Published:Updated:

அர்த்தங்களைக் கலைக்கும் மொழி விளையாட்டும் சிவாஜிகணேசனின் தலைகீழாக்கமும்

வடிவேலு

நகைச்சுவை என்பது இனிப்பூட்டப்பட்ட விமர்சனம். உலகம் முழுவதும் பகடி என்பது அதிகார எதிர்ப்பின் ஒரு வடிவமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அர்த்தங்களைக் கலைக்கும் மொழி விளையாட்டும் சிவாஜிகணேசனின் தலைகீழாக்கமும்

நகைச்சுவை என்பது இனிப்பூட்டப்பட்ட விமர்சனம். உலகம் முழுவதும் பகடி என்பது அதிகார எதிர்ப்பின் ஒரு வடிவமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Published:Updated:
வடிவேலு

திலும் குறிப்பாக அரசு, தேசம், அச்சுக்கலை, வர்க்கங்கள் போன்ற நவீன விளைபொருள்களுக்கான எதிர்வினையாக, மேடைநாடகம், சினிமா போன்ற நவீனக் கலை ஊடகங்களில் நகைச்சுவை என்பது வலிமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் இணையற்ற கலைஞன் சார்லி சாப்ளின் இதற்கொரு மகத்தான உதாரணம். தமிழ் சினிமாவில் சாப்ளினுக்கு இணையாக ஒருவரைச் சொல்லவேண்டுமென்றால் அது எம்.ஆர்.ராதா. தன் வசனங்கள், நாடகப் பிரதிகள் வழியாக கடவுள், சாதி, மதம், அரசு போன்ற நிறுவனங்களுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தவர் அவர். இன்னமும் தமிழ் சினிமாவில் நடிகவேளின் இடத்தை நிரப்பும் ஒருவரில்லை. சில பத்தாண்டுகளுக்கு முன் விவேக், எம்.ஆர்.ராதாவின் வசன உச்சரிப்புகளையும் உடல்மொழியையும் நகலெடுத்து தனக்கான ஒரு பாணியை முன்வைத்தார். ஆனால் அது ‘போலச்செய்தல்’ என்ற அளவில் நின்றுபோனதே தவிர, தன்னூக்கமுள்ள மெய்யான ஓர் அரசியல் கலைவடிவமாக மாறவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் எம்.ஆர்.ராதாவுக்கு நெருக்கமாக விவேக்கைவிட கவுண்டமணியைத்தான் சொல்ல வேண்டும். திரைக்கு வெளியே உள்ள பண்பாட்டுப் பெருமிதங்கள், அர்த்தமற்ற சடங்குகள், அதிகார நிறுவனங்கள் தொடங்கி, திரையில் நிலவிய நாயகப் பிம்பம் வரை தன் நகைச்சுவையில் கிண்டல் செய்தவர் கவுண்டமணி. ஆனால், அதிகார எதிர்ப்பை முன்வைத்த கவுண்டமணியின் நகைச்சுவையும் தன்னளவில் அதிகாரத் தொனி கொண்டிருந்தது நகைமுரண். அதிகாரத்தை எள்ளல் தொனியுடன் அணுகியதைப்போலவே எளிய மனிதர்களையும் எள்ளல் தொனியுடன் அணுகியவை அவரது நகைச்சுவை. தன் சகக்கலைஞரான செந்திலின் கறுப்பு நிறத்தையும் வழுக்கைத் தலையையும் கிண்டலடிப்பதற்கு விதவிதமான வசைமொழிகளை உருவாக்கினார் கவுண்டமணி. உண்மையில் கவுண்டமணியின் நிறமும் கறுப்பு; அவரே வழுக்கைத் தலையர் என்பது இன்னொரு நகைமுரண். கவுண்டமணி காலத்திலிருந்து நகைச்சுவையும் வன்முறையும் பிரிக்க முடியாத அம்சங்களாகிப்போயின.

அர்த்தங்களைக் கலைக்கும் மொழி விளையாட்டும் சிவாஜிகணேசனின் தலைகீழாக்கமும்

வடிவேலுவின் நகைச்சுவையிலும் வன்முறை தவிர்க்க முடியாத அம்சம். தனிநபர் வன்முறை என்பதிலிருந்து கூட்டு வன்முறையாகிப்போனது வடிவேலு நகைச்சுவையின் பரிணாமம். வடிவேலுவின் நகைச்சுவை, கவுண்டமணியின் நகைச்சுவையிலிருந்து வேறுபடும் முக்கியமான அம்சம், சுயபகடி. கவுண்டமணியின் நகைச்சுவைகள் அதிகாரத்தையும் மற்றவர்களையும் கிண்டலடித்தது என்றால், வடிவேலுவின் நகைச்சுவை தன்னைத்தானே கிண்டலடித்தது. ‘தைரியம் என்பது பயம் இல்லாததைப்போல் நடிப்பதுதான்’ என்ற கமல்ஹாசனின் புகழ்பெற்ற வசனத்தைக் கலையாக மாற்றியவர் வடிவேலு. வெளியிலிருக்கும் அதிகாரத்தை மட்டுமல்ல, தனக்குள்ளிருக்கும் அதிகாரத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற வகையில் வடிவேலுவின் நகைச்சுவை முக்கியமானது. ‘உதார்’ வீரத்தைக் கிண்டலடிக்கும் வடிவேலுவின் நகைச்சுவையைத் தமிழ்ப் பார்வையாளர்கள் கொண்டாடுவது, சுயவிமர்சனத்தின் ஒரு வடிவம். வடிவேலு குறித்து பல கட்டுரைகள் சிற்றிதழ்களில் எழுதப்பட்டுள்ளன. பல முக்கியமான அம்சங்கள் அக்கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து விலகி இரண்டே இரண்டு விஷயங்களில் கவனம் குவிக்க முயல்கிறது இக்கட்டுரை.

அதிகாரத்தின் முதல் மூலம் மொழிதான். நமது எல்லாவித அதிகாரங்களும் மொழியின் மூலம்தான் கட்டமைக்கப்படுகின்றன. மொழியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடியாததால் அதிகாரத்துக்கு எதிரான செயற்பாடுகளும் மொழியின் வழியாகவே நிகழ்கின்றன. சொற்கள் என்பவை அர்த்தத்தைப் பதிலீடு செய்பவை என்ற வழக்கமான புரிதலிலிருந்து விலகி, சொற்கள் என்பவை அர்த்தத்தைப் பதிலீடு செய்வதில்லை; குறியீடு செய்கின்றன என்று குறியீடு, குறிப்பான் என்ற கருத்தாக்கங்கள் வழியாக விளக்கியது பின்நவீனம். அத்தகைய கோட்பாட்டின்படி அர்த்தங்கள் சூழலில் மிதந்துகொண்டிருக்கின்றன. சொற்கள் அதனுடன் அவ்வப்போது இணைவதன் மூலம்தான் அர்த்தம் உண்டாகிறதே தவிர நிலைத்த அர்த்தம் என்ற ஒன்றில்லை. மேலும் ஒரு பிரதியைப் படைப்பாளி உருவாக்குவதாலேயே அர்த்தம் உண்டாவதில்லை; வாசகி/கன் படிப்பதன் மூலமே அர்த்தத்தை உருவாக்கிக்கொள்கிறாள்/ன் என்கிறது பின்நவீனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அர்த்தங்களைக் கலைக்கும் மொழி விளையாட்டும் சிவாஜிகணேசனின் தலைகீழாக்கமும்

சொற்களையும் அர்த்தங்களையும் கலைக்கும் மொழிவிளையாட்டு நவீன இலக்கியப் பிரதிகளில் நிகழ்கிறது. ஒரு நவீனக்கவிதையோ நவீன ஓவியமோ ‘புரியவில்லை’ என்ற கூற்று உண்மையில் நவீன இலக்கியச் சூழலில் அபத்தமாகவும் அறியாமையாகவுமே பார்க்கப்படுகிறது. நிலையான அர்த்தத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒருவரே ஒரு கவிதையோ ஓவியமோ படித்தவுடன், பார்த்தவுடன் ‘புரிய வேண்டும்’ என்று எதிர்பார்க்கிறார். மொழியின் இயக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள் இதைப் புறக்கணிக்கின்றனர். ஒரு கவிதையில் உள்ள ஒரு வாக்கியம் வெவ்வேறு காலச்சூழல், வெவ்வேறு அரசியல் சூழல், வெவ்வேறுவிதமான மனநிலைகளில் வெவ்வேறுவிதமான அர்த்தங்களைத் தரலாம். ‘யாதும் ஊரே’ என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரியை, ஒருவர் உலகு தழுவிய சமத்துவமாகவும் பார்க்கலாம்; நாடு பிடிக்கும் பேரரசு உருவாக்கத்திற்கான வரியாகவும் இன்னொருவர் பார்க்கலாம்.

அர்த்தம், அர்த்தமின்மை, அனர்த்தம் ஆகிய பல்வேறு வடிவங்களையும் நவீன கவிதை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது. தமிழ் சினிமா நகைச்சுவையும் இப்படியான மொழி விளையாட்டுகளை நிகழ்த்தியிருக்கிறது என்றாலும் அவை சொற்பமான தருணங்களே. ஒரு படத்தில் கலைவாணர்

என்.எஸ்.கிருஷ்ணனிடம் ஒருவர் ‘கலை’யைப் பற்றிப் பேச, இருக்கும் பொருள்களைக் கலைப்பார் என்.எஸ்.கிருஷ்ணன். இப்படியான சில நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெற்றிருக் கின்றன என்றாலும், மொழி விளையாட்டின் உச்சம் என்று ‘கரகாட்டக்காரன்’ படத்தின் வாழைப்பழ நகைச்சுவைக் காட்சியைச் சொல்லலாம். “ஒண்ணு இங்கே இருக்கு. இன்னொண்ணு எங்கே?”, “அதாண்ணே இது” என்ற இரண்டு வரிகள் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அது நகைச்சுவையாக மாற்றப்பட்டது. இன்றுவரையும் புகழ்பெற்ற, வெற்றிபெற்ற நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்று அது. நான் ஒருமுறை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது வேடிக்கையாகச் சொன்னேன், “ஒருவருக்கு அத்வைதம், துவைதம் பற்றி விளக்க அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. ‘ஒண்ணு இங்கே இருக்கு. இன்னொண்ணு எங்கே?’ என்று கேட்கும் கவுண்டமணிதான் துவைதம்; ‘அதாண்ணே இது’ என்று சொல்லும் செந்தில்தான் அத்வைதம்” என்று.

அர்த்தங்களைக் கலைக்கும் மொழி விளையாட்டும் சிவாஜிகணேசனின் தலைகீழாக்கமும்

வடிவேலுவின் நகைச்சுவை உடல்மொழியை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், மொழி விளையாட்டும் அதில் முதன்மைபெறுகிறது. “எனக்குக் கோபம் வராது” என்று ஒருவர் சொல்லும்போது அது முற்றுப் பெற்றுவிடுகிறது. ஆனால் ஒருவர் “எனக்குக் கோபம் வராது...” என்று இழுக்கும்போது, அது வேறோர் அர்த்தம் பெறுகிறது. “எனக்குச் சாதாரணமாகக் கோபம் வராது. ஆனால் கோபம் வந்தால் உண்டு, இல்லை என்று ஆக்கிவிடுவேன்” என்பதுதான் அதன் அர்த்தம். ஆனால் இரண்டையும் இணைத்து, அர்த்தங்களுக்கான வித்தியாசங்களைக் கலைத்துப்போடுகிறது வடிவேலுவின் நகைச்சுவை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“எனக்குக் கோபம் வராது...”

“வந்தா என்ன பண்ணுவே?”

“அதான் வராதுங்கிறேன்ல, அதை ஏன்யா எதிர்பார்க்கிறீங்க?” எனும்போது அர்த்தம்கொள்ளலின் தன்மையே மாறிப்போகிறது.

அதேபோல்தான் “இதுவரைக்கும் என்னை யாரும் தொட்டதில்லை...”

“போனமாசம்தானே அடிச்சேன்”

“அது போனமாசம். நான் சொல்றது இந்த மாசம்” என்று கைப்புள்ள சொல்வதன் மூலம், ‘இதுவரைக்கும்’ என்பது நிலைத்த குணத்திற்கான வார்த்தை என்பது மாறி, அது தற்காலிக அர்த்தம்கொண்ட ஒன்றாக மாறுகிறது.

உண்மையில் நகுலனின் கவிதைக்கு இணையானது வடிவேலுவின் ‘நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே’ நகைச்சுவை. இறுதிவரை எதுக்குச் ‘சரிப்பட்டு வரமாட்டே’ என்பதைச் சொல்லாததன் மூலம் ஒரு நகைச்சுவை, புதிர்த்தன்மைகொண்ட நவீனக்கவிதையாக மாறுவது ஓர் அற்புதத் தருணம்.

‘ரொம்ப நல்லவன்’ என்னும் சொற்றொடரில் அழுத்தம் சேர்ப்பதன் மூலம் வழக்கமான அர்த்தத்தை மாற்றினார் பேக்கரி வீரபாகு. இதேபோல ‘ஏன்?’ என்ற வினாச்சொல், ‘ஏன்ன்ன்?’ என்று உச்சரிக்கப்படுவதன் மூலம் வேறு அர்த்தத்தைப் பெற்றது.

வடிவேலுவின் புகழ்பெற்ற வசனம் “வரும்... ஆனா வராது” என்பதை ஒருமுறையாவது உச்சரிக்காத தமிழர்கள் இல்லை. இரண்டு எதிர்வுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்தவை அந்த இரு வார்த்தைகள். எழுத்துகளை இடம்மாற்றிப் போடுவதன் மூலம் புதிய சொற்களை உருவாக்குவதும் வடிவேலு பாணி. ‘டுபுக்கு’, ‘ங்கொய்யால’ போன்ற வார்த்தைகளின் மூலத்தைத் தேடிப்போனால் அபாயத்தைச் சந்திப்பீர்கள். வார்த்தைகளை மாற்றிப்போடுவது, அர்த்தங்களைத் தலைகீழாக்குவது, புதிய அர்த்தங்களை உருவாக்குவது என்பவற்றுடன் எந்தத் தொனியில் வார்த்தைகளை உச்சரித்து, மௌனப்படுத்துவதன் மூலம் எப்படிப்பட்ட அர்த்தங்களை உருவாக்க முடியும் என்பதைச் சொன்னது ‘வாடா நாயே....’ நகைச்சுவை. கடன் வாங்கியவரிடம் கெஞ்சி அவகாசம் வாங்குவதை, அவரையே மிரட்டுவதான பாவனையைத் தன் சகாக்களிடம் உருவாக்கிக் காட்டுவார் வடிவேலு.

அர்த்தங்களைக் கலைக்கும் மொழி விளையாட்டும் சிவாஜிகணேசனின் தலைகீழாக்கமும்

ஒருவகையில் அர்த்தங்களைக் கலைத்து விளையாடும் மொழிவிளையாட்டைச் செய்தவை வடிவேலுவின் நகைச்சுவை என்றால், இன்னொருவகையில் மொழியின் ஒருபகுதியாகவும் மாறிப்போனவை அவை. பழமொழிகள், தமிழர்கள் வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தது ஒருகாலம். நகரமயமாக்கல் தமிழர்கள் வாழ்விலிருந்து பழமொழிகளையும் சொலவடைகளையும் முற்றிலுமாக இல்லாமலாக்கியது. பாரதிராஜா படங்களுடன் பழமொழியின் ஆயுள் முடிந்தது. ஆனால் , நவீனத் தமிழ்ச்சமூகம் பழமொழிகள், சொலவடைகளின் இடத்தை வடிவேலுவின் நகைச்சுவை வசனங்களைக் கொண்டு நிரப்பியது. உண்மையில் ஒரு பாடலாசிரியருக்கோ வசனகர்த்தாவுக்கோ கிடைக்காத வெற்றி இது. அரசியல் விமர்சனமாக இருந்தாலும் சரி, அன்றாட வாழ்க்கைத் தருணங்கள் குறித்த முன்வைப்பாக இருந்தாலும் சரி, தமிழர்கள் வடிவேலு வசனங்களின் துணைகொண்டே அதை முன்வைக்கின்றனர். அந்தவகையில் மொழியை வளப்படுத்தியவையாகவும் புதிய சொல்லல் பாணியை உருவாக்கியவையாகவும் வடிவேலுவின் வசனங்கள் விளங்குவது ஒருவகையான மொழிப்புரட்சிதான்.

வடிவேலு நகைச்சுவையில் இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம், சிவாஜி கணேசனுக்கும் வடிவேலுவுக்கும் இடையிலான உறவு. ஒரு காலகட்டம் வரை சிவாஜி கணேசன் பாதிக்காத தமிழ்த் திரைப்பட நடிகர்களே இல்லை. அவரது வசனங்களைப் பேசிக்காட்டி நடிப்பு வாய்ப்பு பெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால், காலம் செல்லச் செல்ல சிவாஜியிடமிருந்து தமிழ் சினிமா விலகிச்சென்றது. ஆனால் சிவாஜிகணேசனைத் தன் நகைச்சுவை வழியாக மீட்டுருவாக்கம் செய்தவர் வடிவேலு. வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளைத் தொடர்ந்து கவனித்தால், சிவாஜியின் பாரிய தாக்கத்தை உணர முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘என்னம்மா கண்ணு’ படத்தில் டெலக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தில் ‘தங்கப்பதக்கம்’ சௌத்ரி பாத்திரத்தை நகல் செய்து நகைச்சுவையாக மாற்றியிருப்பார் வடிவேலு. அதேபோல் ‘தத்தித் தாவுது மனசு’ படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருப்பார் வடிவேலு. அவருக்கு நிச்சயம் செய்த பெண், இன்னொருவருடன் ஓடியிருப்பார். அதைப் பெண் காவல்துறை அதிகாரியான மும்தாஜ், அவரிடம் தெரிவிக்கும்போது, “சிட்டி லிமிட்டைத் தாண்டியிருப்பாங்களா மேடம்?” என்று கேட்பார் வடிவேலு. “அவங்க உங்களையே தாண்டிட்டாங்க. லிமிட்டைத் தாண்டினா என்ன, தாண்டலைன்னா என்ன?” என்று அவர் சொன்னதும், உடைந்துவிழும் காட்சியில் சிவாஜியை நகலெடுத்து நகைச்சுவையாக மாற்றியிருப்பார் வடிவேலு. இப்படி நேரடியாக நகலாக்கம் செய்த காட்சிகளில் மட்டுமல்ல, பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த ‘மனதைத் திருடிவிட்டாய்’ படத்தில் ஒரு காட்சியில், கண்களில் நீர் மின்ன, இன்னொரு பெண்வடிவேலு நடனமாடும் காட்சியைப் பார்ப்பது, ரேஷன் கடை கியூவில் நின்று வாங்கிய மண்ணெண்ணெயை ஒருவர் தட்டிவிட்டதும், “இதைவெச்சுத்தானேய்யா இன்னைக்குச் சோறாக்கணும்” என்று அழுதுபுலம்பும் காட்சி என்று பல காட்சிகளில் சிவாஜியின் உடல்மொழியைப் பிரதிபலித்திருப்பார் வடிவேலு.

வெறுமனே சிவாஜிகணேசனை மிகைநடிப்புக் கலைஞனாகவே புரிந்துகொண்டவர்கள் சிலர். ஆனால், சாத்தியப்பட்ட வகையில் வெவ்வேறு விதமான சிரிப்பு, வெவ்வேறு விதமான அழுகை, வெவ்வேறு விதமான உடல்மொழி ஆகியவற்றைப் பரிசோதித்துப் பார்த்தவர் சிவாஜி கணேசன், வடிவேலுவும் அப்படியே. போலீஸ் வேடங்களிலேயே சில படங்களில் நடித்திருந்தாலும், ‘டெலக்ஸ் பாண்டியன்’ போலீஸ் நடிப்புக்கும் ‘மருதமலை’ சிரிப்பு போலீஸ் நடிப்புக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கும். உதார் ரெளடி கேரக்டர்கள் என்றாலும் ‘கைப்புள்ள’க்கும் ‘நாய்சேகரு’க்கும் வித்தியாசமிருக்கும். ஒரே கேரக்டரை வெவ்வேறுவிதமான உடல்மொழிகளில் வித்தியாசப்படுத்திக் காட்டியவர் அவர். வெவ்வேறுவிதமான தோற்றங்கள், வெவ்வேறுவிதமான சிகையலங்காரம் ஆகியவற்றை சிவாஜிகணேசன் மேற்கொண்டதைப் போலவே வடிவேலுவும் மேற்கொண்டார். அவை அத்தனையும் அவருக்கு இயல்பாகப் பொருந்திப்போனது ஆச்சர்யம்தான்.

சிவாஜிகணேசன் மிகைநடிப்பில் மட்டுமல்ல, இயல்பான நடிப்பிலும் உச்சம் எட்டியவர். குறிப்பாக நகைச்சுவைப் படங்களில் இதை உணர முடியும். ஒரு நாயகன் மிகை நடிப்பு, எதார்த்த நடிப்பு, குணச்சித்திர நடிப்பு, நகைச்சுவை நடிப்பு என எல்லாவற்றிலும் வெற்றிபெற முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியவர் சிவாஜி கணேசன். அதேபோல் எல்லா நகைச்சுவை நடிகர்களாலும் குணச்சித்திர நடிகர்களாக மின்ன முடிந்ததில்லை. கவுண்டமணி போன்ற மகத்தான நகைச்சுவை நடிகர்கள் அதில் தோற்றுப்போனார்கள். குணச்சித்திர நடிப்பிலும் மின்னிய நகைச்சுவை நடிகர்கள் என்று நாகேஷ், மனோரமா, வடிவேலு,

எம்.எஸ்.பாஸ்கர் என்று சிலரைத்தான் குறிப்பிட முடியும்.

அதிலும் வடிவேலு ஒரே காட்சியிலேயே நகைச்சுவையாக நடித்து, சட்டென்று குணச்சித்திரமாக மாறும் வித்தைபுரிபவர். ‘எம் மகன்’ படம், ‘தேவர் மகனில்’ கையை இழந்தபிறகு அவர் பேசும் காட்சி, “ஊரெல்லாம் உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை தேடினியே; நான் கறுப்பா இருக்கேன்னுதானே என்கிட்ட கேட்கலை?” என்று ‘பொற்காலம்’ படத்தில் முரளியிடம் கேட்கும் காட்சி என்று பல உதாரணங்களைச் சொல்லலாம்.

ஒரு நகைச்சுவை நடிகரைத் திரையில் பார்த்தவுடனே பார்வையாளர்கள் சிரிக்கத் தயாராவது நடிகரின் பலம் என்றால், குணச்சித்திர நடிப்புக்குத் தடையாக இருக்கும் பலவீனமும் அதுதான். ஆனால் இதை வெற்றிகரமாகக் கடந்தவர் வடிவேலு. நகைச்சுவைக் காட்சிகளே இல்லாமல் முழுக்க குணச்சித்திரப் பாத்திரத்திலேயே ஒரு படத்தில் வடிவேலுவால் சிறப்பாக நடிக்கமுடியும். ‘இம்சை அரசன்’ அதற்கு ஒரு சிறந்த உதாரணம். 23-ம் புலிகேசியாகக் கோணங்கித்தனம் செய்யும் அரசனாக நடிக்கும் அதேவேளையில், புரட்சிக் குழுவைச் சேர்ந்த போராளியாகவும் நடித்திருப்பார். புலிகேசியைப் பார்த்துப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த பார்வையாளர்களான நாம், போராளி வடிவேலு பாத்திரத்தை சீரியஸாகவே பார்த்தோம் என்றால் அதுதான் வடிவேலுவின் வெற்றி.

சிவாஜிகணேசனின் நடிப்புப் பள்ளியில் தலைமாணாக்கர் வடிவேலு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism