Published:Updated:

பாரதிபுத்திரன் - வனங்களை வளர்த்துச் செல்லும் பேராறு... பேராசிரியருக்கு மாணவர்களின் கைம்மாறு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சா.பாலுசாமி
சா.பாலுசாமி ( ஜெனிக் கமலேசன் )

இத்தகைய ஒரு தொகுப்பினைக் கொண்டுவந்திருப்பதன் மூலம், தங்கள் ஆசிரியருக்குச் சிறப்புச் சேர்த்திருப்பதோடு, தங்களையும் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் பாலுசாமியின் மாணவர்கள்.

இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், பேராசிரியராகப் பணியாற்றிய மைசூரு பல்கலைக்கழகத்திலிருந்து விடைபெற்றபோது, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அவரை அமரவைத்து, ரயில் நிலையம் வரை அந்த ரதத்தை இழுத்துச் சென்று மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு விடைகொடுத்த வரலாற்றை நாம் அறிவோம். இன்றும் பல பள்ளிகளில் இடமாற்றலாகிச் செல்லும் தங்கள் ஆசிரியர்களைப் பிரிய விரும்பாத மாணவர்கள் கதறி அழுதபடி அவர்களுக்கு விடைகொடுக்கும் காணொலிகளைப் பார்த்துக் கலங்கியிருப்போம்!

பாரதிபுத்திரன் - வனங்களை வளர்த்துச் செல்லும் பேராறு
பாரதிபுத்திரன் - வனங்களை வளர்த்துச் செல்லும் பேராறு
இப்படி ஆசிரியர் - மாணவர் உறவின் உன்னதத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழ்ப் பேராசிரியர், ஆய்வாளர் பாரதிபுத்திரன் என்ற சா.பாலுசாமியின் பணிநிறைவை முன்னிட்டு, ‘பாரதிபுத்திரன் - வனங்களை வளர்த்துச் செல்லும் பேராறு’ என்ற பாராட்டுத் தொகுப்பை அவரது மாணவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். பாரதிபுத்திரன் பற்றிய கட்டுரைகளாக மட்டுமல்லாமல், கலைஞர்களின் படைப்புகள் - அறிஞர்களின் கட்டுரைகள் என ஒரு கலை, ஆய்வுப் பெட்டகமாக உருவாகியிருக்கிறது இந்தப் பெருந்தொகுப்பு.

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் சா.பாலுசாமி, அடிப்படையில் ஓர் இலக்கியவாதி. ஒரு கலை வரலாற்று ஆய்வாளராகத் தமிழ் ஓவியம், சிற்பம், கட்டடக்கலை ஆகியவை குறித்து மெச்சத் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். பல்லவ, விஜயநகர, நாயக்கர் காலக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் பாலுசாமி, தொடர் கள ஆய்வு வழியே தமிழகக் கலைகளில் ஆழ்ந்த புலமை பெற்றவர்; இந்தியக் கலைகள் குறித்த பரந்துபட்ட பார்வையைக் கொண்டவர்; சிற்பம், ஓவியம், கட்டிடம் ஆகிய நுண்கலைகளை இலக்கியத்துடன் ஒப்பிட்டுக் கலைக்கோட்பாடுகளை வடிவமைத்து, கலையியல் ஆய்வில் ‘நம் பார்வை விரிவுக்கான புதிய பூபாள’மாகத் திகழ்பவர்.

சா.பாலுசாமி
சா.பாலுசாமி
ஜெனிக் கமலேசன்

பள்ளிக்காலத்தில் பாரதியார் பாடல்களைப் படித்து அவர்மீது கொண்ட தீவிர ஈடுபாட்டால் தம் பெயரைப் ‘பாரதிபுத்திரன்’ என்று மாற்றிக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கியதன் மூலம் படைப்புலகில் நுழைந்தார். பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள், தலித்தியம் பேசுபவர்கள், தேசியவாதிகள், பெண்ணியவாதிகள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாரதியாரை நோக்கிய பல்வேறு விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் கேள்வி – பதில் வடிவில் பாரதியை அறிமுகப்படுத்தும் ‘தம்பி, – நான் ஏது செய்வேனடா?’ என்ற இவரது நூல் பாரதியியலுக்கு மிக முக்கியமான பங்களிப்பாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில், கல்லூரி வனத்தின் செஞ்சந்தன மரத்தடியில், ‘வனம்’ என்ற கவிதை வாசிப்புக் கூடுகையை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாலுசாமி ஒருங்கிணைத்துவந்தார். பேராசிரியர்கள், மாணவர்கள், கல்விப் புலம் சாராதவர்கள் எனச் சகலரும் பங்கெடுத்த அந்தக் கூடுகை ஏராளமானோரின் கவி மனத்தைத் திறந்துவிட்டது. 13 ஆண்டுகள் தொடர்ந்த இந்தக் கவிதைக் கூடலில் பங்கெடுத்தவர்களின் கவிதைகள் ‘சுபமங்களா’, ‘குமுதம்’ போன்ற இதழ்களில் வெளியாகின. அந்தக் காலகட்டத்தின் முதன்மை இலக்கியவாதிகள் வனத்துக்குத் தொடர்ச்சியாக வருகை தந்திருக்கிறார்கள். அந்தக் கூடுகைகளில் பங்கெடுத்தவர்களில் 25 பேர் தனி கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். ‘வன’த்தைப் பின்பற்றி, ‘மருதம்’, ‘கவிமாலை’, ‘தேன்கூடு’, ‘நெய்தல்’ எனப் பல்வேறு கவிதை அமைப்புகள் தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் தொடங்கப்பட்டன.

சென்னைக் கிறித்துவக் கல்லூரி
சென்னைக் கிறித்துவக் கல்லூரி

இளங்கலைத் தமிழ் இலக்கியத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்ற பாலுசாமி, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ‘வள்ளலாரின் மனிதநேயம்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நெறிஞர் (எம்.பில்.) பட்டம் பெற்றார். 1988-ல் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தவர், தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வினை 1990-ல் தொடங்குகிறார். தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி, 6 ஆண்டுக்கால உழைப்பில் ‘நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்’ என்கிற தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வினை நிறைவுசெய்தார். 2014-ல் இது நூலாக வெளியானபோது, “ஒரு வரலாற்றை மீள் பார்வைப் பார்க்கும்போது, கவனிக்க வேண்டிய முக்கியமான மக்கள் மனநிலை, வாழ்நிலை எதையும் விட்டுவைக்காமல் நூல் படைத்திருக்கிறார் பேராசிரியர் சா. பாலுசாமி” என்று பிரபஞ்சன் எழுதினார்.

நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்
நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்
“கம்பனின் குரலை ஆங்கிலத்தில் கேட்க முயற்சி செய்கிறேன்!”: மொழிபெயர்ப்பாளர் அர்ச்சனா வெங்கடேசன் பேட்டி

இலக்கியம், நாட்டுப்புறவியலிலும் ஈடுபாடுகொண்ட பாலுசாமி, கொல்லிமலைப் பழங்குடி மக்களின் பாடல்களைப் பதிப்பித்துள்ளார். படைப்பிலக்கியத்திலும் தமிழ்க் கலை சார்ந்த திறனாய்விலும் இவருடைய பங்களிப்பு கணிசமானது. தமிழகச் சுவரோவியங்கள் ஆவணத் திட்டம், சென்னை – மாமல்லபுரம் இடையிலான கிழக்குக் கடற்கரை மீனவர் வழக்காற்றியல், தாம்பரம் – அதன் சுற்றுப்புறத்தில் உலகமயமாக்கலின் தாக்கம் ஆகிய ஆய்வுத் திட்டங்களில் முக்கிய பங்களித்துள்ளார்.

மாமல்லபுரம் சிற்பத் தொகுதி பற்றி பாலுசாமியின் 13 ஆண்டுக்கால உழைப்பில் உருவான ‘அர்ச்சுனன் தபசு’ நூல், தமிழ் ஆய்வுலகில் ஒரு சாதனை. “'அர்ச்சுனன் தபசு' நூல்போல் இதுவரை தமிழில் தனிச் சிற்பத் தொகுதி குறித்து ஒரு நூல் வந்ததில்லை; மாமல்லபுரம் பற்றி எழுதப்பட்ட எந்த ஒரு ஆங்கிலப் புத்தகத்திலும்கூட இவ்வளவு விரிவாக எழுதியதில்லை. கலையிலும் இலக்கியத்திலும் வரலாற்றிலும் தோய்ந்த ஒருவரால்தான் இத்தகைய ஆய்வைச் செய்ய முடியும். பாரதிபுத்திரன் அவர்களின் கலை மேதைமையின் துளிதான் இந்நூல்” என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலை வியக்கிறார்.

அர்ச்சுனன் தபசு
அர்ச்சுனன் தபசு

தமிழகச் சுவரோவியங்கள் குறித்த நூலான ‘சித்திரமாடம்’ (தொகுப்பாசிரியர்), ‘மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்’, ‘சித்திரக்கூடம்: திருப்புடைமருதூர் ஓவியங்கள்’ (‘ஆனந்த விகடன்’ விருது 2017) எனத் தமிழ்க் கலை, வரலாறு, பண்பாட்டு ஆய்வுகளின் எல்லையை தன்னுடைய பங்களிப்புகளால் பாலுசாமி விரித்துச் சென்றார்.

“பாரதியை, பாரதிதாசனை அவரைப் போல் பயின்றவர்கள், உணர்ந்தவர்கள், உரைத்தவர்கள் தமிழ்நாட்டில் ஒரு சிலர்தான். கலையியல் அறிஞராக, தொல்லியல் அறிஞராக நம்மிடையே வீறார்ந்து விளங்கும் பெருந்தகையாகவும் அவர் சிறந்து திகழுகின்றார். பண்டை இலக்கிய இலக்கணம் தொட்டு நவீன இலக்கியங்கள் வரை நன்கறிந்த பேராசிரியராகவும், ஆற்றல் மிக்க சொற்பொழிவாளராகவும், அரிதினும் அரிதாகத் தோன்றும் ஆராய்ச்சியாளராகவும், தனித்தன்மை வாய்ந்த அறிஞராகவும் தமிழ்ச் சமூகம் அவரைப் பெற்றிருப்பது ஒரு பெரும் பேறாகும்” என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறைத் தலைவரும், ஆய்வாளருமான ய. மணிகண்டன்.

பேராசிரியர் ய. மணிகண்டன்
பேராசிரியர் ய. மணிகண்டன்

“1988-ல் பாரதிபுத்திரன் என்கிற பாலுசாமி கிறித்தவக் கல்லூரித் தமிழ்த் துறை வகுப்பறையில் நுழைந்தது முதல் இன்று வரை எங்கள் உறவு நீடிக்கிறது. அவர் பாடம் நடத்தினால் காற்றில் ஓர் அழகு கூடும். கவிதைகளை நடத்தும்போது சொற்களுக்கு இடையே அவர் காக்கும் கண நேர மௌனம் அலாதியான அழகு. இலக்கியங்களின் ஆன்மாக்களுக்குக் குரலால் சுடர் ஏற்றியவர். தமிழ் இலக்கியங்களை வரலாறு, சமூகவியல், நாட்டுப்புறவியல், கல்வெட்டு, தொல்லியல், மானுடவியல், உளவியல் போன்ற பிற துறைகளோடு இணைத்துப் படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த பேராசான். தமிழ்ச் சூழலில் பாரதிபுத்திரன் என்கிற நிகழ்வு ஓர் அதிசயம்தான்” என்று பெருமை பொங்கப் பேசுகிறார்கள் இந்நூலின் பதிப்பாசிரியர்கள்.

இந்தப் பாராட்டுத் தொகுப்பு உருவானதன் பின்னணி குறித்துப் பேசும்போது, “அவர் சொற்களில் விதைத்த விதையிலிருந்து, முளைத்து விருட்சமானவர்கள் ஏராளம். அவர் ஓய்வுபெற்றது ஒரு காவிய சோகம். பாரதி தன் எழுதுகோலை மூடிவைத்ததற்குச் சமம். அவர் ஓய்வுபெறும் நாளில், சில சொற்களைத் தவிரக் கொடுப்பதற்கு எங்களிடம் ஏதுமில்லை. ஆனால், மனம் ஆறவில்லை. அதைவிடப் பெரிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணியபோது பாரதிபுத்திரனுக்கு ஒரு விழா எடுப்பது என அவருடைய மாணவர்கள் அனைவரும் சேர்த்து தீர்மானித்தோம். ஒரு தொகுப்பு நூலைக் கையில் பரிசளித்தோம். இவரைப் பற்றி மட்டுமே கட்டுரைகள் அமையாமல் காலப்பெட்டகமாக என்றும் எடுத்தாளும் அரிய நூலாக இந்நூலைக் கொண்டுவந்தோம். இவரை அறிந்த படைப்பாளிகளிடமிருந்தும், ஆய்வாளர்களிடமிருந்தும், கலை இலக்கிய ஆளுமைகளிடமிருந்தும் அரிய ஆக்கங்களைப் பெற்றுத் தொகுத்து வழங்கியதுதான் அவருக்கு நாங்கள் செய்யும் ஆகச்சிறந்த பரிசாகக் கருதுகிறோம்,” கண்களில் நிறைவு கூடியிருக்கிறது.

பாரதிபுத்திரன்: வனங்களை வளர்த்துச் செல்லும் பேராறு
பாரதிபுத்திரன்: வனங்களை வளர்த்துச் செல்லும் பேராறு

இந்நூலில் கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, மொழியல், கவிதை, சிறுகதை உள்ளிட்ட பல்துறைகள் சார்ந்த 158 ஆக்கங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 700 பக்கங்களுக்கு மேல் விரிந்திருக்கின்றன. பாரதிபுத்திரனின் பல்துறை ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட அவரது ஐந்து பேட்டிகள் இந்நூலின் முக்கிய அம்சங்களில் ஒன்று.

குடவாயில் பாலசுப்ரமணியன், பக்தவத்சல பாரதி, சிற்பி பாலசுப்ரமணியன், க.பஞ்சாங்கம், ஜெயசீல ஸ்டீபன், ஓ.முத்தையா, கா.ராஜன், க.பூர்ணசந்திரன் உள்ளிட்ட தமிழின் முக்கிய ஆய்வாளர்களின் கட்டுரைகள்; பிரபஞ்சன், தமிழவன், பா.செயப்பிரகாசம், ரமேஷ் பிரேதன், பழநிபாரதி, நா.முத்துக்குமார், ரவிசுப்ரமணியன், சுகிர்தராணி, யுகபாரதி போன்ற இலக்கியவாதிகளின் ஆக்கங்களுமாகச் செறிவும் ஆழமும் கூடி வந்திருக்கிறது ‘பாரதிபுத்திரன்: வனங்களை வளர்த்துச் செல்லும் பேராறு’ பெருந்தொகுதி.

இத்தகைய ஒரு தொகுப்பினைக் கொண்டுவந்திருப்பதன் மூலம், தங்கள் ஆசிரியருக்குச் சிறப்புச் சேர்த்திருப்பதோடு, தங்களையும் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் பாலுசாமியின் மாணவர்கள்.

பாரதிபுத்திரன் - வனங்களை வளர்த்துச் செல்லும் பேராறு: பணி நிறைவுப் பாராட்டுத் தொகுப்பு

கலைஞர்களின் படைப்புகள் - அறிஞர்களின் கட்டுரைகள்

பதிப்பாசிரியர்கள்: முனைவர் பா.இரவிக்குமார், பேராசிரியர் இரா. பச்சியப்பன்

தொகுப்பாசிரியர்கள்: முனைவர் பா. இரவிக்குமார், பேராசிரியர் இரா. பச்சியப்பன், பேராசிரியர் ம. செந்தில்குமார், முனைவர் ப. கல்பனா, முனைவர் கோ. உத்திராடம், முனைவர் இரா. முருகன், முனைவர் சா. கருணாகரன்

தடாகம் வெளியீடு

112, திருவள்ளுவர் சாலை,

திருவான்மியூர், சென்னை 600042

நூல் விலை ரூ.1200/-

பாரதிபுத்திரன் - வனங்களை வளர்த்துச் செல்லும் பேராறு: பணி நிறைவுப் பாராட்டுத் தொகுப்பு
பாரதிபுத்திரன் - வனங்களை வளர்த்துச் செல்லும் பேராறு: பணி நிறைவுப் பாராட்டுத் தொகுப்பு

இன்று (23 அக்டோபர் 2021) மாலை 5:30 மணிக்கு, 25, எஸ்.கே.எஸ்.மாளிகை (செட்டிநாடு கைத்தறிக் கடை மாடியில்), கற்பக விநாயகர் கோயில் தெரு (சீதாதேவி கரோடியா பள்ளி அருகில்), கிழக்குத் தாம்பரம், சென்னை - 600059 என்ற முகவரில் நிகழும் இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவில், ரூ.750-க்கு நூல் விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புக்கு: 9940343147

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு