
வாழ்நாளில் எழுதிய கடைசி ஆய்வுக் கட்டுரையின் முதல் பக்கம் அது...
1984 அக்டோபர் முதல் வாரம். மசூரி ஐ.ஏ.எஸ் அகாடெமியில் சிந்துவெளி எழுத்துப் பொறிப்புகள் பற்றி ஐராவதம் மகாதேவன் உரை நிகழ்த்தினார். அவர் தங்கியிருக்கும் விருந்தினர் விடுதிக்குச் செல்கிறேன். அதுவரை அவரை நான் நேரில் பார்த்ததில்லை. எனினும் அவர் என்னை நினைவில் வைத்திருப்பார் என்று தோன்றுகிறது. நேரில் பார்த்தால்தான் சந்திப்பா?
1980-ல் மதுரையில் ஒருநாள் தினமணி நாளிதழ் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் என்னிடம் கேட்டார். “உன்னை உதவி ஆசிரியராக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன். ஆறு மாதம் பயிற்சிக் காலம். ஊக்கத்தொகை மாதம் ரூபாய் 240. சம்மதமா?”
“சம்மதம்” என்றேன்.
அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டிருந்தேன். இதழியல் விருப்பப் பாடம். வகுப்புத் தோழர்களுடன் தினமணி அலுவலகத்தில் ஒருவார பயிற்சிக்குச் சென்ற இடத்தில் எதிர்பாராமல் கிட்டிய வாய்ப்பு.

வேலை பார்க்கத் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நியமான ஆணை கைக்கு வரவில்லை. அப்போதுதான் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி விருப்ப ஓய்வு பெற்று இந்தியன் எக்ஸ்பிரஸ்-தினமணி குழுமத்தின் செயல் இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்தார். குடிமைப்பணிபோல மூன்று கட்டத் தேர்வு நடத்தும் புதிய நியமன முறையை அவர் அறிமுகம் செய்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவர் பெயர் ஐராவதம் மகாதேவன்.
ஒருநாள் திடீரென்று சென்னையிலிருந்து சிவராமன் ‘ஆர்டர் வந்துவிட்டதா?’ என்று போனில் விசாரித்தார்.
’இல்லை’ என்றதும் “உன்னை யாராவது பரீட்சை எழுதச் சொன்னால் எழுதாதே. உனக்கு சிரமம் கொடுத்துவிட்டேன். நீ வேலை பார்த்த ஆறு வாரத்திற்கு எனது கையிலிருந்து சம்பளம் கொடுத்துவிடுகிறேன். நீ வேறு வேலை பார்த்துக் கொள்” என்றார். அதற்கும் `சரி’ என்றேன். அன்று அந்த விஷயம் மும்பையிலிருந்த ராம்நாத் கோயங்கா வரைக்கும் போய்விட்டதாம். மறுநாள் என் கைக்கு உதவி ஆசிரியராக நியமன ஆணை வந்தது.
அதே ஐராவதம் மகாதேவன். அவர் வைத்த தேர்வை எழுதாமல் தினமணியில் சேர்ந்த நான், இப்போது ஐ.ஏ.எஸ் அகாடெமியில் அவரைப் பார்க்கச் சென்றுகொண்டிருக்கிறேன். மதுரையில் தினமணியில் வேலை பார்த்ததைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டேன். “ஓ... நீங்கள்தான் அந்த பாலகிருஷ்ணனா?” என்றார். ‘‘நீங்கள் தமிழில் ஐ.ஏ.எஸ் எழுதித் தேர்ச்சிபெற்றதையும் கேள்விப்பட்டேன். உண்மையில் கடினமான முயற்சி” என்றார்.
மகாதேவனைச் சந்தித்துவிட்டு ‘லைப்ரரி பாய்ன்ட்’ நோக்கி யோசனையோடு நடக்கிறேன். ஓர் அதிகாரி என்ற முறையில் பணி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள அகாடமிக்கு வருவது பெரிய விஷயம் இல்லை. ஆனால், ஒரு ஆராய்ச்சியாளராக இங்கே வருவேனா!
தமிளி பெயர்ப் பலகையைப் பார்த்து ஜீப்பிலிருந்து இறங்கியதில் தொடங்கி, எங்கெங்கோ பயணித்து மத்தியப்பிரதேசத்தில் பழனி, இடுக்கி, தேக்கடி போன்ற இடப்பெயர்களைக் கண்டறிந்தபோது ஐராவதம் நினைவுக்கு வந்தார். சென்னையில் அவரது வீட்டிற்குச் சென்று எனது ஆய்வுக் கட்டுரையை அளித்தேன். மகிழ்வோடு சொன்னார், “சிந்துவெளி குறித்த ஆய்வுகளுக்கும் இது பயனளிக்கும். இனிமேல் உங்கள் கவனத்தைச் சிந்துவெளிக்குத் திருப்புங்கள்.” அடுத்த முறை அவரைச் சந்தித்து சிந்துவெளி பற்றிப் பேசும்போது என்னை `பாலா’ என்று அழைக்கத் தொடங்கினார்.
2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம். தேர்தல் ஆணையத்தில் எனது அலுவலகம். மசூரி ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. பயிற்சி அதிகாரிகளிடம் என்னைப் பேச அழைத்தார். எனது துறை சார்ந்த அனுபவங்களைப் பகிர அகாடெமிக்குச் செல்வது எனக்கொன்றும் புதிதல்ல. ஆனால் இந்த அழைப்பின் சிறப்பு அதன் தலைப்பு. “உங்களுடைய சிந்துவெளி ஆராய்ச்சி பற்றிக் கேள்விப்பட்டேன். அதுபற்றி ஓர் உரை நிகழ்த்த முடியுமா?” என்று கேட்டார். அக்டோபர் மாதம் முதல் வாரம், அதே அரங்கம். ஐ.எம் சார் நின்ற மேடையில் நின்று அதே சிந்துவெளி பற்றி நான் பேசுகிறேன். 23 ஆண்டுகள் இடைவெளி.
2010-ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் நான் ஆய்வுரை நிகழ்த்த அவர்தான் காரணம். சிந்துவெளி நிலப்பகுதிகளில் சங்க இலக்கிய இடப்பெயர்களைக் கண்டறிந்து அதற்கு ‘கொற்கை-வஞ்சி-தொண்டி வளாகம்’ (KVT Complex) என்று பெயர் சூட்டி அஸ்கோ பர்போலா, மகாதேவன் முன்னிலையில் நான் அறிவித்த கோவை மாநாடு. என் கனவு மெய்ப்பட்ட மணித்துளி. என் மெய்வருத்தக் கூலி.
சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் 2007-ம் ஆண்டு சிந்துவெளி ஆய்வு மையத்தை மகாதேவன் நிறுவினார். அதன் மதிப்புறு ஆலோசகராகவும் இருந்தார். 2012-ல் அவரது உடல்நலம் சிறிது தளர்வடைந்த நிலையில் அந்த மையத்தில் அவர் வகித்த பொறுப்பை ஏற்க எனது பெயரைப் பரிந்துரைத்தார்.
2016-ல் ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற எனது நூலுக்கு அணிந்துரை எழுதும்படி ஐ.எம் சாரை நேரில் வேண்டினேன். சில வாரங்கள் ஆகியும் அணிந்துரை கிடைக்கவில்லை. அவரது உடல்நலம் சரியில்லை என்பதை அறிவேன். அதனால் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாதென்று அணிந்துரை இல்லாமல் நூலை அச்சுக்கு அனுப்பினேன். நூல் அச்சில் இருக்கும்போது அணிந்துரை எழுதி மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, “படித்தாயா பாலா, சரியாக இருக்கிறதா” என்று அவர் தொலைபேசியில் கேட்டபோது கண்களில் குளம்.
ஐராவதம் மகாதேவன் மனதாலும் செயலாலும் மிக எளிமையானவர். இறுதிவரை அவரது தேடுதலின் தீவிரம் குறையவே இல்லை. அது அனைவருக்கும் வாய்க்காத தவநிலை; தேடல்களால் நிறைந்த தியானம்.
“உடல்நலம் சரியாக இல்லை. பத்து நிமிடம் மட்டும் பேசலாம்” என்பார். ஆனால், சிந்துவெளிக் குறியீடுகள் பற்றி நெடுநேரம் பேசுவதோடு மட்டுமல்லாமல் எழுதிக் காட்டவும் தொடங்கிவிடுவார்.
20 செப்டம்பர் 2018, சென்னையில் ‘பானைத் தடம்’ (Pot Route) என்ற தலைப்பில் எனது ஆங்கில உரை. அப்போது அவரது உடல்நலம் சரியில்லை. அதனால் அவர் வரவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. திடீரென்று அவர் வருகிறார் என்ற தகவல் வந்தது. மகிழ்ச்சியும் பயமும். நானும் சுந்தரும் நூலக வாசலில் அவரை வரவேற்று கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறோம். அரங்கில் நுழைந்த அவர் திடீரென்று நின்று எனது தோளில் கை போட்டபடி கேட்கிறார். “நாம் இனிமேலும் எதனால் திராவிடக் கருதுகோள் (Dravidian Hypothesis) என்று சொல்ல வேண்டும். சந்தேகமே இல்லாமல் சிந்துவெளியின் மொழி ஒரு திராவிட மொழியே. அது தொல்தமிழ்தான்.” இதுதான் அவர் எங்களிடம் பேசிய கடைசி வார்த்தைகள். இந்த உரையாடலுக்குச் சாட்சியாக அருகே நின்றார் நண்பர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.
ரோஜா முத்தையா நூலகத்தில் மகாதேவன் நினைவைப் போற்றி நாங்கள் நிறுவிய மார்பளவு செப்புச்சிலை, சிற்பி சந்துருவின் சிற்பாஞ்சலி. மகாதேவன் மீது வெகு மதிப்பு கொண்ட கோபாலகிருஷ்ண காந்தி, ‘இந்து’ ராம் மற்றும் பலர் கலந்துகொண்ட நெகிழ்வான நிகழ்வு அது.
2017-ல் ஒருமுறை அவரைச் சந்திப்பதற்கு நானும் என் மனைவியும் ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்தோம். உரையாடி விடைபெற்ற போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை. என் மனைவியிடம் கூறினார் “இவனை கவனமாகப் பார்த்துக்கொள் அம்மா...”

அவர் மறைவதற்கு மூன்று நாள்களுக்கு முன் சென்னையில் ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை நானும் என் மனைவியும் ஒடிசாவிலிருந்து வந்து பார்த்தோம். அப்போது அவர் பேசும் நிலையில் இல்லை.
இப்போது புவனேஸ்வரத்தில் எனது வாசிப்பறையில் தமிழ் நெடுஞ்சாலையைத் தட்டச்சு செய்கிறேன். வரவேற்பறையில் கண்ணாடி அலமாரியில் லேமினேட் செய்து நான் பிரேம் போட்டு வைத்திருக்கும் அந்த மகத்தான பரிசு நினைவுக்கு வருகிறது. ஐராவதம் மகாதேவன் தனது வாழ்நாளில் எழுதிய கடைசி ஆய்வுக் கட்டுரையின் முதல் பக்கம் அது. ‘பாலாவுக்கு’ என்று ஆரம்பித்து கைப்பட எழுதிய இரண்டு வரிகள். கடைசியில் ஜூன் 4, 2017 என்று தேதியிட்டு சிந்துவெளி எழுத்தில் கையெழுத்திட்டுள்ளார். அந்த இரண்டு வரிகளும் எனக்கானவை என்பதால் அதை இங்கு பதிவிடாமல் நானே வைத்துக்கொள்கிறேன்.
அவர் எனக்கு வகுப்பறையில் பாடம் நடத்திய ஆசிரியர் இல்லை. நான் தமிழ்நாட்டிற்கு வெளியே வாழ்பவன் என்பதால் அவரைச் சந்தித்ததுகூட எப்போதோ ஒரு முறை. ஆனால் சிந்துவெளியுடன் என்னைக் கைகுலுக்கச் சொன்னது அவர்தான். தினமணி, ஐ,ஏ.எஸ், இந்தியவியல், சிந்துவெளி ஆய்வு மையம் என்று தமிழ் நெடுஞ்சாலையில் அவரை எத்தனை முறை கடந்து வந்திருக்கிறேன். எத்தனை வியப்புகளைத் தனது அடிமடியில் வைத்து அடைகாக்கிறது வாழ்க்கை. ஒரு புதினம் போலவும் இருக்கிறது; பல சிறுகதைகளின் தொகுப்பாகவும் தோன்றுகிறது!
மகாதேவன் எழுதியளித்த வரிகளை மீண்டும் வாசிக்கிறேன். தனது பத்து விரல்களையும் மொத்தமாகத் தன் மாணவனுக்கு எழுதிக்கொடுத்த உயில் போன்றது அது. ‘ஏகலைவனுக்கு இப்படி ஓர் ஆசிரியர் கிடைத்திருந்தால்…’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை என்னால்.
இன்னும் குறையாத இழப்புணர்வு, இதை எழுதும்போது கண்ணில் கசிகிற நன்றி. இதுதான் ஐ.எம் சாருக்கும் எனக்குமான உறவின் வரிவடிவம்.
- பயணிப்பேன்...
****

ஐராவதம் மகாதேவன் 2.10.1930 - 26.11.2018
ஐராவதம் மகாதேவன் வேதியியலிலும் சட்டப் படிப்பிலும் பட்டம் பெற்றவர். 1953-ல் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து 1980-ல் விருப்ப ஓய்வு பெற்றார்.
பழந்தமிழரின் குகை, பாறைக் கல்வெட்டுகளிலிருந்தே மகாதேவன் தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார். இக்கல்வெட்டுகளில் சங்ககால ஊர்களின் பெயர்களும், கொடை அளித்தவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதை மகாதேவன் கண்டறிந்தார். இந்த வரி வடிவத்தை அவர் ‘தமிழ் பிராமி’ என்று அழைத்தார். எல்லிஸ் வெளியிட்ட திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயத்தைப் பொதுவெளியின் கவனத்துக்குக் கொண்டுவந்தவர் இவர்தான்.
மகாதேவன் ‘Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth century A.D’ என்ற நூலில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுத்தளித்தார். இது ஆய்வுலகிற்கு அவரளித்த ஆகச்சிறந்த கொடை. 1997-ம் ஆண்டு சிந்துவெளி வரிவடிவங்களைத் தொகுத்து The Indus Script: Texts, Concordance and Tables என்ற தனது முக்கியமான படைப்பை உருவாக்கினார். இந்தியத் தொல்லியல் கழகத்தால் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது.
சிந்துவெளி நாகரிகம் மற்றும் தென் திராவிடப் பண்பாடுகளுக்கு இடையே உள்ள நெருக்கத்தைச் சுட்டிக்காட்டிப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் சிந்துவெளி வரி வடிவங்களைப் பழந்தமிழின் ஊடாக வாசிக்கும் மகாதேவனின் முயற்சி குறிப்பிடத்தக்கது. ‘சிந்துவெளிப் பொறிப்புகளின் (Texts) தொடக்கச் சொற்றொடர் (Opening Phrases) இடப்பெயர்களை உள்ளடக்கி இருக்கக்கூடும்’ என்ற ஐராவதம் மகாதேவனின் கருத்து மிக முக்கியமானது.
- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது