Published:Updated:

''கையைத் தட்டு, கோயில் கட்டு என்ற ஒன்றியப் பிரதமர் இப்போது எங்கிருக்கிறார்?''- யவனிகா ஶ்ரீராம்

யவனிகா ஸ்ரீராம்
யவனிகா ஸ்ரீராம்

“மக்களின் நிலையழிப்பு ஊரின் நடமாட்டமற்ற வெறுமையில், மனித அச்சமாகவும், அவமானகரமான உயிரிழப்புமாகவும் ஆகிப்போனது துயரமானது.”

தொண்ணூறுகளுக்குப் பிறகு எழுத வந்த நவீனத் தமிழ் கவிஞர்களில் தனித்துவமானவர் யவனிகா ஸ்ரீராம். ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர். உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை. சமீபத்தில் ‘அடுத்த பிரதிகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் யவனிகா ஸ்ரீராமின் பேசினேன்.

“சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எழுதிய ‘கடைசி தானியம்’ என்ற கவிதை இந்தப் பெருந்தொற்றுக்கு ஒரு முன்னறிவிப்பாக இருக்கிறது; இன்றைய சூழலுடன் அப்பட்டமாகப் பொருந்திப் போகும் அக்கவிதை உருவான மனநிலையை நினைவுகூர முடியுமா?”

“காலம்தோறும் இப்பூமியில் உருவாகிவந்த உயிரிகளின் ஜீவமரணப் போராட்டம் என்றென்றும் தொடர்ந்தே வந்திருக்கிறது. இப்பல்லுயிர்த் தொகுதியில் தட்பவெப்பம் மற்றும் நுண்ணுயிர்ப் பெருக்கங்களால் டைனோசர் உட்படப் பல உயிர்கள் நாளடைவில் காலாவதியாகிப் போயின. தகவமைப்பில் மிஞ்சிய மனிதப்பெருக்கம் அதிகரித்துவிட்ட இந்நூற்றாண்டுகளில் எண்ணற்ற தொற்றுநோய்களினால் மாண்டவர்கள் பல கோடிப் பேர்கள் என்கிறது வரலாறு.

ப்ளேக், காலரா, டைஃபாயிடு, அம்மை, போலியோ போக இன்று டெங்கு, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், எய்ட்ஸ், கொரோனா என எண்ணிலடங்கா வைரஸ் தொற்றுகள் மனித உடலை அழித்துக்கொண்டிருக்க, மருத்துவ-விஞ்ஞான உலகம் மற்றும் தேசங்கள் யாவும் திராணியற்று திகைத்துப்போயுள்ளன!

யவனிகா ஸ்ரீராம்
யவனிகா ஸ்ரீராம்

இது மூன்றாவது பயோ-உலக யுத்தம் என்று வர்ணிக்கப்பட்டு, இதில் மனிதர்கள் தப்பிப் பிழைத்திருப்பதே லாபம் என்று நினைக்கச் சொல்லி, மக்களிடமே நோயை ஒப்படைத்துவிட்டு இயன்றளவு அதைக் கட்டுப்படுத்த ஆலோசனைகளைக் கூறுகின்றன அரசுகள்.

அக்கவிதை எழுதப்பட்ட காலம் 2002 என்று நினைக்கிறேன். உண்மையில் தொற்று என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது வளர்ச்சியின் பெயரால் கட்டுப்படுத்தமுடியாத உலகமய ஒற்றைப்பொருதார மூலதனப் பரவல் பற்றியது. அது எவ்வாறு பூமிப்பந்தைப் பிடித்தாட்டுகிறது; நாடு, நகர, கிராமங்கள், கடல், மலை, நதி, நிலம் யாவற்றின் மீதான தொற்றாகப் பரவி ஏனையோர் பலரையும் தாக்கி இயல்பு நிலையைக் குலைக்கிறது என்ற சமகாலம் பற்றிய அவதானிப்பு.

என்றாலும் அதன் இறுதி வரிகள் வேறானவை: வௌவால்கள் மூலம் பரவிய தொற்று என்பதாகட்டும், விண்ணிலிருந்து (ஏலியன்) இறங்கிவந்தவர்கள், பெரணிக்கிழங்குகளை நீர்நிலைகளில் வீசினார்கள், கடைசி மக்காச் சோளம், மனித உருவில் வௌவால் எனக் காலத்தில் முன்னுரைக்கப்பட்டு, கவிதை இன்றைய நிலையைச் சுட்டி நிற்பது எனக்கும் ஆச்சரியம்தான்!

கவிதைகளில் சகுனம் இருக்கும் என்பார்கள். இத்தொற்று ஓய்ந்தாலும் மூலதனத்தொற்று வருங்காலத்தில் இப்பூமிப்பந்தின் கொடிய நோயாகவே தொடரும் என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை!”

“உங்கள் ஊரான சின்னாளபட்டியிலும், சுற்றுவட்டாரங்களிலும் கொள்ளைநோய் பரவியதுண்டா? இன்றும் அதே ஊரில் தான் நீங்கள் வாழ்கிறீர்கள் என்ற முறையில், அந்த அனுபவங்கள் மூலம் கொரோனா பெருந்தொற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“நான் சிறுவயதாக இருக்கும் போது எங்கள் ஊரில் பெரியம்மைக்குத் தடுப்பூசி போடச் சுகாதாரத் துறையிலிருந்து வருவார்கள்; குழந்தைகள் நாங்கள் அதற்குப் பயந்து தப்பி ஓடுவோம். அதுபோக, மலேரியா காய்ச்சல் இருக்கிறதா என வீடு வீடாக வந்து கேட்பார்கள். சின்கொய்னா மாத்திரைகள், மீன் எண்ணெய் வைட்டமின் மாத்திரைகளைக் கொடுப்பார்கள். கொசுமருந்து அடிப்பார்கள் நீர்த்தேக்கத்தொட்டியில் மருந்து ஊற்றிப் போவார்கள்.

நவீன மருத்துவம் பல தொற்றுகளை, குறிப்பாக டெட்டனஸ், தட்டம்மை, பெரியம்மை, யானைக்கால் வியாதி, குஷ்டம், காசநோய் போன்றவற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்தது ஞாபகமிருக்கிறது; இப்பேரூராட்சியில் பெரியம்மை நோய் இல்லை என்று நகராட்சியிலிருந்து வந்து வீட்டுச் சுவர்களில் விளம்பரம் செய்வார்கள். இதற்கிடையில் காலரா பரவி நீர்ச் சத்து இல்லாமல் முதியவர்கள் பலரும் சுற்றுக் கிராமங்களிலும் இறக்கக் கண்டிருக்கிறேன். அது மிக அவலமாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் தாது வருடப் பஞ்சத்தில் பசியால் பலரும் இறந்துபோனதாகச் சொல்வார்கள். பசியும் ஒரு தொற்று நோய்தான் இல்லையா?

பசி
பசி

இன்றைய கோவிட்-19 என்பது எய்ட்ஸ் உட்பட பதினான்கு உப நோய்களை உள்ளடக்கி விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். ஊரைச்சுற்றி அநேக மரணங்களில் பிணங்கள் வீடு திரும்பாமலே எரிமயானம் போய்விட்டன.

ஊரடங்குதான் தப்பும் வழி என்றாலும், கடந்த ஒன்றே கால் வருடமாக மக்களின் நிலையழிப்பு ஊரின் நடமாட்டமற்ற வெறுமையில், மனித அச்சமாகவும், அவமானகரமான உயிரிழப்புமாகவும் ஆகிப்போனது துயரமானது. காலத்தில் இதுவும் கடந்துபோகும் என்றாலும் ஊரைச்சுற்றி இருநூறு மரணங்கள் நிகழ்ந்து விட்டன.

கையைத் தட்டு, தீபமேற்று, கொரோனா கோயில் கட்டு என்ற ஒன்றியப் பிரதமர் இப்போது எங்கிருக்கிறார்? இன்னும் பிரார்த்தனையில் இருக்கிறார் போலும்!”

“ஒரு கவிஞனாக உங்கள் சிந்தனையில் இந்தப் பெருந்தொற்று நிகழ்வு ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன; இம்மாதிரியான காலங்களில் வாழ்க்கை ஒரு சாமானியனுக்கும் படைப்பாளிக்கும் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறதா?”

“இருண்ட காலத்தில் கவிதை எழுதப்பட்டதா? ஆம். அது இருண்ட காலங்களைப் பற்றியதாய் இருந்தது. உலகமெங்கும் இத்தொற்று பரவி இருக்கிறது என்பதால் ஒருகாலத்தில் ப்ளேக் நோய் பற்றிய குறியீட்டு நாவல் வந்தமாதிரி கொரோனா படைப்புகள் வருமா? வராது! வந்தாலும் பிழைத்தவர்களின் பகடியாகத்தான் இருக்கும்; படைப்பாளி பொதுமனிதர் என்பதெல்லாம் இல்லை. ஐயாயிரத்திற்கும் மேல் மருத்துவர்களும் தாதிகளும் இறந்து போயிருக்கிறார்கள்!

இந்தச் சர்வதேசத் தொற்றுக்கு யாரும் பொறுப்பேற்பதாய்த் தெரியவில்லை; சீனா, அமெரிக்க மற்றும் மருந்துலக மாஃபியாக்களின் கூட்டு என்கிறார்கள். ஆய்வகங்களில் என்ன நடக்கிறது என யாருக்குத் தெரியும்? வருங்காலம் இனி கொரோனாவிற்கு முன்/ பின் என்பதாகத்தான் கணக்கிடப்படும்.

கொரோனா - உலகம்
கொரோனா - உலகம்

இக்காலத்தில் விவசாயப் போராட்டங்கள் குறித்து எனது கவிதைகள் அமைந்தன; பாழ்பட்டு நிற்கும் இக்காலங்களில் நீதியும் சமத்துவமும் நல்லெண்ண உடன்பாடுகளும் அறிவியலும் தலைமைகளும் உலகளாவி ஒன்றிணைந்து மனித சமூகத்தை நெருங்கி வந்து ஆவண செய்ய வரவேண்டும் (லூயி பாஸ்டர் எனும் மருத்துவரை இங்கு நினைவுகொள்ளலாம்). மற்றபடி ஒரு கவிஞனாக வேண்டிக்கொள்வது அப்படியானதன்றி என்னளவில் ஏதொன்றையும் எழுத மனம் கூடாத காலமும் இதுதான்.”

“சமகாலத் தமிழிலக்கியம் எப்படி இருக்கிறது?”

“சுதந்திரத்திற்குப் பிறகான இலக்கியங்களிலிருந்த ஆண்-பெண், காதல், குடும்பம், நாட்டுப்பற்று, அதற்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த அரச ஜனநாயக அறிவுஜீவித கருத்தாடல்கள்; வளர்ச்சியின் எதிர்கால லட்சியம், தேசிய-நாயக விதந்தோதுதல், ஊர்க் கதைகள், பெண் எழுத்தின் அரசியல், அடித்தள மக்கள் எழுச்சி, தீராத சாதி மேலாதிக்க பிற்போக்குத்தனங்கள் என எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கியம் நிகழ்ந்துவருகிறது.

இப்போது சந்தைக்கும், தேசிய வருமானத்திற்கும் இடையே அனேக மாற்றங்களை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இன்றைய மத்தியத்தர வாசிக்கும் வர்க்கம் பல வினோத மொழிபெயர்ப்புகளையும், நவீனம், பின் நவீனம் தாண்டியும் கதையாடல்களைச் சந்தித்து வருகின்றன.

இளைஞர்களிடம் நம்பிக்கை இருந்தாலும் இலக்கியத்திற்கு மேல் பல்வேறு ஊடகக் களியாட்டங்கள், விளையாட்டுகள், இசை, பயணங்களுக்கான ஆவல் போக, நேரம் என்பது பணம் என்பதாகத் திரிந்து புலப்பெயர்வுடன் உலகமெலாம் தமிழர் படைப்புகள் வாசிப்புகள் என இலக்கியம் பலவற்றையும் கோர்த்து வாசிப்பில் தனிமை கண்டிருக்கிறது. விரைவான முகவர்களும் (பதிப்பகங்கள்), விரைவான நுகர்வோரும் விரும்பும் எழுத்து தேவைப்படுகிறது.

பெருந்தொற்று காலத்தில் வாசிப்பு!
பெருந்தொற்று காலத்தில் வாசிப்பு!

உலகின் அதிவேக இரயில்கள், விமானங்கள், பணப் பரிமாற்றங்கள், பயணங்கள் போன்றவை இலக்கியத்தை எங்குக் கடத்துகின்றன? காட்சி ஊடகங்கள் எவ்வளவு இலக்கியத்திற்கு இடம் தருகின்றன? விருதுகளின் ஆய்வுகள் இலக்கியங்களில் வைக்கும் யதார்த்தம் எதைச் சேர்ந்திருக்கிறது? அன்றாடத்தில் இலக்கிய ஆசிரியர்கள் பெறுவது என்ன?

இலக்கியம் எல்லா ஊடகங்களையும் அமைப்புகளையும் குறுக்கிடும் என்பது மனித மொழிப் பண்பின் ஆதாரமாய் இருக்கத்தான் செய்யும்; மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனைகள் நவீன தமிழிலக்கியத்துக்குள் ஊடுருவியுள்ளன. எனினும் இலக்கியத்திற்கு இன்னுமான சவால்கள் இருக்கின்றன... இன்றளவில் உயிரோடு இருப்பதற்கும் மேலே எழுதிச் செல்வதற்கும்!”

***

கடைசி தானியம்

ஊர் தின்னும் நோய் வந்தபோது

நூற்றுக்கு எட்டுபேர்

இடம்பெயர்ந்து போனார்கள்

மொத்தம் பதின்மூன்று மூதாட்டிகள்

தலைமாட்டில்

முளைப்புப் பயிர் வைத்துப் புதைத்தாயிற்று

ஐம்பதுக்கு ஆறு வீதம்

கால்நடைகள் கழிச்சல் கண்டன

ஒரு கிடையாடே செத்துப் போனது

கிணற்றில் விழுந்து மிதந்த

கர்ப்பஸ்த்ரீக்கு நோய்க்கான அறிகுறி ஏதுமில்லை

ஒரு அரசு அதிகாரி சஸ்பெண்ட்

தலையாரிகளில்லையெனில்

சாதி வாரிப் பிறப்பு இறப்பு கணக்கு

தெரியாமலே போயிருக்கும்

பாதி நோயைப் பக்கத்து ஊர்க்காரர்கள் வாங்கிக் கொள்ள

தொடர்ந்து ஒரு நகரத்தின் கோடியிலும்

அது தொற்றியது

வீடுகளும் காடுகளும் புல்வெளிகளும்

பறவைகள் வந்திறங்கும் இடம் யாவும்

நோய் தாக்கும் அபாயம் பெருகியிருந்தது

சில நூறு வருடங்கள் கழித்து

விண்வெளியிலிருந்து

சிலர் இறங்கி வந்தார்கள்

கொஞ்சம் தலைப்பிரட்டைகளை

தண்ணீரில் விட்டார்கள்

அதன் கரையில்

பெரணிக் கிழங்குகளும் வீசப்பட்டன

அவர்கள் விண்ணேறும்போது

கடைசி மக்காச்சோளக் கதிரொன்றைக்

கொறித்துக் கொண்டிருந்தது

மனித உருவில் ஒரு வௌவால்

அடுத்த கட்டுரைக்கு