Published:Updated:

"கீழ் நடுத்தர மக்களின் வாழ்க்கையும், கொண்டாட்டங்களும், ஏமாற்றங்களுமே `மாக்காளை!'" - கலாப்ரியா

மாக்காளை நூல்
News
மாக்காளை நூல்

கலாப்ரியாவின் 'மாக்காளை' நாவல், சந்தியா பதிப்பகம் மூலமாக இந்தப் புத்தகச் சந்தையில் வெளியாகிறது.

தமிழ்க் கவிதையை கலாப்ரியாவைத் தவிர்த்துவிட்டு யோசிக்க முடியாது. மழையால் பயிர் வளர்வது போல, அவரின் கவிதைகளால் தமிழ் வளர்ந்தது. கவிதை கடல் என்றால் அவர் ஓயாத அலை. அவரின் 'மாக்காளை' நாவல் சந்தியா பதிப்பகம் மூலமாக இந்தப் புத்தகச் சந்தையில் வெளியாகிறது. புதிய நாவலை முன்னிட்டு அவருடன் புதிய உரையாடல்.

பெயர் சொல்லாமலும் தெரிந்து விடுகிற மொழி உங்களுடையது. அதை எப்படிக் கைவரப் பெற்றீர்கள்?

எழுத்தில் புழங்குகிற மொழியை விட பேச்சில் மொழியின் புழக்கம் அதிகம். முன்னது ஒரு குளம் என்றால் பின்னது கடல். எல்லா ஊரிலும் மனிதர்கள் உரையாடிக் கொண்டேதான் இருக்கிறார்கள். திருநெல்வேலியில் அது சற்று அதிகம். இங்கே உறவுக்காரர்களை விட தலைமுறை தலைமுறையாக சிநேகிதர்களிடையே பேசிக் கொள்வது கொஞ்சம் தனித்துவமானது.

கலாப்ரியா
கலாப்ரியா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தப் பேச்சில் சமத்காரமும், நையாண்டியும், உரிமையோடு குத்திக் காட்டுவதும், மெலிதான குசும்பும் இருக்கும். நீங்கள் புதுமைப்பித்தனிடம் இதைக் காணலாம். மொழியைப் பொறுத்து மட்டும் அவருக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனாலும் அவர் காலம் வேறு என் காலம் வேறு என்கிற போதத்தோடு பார்க்கிற போது என் காலத்தின் நகர்தலோடு இயைந்த மொழி இது. நாங்கள் பேசி வளர்ந்த மொழிதான் அது. என் கதை (கவிதை மாந்தர்களும் கூட) மாந்தர்கள் இந்தக் கூர்மையான மொழியைப் பேசுகிறார்கள். வட்டார வழக்கின் இயல்பான கொடை இது என்று சொல்லலாம். மேலும் ஒரு படைப்பு, அது கவிதையோ கதையோ நாவலோ தன் மொழியைத் தானே தகவமைத்துக் கொள்ளும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இவ்வளவு காலம் உலவிய கவிதையிலிருந்து எப்படி நாவலுக்குச் சென்றீர்கள்? வெளிப்பாட்டுக்கு கவிதை போதவில்லையா?

தீக்குள் விரலை வைத்துப் பார்க்கச் சொல்கிற அனுபவம் கவிதை. இருளில் பனியில் தீ மூட்டி, பாட்டுப் பாடிக் கொட்டமடித்துக் குளிர் காய்கிற அனுபவம் நாவல் என்று ஓர் உருவகமாகச் சொல்லலாம். நான் சிறிய கவிதைகளைத் தாண்டி குறுங்காவியங்களும் எழுதியிருக்கிறேன். எனது எட்டயபுரம் குறுங்காவியத்தில் பிரநிதித்துவப்படுத்துகிற அளவில் வருகிற மனிதர்கள் கொஞ்சம் கூட்டுப் புழுவின் சுதந்திரம் மட்டுமே உள்ளவர்கள். நாவலில் அவர்களுக்கும் கதை சொல்லியான எனக்கும் வெளி பூராவும் பறக்கிற சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல கவிதையில் கதை சொல்வதற்குச் சில போதாமைகள் இருக்கின்றன.

மாக்காளை நூல்
மாக்காளை நூல்

'மாக்காளை' எதைப் பேசுகிறது? அதன் தன்மை, அதன் உட்பொருள் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...!

அநேகமான பெரிய கோயில்கள் பகுதி பகுதியாகக் காலகாலமாகப் பலருடைய கொடை உள்ளத்தால் தங்களை விரித்துக் கொண்டிருக்கின்றன என்று நீங்கள் கூர்ந்து கவனித்தால் புரியும். தமிழ் மன்னர்களின் பெரிய கோயில்கள் நாயக்க மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. அதில் பிரமாண்ட கல்லால் ஆன நந்தி சுதைச்சிற்பங்களான மாக்காளை எல்லாம் நாயக்க மன்னர்கள் காலத்தவை. ஏற்கெனவே இருக்கிற ஓர் அமைப்பில், அமைப்புக்கு அது கலையோ, சமூகமோ, நிகழ்வுகளால் கட்டமைக்கப்படும் வாழ்வோ எதிலும் காலந்தோறும் மாறுதல்கள் ஏற்படும் என்பதன் குறியீடாக இதைக் கொள்ளலாம். காலகாலமாய் நிலவிய தேவதாசிமுறை ஒழிந்த காலகட்டத்தில் கதை நிகழ்வதை நினைவுபடுத்தலாம். அப்புறம் மாக்காளை பேசுவதில்லை. எந்தச் சிலையும் பேசுவதில்லை என்றாலும் சிவன் கோயில் மாக்காளைகளின் மௌனப் பேச்சுக்கு ஒரு மலையளவான பொருள் இருக்கிறது. கூர்ந்து கவனித்தால் அதன் அசை போடுகிற சத்தத்தையும் அதன் பெருமூச்சையும் நீங்கள் கேட்கக் கூடும். இந்த நாவல் சில கதாபாத்திரங்களின் நினைவோட்டத்தையும், அவர்களின் நிறைவேறாத ஆசைகளால் உண்டாக்கும் பெருமூச்சையும் சுட்டுகிறது. நந்தி தேவர்தான் சித்த மரபின் மூலவர் என்கிற தொன்மம் ஒன்றும் சுட்டப்படுகிறது இந்த நாவலில்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் கவிதைகள் போலவே நாவலும் நினைவுகூரல் போலவே அமைகின்றன...!

நீங்கள் சரியாகச் சொன்னீர்கள் நினைவுகூரல் என்று. நினைவுகள் வேறு நினைவுகூர்தல் வேறு. (Memories and Nostalgia) நினைவுகூர்தல் என்பதே இறந்தகாலத்திற்காக ஏங்குவது என்பதுதான். 'நீர் பின்னுமந்நிலை பெற வேண்டீரோ' என்று பாரதி ஒரு (மொழிபெயர்ப்பு அல்லது தழுவல்) கவிதையில் சொல்லுவது உண்மைதான். ஒரு பழைய பாடல் கிளர்த்தும் நினைவுகளால்தான் அந்தப்பாடலில் நமக்கு அதிக லயிப்பு ஏற்படுகிறது என்றால் மிகையில்லை. கவிதையின் நினைவுகூரலில் பால்ய காலக் காதலின் தூய்மையும் உண்மையும் இருப்பது போல, பால்ய காலத்தின் பல நினைவுகள் ஐம்புலனையும் நிரப்பி ஐந்து வகை ருசிகளையும் உணர்த்தக் கூடியவை. அவை என்னை இளமையாக உணரச் செய்கின்றன. பல அரசியல் சமூக நிகழ்வுகளை ஆவணப்படுத்த கவிதையையும் நாவலையும் பயன்படுத்துகிறேன்.

கலாப்ரியா
கலாப்ரியா

கவிதையிலிருந்து வேறுபாடான உரைநடைக்கு மாற்றிக் கொண்டது எவ்விதம்?

நான் இன்னும் கவிதை எழுதுகிறவன்தான். எல்லாக் கலைஞர்களுக்கும் அது நிகழ்கிறது. தாகூரானாலும் பாரதியானாலும் அல்லது எந்த மேல்நாட்டுப் படைப்பாளிகளானாலும் கவிதையை எழுதியவர்கள் உரைநடைக்கு இயல்பாக நகர்ந்திருக்கிறார்கள் (transition). அது ஒருவகை இயற்கைச் செயல்பாடு (phenomena) போல. எனக்கும் அது நிகழ்ந்தது. இன்னும் எளிதாகச் சொன்னால் கல்யாண்ஜியைப்பின் தொடர்ந்துதானே நான் கவிதை எழுதவே ஆரம்பித்தேன். அதே போல வண்ணதாசனைப் பின் தொடர்ந்து அந்தக் காலத்தில் சில சிறுகதைகள் எழுதினேன். கணையாழி கசடதபற, ஞானரதம் இதழ்களில் கூட வெளிவந்தன. ஆனால் அதையெல்லாம் கதை என்று சொல்ல முடியாது. நாவல் முயற்சிகளும் மேற்கொண்டேன். அப்போது அவை வசப்படவே இல்லை. இப்போது அதன் நாடி பிடிபட்டிருக்கிறது.

கலாப்ரியா
கலாப்ரியா

மாக்காளையை தமிழ் வாசகர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

அநேகமாக இரண்டு தலைமுறைகள் அறிந்திரவே செய்திராத தமிழ் வாழ்வும் சினிமா, அரசியல், சமூக நிகழ்வுகளும் ஊடாடும் ஓர் ஆவணமாகப் பார்க்கலாம். ’தொட்டால் பூமலரும்’ என்று பாட்டுப் பாடிக் கொண்டு தொடாமலே நடித்த சினிமாக்காதலையும், உள்ளுறை வெப்பமாக எல்லார் மத்தியிலும் இருந்த, ஆதிகாலாத்திலிருந்தே தொடரும் தூய்மையான ஆண் பெண் உறவுகளையும் உணர்வுகளையும் பற்றி அறிய முடியும். விளக்கின் திரியைத் தூண்டி வெளிச்சம் பெறுவது போலவே பாலியல் வேட்கையால் வாழ்வின் அந்நியோனியங்கள் அர்த்தம் பெறுவதை இந்நாவல் சொல்கிறது. முக்கியமாக பெண்களின் வாழ்வும் அபிலாசைகளும் எப்படியெல்லாம் சுரண்டப்பட்டன, போகப் பொருளாகப் பகடையாடப்படும் ஒரு பெண்ணுக்கான தனித்த அன்பும் காதலும் இன்னொரு பெண்ணால் எப்படிச் சாத்தியப்பட்டது, தாய் ஒருத்தி ஏங்கிய ஆதி நாள் அன்பினை அவள் மகள் எப்படிச் சரியாகப் புரிந்து கொண்டு தன் உள்ளக்கிடக்கைகளை எப்படி ஒளித்து வைக்கிறாள் என்பதெல்லாம் பூடகமான விரசமற்ற மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது என்று உணரக்கூடும். கீழ் நடுத்தரவர்க்கத்தின் வாழ்க்கைப்பாடுகள் அவர்களது கொண்டாட்டங்கள், ஏமாற்றங்களை நினைவுகூரலின் கண்ணோட்டத்தில் விரிவாகப் பேசுவதே இந்நாவல்.