Published:Updated:

`என்னை மாற்றிய புத்தகம் இதுதான்...’ - சுவாரஸ்யமான தகவல் சொல்லும் விஐபிகள்! - #BookDay

புத்தக தினம்
புத்தக தினம்

தனி மனிதனைப் பண்படுத்துதலில், சமூக வளர்ச்சியை மேம்படுத்தியதிலும் புத்தகத்தின் பங்கு மிகப்பெரியது. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு அழிவின்மையான கருவி புத்தகங்களே நிற்கின்றன.

ஏப்ரல் 23 - இன்று உலக புத்தக தினம். தனி மனிதனைப் பண்படுத்துவதிலும், சமூக வளர்ச்சியை மேம்படுத்தியதிலும் புத்தகத்தின் பங்கு மிகப்பெரியது. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு அழிவற்ற கருவிகளாக புத்தகங்களே நிற்கின்றன. பலரது வாழ்வில் ஏதேனும் ஒரு புத்தகம் மாற்றத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கும். பிரபலங்கள் சிலரிடம் 'என்னை மாற்றிய புத்தகம்' அவர்களை பாதித்த புத்தகம் பற்றிக் கேட்டிருந்தோம்.

S .ஜோதி மணி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்:

ஒரு மனிதரை ஆகச் சிறந்தவராய் மெருகேற்றுவது புத்தகங்கள்தாம். புத்தக வாசிப்புதான் என்னை என் வாழ்வில் மேன்மையடையச் செய்தது என்பேன். சிறு வயதிலிருந்தே புத்தக வாசிப்பின் மீது எனக்கு அதிகளவு ஆர்வம் இருந்தது. இப்போதும் அந்த ஆர்வம் குறையாமல் இருக்கிறது. உலகச் சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியபோதுதான் சிந்தனை செறிவுறத் தொடங்கியது. ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வாசித்து பயனடைந்த போதிலும்,

என்னை மிகவும் ஈர்த்தது காந்தியடிகளின் 'சத்திய சோதனை' புத்தகம்தான்.
சத்திய சோதனை
சத்திய சோதனை

அந்தப் புத்தகத்தின் மீதான ஈர்ப்புதான் என்னை இன்று பொது வாழ்வில் இறக்கியிருக்கிறது. 'தனக்காக வாழ்வதல்ல வாழ்க்கை' என்பதை எனக்கு உணர்த்திய புத்தகம் அது. 'என் வாழ்க்கையே எனது செய்தி' என்று காந்தியடிகளால் ஒளிவு மறைவில்லாமல் எழுதப்பட்டதே 'சத்திய சோதனை'.

சத்திய சோதனை புத்தகத்தை நான் வாசிக்கச் செலவழித்த நிமிடங்கள்தான் எனக்கு அர்ப்பணிப்பு என்ற அடிப்படைத் தகுதியை அளித்துள்ளது என்பேன். இந்தப் புத்தக தினத்தில் இளைஞர்கள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்

புதிதாக வாசிப்பை மேற்கொள்ள இருப்பவர்களுக்கு "சத்திய சோதனை" புத்தகத்தைப் பரிந்துரை செய்வேன்.

`கொரோனா சமயத்தில் திருடினால் அரஸ்ட் பண்ணமாட்டாங்க!' -தப்புக்கணக்கு போட்ட திருடனுக்கு நேர்ந்த சோகம்

ரவிக்குமார் எழுத்தாளர், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்:

புத்தக வாசிப்புக்கு எல்லை கிடையாது. தணியாத ஒரே பசி 'அறிவுப் பசி'தான். என்னை இயக்கிக் கொண்டிருக்கும் இயங்கு கருவியாகத்தான் நான் புத்தகங்களைப் பார்க்கிறேன். புத்தக வாசிப்பைப் பொறுத்தவரையில் எந்தத் தனி ஒரு புத்தகமும் என் வாழ்வை வடிவமைத்துவிடவில்லை என்பேன்.

என் சிறு வயதில் தொடங்கி இதுவரை நான் படித்த, படித்துக்கொண்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களும்தான் என்னை இன்று ஓர் எழுத்தாளராகவும் ஒரு நல்ல மனிதனாகவும் மெருகேற்றி இருக்கிறது என்று நினைக்கிறேன். பொதுவாக நான் எந்த ஒரு புத்தகத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. நம்முடைய வாசிப்பை எப்போதும் ஒரு வட்டத்துக்குள் கொண்டுவந்துவிடக்கூடாது.

அனைத்து விதமான புத்தகங்களையும் வாசிக்கவேண்டும். பலதரப்பட்ட புத்தகங்களைப் படிக்கும்போது சிந்தனைத் தெளிவு பெரும். எப்போதும் புத்தகங்கள் மீதான தாகம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். ஒரு புத்தகத்தில் ஒரு விஷயத்தை ஒரு கோணத்தில் பதிவு செய்திருப்பார்கள். அதே விஷயத்தை இன்னொரு புத்தகத்தில் ஆசிரியர் வேறு கோணத்தில் பதிவு செய்திருப்பார்.

புத்தக தினம்
புத்தக தினம்

இப்படி ஒரே விஷயத்தைப் பல கோணங்களில் படிக்கும்போது நம் சிந்தனை விரிவடையும். அது நம்மைத் தனித்துவமான பாதையில் சிந்திக்கத் தூண்டும். எனவே நாம் புத்தக வாசிப்பை மேம்படுத்தும்போது அந்தப் புத்தகங்கள் நம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் நூலகத்திற்குச் சென்று புத்தகம் வாசிப்போரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இந்த நாளில் பொது நூலக வாசிப்பை நாம் அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். ஒரு புத்தகத்தைத் தொட்டு உணர்ந்து படித்து அதன் கடைசிப் பக்கம் வரையிலும் அதனோடு பயணிக்கும்போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. எனவே இந்த நாளிலிருந்து இளைஞர்கள் பொது நூலக புத்தக வாசிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதே நான் அவர்களுக்கு வைக்கும் தாழ்மையான வேண்டுகோள்.

மனுஷ்யபுத்திரன் - கவிஞர்

என்னை மாற்றிய புத்தகம் என்றால் 20 வயதில் நான் படித்த எங்கெல்ஸ் எழுதிய "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" புத்தகம்.
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்

அதுவரைக்கும் இந்த உலகத்தைப் பற்றி இருந்த என் பார்வையையும் நம்பிக்கையையும் மாற்றியமைத்த புத்தகம். ஒரு குடும்பம் எப்படிச் சமூகத்தால் உருவாக்கப்படுகின்றது. சொத்து உருவாக்கப்படுவதன் மூலமாக எப்படி குடும்பம் வாழ்கின்றது. குடும்பம், தனிச்சொத்து அடிப்படையில் அரசு எப்படி உருவாகின்றன என்று அறிவியல்பூர்வமாக ஒரு பார்வையை அளித்தது. எல்லாச் சமூகப்பண்பாடு பற்றிய என் எல்லாப் பார்வையுமே இப்புத்தகம் உருவாக்கியது. சமூகம், அறிவியல் சிந்தனையைக் கொடுத்த ஒரு பைபிள் போன்றது இப்புத்தகம். என்னை மாற்றிய ஒரு மிகப் பெரிய புத்தகம். குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் இப் புத்தகமாகும்.

சாலமன் பாப்பையா- பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், எழுத்தாளர்:

என்னை மாற்றிய புத்தகம் என்றால், 'திரு.வி.கல்யாண சுந்தரனாரின் புத்தகங்கள்தான்'. அதிலும் குறிப்பாக அவரின் 'இந்தியாவும் விடுதலையும்' என்ற புத்தகம் என்னை வித்தியாசமாகச் சிந்திக்கத் தூண்டியது. காரல் மார்க்ஸின் 'கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ' பாரதியாரின் கட்டுரைகள், வள்ளல் பெருமானின் வாசகங்கள் ஆகியன என்னைப் புடம்போட்ட புத்தகங்கள் ஆகும்" என்று கூறினார்.

இந்தியாவும் விடுதலையும்
இந்தியாவும் விடுதலையும்

சு.வெங்கடேசன்- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர்.

J.H. நெல்சன் எழுதிய தி மெசுரா கன்ட்ரி மேனுவல் ( The Madura Country Manual )1850களில் மதுரையைப் பற்றி பிரிட்டிஷ்காரர்களால், அவர்களின் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்ட புத்தகம்.

மதுரையில் நடந்த ஆட்சி, சமூகம், மதம் என்று முழுவதுமாகப் பதியப்பட்ட முதல் பதிவு இப்புத்தகம். இப்புத்தகம் விழிப்புணர்வூட்டும் புத்தகமாகும். பதினெட்டாம் நூற்றாண்டின் சமூகத்தைப் பற்றிய ஒரு பெரும் திறப்பு. இப்புத்தகத்தைப் படிக்கையில் இது பிரிட்டிஷாரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது என்ற மனநிலையில் படிக்கவேண்டும். இந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலம் பழைமைக்கும் புதுமைக்கும் இடையே உள்ள காலம். பழைய கட்டமைப்பு அழிந்து கிழக்கிந்திய கம்பெனியால் புதிய நடைமுறைக்குள் சமூகமே நுழையும் நேரம் . அந்த நேரத்தில் தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொண்டு நுட்பமாக பதிந்துள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் வேறு எந்த நகரத்தைப் பற்றியும் இவ்வளவு துல்லியமாக பிரிட்டிஷார் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு