Published:Updated:

`ஒருங்கிணைப்பு; நீதிமன்றப் போராட்டம்!' - கர்நாடகத் தமிழர்களின் அரணாக இருந்த மைசூர் புகழேந்தி

மைசூர் புகழேந்தி
மைசூர் புகழேந்தி

மைசூர் புகழேந்தியின் வாழ்க்கைப் பயணம்

கடந்த டிசம்பர் 30-ம் தேதி மாரடைப்பால் காலமானார் மைசூர் புகழேந்தி (66). கள்ளக்குறிச்சி மாவட்டம், மேமாளூர் கிராமத்தில் 10.12.1954 அன்று ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த புகழேந்தி, 1970-ல் மைசூர் சென்றார். 1980-ல் மைசூர் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரானார். 1985-ல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று தொடர்ந்து 24 ஆண்டுகள் (2009 வரை) செயலாளர் பொறுப்பில் இருந்தார். 50 ஆண்டுகள் மைசூரிலேயே வாழ்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக விவசாய அமைப்புகளோடு மைசூர் தமிழ்ச் சங்கத்தையும் இணைத்து கர்நாடக அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.

மைசூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய புகழேந்தி, அச்சங்கத்தின் செயலாளர், துணைத் தலைவர் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயலாற்றி வந்தார். இந்தியாவில் உள்ள தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்ததில் இவருடைய பங்கு முக்கியமானது. சிகாகோ, மலேசியா, சிங்கப்பூர், டெல்லி, கல்கத்தா என்று எந்த நாட்டில் தமிழர் தொடர்பு வேண்டுமென்றாலும் இவரைத் தொடர்புகொண்டால் உடனடியாகக் கிடைத்துவிடும்.

1991-ல் காவிரி நதிநீர்ப் பங்கீட்டு பிரச்னையில் கர்நாடகத்தில் கலவரம் வெடித்தபோது அம்மாநிலத்திலிருந்து பெரும்பான்மையான தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். குறிப்பாக மண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களது வயல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக விவசாய அமைப்புகளோடு மைசூர் தமிழ்ச் சங்கத்தையும் இணைத்து கர்நாடக அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.

மதுரையில் மைசூர் புகழேந்தி
மதுரையில் மைசூர் புகழேந்தி

இந்த வழக்கின் மூலம் தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுத்ததில் முக்கியப் பங்காற்றினார். இன்றும்கூட ஒரு மாநிலத்தில் பிற மாநிலத்தவர் தாக்கப்பட்டால் நிவாரணமோ நஷ்டஈடோ... இந்த வழக்கின் தீர்ப்புதான் மேற்கோள் காட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் தாக்கப்பட்டதிலிருந்து 'தமிழ்ச் சங்கம் தமிழை வளர்ப்பதைக் காட்டிலும் தமிழர்களை வளர்த்தால், மொழி தானாக வளரும்' என்று உறுதிகொண்டு தமிழர் நலன்களுக்கான விஷயங்களை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டினார்.

1990-களில் கர்நாடகத்தில் ஒன்றிரண்டு தமிழ் அமைப்புகளே இருந்த நிலையில், இன்றைக்கு 30-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளை உருவாக்கி அதை முறையாகப் பதிவுசெய்து, கர்நாடகத் தமிழ் கூட்டமைப்பின் தலைவராக இருந்து வந்தார். கர்நாடகத்தில் சின்னச் சின்ன ஊர்களிளெல்லாம்கூட தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, தமிழர்களை ஒன்றிணைக்க உதவினார். 1990-களுக்குப் பிறகு, காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும்போதெல்லாம் பெரிய அளவில் சேதங்கள், தாக்குதல்கள் தமிழர்களுக்கு நேராதவாறு தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து கர்நாடக ஆட்சியாளர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இன்று, கர்நாடகத்தில் சுமார் 60 லட்சம் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் அதில் மைசூர் புகழேந்தியின் பங்களிப்பும் உண்டு என்றே உறுதியாகச் சொல்லலாம்.

Vikatan

2008-ல் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய தமிழ்ச் சங்கங்களைத் தொடர்புகொண்டு ஒருங்கிணைக்கும் பணிகளைச் செய்து வந்தார். அந்த அமைப்பின் அமைப்புச் செயலாளராகவும் இருந்து வந்தார். இயற்கை விவசாயத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டவர்.

66 வயதில் அடி எடுத்து வைத்திருந்த புகழேந்தி, இதய நோய் சிகிச்சைக்காக மதுரைக்கு வந்திருந்தபோது காலமானார். இவரின் மனைவி ரோஜாவதி மற்றும் மூன்று மகள்கள். மூன்று மகள்களுக்கும் திருமணம் நடந்துவிட்டது."தமிழால் மட்டுமே நாம் அனைவரும் இணைந்திருந்தோம். தமிழர்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி செயல்பட்டுக்கொண்டிருந்தோம். இந்தப் பணிகளால் எனக்கு உடல் ரீதியாக இதய நோய் இருப்பினும் தமிழர்கள் என்னை ஆசீர்வதிக்கிறார்கள். அந்த வகையில் நான் பிறவிப் பயனை அடைந்துவிட்டதாகவே கருதுகிறேன்" கடந்த 2019, டிசம்பர் 10-ம் தேதி தன்னுடைய பிறந்த நாளின்போது ஒரு கூட்டத்தில் அவர் பேசிய வார்த்தைகள் இவை.

உண்மைதான் ஐயா...

தமிழர்கள் உங்களை ஆசீர்வதிக்கிறார்கள்!

அடுத்த கட்டுரைக்கு