சந்த்ரா, டிபன் பாக்ஸ்ல சாப்பாடும், அதுக்குக் கீழ அவன் ப்ராக்ரஸ் கார்டுல கையெழுத்தும் போட்டுவெச்சிருக்கேன்.

அதையும் எடுத்துட்டுப் போக சொல்லு” விஜயாவின் குரல் அடுக்களையிலிருந்து கேட்டது. ரவி எதுவுமே பேசாமல் அடுக்களைக்குள் சென்று டிபன் பாக்ஸையும், ப்ராக்ரஸ் கார்டையும் எடுத்து வந்து தன்னுடைய புத்தகக் கூடையினுள் வைத்துக்கொண்டான்.

``சந்த்ரா, தொர பல்லைத் தேய்ச்சிட்டார்னா அவருக்குப் பிடிச்ச கெழங்கு புட்டு அவிச்சுவெச்சிருக்கேன். அதையும் தின்னுட்டுப் போகச் சொல்லு. அப்பதான இன்னும் தெம்பா சண்டை போட முடியும்?” என்று குத்தலாக ஒலித்த விஜயாவின் குரல் ரவிக்கு எரிச்சலூட்டியது. இருப்பினும், அந்த எரிச்சல் எதையும் காட்டிக்கொள்ளாமல் சந்திரனை அவன் கண்கள் தேடின. ஆனால் சந்திரனோ எப்போதோ கிளம்பிப் போயிருந்தான்.

வகுப்பாசிரியரான வைகுண்டமணியிடம், முந்தைய நாள் தனக்கு காய்ச்சல் என்று அவன் கூறிய பொய்க்கு, முந்தைய நாளின் உறக்கமற்ற இரவும், அவன் கண்ட கனவு கொடுத்திருந்த அதிர்ச்சியும் ஒன்றெனச் சேர்ந்து ரவியின் முகத்தைச் சோர்வாக மாற்றியிருந்தது, உறுதுணையாக நின்றது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``ப்ராக்ரஸ் கார்டுல கையெழுத்து வாங்கிட்டு வந்தியால?”

`ஆமாம்’ என்பதைப்போலத் தலையை ஆட்டியபடி, தன்னுடைய கூடையிலிருந்து கார்டை எடுத்துக் கொடுத்தான். வாங்கிய கார்டை உற்றுப் பார்த்த வைகுண்டமணி,

``இது உங்கம்மெ போட்ட கையெழுத்தா... இல்லை நீயே போட்டுகிட்டியால...” என்று அன்றைய தினம் மட்டும் அவர் சந்தேகத்தோடு கேட்காமல் போயிருந்தால்,

ஒருவேளை ரவி ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்று படித்திருந்திருப்பான். அவருடைய அந்தச் சந்தேகக் கேள்வி, ரவியின் உள்ளே ஒருவித கிளர்ச்சியைத் தோற்றுவித்தது. சற்று ஓங்கிய குரலில், ``ப்ராக்ரஸ் கார்டை நேத்து எந்தம்பிகிட்ட குடுத்தனுப்பின மாதிரி இன்னிக்கும் அவன்கிட்டயே போய் கேட்டுக்கோங்க” என்று எதுவுமே யோசிக்காமல் அவன் பேசிய வார்த்தைகள் வைகுண்டமணியைக் கோபப்படுத்த, ``என்னை எதுத்தால பேசுற, பீ தின்னிப் பயலே...” கையிலிருந்த பிரம்பைக்கொண்டு மளாரென அவன் பின்தொடையில் வீசினார். பிட்டத்துக்குக் கீழே விழுந்த அடியின் வலி தலைக்குச் சுர்ரென்று ஏறியது. ஆனால் அவனே அதிசயிக்கும்விதமாக வலியின் எந்தவொரு சுரணையுமின்றி வைகுண்டமணியை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடியே நின்றான்.

``மொறைக்கவா செய்யுக... ஒங்கப்பனையே எம்முன்னாடி கைய கட்டி நிக்கவெச்சவம்ல நான்...”

பேசியபடியே கையிலிருந்த பிரம்பை ரவியின் பின் தொடைக்கு மீண்டுமொரு முறை வீச, ரவி தனது இடது கையால் அந்தப் பிரம்பின் வீச்சைத் தடுத்து, அதை அப்படியே பற்றியும் கொண்டான்.

ரவியின் எதிர் நடவடிக்கை வைகுண்டமணியின் அகங்காரத்தைச் சீண்டியது. ``எதுத்து பேசினதுமில்லாம பிரம்பை வேற தடுக்கியால நீ... என் க்ளாஸவிட்டு வெளிய போல” வகுப்பே அதிரும்படி கத்தினார் வைகுண்டமணி.

இடது கையின் பிடியிலிருந்த பிரம்பை விடுவித்துவிட்டு, கீழே வைத்திருந்த தன்னுடைய புத்தகக்கூடையை எடுத்துக்கொண்டு அவன் வெளியே செல்லவும், வைகுண்டமணி தன் வகுப்பு மாணவர்களின் முன்னால் தான் அவமானப்படுத்தப்பட்டுவிட்டதாக உணர்ந்தவராக, ``வீம்பைக் காட்டிட்டு வெளிய போறதெல்லாம் செரி... ஆனா வீட்லருந்து ஆளக் கூட்டிட்டு வராம என் க்ளாஸுக்குள்ள நொழைஞ்சிடாத” மீண்டும் வகுப்பு அதிரக் கத்தினார் வைகுண்டமணி

வாசல்வரை சென்றவனை வைகுண்டமணியின் குரல் தடுத்து நிறுத்தியது. குரலில் எந்தவிதமான பதட்டமுமின்றி

``எங்கப்பா செத்தப்பறமா அம்மெ எங்கயும் வெளிய வரதில்லை. அதனால அம்மெயயெல்லாம் என்னால கூட்டிட்டு வர முடியாது”

என அழுத்தம் திருத்தமாக பதில் சொல்லிவிட்டு வைகுண்டமணியின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் வகுப்பிலிருந்து வெளியேறினான் ரவி.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

முந்தைய நாளின் இரவு இனி எங்கே செல்லக் கூடாது என்று நினைத்திருந்தானோ, அங்கேயே மீண்டும் சென்றான் ரவி. ``என்ன ரவி... இன்னிக்கும் பள்ளியோடத்துக்கு லீவைப் போட்டுட்டியா..?” ஒருவிதமான அதிருப்தியோடு கேட்டான் சின்னத்தம்பி .

``இல்லண்ணே” என்றான் ரவியும் சோர்வாக.

``என்ன ரவி... ஒம் மொகமெல்லாம் ஒரு மாதிரி வாடிப்போயிருக்கு, ஒடம்புக்கு ஏதும் முடியலியா?” இம்முறை சின்னத்தம்பியின் குரலில் அக்கறை நிறைந்திருக்க, கண்கள் கலங்க சின்னத்தம்பியை நிமிர்ந்து பார்த்தவன், ``வாத்தியாருட்ட ஒடக்கிட்டேண்ணே” என்றான்.

``பாடம் கத்துக்கொடுக்க வாத்தியார்ட்டல்லாம் ஏம்மாரி ஒடக்குற?”

``அப்பாவப் பத்தி தப்பாப் பேசினாரு சின்னத்தம்பிண்ணே, தாங்க முடியலை. ஒடக்கிட்டேன்” ஏறக்குறைய அழுதுவிடும் குரலில் பதிலளித்தான் ரவி.

``சரி... ஏதோ கோவத்துல ஒடக்கிட்டேன் சார், மன்னிச்சிருங்கன்னு சொல்லிட்டு க்ளாஸுல போய் ஒக்காருறதை விட்டுட்டு இப்பிடியா வெளிய வருவ?”

``வீட்லருந்து அம்மெயக் கூட்டிட்டுப் போனாதான் க்ளாஸுக்குள்ள ஏத்துவேன்னு சொல்லிட்டாருண்ணே. நான் இப்பிடியெல்லாம் பண்ணினேன்னு அம்மெக்கி தெரிஞ்சதுன்னா என்னை வெச்சுவெக்க மாட்டாண்ணே. அதான் பயமாருக்கு” இம்முறை ரவியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்திருந்தது.

``நடந்தது நடந்து முடிஞ்சாச்சு, இனி அழுது என்னத்த நடக்கப் போவுது... அழாத... ஏதாச்சும் ஒரு வழி பண்ணுவம்” என்று ரவிக்கு ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்த சின்னத்தம்பியின் முகம் சட்டெனத் தீவிரமடைந்தது.

சின்னத்தம்பியின் முகமாற்றத்துக்கான காரணத்தை அறியும் பொருட்டு அவன் பார்வையிருந்த திசையைப் பார்த்தான் ரவி. அங்கே சொட்டு நீலமிட்டு வெளுத்த பாலியெஸ்டர் வேட்டியும், அணிந்திருந்த வெள்ளைச் சட்டையின் முதல் இரண்டு பொத்தான்களைத் திறந்துவிட்டு, நெஞ்சின் சுருள் முடியையும் அதனூடே தெரிந்த தங்கச்சங்கிலியையும் காட்டியபடி ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்படியே தலை திருப்பிச் சின்னத்தம்பியைப் பார்த்தான். கடையினுள் இருந்த பள்ளத்தில் நின்றுகொண்டிருந்தான் சின்னத்தம்பி.

சின்னத்தம்பியின் உடல்மொழி, வருவது சாதாரண ஆளல்ல என்பதை ரவிக்கு உணர்த்தியது.

``யாவாரமெல்லாம் எப்படிடே போகுது?” வந்தவரின் குரல் கணீரென ஒலித்தது.

``ஏதோ ஆண்டவன் புண்ணியத்துலயும், உங்க புண்ணியத்துலயும் நல்லா போகுது அண்ணாச்சி” சின்னத்தம்பியின் குரலில் பயம் கலந்த மரியாதை தொனி நிறைந்திருந்தது.

வந்தவர், கடையின் முன்னால் வரிசையாக இருந்த பாட்டிலைக் கூர்ந்து பார்த்து, கடலைமிட்டாய் கிடந்த பாட்டிலின் மூடியைத் திறந்து ஒரு மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.

``ஆண்டவன் புண்ணியம்னு சொல்லு. எம்புண்ணியம்னு எல்லாம் சொல்லாதடே. ஹெ ஹெ ஹெ...” சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தபடியே ரவியைப் பார்த்து, வாயில் கிடந்த கடலைமிட்டாயை மென்றபடியே, ``பையன் யாருடே..? புதுசாருக்கான்...”

``நம்ம தங்கசாமியோட பையன் அண்ணாச்சி” என்றான் சின்னத்தம்பி பவ்யமாக.

வந்தவரின் கண்களில் கருணை நிரம்ப ரவியைப் பார்த்தபடியே சின்னத்தம்பியிடம், ``இவம் மூத்தவனா இல்ல ரெண்டாமத்தவனா?” என்று கேட்டார்.

``மூத்தவன் அண்ணாச்சி...”

``இங்க வாடே” ரவியைக் கைநீட்டி அழைத்தார்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

இதயம் வேகமாகத் துடிக்க அவரை நெருங்கினான் ரவி.

``தங்கசாமி எனக்க தம்பி மாறிடே. எங்கழுத்துல விழ வேண்டிய கத்தி அவந் தலைல எறங்கிட்டு...”

பேச்சை நிறுத்தியவர், தொண்டையைச் செறுமிக்கொண்டார். ``ஆமா நீ படிக்குதியாடே?”

ரவி பதில் சொல்லும் முன்னமே சின்னத்தம்பி, ``ஆமா அண்ணாச்சி நம்ம கவருமென்ட் ஸ்கூல்ல…” ரவியை நோக்கி, ``எட்டாப்புதானடே?” எனக் கேட்டான். ரவியும் `ஆமாம்’ என்பதாகத் தலையை ஆட்ட, ``எட்டாப்பு அண்ணாச்சி...”

``இவனுக்கு நீயென்ன அன்னாவியா..? ஏன் அத இவஞ்சொல்ல மாட்டானா...?” குரலை உயர்த்தி சின்னத்தம்பியிடம் கேட்டுவிட்டு, சாந்தமான குரலில், ``ஒம்பேரென்ன” என ரவியிடம் கேட்கவும், நடுக்கத்துடன்கூடிய குரலில் ``ரவி” என்றான்

``தங்கசாமின்னா ஊரே பயப்படும், நீ என்னடான்னா உம்பேரச் சொல்லவே இந்த பயம் பயப்படுத. சரி அது போட்டும்... நா யாருன்னு தெரியுமா?” என அவர் கேட்க, ரவி `தெரியாது’ என்பதைப்போல இட வலமாகத் தலையை ஆட்டினான்.

``சரியா போச்சு போ. என்னயவே யாருன்னு தெரியல... இதுல தங்கபாண்டியன்னு எம்பேரச் சொன்னா மட்டும் ஒனக்கு தெரிஞ்சிடவா போவுது. ஹெ ஹெ ஹெ...” சத்தமாகச் சிரித்துவிட்டு, ``சரி நாந்தா இனி ஒனக்க மூத்தப்பா. சரியாடே?”

சரியெனத் தலையாட்டினான் ரவி.

``மூத்தப்பான்னு சொன்னப்பறமும்கூடப் பேசுதானான்னு பாரு” சின்னத்தம்பியைப் பார்த்துச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.

தங்கப்பாண்டியன் என்கிற பெயரை எங்கோ கேட்ட ஞாபகம் ரவிக்கு இருந்தாலும், ரவியால் அது யார் என்பதை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

``என்ன அண்ணாச்சி திடீர்னு இந்தப் பக்கம்” சின்னத்தம்பி தயக்கத்தோடு கேட்கவும், ``முத்துலிங்கம்னு மாதவரத்துலருந்து நம்ம பய ஒருத்தன இங்க வர சொல்லிருக்கேன். அவனுக்காண்டிதான்” கையில் கட்டியிருந்த தங்க வாட்சைப் பார்த்தபடியே அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தூரத்தில் வாட்டசாட்டமாக ஓர் உருவம் கடையை நோக்கி நடந்துவருவது தெரிந்தது.

ரவி சுற்றுமுற்றும் பார்த்தான். எப்போதுமே ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் இன்று மட்டும் ஏனோ நிறைய மனிதர்கள் தென்பட்டார்கள். அவனுள் ஏதோ தவறான இடத்தில் சிக்கிக்கொண்டதாக ஒரு பீதி கிளம்பியது. சின்னத்தம்பியின் முகத்தைப் பார்த்தான். இது வழக்கம்தான் என்பதைப்போல அவனது முகம் எந்தவிதமான பாவமுமின்றி இருந்தது.

``தோ... அவனே வந்துட்டான்.” தங்கப்பாண்டியனின் முகம் மலர்ந்தது.

வருவது யாரென உற்றுப் பார்க்க ஆரம்பித்தான் ரவி.

அதேநேரம் விஜயா பள்ளியின் முற்றத்தினுள் ரவியின் வகுப்பு எதுவென விசாரித்து நடந்து சென்றுகொண்டிருந்தாள்.

(திமிறுவான்...)