Published:Updated:

வாசிப்பு, எழுத்து, பேச்சு - தமிழுக்காக வாழ்ந்த இளங்குமரனாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

இளங்குமரனார்
இளங்குமரனார்

தனக்குக் கிடைத்த பரிசுத்தொகை அனைத்தையும் தமிழ் மொழி வளர்ச்சி பணிக்கே செலவிட்டார். திருச்சியில் உருவாக்கிய ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட நூலகத்தை பல்கலைக்கழக மாணவர்களுக்கு அர்ப்பணித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழர் பண்பாட்டு நீட்சிக்காகவும் வாழ்ந்து, எழுதி, பேசி வள்ளுவர் நெறியை மக்களிடம் பரப்பி, தமிழ்வழி திருமணங்களை ஓர் இயக்கமாக நடத்தி அனைவர் மனத்திலும் இடம்பிடித்து பல்வேறு விருதுகளை பெற்று தமிழுக்காகவே வாழ்ந்த மூத்த தமிழறிஞர் இளங்குமரனார் 91 வயதில் மரணமடைந்தார்.

இளங்குமரனார்
இளங்குமரனார்

மதுரை திருநகரில் வசித்து வந்த இளங்குமரனார் சங்கரன்கோயில் அருகே வாழவந்தாள்புரத்தில் 1930-ல் பிறந்தவர். சிறு வயதிலயே தமிழ் இலக்கிய நூல்களை கற்று தேர்ந்ததால் 19 வயதில் கரிவலம்வந்தநல்லுரில் தமிழாசிரியராக பணியை தொடங்கினார். அதன் பின்பு சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். சங்க நூல்களை ஆய்வு செய்யத் தொடங்கினார். கிருஷ்ணன் என்ற தன் பெயரை இளங்குமரனார் என்று தூய தமிழில் மாற்றிக் கொண்டார்.

முழுமையான பிரதிகள் கிடைக்காமல் அழியும் நிலையில் இருந்த குண்டலகேசி காப்பியத்தை நிறைவு செய்து 1958-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றினார். அன்று முதல் சங்க இலக்கியங்களுக்கு திறனாய்வு நூல்களை எழுத ஆரம்பித்தார்.

இளங்குமரனார்
இளங்குமரனார்

பாவாணர், பாரதிதாசன் போன்ற தமிழறிஞர்களின் ஆய்வு நூல்களை தொகுக்கும் பணியையும் செய்தார். இவர் எளிய நடையில் எழுதிய புறநானூறு தொகுப்பு நூலை 2003-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வெளியிட்டார்.

பழந்தமிழர் திருமண முறையை மக்கள் மத்தியில் பரப்பினார். இதுவரை ஆடம்பரம் இல்லாத 5000 தமிழ் வழித் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். தமிழாசிரியர் கழகத்தில் பணியாற்றி ஆசிரியர் நலனுக்காகப் பாடுபட்டவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, திருவிக விருது முதல், திராவிடர் கழகத்தின் பெரியார் விருது, கம்பர் விருது, பதிப்பு செம்மல் விருது, பழ.நெடுமாறன் வழங்கிய உலகப் பெருந்தமிழர் விருது, கனடா இலக்கிய விருது என பல அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் வழங்கிய விருதுகளை பெற்றவர்.

ஓய்வே இல்லாமல் தொடர்ந்து ஆய்வு நூல்களை எழுதியும், இலக்கிய கூட்டங்களில் உரையாற்றியும், தமிழ் வழித்திருமணங்களை நடத்தியும் வந்த இளங்குமரனார் தனக்கு கிடைத்த பரிசுத்தொகை அனைத்தையும் தமிழ் மொழி வளர்ச்சி பணிக்கே செலவிட்டார். திருச்சியில் உருவாக்கிய ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட நூலகத்தை பல்கலைக்கழக மாணவர்களுக்கு அர்ப்பணித்தார்.

இளங்குமரனார் இறுதிப் பயணம்
இளங்குமரனார் இறுதிப் பயணம்

வாழ்நாள் முழுவதும் தமிழுக்கு பணியாற்றிய இளங்குமரனார் நேற்று இரவு மரணமடைந்தார்.

இளங்குமாரனாரின் மறைவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் பழ.நெடுமாறன் விடுத்துள்ள இரங்கலில், "நம் மத்தியில் மூத்த தமிழறிஞராக வலம் வந்து தமிழின் சிறப்புகளை தனது எழுத்தாலும், பேச்சாலும் அனைவருக்கும் ஊட்டிப் பெருமிதம் கொள்ள வைத்த மாபெரும் தமிழறிஞர் இரா.இளம்குமரனார் காலமான செய்தியால் ஆழ்ந்த துயர் அடைந்தேன்.

தமிழறிஞர் இளங்குமரனார் காலமானார் - தமிழ் மொழி வளர்ச்சிக்காக உழைத்த அவரது வாழ்வும் பணிகளும்!

முன்னாள் பிரதமர் நேரு, குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆகியோரால் பாராட்டப் பெற்றவர். தமிழக அரசின் திரு.வி.க. விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். 2002-ம் ஆண்டில் உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்க விழா மாநாட்டில் உலகப் பெருந்தமிழர் விருதினை அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம். அவரின் மறைவின் மூலம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. உலகமெங்கும் வாழ்கிற தமிழர்கள் சார்பில் அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு மரியாதை
அரசு மரியாதை

மதுரை மாவட்ட நிர்வாகத்தினர், அமைச்சர், எம்.பி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இளங்குமரனாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததால், இளங்குமரனாரின் இறுதிப் பயணத்தின்போது காவல்துறை சார்பில் மரியாதை அளித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு