Published:Updated:

`இந்த வருடம் முழுவதுமே எங்களுக்கு ஊரடங்குதான்!' தெருக்கூத்து கலைஞர்களின் துயர்க்குரல்

தெருக்கூத்து கலைஞர்
தெருக்கூத்து கலைஞர்

பல சாமானியர்களைப்போல தெருக்கூத்து கலைஞர்களும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார அளவில் தன்னிறைவடையாத நிலையில்தான் பல கூத்து கலைஞர்களின் வாழ்நிலை உள்ளது.

முகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டு புராண காலத்து நாயகர்களின் கதையை, நாட்டுப்புற செவிவழிக் கதைகளை, சமகால அரசியல் நையாண்டி கலந்து நிகழ்த்திக் காட்டும் தெருக்கூத்தை நிச்சயம் கண்டிருப்போம். வாத்தியங்கள் இசைக்க வசனம் பேசி, நடனமாடி, உணர்ச்சி மிகு நடிப்பைக் கொடுக்கவல்ல பல தெருக்கூத்து கலைஞர்கள் இன்னும் தமிழகத்தில் உள்ளனர். மாசி, பங்குனி, சித்திரை காலங்களில் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறுவதால் தெருக்கூத்து நிகழ்ச்சியும் அங்கு அரங்கேறும். இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல சாமானியர்களைப் போல தெருக்கூத்து கலைஞர்களும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார அளவில் தன்னிறைவடையாத நிலையில்தான் பல கூத்து கலைஞர்களின் வாழ்நிலை உள்ளது.

தெருக்கூத்து கலைஞர்கள்
தெருக்கூத்து கலைஞர்கள்

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட 4-ம் கட்ட ஊரடங்கு இன்னும் 4 நாள்களில் முடிவடைய உள்ளது. அடுத்தகட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்படுமா அல்லது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா என்ற பேச்சுகள் மக்களிடையே எழத் தொடங்கியுள்ளன. இந்தச் சமயத்தில் முழு நேர கூத்துக் கலைஞர்களாக உள்ளவர்கள் என்ன மாதிரியான சூழலை எதிர்கொள்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள அவர்களைத் தொடர்பு கொண்டோம்.

முதலில் சேலத்தைச் சேர்ந்த கூத்துக் கலைஞர் சிவாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.

கூத்துக் கலைஞர் சிவா
கூத்துக் கலைஞர் சிவா

``எங்க தாத்தா கூத்துக் கலைஞர். பெண் வேஷமிட்டு கூத்து கட்டுவார். அவரைப் பார்த்துதான் எனக்கு கூத்துமேல ஆசைவந்தது. ப்ளஸ் டூ படிக்குற காலத்தில் இருந்தே நான் கூத்துக்கட்டுவேன். என் தாத்தாவைப்போல பெண் வேஷம் போடுவேன். இப்போ மூணு மாசமா ஊரடங்கால எங்கேயுமே கூத்து நடக்கல. ரொம்ப சிரமமா இருக்கு. கூத்து கட்டுறவங்களுக்கு யாரும் வேலையும் தரமாட்டாங்க. தோட்டத்துல சின்னச் சின்ன வேலை கொடுத்தாதான் உண்டு. கூத்தை மட்டுமே நம்பி இருக்கவங்க நிலைமை கஷ்டத்துலதான் இருக்கு. என்ன நடந்தாலும் கூத்தையும் விட முடியாதுல்லைங்க" என்றார் வேதனையுடன்.

Vikatan

வெங்காயம் திரைப்படத்தின் இயக்குநரும் கூத்துக் கலைஞருமான சங்ககிரி ராச்குமாரிடம். அவரது கூத்து குழுவினர் பற்றிப் பேசினோம்.

``இந்தக் காலகட்டம் அனைத்து சாமான்ய மக்களுக்குமே இக்கட்டான காலகட்டம்தான். பலரது தொழில்களும் முடங்கி நிற்கிறது. கூலித் தொழிலாளர்கள் பலரும் வருமானமின்றித் தவிக்கிறார்கள். பரிதாபகரமான எதார்த்தம் என்னவென்றால் மற்றவர்களுக்கெல்லாம் கடந்த 2 மாதம்தான் ஊரடங்கு. ஆனால், தெருக்கூத்து கலைஞர்களுக்கு மட்டும்தான் இந்த வருடம் முழுவதுமே ஊரடங்கு.

வழக்கமாக மாசி, பங்குனி, சித்திரை இந்த மூன்று மாதங்களை நம்பித்தான் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் இருந்து வந்தது. இந்த மூன்று மாதங்களில்தான் பெரும்பாலான திருவிழாக்களும் பொது நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

ஆனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலகட்டம் சரியாக இந்த மூன்று மாதங்களாகவே போய்விட்டது.

தெருக்கூத்து கலைஞர்களுக்கு மட்டும்தான் பிரச்சனையா... அனைத்து தொழில்களும் முடங்கிப்போய்தானே இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால், நாளையே ஊரடங்கு விலக்கப்பட்டாலும் அவரவர் தொழிலுக்குப் போக முடியும். அந்த வார இறுதியிலோ, மாத இறுதியிலோ வேலைக்கான சம்பளத்தைப் பெறலாம்.

சங்ககிரி ராச்குமார்
சங்ககிரி ராச்குமார்

ஆனால், தெருக்கூத்து கலைஞர்கள் அடுத்த பங்குனி மாதம் வரை காத்திருந்தால் மட்டுமே அடுத்த தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெறும். அப்போதுதான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். வீடடங்கிக் கிடந்த இந்த மூன்று மாதத்தை நம்பிதான் அந்தக் கலைஞர்களின் ஒரு வருடத்தின் வாழ்வாதாரமே இருந்தது. சேலம் மாவட்டத்தைச் சுற்றி மட்டும் 50 தெருக்கூத்து குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் இசைக் கலைஞர்கள் உட்பட குறைந்தது 12 கலைஞர்களாவது இருப்பார்கள். பெரும்பான்மையானவர்கள் கூத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள்.

ஊர் உலகத்தையே விடிய விடிய மகிழ்வித்த கலைஞர்கள். இன்று, இந்த ஒரு வருடத்தை எப்படிக் கடக்கப்போகிறோம் என்ற வேதனையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

கிராமியக் கலைஞர்களின் நலவாரியத்தின் மூலம் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை கிடைத்துக் கொண்டிருந்தது. அதனால் அனைத்துக் கலைஞர்களும் நலவாரியத்தில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள். ஆனால், இப்போது வயது வேறுபாடின்றி அனைத்துக் கலைஞர்களுமே இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

தெருக்கூத்து கலைஞர்
தெருக்கூத்து கலைஞர்

இந்நிலையைக் கருத்தில் கொண்டு அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு அனைத்துக் கலைஞர்களுக்கும் தமிழக அரசு தக்க நிவாரண உதவி வழங்க வேண்டும். மேலும், கோயில் திருவிழாக்கள், சில பொது நிகழ்ச்சிகள் என்ற வட்டத்தோடு தெருக்கூத்து நின்றுவிடுகிறது. அதை விரிவுபடுத்துவதன் மூலம் இந்தக் கலைஞர்களுக்கும் தெருக்கூத்து கலைக்கும் அது பேருதவியாக இருக்கும். பள்ளி ஆண்டுவிழாக்களில்கூட ஒரு அங்கமாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு தெருக்கூத்தை நிகழ்த்தலாம். காலத்துக்கேற்ற வகையில் தகைவமைத்துக் கொள்ளாத எந்தக் கலையும் உயிர்ப்புடன் இருக்காது. தெருக்கூத்தின் சாரத்தை இழக்காமல், நவீன கதைகளுடன் மக்களின் சமகால நிகழ்வுகளைக் கூத்தாக்கலாம். அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. கலைஞர்களோடு சேர்ந்து மக்களும், அரசும் உடன் நிற்க வேண்டும். இல்லாவிட்டால் கலைஞர்களும் அழிந்துபோவார்கள் கலையும் அழிந்துபோகும்" என்றார்.

பல தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வு பொருளாதார நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள சூழலிலும், தங்கள் கலையை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் குரல்களில் தீர்க்கமாக ஒலிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு