Published:Updated:

ராஜாவின் ரசிகன்! - சிறுகதை #MyVikatan

விகடன் வாசகர்

" ஓய்...நானும் அட்டூழியம் பண்றவன்தான்...ஸ்கூல் ரிக்‌ஷாவை விரட்டிக்கிட்டு போய் ரோஜாப்பு வீசியிருக்கேன்... லெட்டர் கொடுத்திருக்கேன்... அதெல்லாம் வேற... ''

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

நம் வாழ்க்கையில் சில சமயங்களில், நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கைப்புள்ள கேரக்டர்களைச் சந்திக்கவும் அவர்களுடன் பழகவும் நேரிடும் . வாய்ச்சவடாலும் குடித்துவிட்டு சலம்புவதுமாக சமூக வரைமுறைகளை இவர்கள் அசால்ட்டாக மீறினாலும், இந்த கைப்புள்ளைகளின் பேரில் நமக்கு கரிசனமே மிஞ்சும். காரணம், அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் கள்ளங்கபடமற்ற மனசு. எப்படி உதார்விட்டு திரிந்தாலும் எவ்வளவு அவமானப்பட்டாலும், நட்புக்கு ஒரு உதவியென்றால் இவர்கள்தான் முதலில் நிற்பார்கள்.

Representational Image
Representational Image

முபாரக்கும் அப்படிப்பட்டவன்தான். விடலைப் பருவத்தில் நாங்களெல்லாம் தெருவோரமாக நின்று பய பார்வையுடன் சைட் அடிப்பதை மட்டுமே கெட்டபழக்கமாகக் கொண்ட சுமார் கெட்டவர்கள் என்றால், எங்களைவிட இரண்டு வயது மூத்தவனான முபாரக், பாரில் அமர்ந்து குடிக்கும் அளவுக்கு தைரியமான, ராஜா ரெக்கார்டிங் சென்டர் குரூப்பைச் சேர்ந்த மகா கெட்டவன். நான், முபாரக்கை முதன் முதலில் சந்தித்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. தனியாக நின்று சைட் அடித்தால் பெண்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது அந்தக் காலத்து நம்பிக்கை என்பதால், ரொம்ப சுமார் மூஞ்சி குமாரான நான் தான், என் ஏனைய சுமார் மூஞ்சி குமார் நண்பர்களுக்கு சைடு துணை. அப்படி ஒரு நாள், நண்பனின் காதலுக்குத் துணையாக தெருவோரத்தில் நின்ற சமயத்தில், எதிர்கொண்டு மடக்கினான் முபாரக். என் நண்பன் சைட் அடித்தது முபாரக்கின் ஆள். எங்களிருவரையும் பக்கத்திலிருந்த பெட்டிக்கடைக்கு தள்ளிச் சென்றவன், ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு அவனின் காதல் பிரதாபங்களைப் பேசத் தொடங்கிவிட்டான். அந்தப் பெண்ணை காலேஜுக்கு அழைத்துவரும் ரிக்‌ஷாக்காரருக்கு சட்டை வாங்கி கொடுத்ததிலிருந்து, அவள் வரும் ரிக்‌ஷாவை சைக்கிளில் துரத்திச் சென்று ரோஜாப்பூ வீசியது வரை அவன் சொல்லிமுடித்தபோது இருட்டிவிட்டது. ஒரு வழியாய் அவனிடமிருந்து தப்பித்து ஓடினோம்.

ஒரு வாரம் கழித்து என்னை மீண்டும் கடைத் தெருவில் வைத்து மடக்கினான். " என்னாடா ? அந்த காலேஜ் பக்கமே காணோம் ? " ''அந்தப் பொண்ணை நான் சைட் அடிக்கல முபாரக். என்னோட ஃப்ரெண்டுதான்... இப்ப அது உன்னோட ஆளுன்னு தெரிஞ்சதும்...'' "ஏண்டா... நான் அவளை லவ் பண்றேன்னு சொன்னனே தவிர, அவ என்னை லவ் பண்றான்னு சொல்லலையே." நான் ஜகாவாங்கி முடிக்கும் முன்னரே ஒரே போடாகப் போட்டான் முபாரக். அந்தப் பெண் என் நண்பனையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை என்றாலும், முபாரக்குடனான என் நட்பு இறுகியது. ஒரு நல்ல முகூர்த்தத்தில் என்னை ராஜா ரெக்கார்டிங் சென்டர் குரூப்புக்கு அறிமுகம் செய்துவைத்தான். ஸ்டீரியோ பிளேயர்கள் பிரபலமாகி, ஆடியோ கேசட்டுகள் கோலோச்சிய அந்த காலகட்டத்தில், ஊரின் ஏதாவது ஒரு ஆடியோ சென்டருடன் நட்பிலிருப்பது மிகவும் பெருமையான விசயம்.

Representational Image
Representational Image

ஒரு புதுப்படத்தின் பாடலை, அது வெளியான தினத்தன்றே பதிவு செய்து, தெருவே கேட்கும்படி ஒலிக்கச் செய்து பெண்பிள்ளைகளை அசத்துவது, அனைத்து கடைகளிலும் ஒரு வாரமாவது ஆகும் என சொன்ன கேசட்டை, நாம் ஒரே நாளில் பதிவுசெய்து கொண்டுவந்ததைத் தெருவில் அனைவரிடமும் சொல்லி சிலாகிக்கும் பக்கத்து வீட்டு அக்கா. என காலர் உயர்த்திக்கொள்ளும் பல பெருமைகளைத் தரவல்ல அந்த நட்பு எனக்கு முபாரக் மூலம் கிட்டியது. அப்போது, ஊரில் தெருவுக்கு ஒரு ரெக்கார்டிங் கடை இருந்தது என்றாலும், பைவ் ஸ்டார் ரெக்கார்டிங் சென்டரும் ராஜா ரெக்கார்டிங் சென்டரும்தான் மிகவும் பிரபலம் . இந்த இரண்டு கடைகளுக்கும் என தனித்தனி ரசிகர் கூட்டம், நண்பர்கள் வட்டம் உண்டு.

இரு குரூப்பும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் ரஜினி, கமல், தல, தளபதி ரசிகர்கள் நேருக்கு நேர் சந்திப்பதுபோல அனல் பறக்கும். ஆடியோ கேசட்டுகளில் பாடல்கள் பதிவு செய்த கடையின் பெயர் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். காதல் பாடல்களைக் கொண்ட பரிசு கேசட்டுகள், ஒரு பாடலின் குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்படி எக்கோ எஃபெக்ட்டுடன்கூடிய கேசட்டுகள் போன்ற ஸ்பெஷல்களுக்காக ஜிகினா மினுமினுப்புடன்கூடிய ஸ்டிக்கர்கள் உண்டு . தப்பித்தவறி ஒரு கடையின் வாடிக்கையாளர் மற்ற கடைக்கு வந்துவிட்டால், எந்தக் காரணத்துக்காக மாறினார் எனக் கேட்டு, அவரிடம் பெரிய குறுக்கு விசாரணையே நடக்கும் . ரெக்கார்டிங் சரியில்லை என பதில் வந்துவிட்டால், அது போஸ்ட்டர் அடிக்காத குறையாக பரப்பப்படும். நடிகர்களின் ரசிகர்களைப் போலவே இதிலும் போட்டி எங்களுக்குள்தான்... இரு கடைகளின் உரிமையாளர்களும் ஒருவரிடம் இல்லாத பட ரெக்கார்டை மற்றவரிடமிருந்து வாங்கி, பதிவுசெய்து கொடுக்கும் அளவுக்கு நட்பானவர்கள்.

கடைக்கு வரும் மற்ற நண்பர்களெல்லாம், வேலை முடித்தோ, காலேஜுக்குப் பிறகோ வருவார்கள். ஆனால், கடையின் முழுநேர உறுப்பினர் முபாரக். சரியாக கடை திறக்கும் நேரத்தில் வெள்ளை வேட்டி, ஏதாவது ஒரு கலர் பிளெய்ன் முழுக்கை சட்டையில் ஆஜராகிவிடுவான். மதியத்துக்கு முன்னால் வடை, சமோசா, இரண்டு மூன்று டீ, சிகரெட்... மதிய உணவுக்கு செல்பவன், குட்டித் தூக்கத்துக்குப் பிறகு மீண்டும் வருவான். ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் முபாரக்கின் திருநாள் . " அண்ணே, சீக்கிரமா கடையை மூடுங்க... பாருல டேபிள் அரேஞ்செல்லாம் பண்ணிட்டேன்... கிளம்புங்க, கிளம்புங்க " ஆரம்பத்திலிருந்தே பரபரப்பவனின் சலம்பல் பாரில் சுருதி ஏறியவுடன் அதிகமாகும் . " அண்ணே... பில்லை நல்லா பாருங்கண்ணே... போன தடவை ரெண்டு வாட்டர் பாக்கெட்டை கூட்டிட்டான்" மப்பிலும் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக சலம்புவான் . தேர்வில் பிட் அடித்ததால், பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான் என்பது தெரியுமே தவிர, அவன் படித்தது எத்தனை வகுப்புகள் என்பது யாருக்கும் தெரியாது.

Representational Image
Representational Image

" ம்ம்ம்... சவுத் ஸ்கூல்ல சிங்கமா சுத்திக்கிட்டிருந்த என்னை அந்த பி டி மாஸ்டர் மட்டும் பிடிக்காம விட்டிருந்தா... " மப்பில் சலம்பும்போது வகுப்பை கேட்டால் தலையில் குட்டுவான். " டேய், டேய்... நிறுத்து . எங்க? சைட் அடிக்கவா... இடுப்பு உயரம் வளரல... அதுக்குள்ள... சரி, சரி . ‍‍ஹீரோ யாரு நீயா? அப்ப நீ கேரியருக்கு போ. டேய், துணைக்கு போற நாயி நீ சைக்கிள் மிதி . பின்னால உக்காந்து வறவனைத்தான் பெண்கள் பார்ப்பாங்க தெரியும்ல... அப்புறம்... சட்டையை இன் பண்ணாத... " பெண்கள் உயர்நிலைப் பள்ளி பக்கம் சுற்றும் விடலைகளை அவ்வப்போது நிறுத்தி, லவ் டிப்ஸை அள்ளி வீசுவான்.

" அய்யா தர்மம் பண்ணுங்க. ஆண்டவன் உங்களுக்கு புண்ணியத்தைக் கொடுப்பார்..." " ச்சீ, போய்யா... ஆண்டவன் உனக்கு புண்ணியம் பண்ணாததாலதானே நீயே பிச்சை எடுக்கறே... இதுல எனக்கு புண்ணியமா ? "இரைஞ்சும் பிச்சைக்காரரை எரிந்துவிழுந்து விரட்டுவான். மதியம் அதே பிச்சைக்காரருக்கு கையேந்திபவன் மாமி கடையில் மீல்ஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு, இவன் சிங்கிள் டீ அடித்துக்கொண்டிருப்பான் . " யப்பா... தர்மப்பிரபு, உன்னோட கணக்கு நோட்டே முடியப்போகுதுப்பா... சீக்கிரமா காசைக் கொடு. " " தலைவர் சொல்லிட்டாரு மாமி. ஆண்டவன் எனக்கு புண்ணியம் கொடுத்ததும் முதல் போனி மாமிக்குதான். " புலம்பும் மாமிக்கு நக்கல் பதில்.

விசிறி, ரசிகன் என்பதையெல்லாம் தாண்டி, இளையராஜா வெறியன் முபாரக். அவரின் பாடல்களைத்தான், அவரின் பாடல்களை மட்டும்தான் கேட்பான். "என்னா மியூசிக்... " ஒரு கையில் சிகரெட்டும் மறு கையில் டீயுமாய் கண்கள் மூடி சொக்குவான். ரோஜா பாடல்கள் வெளிவந்து ரஹ்மான் புயல் வீசத் தொடங்கிய காலம்... " ம்ம்‍ஹும். வேதம் புதிது அது இதுன்னு எத்தனை பேரை பாத்துட்டோம்... இதெல்லாம் சும்மா சீஸன் மியூசிக். நாளைக்கு நம்ம ராஜாவோட படப்பாட்டு ரிலீஸாகுதுல்ல... அண்ணே. நம்ம ரெக்கார்டிங் சென்டருல அந்த ரோஜா பட பாட்டு வரக்கூடாது." "டேய் லூசு, ராஜா ரெக்கார்டிங்னு பேர்தான் வச்சிருக்கேன்.... ராஜா பாட்டு மட்டும்தான் கிடைக்கும்னு எழுதலை.

Representational Image
Representational Image

ஏன்டா ? சங்கர் கணேஷ், முராரி, தேவா பாட்டுக்கெல்லாம் ஒன்னும் சொல்லாத, இப்ப இந்த சின்னப் பையனோட பாட்டு மட்டும் வேணாங்கற... ஏன் உங்க தலைவரை இந்தப் பையன் மிஞ்சிடுவான்னு பயமா இருக்கா ? " சகாயம் அண்ணனின் கிண்டலுக்கு சட்டென எழுந்துபோய்விட்டான் முபாரக். அடுத்தடுத்த நாள்களில், அவர் வியாபார தேவைகளை விளக்கிக் கூறியும் மசிவதாயில்லை. அவனுக்குத் தெரியாமல் ரோஜா பட ரெக்கார்டை வாங்கிவிட்டார் சகாயம் அண்ணன். விசயம் தெரிந்ததும் கோபித்துக்கொண்டு போய்விட்டான் முபாரக். " விடுங்கடா, நாளைக்குக் காலையில கடைக்கு முன்னால நிப்பான். இல்ல... வாரக் கடைசியில பாருக்கு வரனுமுல்ல... " இல்லை. ஒரு மாதம் வரை கடை பக்கமே வரவில்லை முபாரக். வெற்றிலை பாக்கு நீங்கலாக அனைவரும் சகாயம் அண்ணன் தலைமையில் அவன் வீட்டுக்குக் கிளம்பினோம். " புரிஞ்சிக்கோ முபாரக், இன்னைய தேதிக்கு அந்தப் பட பாட்டைத்தான் அத்தனைபேரும் ரெக்கார்டு பண்ணி கேக்கறான்... கடை மேல இருக்கற கடன் உனக்குத் தெரியும்தானே... " வீட்டுத் திண்ணையில் குந்தி இருந்த முபாரக்கிடம் தங்கையின் கல்யாணம், தம்பியின் படிப்பு என சொந்த சோக கதைகளையெல்லாம் கலந்துகட்டினார் சகாயம் அண்ணன் " ஆனா ஒரு கண்டிஷன். நான் இருக்கறப்போ அந்தப் பட பாட்டை போடக் கூடாது. "நீண்ட பஞ்சாயத்துக்குப் பிறகு மனமிறங்கினான் முபாரக் . " நீ சொல்லிட்டீல்ல... சரி முபாரக். " கிழிஞ்சுது போ. இவன் கடையில இல்லாத நேரம்னு ஒன்னு இருந்தாதானே... " சகாயம் அண்ணனின் பதிலுக்கு கமென்ட் அடித்த ரமேஷின் வாயை அவசரமாய் பொத்தினேன் . " சரிப்பா. வாங்க கடைக்குக் கிளம்பலாம் . " "இல்ல... இல்ல... முதல்ல பாருக்கு. அப்புறமா கடைக்கு.

``பாருடீ. இந்த வெட்டி ஆபீஸரை அழைச்சுக்கிட்டுப் போக இத்தனை வெட்டிங்க . நல்லவேலை... திண்ணை தேய்ஞ்சிடுமேன்னு பயந்துக்கிட்டிருந்தேன். "ஜன்னலிலிருந்து கேட்ட முபாரக்கின் பெரிய அக்காவின் குரல், சத்தியமாய் எங்கள் காதுகளில் விழவில்லை.

Representational Image
Representational Image

இளையராஜாவுக்கு சிம்பொனி பாராட்டு விழா நடந்த சமயத்தில், ஊரின் பிரமுகர் ஒருவருக்கு வந்திருந்த அந்த விழா அழைப்பிதழை எப்படியோ வாங்கிகொண்டு வந்துவிட்டான். இளையராஜாவின் முகம் ஆயில் பெயின்ட்டினால் வரையப்பட்ட ஓவியம் அச்சிடப்பட்ட அழைப்பிதழ். நான் கொஞ்சம் சுமாராக வரைவேன். ஒரிஜினலின்மீது கட்டமிட்டு வரையும் பாணியில், ஏறக்குறைய தத்ரூபமாய் வரைந்துவிடுவேன். இளையராஜா ஆயில் பெயின்ட்டிங் படத்தை என்னிடம் வரைந்து கேட்டான் முபாரக். அதுவும் கேன்வாஸில். ராஜா ரெக்கார்டிங் சென்டரில் மாட்ட வேண்டுமென்பது அவன் ஆசை. அது எனக்கு சரியாக வராது என எவ்வளவு சொல்லியும் கேட்காமல், ஓவியத்துக்கான அனைத்து உபகரணங்களையும் வாங்கி வந்துவிட்டான். பல மாதங்கள் உழைத்து, ஒரு வழியாய் வரைந்து முடித்து, ஒரு சுபமுகூர்த்த நாளில் கடைக்கு எடுத்துச்சென்றேன். " என்னாடா... முபாரக் இளையராஜா படம் கேட்டான்... நீ அவரோட பையன் கார்த்திக் ராஜாவை வரைஞ்சி கொண்டுவந்திருக்க... " சகாயம் அண்ணன் சீரியசாகக் கேட்க, சிறிது நேரம் என்னை முறைத்த முபாரக்... " சரி விடுங்கண்ணே. ராஜாவோ ராஜாவோட மகனோ... மாட்டிடுவோம். " ராஜா ரெக்கார்டிங் சென்டரில் கார்த்திக் ராஜா கொஞ்ச காலம் முறைத்துக்கொண்டிருந்தார்."

ராஜா ரெக்கார்டிங் சென்டர் நண்பர்களிடம் ஒரு தனித்தன்மை உண்டு. என்னதான் மகா கெட்ட பசங்க என்றாலும் நண்பர்களின் குடும்பத்தினர் யாராவது கண்ணில் பட்டுவிட்டால் போதும். ஒரு நொடியில் அந்நியன் கெட்டப்பிலிருந்து அடக்கமான அம்பியாக மாறிவிடுவார்கள். கெட்டப் வித்தையில் முபாரக் கெட்டிக்காரன். ஆனால், அவனின் கெட்டப் கிழிந்து தொங்கிய ஒரு சம்பவமும் உண்டு. அதைக் கிழித்தது என் அம்மா. என் அம்மா, எல்லா விசயத்திலும் படு உஷார். முக்கியமாய் மனிதர்களை படிப்பதில். குடிச்சிட்டு வரான்... ஒதுங்கு. " வெகு தூரத்தில் நடந்துவருபவனின் தடுமாற்றத்தையும் மிக சரியாகக் கணித்துவிடுவாள். " தோ வந்துடறேன் அத்தை... " "இவன் எப்ப சிகரெட் குடிக்க ஆரம்பிச்சான்... " மதிய சாப்பாட்டுக்குப் பிறகு கொல்லைப்புறம் ஓடும் என் இளம் மச்சினனுக்குப் பின்னால் முணுமுணுப்பாள்... " சொன்னேன்ல... பாத்தியா? " அவன் சென்ற பிறகு கொல்லைப்புறம் சென்று துப்பறியும் சாம்புவாக மாறி சிகரெட் துண்டை கண்டுபிடித்துக் காட்டுவாள். அம்மாவின் கணிப்பு தப்பியதே கிடையாது. அதேபோல தவறுகளைக் கண்டிப்பதிலும் படு சிக்கனமாய், நிதானமான, ஆனால் யோசிக்கவைக்கும் வார்த்தைகளை உபயோகிப்பாள்.

Representational Image
Representational Image

ஒரு மாலை நேரம்... கையில் சிகரெட்டுடன் கடைக்கு முன்னால் நின்று என்னுடன் பேசிக்கொண்டிருந்தான் முபாரக்... " டேய், உங்க அம்மாடா . " பதிவு செய்யும் பாடலுக்கு ஷார்ப்பை கூட்டிவிட்டு கடைக்கு வெளியே வந்த பாஸ்கர் சன்னமாய் அலற, முபாரக் சிகரெட்டை பின்னால் மறைத்தான். அம்மா முபாரக்கை சந்திப்பது அதுதான் முதல் முறை. " யாரு வீடு தம்பி நீங்க... " அட, உங்க பாட்டி பேரு... சுண்ணாம்புக்கார வீதியிலதானே பூர்வீக வீடு ? உங்க அம்மாவும் நானும் சின்ன வயசுல ஒண்ணா விளையாடியிருக்கோம் தம்பி. ஏம்பா முபாரக், அந்த வீட்டு பிள்ளைனு என்கிட்ட நீ சொல்லவே இல்லையே... " முபாரக்கின் அம்மா, தன் சிறுவயது தோழி என்ற சந்தோஷத்தில் அம்மா தொடர, நான் நெளிய ஆரம்பித்தேன். என்னைவிட அதிகமாய் முபாரக். அவன் பின்னால் பிடித்திருந்த சிகரெட் துண்டு விரலை சுடத் தொடங்கியிருந்தது. " சரி தம்பி... அம்மாவை கேட்டேன்னு சொல்லுங்க. " ஒரு வழியாய் கிளம்பிய என் அம்மா, அடுத்து கூறியதில்தான் முபாரக்கின் கெட்டப் கிழிந்தது . " கைய பச்சைத் தண்ணியில காட்டுங்க தம்பி... இல்லேன்னா கொப்புளிச்சிடும். டேய்... தம்பிக்கு ஏதாச்சும் பாக்கு வாங்கிக் கொடுடா. " முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் கூறிவிட்டு சட்டென அம்மா நகர, முபாரக்கின் முகம் இருண்டது.

" ஏன்டா... அந்த வீட்டு பையனா இப்படி... " நான் வீடு திரும்பியதும் மிகவும் வருந்தினாள். முபாரக் குடும்பம் ஊரின் பாரம்பர்யமான குடும்பங்களில் ஒன்று. முபாரக்கின் தந்தை, அரசு அலுவலர். அவனின் அக்காள்கள், அண்ணன் என குடும்பத்தில் அனைவரும் பட்டதாரிகள். ரெக்கார்டிங் சென்டரில் நடக்கும் எங்கள் அரட்டை, நள்ளிரவையும் தாண்டும் சமயங்களின் சில வேளைகளில், முபாரக்கின் தந்தை அவனை தேடிவருவார். " டேய்... தம்பி, சாப்பாட்டை முடிச்சிட்டு வந்து பேசிக்கிட்டிருடா..." "நீங்க போங்கப்பா... தோ வந்திடறேன். நீங்க சாப்டீங்களாப்பா? " முகம் திருப்பி கெஞ்சும் தந்தையுடன் பேசுவான் முபாரக். " டேய்... போய் சாப்ட்டுட்டு வாடா. நீ இப்படியே இருந்தா கடையை இழுத்து மூடிடுவேன் ஆமா . " சகாயம் அண்ணனின் அதட்டல் மெளனத்தைக் கலைக்கும்போது, எழுந்து போவான் .

முபாரக்குடனான என் நட்பினால், தன் பால்ய தோழியுடனான என் அம்மாவின் தொடர்பு புதுப்பிக்கப்பட்டது . அவர்கள் வீட்டுக்குச் சென்றவள், அவனைப்பற்றி விசாரித்தபோது, ''அவனையும் மதித்து விசாரிக்கறீங்களே... " என அவனின் மூத்த அக்காள் சிரித்ததை வருத்தத்துடன் குறிப்பிட்டாள். " எல்லோரும் நல்லா படிக்கிற குடும்பத்துல ஒருத்தனுக்கு படிப்பு ஏறலைன்னா பக்குவமா சொல்லணும். மத்த திறமையை வளர்த்துவிடணும். அதில்லாம, பிஞ்சிலேயே ஒண்ணுக்கும் உதவாதுனு திட்டினா வெம்பித்தான் போகும். " முபாரக்கின் நிலைக்கான உளவியல் காரணங்களை அம்மா அட்சரம் பிசகாமல் சொன்னாள் .

``எல்லோரும் நல்லா படிக்கிற குடும்பத்துல, ஒருத்தனுக்கு படிப்பு ஏறலைன்னா பக்குவமா சொல்லணும்... மத்த திறமையை வளர்த்துவிடணும். அதில்லாம, பிஞ்சிலேயே ஒண்ணுக்கும் உதவாதுனு திட்டினா வெம்பித்தான் போகும். "

இசைத்தட்டுகள் வாங்க சென்னை செல்லும்போதும், புதிய படங்களின் மாஸ்டர் கேசட்டுகள் கடைக்கு வரும்போதும் சகாயம் அண்ணனுடன் முபாரக்கும் கட்டாயம் இருப்பான். ஸ்டூலில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து விட்டத்தை அண்ணாந்து பார்த்தபடி புதிய பாடல்களைக் கேட்டு, " செம ஹிட்டாகும், சுமார், தேறாது " என ஒரு வரி விமர்சனம் கொடுப்பான். பெரும்பாலும் அவனது கணிப்புகள் தப்பாது . ஏன்டா... வெட்டியா சுத்தறதுக்கு பேசாம கடையில சேர்ந்துடுடா... பார்ட்னராகூட சேர்த்துக்கறேன்..." "ஓய், சுதந்திரமா சுத்தர சிங்கத்தை சர்க்கஸ்ல சேர்க்கப் பார்க்கறீரே. உண்மையான அக்கறையுடன் சகாயம் அண்ணன் அழைக்கும்போதெல்லாம், ஒரே பன்ச் தான்.

முபாரக், 'நண்பேன்டா' என போற்றும் ஆசை அண்ணன் என வயதில் சிறிய எங்களால் அழைக்கப்படும் ஆசை எனும் ஆசைத்தம்பி, அசப்பில் நடிகர் நெப்போலியனைப் போலவே இருப்பார். உயரம் கம்மி என்பதைத் தவிர நடை, பேச்சு அனைத்தும் நெப்போலியன் தான் . மிகவும் வறுமையான சூழலிலிருந்து வந்தவர் என்றாலும், யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதவர் ஆசை அண்ணன். சிகெரெட், டீ என அனைத்தையும் முபாரக்கிடம் மட்டுமே உரிமையுடன் கேட்பார். முபாரக்கின் அலம்பல்கள் அதிகமாகும்போதெல்லாம், " டேய்... கிளம்பு, கிளம்பு" என ஆசை அண்ணன்தான் அடக்குவார். தன் தந்தையின் சொல்லைக்கூட கேட்காத முபாரக், அவரின் அதட்டலுக்கு மட்டும் அடிபணிவான் .

" நான் வேலை எடுத்ததும் முதல்ல ஆசைக்கு ரெண்டு பேன்ட்டும் நல்லதா நாலு சட்டையும் வாங்கிக் கொடுக்கணும். நான் வாங்கிக் கொடுத்தா மட்டும்தான் போடுவான் என் நண்பன். சும்மா, லுங்கி சட்டைக்கே இத்தனை ஃபிகர் மடங்குதே... ஆசை மட்டும் நல்ல பேன்ட்டா போட்டு இன் பண்ணா... " முபாரக் அடிக்கடி கூறுவது உண்மை. எலெக்ட்ரிசிட்டி லைன் மேன் பணியிலிருந்த ஆசை அண்ணன், பெரும்பாலும் காக்கிச்சட்டை லுங்கியில்தான் வருவார். அரிதாக அணியும் பேன்ட் சட்டையில் ஆசை அண்ணன் போலீஸ் மிடுக்குடன் மிளிர்வார் . சினிமா டிக்கெட் விவகாரத்தில் முபாரக் அடிவாங்கினானா என்பது எனக்கு இன்றுவரை தெரியாது என்றாலும், வேறொரு சம்பவத்தில் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து உடம்பு முழுவதும் கன்றிப்போகும் அளவுக்கு அடிவாங்கிய முபாரக்கை மீட்கச் சென்ற கூட்டத்தில் நானும் இருந்தேன் .

Representational Image
Representational Image

கோயில் திருவிழாவில் மூன்று பேரை அவன் தனி ஆளாய் அடித்துத்துவைத்த சம்பவம். " ஏன்டா ? நீயே ஒரு பொண்ணு விடாம சைட் அடிக்கறவன்தான்... அவனுங்களை ஏன்டா அடிச்சே? " போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திரும்பி, வீட்டிலும் வாங்கிக் கட்டிக்கொண்டு, கடை மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து... உடல் நடுங்க அமர்ந்திருந்த முபாரக்கிடம் கோபமாகக் கேட்டார் சகாயம் அண்ணன். அவன் மீதான அக்கறை மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் முபாரக்கின் அட்டூழியங்களால் தன் பெயர் கெடுவதுடன், தொழிலும் பாதிக்கும் பயத்தினாலும் உண்டான கோபம் . அன்று கூடியிருந்த ஆசை அண்ணன், பாஸ்கர் தொடங்கி ரமேஷ், சித்திக் நான் உட்பட, ராஜா ரெக்கார்டிங் சென்டர் குரூப் அனைவருக்குமே முபாரக் அதிகம் வம்பிழுப்பதாகத்தான் தோன்றியது. " டேய்... அண்ணன் கேக்கறாருல. கட்டிங் போட்டுட்டு போயிருந்தியா? " " ஓய், நானும் அட்டூழியம் பண்றவன்தான். ஸ்கூல் ரிக் ஷாவை விரட்டிக்கிட்டு போய் ரோஜாப்பு வீசியிருக்கேன்...லெட்டர் கொடுத்திருக்கேன்... அதெல்லாம் வேற... இவனுங்க என்ன பண்ணுனானுங்கன்னு தெரியுமா ? அம்மா சித்தின்னு குடும்பமா போற பொண்ண தப்பா தொடுறானுங்கண்ணே... யோவ் . உன்னோட வீட்டு பொண்ணுங்களை அப்படி பண்ணா நீ என்ன பண்ணுவியோ அதைத் தான்யா நான் பண்ணேன். பின்னி எடுத்துட்டேன்.... " சகயாம் அண்ணனின் கோபக் கேள்விக்கும் சித்திக்கின் அதட்டலுக்கும் உதடுகள் துடிக்கப் பேசியவன், கையிலிருந்த சிகரெட்டை தரையில் வீசி அடித்துவிட்டு விருட்டென போய்விட்டான். தரையில் மோதி விழுந்த சிகரெட்டின் நெருப்புத் துளிகள், எங்கள் அனைவரின் கால்களைச் சுட்டதுபோலவே அவனது வார்த்தைகள் எங்கள் மனதைச் சுட்டன. சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தவன், கடையின் கல்லாப்பெட்டியிலிருந்த கேசட்டை எடுத்தான். " சாமியாரு தியானம் செய்யப் போறாரு . " நமுட்டலான சிரிப்புடன் ஆசை அண்ணன் கூறியதை கண்டுகொள்ளாமல் ரெக்கார்டிங் அறைக்குள் நுழைந்து, பதிவாகிக்கொண்டிருந்த பாடலை நிறுத்திவிட்டு, தன் கேசட்டை சுழலவிட்டான். 'கீதாஞ்சலி' படத்தின் 'ஒரு ஜீவன் அழைத்தது' பாடலை, "இனி எனக்காக அழ வேண்டாம். ஒரு கண்ணீரும் விழ வேண்டாம்" வரிகள் மீண்டும் மீண்டும் வரும்படி பதிவு செய்யப்பட்ட கேசட் . முபாரக் அதிகம் உணர்ச்சிவசப்படும் தருணங்களிலெல்லாம் அந்தப் பாடல் கடையில் ஒலிக்கும் . அந்த இசை வரிகள் மீண்டும் மீண்டும் சுழல, விட்டம் வெறித்தபடி புகைக்கத் தொடங்கினான் . அதுவரையிலும் கேலிச்சித்திரமாய் எங்கள் மனதில் பதிந்திருந்த முபாரக்கின் உருவம், அழகிய ஓவியமாய் பதிந்த நாள் அது .

படிப்பு முடிந்து, நான் வெளிநாடு செல்ல முடிவுசெய்த காலகட்டத்தில், ஆடியோ சிடி-க்களின் வரவு, கேபிள் டிவி என ராஜா ரிக்கார்டிங் சென்டரின் வியாபார முகம் மாறத்தொடங்கியது போலவே எங்கள் கூட்டத்து நண்பர்கள் சிலரின் நட்பு முகங்களும் மாறத் தொடங்கின . பள்ளி, கல்லூரி காலத்து எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை மாறி, பணத்தைத் துரத்தி பலனை எதிர்பார்த்துப் பழகும் குணம் வெளிப்படத் தொடக்கிய காலகட்டம் அது . ராஜா ரெக்கார்டிங் சென்டர் நண்பர்களுக்காக நான் ஏற்பாடுசெய்திருந்த பிரிவு உபசார பார்ட்டியில் வழக்கத்தைவிடவும் அதிகமாக அலம்பினான் முபாரக். பாரிலிருந்து வெளியேறிய நள்ளிரவில், கடலில் குளித்தே ஆகவேண்டும் என அடம்பிடித்தவன், இருட்டு கடற்கரையில் எங்களின் உடைகளை எடுத்துக்கொண்டு ஓடினான் . ஒருவழியாக அவனை வீட்டில் சேர்த்துவிட்டு நான் வீடு திரும்பி கண்ணயர்ந்த வேலையில், வாசல்கதவு தட்டும் சப்தம். அந்த அதிகாலை மூன்று மணிக்கு, கலங்கிய கண்களுடன் கையில் ஒரு ஆடியோ கேசட்டுடன் நின்றிருந்தான் முபாரக். "டேய்... உனக்கு ஏதாச்சும் கொடுக்கணும்னு தோணுச்சி... இந்த கேசட்டை நான் யாருக்கும் இரவலாகூட கொடுத்தது கிடையாது... எங்களையெல்லாம் மறந்துடாதடா... அந்த டிடிகே 60 ஆடியோ கேசட்டை என் கைகளில் திணித்துவிட்டு, விருட்டென சைக்கிளில் ஏறி இருளில் மறைந்தான்.

Representational Image
Representational Image

அனைத்தும் இளையராஜா பாடிய காதல் பாடல்கள் . நாடா தேயும் வரை நீண்ட காலம் நான் கேட்டு ரசித்த அந்த கேசட்டின் பாடல்களில் ஒன்றான 'அன்பு முகம் தந்த சுகம்' பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்கள் கசிந்ததுண்டு . "நானொரு பாதையில் நீயொரு பாதையில் பிரிந்துவிட்டோம் விதிவழியே" என காதலின் பிரிவைச் சொல்லும் அந்தப் பாடலின் வரிகள் எனக்கு நல்ல நட்புகளின் பிரிவை நினைவூட்டும் . மறுநாள் காலையில் குளித்துக்கொண்டிருந்த என்னை ஒரு தூரத்து சித்தப்பு மிரண்டுபோய் அழைக்க, வீட்டு வாசலில் சகாயம் அண்ணன், பாஸ்கர் என ராஜா ரெக்கார்டிங் சென்டரின் பெரிய தலைக்கட்டுகள் .

என் வீட்டு திண்ணை நிறைந்து, அக்கம்பக்கத்து வீட்டு வாசல் படிகள் வரை பெருங்கூட்டம். கடையின் அன்றாட வரவுகள் தொடங்கி, அவ்வப்போது வரும் நண்பர்கள் வரை அத்தனை பேரையும் என்னை வழியனுப்ப அழைத்துவந்திருந்தான் முபாரக் . " டேய், அதிகாலையிலேயே வந்து வாசல் கதவைத் தட்டி இழுத்துக்கிட்டு வந்துட்டான். " " டேய், இவனுங்களெல்லாம் நான் கூப்பிட்டதாலயோ இல்ல உனக்காகவோ வரலடா. எல்லாம் நேத்து நைட்டு நீ இவங்களுக்கு வாங்கிக் கொடுத்த குடி . நன்றி மறந்தாலும் குடி வாங்கி கொடுத்தவனை நம்ம பசங்க மறக்க மாட்டனுங்கடா . " அந்தக் கூட்டத்தில், அதிகாலைச் சூரியனையே பார்த்திராத பலபேரில் ஒருவரான ரமேஷின் புலம்பலுக்கு அலட்சியமாய் கூறினான் முபாரக் . என்னை வழியனுப்பத் திரண்ட கூட்டத்தைத் தெருவே அரண்டு பார்த்தது. கொடியும் கோஷமும் இல்லாமல் எனக்குக் கூடிய கூட்டத்தை கேள்விப்பட்ட ஏரியா எம்.எல்.ஏ, நான் வெளிநாடு சென்றுவிட்டதை அறிந்து நிம்மதியானதாகப் பின்னர் கேள்விப்பட்டேன் . " டேய், நமக்கு கடிதமெல்லாம் எழுத வராது. பசங்ககிட்ட விசாரிச்சிக்கறேன். " அலட்டலாய் கார் கதவை சாத்தினான் முபாரக் . தூரதேசம் வந்த புதிதில் மாதத்துக்கு ஒன்று என சிரத்தையாய் தொடங்கிய கடிதத் தொடர்பு, போகப்போக வேலை, திருமணம் என குறையத் தொடங்கிய ராஜா ரெக்கார்டிங் சென்டர் கூட்டத்தைப் போலவே தேயத்தொடங்கியது .

இரண்டு வருடங்கள் கழித்து, நான் ஒரு மாத விடுமுறையில் ஊர் திரும்பியபோது, கேபிள் டிவி, ஆடியோ சிடி அடுத்தடுத்த தொழில்நுட்பத் தாக்குதல்களை தாக்குப்பிடிக்க முடியாமல், ராஜா ரெக்கார்டிங் சென்டர், தன் இறுதி நாள்களை எண்ணிக்கொண்டிருந்தது . ஒரு நாளைக்கு இரண்டு சிங்கிள் டீ, இருந்தால் அனைவரும் சமம் என்ற நண்பர்களின் கொள்கையிலும் புதிய நுகர்வு கலாசாரம் பொத்தல்களை ஏற்படுத்தியிருந்தது . முபாரக் மட்டும் மாறவில்லை . என்னை கடையில் கண்டதும், ஏதோ ஒவ்வொரு நாளும் பார்ப்பதைப் போலவே 'வாடா' என ஒற்றை வரியில் அழைத்தான் . கடையில் நிறைய புதிய முகங்கள். அவர்களுக்கு டீ சொல்லவும் சிகரெட் வாங்கவும் அடிக்கடி ஓடினான் . சகாயம் அண்ணன் தொடங்கி பலருக்காக முபாரக் உழைப்பது ஒன்றும் புதிதில்லை என்றாலும் அந்த புதிய நண்பர்கள் அவனிடம் பேசிய தொனி என்னை உறுத்தியது .

" டேய்... சென்டு வாசனை நல்லா இருக்கு... நமக்கு யார்கிட்டயும் எதையும் கேட்டு பழக்கமில்லைனு உனக்குத் தெரியும்தானே... உன்கிட்ட உரிமையா கேட்கலாம்... எனக்கு ஒரு பாட்டில் அனுப்புடா . " " டேய் தம்பி, அண்ணனுக்கு ஒரு பாட்டில் அனுப்பு . " பாரில் என்னுடன் போதையில் பேசியவனை வழக்கம்போலவே சகாயம் அண்ணன் கலாய்க்க, எதுவும் கேட்காதவன் கேட்டுவிட்டான் என்ற நினைப்பில் நான் உபயோகித்துக் கொண்டிருந்த சென்டு பாட்டிலுடன் மறுநாள் காலையில் முபாரக் வீட்டுக்குச் சென்றேன். முந்தைய இரவின் போதை தெளிந்து திண்ணையில் அமர்ந்திருந்தவனிடம் சென்டை கொடுத்தேன். " போதையில கேட்டா கொண்டுவந்துடுவியா நீ ? யாருகிட்ட... நமக்கு வாங்கிப் பழக்கம் கிடையாது தெரியும்ல... திண்ணையிலிருந்து குதித்திறங்கி, ஒரு காலால் லாகவமாய் லுங்கியைத் தூக்கி முட்டிக்குமேலே மடித்துக் கட்டியபடி முபாரக் விட்ட சவுண்டில் திரும்பினேன்.

Representational Image
Representational Image

நான் மீண்டும் வெளிநாடு திரும்பிய சில மாதங்களில், ராஜா ரெக்கார்டிங் சென்டர் தன் கதவுகளை நிரந்தரமாக மூடிக்கொண்டதை அறிந்து, ஒரு நட்பின் மரணத்துக்கு நிகரான துக்கத்துக்கு ஆளானேன். ரெக்கார்டருக்கு மேலே சொருகிய பத்தியின் மணத்துடன் சிகரெட் புகையின் வாசனையும் கலந்து வீசும் பொன்னந்தி மாலைபொழுதுகளில், பதிவாகிக் கொண்டிருக்கும் பாடல் பின்னணியாய் ஒலிக்க, கடைத்தெருவின் பரபரப்பை அதிலிருந்து விலகி, எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்திருந்த அந்தத் தருணங்கள் இனி என்றுமே கிட்டப்போவதில்லை என்ற ஏக்கம் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் எழுந்துகொண்டுதான் இருக்கிறது .

பணத்தைத் துரத்தும் நண்பர்களின் தொழில்களுக்கு சம்பளமில்லாத வேலைக்காரனாகிப் போனான் முபாரக் . நண்பர்களுக்கு உதவுவதில் பலன் எதிர்பார்க்கக்கூடாது என்ற முபாரக்கின் உயர்ந்த குறிக்கோள், சந்தர்ப்பவாத நண்பர்கள் சிலருக்கு சாதகமாகப்போயிற்று . முபாரக் காசு வாங்க மாட்டான் என அவர்களே பிரகடனப்படுத்தி, அவனது தேவையான குவார்ட்டரை மட்டுமே கொடுத்து காரியம் சாதித்துக்கொள்ளத் தொடங்கினார்கள். அவ்வப்போது குடித்துக்கொண்டிருந்த முபாரக், அவர்களால் முழு நேர குடிகாரனாக மாற்றப்பட்டான். அந்த நண்பர்களுக்காக சிமென்ட் மூட்டை தூக்கினான். இறால் பண்ணைகளில் காவல் இருந்தான். ஈமூ கோழிகளுக்குத் தீவனம் வைத்தான் .

Representational Image
Representational Image

" டேய் பசங்களா, என்னா சைட்டா? முதல்ல இப்படி நிக்கவே கூடாது. " முபாரக் எதிர்பாராவிதமாய் குறுக்கிட்டதால் பிரேக்கிட்டு திட்டத் தொடங்கிய கார் ஓட்டுநர்களையும் ஹாரனுடன் விலகிப் பறந்த இரு சக்கரர்களையும் கண்டுகொள்ளாமல், சாலையின் எதிர்ப்புறத்தில் கையில் ஸ்மார்ட் போன்களுடன் திருமண மண்டபத்தைப் பார்த்தபடி தயங்கி நின்ற இளவட்டங்களை நோக்கி தள்ளாடி முன்னேறினான் . ஆசை அண்ணனை ஏறிட்டேன்... நரைத்த மீசையைத் தவிர பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. அதே காக்கிச் சட்டை, லுங்கி. சட்டை காலரின் மேல் பகுதி முழுவதும் அரித்துக் கிழிந்திருந்தது. " டேய் இருடா... அவனை கூட்டிக்கிட்டு வரேன். டேய் முபாரக்... கிளம்பு, கிளம்பு. " அவரும் சாலையிலிறங்க, எனக்கு தொண்டை அடைத்தது.

-முகம்மது ஜலாலுதீன் அக்பர்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/