Published:Updated:

ஊசிப்புட்டான்: ``பாடங்கத்துக் கொடுக்குத வாத்தியாங்கிட்ட மரியாத வேணும் சார்'' | அத்தியாயம் - 9

ஊசிப்புட்டான்

விஜயாவின் அந்த ஆழப்பார்வை வைகுண்டமணியின் உள்ளே கொம்பு முளைத்து உலாவிக் கொண்டிருந்த உருவத்தை ஊடுறுவவும், திகிலடைந்த அம்மிருகம்.

ஊசிப்புட்டான்: ``பாடங்கத்துக் கொடுக்குத வாத்தியாங்கிட்ட மரியாத வேணும் சார்'' | அத்தியாயம் - 9

விஜயாவின் அந்த ஆழப்பார்வை வைகுண்டமணியின் உள்ளே கொம்பு முளைத்து உலாவிக் கொண்டிருந்த உருவத்தை ஊடுறுவவும், திகிலடைந்த அம்மிருகம்.

Published:Updated:
ஊசிப்புட்டான்

தன்னை வலியவனாக, வலிமை மிக்கவனாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் ஏங்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எளிய மனிதன் அவசியமாய் இருக்கிறான். பல சமயங்களில் அந்த எளிய மனிதனுக்காகச் சிலந்தியைப் போல வலையை விரித்து வைத்துக் காத்திருக்கவும் செய்கிறான் என்றாலும் ஒரு சில சமயங்களில் தூண்டில் போட்டுப் பிடித்துக் கொள்ளவும் துணிகிறான்.

வலையிலும் தூண்டிலிலும் எதுவுமே சிக்காத சமயங்களில், தன் கண்ணிற்கு அகப்படும் எவரை வேண்டுமென்றாலும் தனது இரையாக மாற்றிக் கொள்கிறான்.

அந்த நேரத்தில் அவனுக்குத் தேவைப்படுவது எல்லாம் அவன் அகங்காரத்திற்கான உணவு. அப்படித் தான் வைகுண்டமணியும் தன் வகுப்பு மாணவர்களின் முன்னால் காயப்படுத்தப்பட்ட தன்னுடைய அகங்காரத்திற்கு, இல்லையில்லை ரவியின் எதிர்வினையால் தன்னுடைய அகங்காரம் காயப்படுத்தப்பட்டதாய் அவர் நினைக்கவில்லை. மாறாகத் தன்னுடைய அகங்காரம் காயடிக்கப் பட்டதாகவே நினைத்துக்கொண்டிருந்தார். எத்தனை சமாதனப்படுத்தியும் அவரால் ரவியின் உதாசினத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. வகுப்பாசிரியர் என்கிற அதிகாரத்தை வைத்து அவனை எப்படி அலைகழிக்க வைக்கலாமென யோசித்துக் கொண்டிருந்தவர் முன்னால் தான் விஜயா நின்றுக் கொண்டிருந்தாள்.

“யாரோட அம்மான்னு சொன்னீங்க...?” தன்னுடையச் சிந்தனைக் களைந்தவராக வைகுண்டமணி விஜயாவிடம் கேட்டார்.

“உங்க வகுப்புல படிக்கிற ரவியோட அம்மா சார்” என்றார் விஜயா.

வைகுண்டமணியின் உள்ளுக்குள் அங்குமிங்குமாய் உலாவிக் கொண்டிருந்த உருவத்தின் தலையில் இரு கொம்பும், பிருஷ்ட்டத்தில் முள் வாலும் முளைத்துத் தன் பானை வயிற்றைத் தடவியபடியே குரூரத்தோடு சிரித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ரவின்னா… எந்த ரவி...? ஊருக்குள்ள உங்க பையன் மட்டும் தான் ரவிங்கிற பெயர்ல இருக்கானா...?

எங்க்ளாஸ்ல மட்டுமே நாலு ரவி இருக்கான்” வார்த்தைகள் அவரிடம் எள்ளலாக வந்ததை விஜயாவும் கவனித்தாள் என்றாலும், அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா எந்த ரவிம்மா உம்புள்ள” தான் அமர்ந்திருந்த மேஜையின் ட்ராவிலும், அதற்கு மேலே காலியாய் இருந்த இடத்திலும் கையால் எதையோ தேடியபடியே, விஜயாவின் முகத்தைப் பார்க்காமல் கேட்டவர், தன் இருக்கைக்கும் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தவரைப் பார்த்து, “செல்வராஜ் சார், என் வெத்தல பொட்டிய எங்கியாச்சும் பாத்தீங்களா” என்றார்.

மாணவர்களின் பேப்பரைத் திருத்திக் கொண்டிருந்த செல்வராஜ், தலையை நிமிர்த்தி வைகுண்டமணியைப் பார்த்து, “இல்லியே சார்” என்று சொல்லிவிட்டு மீண்டும் பரீட்சைப் பேப்பருக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டார்.

“இங்க தான் சார் வச்சிருந்தேன்” மேஜையின் ஒரு ஓரத்தைக் கையால் தட்டிக் காண்பித்தார்.

“அங்க தான் வச்சிருந்தீங்கன்னா, அங்கயே தான சார் இருக்கும். வெத்தல பொட்டிக்கென்ன கையும் காலுமா இருக்கு. எந்திச்சி ஓடிப் போறதுக்கு” செல்வராஜின் வாய் பேசினாலும், அவரது கண்ணும் கையும் பரீட்சைப் பேப்பரில் மும்முரமாகவே இருந்தது.

உடனே வைகுண்டமணியும், “இல்லேன்னா அதென்ன ஊசியா உள்ள வந்தவன் எவனாச்சும் ஜோப்புக்குள்ளப் போட்டு எடுத்துட்டுப் போறதுக்கு” ஏதோ ஒரு மிகப்பெரிய நகைச்சுவையைச் சொல்லிவிட்டதைப் போன்று சத்தமாகச் சிரித்தவர், “நீங்களே சொல்லுங்கம்மா வெத்தல பொட்டியென்ன ஊசியா” என்று கேட்டபடியே விஜயாவைப் பார்த்தார்

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்
அவர் பேசியதில் ஊசியா என்கிற வார்த்தையை மட்டும் அழுத்தமாகச் சொன்னது விஜயாவின் இதயத்தைச் சுருக்கென்றுத் தைத்தாலும்,

முகத்தில் ஒட்ட வைத்தப் புன்னகையோடு, இல்லை என்பதாய் தலையாட்டிக் கொண்டாள்.

“முக்காமண் நேரந்தா ஒரு க்ளாஸு. அதுக்குள்ள நமக்க தாவத் தீர்த்துப் போடுதானுவ இல்லியா சார்” மீண்டும் செல்வராஜை நோக்கி வைகுண்டமணி கேட்க, செல்வராஜ் எந்தவொரு பதிலையும் பேசாமல் தன்னுடைய பேப்பர் திருத்தும் வேலையில் மும்முரமாய் இருந்தார்.

“சார்” என விஜயா இடைமறிக்கவும், “ஒரு நிமிஷமிருங்கம்மா, நானே என் வெத்தலப்பொட்டிய காணமின்னு தேடிட்டு இருக்கேன்” என்ற வைகுண்டமணியின் குரலில் எகத்தாளம் தூக்கலாய் இருந்ததைக் கவனித்த செல்வராஜ், ‘வேணுமின்னே ஏதோ வேண்டாத்தனத்த பண்றான்’ என்று மனதுக்குள் நினைத்தபடியே, உதடு பிரியாமல் சிரித்துக் கொண்டார்.

“செல்வராஜ் சார்”

“ச்சொல்லுங்க சார்”

“எந்த க்ளாஸோட பேப்பர சார் திருத்திட்டிருக்கீங்க”

“ஏழு ஏயோட சயின்ஸ் பேப்பர”

“அவனுவ பெரிய எமகாதக பயலுவலாச்சே சார்”

“ம்ம்ம்” என்ற ஒலி மட்டும் செல்வராஜிடமிருந்த பதிலாய் வந்தது.

“எப்ப்படி எழுதிருக்கானுவ சார்” வைகுண்டமணியிடமிருந்து சற்றுக் குழைவாய் வார்த்தைகள் வெளியே வந்தது.

“எப்பயும் போலத் தான் சார். முப்பத்ரெண்டுல எப்படியும் இருவத்திநாலனம் அவுட்டாவும்”

“இருவத்திநாலனமா… இவனுவவெல்லாம் படிச்சி என்னத்த கிழிக்கப் போறானுவ சார்” இப்பொழுது வைகுண்டமணியிடமிருந்து வார்த்தைகள் குத்தலாய் வெளியேறியது.

“அவனுவ என்ன எலவாம் பண்ணிட்டு போறானுவ சார். நமக்கென்ன சார் அதப்பத்தி. நம்ம வேல என்ன…? சிலபஸுல இருக்க பாடத்த நடத்தினமா, அதுக்கு பரிச்சய வச்சமோ, அத திருத்திக் கொடுத்தமா, ஒன்னாந்தேதியான சம்பளத்த வாங்கினமான்னு போயிட்டே இருக்க வேண்டிது தான சார்” செல்வராஜின் குரலில் கடுப்பும் அதிருப்தியும் நிரம்பி வழிந்தது.

“ஆமா சார் நீங்கச் சொல்றதும் சரிதான். தெனமும் காலேல வந்தமா, அந்தந்த பீரியடுக்கு போயி பாடத்த நடத்தினமா போனமான்னு இல்லாம, நம்ம க்ளாஸு பயலுவலாச்சேன்னு அவனுவ படிப்புல அக்கறய காட்டுனா… நம்ம கிட்டயே ஒடக்கிட்டு போறானுவ சார்”

வைகுண்டமணியின் குரலில் இருந்த நக்கல் தொனி செல்வராஜுக்கு விஜயாவை ஏன் வைகுண்டமணி இப்படி நிற்க வைத்திருக்கிறார் என்பதை உணர வைத்தது.

இனி விஜயாவை அவர் அங்கிருந்து அனுப்பும் வரையிலும் தன்னுடைய வேலையைப் பார்க்க விடமாட்டார் என்பதும் புரிந்துப் போனது. தன் கையிலிருந்த சிவப்பு மசி பேனாவை மூடி, தான் திருத்திக் கொண்டிருந்த பரீட்சைப் பேப்பரின் மேலேயே வைத்துவிட்டு, அமர்ந்திருந்த மரநாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து சாய்ந்துக் கொண்டார்.

“சார்” விஜயா மீண்டும் இடைமறித்தாள்.

“ஓம்புள்ள எந்த ரவின்னு கண்டுபிடிச்சிட்டியாமா…?” கடுகடுத்த முகத்தோடு, ஒருமை வார்த்தையில் எரிச்சல் நிரம்பியக் குரலோடு கேட்ட வைகுண்டமணியை ஆழமாய் பார்த்தபடியே, “ட்டி. ரவி” என்றாள் அழுத்தமாக.

விஜயாவின் அந்த ஆழப்பார்வை வைகுண்டமணியின் உள்ளே கொம்பு முளைத்து உலாவிக் கொண்டிருந்த உருவத்தை ஊடுறுவவும், திகிலடைந்த அம்மிருகம் “ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டீங்கள்ல, கொஞ்சம் அப்படி போய் வெளியே போட்டிருக்க ஸ்டூல்ல போய் உக்காருங்க. நான் கூப்ட்ட அப்புறமா வந்தா போதும்” என்று தன்னைத் தற்காத்துக் கொள்ள கேடயமாய் பயன்படுத்திய வார்த்தைகளின் மேல் கோபமெனும் உணர்வை முலாம் பூசியிருக்க, விஜயா செல்வராஜையும் வைகுண்டமணியையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வெளியே சென்று அமர்ந்துக் கொண்டாள்.

“என்ன வைகுண்டமணி சார் அந்தம்மா கிட்ட என்ன விசயம்னு கேட்டு அனுப்பி வைக்கிறத விட்டுட்டு இப்படி சினுங்கிட்டு இருக்கீங்களே” செல்வராஜ் தாழ்ந்த குரலில் வைகுண்டமணியிடம் கேட்டாலும், அது விஜயாவின் காதுகளிலும் விழுந்தது.

“அந்தப் பொம்பள யாருன்னு தெரிஞ்சா நீங்க இப்டி சப்போட்டு பண்ண மாட்டீங்க செல்வராஜ் சார்”

வைகுண்டமணியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளில் பொம்பள என்கிற வார்த்தை விஜயாவின் நரம்பினுள் ஊசியாய் ஊடுறுவ, ‘இந்தப் பேச்செல்லாம் கேக்கனும்னு எந்தலயெழுத்து. இன்னிக்கு இந்த ரவிப்பய மட்டும் வீட்டுக்கு வரட்டும். சட்டாப்பைய பழுக்கக் காச்சி அவன் கால்ல சூடு வைக்கிறேன்’ என்று மனதினுள் தீர்மானித்துக் கொண்டாள்.

“யாரு சார் அவங்க”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ட்டி. ரவியோட அம்ம்மான்னு சொன்னது கேக்கலயா சார்.”

“அதக் கேட்டேன் சார். எந்த ட்டி. ரவி…” செல்வராஜின் குரல் சற்று இழுத்தது.

“அதான் சார். கொஞ்ச மாசமுன்ன நம்மூர்ல சாராயம் வித்துட்டு திரிஞ்ச தங்கசாமின்னு ஒருத்தன வெட்டிக் கொன்னானுவல்ல. அவனுக்குப் பொறந்தது.” வைகுண்டமணியின் குரலில் எகத்தாளம் மிகுந்திருந்தது.

“ஓ… அந்த நோஞ்சாம் பையனா. சரி சரி. ஆமா அவன தான எல்லாவனுவளும் ஊசி ஊசின்னு கூப்பிடுவானுவ”

ஆமாமா அந்த ஊசிப்பயலே தான். ஆனா ஆளு பாக்கத்தான் ஊசி மாரி இருக்குவான் சார்.

``காலேல ஏம்லே வீட்ல இருந்து ஆள கூட்டிட்டு வரலன்னு கேட்டதுக்கு… நீரு கூப்பிடுத நேரத்திக்கெல்லாம் வீட்லருந்து ஆளு மயிரொன்னும் க்கூட்டிட்டு வரமுடியாதுன்னு சொல்லி ஓடக்கிட்டு போய்ட்டான் சார்” வைகுண்டமணியின் ஒவ்வொரு வார்த்தையிலும் கோபம் மண்டிக் கிடந்தது.

“அப்படியா சொல்லி உங்ககிட்ட ஒடக்குனான் சார்” செல்வராஜ் அதிர்ச்சியோடு கேட்க, “அப்படி சொல்லியிட்டு போயிருந்தான்னாக்க அவன் வாய்ல இருக்க முப்பத்ரெண்டு பல்லையும் ஒடச்சி அவங்கைலயே கொடுத்தனுப்பிருக்க மாட்ட்டேனா சார்” சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “சின்னப்பயவுள்ள அவன் அப்பென் செத்தபெறவு அவென் அம்மெ எங்கயும் வெளிய வரமாட்டான்னு மூஞ்சிலடிச்ச மாதிரி சொல்லிட்டு விறுவிறுன்னு க்ளாஸ விட்டு வெளியே போயிட்டான் சார். இப்ப பாருங்க அவென் அம்மென்னு சொல்லிட்டு இந்தப் பொம்பள இங்க வந்து உக்காந்திருக்கா. பாடங்கத்துக் கொடுக்கே வாத்தியாங்கிட்ட மரியாத வேணும் சார். இல்லன்னா என்ன நடக்கும்னு அவனுக்குத் தெரியனும்ல” அவர் பேசி முடிக்கவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது பீரியட் நடுவிற்கான இண்டர்வெல் மணியடிக்கவும் சரியா இருந்தது.

ஒவ்வொரு வகுப்பின் வாசலிலிருந்து வாத்தியார்கள் வெளியேற, அவர்கள் பின்னே அந்த வகுப்பின் மாணவர்கள், கிழிந்த நெல்லிமூட்டையிலிருந்து சிதறும் நெல்லிக்காய்களாய் சிதறி ஓடினர்.

வகுப்பிலிருந்து வெளியேறிய ஆசிரியர்கள் ஒவ்வொருவராய் ஸ்டாஃப் ரூமினுள் நுழைகையிலும் வாசலில் இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருக்கும் விஜயாவைப் பார்த்தபடியே அறையினுள் நுழைந்தனர்.

“வெளிய உக்காந்திருக்க ட்டி. ரவியோட அம்மா. உள்ள வாங்கம்மா” என்ற வைகுண்டமணியின் குரல் உச்சஸ்த்தாயில் நக்களோடு விஜயாவை அழைத்தது.

சற்றுமுன் இருவர் மட்டுமே அமர்ந்திருந்த அறையினுள் ஆறு பேர் அமர்ந்திருக்க, அந்த அறையினுள் நுழைந்த விஜயா அந்த அறையில் அமர்ந்திருந்த ஆறு பேரையும் ஒருமுறைப் பார்த்துக் கொண்டாள்.

“என்னவோ கேட்க வந்தீங்களே கேளுங்கம்மா” வைகுண்டமணியின் குரல் எள்ளல் கலந்த அதிகாரத்தோடு ஒலித்தது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

விஜயா பதிலெதுவும் பேசாமல் வைகுண்டமணியைப் பார்த்தபடியே நின்றாள்.

“என்னன்னு சீக்கிரம் சொல்லுமா. இப்ப இண்டர்வெல் முடிஞ்சதும் அடுத்த க்ளாஸுக்குப் பாடமெடுக்க போகனும். உங்கள மாதிரி வேற வேலை இல்லாம நாங்க இங்க உக்காந்திருக்கல”

“நீங்கப் பாடமெடுத்து கிழிச்சீய்ங்க”

விஜயாவின் குரல் அழுத்தம் திருத்தத்தோடு உறுதியாய் இருக்க, “ஏ ஏய்ய் என்ன சொன்ன” வைகுண்டமணியின் குரல் சற்றுத் தடுமாறியது.

“நான் இங்க வந்தது எம்பையன் ஒலுங்கா படிக்கலன்னா முதுகு தோல உரிச்சிடுங்கன்னு சொல்லத்தான். ஆனா இங்க வந்தப்பறமா தான் தெரியுது. அவென் படிக்காம போவ காரணமே நீய்ங்கத் தான்னு.” முகத்தைப் போலவே அவளது குரலும் இறுக்கமாய் வெளியேறியது.

“யாருகிட்ட பேசிட்டு இருக்கன்னு தெரியுதா” விஜயாவின் எதிர்தாக்குதலில் நிலைக்குலைந்துப் போயிருந்த வைகுண்டமணியின் குரல் கீச்சென்றாகியிருந்தது.

“பாடமெடுக்குத வாத்தியாரு தான நீங்க. பாடங்கத்துக் கொடுக்குற வாத்தியாரு இல்லேல” ஒரு நொடி நிறுத்தி அங்கு அமர்ந்திருந்த ஆறு பேரையும் சுட்டெரிக்கும் பார்வைப் பார்த்துவிட்டு, “இனி ஒருதரம் எம்பையன் நாஞ்செய்யாத தப்புக்கு வாத்தியாரு அடிச்சிட்டாரும்மான்னு எங்கிட்ட வந்து சொன்னான்னா, நான் ரவிக்க அம்மெயா இங்க வரமாட்டேன். தங்கசாமிக்க பொண்டாட்டியா தான் வருவேன்” சொல்லிவிட்டு வைகுண்டமணியின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வெளியே சென்ற விஜயாவைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த வைகுண்டமணியிடம், “பாம்பப்போய் புழுன்னு நெனச்சி தப்புக்கணக்க போட்டுட்டேரே வேய்” என்றார் செல்வராஜ்.

-திமிறுவான்