Published:Updated:

பிரான்சிஸ் கிருபா - விரும்பியவாறே வாழ்ந்தவர், தர்க்கங்களுக்கும் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டவர்!

மும்பையிலிருந்து வெளியாகும் மராத்தி முரசு மற்றும் ஓல்டு இந்தியப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கிறார், தான் கல்வியைப் பாதியில் விட்டுவிட்ட குற்றவுணர்வில் தொடர்ந்து தமிழில் கிடைப்பதையெல்லாம் வாசிக்கிறார், தன்னை மேம்படுத்தும் செயல் என அதை விடாப்பிடியாகச் செய்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோயம்பேட்டில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவரைக் கொலை செய்ய முயன்றார் எனக் காவல்துறையினர் கவிஞர் பிரான்சிஸ் கிருபாவைக் கைது செய்தனர். அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு முகமெல்லாம் காயங்களுடன் அந்தக் கவிஞன் கம்பீரமாகவே அமர்ந்திருந்தான். அவன் நண்பர்கள் தகவல் அறிந்து காவல்நிலையத்திற்கு வந்தார்கள். அவன் மாறுபட்ட தோற்றத்தில் நீண்ட தாடியுடன் யாரேனும் நம்மைக் காப்பாற்ற வருவார்கள் என்றெல்லாம் காத்திருக்கவில்லை. அவன் பக்கம் உண்மையிருக்கிறது, அறமிருக்கிறது என்று இருமாப்பை பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனின் நண்பர்கள் வர, கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட இளைஞரின் பிரேதப் பரிசோதனைச் சான்றும், கோயம்பேட்டுப் பேருந்து நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளும் வந்தன. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்ற கவிஞர் பிரான்சிஸ் கிருபா முயன்றார் என்பது சாட்சியங்களின் மூலம் தெரியவந்தது. அந்த இளைஞர் வலிப்பு ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மாரடைப்பில்தான் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனைச் சான்றும் தெரிவித்தது. அவனது வழக்கமான புன்னகையுடன் கம்பீரமாக உண்மையை இன்னும் இறுக்கமாகப் பற்றியபடி பிரான்சிஸ் கிருபாவை வரலாறு விடுதலை செய்தது.

பிரான்சிஸ் கிருபா
பிரான்சிஸ் கிருபா

இப்படி ஒரு காட்சி நம்மைச் சுற்றி நடக்கிறது, நாம் சாலையில் செல்லும்போது நம் கண்முன்னே ஒரு விபத்து நடைபெறுகிறது, நம்மில் எத்தனை பேர் உடன் அதில் களம் கண்டு முகம் தெரியாதவருக்கு உதவி செய்வோம் என்கிற கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். உனக்கு எதுக்கு வம்பு, உன் வேலையைப் பாரு என்றே இந்தச் சமூகம் நம்மைப் பக்குவப்படுத்துகிறது. ஆனால் இந்தச் சமூகத்தின் விதிகளுக்கு எதிராக தொடர்ந்து எதிர்நீச்சல் போடுபவனாகவே தன் வாழ்நாள் எல்லாம் வாழ்ந்து மடிந்திருக்கிறான் கவிஞர் பிரான்சிஸ் கிருபா.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பத்தினிப்பாறை என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா 8ஆம் வகுப்பில் தனது வகுப்பறையை விட்டு வெளியேறி மும்பை செல்கிறார். டீக்கடையில் வேலை செய்துகொண்டே மாலை நேரங்களில் லேத் பட்டறையில் கடைசல் வேலைகளைப் பழகுகிறார். மெல்ல மெல்ல அந்த இரும்புக் கடைசல் வேலைகளில் கைதேர்ந்தவராக, நுட்பமான வேலைகளுக்கு இவன்தான் என்கிற ரீதியில் பெயர் எடுக்கிறார். பெயரும் வருமானமும் கிடைக்கிறது, வார இறுதிகளில் கிரிக்கெட் விளையாட்டு வீரராக மிளிர்கிறார். கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியுடன் விளையாடுகிறார். அவருக்கு நெருக்கமாகிறார். இந்தி நடிகர் நவீன் நிஸ்சல் அவர்களின் குடும்ப நண்பராகிறார், அவரது வீட்டிற்குப் போகவர சினிமா ஆசை முளைவிடுகிறது, இந்தி சினிமாவிற்குள் நுழைய ஆசைப்படுகிறார், முயலுகிறார்.

பிரான்சிஸ் கிருபா
பிரான்சிஸ் கிருபா

மும்பையிலிருந்து வெளியாகும் மராத்தி முரசு மற்றும் ஓல்டு இந்தியப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கிறார். தான் கல்வியைப் பாதியில் விட்டுவிட்ட குற்றவுணர்வில் தொடர்ந்து தமிழில் கிடைப்பதையெல்லாம் வாசிக்கிறார், தன்னை மேம்படுத்தும் செயல் என அதை விடாப்பிடியாகச் செய்கிறார். மெல்ல அந்தப் பத்திரிகைகளில் வெளிவரும் ஞாயிறு மலர்களில் கவிதைகள் எழுதத் தொடங்குகிறார். மும்பைத் தமிழர்கள் மத்தியில் எழுத்தாளர் என்கிற அங்கீகாரமும் கிடைக்கிறது. இறை ச.ராசேந்திரன், செம்பூர் ஜெயராஜ் என்கிற நண்பர்கள் கிருபாவை முக்கியமான நபர் எனக் கருதுகிறார்கள். அனாதையாக மும்பைக்கு வந்த சிறுவன் ஓர் அடையாளமாக மாறுகிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் பிரான்சிஸ் கிருபாவின் லேத் பட்டறை இடித்துத் தரைமட்டமாக்கப்படுகிறது, அதை மதவாதிகள் இடிக்கவில்லை. மாறாக தான் தொழில் செய்து முன்னுக்கு வருவதை விரும்பாத காரியவாதிகள்தான் இடித்தார்கள் என்பதை உளமார நம்புகிறார். ஒரு லேத் பட்டறையின் முதலாளியாக இருந்துவிட்டு இனி மீண்டும் ஒரு தொழிலாளியாகப் போவது என்பது மனதுக்கு பெரும் சங்கடத்தைத் தருகிறது. இந்தக் கடன் சுமை, தொழில் போட்டி மற்றும் விரோதத்தைத் தாக்குப்பிடிக்க இயலாது எனக் கருதி சென்னை நோக்கிப் பயணப்படுகிறார்.

துயரத்தில் உறவினர்கள்
துயரத்தில் உறவினர்கள்

சென்னையில் பிரான்சிஸ் கிருபா, யூமா.வாசுகியைச் சந்திக்கிறார், இதுவே அவர் வாழ்வின் ஆகப்பெரிய திருப்பமாக மாறப்போகிறது என்பதை அவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. பிரான்ஸ் கிருபாவின் கவிதைகளை வாசித்த யூமாவிற்கு பெரும் நம்பிக்கை பிறக்கிறது, நவீன இலக்கியம் நோக்கி அவரை மடைமாற்றுகிறார். துடிப்பு மிக்க இளைஞனாக கிருபா சரசரவெனப் பற்றியேறுகிறார். தேவதேவன், கலாப்ரியா, விக்கிரமாதித்தியன், வண்ணதாசன் என அவரது உலகம் விசாலப்படுகிறது. அவரது வாசிப்பு அவரை இன்னும் செம்மைப்படுத்துகிறது. கிருபாவைத் தமிழினி வசந்தகுமாருக்கு அறிமுகம் செய்கிறார் யூமா. பத்திரிகை, சினிமா என அலைபாய்கிறது வாழ்க்கை.

தமிழ் வாசகர்களுக்கு இது துயரத்தின் பருவமோ... கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார்!

ஐந்து ஆண்டுகள் சென்னையிலிருந்து காணாமல்போகும் கிருபா ஒரு விதமான பித்து நிலையை அடைகிறார். தனது சொந்த கிராமத்தில் சங்கிலியால் உடையமரத்தில் கட்டப்படுகிறார். சங்கிலிகளிலிருந்து விடுபட்டு சென்னைக்கும் தனது சொற்களுக்குள்ளும் திரும்புகிறார் கிருபா. சங்க இலக்கியங்களில் மூழ்குகிறார், தனது படைப்பு எல்லைகளை விரிவுபடுத்துகிறார், தனது சொந்த கிராமத்திற்கும் வாழ்விற்கும் பயணிக்கிறார்.

சந்தனபாண்டியன், அமலா, சாரா என சாகாவரம் பெற்ற கதாபாத்திரங்களை உலவ விடுகிறார், அவர்களுடன் அவரும் இணைந்து வானத்தின் உச்சியைத் தொடுகிறார். அதீத செயலூக்கம், படைப்பூக்கம் பெற்ற படைப்பாக அந்த ஆண்டின் 'ஆனந்த விகடன் சிறந்த புதினம்' விருதை`கன்னி’ பெறுகிறது. பல விருதுகள் அவனை வந்தடைந்தபோதும் அது அவனை எதுவும் செய்துவிடாமல் பார்த்துக்கொண்டான். ஒரு கலைஞன் அப்படித்தானே இருக்க முடியும்.
பிரான்சிஸ் கிருபா
பிரான்சிஸ் கிருபா

கவிதை எழுதுவதை ஒரு தொடர் செயல்பாடாக வைத்திருந்தான். சென்னையில் அவன் தனது பிரியத்திற்குரியவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவனது சட்டைப் பையில் இருந்து காகிதங்களை எடுத்துக் கொடுத்து வாசிக்கச் சொல்வான். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் என அவனது சட்டைப் பையில் இருந்து வந்த நீள் காகிதங்கள் கவிதைத் தொகுப்புகளாகத் தமிழ் சமூகத்தில் வலம் வருகின்றன.

வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்ளிட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதினான். காமராஜர் படத்திற்கு வசனம் எழுதினான். தேவதேவன் குறித்த ஒரு முழுமையான ஆவணப்படம் எடுத்து ஒரு இயக்குநராகவும் மிளிர்ந்தான்.

எந்த இயக்கத்திலும், குழுவிலும் தன்னைப் பொருத்திக்கொள்ளாமல் பெரும்பாலும் தனிமையில் இயங்குபவனாக பிரான்சிஸ் கிருபா தன்னை நிலைநிறுத்தினான். எனினும் தொடர்ந்து தமிழ் இலக்கிய வெளியில் கவனிக்கப்பட்டு வருபவனாக அவனது படைப்புகள் கவனிக்கப்பட்டன.

'கன்னி' நாவலை இன்றும் வாசிப்பவர்களின் உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் அப்புதினம், உயிரைப் பிடித்துத் திருகவும் செய்கிறது. அப்படியொரு காதல், அப்படியொரு வலியை அப்புதினம் வாசிப்பவருக்குக் கொடுக்கவே செய்கிறது. காதலின் வலியை அனுபவித்தவர்களுக்கு அப்புதினம் வாழ்வின் இறைநூல்.

மனநிலைப் பிறழ்வும், பித்துநிலையும் என அவன் எழுத்தில் வடித்த மனவுலகத்தின் தீவிரத்தை இதுவரை யாரும் விவரிக்க முயன்றதில்லை, முயலவும் முடியாது.

அவன் விவரித்த வாஞ்சையும் தாய்மையும் காதலும் திமிரும் பெண்மையும் எவரும் இன்றும் நெருங்க முயன்றதில்லை.

இறுதி அஞ்சலி
இறுதி அஞ்சலி

இதெல்லாம் அவனுள் மொழி விளையாடிய அதன் லாகவத்தின் உச்சம் என்றால் மிகையில்லை, மொழி அவ்வாறு அனைவருக்குள்ளும் விளையாடுவதில்லை. மொழி தன்னை நேசிக்கும் சிலரையே தேர்வு செய்கிறது. அவர்களின் மூளையில், நரம்புகளில் ஏறி நின்று விளையாடுகிறது, அப்படிப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையாக பிரான்சிஸ் கிருபா இருந்தார். பிரான்சிஸ் கிருபா யாரிடத்திலும் கருணையைக் கோரியதில்லை, யார் உதவியையும் எதிர்பார்த்து நின்றதில்லை, அவன் தன் போக்கில் வாழ்ந்தான், யாருக்கும் எந்த வித உறுத்தலையும் தராமல் வாழ்ந்தான்.

ஒரு போன் வரும் போது ஒரு சிட்டுக்குருவி சாகிறது என்று கேள்விப்பட்டதுமே அது உண்மையா இல்லையா என்றெல்லாம் அவன் ஆய்வு செய்யவில்லை. மாறாக, தனது அலைபேசியை விட்டெறிந்தான் பிரான்சி கிருபா. இந்தத் தகவலுக்குப் பிறகு என்னால் அலைபேசியில் பேசமுடியவிலை என்றான்.
``உங்களுக்குத்தான் அவர் கவிஞர்; எங்களுக்கு கேப்டன்" - நெகிழும் ஃபிரான்சிஸ் கிருபா நண்பர்கள்!

இந்தச் சமூக ஒழுங்கமைப்பிற்குள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இயலாமற்போன ஓர் உண்மையான கவிஞனாக பிரான்சிஸ் கிருபா திகழ்ந்தான். கிருபாவின் உலகத்தினை தர்க்கங்களுக்கும் கணிப்புகளுக்குள்ளும் அடக்கிவிட முடியாது. அவன் ஒரு அதிபுத்திசாலி எழுத்தாளர் என்கிறார் தமிழினி வசந்தகுமார்.

கவிஞனின் மரணம் இந்தப் பூமியில் ஒரு வெற்றிடத்தை உண்டாக்கிவிடுகிறது. மரணம் இயல்பானது இல்லை. யாருக்கும் சாக விருப்பமிருப்பதில்லை. இறந்த பிறகு அவனிருந்த வெற்றிடம் யாராலும் நிரப்பக்கூடியதுமில்லை என்கிறார் கவிஞர் ரமேஷ் பிரேதன்.

எடுத்துச் செல்லப்படும் உடல்
எடுத்துச் செல்லப்படும் உடல்

“'கன்னி' நாவல் ஒரு நெடுங்கவிதை. அவரது மறைவின்பின், `அவர் அப்படி இருந்திருக்கலாம்; இப்படி வாழ்ந்திருக்கலாம்’ என்றெல்லாம் நான் அதிகப்பிரசங்கித்தனம் பண்ணப் போவதில்லை. அவர், தான் விரும்பியவாறே வாழ்ந்தார்; மறைந்தார். நூறு ஆண்டுகள் ஒருவர் ஆரோக்கியமாக வாழ்ந்தாலும், 'கன்னி' போன்றதொரு நாவலையோ பிரான்சிஸ் கிருபாவால் எழுதப்பட்ட அதியற்புதமான கவிதைகளையோ எழுதிவிட இயலாது’’ என்கிற கவிஞர் தமிழ்நதியின் வரிகளின் அர்த்தத்தை இந்தச் சமூகத்தில் எத்தனை பேரால் உணர முடியும் என்று தெரியவில்லை.

'சொற்களில் இருந்து அர்த்தங்கள் மெளனத்திற்குத் திரும்பும் வழி இது' என்கிற கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் வரிகளில் மட்டுமே அடங்கியிருக்கிறது அவரது சொற்களின் அர்த்தம்.

துறவியின் வாழ்வை வாழ்ந்த பிரான்சிஸ் கிருபா தன் மும்பை வாழ்வை எழுதாமல் சென்றுவிட்டான் என்கிற உணர்வு அவனது மும்பை சகபாடியான எனக்குண்டு, என்னுடன் மராத்தி மொழியில் பேசிய தமிழின் ஒரே இலக்கியவாதி என்னை விட்டுச் சென்றான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு