Published:Updated:

புத்துயிர்ப்பு: லொரைன்... வலியில் பிறந்த வலிமை!

MARUDHAN G
கார்த்திகேயன் மேடி

புகழ்பெற்ற அமெரிக்க நாடகாசிரியரும் எழுத்தாளருமான லொரைன் ஹான்ஸ்பெரி (1930-1965) எழுதிய ‘வெள்ளையர்கள்’ (Les Blancs) என்னும் நாடகத்தில் வரும் போர்க் குணமிக்க ஆப்பிரிக்கர் விவரிக்கும் கதை இது.

பிரீமியம் ஸ்டோரி
அது ஒரு பெரிய காடு. அந்தக் காட்டில் மோடிங்கோ என்னும் புத்திசாலி கழுதைப்புலி ஒன்று வாழ்ந்துவந்தது. எதையும் நடுநிலையோடு உணர்ச்சிவசப்படாமல் அணுகுவது மோடிங்கோவின் வழக்கம்.

காடு யாருக்குச் சொந்தம் என்னும் மிகவும் முக்கியமான, அடிப்படையான பிரச்னை எழுந்தபோதுகூட மோடிங்கோ நிதானமிழக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

‘இது எங்கள் மூதாதையரின் நிலம். காடு எங்களுக்கே சொந்தம்’ என்றன கழுதைப்புலிகள். ‘இருக்கலாம். ஆனால், பருத்த உடலமைப்பைக்கொண்ட நாங்கள் இந்தக் காட்டை ஆள்வதுதான் பொருத்தமானது’ என்றன யானைகள். என்ன இருந்தாலும் மோடிங்கோ ஒரு கழுதைப்புலி என்பதால் அதன் ஆதரவு நமக்கே கிடைக்கும் என்று எதிர்பார்த்தன அதன் நண்பர்கள். மோடிங்கோவோ, ‘இது கழுதைப்புலிகளின் காடு என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம், யானைகளின் பக்கமும் நியாயம் இருக்கவே செய்கிறது’ என்றது.

லொரைன்
லொரைன்

இப்படியாக யானைகளின் நியாயத்தை மோடிங்கோ உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தபோது யானைகள் என்ன செய்துகொண்டிருந்தன தெரியுமா... கொஞ்சம் கொஞ்சமாக எல்லாக் கழுதைப்புலிகளையும் விரட்டியடித்துவிட்டு காட்டை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன.

புகழ்பெற்ற அமெரிக்க நாடகாசிரியரும் எழுத்தாளருமான லொரைன் ஹான்ஸ்பெரி (1930-1965) எழுதிய ‘வெள்ளையர்கள்’ (Les Blancs) என்னும் நாடகத்தில் வரும் போர்க் குணமிக்க ஆப்பிரிக்கர் விவரிக்கும் கதை இது. காலனிய மயக்கம்கொண்ட பிரெஞ்சு நாடகாசிரியர் `ஒருவர் கறுப்பர்கள்’ (Les Negres) என்னும் தலைப்பில் ஆப்பிரிக்காவைப் பிழையாகச் சித்திரித்து எழுதிய நாடகத்தைப் படித்து அதிர்ச்சியடைந்து, அதற்குப் பதிலடி கொடுக்கும்வகையில்தான் தன் ‘வெள்ளையர்கள்’ நாடகத்தை எழுத ஆரம்பித்தார் லொரைன். மிகுந்த மனவெழுச்சியோடுதான் ஆரம்பித்தார் என்றாலும் முழுக்க எழுதி முடிக்கமுடியுமா என்னும் சந்தேகம் அவருக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. பெரிய அளவில் திட்டமெல்லாம் தீட்டி ஆரம்பிப்பதும் ஒருகட்டம் வரை எழுதிவிட்டு, சரி பின்னால் பார்த்துக்கொள்வோம் என்று அதைக் கைவிட்டுவிட்டு வேறொன்றுக்குத் தாவுவதும் அவருக்கு இயல்பானது. இது போதாதென்று புற்றுநோயும் அவர் உடலை அரிக்க ஆரம்பித்திருந்தது. ‘வெள்ளையர்களை’ மட்டுமாவது முடித்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு டைப்ரைட்டரைக் கையோடு சுமந்துசென்று மருத்துவமனை, வீடு என்று மாறி மாறி ஒரு வழியாக எழுதிமுடித்தார். நவம்பர் 1970-ல் ‘வெள்ளையர்கள்’ மேடையேறியபோது லொரைன் உயிருடன் இல்லை.

`என்னால் மோடிங்கோ போல் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அந்தப்பக்க நியாயம், இந்தப்பக்க நியாயம் என்றெல்லாம் நீட்டிமுழக்கி ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது. யானை களா, கழுதைப்புலிகளா என்னும் கேள்விக்கு நடுநிலையான பதிலொன்றைத் தேடி என் பொழுதை வீணாக்க நான் விரும்பவில்லை. நான் கழுதைப்புலிகளின் பக்கம் நிற்கவே விரும்புகிறேன்' என்கிறார் லொரைன்.  

சரிக்கும் தவற்றுக்கும் நீதிக்கும் அநீதிக்கும் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் உண்மைக்கும் பொய்க்கும் இடையில் ஒன்றைத் தேர்வு செய்வதில் உங்களுக்கு ஏன் மயக்கம் ஏற்பட வேண்டும்?

ஆப்பிரிக்கா கறுப்பர்களின் நிலம்; அதில் வெள்ளையர்களின் வருகை என்பது ஆக்கிரமிப்பே என்பதைத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது ‘வெள்ளையர்கள்'.

`உங்கள் நோக்கம் தவறானதாக இருக்கும் போது நீங்கள் எங்களுக்கு அளிப்பதாகச் சொல்லும் கல்வியும் கடவுளும் மருத்துவமும் ஜனநாயகமும் நாகரிகமும் நவீனத்துவமும் மட்டும் எப்படித் தூய்மையானதாக இருக்க முடியும்... எங்களை உங்களுக்குச் சமமாக உயர்த்துவதா உங்கள் கனவு... எங்கள் வளங்களை எங்களிடமே அளிப்பதற்காகவா நீங்கள் உங்கள் நெற்றி வியர்வையை எங்கள் நிலத்தில் சிந்திக்கொண்டிருக்கிறீர்கள்... எங்களுக்கு அமைதியை அளிப்பதற்காகவா உங்கள் கரங்களில் துப்பாக்கி துருத்திக்கொண்டு நிற்கிறது...

புத்துயிர்ப்பு: லொரைன்... வலியில் பிறந்த வலிமை!

லொரைன், உங்கள் எழுத்தில் போரும் வன்முறையும் ரத்தமும் வலியும் ஏன் மிகுந்திருக்கின்றன என்று என்னைக் கேட்கிறார்கள். நான் என்ன செய்வேன்... சிகாகோவில் ஒரு கறுப்புப் பெண்ணாகப் பிறந்தேன். நான் பிறந்தபோது முதல் உலகப் போர் முடிவடைந்து அமெரிக்கா கடும் பொருளாதார வீழ்ச்சியில் தத்தளித்துக்கொண்டிருந்தது. அதிலிருந்து மீண்டு இன்னொரு கடும் சரிவில் அமெரிக்கா மாட்டிக்கொண்டபோது நான் என் பதின்மவயதில் இருந்தேன். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்குள் ஜப்பானில் அணுகுண்டுகளை வீசியெறிந்துவிட்டது அமெரிக்கா. எனக்கு 23 வயதாகும் போது சோவியத் யூனியனோடு பனிப்போர் ஆரம்பமானது. போர், நோய், இனவெறி மூன்றுக்கும் என் நண்பர்களையும் உறவினர்களையும் இழந்திருக்கிறேன். என் உடல் முழுக்க வலி நிறைந்திருக்கிறது.நடந்துசெல்லும்போது நியூயார்க் வீதிகளில் வீடற்றவர்களையும், உணவுக்காக கை நீட்டுபவர்களையும் அதே உணவுக்காக உடலை விற்பவர்களையும் போதை மருந்துக்கும் மதுவுக்கும் அடிமையானவர்களையும் மன நோயாளிகளையும் தினம் தினம் காண்கிறேன். என் மனம் முழுக்க வலி நிரம்பியிருக்கிறது. வலியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அது என்மீது திணிக்கப்பட்டிருக்கிறது.'

லொரைன் தனது நாடகங்களை எழுத ஆரம்பித்தபோது அரசியல் ஆய்வாளர்களும் சிந்தனையாளர்களும் ஒரு முக்கிய முடிவுக்கு வந்திருந்தனர். அந்த முடிவு இதுதான். ‘உலகம் குழப்பமானது. அது நம் புரிதலுக்கு அப்பாற் பட்டது. இனி உறுதியான நிலைப்பாட்டை எதைக் குறித்தும் நம்மால் எடுக்க முடியாது. நம்மைச் சுற்றி நடப்பவற்றை சரி, தவறு என்னும் எளிய வகைமைக்குள் அடக்கிவிடமுடியாது. உலகம் ஒரு பெரிய புதிர்.'

லொரைன் இதை ஏற்க மறுத்தார். `தொடர்பில்லாத ஒரு தூரத்து ஆப்பிரிக்க நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு வெள்ளையுலகுக்கு உரிமை இல்லை என்று நான் சொன்னால் அதை உங்களால் விளங்கிக்கொள்ளமுடிவில்லையா...நான் சொல்வதில் ஏதாவது தத்துவார்த்த குறை உள்ளதா... கறுப்பர்களை ஆள்வது எங்கள் கடமை. அந்தக் கடமையை எங்களுக்கு இறைவன் அளித்துள்ளார் என்று ஒரு காலனிய அதிகாரி அறிவித்தால் அவர் சொல்வதை நீங்கள் ஏற்பீர்களா, மறுப்பீர்களா அல்லது ‘கருத்து இல்லை‘ என்பீர்களா?

சரிக்கும் தவற்றுக்கும் நீதிக்கும் அநீதிக்கும் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் உண்மைக்கும் பொய்க்கும் இடையில் ஒன்றைத் தேர்வு செய்வதில் உங்களுக்கு ஏன் மயக்கம் ஏற்பட வேண்டும்? இதில் எது உங்களுக்குச் சிக்கலானதாக இருக்கிறது? எது விளங்கிக்கொள்ளமுடியாததாக இருக்கிறது? ஒருபக்கம் காலனியாதிக்கமும் மற்றொரு பக்கம் அதற்கு எதிரான அரசியலும் திரண்டு நிற்கும்போது இரண்டு பக்கங்களிலும் நியாயம் உண்டு என்றோ இரண்டு பக்கங்களிலும் நியாயம் இல்லை என்றோ சொல்வது சாத்தி யமா... இப்படியான தருணங்களில் உங்களால் மெய்யாகவே நிலைப்பாடு எடுக்க முடிவில்லை என்றால் அது உலகின் பிரச்னையா அல்லது உங்களுடையதா... உலகம் குழம்பிக்கிடக்கிறதா அல்லது நீங்களா, உலகம் பெரும்புதிரா அல்லது அதைக் காணும் நீங்களா...

ஒரு கறுத்த கழுத்தை மிதிப்பதற்கு வெள்ளைக்காலுக்கு ஏதேனும் நியாயம் இருக்கும் என்று என்னால் யோசிக்கக்கூட முடியாது. என் அரசியல் பார்வை தெளிவானது. நீங்கள் வெள்ளையர்களின் வன்முறையைப் பற்றி பேச மாட்டீர்கள் என்றால் அதற்கு எதிரான கறுப்பர்களின் வன்முறையை நான் பேசமாட்டேன். வெள்ளை வன்முறைக்கு நியாயம் உண்டு என்று நீங்கள் வாதிடுவீர்களேயானால் கறுப்பு வன்முறைக் கான நூறு நியாயங்களை என்னால் அடுக்க முடியும்' என்கிறார் லொரைன்.

வெள்ளையர்களும் கறுப்பர்களும் கைகுலுக்கி கொள்ள வேண்டும், மனம் திறந்து ஒருவரோடு ஒருவர் உரையாட வேண்டும் என்று மார்டின் லூதர் மென் பிரசாரம் மேற்கொண்டுவந்த நேரத்தில் அவருடைய சமகாலத்தவரான லொரைன் கறுப்பர்களின் தீவிர போராட்ட அரசியலை வெளிப் படையாக ஆதரித்துவந்தார். இது கிங்குக்கும் தெரியும். என்றாலும் லொரைனை அவர் ஓர் எதிர்சக்தியாகக் காணவில்லை. ‘லொரைன் உறுதியான நிலைப்பாடு கொண்டவர். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கூர்மையாக அவதானிப்பதோடு மிகுந்த அக்கறையோடு எழுத்தில் கொண்டுவருபவரும்கூட. அவருடைய எழுத்தாற்றலைக் கண்டு எவ்வளவு வியக்கிறேனா அதே அளவுக்கு அவருடைய ஆன்மாவின் ஆற்றலைக் கண்டும் வியக்கிறேன்’ என்கிறார் மார்டின் லூதர் கிங்.

கிங் குறித்தும் அவர் முன்னெடுத்த அகிம்சை சிவில் இயக்கம் குறித்தும் லொரைன் கொண்டிருநத பார்வை எத்தகையது... ‘அவர்களை ஆதரிக்கிறேன். அவர்களுக்குக் கரவொலி எழுப்புகிறேன். அதேநேரம், அவர்கள் செய்துவருவது போதுமானது என்று என்னால் சொல்ல முடியாது.  அரசியல் அதிகாரம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. அந்த அரசியல் அதிகாரம் கறுப்பர்களுக்கும் கிடைக்கும்வரை நிலைமை மாறாது.

வெள்ளையர்களைப் போல் கறுப்பர் களுக்கு அரசியல் அதிகாரம் இயல்பாகக் கிடைத்துவிடாது. பேச்சுவார்த்தை மூலம் பெற முடியாது. கடினமாக உழைத்துப் பெற முடியாது. இறைஞ்சுவதால் பலனில்லை. அடிபணிவது உதவாது. நாங்கள் உங்களை யெல்லாம் மன்னித்து விட்டோம் என்று சொல்வதன்மூலம் நாம் உயரமானவர்களாகவும் உன்னதமானவர்களாகவும் வேண்டுமானால் மாறலாமே ஒழிய, நம் நிலைமை மாறாது. நமக்குரிய அரசியல் அதிகாரத்தை நாம் பெறுவதற்கு ஒரே வழி, போராடுவது மட்டும்தான். நம் ரத்தம் சிந்தி, நம் உயிரைக் கொடுத்து, நம் இளைஞர்களின் கனவுகளைப் பலிகொடுத்து, நம் எதிர்காலத்தைப் பணயம் வைத்து, அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே நாம் இழந்த அதிகாரத்தைப் பெற முடியும்' என்று அழுத்தமாக வலியுறுத்துகிறார் லொரைன். அந்த வகையில், பிற்காலத்தில் தோன்றிய கருஞ்சிறுத்தை போன்ற தீவிர அரசியல் இயக்கங்களுக்கான முன்னோடி என்று லொரைனை அழைக்கமுடியும்.

34 வயது வரை மட்டுமே வாழ்ந்த லொரைன் அந்தக் குறுகிய காலத்துக்குள் கறுப்பர்கள் விடுதலை மட்டுமின்றி, காலனி நாடுகளின் விடுதலை, பாலினச் சமத்துவம், பாலியல் சுதந்திரம் ஆகியவற்றுக்காகவும் தெளிவாகக் குரல் கொடுத்திருக்கிறார். லொரைனின் நெஞ்சில் இருந்து கிளம்பிப் பரவிய உன்னதமான தெளிவு அது.

கழுதைப்புலிகளின் காட்டை யானைகள் அபகரித்துக் கொள் வதை லொரைனின் எழுத்துகள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு