Published:Updated:

தமிழ் மணக்கும் தாலாட்டு..! - மீட்டெடுக்கும் குழு #MyVikatan

செட்டிநாட்டுச் சீமையில் பாடப்படும் தாலாட்டுப் பாடல்கள் எதுகை மோனையுடன் இணைந்து இதயம் கவரும் ஓசைநயமிக்கதாக இருக்கும்.

Representational Image
Representational Image

நம் குழந்தைகளின் செவிகளுக்குள் முதன் முதலாய் பாயும் இசை ஊற்று தாலாட்டு. தாலாட்டுக் கேட்டு வளர்ந்த கூட்டம் நம் தமிழ்க் கூட்டம். தாலாட்டுக்கு மயங்காதவர்கள் எவருமில்லை. தாய்மொழியின் அழகியலை, சிறப்பை, இன்னிசையை, மொழி அறிவை, உறவுகளின் மேன்மையை இளமையிலேயே குழந்தைகளிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் ஓர் அற்புதமான இசை வடிவம்தான் தாலாட்டு. குழந்தைகளுடன் பெற்றோர்கள் நெருக்கமாக உரையாடினால்தான் அந்தக் குழந்தை தன்னம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வளரும் என்கிறது உளவியல். சொல்லப்போனால் இதுவும் ஓர் உரையாடல் களம். இந்தத் தாலாட்டுப் பாடல்களுக்குள் ஊரும் உறவும், மண்ணின் சிறப்பும், மங்காத குலப்பெருமையும் ஒன்றோடு ஒன்றாய்ப் பின்னிப் பிணைந்திருக்கும். ஆனால், காலப்போக்கில் தாலாட்டுப் பாடல்கள் காணாமல் போய்விட்டன. அதைப் பாடும் தாய்மார்களின் எண்ணிக்கையும் வெகுசொற்பமாய் குறைந்துவிட்டது. அம்மாக்களின் தாலாட்டுகளை ஓரங்கட்டிவிட்டு ஆண்ட்ராய்டு போன்களின் இசையை குழந்தைகளின் செவிகளுக்குள் செலுத்தத் தொடங்கிவிட்டோம்.

படப்பிடிப்பில்...
படப்பிடிப்பில்...

இச்சூழலில் `நகரத்தார் தாலாட்டு’ என்ற தலைப்பில் தாலாட்டுப் பாடல்கள் அடங்கிய இரண்டு டிவிடி-க்களை சமீபத்தில் வெளியிட்டு தமிழ் தாலாட்டு உலகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது காரைக்குடி அருகில் உள்ள கோவிலூர் மடாலயம். தாலாட்டுப் பாடல் டிவிடி வெளியீட்டுக்கான காரணம் குறித்தும் அதன் பின்னணி தொடர்பாகவும் கோவிலூர் மடாலய ஆதீனம் `சீர் வளர் சீர்' மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகளை தொடர்புகொண்டு பேசினேன். ``கோவிலூர் மடாலயம் தற்போது அருகிப்போய் வரும் தாலாட்டுப் பாடல்களுக்கு புத்துயிர் கொடுத்து அதை ஆவணப்படுத்த வேண்டும் என்று முடிவுக்கு வந்து இதைச் செய்துள்ளோம்.

நம் தமிழகத்தின் பல பகுதிகளில் தாலாட்டுப் பாடப்படுகிறது. ஆனால், செட்டிநாட்டுச் சீமையில் பாடப்படும் தாலாட்டுப் பாடல்கள் எதுகை மோனையுடன் இணைந்து இதயம் கவரும் ஓசை நயமிக்கதாக இருக்கும். இதற்கு யாப்பிலக்கணம் என்பதெல்லாம் கிடையாது. ஆனால், இப்பாடல்களின் கருத்தாழமும் ஓசை நயமும் மேன்மையானது. இப்பாடல்களில் ஏராளமான வரலாற்றுச் செய்திகளும் முன்னோர் பற்றிய தகவல்களும், குடிப்பெருமை, குலப்பெருமை, முன்னோர்களின் புகழ், வீட்டின் செல்வாக்கு, உறவினர்களின் பாசம், ஒற்றுமை, தெய்வத்தின் துணை, கோயில் சிறப்பு ஒழுக்கம் மற்றும் அறநெறி சார்ந்த விஷயங்களும் இதெல்லாம் பாடுபொருளாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் நம் மூதாதையர்களின் முகவரியை அறிந்துகொள்வதற்கும், ரத்த உறவுகளுடன் ஒற்றுமையைப் பேண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் தாலாட்டுப் பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன.

Representational Image
Representational Image

நல்ல தாலாட்டுப் பாடல்களைக் கேட்டு வளரும் பிள்ளைகள் வாழ்க்கையில் ஒழுக்க நெறி தவறமாட்டார்கள். அவ்வளவு மகத்துவமிக்க தாலாட்டுப் பாடல்களை காலவெள்ளம் அடித்துச் செல்லக் கூடாது என்பதற்காகத்தான் இதை தொகுத்து இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப வடிவத்தில் டிவிடி ஆகவும், யூடியூபிலும் வெளியிட்டுள்ளோம். இதில் 13 வயது சிறுமி முதல் 91 வயது பெண்மணிவரை மொத்தம் 180 பேர் பாடியிருக்கிறார்கள். இதற்கான ஒளி-ஒலிப் பதிவுகள் எந்த ஸ்டுடியோவிலும் நடத்தப்படவில்லை. இயற்கையான வெளிப்புறங்களில்தான் படப்பிடிப்பு செய்தோம். தாலாட்டுப் பாடல்கள் இன்றைய நிகழ்கால தலைமுறையைச் சென்று சேர வேண்டும். நம் சமூகத்தின் பலவித தொன்மைமிக்க விஷயங்கள் அழிந்துவிடாமல் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் ஒரு பகுதியே இந்தத் தாலாட்டுப் பாடல்களின் தொகுப்பு. இது காலத்தால் நிலைத்து நிற்க வேண்டும். அதற்கான முயற்சிதான் எங்களின் இந்தப் பணி" என்கிறார் கோவிலூர் மடாலய ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள்.

இதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட தமிழக அரசின் `தமிழ்ச் செம்மல்' விருதுபெற்ற முனைவர் பேரா. சே.குமரப்பன் நம்மிடம், ``தாய்மார்கள் கருவுற்றிருக்கும்போதே நல்ல இசையினையும், பாடல்களையும் செவிமெடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இது அறிவியல் ரீதியான உண்மையும்கூட. தாலாட்டுப் பாடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இதை ஆவணப்படுத்தி இருக்கிறோம். இதை வர்த்தக நோக்கத்தில் செய்யவில்லை. இனிமைமிக்க இந்த இரண்டு டிவிடி-களையும் கோவிலூர் மடாலயத்தில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் யூடியூபிலும் இலவசமாக கண்டு கேட்டு மகிழலாம்" என்றார்

விசாலாட்சி பழனியப்பன்
விசாலாட்சி பழனியப்பன்

இந்தத் தொகுப்பில் நான்கு பாடல்கள் பாடியிருக்கிறார் சண்முகநாதபுரம் விசாலாட்சி பழனியப்பன், ``தாலாட்டுங்கிறது ஒவ்வொரு குழந்தைப் பருவத்திலும் மிகமுக்கியமானது. தாலாட்டின் இசையும் ராகமும் குழந்தைகளின் மனதையும் மூளையையும் ரொம்பவே ரிலாக்ஸ் செய்து உறங்க வைக்கக்கூடியது. அதனால்தான் வளையலின் இனிய ஓசையை குழந்தைகள் செவிமெடுக்க வேண்டும் என்பதற்காகவே கருவுற்ற தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி கை நிறைய வளையல்களை அணிவிக்கிறோம். யாருடைய குரல் என்பதை குழந்தைகளால் எளிதில் அடையாளம் காணமுடியும். தொடர்ச்சியாக தாலாட்டுப் பாடுபவர் பாடாமல் வேறு ஒருவர் திடீரெனப் பாடினால் அந்தக் குழந்தை தொட்டிலுக்கு வெளியே தலையை தூக்கிப் பாடுபவரைக் கவனிக்கும். அந்த அளவுக்கு குழந்தைகளின் மனதில் அந்தக் குரலும் இசையும் ஆழமாகப் பதிந்திருக்கும்.

செட்டிநாட்டுப் பகுதியில் பாடப்படும் தாலாட்டு `ரே..ரே.... ஆராரோ.. ஆரிராரோ...' எனத் தொடங்கி முடியும். ஆனால், நாஞ்சில் வட்டாரப் பகுதிகளில் `லூ..லூ....லூ..' என ஆரம்பமாகி முடியும். இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள் இதைக் கற்றுக்கொண்டு பாடுவதற்கு வெட்கப்படுகிறார்கள்.

ராமாயணம், பிட்டுக்கு மண் சுமந்த கதைகள் போன்ற புராண இதிகாச காவியங்களைக்கூட இந்தத் தாலாட்டுப் பாடல்கள் வழியே ஐந்து நிமிடங்களில் சொல்ல முடியும். தாலாட்டுப் பாடல்கள் பொதுவாக நீலாம்பரி ராகத்தில்தான் இருக்கும். ஆனால், என்னைப்போன்று பாடுபவர்கள் எவரும் முறைப்படி சங்கீதம் கற்றவர்கள் இல்லை. ஆனால், குரல் இனிமை மிக்கவர்கள். தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தாலாட்டுகள் வித்தியாசப்படும். செட்டிநாட்டுப் பகுதியில் பாடப்படும் தாலாட்டு 'ரே.. ரே.... ஆராரோ.. ஆரிராரோ...' எனத் தொடங்கி முடியும். ஆனால், நாஞ்சில் வட்டாரப் பகுதிகளில் `லூ..லூ....லூ..' என ஆரம்பமாகி முடியும். இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள் இதைக் கற்றுக்கொண்டு பாடுவதற்கு வெட்கப்படுகிறார்கள். ஆனால், இது நம் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலில் ஓர் அங்கம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார்.

இனிமேலாவது குழந்தைகள் உள்ள இல்லங்கள்தோறும் ஒலிக்கட்டும் இனிய தாலாட்டு..!

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/