Published:Updated:

ஆய்வு மாணவர்களுக்கு அறிவொளியைக் கொடுத்தவர்... மறைந்த `புத்தகத் தாத்தா' முருகேசனின் ஒரே கனவு இதுதான்!

'புத்தகத் தாத்தா' முருகேசன்
News
'புத்தகத் தாத்தா' முருகேசன்

தெக்கத்தி அறிவுசார் கூட்டம், இனி புத்தகத் தாத்தாவை ரொம்பவே இழந்து தவிக்கும். இனிவரும் தமிழ் சமூகத்துக்கும் இவரின் மறைவு பேரிழப்பு!

'புத்தகத் தாத்தா' மறைந்தார். தென் தமிழ்நாட்டில் பல தமிழ் அறிவுச் சுரங்கங்களை உருவாக்கியவர் முருகேசன் என்ற புத்தகத் தாத்தா. ஓலைச்சுவடிகளிலிருந்து எங்குமே கிடைக்காத ஒற்றைப்பிரதி நூல்கள் வரை தன் வாழ்நாள் முழுவதும் சேகரித்து வைத்து ஆய்வு மாணவர்களுக்கு உதவியவர்.

படிப்பில் இரண்டாம் வகுப்பைக்கூட தாண்டாதவரென்றாலும் தன் ஆர்வத்தால் தமிழை அளவுக்கு அதிகமாக நேசித்தவர். பல்கலைக்கழக துணைவேந்தர்களில் ஆரம்பித்து முதலாம் ஆண்டு மாணவர்கள்வரை இவரால் அறிவொளியைப் பெற்றவர்கள் பலர். பல முனைவர் பட்ட ஆய்வுகளில் முதல் நன்றியை புத்தகத் தாத்தாவுக்குத்தான் பலர் அர்ப்பணித்திருக்கிறார்கள்.

'புத்தகத் தாத்தா' முருகேசன்
'புத்தகத் தாத்தா' முருகேசன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்படி புத்தகங்களை சேகரித்து தனித் தனித்தீவுகளாய் கிடந்த ஆய்வு மாணவர்களுக்கும் பேராசிரியப் பெருமக்களுக்கும் அறிவுப்பாலமாய் விளங்கியவர்தான் இந்தப் புத்தகத் தாத்தா. தன் அந்திமக் காலம்வரை தமிழைச் சுமந்த புத்தகங்களைத் தோளிலும் நெஞ்சிலும் சுமந்தவர், இன்று சங்கம் வளர்த்த அதே மதுரையில் தன் 81வது வயதில் தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.

கொரோனாவுக்கு முந்தைய காலங்கள்வரை தேய்ந்த ரப்பர் செருப்புக்களோடு நடந்து பழகியவர், சமீப காலமாக வயது மூப்பின் காரணமாக வீட்டுக்குள் முடங்கிப்போனார். மாணவர்கள் அன்பாகக் கொடுக்கும் காசுதான் அவரின் ஒரே வருமானம். பெரும்பாலும் யாரிடமும் அவர் காசு வாங்கியதில்லை. ஆனால், தான் ஆய்வுக்காக கொடுக்கும் புத்தகத்தை பத்திரமாகக் கொடுக்க வேண்டும் என்பதில் மட்டும் கறார் காட்டுவார். ஏனென்றால் இந்த உதவியை ஒற்றை மனித இயக்கமாகவே செய்து வந்தார் இந்தப் படிக்காத மேதை!

தெக்கத்தி அறிவுசார் கூட்டம், இனி புத்தகத் தாத்தாவை ரொம்பவே இழந்து தவிக்கும். இனிவரும் தமிழ் சமூகத்துக்கும் இவரின் மறைவு பேரிழப்பு!

2020-ம் ஆண்டின் நம்பிக்கை மனிதராக ஆனந்த விகடன் இவருக்கு விருது கொடுத்துக் கௌரவித்தது. விகடன் விருதினைப் பெற்ற புத்தகத் தாத்தா முருகேசன் தன் ஒரே கனவாக சொன்னது என்ன தெரியுமா..?
'புத்தகத் தாத்தா' முருகேசன்
'புத்தகத் தாத்தா' முருகேசன்

"உயிருள்ளவரை... என் இறுதி மூச்சுவரை நான் மாணவ சமூகத்துக்காக இதே பணியைச் செய்யணும். முன்னெல்லாம் நல்லா நடக்க முடியும். இப்போ பார்வை கொஞ்சம் மட்டுப்படுது. கொரோனாவும் பயமுறுத்துது. அதனால பாவம் மாணவர்கள் என்னைத் தேடி வந்து புத்தகங்களை வாங்கிட்டுப் போறாங்க. நான் சேகரிச்ச புத்தகங்களை வெச்சு ஒரு நூலகம் அமைச்சு வருங்கால மாணவர்களுக்கு உதவணும்!" என்றார்.

ஆரம்ப காலங்களில் பழைய பேப்பர் கடை வைத்து கஷ்ட ஜீவனம் நடத்திய புத்தகத் தாத்தா, தன் தமிழ்க் காதலால் பல பேருக்கு ஒளியேற்றி மறைந்திருக்கிறார். புத்தகத் தாத்தா கண்ட கனவெனும் கலங்கரை விளக்கத்தை அணையாமல் தமிழக அரசு காத்திட வேண்டும்!