Published:Updated:

தீரா உலா: கல்லிலே கலை வண்ணம் கண்டோம்!

தீரா உலா
பிரீமியம் ஸ்டோரி
News
தீரா உலா

காயத்ரி சித்தார்த்

“பயணம் என்பது பாதையில் நடப்பதல்ல; பாதையாய் மாறுவது.

கடலில் நீலமாகவும் மலையில் பச்சையாகவும் மரத்தில் இலையாகவும் மாறுங்கள்.”

- நரன்

கிப்தில் நாங்கள் கடலையோ, பெயர் தெரிந்த மரங்களையோ பார்க்கவில்லை. அங்கே நம்மூரைப்போல மிக உயர்ந்த பாறையாலான மலைகள் இல்லை. இருக்கும் மலைகளும் யாரோ மணலால் செய்து உச்சியில் மட்டப்பலகை வைத்து அழுத்தி சமப்படுத்தியது போல, தட்டையாகச் செடிகள் மரங்கள் எதுவும் இல்லாமல் சந்தன நிறத்தில் மொழுக்கென்று இருந்தன. அதனால், கடலில் நீலமாகவும் மலையில் பச்சையாகவும் மரத்தில் இலையாகவும் மாறாவிட்டாலும், அங்கே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பரந்து விரிந்து ஓடிக்கொண்டேயிருக்கும் நதியில் படகாக எங்களால் மாற முடிந்தது.

தீரா உலா: கல்லிலே கலை வண்ணம் கண்டோம்!

அஸ்வானில் அந்தி மயங்கும் வேளையில் ஒரு சிறிய பாய்மரப் படகில் பயணம் செய்தோம். படகில் எங்கள் நால்வரைத் தவிர்த்து படகைக் காற்றின் போக்குக்கு ஏற்றபடி திருப்புவதற்காக ஒருவரும், எம்.ஜி.ஆர் படகோட்டி படத்தில், `தரை மேல் பிறக்க வைத்தான்...' என்று பாடுவதைப் போலவே இசையோடு நாடோடிப் பாட்டுப் பாட ஒருவரும் இருந்தனர். அவர் பாடிக்கொண்டேயிருக்க நைல் நதியின் நீரோட்டத்தில் சில்லென்ற காற்று முகத்தில் வீச மெள்ள நகரும் படகில் பயணித்தது ஆஹா அனுபவம்.

இப்படியே வாழ்நாளெல்லாம் நதியில் போய்க்கொண்டே இருக்கக்கூடாதா என்று நினைக்க வைத்தது. காற்றுதான் உண்மை யான படகோட்டி. காற்று வீசுவது நிற்கும்போதெல்லாம் படகும் நதியின் நடுவே அப்படியே நின்றது. நாம் மீண்டும் காற்று வீசும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தீரா உலா: கல்லிலே கலை வண்ணம் கண்டோம்!

அங்கிருந்து கரையேறி நடந்து அஸ்வானின் மிகப் பழைய கடைத்தெருக்களில் சுற்றினோம். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால் அவர்களின் வழக்கமான கடைத்தெருவே திருவிழாபோல வண்ணமயமாக இருந்தது. பிள்ளைகளை வைத்துக் கொண்டு பொம்மைக் கடை களைத் தாண்டி வருவது பெரும்பாடாக இருந்தது. நம்மூர் பழ வண்டிகளைப் போல அங்கே ஸ்ட்ராபெர்ரி பழங்களைக் குவித்து வைத்து கூவி விற்றார்கள்.

தீரா உலா: கல்லிலே கலை வண்ணம் கண்டோம்!

நாங்கள் மிகவும் ஆச்சர்யப்பட்டது, அங்கிருந்த கருவாட்டுக் கடைகளைப் பார்த்துத் தான். மெகா சைஸ் மீன்களைக் கண்ணாடிக் குடுவையில் எண்ணெய்க்குள் போட்டு வைத்திருந்தார்கள். அது கருவாடா, ஊறுகாயா அல்லது மீன் மம்மியா என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். கருப்பட்டிபோல, வேகவைத்த மொச்சைப்பயறு போல அவர்கள் கூடைகளில் அடுக்கி வைத்து விற்றதையெல்லாம் வாங்கி சாப்பிட்டுப் பார்த்தோம். கரும்பு ஜூஸ் குடித்தோம். அங்கிருந்த நடைபாதை உணவகத்தில் எகிப்தின் பாரம்பர்ய உணவான `கொஷரி'யைச் சாப்பிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மறுநாள் அஸ்வானின் பிரசித்தி பெற்ற கல் குவாரிக்குப் போனோம். அது ஏன் பிரசித்திபெற்றது என்றால், அங்கிருந்துதான் கற்களை வெட்டி எடுத்துப்போய் கீஸா பிரமிடுகளில் அடுக்கிக் கட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே கீஸாவில் ஒவ்வொரு கல்லின் எடையையும் அளவையும் பார்த்து பிரமித்தது போதாதென்று நாங்கள் இரண்டு மணி நேரம் விமானத்தில் பயணித்த 590 மைல்கள் முழுக்க, இந்தக் கற்களை எப்படி எடுத்துப்போனார்கள் என்று மீண்டும் பிரமித்து நின்றோம்.

தீரா உலா: கல்லிலே கலை வண்ணம் கண்டோம்!

இந்த பிரமிப்பெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல, அடுத்ததாக அஸ்வான் பேரணைக்குக் கூட்டிப் போனார்கள். பேரணை என்றால் உண்மையிலேயே கண்ணால் பார்த்தும்கூட நம்ப முடியாத அளவுக்கு மிகப் பெரிய அணை. அது கட்டப்படும் வரை எகிப்து மக்களுக்கு அடிக்கிற கையாகவும் அணைக்கிற கையாகவும் இருந்த நைல் நதியை இந்த அணையால் அணைக்கும் கரமாக மட்டுமே மாற்றியிருக்கிறது எகிப்து அரசு. வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்காக 11-ம் நூற்றாண்டு முதலாகத் திட்டமிடத் தொடங்கி 1976 வரை அரும்பாடுபட்டு இந்த அணையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அணைக்காகத் தேக்கப்பட்ட நீர் உலகிலேயே மிகப் பெரிய செயற்கை ஏரியாக மாறியிருக்கிறது. அதை `நாசர் ஏரி' என்று அழைக்கிறார்கள். 550 கி.மீ நீளமும் 35 கி.மீ அகலமும் கொண்ட இந்தப் பெரிய ஏரியிலிருந்து எகிப்து முழுமைக்கும் தேவைக்கும் அதிகமாகவே அவர்களால் மின் உற்பத்தி செய்ய முடிகிறது. நுபியாவின் பெரும் பரப்பளவு இந்த ஏரிக்குள் போய்விட்டிருக்கிறது. இந்த அணை கட்டுவதற்காக 90,000 பேர் இடப்பெயர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 அஸ்வான் கடைத்தெரு
அஸ்வான் கடைத்தெரு

அஸ்வான் அணை எத்தனை பெரியது என்று கற்பனை செய்து பார்க்க வேண்டுமென்றால், நம் கல்லணைக்குப் பக்கத்தில் அதை வைத்துப் பார்க்கலாம். கரிகாற்சோழன் கட்டிய நம் கல்லணையின் அகலம் 20 மீட்டர். எகிப்தும் ரஷ்யாவும் இணைந்து கட்டியிருக்கும் அஸ்வான் பேரணையின் அகலம் 980 மீட்டர். மலைப்பாம்பை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு வித்தை காட்டுபவர்கள் போல, எட்டு நாடுகளின் வழியாகப் பாய்ந்து வரும் பிரமாண்ட நைல் நதியை அஸ்வான் அணை மூலம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளும் எகிப்து அரசை வியக்காமல் இருக்க முடியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் போல விரிந்திருக்கும் தண்ணீரைப் பார்த்ததும் குழந்தைகள், “தண்ணில குளிக்கலாம், ஸ்விம் பண்ணலாம்” என்று குதித்தார்கள். உடன்வந்திருந்த வழிகாட்டி, “நாசர் ஏரிக்குள் கிட்டத்தட்ட 60,000 முதலைகள் இருக்கின்றன” என்ற தகவலைச் சொன்னதும் பீதியில் இருவரும் கப்சிப்பென அமைதியாகிவிட்டனர்.

 நாசர் ஏரி
நாசர் ஏரி

அங்கே வியப்பில் வாய் பிளக்கவைத்த மற்றொரு விஷயம், நீர்த்தேக்கத்துக்கான பரப்பளவுக்குள் இருந்த வெகு பழைமையான கோயில்கள், தொல்லியல் களங்கள் அனைத்தையும், அவை நீரில் மூழ்கிவிடாமல் இருக்க, அப்படியே பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் பாதுகாப்பான இடங்களில் ஒரு சிறு கல் கூட இடம்மாறாமல் மீண்டும் கட்டியிருக்கிறார்கள் என்பது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை சென்னைக்கும் காஞ்சி கைலாசநாதர் கோயிலை கும்பகோணத்துக்கும் இடம் மாற்றிவைப்பது போன்ற வேலை. அதில் அத்தனை துல்லியமும் கச்சிதமும் கை கூடி வந்திருக்கிறது. அப்படி இடம் மாற்றி வைக்கப்பட்ட கோயிலில் ஒன்று Temple of Philae. நைல் நதியின் நடுவில் தீவு போல அமைந்த மணல் மேட்டின் மேல் இந்தக் கோயிலை அலேக்காகத் தூக்கிக்கொண்டு போய் வைத்திருக்கிறார்கள். தீவில் இருப்பதால் மோட்டார் படகில் போய்த்தான் கோயிலைப் பார்க்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அஸ்வானிலிருந்து 230 கி.மீ தூரத்திலிருக்கும் லக்ஸார் நகரம் வரை வரிசையாக இருக்கும் பழங்காலக் கோயில்களைப் பார்ப்பதற்கு நாம் நிலத்திலும் நீரிலுமென இரண்டு வழியில் பயணிக்கலாம். நிலப்பயணம், கொளுத்தும் வெயிலில் மிக நீண்ட பாலைவனத்தின் நடுவே பயணிப்பதாக அமையும் என்பதால் நாங்கள் நீரைத் தேர்ந்தெடுத்தோம். குட்டிக் கப்பல் போல சகல வசதிகளுடன்கூடிய பெரும்படகில் எங்களுக்கான அறை முதல் தளத்தில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. படகின் திறந்த மேல் தளத்தில் நீச்சல் குளமும் உணவகமும் இருந்தன. அப்படியான படகில் பயணிப்பது அதுவே முதன்முறை. அறையின் ஒருபக்கச் சுவர் முழுவதும் நைல் நதியை ரசிக்க வசதியாக முழுவதும் திறக்கக்கூடிய கண்ணாடிக் கதவுகளாக அமைக்கப்பட்டு திரைச்சீலையால் மூடப்பட்டிருந்தது.

 பாய்மரப்படகு
பாய்மரப்படகு

மூன்று நாள்கள் இரவும் பகலும் சூரிய வெளிச்சத்திலும் நிலவொளியிலுமாக நதியின் அழகை அள்ளி அள்ளிப் பருகியும் அதன் அழகு குறையவே இல்லை. படகு தண்ணீருக்கு வலிக்குமோ என்பது போல மெள்ள நகர்ந்துகொண்டிருந்தது.

Temple of Philae, Temple of Isis இரண்டும் இடப்பெயர்வு செய்யப்பட்ட பிரமாண்டமான கற்கோயில்கள். நாங்கள் சென்றபோது, சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் திருவிழா கூடியதுபோல இருந்தது. சென்னையிலிருந்து வந்திருந்த தமிழ்க் குடும்பத்தினர் அம்முவும் கீர்த்துவும் தமிழில் சண்டை போட்டுக் கொள் வதைப் பார்த்துவிட்டு சந்தோஷமாய் வந்து பேசிப்போனார்கள்.

கி.மு 740-லேயே அமூன் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஃபீலே கோயில் காலப் போக்கில் ஐஸிஸ், ஒசாரிஸ் என்ற மற்ற கடவுளர்களின் கோயிலாகவும், எகிப்தை ரோமானியர்கள் கைப்பற்றியபோது ஏசு கிறிஸ்துவின் ஆலயமாகவும்கூட இருந்திருக்கிறது.

சுவர்கள் முழுக்க பிரமாண்டமான புடைப்புச் சிற்பங்களும், கீறிச் செதுக்கிய கடவுள் உருவங்களும், எகிப்தின் பழைய சித்திர எழுத்துகளுமாக நிரம்பியிருக்கின்றன. கோயிலின் ஒவ்வோர் அறையும் அரையிருளும் மஞ்சள் விளக்கொளியுமாகக் காலி அறையாக இருக்கிறது. ஆனால், அங்கே நின்றுகொண்டு எந்தக் கடவுளைக் கும்பிடுவது என்ற குழப்பமே வரவில்லை. ஏனெனில், பிரார்த்தனை என்பது கன்றுக்குட்டி போல. எத்தனை பெரிய மந்தையிலும் தன் தாயை அது அடையாளம் கண்டுகொள்ளும்.

(வாருங்கள் ரசிப்போம்)