Published:Updated:

ஆபிரகாம் பண்டிதர்: நூறாண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் வலம் வந்த சகலகலா வல்லவரின் சாதனைகள்!

ஆபிரகாம் பண்டிதர்

பழந்தமிழ் இசை வடிவமே இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் இசைக்கப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்காக, முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார் ஆபிரகாம் பண்டிதர். இன்று அவரது பிறந்த தினம்!

ஆபிரகாம் பண்டிதர்: நூறாண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் வலம் வந்த சகலகலா வல்லவரின் சாதனைகள்!

பழந்தமிழ் இசை வடிவமே இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் இசைக்கப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்காக, முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார் ஆபிரகாம் பண்டிதர். இன்று அவரது பிறந்த தினம்!

Published:Updated:
ஆபிரகாம் பண்டிதர்
தஞ்சை நகரின் மையப்பகுதியில் உள்ள மிகவும் முதன்மையான சாலை, ஆபிரகாம் பண்டிதர் சாலை என அழைக்கப்படுகிறது. யார் இவர்? ஏன் இந்தளவுக்கு இவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது?

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கு இந்தக் கேள்வி அவ்வபோது எழுவது உண்டு. இசை, மருத்துவம், இலக்கியம், விவசாயம் எனப் பல துறைகளிலும் வல்லவராக திகழ்ந்து நிபுணத்துவம் பெற்றவர் ஆபிரகாம் பண்டிதர். இன்று இவரது பிறந்த தினம். இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் என்றாலும் கூட தன் வாழ்நாளில் பெரும்பகுதியை தஞ்சையில்தான் வாழ்ந்திருக்கிறார்.

ஆபிரகாம் பண்டிதர்
ஆபிரகாம் பண்டிதர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1859-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம் சாம்பவர்வடகரை என்ற சிற்றூரில் பிறந்த ஆபிரகாம் பண்டிதர், பங்களாச் சுரண்டையில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து, தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டின் பாரம்பர்ய மருத்துவங்களில் ஒன்றான மூலிகை மருத்துவத்தில் பயிற்சி பெற்று, சிறந்த மருத்துவராக திகழ்ந்தார். 1879-ல் மூலிகை மலையான சுருளிமலைக்குச் சென்று, கருணானந்த முனிவர் என்பவரிடம் மூலிகைகளின் மருத்துவத் தன்மைகளைக் கற்றறிந்தார். திருமணத்துக்குப் பிறகு 1886-ல் தஞ்சாவூரில் குடியேறினார். தமிழ் மருத்துவத்தில் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்ததால், தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியில் 100 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பெரிய மூலிகைப் பண்ணையை உருவாக்கினார். இன்றளவு தஞ்சை மக்கள் மத்தியில் அது பண்டிதர் தோட்டம் என நினைவுகூரப்படுகிறது.

மூலிகைகளைப் பயன்படுத்தி ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ என்ற பெயரில் பல்வேறு சித்த மருந்துகளைத் தயாரித்தார். இவர் தயாரித்த கோரசனை மாத்திரை, இந்தியாவில் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரிட்டிஷ் அரசு இவரது சேவையைப் பாராட்டி ‘ராவ் பகதூர்’ பட்டம் வழங்கியது. தமிழ் மருத்துவத்தில் மட்டுமல்ல, தமிழிசையிலும் ஆபிரகாம் பண்டிதர் சிறந்து விளங்கினார். நாகஸ்வரம், ஆர்மோனியம், வீணை, பிடில் ஆகிய வாத்தியங்களை இசைப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ‘பரதரின் நாட்டிய சாஸ்திரம்’, ‘சாரங்க தேவரின் சங்கீத ரத்னாகரம்’ உள்ளிட்ட பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத்தமிழ் நூல்களையும் பழந்தமிழ் இசை நூல்களையும் ஆழ்ந்து கற்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பழந்தமிழ் இசை வடிவமே இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் இசைக்கப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்காக, முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார். 1912-ம் ஆண்டு ‘சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை’ நிறுவினார். சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்னாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார். இதன்மூலம் தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்தார். ஐரோப்பிய இசைமேதை பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி.பிச்சைமுத்துவிடம் மேற்கத்திய இசை பயின்றார்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர்

தனது பல்லாண்டு கால தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ என்ற இசை நூலாகத் தொகுத்து, 1917-ல் வெளியிட்டார். தமிழிசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் குறித்த ஒரு கலைக்களஞ்சியமாக இது போற்றப்படுகிறது. சுமார் 1,400 பக்கங்கள் கொண்ட இந்நூல் இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கான மூலநூலாக அமைந்துள்ளது. இசை, மருத்துவம், இலக்கியம் தவிர, புதுப்புது வகைப் பயிர்களை வேளாண்மை செய்வதிலும், காற்றாலைகளை நிறுவி நீர்ப்பாசனம் செய்வதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். 1911-ல் மின்சாரத்தில் இயங்கும் அச்சுக்கூடம் ஒன்றை நிறுவினார். தமிழிசைக் கலைஞர், படைப்பாளி, சித்த மருத்துவர் எனப் பல துறைகளிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்த ஆபிரகாம் பண்டிதர் 1919-ம் ஆண்டு தமது 60-வது வயதில் மறைந்தார். நூறாண்டுகள் கடந்தும் இவர் பெயர் இன்றளவும் தஞ்சை மக்களால் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism