Published:Updated:

பாஸ்வேர்டு! - திக் திக் த்ரில் சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

தாம் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளுக்கு அரசாங்கத்தின் அனுமதியும் நிதியும் வேண்டி அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கிக் கொண்டிருந்தனர்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலின் கான்பிரன்ஸ் ஹாலில் அறிவியல் அறிஞர்கள் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு கூடியிருந்தவர்கள் அனைவருமே இந்தியாவின் மாபெரும் அறிவியல் அறிஞர்கள்.

தத்தமது புதிய கண்டுபிடிப்புகள் குறித்து ஒவ்வொருவராக கட்டுரைகளைச் சமர்ப்பித்துக்கொண்டிருந்தனர்.

தாம் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளுக்கு அரசாங்கத்தின் அனுமதியும் நிதியும் வேண்டி அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் கடைசி இருக்கையில் இருந்த ஒருவன் எழுந்தான். மாநாட்டு அமைப்பாளர்களுக்கு அவன் எதற்காக எழுகிறான் எனப் புரியவில்லை. அவனை நோக்கி அமைப்பாளர்கள் சிலர் வேகமாகச் சென்றனர்.

Representational Image
Representational Image

அவன் புன்னகையுடன் தன்னுடைய பாக்கெட்டில் கைகளை விட்டான். அவன் கைகளை வெளியே எடுத்த போது அவனது இரு கைகளிலும் இரண்டு இரண்டு GLOCK 17 ரக துப்பாக்கிகள் இருந்தன.

அதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவன் மிக வேகமாக மேடைக்குச் சென்றான். மேடையில் பாதி உரையில் உறைந்து நின்றிருந்த ஒரு வயதான அறிஞரை அமர வைத்துவிட்டு மைக்கில் பேச ஆரம்பித்தான்.

"நீங்கள் அனைவருமே இப்போது பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டு உள்ளீர்கள்! என்னிடம் துப்பாக்கிகள் மட்டும் அல்ல; என்னுடைய உடம்பு முழுக்க வெடிகுண்டுகள் கட்டப்பட்டுள்ளன" என்றபடி தனது சட்டையைக் கழற்றிக் காண்பிக்க, அனைவரின் இதயங்களும் எகிறத் தொடங்கின .

அப்போது அங்கு காவலுக்கு இருந்த காவலர் ஒருவர் அவனை நோக்கி வேகமாக ஓட ஆரம்பிக்க, அவன் சற்றும் யோசிக்காமல் சுட்டான்!

"எனக்கு எதிராக யாராவது அசைந்தால் அவர்களின் உயிர் போவது உறுதி" என்று கோபத்துடன் கர்ஜித்தான். பின் சிரித்தபடியே "நான் ஒருவன் மட்டுமே இந்த ப்ராஜெக்ட்டில் இருக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். என்னுடைய சகாக்கள் சிலரும் உள்ளனர். அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்" என்றவாறு அவன் தனது இடது கையை மேலே தூக்கினான். அந்த ஹாலில் பல்வேறு இடங்களில் அமர்ந்திருந்த அவனுடைய சகாக்கள் 5 பேர் அவனைப்போலவே துப்பாக்கிகள் மற்றும் உடலில் கட்டப்பட்ட வெடிகுண்டுகளுடன் எழுந்து நின்றனர். அந்த அரங்கம் அதிர்ச்சியில் உறைந்து போனது.

Representational Image
Representational Image

சுடப்பட்ட காவலரின் உடல் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

அவன் மீண்டும் மைக் முன் நின்று பேச ஆரம்பித்தான்."எங்களின் இன்னும் ஐந்து சகாக்கள் கூட உங்களுடனே அமர்ந்துள்ளனர். அவர்கள் எமர்ஜென்சிக்கு மட்டுமே! எனவே யாரும் ஹீரோயிசங்கள் எதையும் முயலவேண்டாம்" என்றபடி தொடர்ந்தான்.

"எனக்கு வேண்டியது உங்கள் உயிர்கள் அல்ல. உங்களுடைய அரசாங்கத்திடம் எங்களுக்குச் சில நிபந்தனைகள் இருக்கின்றன. அதை அவர்கள் நிறைவேற்றினால் நாங்கள் அமைதியாக வெளியே சென்று விடுவோம்" என்றபடி மேடையில் அமர்ந்திருந்த முதன்மை விஞ்ஞானிகளை கீழே இறங்குமாறு கட்டளையிட்டான். மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளும் அகற்றப்பட்டன.

மேடையில் ஒரே ஒரு நாற்காலியைப் போட்டு அவன் அமர்ந்து கொண்டான்.

அவனுடைய சகாக்கள் அரங்கின் நாலாப்புறமும் நின்று கொண்டனர். அங்கே இருந்த யாருக்கும் அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. அங்கு ஒரு வேண்டாத மயான அமைதி நிலவியது.

திடீரென ஒரு குரல் ஸ்பீக்கர்கள் வழியே ஒலிக்க ஆரம்பித்தது. "நான் பாதுகாப்புத் துறையின் செயலர். உங்கள் கோரிக்கைகளைக் கூறுங்கள். நாங்கள் உங்களைப் பார்த்துக்கொண்டும், நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் தான் இருக்கிறோம்" என்றது.

"ஓ! அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வந்துவிட்டதா? நல்லது" என்று அவன் சிரித்தபடியே, "நாங்கள் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தாய் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய தலைவர்கள் சிலரை உங்கள் இராணுவம் கைது செய்து வைத்துள்ளது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

அவ்வளவுதான். இது ஒன்றே எங்களின் கோரிக்கை" என்றபடியே சில பெயர்களை வாசிக்க ஆரம்பித்தான்.

Representational Image
Representational Image

பிறகு சற்று இடைவெளி விட்டு "இவர்கள் உங்கள் சிறைகளிலோ, கைதிகள் கணக்கிலோ இருக்க மாட்டார்கள்! காரணம் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்" என்றான்.

"சரி. நாங்கள் விவாதித்துவிட்டு மறுபடியும் தொடர்பு கொள்கிறோம். ஆனால் அங்குள்ள ஒரு உயிர் கூட இனி போகக்கூடாது" என்றவாறு குரல் அணைந்தது.

அப்போது அரங்கின் வலதுபக்க கடைசி வரிசையில் இருந்த ஒருவன் திடீரென எழுந்து நின்றான். அவனைப் பார்த்ததும் தீவிரவாதிகள் "ஏய்! ஏன் நிற்கிறாய்? உட்கார்.. நின்றால் சுட்டுவிடுவோம்" என்றபடி அவனிடம் வேகமாக ஓடினர். அவன் இரண்டு கைகளையும் மேலே தூக்கியபடி "தலைவரே வணக்கம். நானும் தாய் இயக்கத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் இந்த ப்ராஜெக்டில் நான் இல்லை. இன்று நகரின் முக்கியமான பெரிய மருத்துவமனையில் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டிய முக்கியப் பொறுப்பை இயக்கம் எனக்கு அளித்துள்ளது. எனவே நான் வெளியே செல்ல நீங்கள் அனுமதித்தால்தான் என்னால் குண்டுவெடிப்பை நிகழ்த்த முடியும்" என்றான்.

Representational Image
Representational Image

உடனே தீவிரவாதிகளின் தலைவன் ஆச்சர்யத்துடன், "ஓ!அப்படியா? சரி நீ இங்கு எதற்கு வந்தாய்? என்று கேட்டான்.

அவன் "இங்கு இந்த பிராஜக்ட் நடக்கும் என எனக்குத் தெரியாது. எனக்கு வந்த கட்டளைப்படி நான் இந்த நிகழ்சியை முடித்துவிட்டு வெளியே சென்று என்னுடைய செல்போன் மூலமாக குண்டுவெடிப்பை நிகழ்த்த தேவையான ஆரம்பகட்ட பணிகளைச் செய்ய வேண்டும்"

"அந்த வெடிகுண்டிற்கு இரண்டு பாஸ்வேர்டுகள் தேவை. குறிப்பிட்ட நேரத்தில் முதல் பாஸ்வேர்டை ஆக்டிவேட் செய்யும் பணி எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பிராஜெக்டில் நான்தான் நம்பர் ஒன்"என்றான்.

அடுத்த நொடி இடது மூலையில் கடைசி வரிசையில் இருந்த ஒருவன் பரபரப்புடன் எழுந்து, "தலைவரே இவன் பொய் சொல்கிறான். நான்தான் நிஜமான நம்பர் ஒன். நான்தான் அந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தப் போகிறவன். இவன் யார் என்றே தெரியவில்லை. இவனைச் சுட்டுத் தள்ளுங்கள்" என்றான்.

தலைவனுக்குச் சற்று குழப்பம் ஏற்பட்டது.

அந்தக் குழப்பம் தீர்வதற்கு முன்பாகவே வலதுபுற இரண்டாவது வரிசையில் இருந்த ஒருவன் எழுந்து நின்று "நான் நம்பர் டூ. எனக்கும் அதே குண்டுவெடிப்பு பிராஜக்ட்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

Representational Image
Representational Image

முதல் பாஸ்வேர்டு ஆக்டிவேட் ஆனவுடன் நான் எனது இரண்டாம் பாஸ்வேர்டு மூலமாக டைமரை ஆன் செய்து வெடிகுண்டை வெடிக்கச் செய்ய வேண்டும். எனவே, என்னை நீங்கள் உடனே வெளியே அனுப்பினால்தான் நான் அந்தக் குண்டுவெடிப்பு ப்ராஜெக்டை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்" என்றான்.

உடனே இடதுபுற மூன்றாவது வரிசையில் இருந்த ஒருவன் படாரென்று எழுந்து

"இல்லை நான்தான் நம்பர் டூ. எனக்குத்தான் அந்த இரண்டாம் பாஸ்வேர்டு மூலம் வெடிகுண்டை வெடிக்க வைக்கும் பிராஜக்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இவன் நெம்பர் டூ இல்லை நான்தான் ஒரிஜினல் நெம்பர் டூ. என்னைத்தான் நீங்கள் வெளியே அனுப்ப வேண்டும்" என்றான்.

தீவிரவாதிகள் தலைவனுக்கு மிகப்பெரிய குழப்பம். "முதல்ல அப்படி ஒரு பிராஜக்ட் இருக்கானு நான் மேலிடத்தில் கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கறேன். அப்படி ஒரு ப்ராஜெக்ட் மட்டும் இல்ல அப்படின்னா உங்க நாலு பேரோட உயிர் உங்கள் கையில் இல்லை" என்று கர்ஜித்தபடி தன்னுடைய சேட்டிலைட் போனில் யாரிடமோ தொடர்பு கொண்டான். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அவனுடைய முகம் சாந்தமானது.

Representational Image
Representational Image

"ஆமாம் அந்த மாதிரி ஒரு பிராஜக்ட் இருப்பது உண்மைதான். அதற்கு இரண்டு பேரை மட்டுமே அனுப்பியிருப்பதா இயக்கம் சொல்லுது. ஆனா நீங்க நாலு பேர் இருக்கீங்க. உங்களில் யார் உண்மையான நம்பர் ஒன் ?யார் உண்மையான நம்பர் டூ? மரியாதையா உண்மையைச் சொல்லியிருங்க" என்றான்.

நால்வருமே பதற்றத்துடன் நாங்கள்தான் உண்மையான ஆட்கள் என்றனர்.

தலைவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது அவனுடைய வலதுகரம் போல் இருந்தவன் தலைவனுடைய காதில் ஏதோ கூறினான். உடனே தலைவனின் முகம் பிரகாசமடைந்தது.

தலைவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு "சரி குண்டுவெடிப்பை நிகழ்த்த உள்ள உண்மையான நம்பர் 1 மற்றும் நம்பர் 2 இருவருக்கு மட்டுமே அந்த பாஸ்வேர்டுகள் தெரியும். இப்போது நான் உங்களுக்கு ஒரு வாட்ஸ்அப் நம்பர் கொடுக்கிறேன்"என்றபடி முதல் வரிசையில் அமர்ந்திருந்த வயதான சயின்டிஸ்ட்டைப் பார்த்து "உங்களுடைய வாட்ஸ்அப் நம்பர் என்ன?"என்றான். அவர் பயத்துடன் தன்னுடைய நம்பரை கூற, அதை அங்கிருந்த லேப்டாப்பில் டைப் செய்ய ஆரம்பித்தான். அது ஸ்கிரீனில் டிஸ்பிளே ஆக ஆரம்பித்தது.

Representational Image
Representational Image

"இது அவரோட வாட்ஸ் அப் நம்பர். அவர் போனை இப்ப நான் வாங்கிக்கப் போறேன். நாலு பேரும் இப்ப உங்க பாஸ்வேர்டுகளை இந்த நெம்பருக்கு அனுப்பப் போறீங்க. உண்மையான பாஸ்வேர்டுகளை நான் நம்முடைய இயக்கத் தலைமையிடம் கேட்டு கன்ஃபார்ம் செய்து கொள்ளப் போகிறேன்."

"யார் இருவரது பாஸ்வேர்டுகள் உண்மையோ, அவர்கள் இருவரும் உண்மையான நபர்கள். அவர்கள் புராஜெக்டைச் செயல்படுத்த வெளியே போகலாம். ஆனால் போலியான நபர்கள் இருவர் உடனே சுட்டுக் கொல்லப்படுவர்" என்றான்.

நால்வருமே பதற்றத்துடன் தலையை ஆட்டினர். அந்த சயின்டிஸ்டிடமிருந்து செல்போன் வாங்கப்பட்டது. நால்வரும் மேடைக்கு அழைக்கப்பட்டு தனித்தனி இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். அவரவர் பாஸ்வேர்டை அவர்கள் நால்வருமே அந்த வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பினர். தலைவன் அந்த நான்கு பாஸ்வேர்டுகளையும் புன்னகையுடன் பார்த்தான்."

"நீங்கள் யாரும் அசையக்கூடாது. கைகளைக் கட்டிக்கொண்டு அப்படியே அமருங்கள்" என்றபடி அவர்களுடைய நால்வரின் செல்போன்களையும் பறித்துக்கொண்டான். பின் சேட்டிலைட் போனில் இயக்கத்துடன் பேச ஆரம்பித்தான்,

சயன்டிஸ்ட்டின் போனையே பார்த்துக்கொண்டிருந்தான். பதற்றத்துடன் அங்குமிங்கும் நடந்தான். அவனது சகாக்களும் ஆர்வத்துடன் அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

Representational Image
Representational Image

படபடப்புடன் இருபது நிமிடங்கள் கடந்தது.

போனையே பார்த்துக்கொண்டிருந்த தலைவனின் முகத்தில் சிறு புன்னகை தோன்றி படிப்படியாகப் பெரிதானது.

கைகள் இரண்டையும் மேலே தூக்கியவாறு இரு துப்பாக்கிகளையும் கீழே போட்டான்.

நெஞ்சில் கைகளை வைத்தவாறு 'ஜெய்ஹிந்த்' என்றான். அவனது சகாக்களும் அவ்வாறே மகிழ்வுடன் கூறினர். அங்கிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை!

அந்தத் தீவிரவாதிகளின் தலைவன் பேச ஆரம்பித்தான். "நானும் என்னுடன் வந்தவர்களும் தீவிரவாதிகள் இல்லை. மத்திய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள்! நம்முடைய நகரில் பிரபலமான ஒரு மருத்துவமனையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இரண்டு மணி நேரம் முன்பு எங்கள் அமைப்புக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது."

"அந்த வெடிகுண்டு குறிப்பாக எந்த மருத்துவமனையில், எந்தஇடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்து விட்டோம். குண்டுவெடிப்பு நடத்த உள்ள இயக்கத்தின் தீவிரவாதி ஒருவனைக் கைது செய்ததன் மூலம் இது சாத்தியமானது."

"ஆனால் அதைச் செயலிழக்கச் செய்ய முடியவில்லை. அந்த இடத்தில் இருந்து வெடிகுண்டை அகற்ற முயற்சி செய்தால் உடனே குண்டு வெடிக்கும்படி செட்டப் செய்திருந்தனர். மருத்துவமனையில் அதிக ஆட்கள் இருப்பதாலும், அருகே நிறைய கட்டடங்கள் இருப்பதாலும் அங்குள்ள மக்களை எங்களால் உடனே வெளியேற்ற இயலவில்லை."

Representational Image
Representational Image

"மேலும் மக்களை வெளியேற்றத் தொடங்கினால் உடனே குண்டுகளை வெடிக்கச் செய்துவிடுவார்களோ என்ற பயமும் எங்களுக்கு இருந்தது"

"ஆனால் அந்த வெடிகுண்டை குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க வைக்க போன் மூலமாக Activate செய்யக்கூடிய இரண்டு பாஸ்வேர்டுகள் தேவை என்பதையும்,

ஒருவேளை வெடிகுண்டு Activate செய்யப்படாமலே விடப்பட்டாலும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் அது தானாகவே Activate ஆகிவிடும் என்பதையும் நம்முடைய சைபர் கிரைம் மிகுந்த முயற்சிகளுக்குப் பின் கண்டுபிடித்தது."

"புதிய தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு என்பதால், இரு பாஸ்வேர்டுகள் மூலம் வெடிகுண்டை Deactivate செய்து மட்டுமே குண்டு வெடிப்பதைத் தடுக்க முடியும் என்பதை சைபர் கிரைமும், பாம் ஸ்குவார்டும் எங்களுக்கு தெளிவாகத் தெரிவித்தன"

"வெடிகுண்டை வெடிக்கச் செய்யக்கூடிய அந்த இரண்டு பாஸ்வேர்டுகள் இரண்டு தீவிரவாதிகளிடம் உள்ளது என்பதையும்,

ஆனால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதவர்கள் என்பதையும் கண்டறிந்தோம். மேலும் அவர்கள் இருவருமே இன்று நடைபெற உள்ள இந்த அறிவியல் மாநாட்டிற்கு வர உள்ளனர் என்பதை நமது உளவுத்துறை மிகுந்த சிரமப்பட்டுக் கண்டறிந்தது. ஆனால் அவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியாது!"

"ஒருவேளை அவர்கள் யார் என்பது தெரிந்து அவர்களைக் கைது செய்தாலும், அவர்கள் பாஸ்வேர்டுகளை உடனே கூறுவார்களா என்பது சந்தேகம்தான். அப்படி அவர்கள் கூறக்கூடிய பாஸ்வேர்டுகள் ஒருவேளை தவறாக இருந்தால் உடனே குண்டுகள் வெடித்துவிடும் என்ற பயமும் எங்களுக்கு இருந்தது."

Representational Image
Representational Image

"எனவே அவர்களுடைய உயிருக்கு ஆபத்து எனும் ஒரு நிலையை இயல்பாக உருவாக்கி, உண்மையான பாஸ்வேர்டுகளை அவர்களையே கூற வைத்தோம்! அதற்காகத்தான் இந்த நாடகம். இவர்கள் இருவரும் நமது அதிகாரிகள்"என்றபடி நால்வரில் புன்னகையுடன் நின்றிருந்த இருவரை அழைத்து கட்டியணைத்துக் கொண்டார் அந்த உயர் அதிகாரி! அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றிருந்த உண்மையான இரு தீவிரவாதிகளின் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டன.

"அப்படியானால் அந்த போலீஸ்காரர் சுடப்பட்டது?" என்றார் ஒரு சயன்டிஸ்ட்."அதுவும் நாடகம்தான்!" என்ற அதிகாரி புன்னகையுடன் தொடர்ந்தார்.

"ஒருவேளை பாஸ்வேர்டை அவர்கள் தவறாகக் கூறினால் அவர்கள் உயிர் போய்விடும் என்ற சூழ்நிலையை உருவாக்கினால் அவர்கள் உண்மையான பாஸ்வேர்டுகளைத்தான் கூறுவார்கள் என்று நம்பினோம். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. உண்மையான தீவிரவாதிகள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய ஒரிஜினல் பாஸ்வேர்டுகளை நம்முடைய பாம் ஸ்குவார்டுக்கு அனுப்பி வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்துவிட்டோம். அவர்களை நம்ப வைக்க உங்கள் அனைவரையும் சற்று பயமுறுத்த வேண்டியிருந்தது"என்றபடி அவர் முடிக்க அந்த ஹாலில் கைதட்டல் பலமாக எழுந்தது!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு