Published:Updated:

ஊசிப்புட்டான் : ``ஒனக்கு ஏம்டே இந்த எளவு வேலையெல்லாம்...'' | அத்தியாயம் - 8

ஊசிப்புட்டான்

``நீ வெச்சிருக்க கத்தியோட சமநிலை எடது கைக்கான சமநிலை. நீ ஒன்னோட வலது கையால இந்தக் கத்தியை எறக்குறப்ப கத்தி மொன, குத்து வாங்குனவன் எலும்புல மாட்டிக்கிச்சுன்னா கத்தியை அவ்ளோ சொலபமா வெளிய உருவ முடியாது கேட்டியா...”

ஊசிப்புட்டான் : ``ஒனக்கு ஏம்டே இந்த எளவு வேலையெல்லாம்...'' | அத்தியாயம் - 8

``நீ வெச்சிருக்க கத்தியோட சமநிலை எடது கைக்கான சமநிலை. நீ ஒன்னோட வலது கையால இந்தக் கத்தியை எறக்குறப்ப கத்தி மொன, குத்து வாங்குனவன் எலும்புல மாட்டிக்கிச்சுன்னா கத்தியை அவ்ளோ சொலபமா வெளிய உருவ முடியாது கேட்டியா...”

Published:Updated:
ஊசிப்புட்டான்

ஐந்தே முக்காலுக்கும் சற்று அதிகமான உயரத்தோடு தங்கப்பாண்டியனை நோக்கி வந்தவன் அணிந்திருந்த இறுக்கமான வெள்ளை நிறச் சட்டையில் ஆங்காங்கே சிவப்பும் மஞ்சளும் நீலமுமாகப் பூக்கள் பூத்திருந்தன. முட்டிக்கு மேலே ஏற்றிக் கட்டியிருந்த லுங்கியை தங்கப்பாண்டியனை நெருங்கியதும் அவன் இறக்கிவிட்டுக்கொள்ள, அந்தக் கட்டுமஸ்தான உடம்புக்கு எந்தவொரு தொடர்பும் இல்லாமல் வயிற்றில் ஒரு பாகம் மட்டும் சற்றுத் தூக்கலாகத் துருத்திக்கொண்டிருந்தது.

``வாடே முத்துலிங்கம். சொன்ன டயத்துக்கு சரியா வந்துட்டியேடே. நீ பொழச்சுப்ப...” ரவியின் தோளில் போட்டிருந்த கையை எடுக்காமலும், தான் அமர்ந்திருந்த இருக்கையைவிட்டு எழுந்திருக்காமலும் தங்கப்பாண்டியன் முத்துலிங்கத்தை வரவேற்றார்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

முத்துலிங்கம் புன்னகைத்தபடியே, சின்னத்தம்பியின் கடையையும் அதன் சுற்றுப்புறத்தையும் ஒரு முறை எச்சரிக்கையோடு பார்த்துக்கொண்டான்.

``என்னடே அப்படிப் பாக்குத...” தங்கப்பாண்டியனிடமிருந்து இயல்பாக வந்த கேள்விக்கு, ``ஒண்ணுல்லண்ணாச்சி, சும்மாதான் பாத்துக்கிட்டேன்” என்று கூறிய முத்துலிங்கத்தின் குரலில் ஓர் எச்சரிக்கையின் தொனி இருந்ததைத் தங்கப்பாண்டியன் கவனித்தார்.

``ஒண்ணும் பயப்படாதடே. இது நம்ம கோட்டதான். சுத்தி நிக்குதவங்களும் நம்ம ஆளுகதான்” என்று சொன்னவர், தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பிட்டத்தை உயர்த்தாமல் சற்றுத் தள்ளி அமர்ந்து, தனது இடது கையால் அவர் அருகிலிருந்த இடத்தைத் தட்டி, ``உக்காருடே” என்றார்.

``பரவால்லண்ணாச்சி” குரலில் எச்சரிக்கை தொனி குறைந்து, மரியாதையின் தொனி உயர்ந்து போயிருந்ததை அவதானித்த ரவி, முத்துலிங்கத்தின் முறுக்கேறிப்போயிருந்த கையையும், இறுக்கமான சட்டையில் புடைத்துத் தெரிந்த மார்பையும் பார்த்தான். பின்னர் அவனையும் அறியாமல் அவனுடைய கண்கள் அவனுடைய கையைப் பார்த்தன. எலும்புக்கு மேல் கொஞ்சமாக இருந்த சதையைத் தோல்கொண்டு போர்த்தியதைப்போலிருந்த கையைப் பார்த்ததும், அவனுக்குப் புத்திமுட்டு உண்டானது.

``மரியாத எல்லாம் மனசுல இருந்தா போதும்டே. சும்மா உக்காரு” என்று இன்னும் உரிமையோடு தங்கப்பாண்டியன் சொல்ல, முத்துலிங்கம் அவர் அருகில் அமராமல் அவருக்கு எதிரே இருந்த பெஞ்சின் நுனியில் அமர்ந்துகொண்டான்.

இப்போது ரவியின் கண்கள் தங்கப்பாண்டியனின் முன்னால் முத்துலிங்கம் அமர்ந்திருந்த விதத்தையும், அதே தங்கப்பாண்டியனின் அருகில் தான் அமர்ந்திருக்கும் விதத்தையும் ஒப்பீடு செய்து பார்த்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முத்துலிங்கத்தைப்போல அல்லாமல் தான் தாராளமாக அமர்ந்திருந்தது அவனுள் ஒருவித பரவசத்தைத் தோற்றுவித்தது.

``ஏம்டே என்னை சங்கடப்படுத்துத” என்று சற்று சலிப்போடு கூறிய தங்கப்பாண்டியன், ``சரி ஐட்டத்தைக் கொண்டு வந்திருக்கியாடே?” என்றார்

``அது இல்லாம உங்களப் பார்க்க வருவேனாண்ணாச்சி” என்றபடியே முத்துலிங்கம் சட்டையை உயர்த்தி வயிற்றில் மறைத்துவைத்திருந்த பாட்டிலை வெளியே எடுக்கையில், அவனுடைய இடுப்பில் கத்தியின் மரக் கைப்பிடி ஒன்று தெரிந்ததை ஒரே நேரத்தில் தங்கப்பாண்டியனும் ரவியும் பார்த்தார்கள்.

பாட்டிலைக் கைநீட்டி வாங்கி, தன்னருகில் வைத்துக்கொண்ட தங்கப்பாண்டியன், ``என்னடே வங்கா வச்சிருக்குத...”

``வங்கெல்லாம் இல்லண்ணாச்சி. சாதா ஐட்டந்தா” என்றான் முத்துலிங்கம்.

``எங்க அதக் குடு பாப்பம்” என்று தங்கப்பாண்டியன் தன்னுடைய வலது கையை நீட்ட, சுற்றுமுற்றும் பார்த்தபடி, தயக்கத்தோடு தன் இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து, அதைச் சுற்றியிருந்த துணியை நீக்கிவிட்டு, கைப்பிடியைத் தங்கப்பாண்டியனை நோக்கி நீட்டினான்.

கத்தியைத் தன் வலக்கையில் வாங்கிப் பிடித்துப் பார்த்தவர், பின் அதைத் தன் இடக்கைக்கு மாற்றி ஒருமுறை பிடித்துப் பார்த்தார்.

``என்னடே நீயென்ன நொட்ட கையனா?”

``இல்லியேண்ணாச்சி.”

பெருவிரல் நுனியால் கத்தியின் கூரைச் சோதித்தபடியே, ``பின்ன ஏன்டே நொட்டக் கைக்கத்தியை வாங்கிவெச்சிருக்குத… தரமா செஞ்சிருக்கானுவ, ஆமா எங்க செஞ்சதுடே” என்றார்

``மறவங்குடியிருப்புல அண்ணாச்சி.”

``அங்க வரைக்கும் ஆள்வெச்சிருக்குதியா. சூப்பருடே” என்று மனமார தங்கப்பாண்டியன் பாராட்ட, முத்துலிங்கமோ கூச்சத்தால் நெளிந்தான்.

``நம்ம தொழிலுக்கு நம்ம மாவட்டத்துல இருக்க ஒவ்வொரு கிராமத்துலயும் நமக்கு ஆளிருக்கணும்டே. எப்பயுமே நாலா பக்கத்துலருந்தும் நமக்குத் தகவல் வந்துட்டே இருக்கணும்.” கத்தியை முத்துலிங்கத்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, ``வலக்கை கத்தியொண்ணை வாங்கி இடுப்புலவெச்சிக்க. சரியா?” என்று தங்கப்பாண்டியன் கூறவும், ஏதோ கேட்க வந்த முத்துலிங்கம், ``சரிண்ணாச்சி” என்று தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.

``எலே பீப்பி... கடையில தடியங்கா, பூசணிக்கான்னு எதுனாச்சும் வெச்சிருக்கியாடே?” என்று சின்னத்தம்பியைப் பார்த்து தங்கப்பாண்டியன் கேட்க, சின்னத்தம்பி சற்று தயக்கத்தோடு, ``பூசணிக்கா இருக்குண்ணாச்சி… ஆனா...”

தங்கப்பாண்டியன் என்ன என்பதைப்போலப் பார்க்க, ``பதிக்குக் கொடுக்கவெச்சிருக்குதேண்ணாச்சி” என்றான் சின்னத்தம்பி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பதிக்கா...” என சற்று யோசித்தவர், ``சரி பரவால்ல... அதைக் குடு” என்றார்.

சின்னத்தம்பி தயங்கியபடியே கொடுத்த பூசணிக்காயை வாங்கித் தன்னருகே வைத்துக்கொண்டவர், முத்துலிங்கத்திடம், ``அந்தக் கத்தியெக் குடு மக்கா” எனக் கையை நீட்டினார்.

மறு பேச்சின்றி தன் கையிலிருந்த கத்தியைக் கொடுத்தான் முத்துலிங்கம்.

தனது தடித்து உருண்டுபோயிருந்த இடது கை ஆட்காட்டி விரலை நீட்டி, அந்த விரலின் மேல் முத்துலிங்கம் கொடுத்த கத்தியின் கைப்பிடியும் கத்தியும் இணையும் இடத்தை வைத்தார். ஒரு சிறு நடனத்துக்குப் பின் கத்தி இருபக்க சமநிலையோடு நின்றது.

``பிடியும் கத்தியும் சரிசமமா இருக்காடே?” முத்துலிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் தங்கப்பாண்டியன்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``ஆமாண்ணாச்சி” என அதை ஆமோதித்தான் முத்துலிங்கம்.

``இப்ப கத்தியப் பாருடே.”

சின்னத்தம்பி, முத்துலிங்கம், ரவி மூவருமே கத்தியைக் கூர்ந்து பார்த்தனர். மூவருக்குமே அதில் வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை என்பதை அவர்கள் முகம் உணர்த்தியது.

``கத்தியோட கீழ்முனை பூமிக்கு நேராருக்கா இல்லை சரிஞ்சிருக்கா?” என்றார்.

``கெழக்கப் பாக்க ஒரு சசொல்லுக்கு சரிஞ்சிருக்கா மாரி இருக்குண்ணாச்சி” என்றான் முத்துலிங்கம்.

``இந்தா இந்தக் கத்தியெப் பிடி” என்று தங்கப்பாண்டியன் முத்துலிங்கத்தை நோக்கிக் கத்தியைத் தூக்கிப்போட, முத்துலிங்கமும் தனது வலது கையால் அந்தக் கத்தியின் கைப்பிடியை லாகவமாகப் பற்றினான்.

``சபாஷ்ரா. அப்டியே அந்தக் கத்திய இப்ப நீ பிடிச்சிருக்க மேனிக்கு இந்தப் பூசணில எறக்கு” என்று தங்கப்பாண்டியன் கட்டளையிட, முத்துலிங்கமும் பூசணிக்காயில் கத்தியைச் சொருகினான்.

``சரி கத்தில இருந்து கைய எடுடே” தங்கப்பாண்டியன் சொல்ல, பூசணியில் சொருகியிருந்த கத்தியிலிருந்து கையை எடுத்தான் முத்துலிங்கம்.

``கத்தி எப்பிடி நேரா இறங்கியிருக்கா இல்லை கோணலா எறங்கிருக்காடே?”

``வடக்கயும் தெக்கயுமா இறங்கியிருக்கண்ணாச்சி” என்றான் முத்துலிங்கம்.

ரவி பூசணிக்காயில் சொருகியிருந்த கத்தியைக் கூர்ந்து பார்த்தான். கத்தி சற்றுச் சரிவாகவே பூசணியில் இறங்கியிருந்தது.

``நீ கத்திய வலது கையால பிடிச்சிருந்தீன்னா, கத்தி எறங்குறப்ப கத்தியோட கீழ்ப்பாகம் உள்பக்கமா ஏறியிருக்கும். சரி அந்தக் கத்திய பூசணியிலருந்து வெளியே எடுத்துட்டு இப்ப இடதுகையால குத்து” என்றார் தங்கபாண்டியன்.

அவர் சொன்னதைப்போலவே முத்துலிங்கமும் இடது கையால் கத்தியைப் பிடித்து அந்தப் பூசணியில் சொருகினான்.

``கத்தி இப்ப எப்படி எறங்கியிருக்குதுன்னு பாருடே” என்று தங்கப்பாண்டியன் சொல்ல, முத்துலிங்கத்தோடு ரவியும் உற்றுப் பார்த்தான். ஆங்கில எழுத்தின் `V’ போலப் பூசணியில் ஏற்கெனவே அந்தக் கத்தி உருவாக்கியிருந்த தடத்துக்கு எதிர் திசையில் கத்தி தடம் பதித்திருந்தது.

``வலதுக்கும் எடதுக்கும் எடையில இருக்க வித்தியாசம் புரிஞ்சாடே?”

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``புரியுதுண்ணாச்சி” பவ்யமாக முத்துலிங்கத்திடமிருந்து பதில் வந்தது.

``நீ வெச்சிருக்க கத்தியோட சமநிலை எடது கைக்கான சமநிலை. நீ ஒன்னோட வலது கையால இந்தக் கத்தியை எறக்குறப்ப கத்தி மொன குத்து வாங்குனவன் எலும்புல மாட்டிக்கிச்சுன்னா கத்தியை அவ்ளோ சொலபமா வெளிய உருவ முடியாது கேட்டியா.

அதுவுமில்லாம நீ கத்தியை எறக்கியிருக்க தினுசவெச்சே நீ நொட்டக்கையனா இல்லயாங்கறதையும் போலீஸ்காரனுவ ஈசியா கண்டுபிடிச்சிருவானுவ.”

பேசியபடியே பூசணியில் சொருகியிருந்த கத்தியை உருவி முத்துலிங்கத்திடம் கொடுத்துவிட்டு, ``இந்தாடே உன் பூசணிக்கா... ஒன் பூசணிக்க அவசியம் எனக்கு முடிஞ்சு போச்சு. கொண்டு போய் பதியில கொடுத்துக்கோ” பூசணியை சின்னத்தம்பியிடமே தங்கப்பாண்டியன் திருப்பிக் கொடுக்க, முத்துலிங்கம் அவசர அவசரமாக, ``வேணாம்ண்ணாச்சி” என்று கைமறித்தான்.

``ஏம்மக்கா வேணாமுங்குத” ஆச்சர்யத்தோடு தங்கப்பாண்டியன் கேட்க,``ஒண்ணுல்லீங்கண்ணாச்சி. நம்ம கைக்கத்திபட்ட காயிங்கண்ணாச்சி” வார்த்தைகள் தயக்கத்தோடு முத்துலிங்கத்திடமிருந்து வெளியேறின.

தங்கப்பாண்டியனின் முகம் சற்று விகாரமாகி, காயைப் பார்த்தது. பின்னர் முத்துலிங்கத்தைப் பார்த்து, ``ஒனக்கு ஏம்டே இந்த எளவு வேலையெல்லாம்...” என்றார்.

``எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான்ணாச்சி” வார்த்தைகளை மென்று முழுங்கி முத்துலிங்கம் பதிலளித்தான்.

``கத்தி தாம்டே நமக்குப் பாதுகாப்பு, அதுல இருக்க மருந்தில்ல.” பேசியபடியே அதிருப்தியோடு தலையை இடவலமாக ஆட்டியவர், ``ஒங்கைல கத்தி இருக்கது மட்டுந்தா எதிரிக்குத் தெரியும். அதுல மருந்திருக்கது எப்படிடே அவனுக்குத் தெரியும்?” என்றார் சற்றுக் காட்டமாக.

முத்துலிங்கம் பதிலெதுவும் பேசாமல் தலை கவிழ்ந்து நின்றுகொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் அந்த இடத்தில் மௌனமாகக் கழிந்தன.

``எல பீப்பி, இந்தக் காய பதிக்கு கொண்டு போயிடாத சரியா. இந்தக் காய்க்கு பதிலா வேற காய வாங்கிக்கோ” என்றபடியே தன்னுடைய சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுக்கவும், ``இல்லண்ணாச்சி நான் கொடுக்குதேன்” என்றபடி அவசர அவசரமாகத் தன் சட்டைப்பையிலிருந்து இரண்டு ஐந்து ரூபாய் தாள்களை எடுத்துச் சின்னத்தம்பியிடம் கொடுத்தான் முத்துலிங்கம்.

``அண்ணாச்சி நம்ம பொழியூர் ஐட்டம். அண்ணாச்சி கேட்டீங்களேன்னு எடுத்துகிட்டு வந்தேன்” என்று தங்கப்பாண்டியனுக்கு தான் கொண்டு வந்த சாராயம் அவர் அருகில் இருப்பதை ஞாபகமூட்டினான்.

``ஆமாமா, என்ன தான் ஒயின் ஷாப்ப லேலத்துக்கு பிடிச்சு அங்க இருக்குத சரக்குவள குடிச்சாலும் நம்ம ஐட்டத்துக்குகிட்ட வராதுடே” தன் கையருகில் இருந்த பாட்டிலின் மூடியைத் திறந்து நாசி அருகில்வைத்து மணம் பிடித்தார். ``பொழியூர்க்காரனுவ அவனுவ ஊரல்ல என்ன எளவோ வெச்சிருக்குவ்வானுவடே. அதான் பாட்டிலத் தொறந்ததுமே ஆள கோரி மாத்துது.”

``அண்ணாச்சி...” திடீரென நினைவுக்கு வந்தவனாக முத்துலிங்கம், தங்கப்பாண்டியனிடம் ரவியை நோக்கிக் கண்காட்டினான்.

``நம்ம தம்பி பயதான் மக்கா” என்று தங்கப்பாண்டியன் சொல்ல, ``இல்லண்ணாச்சி சின்னப் பையன் முன்னாடி...” என்று முத்துலிங்கம் இழுத்தான்.

``ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கடே, இந்த ஒலவத்துல தெரிஞ்சுக்கக் கூடாத வெசயம்னு எதுவுமே கெடயாது.

கபடி நுணுக்கம் ஒனக்குத் தெரியும், கத்தி நுணுக்கம் எனக்குத் தெரியும். பாக்கெட்டடிக்கிற நுணுக்கம் நம்ம பீப்பிக்குத் தெரியும். இல்லியாடே பீப்பி?” `ஆமாம்’ என்பதைப்போலச் சின்னத்தம்பியும் கூச்சத்தோடு தலையாட்டினான்.

``ஸ்கூல்ல கத்துக்க முடியாத நுணுக்கத்தயெல்லாம் இவன் நம்ம மூலமா கத்துக்கட்டுமுடே. என்ன கொறஞ்சிடப்போவுது? ஆங்... சொல்ல மறந்துட்டேன். எம்மொவன் சுரேச தெரியும்ல உனக்கு?” ஆமாமெனத் தலையாட்டினான் முத்துலிங்கம். ``எனக்கு சுரேசு வேற... இவன் வேற இல்ல சரியா?”

தங்கப்பாண்டியன் சொல்லி முடிக்கவும், அவரை அதிர்ச்சியோடும் ஆச்சர்யத்தோடும் ரவி நிமிர்ந்து பார்த்த அதே வேளையில், தன்னுடைய மாணவர்களின் முன்னால் ரவி தன்னை அவமானப்படுத்திவிட்டதாக கறுவிக்கொண்டிருந்த வைகுண்டமணியின் முன்னால் நின்றுகொண்டிருந்த விஜயா, ``சார் நாந்தான் உங்க வகுப்புல படிக்கிற ரவியோட அம்மா” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

- திமிறுவான்