Published:Updated:

எஸ்.விஜயகுமார்: `சிலைத் திருட்டுக் கும்பலை வீழ்த்திய சாமானியன்’| இவர்கள்| பகுதி – 11

இவர்கள் | எஸ்.விஜயகுமார்
News
இவர்கள் | எஸ்.விஜயகுமார்

எஸ்.விஜயகுமார் சிலைத் திருட்டு வழக்குகளில் தமது பங்களிப்புகள் குறித்தும், சிலைத் திருடர்களின் உலகம் குறித்தும் எழுதிய நூலான 'The Idol Thief' என்ற நூல் முக்கியமானது.

ஒரு தேசம் எவ்வளவு ஆரோக்கியமானதென்பதை அந்த தேசத்தினருக்கு இருக்கும் வரலாற்று உணர்ச்சியிலிருந்துதான் நாம் தெரிந்துகொள்ள முடியும். தமது அடையாளங்களையும் கலாசாரங்களையும் பொருட்படுத்திக் கொண்டாடத் தவறும் சமூகத்தினர் தங்களது அடையாளங்களை முற்றாக இழக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

தனது கடந்த காலத்தின் வரலாற்றைச் சரிவரத் தெரிந்துகொள்ளாமல் கடந்து செல்லும் சமூகத்துக்கு எதிர்காலமும் ஆரோக்கியமாக இருக்கப்போவதில்லை.

பனி சூழ்ந்த ஷில்லோங்கின் குளிரில், டான் பாஸ்கோ அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய இந்த மாலையில் வடகிழக்கிந்திய மக்களுக்குத் தங்களது அடையாளங்களின் மீதும், கலாசாரத்தின் மீதும் இருக்கும் பிடிப்பு ஆச்சர்யமூட்டுகிறது. வடகிழக்கு இந்தியாவின் ஏழு மாநிலங்களில் உள்ள முக்கியப் பழங்குடிகளின் வாழ்வைப் புரிந்துகொள்வதற்கான அத்தனை சிறப்புகளையும் கொண்டிருக்கிறது அந்த அருங்காட்சியகம். ஓர் அரசாங்கம் செய்திருக்கவேண்டிய இந்தக் காரியத்தை மிஷனரியினர் செய்திருக்கிறார்கள். இதேவேளையில் பரந்து விரிந்த தமிழகத்திலிருக்கும் ஏராளமான பழங்குடிகளைப் பற்றி அறிந்துகொள்ள இதுபோல ஓர் அருங்காட்சியகம் இருக்கிறதா என்ற கேள்வி எனக்கு எழுகிறது... வரலாற்றை நாம் ஏன் பொருட்படுத்துவதில்லை?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தமிழகத்தில் 50,000-க்கும் அதிகமான கோயில்கள், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. வெவ்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த பழைமையான அந்தக் கோயில்கள் சரியான பராமரிப்பில்லாமல் புதர்மண்டிக்கிடக்கின்றன. யாராலும் கண்டுகொள்ளப்படாமல் புதர்மண்டிக்கிடக்கும் இந்தக் கோயில்களில் ஏராளமான கலைப் பொக்கிஷங்கள் உள்ளன. இந்தக் கலைப் பொக்கிஷங்களின் மதிப்பையும் மாண்பையும் தெரிந்துகொண்டு, இவற்றைக் கடத்தி விற்பதற்கென சில குழுக்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலும் கலைப்பொருள்கள் திருட்டு, பெரும் வணிகமாக இருந்துவருகிறது. பணக்கார நாடுகளின் அருங்காட்சியகங்களை அலங்கரித்துவரும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த பொக்கிஷங்கள் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டவைதான். பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் மாதிரியான ஐரோப்பிய நாடுகள் தங்களது காலனி நாடுகளிலிருந்து களவாடிய கலைப்பொருள்கள் ஏராளம்.

எஸ்.விஜயகுமார்
எஸ்.விஜயகுமார்

அவை ஒருபோதும் சொந்த நாடுகளுக்குத் திரும்பக் கொடுக்கப்படவில்லை. கலைப்பொருள் சேகரிப்பதென்பது மேற்குலக சீமான்களுக்கு காஸ்ட்லியான பொழுதுபோக்கு. தங்களது வீட்டின் வரவேற்பரையில் ஆயிரம் இரண்டாயிரம் வருடப் பழைமையான சிலைகளையும், வாள்களையும், சுடுமண் பொம்மைகளையும் காட்சிப்படுத்துவதன் மூலம் சமூகத்தில் தங்களுக்கென தனித்த மதிப்பைப் பெறுவதாக உணர்கிறார்கள். இந்த எண்ணம் தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல, பல நாடுகளைச் சேர்ந்த அருங்காட்சியகங்களுக்கும் உண்டு. அதனால்தான் பெரும் தொகை கொடுத்து இது போன்ற கலைப்பொருள்களை வாங்கிச் சேகரித்து, தங்களது அருங்காட்சியகத்தில் வைக்கிறார்கள். இவ்வாறு பழைமையான பொருள்களை வாங்குவதற்குண்டான சர்வதேச சட்டவிதிமுறைகளைக்கூட பல சமயங்களில் அவர்கள் சரிவரக் கடைப்பிடிப்பதில்லை. நம் கற்பனைக்கு எட்டாத வியாபாரமும், மர்மங்களும் நிறைந்த இந்தக் கறுப்பு உலகின் குரூரப் பக்கங்களைத் தேடிச் சென்று அந்த மர்மங்களுக்குள் தொலைந்துபோன நமது பாரம்பர்யச் சின்னங்களை மீட்டெடுப்பதற்கான சாகசப் பயணம்தான் எஸ்.விஜயகுமாருடையது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விருத்தாசலத்துக்கு அருகில் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவருக்கு வரலாற்றின் மீதும், பண்பாட்டுச் சின்னங்களின் மீதும் சிறுவயதிலிருந்தே அளப்பரிய காதலுண்டு. சென்னையில் கல்வியை முடித்தவர், கடந்த பதினைந்து வருடங்களாக சிங்கப்பூரில் வாழ்ந்துவருகிறார். சிறு வயதில் கல்கியின் `பொன்னியின் செல்வன்’ நாவலை வாசித்ததன் மூலம் வரலாற்றின் மீதான ஆர்வம் பிறக்க, கலைப்பொருள்கள் குறித்து வாசிக்கத் தொடங்குகிறார். சிங்கப்பூரின் ஒரு பிரபல ஷிப்பிங் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பிலிருந்தபடியே, தனக்கிருந்த கலையார்வத்தின் காரணமாக நமது பாரம்பர்யச் சின்னங்களை ஆவணப்படுத்தத் தொடங்குகிறார். 2007-ம் வருடம் `poetry in stone’ என்றொரு வலைதளத்தைத் தொடங்கி, அதில் நமது கோயில்களில் இருக்கும் சிலைகளைக் குறித்தும், அவற்றின் வரலாறு குறித்தும் எழுதுகிறார். இந்தப் பதிவுகள் அவருக்குப் பெரும் கவனிப்பைக் கொடுத்ததோடு, அக்கறையான நண்பர்களையும் உருவாக்கித் தந்தது. அவரைப்போலவே பண்பாட்டின் மீது ஆர்வம்கொண்ட வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் இளைஞர்கள் அவரோடு இணைந்து பணியாற்ற முன்வருகிறார்கள். தனது வலைதளத்தில் ஆவணப்படுத்தவேண்டி வெவ்வேறு அருங்காட்சியகங்களுக்குச் சென்று வரத் தொடங்குவதோடு, ஏராளமான நூல்களையும் வாசிக்கத் தொடங்குகிறார். இந்த நிலையில்தான் தமிழகக் கோயில்களில் இருக்கும் சிலைகள் குறித்து முழுமையான ஆவணங்கள் எதுவும் நமது அரசிடம் இல்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் அவருக்குத் தெரியவருகிறது. சின்னஞ்சிறிய கிராமங்களில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த கோயில்களைக் குறித்து எவரும் அக்கறைப்பட்டதாகக்கூடத் தெரியவில்லை. ஆனால், பாண்டிச்சேரியிலிருக்கும் ஐ.எஃப்.பி ஆவணக் காப்பகம் தமிழக் கோயில்களை முழுமையாக ஆவணப்படுத்தியிருப்பது தெரியவர, அந்த ஆவணக் காப்பகத்தின் உதவியோடு தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்கிறார்.

எஸ்.விஜயகுமார்
எஸ்.விஜயகுமார்

தமிழகத்தில் சிலைத் திருட்டு வழக்குகள் குறித்த செய்திகள் பரவலாக அதிகரிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில் களவாடப்பட்ட சிலைகள் குறித்த விவரங்களையெல்லாம் சேகரித்து எழுதத் தொடங்குகிறார். தமிழக சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு மட்டுமல்லாமல், அமெரிக்காவில் இந்தக் கடத்தலைக் கட்டுப்படுத்தும் காவல்துறையின் முக்கிய அதிகாரியோடும் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றத் தொடங்குகிறார். முன்பே குறிப்பிட்டதுபோல் பல கோயில்களிலிருக்கும் சிலைகள் குறித்த எந்தப் பதிவும் இல்லாத சூழலில் அவை எங்கிருந்து, யாரால், எப்படிக் கடத்தப்பட்டு, எங்கு விற்கப்பட்டிருக்கும் என்கிற வலைப்பின்னலை கண்டறிவது சுலபமான காரியமல்ல. பழைய ஆவணங்கள், வெவ்வேறு அருங்காட்சியங்களின் புகைப்படங்கள் இவற்றையெல்லாம் தேடி எடுத்து ஆய்வுசெய்திருக்கிறார். இவரது தொடர் முயற்சியின் காரணமாகத்தான் சுத்தமல்லி மற்றும் ஸ்ரீபுரந்தன் கோயில்களிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு முக்கியச் சிலைகள் இந்தியாவுக்கு மீட்டுவரப்பட்டன. இந்தச் சிலைகள்தான் அதன் பிறகு ஏராளமான சிலைகள் மீட்கப்படுவதற்கான தொடக்கமாகவும் அமைந்தன.

2014 -ம் வருடம் `India pride project’ என்ற அமைப்பைத் தனது நண்பர்களோடு ஒருங்கிணைந்து தொடங்கியவர், இன்றளவும் கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருவதற்கான வேலைகளைத் தொடர்ந்து செய்துவருகிறார்.

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலை எதுவும் பெரும்பாலும் மீட்கப்பட்டதில்லை என்கிற துயர வரலாறு நமக்கு நீண்டகாலமாக இருக்கிறது. 1980-ம் வருடம் தமிழகத்தில் சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்ட பிறகுதான் சிலைத் திருட்டுகள் ஓரளவு குறைந்திருக்கின்றன. 1970-ம் ஆண்டுக்குப் பிற்பாடு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கு மட்டும்தான் நமது சட்ட அமைப்பு வழிசெய்திருக்கிறது. அதற்கு முந்தைய காலத்தில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க எந்த வழிவகைகளும் இல்லை. பிரிட்டிஷாரின் காலத்தில் ஏராளமான கலைப் பொக்கிஷங்களோடு நமது கோயில் சிலைகளும் பெருமளவில் திருடப்பட்டன. குறிப்பாக 1930-ம் வருடத்திலிருந்து இந்த சிலைத் திருட்டுகள் பெருமளவில் நடைபெற்றுவருகின்றன. வீட்டிலிருக்கும் ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்டால் புண்ணியம் என்ற அளவிலேயே வரலாற்று அக்கறைகொண்ட நமக்கு, பாழடைந்த கோயில்களில் அனாமத்தாக இருக்கும் சிலைகளின் மீது கவனமோ, அக்கறையோ இருந்தால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். மக்களைப்போலவே அரசும் அசட்டையாக இருந்ததால்தான் சிலைகளைத் திருடும் கும்பல்களின் எண்ணிக்கை காலப்போக்கில் பெருமளவில் அதிகரிக்கத் தொடங்கியது.

சுற்றுலாப்பயணிகளைப்போல் வரும் தரகர்கள், கோயில்களில் இருக்கும் சிலைகளைப் படமெடுத்துச் சென்று, அவற்றைக் குறித்து ஆய்வு செய்து, அதன் மதிப்பை உறுதிசெய்த பிறகு உள்ளூரிலிருக்கும் கடத்தல் கும்பல்களின் உதவியை நாடுகிறார்கள். கடத்தவேண்டிய சிலைகளைப்போல் போலியான சிலைகளை உருவாக்கி, அதற்கான ஆவணங்களைப் பெற்றுவிடுகின்றனர். போலி சிலைகளை கோயில்களில் வைத்துவிட்டு நிஜ சிலைகளை கப்பல்கள் மூலமாக வெளிநாடுகளுக்குக் கடத்திவிடுகிறார்கள். இந்தியாவில் ஆண்டுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய சிலைகள் கடத்தப்படுகின்றன. அவற்றில் பத்தோ பதினைந்தோ சிலைகள் குறித்துத்தான் புகார்கள் வருகின்றன. பல சமயங்களில் சிலைகள் திருடப்பட்டதைத் தெரிந்துகொள்ளவே உள்ளூர்க்காரர்களுக்கும் அரசாங்கத்துக்கும் பல மாதங்கள் ஆகிவிடுகின்றன.

இவர்கள் | எஸ்.விஜயகுமார்
இவர்கள் | எஸ்.விஜயகுமார்

சர்வதேச அளவில் சிலைத் திருட்டின் முக்கியப் புள்ளியான சுபாஷ் கபூரையும், அவரிடஒஉஅ கூட்டாளிகளையும் அடையாளம் கண்டதோடு அவர்கள் கைதாக முக்கியக் காரணமாக இருந்தது விஜயகுமாரும், அவருடைய நண்பர்களும்தான். 2012-ம் வருடம் ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட்டில் வைத்து சுபாஷ் கபூர் கைதுசெய்யப்பட்ட பிறகு நியூயார்க்கிலிருக்கும் அவரது வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டனர். 900 கோடி ரூபாய்க்கும் அதிகமான கலைப்பொருள்களை அவரது வீட்டிலிருந்து கைப்பற்றியதோடு பல நூறு கோடி ரூபாய்க்கு உலகின் வெவ்வேறு அருங்காட்சியகங்களுக்கு அவர் கலைப்பொருள்களை விற்றதற்கான ஆவணங்களும் கிடைத்தன.

1971-ம் வருடம், தஞ்சை நடராஜர் சிலை புன்னைநல்லூர் கோயிலிலிருந்து காணாமல்போனதாகப் புகாரளிக்கப்பட்டது. வேறு சிலையைக் கொடுத்து அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அந்தச் சிலையின் புகைப்படத்தை வைத்து கோயிலில் இருப்பது உண்மையான சிலையல்ல, கடத்தப்பட்ட சிலை நியூயார்க்கின் ஓர் அருகாட்சியகத்தில் இருக்கிறது என்பதை விஜயகுமார் உறுதிசெய்கிறார். இதோடு அமெரிக்காவில் மட்டுமே 250-க்கும் மேற்பட்ட கடத்தப்பட்ட சிலைகள் வெவ்வேறு இடங்களில் இருப்பதை உறுதிசெய்து அமெரிக்க காவல்துறைக்குத் தகவல் கொடுக்கிறார். புன்னைநல்லூர் நடராஜர் சிலை உட்பட 57 சிலைகள் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளன. சிலைத் திருட்டு வழக்குகளில் தமது பங்களிப்புகள் குறித்தும், சிலைத் திருடர்களின் உலகம் குறித்தும் இவர் எழுதிய நூலான 'The Idol Thief' என்ற நூல் முக்கியமானது.

இணையத்தின் வழியாக ஒரு சாதாரண மனிதன் எத்தனை பெரிய காரியத்தைச் சாதித்திருக்கிறார் என்பதை நினைக்கையில் மலைப்பாக இருக்கிறது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில்களின் நிலை, அங்கிருக்கும் சிலைகளின் பராமரிப்பு இவற்றையெல்லாம் மிகுந்த சிரத்தையோடு நாம் கவனிக்கவேண்டியது அவசியம். இந்து அறநிலையத்துறையிடமிருக்கும் கோயில்களைத் தனியாருக்குக் கொடுக்க வேண்டுமென்கிற கோஷங்கள் அதிகரிப்பதை நாம் சந்தேகம்கொள்ள வேண்டும். சுத்தமல்லி கோயிலிலிருந்து திருடப்பட்ட சிலை மட்டுமே 8.4 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது என்றால் தமிழ்நாட்டிலிருக்கும் 50,000 கோயில்களில் இருக்கும் சிலைகளின் மதிப்பென்ன? கோயில்களைத் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கச் சொல்கிறவர்களின் அக்கறை எதன் பொருட்டு என்பதையும் நாம் கேள்வி கேட்க வேண்டும்.

இவர்கள் | எஸ்.விஜயகுமார்
இவர்கள் | எஸ்.விஜயகுமார்

சிலைகள் மட்டுமல்ல, கலைப்பொருள்கள், ஓவியங்கள், ஓலைச்சுவடிகளென ஏராளமாக நம்மிடமிருந்து களவாடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. தஞ்சாவூரில் திருடப்பட்டு, ஜெர்மனியில் பதினெட்டு கோடி ரூபாய்க்குச் சமீபத்தில் விற்கப்பட்ட ஓலைச்சுவடிகளை மறக்க முடியுமா? ஓலைச்சுவடிகளைச் சேகரிக்கிறோம், ஆவணப்படுத்துகிறோம் என்று வருகிற தனியார் அமைப்புகளையும் கண்காணிக்கவேண்டியது அவசியம்1

(இவர்கள்... வருவார்கள்)