Published:Updated:

புதிய அடையாளம்... மாஸ்க்குகள் கடந்துவந்த பாதை!

மாஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
மாஸ்க்

வரலாறு

புதிய அடையாளம்... மாஸ்க்குகள் கடந்துவந்த பாதை!

வரலாறு

Published:Updated:
மாஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
மாஸ்க்

“நம்முடைய நகரம் தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியானது நம் சுகாதாரத்துறையின் பலத்தை விஞ்சியது. எனவே, அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணியுங்கள். உங்களைக் காப்பதற்காக மட்டுமல்ல; உங்கள் குழந்தைகள், மனைவியை வைரஸிடமிருந்தும் நிமோனியாவிடமிருந்தும் மரணத்திட மிருந்தும் காக்கவும்கூட.” - சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அண்மையில் தன் ட்விட்டர் பக்கத்தில் ‘ஷேர்’ செய்திருந்த ட்வீட் இது.

மேலோட்டமாகப் படித்தால் அன்றாட மாஸ்க் விழிப்புணர்வு விளம்பரங்களில் ஒன்றாகவே தோன்றும். ஆனால், இது முதன்முதலில் வெளியான தேதியைக் கொஞ்சம் தேடிப்பார்த்தால், நூறாண்டுகளுக்கும் மேலாக மாஸ்க்குகள் நம்மோடு எப்படி ஒன்றிப் பயணிக்கின்றன என்பது புரியும். ஆம், இந்தச் செய்தி முதன்முதலில் வெளியிடப்பட்டது 1918-ல். ஸ்பானிஷ் ஃப்ளூவுக்கு எதிராக அமெரிக்கா போராடிக் கொண்டிருந்தபோது செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட எச்சரிக்கைக் குறிப்பு இது. இப்போதும் இந்த எச்சரிக்கை அட்சர சுத்தமாக அப்படியே பொருந்தவே, செஞ்சிலுவைச் சங்கம் இதை மீண்டும் பகிர்ந்திருந்தது.

மாஸ்க் இல்லாத உலகை அல்ல; ஊரைக்கூட இப்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நம்மோடு அவை ஒன்றிவிட்டன. தடுப்பு மருந்து எப்போது வரும் என்றே தெரியாத இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், கொரோனாவை எதிர்த்துப் போராட நம்மிடமிருக்கும் ஒரே ஆயுதமல்ல... தற்காப்பு, இந்த மாஸ்க் மட்டும்தான். நவரசம் காட்டிய முகத்தை இந்த துணிக் கவசங்கள்தான் இன்று விதவிதமாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இந்த 10 இன்ச் துணியில் இன்னும் என்னவெல்லாம் சுவாரஸ்யங்கள் நடக்கப்போகின்றன எனத் தெரிய வில்லை. ஆனால், இதன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால், அறிவியல் தொடங்கி அரசியல் வரை பல சுவாரஸ்யங்கள் இந்த மாஸ்க்கைச் சுற்றி நிகழ்ந்திருக்கின்றன.

புதிய அடையாளம்... மாஸ்க்குகள் கடந்துவந்த பாதை!

பறவை மனிதன் டு பருத்தி துணி

கொள்ளை நோய்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகத் துணியை முகக் கவசமாகக் கட்டிக்கொள்ளும் நடைமுறை பண்டைய ஐரோப்பியாவிலேயே வழக்கமாக இருந்திருக்கிறது. பறவையின் அலகு போன்ற வடிவமைப்பு கொண்ட முகக் கவசங்களை 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிளேக்குக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அணிந்திருப்பதாகச் சித்திரிக்கும் ஓவியம் உலகப் பிரபலம். இதில் உடலை முழுமையாகத் துணியாலும், முகத்தைப் பறவை அலகு போன்ற கவசத்தாலும் மூடியிருப்பார் மருத்துவர். கூடவே நோயாளியை தொலைவிலிருந்து (சோஷியல் டிஸ்டன்ஸிங்!) சிகிச்சையளிக்க ஒரு நீண்ட கோல். இந்த உடையின் சிறப்பம்சமே அந்தப் பறவை மூக்குதான். அழகுக்காக மட்டுமல்ல; அதன்பின் இருந்த லாஜிக்குக்காகவும்.

பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள்தான் நோயை உண்டாக்குக்கின்றன என நிரூபிக்கப்படுவதற்கு முன்புவரை மருத்துவ உலகில் `மியாஸ்மா தியரி’ என்ற ஒன்று புழக்கத்தில் இருந்தது. அதாவது, மனிதனைத் தாக்கும் நோய்கள் அனைத்தும் ஒருவிதமான துர்நாற்றத்தாலேயே ஏற்படுகின்றன. இவற்றை மனிதன் சுவாசிக்கும் பட்சத்தில் நோய்வாய்ப்படுகிறான் என்பதே அந்த லாஜிக். இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை யென்றாலும்கூட 19-ம் நூற்றாண்டு வரை இந்த மியாஸ்மா தியரியே மருத்துவ உலகால் ஏற்றுக்கொள்ளப் பட்டு வந்தது. ஆனால், நோய்களுக்குக் காரணம் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளே தவிர, எவ்வித தீய காற்றோ, துர்நாற்றமோ இல்லையென அறிவியல் பின்னர் நிரூபிக்க... இந்த மியாஸ்மா தியரி முடிவுக்கு வந்தது. இந்த வரலாறெல்லாம் எதற்கு என்கிறீர்களா? அந்தப் பறவை மூக்கு மாஸ்க் உருவானதே இந்த மியாஸ் மாவைக் காலி செய்யத்தான். அதாவது, அந்தப் பறவை மூக்கு மாஸ்க் முகத்தை முழுமையாக மூடுவதோடு, இந்த மியாஸ்மாவையும் எதிர்கொள்ளும். இதற்காகக் கிராம்பு உள்ளிட்ட நறுமணப்பொருள்கள் உள்ளே அடைத்து வைக்கப் பட்டிருக்கும். வெளியே உள்ள துர்நாற்றத்தை, இந்த நறுமணம் எதிர்கொள்ளும்பட்சத்தில் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்பதே அந்தப் பறவை மாஸ்க்கின் லாஜிக்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படியாக நுண்கிருமிகள் குறித்து மருத்துவ உலகம் அறிந்து கொண்டதும்தான் நவீன மாஸ்க்கு களுக்கான தேவை உருவானது. குறிப்பாக, அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பருத்தித் துணியால் ஆன முகக் கவசங்களை அணியத் தொடங்கினர். மருத்துவர் களிடையே அறுவைசிகிச்சை அரங்குகளில் மட்டுமே பயன் பாட்டிலிருந்த, மாஸ்க் அதற்கு வெளியே மக்களிடையேயும் பரவலாகத் தொடங்கியது 1910-க்குப் பிறகுதான். காரணம், அப்போது உலுகை உலுக்கிய ஒரு கொள்ளை நோய்.

சீனாவின் மஞ்சூரியா பகுதியில் 1910-ம் ஆண்டில் திடீரென ஒரு கொள்ளை நோய் பரவியது. பாதிக்கப்பட்ட அனைவருமே கொத்துக் கொத்தாக இறந்தனர். என்ன காரணம் என்றே தெரியாமல் சீனா தவிக்க... உடனே, `இது என்னவெனப் பாருங்கள்!’ எனச் சொல்லி மருத்துவர் வூ லியான் டே-வை அனுப்பியது அரசு. இந்த நோய் நிமோனிக் பிளேக் எனக் கண்டறிந்தார் வூ. நோய் ஒருவரிட மிருந்து ஒருவருக்கு காற்றின் மூலம் பரவுகிறது எனவும் எடுத்துச் சொன்னார். இதைத் தடுக்க மேற்கத்திய நாடுகளில் தான் பார்த்த இன்னொரு விஷயத்தையும் கையில் எடுத்தார். அது மாஸ்க். மருத்துவர்கள் ஐரோப்பியாவில் அணிந்திருந்த பருத்தி மாஸ்க்குகளின் வடிவமைப்பைக் கொஞ்சம் மாற்றி, அதில் மெல்லிய அடுக்குகளைச் சேர்த்தார். இன்று நாம் பயன்படுத்தும் நவீன மாஸ்க்குகளுக்கு இப்படித்தான் விதையிட்டார் வூ.

புதிய அடையாளம்... மாஸ்க்குகள் கடந்துவந்த பாதை!

இப்படி மாஸ்க் போட்டால் நிமோனிக் பிளேக்கிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம் என வூ சொன்னாலும், அதை மக்களிடையே கொண்டு சேர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. அப்போதுதான் ஒரு திருப்புமுனை சம்பவம் நடந்தது. மருத்துவர் வூ மேற்பார்வையிலிருந்த பிளேக் தடுப்புப்பணியைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரெஞ்ச் மருத்துவர் மெஸ்னி சீனாவுக்கு வந்திருந்தார். அவருக்கு மாஸ்க் பயன்பாட்டின் மீது சுத்தமாக நம்பிக்கையில்லை. எனவே, மாஸ்க் அணிவதைத் தவிர்த்தார். எந்தவித முகக்கவசமும் இல்லாமாலே நோயாளிகளைப் பார்வையிட்டார். விளைவு? பிளேக்கால் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தார். அடுத்து சீனாவின் டியான்ஜன் நகரத்திலும் ஒரு மருத்துவர் இதேபோல இறக்க, சீன மருத்துவ உலகம் அதிர்ந்தது. உடனே விழித்துக்கொண்டது சீனா. மருத்துவர் வூ சொன்ன மாஸ்க்குகள் உடனடியாக மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டன. முக்கிய ரயில்கள் நிறுத்தப்பட்டன. நோய் பாதிக்கப் பட்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் மொத்தமாக எரிக்கப்பட்டன. மக்களைக் கண்காணிக்க ராணுவம் களமிறக்கப்பட்டது. இப்படி 2 ஆண்டுகள் போராடி, 1911 இறுதியில் பிளேக்கை வென்றது சீனா. ஆனாலும் அதற்குள் நிமோனிக் பிளேக்குக்கு கிட்டத்தட்ட 60,000 பேர் இறந்திருந்தனர். இந்தப் பெருந்தொற்று நிகழ்ந்து உலகம் மூச்சுவிடுவதற்குள் அடுத்த சில ஆண்டுகளில் இன்னொரு பேரிடர் தொடங்கியது. அது ஸ்பானிஷ் ஃப்ளூ.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் ட்வீட் பற்றிப் பார்த்தோம் அல்லவா? அது இந்த ஸ்பானிஷ் ஃப்ளூ சமயத்தில் வெளியானதுதான். சீன மக்களிடையே மாஸ்க் கலாசாரம் பரவ நிமோனிக் பிளேக் காரணமாக இருந்தது. உலகின் பிற எல்லைகளுக்குப் பரவ ஸ்பானிஷ் ஃப்ளூ காரணமானது. 1918-ல் அமெரிக்காவில் தொடங்கிய இந்த வைரஸ், அடுத்த 2 ஆண்டுகளுக்கு உலகையே புரட்டிப்போட்டது. உலகில் மூன்றில் ஒருபகுதி மக்களை இது தாக்கியது. கிட்டத்தட்ட 5 கோடி பேரை பலிகொண்டது. அந்தச் சமயத்தில்தான் முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந் ததால், ஸ்பானிஷ் ஃப்ளூ காரணமாக அப்போது இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்றுவரையிலும்கூட தெரியவில்லை. இந்த ஸ்பானிஷ் ஃப்ளூ உலகம் முழுக்க மாஸ்க் விழிப்புணர்வு உண்டாகக் காரணமானது. அப்போதுதான் வெறும் தற்காப்புக்கானதாக மட்டுமன்றி, முதன்முதலில் நவீன மருத்துவ அறிவியலின் முகமாகவும் மாஸ்க் கருதப்பட்டது. அதேசமயம் இன்று மாஸ்க்கைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் சர்ச்சைகளும் அப்போதுதான் தொடங்கின.

சுதந்திரமா... உயிரா?

கொரோனா சமயத்தில் உலகளவில் அதிகம் கவனம் ஈர்த்த ஒரு தலைவர் என்றால், அது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்தான். அமெரிக்காவை கொரோனாவிடம் தவிக்க விட்டதற்காக மட்டுமல்ல; அறிவியலுக்குப் புறம்பான விஷயங் களைச் சொல்லி வதைப்பதற் காகவும்கூட. இன்று வரையிலும் (இந்த இதழ் அச்சுக்குப் போகும் வரை மட்டுமல்ல; அதற்குப் பின்னும்கூட அவர் சொல்ல வாய்ப்பில்லை!) அமெரிக்கர்களை மாஸ்க் அணியச் சொல்லி ட்ரம்ப் வலியுறுத்தவே இல்லை. அதற்கு அவர் காரணமாகச் சொல்வது, அது மக்களின் சுதந்திரம். இந்தத் தனிநபர் சுதந்திரம், அப்போதைய ஸ்பானிஷ் ஃப்ளூ காலத்திலிருந்து இப்போதைய கொரோனா காலம் வரை அமெரிக்கர் களிடம் மாட்டிக்கொண்டு முழியாய் முழிக்கிறது. 1918-ல் ஸ்பானிஷ் ஃப்ளூ தீவிரமாகப் பரவத் தொடங்கியதும் அமெரிக்காவின் பல நகரங்களில் கட்டாய மாஸ்க் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதன்படி மக்கள் அனைவரும் பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும். இல்லையெனில், அபராதம் அல்லது சிறை நிச்சயம்.

இந்தியர்களாகிய நமக்கு இந்த உத்தரவைப் படிக்கும்போது எவ்வித உறுத்தலும் இருக்காது. `இதிலென்ன இருக்கிறது... பெருந்தொற்றுக் காலத்தில் ஓர் அரசு இப்படிச் சொல்வதில் என்ன தவறு?’ எனத் தோன்றும். இந்தியர்களுக்கு மட்டுமல்ல; சீனா, ஜப்பான், தைவான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும்கூட இதே எண்ணம்தான் பிரதிபலிக்கும். ஆனால், அமெரிக்காவில் பொங்கியெழுந்து விடுவார்கள்; அப்படித்தான் 1918-ல் பொங்கியெழுந்தார்கள். இப்போது 2020-லும் பொங்கியெழுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களில் தவறாமல் இடம் பிடிக்கும் விஷயம், மேலே சொன்ன தனிநபர் சுதந்திரம்.

பொது இடங்களில் கட்டாய மாஸ்க் உத்தரவால், அமெரிக்காவில் தினம்தோறும் கடைகளில் உரிமை யாளர்களுக்கும், வாடிக்கையாளர் களுக்கும் சண்டை நடப்பதும் அது கைகலப்பில் முடிவதும் அங்கு, காலை எழுந்து காபி குடிப்பதுபோல சகஜமாகிவிட்டது.

இத்தனைக்கும் இந்தியா போல, அமெரிக்காவில் ஒட்டுமொத்த நாட்டுக்கும் சேர்த்து, அனைவரும் நாளையிலிருந்து மாஸ்க் போடுங்கள் என்றுகூட சொல்லப்படவில்லை. அந்தந்த மாகாண அரசுகள்தான் இதுகுறித்து முடிவெடுக்கின்றன. இருந்தும் சிலர் மாஸ்க் போட மறுத்து தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர்.

இது மாஸ்க்குக்கு மட்டுமல்ல; முதன்முதலில் அமெரிக்காவில் காரில் சீட் பெல்ட்டுகள் கட்டாயம் ஆக்கப்பட்டபோதும்கூட இதே வாதம்தான் முன்வைக்கப்பட்டது. `என் கார்; என் சுதந்திரம்' என எதிர்த்தனர். ஆனால், இன்றைக்கு சீட் பெல்ட் என்பது மிக இயல்பான ஒன்றாகிவிட்டது அல்லவா?

ஆனால், மாஸ்க் மட்டும் இன்னும் அப்படியாகவில்லை. காரணம், தனிநபர் சுதந்திரத்தோடு சேர்த்து இன்னும் சில வாதங்களும் மாஸ்க்கை எதிர்ப்பதற்குச் சேர்ந்துவிட்டன. இந்த எதிர்ப்புக்கெல்லாம் காரணம் அமெரிக்கர்களின் உளவியல்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

புதிய அடையாளம்... மாஸ்க்குகள் கடந்துவந்த பாதை!

உதாரணமாக, ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை சமூகங்களுக்கிடையே நல்ல பிணைப்பு இருக்கிறது. எந்தப் பிரச்னை என்றாலும், அதை ஒட்டு மொத்த சமூகமாக ஒன்றிணைந்து எதிர்கொள்வதன் மூலம் அதிலிருந்து மீள முடியும் என்ற உளவியல் புரிதல் இங்கு இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் தனிநபர் வாதத்துக்கே (Individualism) மக்கள் பழக்கப் பட்டிருக்கின்றனர்.

இதனால் எந்த உத்தரவுகளுக்காகவும் தங்கள் தனிநபர் சுதந்திரத்தை விட்டுத் தர அவர்கள் தயாராக இல்லை. இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய மான விஷயம் இந்த எதிர்ப்புகள் ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் எதிர்ப்பு அல்ல; குறிப்பிட்ட சில விகிதத்தினரே இந்தளவு தீவிர எதிர்ப்பாளர்களாக இருந்தனர்; இருக்கின்றனர். பிறர் அறிவியல் பக்கம் நிற்கத் தயாராக இருக்கின்றனர்.

கூடவே, சமூக வலைதளங்களின் தயவால் மாஸ்க்கைச் சுற்றி நிறைய வதந்திகளும் பரவவே, எதிர்ப் பாளர்களுக்கு தனிநபர் சுதந்திரத்தோடு இதுவும் ஒரு காரணமாகிவிட்டது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளிலும் மாஸ்க்குக்கு எதிரான பிரசாரங்கள், போராட்டங்கள் நடந்தாலும், இந்த மாஸ்க் விஷயம் அமெரிக்காவில் தீவிரமாக இன்னும் சில அரசியல் காரணங்களும் இருக்கின்றன.

புதிய அடையாளம்... மாஸ்க்குகள் கடந்துவந்த பாதை!

முக்கியமான காரணம் ட்ரம்ப். ஆரம்பத்திலிருந்தே கொரோனாவை சீனாவின் தாக்குதலாகவும், ஏமாற்று வேலையாகவுமே சித்திரித்து வந்ததால், இந்த எதிர்ப்பாளர்களுக்கு அதுவும் வசதியாகப் போய்விட்டது. அடுத்தது, உலக சுகாதார மையம் செய்த அறிவுறுத்தல். கொரோனாவின் ஆரம்பத்தில், `கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைப் பார்த்துக்கொள்பவர் களைத் தவிர வேறும் யாரும் மாஸ்க் அணிய வேண்டாம். ஏனெனில், மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது' எனத் தெரிவித் திருந்தது. ஜூன் மாதத்திலேயே இதை மாற்றிக்கொண்டு, `மக்கள் அனைவரும் பொதுவெளியில் மாஸ்க் அணிய வேண்டும்' என அறிவித்தது. இருந்தும் இதையும் மாஸ்க் எதிர்ப்பாளர்கள் ஆரம்பத்தில் வாதமாக வைத்துவந்தனர்.

அடக்குமுறைக்கு எதிரான முகம்

அறிவியலுக்கு எதிராக மட்டுமன்றி, அடக்குமுறைக்கு எதிராகவும் மாஸ்க் மாறலாம் எனக் காட்டியவர்கள் ஹாங்காங் கிளர்ச்சியாளர்கள். கடந்த வருடம் ஹாங்காங்கில் கொண்டுவரவிருந்த ஒரு மசோதாவை எதிர்த்து நகரமெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. வெளிப்படையான தேர்தல்களை வலியுறுத்தி, 2014 முதல் ஹாங்காங் மக்கள் குடையை வைத்து செய்த போராட்டம் உலக பிரபலம். `குடைப்புரட்சி' என்றே இது அழைக்கப்பட்டது. இந்தக் குடை போல கடந்த ஆண்டு ஹாங்காங் போராட்டத்தில் இடம்பெற்ற பிரதானமான ஒரு விஷயம் மாஸ்க். ஏற்கெனவே பார்த்தது போல சீனா, ஹாங்காங் உள்ளிட்ட பிரதேசங்களில் மாஸ்க் என்பது மிக இயல்பானது. ஆனால், இந்தமுறை அவர்கள் அணிந்திருந்த மாஸ்க், சீனாவின் அடக்குமுறைக்கு எதிரான ஆயுதம்.

மக்களின் மீதான சீன அரசின் தீவிர கண்காணிப்பு என்பது உலகறிந்த ரகசியம். `வி சாட்' உள்ளிட்ட ஆப்ஸ் தொடங்கி தெருவெங்கும் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்கள் வரை, மக்களைக் கண்காணிக்க டெக்னாலஜி இதுவரை அளித்திருக்கும் அத்தனை வழிகளையும் கையாள்கிறது சீனா.

ஃபேஷியல் ரெககனைஷன் (Facial recognition) தொழில்நுட்பம் இந்தக் கண்காணிப்பை வேறொரு பரிமாணத்துக்கே எடுத்துச் சென்றது. இதன்மூலம் சிசிடிவியில் பதிவாகும் முகங்களை டேட்டாபேஸோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களின் ஜாதகத்தையே எடுக்க முடியும். இது ஹாங்காங் கிளர்ச்சியாளர்களுக்கு சிக்கலானது. கிளர்ச்சியாளர்களை சீன அரசு அடையாளம் கண்டு கொண்டால், அவர்களை நிச்சயம் ஒடுக்கும். இதிலிருந்து தப்பிக்கத்தான் பலரும் மாஸ்க்கை கையில் எடுத்தனர். இப்படி அடக்குறைக்கு எதிராகவும் மாஸ்க் நவீன காலத்தில் குறியீடாகிப் போனது. இத்தோடு மட்டுமல்ல; சூழலியல் சீர்கேட்டுக்கு எதிரான போராட்டத்திலும் மாஸ்க்குக்குப் பங்கு உண்டு.

தூக்கியெறியும் கலாசாரம்

முதன்முதலில் 19-ம் நூற்றாண்டில் பருத்தி துணியிலான மாஸ்க் உருவானதைப் பார்த்தோம் அல்லவா. 1960-கள் வரை அதுதான் பெருமளவில் புழக்கத்தில் இருந்தது. அதை மீண்டும் மீண்டும் துவைத்துப் பயன்படுத்தலாம். இதற்கு முடிவுகட்டும் விதமாக வந்தவைதான் இன்று நாம் பயன்படுத்தும் சிந்தடிக் சர்ஜிக்கல் மாஸ்க்குகள். 1960-களில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பொருள்களின் உற்பத்தியும் நுகர்வும் அதிகமானது. பிளாஸ்டிக் கப்கள், பைகள் எல்லாம் இதன் நீட்சிதான். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் மாஸ்க்குகளால் கிருமிகளிடமிருந்து கூடுதல் பாதுகாப்பு எனச் சொல்லி இந்த சிங்கிள் யூஸ் சர்ஜிக்கல் மாஸ்க்குகள் சந்தையை நிறைத்தன. சிங்கிள் யூஸ் பொருள்களை மருத்துவத் துறையோடு சேர்த்து பிற துறையினரும் அதிகம் பயன்படுத்தவே குப்பைகள் அதிகரித்து, அது மிகப்பெரும் பிரச்னையாகிப்போனது. எனவே, இந்த Throwaway culture சூழலியலுக்கு எதிரானது எனச் சொல்லி இதற்கு முடிவுகட்டச் சொல்கின்றனர் சூழலியலாளர்கள். கொரோனாவின் ஆரம்பத்திலேயே மக்களை மாஸ்க் அணியச் சொல்ல அரசாங்கங்கள் அறிவுறுத்தாதற்குக் காரணமும் இதே Throwaway culture-தான். ஒருவேளை மக்கள் N95 மாஸ்க்குகளையோ, சர்ஜிக்கல் மாஸ்க்குகளையோ வாங்கிக் குவித்துவிட்டால், முன்களப்பணியாளர்களுக்கு அது சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதே அந்தத் தயக்கத்துக்குக் காரணம். இதுவே மீண்டும் மீண்டும் பயன் படுத்தும் ரீ-யூசபிள் மாஸ்க்குகள் என்றால், பிரச்னையே இருந்திருக்காது என்கின்றனர் நிபுணர்கள். மாஸ்க்கு களுக்கும் சூழலியலுக்குமான தொடர்பு இதோடு முடியவில்லை.

சீனாவும் இந்தியாவும் இப்போது எதிர்கொண்டுவரும் மிகப்பெரிய பிரச்னை கொரோனா மட்டுமல்ல; ஆண்டுதோறும் மக்களின் நுரையீரலைப் பதம்பார்க்கும் காற்று மாசுபாடும்தான்.

இந்தக் காற்று மாசுபாட்டுக்கு எதிராக அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தவும் மாஸ்க்குகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. உதாரணமாக, டெல்லியில் 2016-ம் ஆண்டு காற்று மாசுபாட்டால் கடும் புகைமூட்டம் இருந்தபோது அங்கிருந்த மக்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இவை ஸ்மோக் செல்ஃபி (smog selfie) என்றே அழைக்கப்பட்டன. இன்று சென்னை, டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் கொரோனாவுக்கு முன்பே N95 மாஸ்க்குகள் பயன் பாட்டில் இருந்ததற்குக் காரணமும் இதே காற்று மாசுபாடுதான். இப்படிச் சூழலியல் பிரச்னையை நமக்கு நினைவூட்டும் விஷயமாகவும் மாஸ்க் மாறிப்போயிருக்கிறது.

மாஸ்க்குகளின் மறுமலர்ச்சி

வரலாறு நெடுகிலும் மருத்துவம், அரசியல், சூழலியல் எனப் பல்வேறு துறைகள் மாஸ்க்கை தங்களுக்கேற்ப மெருகேற்றி வந்துள்ளன. அதில் மிக சுவாரஸ்யமான துறை ஃபேஷன். கொரோனாவுக்கு முன்பே பல ஆசிய நாடுகளிலும் மாஸ்க் ஒரு ஃபேஷன் ஆக்ஸசரியாகவே இருந்தது. பல்வேறு ஃபேஷன் ஷோக்களில் மாஸ்க்குகள் இடம் பெற்றுள்ளன. அதிகமான வரவேற்பும், அதிகமான நுகர்வும் இருக்கும் இந்தக் கொரோனா சமயத்தில், ஃபேஷன் துறையின் ஆதிக்கம் மாஸ்க்குகளில் இன்னும் அதிகரித்துள்ளது. விதவிதமான வடிவங்கள், நேர்த்தியான டிசைன்கள் எனப் புதுப்புது வடிவமெடுத்து வருகின்றன. இத்தோடு சேர்த்து சமகால விஷயங்களும் மாஸ்க்குகளில் தாக்கம் செலுத்துகின்றன.

உதாரணமாக அரசியல், விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்களின் உருவங்கள் மாஸ்க்கில் இடம்பெற்றுவருகின்றன. தேர்தல் பிரசாரங்களிலும், அரசியல் கட்சிகளின் போராட்டங்களிலும்கூட மாஸ்க்குகள் இடம்பிடித்து வருகின்றன. கூடவே இயற்கைப் பொருள்கள் மீதான நுகர்வு மோகத்தால் வெட்டிவேர் மாஸ்க், கற்றாழை மாஸ்க், மஞ்சள் மாஸ்க் என விதவிதமான மாஸ்க்குகளும் சந்தையில் நுழையத் தொடங்கி யிருக்கின்றன. நுகர்வோரைக் கவர எதிர்காலத்தில் இப்படி இன்னும் பல புதுமைகள் மாஸ்க்கைச் சுற்றி நடக்கலாம். இப்படி ஒரு நூற்றாண்டில் ஒவ்வொரு துறைக்குமாக பல்வேறு அவதாரங்கள் எடுத்திருக்கிறது மாஸ்க்.

இந்த 21-ம் நூற்றாண்டில் இனி முகம் மட்டுமே அடையாளம் அல்ல... நாம் அணிந்திருக்கும் மாஸ்க்கும்தான்!