உடல் முழுக்க காயங்களுடன் வந்துகொண்டிருந்தான் அந்த இளைஞன். எதிரே வந்த பெரியவர், ‘`என்னாச்சு?’’ என்றார் பதற்றத்துடன்.
‘`ஒரு கலவரம்... பலரை அடிச்சுத் தள்ளிட்டு வரேன்’’ - எந்தவித பதற்றமும் இல்லாமல் சொன்னான் இளைஞன். பெரிய வருக்கு ஆச்சர்யம். ‘`ஏம்பா... கலவரத்துல பலரை அடிச்சேன்னு சொல்றே. அப்புறம் எப்படி உன் உடம்புல இவ்ளோ காயம்?’’ என்று கேட்டார்.
‘`அவங்களும் என்னைத் திருப்பி அடிச்சாங்க.அதான்!’’
‘`அது சரி, என்ன கலவரம்?’’ - பெரியவர்
‘`மதக் கலவரம்!’’ என்றான் இளைஞன்.
பெரியவருக்கு சலிப்பு... ‘`ஹூம்ம்... மனுஷனும் மனுஷனும் அடிச்சுக்கறதுக்குப் பேரு மதக் கலவரம்!’’ என்று தலையில் அடித்துக்கொண்டார். இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘`என்ன சொல்றீங்க?’’ - குழப்பத்துடன் கேட்டான்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS‘`புரியற மாதிரி சொல்லட்டுமா. உன்னை நீயே அடிச்சுக்கறே... இதுவும் புரியலையா? என்னோட வா புரியும்’’ என்று அவனை இழுத்துக்கொண்டு நடந்தார் பெரியவர்.
அருகே ஒரு கட்டடம். இளைஞனுடன் உள்ளே நுழைந்தவர், ஓர் அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார். அறை முழுக்க பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிகளில் இவர்களது பிம்பங்கள் தெரிந்தன.
‘`இந்த அறை முழுக்க மனிதர்களா தெரியறாங்களே... அவங்கள்லாம் யாருன்னு தெரியுதா’’ பெரியவர் கேட்டார்.
‘`நீங்களும் நானும்தான்!’’- சிரித்தபடி சொன்னான்.
‘`ஒரு நிமிஷம்...’’ என்று கூறிவிட்டு வெளியே சென்றவர் ஒரு நாயுடன் திரும்பினார். இப்போது, ஏராளமான நாய்கள் தெரிந்தன. இதைக் கண்டதும் குரைக்க ஆரம்பித்தது நாய். அதன் பிம்பங்களும் குரைத்தன! ‘அட... நமக்கு இவ்ளோ எதிரிகளா?’ என்று ஆவேசம் அடைந்த நாய் அங்குமிங்கும் ஓடியது; பிம்பத்தின் மீது பாய்ந்தது. கண்ணாடி உடைந்து நொறுங்க, உடல் முழுக்க காயங்களுடன் ஓடியது நாய். இதைக் கண்ட இளைஞன், ‘`ஐயோ பாவம்... நாய்க்கு ஒண்ணுமே தெரியலை’’ என்று பரிதாபப்பட்டான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவனைப் பார்த்து பெரியவர், ‘`உனக்கும்தான் ஒண்ணுமே தெரியலை. கண்ணாடியில தெரியறது தான்தான்னு அந்த நாய்க்குத் தெரியலை; எதிரில் நிற்கும் ஒவ்வொருத்தரும் நீதாங்கறது உனக்குத் தெரியல. இந்த உலகம் கண்ணாடி மாதிரி. அதுல நீ பார்க்கற பிம்பங்களை உனது எதிரிகளா நினைக்கறே... அதான் பிரச்னை!’’ என்றார். இதைக்கேட்ட இளைஞன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான். பிறகு, ‘`ஐயா, அவசரமா ஒரு வேலை இருக்கு, கிளம்பறேன்’’ என்றான்.

‘`என்னப்பா வேலை?’’ - பெரியவர் கேட்டார்.
இளைஞன் சொன்னான்... ‘`என்னால காயம் அடைஞ்சவங்களுக்கு மருந்து போடணும். அவங் களைக் காப்பாத்தணும்!’’
(28.10.2008 இதழிலிருந்து...)