Published:Updated:

`சுயமாக முடிவெடுக்கவிடாமல் இந்தச் சமூகம் நம்மை அச்சுறுத்தும்!' -'சுயாதீனம்' நாடகத்தில் சுளீர்

சுயாதீனம்
சுயாதீனம் ( SAM )

தன் சுயபுத்தி, சுயாதீனத்தின் வழி நடக்காமல், யாரோ ஒருவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தேடி அலைந்துகொண்டிருப்போர் ஏராளம் என்பதைச் சொல்கிறது நாடகம்.

சென்னை அலையன்ஸ் பிரான்சிஸ் ஹாலில் அரங்கேறியது `சுயாதீனம்' நாடகம். தனிமனிதனின் சுதந்திரம், கனவு, விருப்பம், சமூக யதார்த்தம் இவை அனைத்துக்கும் இடையில் ஊடாடும் வாழ்வை அசலாகப் பதிவு செய்தது நாடகம்.

``எழுத்தாளனாக ஆசைப்படும் பொறியியல் பட்டதாரி. இலக்கு நோக்கிச்செல்வது பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறான். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. தனது கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் உழல்கிறான். அவனின் மனசாட்சி, பகுத்தறிவு இரண்டு கற்பனைப் பாத்திரங்கள் அவனுடன் உரையாடுகின்றன. மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையே நிகழும் உரையாடல்தான் முழு நாடகம். சுமார் 40 நிமிடம். நாடகத்தின் சூழலுக்கேற்ப மிகையல்லாத நடிப்பை வழங்கினர் நடிகர்கள் மூவரும். ஒரு கட்டில் அதன் பின்புறம் உள்ள ஜன்னலில் எழுத்தாளர்கள் பயன்படுத்தும் புத்தகப் பை. அருகிலிருந்த மேஜையில் சில புத்தகங்கள். சிறுவயதில் நாடகத்தின் மைய கதாபாத்திரத்தின் தாயார் தினமும் அவனுக்குத் திருக்குறள் படித்துக் காட்டுவாள். அவள் இறந்தபிறகு, அவள் நினைவாகத் திருவள்ளுவரின் படத்தைச் சுவரில் மாட்டிக்கொண்டான். இறந்துபோன அம்மாவை நினைத்து அந்த இரவில் வருத்தப்படுகிறான்.

சுயாதீனம் நாடகத்தில் ஒரு காட்சி
சுயாதீனம் நாடகத்தில் ஒரு காட்சி
SAM

அம்மா இருந்திருந்தால் என் வாழ்க்கை இப்படியெல்லாம் போயிருக்காது. நான் இப்படி வருத்தப்பட்டிருக்கமாட்டேன் என்று அழுகிறான். அதற்கு மனசாட்சியோ, ``உன் அம்மா இருந்திருந்தாலும் உன் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கும். இல்லாத ஒன்றை எண்ணி, அவர்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணுவதுதான் மனித மனதின் இயல்பு" என்கிறது. எழுத்தாளனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால், சமூகத்தின் கட்டமைப்பு, அறிவுறுத்தலும் பொறியியல் படிக்கிறான். பிடித்ததை விட்டு, பிடிக்காத ஒன்றை எப்படி மனது ஏற்றுக் கொள்ளும்? அவனைத் தூங்கவிடாமல் மனசாட்சியும் பகுத்தறிவும் மாறிமாறி கேள்விகள் கேட்கின்றன. நாடகத்தின் இடையே சமகால அரசியலுக்கான நையாண்டியும் இடம்பெற்றிருந்தன.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின், அடுத்து என்ன என்பதை அவன் முடிவு செய்யாமல் பிறரே முடிவுசெய்கிறார்கள். 'அடுத்து என்னப்பா?... அடுத்து எங்க படிக்கப் போற?... எந்த காலேஜ்... இன்ஜினீயரிங்தானே? இவைபோன்ற கேள்விகளால் தனக்கு விருப்பமுள்ள பாடத்தை விட்டு, இன்ஜினீயரிங் எடுக்கிறான். படித்து முடித்தபின் இவனைப் பார்த்து, எங்கப்பா வேலை செய்ற ? என்னப்பா பண்ற? இம்மாதிரியான கேள்விகள் இவனைத் துரத்துகின்றன. சமூகத்தின் கட்டமைப்புகள், கேள்விகள் ஒரு மனிதனை சுயமாக முடிவெடுக்கவிடாமல் துரத்தி, பிடிக்காததைப் படிக்க வைக்கிறது.

தன் சுயபுத்தி, சுயாதீனத்தின் வழி நடக்காமல், யாரோ ஒருவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தேடி அலைந்து கொண்டிருப்போர் ஏராளம் என்பதைச் சொல்கிறது நாடகம்.

சுயாதீனம் நாடகத்தில் ஒரு காட்சி
சுயாதீனம் நாடகத்தில் ஒரு காட்சி
SAM

நாடகத்தை இயக்கிய 'செல்லம் கலாலயம்' செல்லா செல்லம், "மறைந்த நாடக ஆளுமை ந.முத்துசாமியுடனான சந்திப்பும் உரையாடலுக்கும் பிறகே நாடகத்தின்மீது அதிக நாட்டம் கொண்டேன். இதுவரை 15 நாடகங்களை எழுதி அரங்கேற்றியுள்ளேன். நாடகம் என்கிற கலை வடிவத்தை சரியாகக் கையாண்டு அதன்வழியே சமூக நடப்புகளைக் கூற வேண்டும். எனது குழுவும் அதன் நண்பர்களும் உடன் நிற்கின்றனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு