Published:Updated:

"40 வருஷமா எழுதுறேன்... ஆனா எழுத்து சோறு போடலே!" | எனும் நான் | எழுத்தாளர் ம.காமுத்துரை

ம.காமுத்துரை
ம.காமுத்துரை

1983ல் காமுத்துரை எழுதிய முதல் சிறுகதை செம்மலர் இதழில் வந்தது. 40 ஆண்டுகளில் 180க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

காமுத்துரை கடந்த 40 ஆண்டுகளாக புனைவிலக்கியம் செய்கிறார். தமிழ் இலக்கிய வெளியில் விளிம்புநிலை மனிதர்களின் குரலாக ஒலிக்கிறது ம.காமுத்துரையின் எழுத்து. வெம்மை ததும்பும் தேனியின் வழக்குச் சொற்களின் வழியாக, அடித்தட்டு மக்களின் சுமைகளையும், வலிகளையும் இலக்கியமாக்கும் காமுத்துரை, 'கப்பலில் வந்த நகரம்', 'விடுபட', 'நல்ல தண்ணி கிணறு', 'நாளைக்குச் செத்துப் போனவன்', 'கனா', 'பூமணி' 'இன்னும் ஒரு வாக்குமூலம்' புழுதிச்சூடு, 'குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை' என 12 சிறுகதை நூல்கள், 'மில்', 'முற்றாத இரவொன்றில்', அலைவரிசை, கோட்டைவீடு, குதிப்பி போன்ற நாவல்கள் மூலம் தமிழின் தனித்துவமிக்க படைப்பாளியாக கவனம் பெற்றவர்.
ம.காமுத்துரை
ம.காமுத்துரை

திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, ஆதித்தனார் நூற்றாண்டு நினைவுநாள் விருது, நூலக ஆணைக்குழுவின் சிறந்த படைப்பாளர் விருது, சுஜாதா அறக்கட்டளை விருது, ஆனந்த விகடன் சிறந்த நாவலாசிரியர் விருது என தமிழில் நல்லிலக்கியத்திற்கென வழங்கப்படும் பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்ற காமுத்துரையை, தேனிக்காரர்கள் பழைய பாத்திரக்கடைகாரராகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்.

அல்லிநகரத்தின் பிரதான சாலையில் வாடகைப் பாத்திரக்கடை நடத்தும் காமுத்துரை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும்கூட

40 ஈய வட்டகை, 150 பிளாஸ்டிக் சேர், 6 ஸ்டவ், 5 இருப்புச்சட்டி... இவைதான் காமுத்துரையின் வாழ்வாதார நம்பிக்கை. கணக்கப்பிள்ளையான் வம்சம் என்றழைக்கப்பட்ட ஒரு குடும்ப மரபிலிருந்து வந்து இலக்கியம் படைத்துக்கொண்டிருக்கும் காமுத்துரை, பிறந்தது தேனியிலென்றாலும் வளர்ந்தது வீரபாண்டியில். காமுத்துரையின் கதைகளில் தேனியைக் காட்டிலும் வீரபாண்டியே களமாக இருக்கிறது. முல்லையாறு கிளையெடுத்து ராஜாவாய்க்காலாக ஓடும் தேரிக்காட்டில் விளைந்து முகிழ்ந்திருக்கும் மிளகாய்ப் பழங்களை காமுத்துரையின் பல சிறுகதைகள் வாசக மனப்பரப்பில் விதைத்துச் செல்லும்.

ம.காமுத்துரை
ம.காமுத்துரை

தன் அனுபவத்திலிருந்தும் தன் நண்பர்களின் வாழ்விலிருந்தும் கதைகளைச் சேகரிக்கும் காமுத்துரை, பாரதிராஜா எடுத்த 16 வயதினிலே படம் ஏற்படுத்திய தாக்கத்தில் எழுத வந்தவர். தினமொரு பாத்திரத்தை உயிர்ப்பித்துக் கதை சொல்லும் பாட்டியும் வலியையும் துயரங்களையும் சேர்த்துக்குலைத்து இட்டுக்கட்டிப் பாடும் தாத்தாவும் சிறுவயதிலேயே காமுத்துரைக்கு கதையும் இசையுமான ஒரு கனவுலகத்தை அறிமுகம் செய்துவைத்தார்கள். பழைய எஸ்எஸ்எல்சி முடித்து ஐ.டிஐயில் வெல்டிங் தொழிற்படிப்பைப் படித்த காமுத்துரைக்கு தொழிலென்று எதுவும் மனதில் இறங்கவில்லை. இந்த வாடகைப் பாத்திரக்கடைக்கு வந்தடையும் முன் கறவை மாடு பாடு பார்த்ததில் தொடங்கி தைத்த துணிக்கு காஜா எடுப்பது வரை 20க்கும் மேற்பட்ட தொழில்களைச் செய்து தோற்றிருக்கிறார். பூப்பெய்தி தனித்திருந்த தங்கை, பொழுதுபோகலே... ஏதாவது புத்தகம் எடுத்து வாண்ணா என்று காமுத்துரையை நூலகத்துக்கு அனுப்பி வைக்க, நூலகம் காமுத்துரையை வசீகரிக்கிறது. காலப்போக்கில் அதுவே வாசஸ்தலமாகிப் போனது. கண்ணதாசனில் ஆரம்பித்து புதுமைப்பித்தனைக் கடந்து ஜெயகாந்தனைத் தொட்டு வாசிப்பு நீண்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாரதிராஜா பதினாறு வயதினிலே படம் எடுத்து பெருவெற்றி பெற்ற பிறகு, அவர் பிறந்த மண்ணான தேனியில் ஏராளமான நாடகக் குழுக்கள் உருவாகின. அப்படியொரு குழுவுக்கு எழுதித்தந்த சிறு நாடகம்தான் காமுத்துரை எழுதிய முதல் படைப்பு. பாட்டும் நாடகமுமாக சிறுவெளிக்குள் உழன்று கொண்டிருந்த காமுத்துரையின் எழுத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பு புடம்போட்டு வளப்படுத்தியது. பயணிக்க பாதை புலப்பட, எழுத்து தன்னை நிறைத்துக்கொண்டது காமுத்துரையின் வாழ்க்கையில்.

ஐடிஐ முடித்ததும் ஒரு ஒர்க்ஷாப்பில் வெல்டராக வேலைக்குச் சேர்ந்த காமுத்துரைக்கு. மனதொரு பக்கமும், வேலையொரு பக்கமும் இழுத்துச்சென்றது. இந்த வேலையெல்லாம் உனக்குச் சரிப்படாதெனச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் எல்லா முதலாளிகளும். பாட்டையும் எழுத்தையும் புத்தகங்களையும் மனதில் சுமந்து திரிந்தவருக்கு எந்த வேலையும் பொருந்தவில்லை. கடைசியாக தேனியில் புதிதாத முளைத்த பஞ்சாலை ஒன்றில் பணியில் சேர்ந்தார்.

ம.காமுத்துரை
ம.காமுத்துரை

காமுத்துரையின் வாழ்க்கையும் எழுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. அவரது பஞ்சாலை அனுபவம்தான் பேரடையாளம் பெற்றுத்தந்த மில் நாவல். உழைப்புக்கேற்ற கூலி கொடுக்காமல் வஞ்சிக்கும் பஞ்சாலை முதலாளியிடம் கேள்வியெழுப்பி, தொழிற்சங்கம் கட்ட முனைந்த காமுத்துரையையும் பக்கபலமாக நின்ற 16 பேரையும் வேலையை விட்டு நீக்கியது நிர்வாகம். அதற்கெதிராக ஐந்தாண்டுகள் வாழ்க்கையைத் தொலைத்து நீதிமன்றத்துக்கு அழைந்த கதையை மில் ஆக்கினார் காமுத்துரை. தென்தமிழின் தனித்துவமான தேனி வட்டார வழக்கில் ஒரு அத்தக்கூலித் தொழிலாளியின் எளிய வாழ்க்கையை காதலும் போராட்டமும் கலந்து யதார்த்த எழுத்தாக்கினார். தமிழ் இடதுசாரி இலக்கியத்தின் முதல் வரிசைப் படைப்பானது அந்த நாவல். ஏழு பருவங்களையும் துயரங்களோடு கடக்கும் பெண்களின் வலியை பேசும் 'அலைவரிசை' நாவல் பெண்ணிய அமைப்புகளால் பெரிதும் கொண்டாடப்பட்டது. படிப்படியாக தமிழ் வெகுஜன இதழ்கள் அனைத்திலும் காமுத்துரையின் கதைகள் வெளியாகின. தமிழ் வாசகர்களின் மனதில் காமுத்துரை என்ற பெயரை அழுத்தமான மனதில் நிறுத்தின அவர் எழுதிய கதைகள்.

பஞ்சாலையில் இடைநீக்கம் செய்யப்ட்ட வாழ்வின் விளிம்புக்குச் சென்றது காமுத்துரையின் குடும்பம். பணி நீக்கத்துக்கான இழப்பீடாக நீதிமன்றம் கொஞ்சம் பணம் பெற்றுத்தர, பைனான்ஸ் தொழிலில் இறங்கினார் காமுத்துரை. அமட்டலும் உருட்டலுமே பைனான்ஸ் தொழில் நடத்த முதன்மைத் தகுதிகள். எப்போதும் புன்னகையைத் தரித்துக்கொண்டிருக்கும் காமுத்துரைக்கு அந்தத் தொழிலும் கைகொடுக்கவில்லை. திறந்த வேகத்திலேயே மூடிக்கொண்டது பைனான்ஸ் தொழில். பள்ளிக்கூடத்தை கடந்து நிற்கிற பிள்ளைகள்... எதிர்காலம் புரியாமல் தவித்த மனைவி.... வாழ்வாதாரத்துக்காக பழைய பாத்திரக்கடையை ஆரம்பித்தார் காமுத்துரை.

தான் சந்திக்கும் எல்லா மனிதர்களையும் கதை மாந்தர்களாகவே பார்க்கிறார் காமுத்துரை. சித்தாள், கொத்தனார், மீன்காரப் பெண், பொறிகடலை வியாபாரி, சமையல்காரர் என அன்றாடம் அவர் பாத்திரக்கடையை கடக்கும் மனிதர்களே நாவல்களிலும் சிறுகதைகளிலும் உலவுகிறார்கள். தன்னையும் தூர நிறுத்தி பாத்திரமாக்கிக்கொள்கிறார் காமுத்துரை.

ம.காமுத்துரை
ம.காமுத்துரை

இந்த அறுபது வருடங்களில் எவ்வளவோ மாறிவிட்டது. எழுத்து மட்டும் அதே வளமையோடும் இளமையோடும் காமுத்துரையின் உயிரோடும் உணர்வோடும் ஒட்டியேயிருக்கிறது. பழைய பாத்திரக்கடை கொடுத்த வருமானத்தில் பிள்ளைகளைப் பட்டதாரிகளாக்கிவிட்டார். சுகமோ துக்கமோ காமுத்துரையின் படைப்புலகத்தை பசுமை குலையாமல் பார்த்துக்கொள்கிறார் மனைவி வேணி.

பழைய பாத்திரக்கடைக்குள் தூசிதுடைத்து வைத்திருக்கும் மாப்பிள்ளை சேரில் அமர்ந்துகொண்டு லேத் பட்டறைத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையை எழுதிக்கொண்டிருக்கிறார் காமுத்துரை.
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’!

1983ல் காமுத்துரை எழுதிய முதல் சிறுகதை செம்மலர் இதழில் வந்தது. 40 ஆண்டுகளில் 180க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். பிரதான தமிழ் இதழ்கள் அனைத்திலும் காமுத்துரையின் கதைகள் வந்திருக்கின்றன. எழுத்துக்காக பல அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறார் நாற்பது ஆண்டுகளாக கரம் தேயத்தேய எழுதிக்கொண்டேயிருக்கும் காமுத்துரைக்கு இன்றுவரை எழுத்து சோறு போடவில்லை. பழைய பாத்திரங்கள்தான் குடும்பத்தை மீட்கின்றன. ஒருநாள் பாத்திரக்கடையைத் திறக்காவிட்டாலும் மறுநாள் பாடு திட்டாட்டம்தான். 18 வயதில் எழுதத் தொடங்கிய தன் 60 வயதிலும் வாழ்வாதாராத்துக்காக போராடுகிறார் காமுத்துரை. தமிழ்கூறும் நல்லுலகம் எதிர்பார்ப்பில்லாமல் தன் வாழ்க்கையை எழுத்துக்கு ஒப்புக்கொடுத்த ஒரு படைப்பாளனை இந்த நிலையில்தான் வைத்திருக்கிறது.

இலக்கியவாதியின் வாழ்க்கையை முழுமையாக காண கீழுள்ள ஆனந்த விகடன் யூடியூப் லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு