Published:Updated:

"பெண்களுக்கும் தலித்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்!"  சாகித்ய அகாடமி விருதாளர் சூசன் டேனியல்

Susan Daniel
Susan Daniel

தாய்மொழி மலையாளம், படித்தது கன்னடம், வசிப்பது தமிழ்நாடு, மொழிபெயர்த்தது ஆங்கிலம் என மொழிகளின் சங்கமமாக வாழ்ந்துவரும் சூசன் டேனியல் என்ற பெண் எழுத்தாளர் 2019-ன் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மைசூரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பேராசிரியையாகப் பணியாற்றி வந்த சூசன் டேனியல், 25 ஆண்டுகளுக்கு முன்பு, தன் பணியிலிருந்து விலகி கணவரின் ஊரான ஊட்டியில் குடியேறினார்.

Susan Daniel
Susan Daniel

தேவனூர் மகாதேவா என்ற எழுத்தாளர் கன்னடத்தில் இயற்றிய `குசும பாலே' என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காக, சாகித்ய அகாடமி விருதை சிறந்த மொழிபெயர்ப்புக்காகத் தற்போது பெற்றுள்ளார். ஊட்டியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.

இன்முகத்துடன் நம்மை வரவேற்று பேசத்தொடங்கிய சூசன், "ஒரு படைப்புக்குக் கிடைக்கும் உயரிய அங்கீகாரமான இந்த விருதை ஒட்டுமொத்த பெண்களுக்கும் தலித்துகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை பெண்களே முதல் தலித்துகள். வீடு முதல் பணியிடம் வரை எல்லா இடங்களிலும், எல்லா மட்டத்திலும் சம உரிமை மறுக்கப்படுபவளாகவே அவள் இருப்பதாக உணர்கிறேன்.

Susan Daniel
Susan Daniel

எனக்கு தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழைச் செவி வழி கேட்டே கற்றுக்கொண்டேன். பள்ளி முதல் கல்லூரிவரை கன்னடத்தைப் பாடமாகப் படித்தே கற்றுக்கொண்டேன், ஆங்கிலமும் அப்படித்தான். மொழி என்பது ஆதிகாலம் தொட்டு நம்முள் இருக்கும் ஒரு பிணைப்பு, தாய்மொழியோடு அண்டை மொழியை நேசிப்பதும், கற்றுக்கொள்வதும் நம்மை மேலும் மெருகேற்றும்.

எனக்கு அமைந்த மொழியாசிரியர்கள், மொழியை ஆழமாகவும், அர்த்தமாகவும் கற்றதோடு நில்லாமல் அடுத்த தலைமுறைக்கும் கடத்தினர்.

Susan Daniel
Susan Daniel
 `நிலம் பூத்து மலர்ந்த நாள்'-  எழுத்தாளர் கே.வி.ஜெயஶ்ரீக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு சிறிய நாவலை வாசிக்க நேர்ந்தது. 110 பக்கத்தை மட்டுமே கொண்டிருந்த அந்த நாவல் என்னுள் விவரிக்கவியலா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 'குசும பாலே' என்ற தலைப்பைக்கொண்ட அந்த நாவல் அந்தப் பெயரைக் கொண்ட தலித் இளைஞனை மைய கதாபாத்திரமாகக் கொண்டது.

கவித்துமிக்க வரிகளில் அவனின் காதல் தொடங்கி, அவன் கொலை செய்யப்பட்டப் பின் தவிக்கும் அவனின் காதலியின் தவிப்புவரை அத்தனையும் கண்முன் நிறுத்தியிருப்பார் எழுத்தாளர் தேவனூர் மகாதேவா.

Susan Daniel
Susan Daniel

விளிம்பு நிலை மக்களின் வாழ்வை, வலியை, அவலத்தை எல்லோரிடமும் கொண்டுசெல்ல விரும்பினேன். இந்த நாவலை மொழிபெயர்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணம் வேட்கையாக மாற இந்த நாவலைப் பொது வெளிக்குச் கொண்டுசெல்ல ஆங்கிலம் மட்டுமே ஒரு வழியாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவலாசிரியரிடம் அனுமதி கேட்க, அவரும் சம்மதித்தார்.

மொழிபெயர்ப்பு பணியைத் தொடங்கினேன். 110 பக்கமே என்றாலும் மூல நூலிலிருந்து ஆங்கிலத்திற்கு உணர்வைக் கடத்துவது மிகுந்த சவாலாகவும் கடினமாகவும் இருந்தது. இந்தக் கடினத்தை விரும்பி ஏற்றேன். மொழிபெயர்ப்பில் இருந்த சந்தேகங்களைப் பலரிடம் கேட்டு சரிசெய்துகொள்வேன்.

Susan Daniel
Susan Daniel

இந்த மொழிபெயர்ப்புக்கு நான் எடுத்துக்கொண்ட காலம் இரண்டு ஆண்டுகள். இரவு பகலாக மிகுந்த கவனத்தோடு மேற்கொண்ட மொழி பெயர்ப்பை முடித்து, மூல நூலின் பெயரையே தலைப்பாக வைத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. உடனடியாக இந்த நூலின் தாக்கத்தை உணர முடிந்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்தன. இரண்டாண்டுகளின் உழைப்பிற்கு கிடைத்த பலனாய் உணர்ந்தேன்.

என்னைப் பொறுத்தவரை மொழிதான் எல்லாமுமாக இருப்பதாக உணர்கிறேன். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்குக் கவிதை மூலம் பாடங்களைக் கற்பித்தால் வலது பக்க மூலையில் வளர்ச்சி ஏற்பட்டு கற்கும் திறன்கூடும் என்பதை நேரடி அனுபவமாக அறிந்துகொண்டேன். இதேபோல் மொழியால் மட்டுமே பல்வேறு மாற்றங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்த முடியும். தாய்மொழியோடு அண்டை மொழியையும் நேசிக்கும் பண்பை பெற வேண்டும். அப்போதுதான் புதிய மனிதர்களையும் மனிதத்தையும் அறிய முடியும்.

Susan Daniel
Susan Daniel
`நினையாரோ தோழி.. தினையேனும் எனை நினையாரோ?'- புதுக்கோட்டையில் பெருக்கெடுத்த சங்க இலக்கியம் #MyVikatan

இங்கே மொழிபெயர்க்க வேண்டிய எழுத்துகள் ஏராளம் உள்ளன. காத்திரமான படைப்புகளைத் தேடிப்பிடித்து மற்ற மொழிக்கும் சேர்க்க பலரும் முன் வர வேண்டும். மொழி பெயர்ப்பை ஒரு பாடமாகப் பள்ளியிலும் அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் வளங்களை ஒரு மொழி பெற முடியும்" என புன்னகையுடன் பேசி முடிக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு