Published:Updated:

FeTNA: தலைமுறைகளைத் தாண்டி தமிழ் வாழ்ந்திட, அமெரிக்கத் தமிழ் மாநாட்டில் ஓர் ஆயத்தப்பணி!

FeTNA - வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை மாநாடு

‘தலைமுறை தாண்டியும் தமிழ்’ என்ற மையக்கருவில் ஒருங்கிணைக்கப்பட்ட இம்மாநாடு வழக்கமான இலக்கிய மாநாடுகளில் இருந்து சிறப்பான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தது.

FeTNA: தலைமுறைகளைத் தாண்டி தமிழ் வாழ்ந்திட, அமெரிக்கத் தமிழ் மாநாட்டில் ஓர் ஆயத்தப்பணி!

‘தலைமுறை தாண்டியும் தமிழ்’ என்ற மையக்கருவில் ஒருங்கிணைக்கப்பட்ட இம்மாநாடு வழக்கமான இலக்கிய மாநாடுகளில் இருந்து சிறப்பான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தது.

Published:Updated:
FeTNA - வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை மாநாடு
அறிவியலின் அபார வளர்ச்சியில் அகிலமே ஒரு கிராமமாய் சுருங்கிவரும் காலத்தில், காலத்தின் தேவையை எதிர்கொள்ள முடியாமல் அழிந்தும், நலிந்தும், காணாமலும் போன மொழிகள் ஏராளம். ஈராயிரம் ஆண்டுகள் இடையறாத இலக்கியத் தொடர்ச்சியும், இலக்கண நுணுக்கமும், செம்மொழிக்கான செம்மாந்தத் தகுதிகளையும் பெற்றுத் திகழும் உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழி, எதிர்காலத்தின் சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதைத் தொலைநோக்குள்ள தமிழ்நெஞ்சங்கள் துல்லியமாகச் சிந்தித்து, தலைமுறைகளைக் கடந்து தமிழை வாழ்விக்க செய்யவேண்டிய பணிகளைச் செவ்வனே செய்யத் தொடங்கிவிட்டன.

அதன் ஓர் அங்கமாக அமைந்தது அண்மையில் (ஜூலை 1- 4, 2022) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயின்ட்ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஃபெட்னா (FeTNA) என்னும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை மாநாடு அமைந்தது. நியூயார்க் தமிழ்ச்சங்கமும் இணைந்து இம்மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துள்ளன. இம்மாநாட்டில் நாமும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றோம்.

‘தலைமுறை தாண்டியும் தமிழ்’ என்ற மையக்கருவில் ஒருங்கிணைக்கப்பட்ட இம்மாநாடு வழக்கமான இலக்கிய மாநாடுகளில் இருந்து சிறப்பான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தது.

ஃபெட்னா (FeTNA) என்னும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை மாநாடு
ஃபெட்னா (FeTNA) என்னும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை மாநாடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபெட்னாவின் முன்னாள் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, மாநாட்டில் தேர்வான புதிய தலைவர் பாலா சுவாமிநாதன், கதிர்வேல் குமாரராஜா, காஞ்சனபூலா எனப் பெரும் ஆளுமைகளோடு, நெல்லை கீர்த்தி ஜெயராஜ், ஆரூர் பாஸ்கர், ஈரோடு பிரபு உள்ளிட்ட இளைய தலைமுறை ஆளுமைகளும் கரங்கோத்துக் களமிறங்கியது மாநாட்டின் நோக்கத்தை வெற்றித் திசையில் விரைவுபடுத்தியிருந்தது.

முதல்நாளான ஜூலை 1, 2022 அன்று அமெரிக்க மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழில் முனைவோர்களின் அமர்வு நடைபெற்றது. அன்றைய தினம் ஒருங்கிணைந்த தமிழ்த் தொழில் முனைவோர் சார்ந்துள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு 50 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்றார் ஃபெட்னாவின் புதிய தலைவர் பாலா சுவாமிநாதன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பரப்புரைக் குழுவில் முக்கிய முகமாக இருந்து தற்போதும் அதிபருக்கு அணுக்கமானவராக இருப்பது தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையே.

‘டெஃப்கான்’ என்ற தொழில் முனைவோர் அமர்வில் அமெரிக்காவின் பல நகரங்கள், கனடா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர். இவ்வரங்கில் நடிகர் நெப்போலியன், அமைச்சர் நேருவின் உதவியாளராக வாழ்வைத் தொடங்கி, திரைநட்சத்திரமாகி, தற்போது அமெரிக்காவில் 300 ஏக்கரில் விவசாயம் செய்து வருவது வரையிலான அனுபவத் தொகுப்பை இனிமையாக எடுத்துரைத்தார்.

நடிகர் நெப்போலியன், ஓவியர் டிராட்ஸ்கி மருது
நடிகர் நெப்போலியன், ஓவியர் டிராட்ஸ்கி மருது

ஃபெட்னா (FeTNA) என்னும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை மாநாடுசிவா நட்ராஜ், பிரபாகரன் முருகையா, கண் சுப்ரமணியன், ரவி சுப்ரமணியன், செந்தில் ராஜகோபாலன், சுரேஷ் குமார் ஆகியோர் தாம் சிகரம் தொட்ட வழிகளை சிறப்பாக எடுத்துரைத்தனர்.

இளந்தமிழ்ச் சமுதாயத்தின் அறிவாற்றல் பெருஞ்செல்வம் குறித்த அமர்வை பிரபல தொழிலதிபர் எம்.ஆர்.ரங்கசுவாமி ஒருங்கிணைத்தார். இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரஹ்மான், சதுரங்க நாயகன் பிரக்யானந்தா, சுந்தர் பாலசுப்ரமணியம், சமையல் நிபுணர் ஆர்த்தி சம்பத், பியானோ இளம்மேதை லிடியன் நாதஸ்வரம், இவர்களோடு ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஆசான்ஜியும் பங்கேற்றனர்.

திருமணமான ஒரு மாதத்தில் இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான், முழுதும் பர்தா அணிந்து நிகழ்வில் தோன்றினார், தனது சமூகச் சூழலோ, சமயநெறியோ அறிவார்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒருபோதும் தடையாக இல்லை என்று நெறியாளரின் வினாவுக்கு நேர்பட பதிலளித்தபோது அரங்கில் பெரும் ஆரவாரமும் கைதட்டலும் வரவேற்பாகக் கிடைத்தன.

“சதுரங்கக் காய்களில் நான் கறுப்பா வெள்ளையா என ராசி பார்க்க மாட்டேன், விளையாட்டை சரியாக விளையாடுகிறோமா என்பதை மட்டுமே கருத்தில்கொள்வேன்” என்ற இளம் சதுரங்கச் சக்கரவர்த்தி பிரக்யானந்தாவின் பதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஃபெட்னா (FeTNA) என்னும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை மாநாடு
ஃபெட்னா (FeTNA) என்னும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை மாநாடு

இம்மாநாட்டை முன்னிட்டு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து அமெரிக்கத் தமிழர்களின் பிள்ளைகளுக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவிக்க, ஓர் புரிந்துணர்வு கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயலகத் துறைத் தலைவர் முனைவர் குறிஞ்சி வேந்தன் மாநாட்டில் பங்கேற்று இத்திட்டத்தை விளக்கினார்.

திருக்குறளை அமெரிக்க மாணவர்கள் மனத்தில் பதிக்கும் வகையில் பல சுற்றுகளாக நடத்தப்பட்ட குறள் தேனீ போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி மாநாட்டு மேடையில் பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.

தமிழ்ப்பீட விருதுபெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் அமெரிக்கா வாழ் தமிழ்க்கவிகள் தமது கவியாற்றலை வெளிப்படுத்தினர்.

உலகத்தமிழர்களின் பேரன்பைப் பெற்ற அன்பு அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீத் தனது அரைநூற்றாண்டு வானொலி மற்றும் தொலைக்காட்சி அனுபவங்களை உள்ளடக்கி எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது.

நூல் வெளியீடு
நூல் வெளியீடு

ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளையின் ஆதரவில் கவிஞர் குட்டிரேவதி தயாரித்த தமிழ் இசை மேதை தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் ஆவணப்படமும் மேடையில் வெளியிடப்பட்டது.

தமிழச்சி தங்கபாண்டியன், சு.வெங்கடேசன், கால்டுவெல் உள்ளிட்டோர் பங்கேற்ற கருத்துக்களம் நிகழ்வை புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் சிறப்பாகத் தொகுத்தளித்தார்.

கவிஞர் நந்தலாலா, சன் தொலைக்காட்சி குணசேகரன், மருத்துவர் சிவராமன், பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் சுந்தர்ராஜன், திருநங்கை ரேவதி, ஆழி செந்தில்நாதன், நடிகர் பாண்டியராஜன் ஆகியோர் தனித்தனித் தலைப்புகளில் உரையாற்றினர். தமிழக அரசு சார்பில் திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் உரையாற்றினார். வி.சி.க தலைவர் முனைவர் தொல்.திருமாவளவனின் உரையும் அரங்கத்தை ஈர்த்தது.

வி.சி.க தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன்
வி.சி.க தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன்

காணொளி வழியே தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை அரங்கில் எழுச்சியை விதைத்தது. கலை நிகழ்ச்சிகளும், துணை அமர்வுகளும் பெரிதும் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்தன.

இலக்கிய இலக்கண வளங்களையும், தொன்மைப் பெருமைகளையும் மட்டுமே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதால், மொழி வளர்ச்சி முன்னேற்றம் காணாது என்பதை உணர்ந்து, தொழில் மொழியாக, அறிவியல் கலைமொழியாக, தொழில்நுட்பம் செறிந்த மொழியாக, ஊடக மொழியாக, சட்ட மொழியாக தமிழை செழுமை செய்வதன் மூலமே எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்பதை உலகத் தமிழ்ச் சமுதாயம் உணர்ந்திருப்பது மெல்லத் தமிழினி வாழும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

அமெரிக்காவில் வேலை தேடி வந்த தமிழ்ச் சமுதாயம், வேலை தரும் நிலைக்கு தற்போது உயர்ந்திருக்கிறது. ஒருங்கிணைந்த செயற்பாடுகள் இன்னும் பல சிகரங்களை எட்ட உதவும் என்கிறார் ஃபெட்னா தலைவர் பால சுவாமிநாதன்.

கதீஜா ரஹ்மான், அப்துல் ஹமீத்
கதீஜா ரஹ்மான், அப்துல் ஹமீத்

அமெரிக்காவிலும், உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் பரவலாக வாழ்கிறார்கள். இவர்களில் தமிழைப் பேசும் பெரும்பாலோர்க்கு எழுதத் தெரிவதில்லை. தமிழில் எழுதுவதற்கான அவசியம் நேராததால் தமிழர்கள் தமிழ் எழுத்துகளை மெல்ல மெல்ல மறந்து வருகின்றனர். அடுத்த தலைமுறைக்கு அறவே தமிழ் எழுத இயலாத சூழல் ஏற்படுகிறது. பிறகு, தமிழ் மொழிக்கும் அவர்களுக்குமான தொடர்பு அற்றுப் போய்விடுகிற அபாயமும் நேர்கிறது.

பயனற்ற எதுவும் வாழ்வில் பாரமாகி, தூரமாகி விடுவது இயல்பானது. எனவே தமிழைப் பயனுள்ள மொழியாகவும் பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வாழ்வை வளப்படுத்தவும், மனத்தை தரப்படுத்தவும் தமிழால் இயலும் என்ற செய்தியை சான்றுகளோடு சகத்திற்கு மெய்ப்பிக்க வேண்டியுள்ளது.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

தரணியெங்கும் பரவி வாழும் தமிழ்ச்சமுதாயம் தமிழைப் பயன்படுத்தவும், தமிழால் பயன்பெறவும் வேண்டுமெனில், அதன் முக்கியத்துவத்தை எல்லா வகையிலும் அதிகரித்திட வேண்டும்.

இதில் தமிழ்நாட்டு அரசின் பங்கு அதிகமுள்ளது. முதலமைச்சரிடம் அந்தப் புரிதலும் உள்ளது. அதன் விளைவாகவே அயல்நாடு வாழ் தமிழர் நலனுக்காக ஓர் அமைச்சகத்தை உருவாக்கி திரு.செஞ்சி மஸ்தான் அவர்களை அத்துறைக்கு அமைச்சராக நியமித்து அகிலத் தமிழர்களுக்கான ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எட்டுத் திக்கிலும் ஏராளமான நாடுகளில் வாழ்கின்றத் தமிழர்களுக்கு, தமிழின் நனிசிறந்த தொன்மையையும், நவீனத்தை ஏற்கும் தன்மையையும் உணர்த்துவது மிகவும் அவசியம்.

தமிழ் எழுத்துகளைக் காப்பதன் மூலமும் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமும் தமிழை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம். ஃபெட்னா நடத்திய 35வது மாநாடு அதற்கொரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

- அமெரிக்காவிலிருந்து பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி