Published:Updated:

திறப்பு - சிறுகதை

திறப்பு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
திறப்பு - சிறுகதை

-எஸ்.வி.வேணுகோபாலன்

திறப்பு - சிறுகதை

-எஸ்.வி.வேணுகோபாலன்

Published:Updated:
திறப்பு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
திறப்பு - சிறுகதை

காலை எப்போது விடியும் என்றிருந்தது. பிள்ளைகளை எழுப்பி ஒரு பக்கம் ரெடி பண்ணிக்கொண்டே, சமையல் வேலையும் தொடங்கியிருந்தேன். விமலா நாளை காலையில்தான் தொழிற்சங்க வேலைக்கான வெளியூர்ப் பயணம் முடித்துக் கொண்டு திரும்பவிருக்கிறாள்.

பூட்டு ரிப்பேர்க்காரர் நம்பரை அண்டை வீட்டுக்காரர் கொடுத்தார். காலையில் அழைத்தபோது, ஒன்பது மணிக்கு மேல்தான் வரமுடியும் என்று பதில் வந்தது. மனசு துடித்தபடி இருந்தது.

பிள்ளைகளை ஒரு வழியாக ரெடி பண்ணி (‘அப்பா, பூட்டு ரிப்பேர்க்காரருக்கு இன்னொரு தடவை போன் பண்ணி ரிமைண்ட் பண்ணுங்க...’) பள்ளிக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். ``அம்மா’’ என்று குரல் கொடுத்தேன்.

“ஆள் வந்தாச்சா?” என்று பதில் கேள்வி வந்தது.

“இன்னுமில்லை, இதோ வந்திருவார்” என்று சொன்னேன். அவள் தனது காலை வேலைகளை முடித்துக் குளித்துக் காத்திருந்தாள் என்று பட்டது.

எங்கள் வீடு மொத்தம் எண்ணூறு சதுர அடி. பழைய வீட்டை இடித்துக் கட்டியது.

தெருவிலிருந்து வீட்டுக்கு நடந்து வரும் பாதை அறுபதுக்கு ஐந்தடி. அப்புறம்தான் வீடு. வீட்டினுள் நுழையாமல் இடது பக்கமாக காம்பவுண்ட் சுவரை ஒட்டி நடந்தால் எளிமையான தோட்டம், சமையலறையைத் தொட்டுக் கொண்டு கிணறு. பழைய வீட்டை இடிக்கும்போது மூடாமல் காப்பாற்றிய அமுதக் கலசமான கிணறு. அருகே இயற்கையின் கொடையாக உயர்ந்து போய்க்கொண்டிருக்கும் மாமரம். இரண்டு பப்பாளி, ஒரு முருங்கை மரம்.

மிகச் சிக்கனமாக இருக்கும் இடைவெளியில் வீட்டைச் சுற்றி நடக்கலாம், நடந்து போய் ஜன்னல்கள் துடைக்கலாம். மேலே இருந்து விழும் மாம்பிஞ்சுகள், மாங்காய்கள் எடுத்துக் கொள்ளலாம், அப்படியே சுற்றி வந்தால், மாஸ்டர் பெட் ரூம் எனப்படும் பெரிய அறையின் பக்கவாட்டு ஜன்னல் வரை போய்த் திரும்பலாம்.

வீட்டின் உள்ளே நுழைந்தால், மெட்ரோ தண்ணீருக்கான அடிகுழாய், தரைக்குக் கீழே ஒளிந்துகொண்டிருக்கும் சம்ப் எனப்படும் குடி தண்ணீர் நிலவறை. இடது பக்கம் நுழைவாயிலில் பெரிய தேக்கு மரக் கதவுகள் திறந்தால், ஒரு ஹால். கிழக்கே சமையலறை. அப்புறம் இடது பக்கம் சிறிய அறை. அங்கேதான் புத்தக அலமாரி. அறைக்கு வெளியே கழிப்பறையோடு சேர்ந்த குளியலறை.

வலது பக்கம் மாஸ்டர் பெட் ரூம் எனப்படும் பெரிய அறைக்குள் நுழையும் இடத்தில் சின்ன இடத்தைப் பெரிதும் அடைத்துக்கொண்டு வாஷிங் மெஷின். அறைக்குள் பயன்படுத்திக் கொள்ள கழிப்பறையோடு சேர்ந்த குளியலறை.

அந்த அறையின் அலமாரிக்குள்தான் வங்கி பாஸ் புத்தகங்கள், செலவுக்கான காசு வைத்திருக்கும் பர்ஸ். துணிமணிகள். இன்னோர் அலமாரிக்குள் பிள்ளைகளது துணிமணிகள். ஒரு பிளாஸ்டிக் நாற்காலி. ஆள் உட்கார அல்ல, அதன்மீது அன்றாடம் பயன்படுத்திவிட்டு எடுத்து அடுக்கி வைக்கும் தலையணைகள், போர்வைகள். பெரிய கட்டில் ஒன்று.

திறப்பு - சிறுகதை

கட்டில்மீது பெரிய மெத்தை, அதன்மீது வனப்பான விரிப்பு. சிறு பிஞ்சுத் தலையணை. தலைமாட்டில் ஹோமியோபதி மருந்துக் குப்பிகள் அடங்கி இருக்கும் சிறு கைப்பை, அமிர்தாஞ்சன் புட்டி, ஆயின்மென்ட், கைக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக்கொள்ள வைத்திருக்கும் ரப்பர் பை. சிறிய நோக்கியா மொபைல். விகடன், சிறுவர் மணி. தலையணைக்குக் கீழே மருத்துவர் மாணிக்கவாசகம் அவர்களது ‘தூங்காமல் தூங்கி’ புத்தகம்.

அப்புறம் அம்மா! இத்தனை பொருள்கள் இருந்தாலும் அந்த அறையின் அழகு, அர்த்தம், அருள் யாவுமே அம்மாதான்.

அம்மா உள்ளேதான் படுத்திருக்கிறாள். அவளால் அதிகம் உட்கார இயலாது, தோள்பட்டையிலிருந்து தொடங்கும் வலியில் மெல்ல வேலைகளை முடித்துக்கொண்டு வந்து ‘அப்பாடா’ என்று படுத்துக்கொண்டால் போதும் என்று இருக்கும். அப்போதும் அவளது தோள்பட்டை அவளுடையதுதானே, அப்படியென்றால் அந்த வலியும் நிரந்தரமாக அவளோடு கலந்திருக்கும்.

காலையில் முதலில் எழுவது அம்மாவாகத்தான் இருக்கும். இந்த வாக்கியத்தில் இலக்கணப் பிழை ஒன்று இருக்கிறது. அவளது உறக்கம், விழிப்பு என்பது சாதாரணக் கணக்கில் சேராது. மற்றவர்களது கால அட்டவணை கடந்த வாழ்க்கை அம்மாவுடையது. சட்டென்று தூக்கத்தினுள் நழுவிப்போவதும், எந்த அதிர்ச்சியுமில்லாமல் பட்டென்று எழுந்து கொள்வதுமாக அவளது பகற்பொழுதுகள் நகரும். ஆனால், கச்சிதமாக வேலைகளை முடிப்பவள் அவள்.

காலைவேளைகளில் அம்மா அடுப்படிக்கு வருவதில்லை, பெரும்பாலும். சமையலைப் படுக்கை அறையில் இருந்தபடி செலுத்திக் கொண்டிருப்பாள். விமலாவுக்கும் அம்மாவோடு பேச்சு கொடுத்துக்கொண்டே காரியத்தை கவனிப்பது சுவாரசியமாகப் போய்க்கொண்டிருக்கும்.

எட்டு மணிக்குத் தனது படுக்கை அறையில் இருக்கும் குளியல் அறைக்குள் போய் ஆனந்தமாகக் குளித்துவிட்டு வந்துவிடுவாள். பிள்ளைகள் பாட்டிக்கு வாகாகக் குழாயடியில் ஒரு பிளாஸ்டிக் ஸ்டூல் போட்டு வைத்திருந்தார்கள். அதன்மேல் ஒரு வாளி, குவளை. அவளது சோப்புப் பெட்டியும் பல் செட் வைக்கும் சிறிய வெள்ளைப் பேழையும்.

ஒன்பது மணிக்கு, டாண் என்று டைனிங் டேபிளுக்கு வருவாள் அம்மா. தட்டு சரிப்படாது என்பாள். அவளுக்கென்று ஒரு பெரிய மொட்டைக் கிண்ணம், அதில் கொஞ்சம்போல சோறு, பருப்பு இருந்தால் பருப்பு, இல்லையென்றால் சாம்பார், அதன் மேலே ஆசீர்வதிப்பதுபோல கறி, மெல்லச் சாப்பிட ஆரம்பிப்பாள்.

இடது கைதான் இழுத்த இழுப்பிற்கு வராது போயிருந்தது, பின்னர் வலது கையும் வலிக்க ஆரம்பித்துவிட்டது. அப்படியே சமாளித்துத் தனது வேலைகளைத் தானே கவனித்துக் கொள்ளப் பழகியிருந்தாள். அவள் படும் அவஸ்தைகளைப் பார்க்க எங்களால்தான் பழகிக்கொள்ள முடியவில்லை.

பிள்ளைகளை அவள் பார்த்துக் கொள்வதுபோல் யார் பார்த்துக்கொள்வார்கள்! வீட்டின் சிறந்த வாசகர், ஆனால் அவளிடமே சொல்ல நிறைய கதைகள் இருக்கும். மதுரையில் பெண்ணாய்ப் பிறந்த கதை. தலைஞாயிறில் பெரியம்மா வீட்டில் வளர்ந்த கதை. சந்தோஷமாக வாழ்க்கைப்பட்ட கதை. பொதுப்பணித் துறையில் நேர்மையாக இருந்ததற்காகவே இருபத்தேழு ஊருக்கு மாற்றப்பட்ட கணவரோடு எப்போதும் பெட்டியும் கையுமாகக் குழந்தைகளோடு ஊர் ஊராகச் சுற்றி வந்து பட்ட கதை. தொடர் விடுப்பு எடுத்ததற்காகக் கணவருக்குச் சம்பளம் போடாத நெடிய மாதங்களில் தண்ணீர் ஊற்றிய சோறு ஊட்டிய போதும் தன் குழந்தைகளைக் கண்ணீர் அறியாமல் வளர்த்த கதை. கணவர் மறைந்த தருணத்தில் நிலைகுலைந்துவிடாது நம்பிக்கைச் செடிகளுக்கு நீரூற்றப் பிள்ளைகளுக்குக் கற்பித்த கதை.

பேத்தியும் பேரனும் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தால் பாட்டியின் கட்டிலைச் சுற்றித் தான் திரிவார்கள், பாட்டியோடுதான் அத்தனை உரையாடலும் புகாரும் சண்டையும் சமாதானமும்.

திறப்பு - சிறுகதை

நாங்கள் புருஷனும் பெண்டாட்டியும் காலை உணவை முடித்துக்கொண்டு புறப்படுகையில், உள்ளிருந்தே குரல் வரும், ‘டைனிங் டேபிளை அப்படியே விட்டுட்டுப் புறப்படுங்க, நேரம் ஆயிருச்சு. நான் வந்து பாத்திரமெல்லாம் ஒழித்துப் போட்ருவேன். தனம் வந்திரும் பதினோரு மணிக்கு, நான் பாத்துக்கிறேன். லஞ்ச் எல்லாம் ஞாபகமா எடுத்துக்கிட்டுப் புறப்படுங்க’ என்பாள்.

மாதம் முதல் தேதி என்றால், ‘சம்பளம் எடுத்திட்டு வந்துருங்க, மறந்துராதீங்க’ என்பாள். பகல் உணவு, மீதி இருப்பதை வைத்து முடித்துக்கொள்வாள், மாலை பொங்கல், உப்புமா என்று ஏதேனும் ஒன்றை அத்தனை பேருக்கும் ஆறு மணிக்குச் செய்து முடித்து வைத்திருப்பாள். ஆய்ந்து ஓய்ந்து வீடு திரும்பும்போது எங்களுக்கு இராச் சாப்பாடு பற்றிய கவலையே இருக்காது.

செக்கச் செவேல் என்று இருக்கும் உடலில், அந்தக் கை வலிக்காக அன்றாடம் காலையிலும் இரவிலும் வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக் கொடுத்துச் சிவந்து கன்னிப்போயிருக்கும். வெந்நீர் ஊற்றி அந்த ரப்பர் பையை இரட்டை மடிப்பில் துணியைச் சுற்றி வைத்தாலே நம் கை பொறுக்காது, அநாயாசமாக அதைக் கையில் அடக்கி வைத்துக் கொண்டு ‘தேங்க்ஸ் கணேஷ்’ என்பாள் அம்மா.

நாற்பது வயதுக்குப் பிறகு திடீர் என்று பிரச்னை தோன்றி, வளர்ந்துகொண்டே போய்விட்டது. எல்லா வைத்தியமும் பார்த்தாயிற்று. சூடு பறக்க எண்ணெய் உருவி விட்டுப் பதினைந்து நாளில் சரிசெய்கிறேன் என்று வந்தார் ஒருவர். ஆறு சனிக்கிழமைகள் ஓடி முடிந்ததுதான் மிச்சம். ‘அவருக்கு போன ஜென்மத்தில் கொடுக்க வேண்டியது இருந்தது, கணக்கு முடிந்தது’ என்று சிரித்தாள் அம்மா.

கட்டில் அருகே போய் அமர்ந்து அவளது தோள்பட்டைப் பக்கம் இதமாகப் பிடித்து விட்டால் நமக்கே வைத்தியம் செய்துகொண்டதுபோல் ஆறுதலும் சுகமும் வாய்க்கும். மகனைப்போல் பார்ப்பாள். ஆமாம், மாமியாரைத்தான் அம்மா என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

விமலா தொழிற்சங்க வேலையாக வெளியூர் போயிருக்கிறாள். நேற்றுக் காலை வீட்டு வேலைகள் ஒரு தினுசாகப் பார்த்து முடித்து விட்டு அலுவலகம் போய்விட்டுத் திரும்பி வந்த போது, இரவுக்கு அம்மா அரிசி உப்புமா செய்து வைத்திருந்தாள். அவள் ஸ்பெஷல் அது. அத்தனை ருசியாக இருக்கும்.

“என் சாப்பாட்டுக் கடை ஓவர். பசங்களுக்கும் கொடுத்து முடிச்சாச்சு” என்றாள்.

பிள்ளைகள் கட்டிலில் அமர்ந்து பாட்டியோடு பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போதெல்லாம் டிவி பார்ப்பதையும் அம்மா குறைத்துக்கொண்டு விட்டிருந்தாள். சோபாவிலோ, நாற்காலியிலோ முன்பு மாதிரி நீண்ட நேரம் அமர்ந்து பார்க்க முடியவில்லை. ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’தான் தியேட்டர் போய்ப் பார்த்த கடைசிப் படம்.

திறப்பு - சிறுகதை

குளித்து முடித்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்தேன். உப்புமாவைச் சுவைத்துக்கொண்டே, “அம்மா, பிரமாதம்” என்றேன்.

“விமலா சாப்பிட்டிருப்பாளா, அழைச்சுப் பேசுங்க... கூட்டம் முடிஞ்சிருக்குமா?” என்றாள்.

அலைபேசியில் அழைத்தேன், விமலாவிடமிருந்து பதில் இல்லை. இன்னும் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

நான் நாளிதழ்கள் எடுத்து வைத்துக்கொண்டு படிக்க உட்கார்ந்தேன். விமலா அழைக்கவும் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான், அம்மா இருந்த அறையின் கதவு படாரென்று சாத்திக்கொண்டது. சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன்.

காற்றில் சாத்தியதா, யாராவது வழக்கமாக வேகமாக அறைந்து சாத்தியதா தெரியவில்லை. எப்போதும் பிடித்துத் தள்ளினால் திறந்து கொள்ளும் அறைக்கதவு. போய்த் திறந்து பார்த்தால் திறக்கவில்லை. இறுக்கமாக நின்றது. கைப்பிடியை இலாகவமாகப் பிடித்துக் கீழே இறக்கித் தள்ளித் திறந்துபார்த்தேன். திறக்கவில்லை.

அம்மா உள்ளே இருந்து, ‘என்ன ஆச்சு?’ என்று குரல் கொடுத்தாள்...

“ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல. கதவு கொஞ்சம் அழுத்தமா சிக்கிட்டிருக்கு... இதோ திறந்து கொடுக்கிறேன்” என்றேன்.

இதற்குள் பிள்ளைகள், ‘என்னப்பா’ என்று வேறோர் அறையிலிருந்து வெளியே வந்து நின்றனர். இவர்கள் எப்போது பாட்டி அறையை விட்டு வெளியே வந்தார்கள்?!

அறையின் சாவியை எடுத்துப் பொருத்தித் திறக்கப் போனேன், முன்னும் பின்னும் சுழற்றியதில், லாக் போட்டுக்கொண்டது கதவு. சாவியை என்ன திருப்பினாலும் வசப்படாமல் சிக்கிக்கொண்டு நின்றது. வெறுத்துப்போய், பிடியை மீண்டும் அழுத்தமாகப் பிடித்து முரட்டுத்தனமாக இழுக்கப்பார்த்தேன்.

பிடி உடைந்து கையோடு வந்துவிட்டது.

முடிந்தது. இனி எந்த மார்க்கமும் இல்லை. கதவை உடைக்க முடியாது. என்ன செய்ய..?

பையன் சத்தமாக இரைந்தான். “கொஞ்சம்கூடப் பொறுமையே இல்லையாப்பா...இப்படியா பிடிச்சு இழுப்ப... இப்போ பாரு, பாட்டி தனியா அந்த ரூம்ல மாட்டிக்கிட்டாங்க” என்றான்.

“மெதுவாய்ப் பேசுடா... பாட்டி டிஸ்டர்ப் ஆயிருவாங்க” என்று அவனைப் பார்த்து நான் பதிலுக்குக் கத்தினேன்.

“கதவு திறக்குமா, திறக்காதா?’’ என்று உள்ளிருந்து அம்மா குரல் கேட்டது. என்ன பதிலைச் சொல்ல..?

“கொஞ்சம் இருங்கம்மா... முயற்சி பண்ணிட்டிருக்கேன்” என்றேன்.

“பொய் சொல்லாத... எப்படித் திறப்பே இனி...எல்லாம் போச்சு’’ என்று அழும் அளவுக்குப் போய்விட்டாள் மகள் திவ்யா.

“செல்லங்களா... பொறுங்க பொறுங்க...எதாவது பார்ப்போம்” என்றேன்.

பிரமை பிடித்தாற்போல் ஆனது. ஹாலுக்கு வந்து உட்கார்ந்தேன்.

“நான் எப்பவும் பாட்டி பக்கத்துலதானே படுத்துத் தூங்குவேன், இன்னிக்கு என்ன பண்றது” என்றான் மகன் பிரேம்.

“பாட்டிக்கு ராத்திரி முழுவதும் யாரு உள்ளே துணையா இருப்பா. என்னிக்காவது முடியலைன்னா, நான்தானே கைபிடிச்சு பாத்ரூம் கூட்டிட்டுப் போவேன்?” என்றாள் திவ்யா.

அதற்குள் உள்ளிருந்து அம்மா ஏதோ கூப்பிடும் சத்தம் கேட்டது.

“கணேஷ், பின்பக்கமா சுற்றி வாங்க, சன்னல் வழியா இந்தத் தலைகாணி, போர்வை எல்லாம் எடுத்துட்டுப் போங்க, எப்படித் தூங்குவீங்க...” என்றாள் அம்மா.

வீட்டுக்கு வெளியே வந்து, பின்புறமாக காம்பவுண்டு சுவரை ஒட்டி மெதுவாக நடந்து சென்று நிற்கவும், அம்மா சன்னல் கதவைத் திறந்து நின்றாள்.

“இங்க பாருங்க, எனக்கு ஒரு பயமும் கிடையாது... நல்லவேளையா பாத்ரூம், டாய்லெட் உள்ளேயே இருக்கு. குடிக்கத் தண்ணீர் மட்டும் பாட்டில்ல இந்தப் பக்கம் கொண்டு கொடுத்திருங்க, மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சு... நான் பாட்டுக்குத் தூங்கிருவேன். வெந்நீர் ஒத்தடம் மட்டும் ஞாபகம் வச்சுக்குங்க. மொபைல் இருக்கு, கவலைப்படாதீங்க.காலையில ஆளை வரவழைச்சு, பூட்டை உடைச்சுக் கதவைத் திறந்துக்கலாம். இதுக்கு மேல ஒண்ணும் நடக்காது... போய் நேரத்தோட படுங்க’’ என்றாள்.

அவளது சிரமங்களை ஒற்றை வரியில் ஒதுக்கிவிட்டு, எங்கள் இரவுப் படுக்கையை எடுத்துக் கொடுத்தாள்.

குழந்தைகளை அடுத்த அறையில் படுக்க வைத்தேன். என்னென்னவோ கதைகளை அன்று இரவு யோசித்து யோசித்து சொன்னேன். துப்பறியும் சாம்பு. அப்புறம் ஷெர்லாக் ஹோம்ஸ். அ.முத்துலிங்கத்தின் ஹாஸ்யக் கதை ஒன்று.

வழக்கமாக எந்தக் கதை எடுத்தாலும், பாதி முடிவதற்குள் தூங்கிப்போயிருப்பார்கள் பிள்ளைகள். இப்போது எங்கே நிறுத்தினாலும், “பாட்டி பாவம்பா...” என்றாள் திவ்யா.

“ஏம்பா முட்டாள்தனமா சாவியை எடுத்து சொதப்பினே” என்று கேட்டான் பிரேம்.

“ஸாரிடா கண்ணு, `மன்னுபுகழ்’ பாடுகிறேன், தூங்கு” என்றேன். அவனோ எழுந்து உட்கார்ந்து கொண்டான்.

“நான் இன்னிக்கு ராத்திரி தூங்க மாட்டேன்... பாட்டிக்கு எதாவது ஆச்சுன்னா என்ன பண்றது” என்றான்.

எப்படியோ சமாளித்து இருவரையும் மெல்லத் தூங்க வைத்தேன்.

எழுந்து சமையலறைக்குச் சென்று வெந்நீர் போட்டு, ரப்பர் பையில் ஊற்றி எடுத்துக்கொண்டு, வாசல் கதவைத் தாழ் போட்டுவிட்டுப் பின்புறமாக மெல்லப்போய் சன்னல் அருகே நின்று குரல் கொடுத்தேன்.

“அம்மா, நான்தான், வெந்நீர்ப்பை’’ என்றேன்.

“பசங்க தூங்கிட்டாங்களா” என்றாள் அம்மா.

“உம்... இப்பதான்” என்றேன்.

“சரி, ரொம்ப நேரம் இங்கே நிக்காதீங்க... பூச்சி பொட்டு இருக்கும்...போய்ப் படுத்துத் தூங்குங்க” என்று கூறிவிட்டு, கட்டிலில் போய்ப் படுத்துக்கொண்டாள்.

எவ்வளவு முட்டாள்தனம் என்று நொந்துகொண்டேன். டெரிலிக்‌ஷன் என்பார்களே, கடமை தவறுதல். அதேதான். இன்றிரவை எப்படிக் கடப்பது... இப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று எப்படி மாற்றுவது..?

காலை எப்போது விடியும் என்றிருந்தது. விடிந்தாயிற்று... எல்லா வேலையும் முடித்துக் கொண்டு காத்திருந்தேன்.

எட்டரை மணி போல பூட்டு ரிப்பேர் செய்பவர் வந்தார். விஷயத்தை விளக்கி அறை வாசலில் கொண்டு காண்பித்தேன்...

“இருநூறு ரூபா ஆவும் சார்” என்றார்.

“அதெல்லாம் பாத்துக்கலாம், அவ்வளவுக்கு வேலை இருக்காது, நீங்க கதவைத் திறந்து கொடுங்க மொதல்ல. நேத்து ராத்திரில இருந்து அம்மா உள்ளே மாட்டிட்டு இருக்காங்க” என்றேன்.

தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாகப் பையில் இருந்து எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டார். ஐந்தாறு நிமிடம், தட் தட் தட் என்று எங்கோ பிடித்து, எங்கோ அடித்துக் கொண்டி ருந்தார். நான் நம்பிக்கை யற்றுப்போயிருந்த நேரத்தில், சடார் என்று திறந்துவிட்டார்.

“கதவுகளை அடிக்கடி திறந்து மூடி, பூட்டு சாவி எல்லாம் எண்ணெய் போட்டு கண்டிஷன்ல வைக்கணும் சார். இல்லன்னா இப்படித்தான் ஜாம் ஆயிரும்” என்றார்.

அம்மாவைப் பார்த்தேன், ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்திருந்தாள். குளித்துவிட்டு வந்து படுத்திருக்கவே, வழக்கம்போல் சட்டென்று உறங்கிவிட்டிருந்தாள்.

உதவி செய்த ஆளுக்குப் பணம் எடுத்துக் கொடுத்தேன்.

“சமயத்திற்கு வந்தீங்க... ரொம்ப நன்றிங்க’’ என்று அவரை அனுப்பி வைத்தேன்.

கண்ணில் தட்டுப்பட்ட பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து, ‘`கதவைத் திறந்தாச்சு’’ என்று குரல் கொடுத்தேன். ‘`குட்’’ என்று அவரது ஆறுதல் வெளிப்பட்டது.

உள்ளே வந்து பார்த்தபோது, அறையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தாள் அம்மா.

அவள் முகத்தைப் பார்க்க எனக்கு அவ்வளவு துணிவு இல்லை. அம்மாவும் ஒன்றும் பேசாமல் நேரே சமையலறைக்குள் சென்று மொட்டைக்கிண்ணம் எடுத்துக்கொண்டு வந்து டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்தாள். ஹாட் பேக்கில் சாதம், அருகே ரசம், வாழைக்காய்க் கறி, மோர் எல்லாம் தயாராக வைத்திருந்தேன்.

அவளாக, வழக்கம்போல் ஒரு கையால் பேலன்ஸ் செய்து சாப்பாடு எடுத்துப் போட்டுக்கொண்டு, ரசத்தை ஊற்றிப் பிசைந்து சாப்பிடத் தொடங்கினாள்.

“இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருக்கலாம் ரசத்துக்கு. ஆனா, நீங்களும் மணமாத்தான் வைக்கிறீங்க! வாழைக்காயும் உறைப்பா நல்லா இருக்கு” என்றாள்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வயதான ஒரு பெண்மணியை வீட்டினுள் ஒரு மூலையில் அடைத்து வைத்திருந்த கொடுமை என்னை உறுத்திக்கொண்டே இருந்தது.

“வெரி ஸாரிம்மா” என்றேன். அழுதுவிடுவேன்போல் தெரிந்தது.

“எதுக்கு ஸாரி’’ என்று கேட்டாள் அம்மா.

நான் சும்மா நிற்கவும், அவளே பேசலானாள், “நாள் பூரா, வீட்டு மனுஷங்களும் பிள்ளைகளும் வேலைக்கும் ஸ்கூலுக்கும் வெளியே போயிடறீங்க... நானாகவே என்னைப் பூட்டிக்கிட்டு, எப்படா மூணு மணியாகும், குழந்தை வந்திருவானே, என்ன நாலு ஆச்சு, பெரியவ சைக்கிள் சத்தம் கேக்கலையேன்னு எட்டிப் பார்த்திட்டிருப்பேன். ஒவ்வொரு பறவையா எப்ப கூடு வந்தடையும்னு காத்திட்டிருப்பேன். காலையில தனம் வந்துட்டுப் போனா கொஞ்சம் பேசிட்டிருப்பேன், அதுக்கு அப்புறம் பகல் முழுக்க பேச்சுத் துணை யாரு இருக்கா எனக்கு? ஓயாமப் பேசிட்டிருந்தாலும் ஆளுன்னு இருந்த அந்த மனுஷனும் போயிட்டாரு... இத்தனை காலம் ஒட்டிட்டேன், அதுக்கே பயம் இல்ல... நேத்து ராத்திரி தனியா ரூம்ல இருந்தாலும், கூப்பிட்ட குரலுக்கு நீங்க எல்லாரும் வெளியே இருந்தீங்க இல்ல, அதைப் பாருங்க. சரி சரி, நேரத்தோட புறப்படுங்க... சாயந்திரம் சீக்கிரம் வந்துருங்க. விமலா வேற ஊர்ல இல்ல...” என்றாள்.

பேச்சிழந்து நின்றுகொண்டிருந்தேன் நான்.