Published:Updated:

தீரா உலா: பேரீச்சை முதல் மனிதன் வரை... மம்மி... மம்மி... மம்மி!

தீரா உலா
பிரீமியம் ஸ்டோரி
News
தீரா உலா

காயத்ரி சித்தார்த்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு - திருக்குறள்

“நேத்துப் பார்த்தப்ப கூட நல்லா சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்த மனுஷன், இன்னிக்கு இல்லன்றத நம்பவே முடியல” - ஒவ்வொரு துக்க வீட்டிலும் நாம் கேட்டிருக்கக்கூடிய இந்த வரியைத்தான் திருவள்ளுவர் குறளாக எழுதியிருக்கிறார். `நேற்றிருந்தவன் இன்று இல்லை என்ற நிலையாமை தான்' இந்த உலகத்தில் என்றும் மாறாதிருக்கும் உண்மை. ஆனால், நாங்கள் இன்றிலிருந்து 5,000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மனிதர்களை கெய்ரோவில் நேரில் பார்த்தோம். அவர்கள் மனிதர்களாக இல்லாமல் ‘மம்மிக் களாக’ இருந்தார்கள் என்பதுதான் ஒரே வித்தியாசம்.

தீரா உலா: பேரீச்சை முதல் மனிதன் வரை... மம்மி... மம்மி... மம்மி!

பிரமிடுகளைப் பார்த்த பிரமிப்பு தீரும் முன்பாக, எங்களை கெய்ரோ அருங் காட்சியகத்துக்கு அழைத்துப் போனார்கள். எகிப்து அருங்காட்சியகம் உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சுரங்கம். தொல்லியல் துறையில் 'எகிப்தியாலஜி' என்றொரு தனித்துறையே உருவாகும்படியாக, கணக்கிலடங்காத ஆச்சர்யங்களையும் மர்மங்களையும், கிறிஸ்து பிறப்பதற்கு 3,000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தனித்த நாகரிகத்தையும் கொண்ட நாடு எகிப்து. ஒரு சோறு பதம் போல, ஒவ்வோர் ஆச்சர்யத்துக்கும் ஒன்று என அந்த அருங்காட்சியகத்தில் அத்தனை அதிசயங்களைக் குவித்து வைத்திருக்கிறார்கள். தரைத்தளம், முதல்தளம் என்று இரண்டு தளங்களிலும் பாதுகாக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான பொருள்களைப் பார்த்து முடிக்க முழு ஆயுள் தேவை. எங்களுக்கு அரை நாள்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. அரை நாளுக்குள்ளாக மட்டுமே 2,000-க்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்திருந்தோம்.

பெரும்பாலும் பிரமிடுகளிலும் கல்லறை வீடுகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பொருள்களே அங்கே நிரம்பியிருக்கின்றன. பிரமிடுகளில் அரசனின் உடலை வைக்கும் போது, அவர் உயிருடன் இருக்கும்போது எதையெல்லாம் பயன்படுத்தினாரோ, எதையெல்லாம் விரும்பி உண்டாரோ, யாரையெல்லாம் நேசித்தாரோ, அனைத்தை யும் (அனைவரையும்) அவரோடு சேர்த்து பிரமிடுக்குள் வைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 அரச மம்மிக்கள்
அரச மம்மிக்கள்

ஒவ்வொரு பிரமிடும் தங்கமும் வைரமும் வைடூரியங்களுமாக நிரம்பி வழிந்ததால் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்திலேயே அதைக் கொள்ளையடிப்பவர்களும் இருந்திருக் கிறார்கள். கொள்ளையடித்தது போக எஞ்சிய பொருள்களே பார்த்துப் பார்த்துச் சலிக்கும் அளவுக்கு அந்தக் கருவூலத்தில் அடுக்கப்பட்டிருக்கின்றன.

தங்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனங்கள், மம்மிக்களின் மேல் வைக்கப்பட்ட தங்க முகக் கவசங்கள், தங்கத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள், தங்கக்கட்டில், தங்கப்பல்லக்கு, வண்டிகள், ஆபரணங்கள் என எல்லாமும் கண் கூசும்படியாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. சில அரசர்களின் கல்லறைச் சுவர்களில், கூரைகளில் அபூர்வ வண்ணங்களைக்கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் இருப்பதால் முழு அறையையே பெயர்த்து எடுத்து வந்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘சர்க்கோபாகஸ்’ எனப்படும் மனித உடல் வடிவிலான சவப்பெட்டிகள் கல்லாலும் மரத்தாலும் பெரிய தொட்டிகள் போல செய்யப்பட்டு முழுக்க தங்க முலாம் பூசப்பட்டு எக்கச்சக்க வேலைப்பாடுகளுடன் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

 தங்க சிம்மாசனம்
தங்க சிம்மாசனம்

இத்தனை ஆச்சர்யங்களையும் மீறி நம்மை வியப்பில் மூழ்க வைப்பவை அங்கிருக்கும் ‘மம்மிக்கள்.’ எகிப்தியர்களுக்கு உடலை காலத்தால் அழியாமல் பத்திரப்படுத்தி வைக்கும் கலை தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் மனிதர்களை மட்டுமன்றி கைக்குக் கிடைத்த விலங்குகள், பறவைகள், உணவுப்பொருள்கள் என்று எல்லாவற்றையும் பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். எகிப்தில் மட்டும் கோடிக்கணக்கில் விலங்குகளின் மம்மிக்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்ற வாம். அவற்றில் முக்கியமான விலங்கு பூனை. முதன்மைக் கடவு ளான ‘ரா’வின் பிரதிநிதியாக பூனையை அவர்கள் வழிபட்டிருக்கிறார்கள்.

அந்த அருங்காட்சியகத்தில் பூனை, முதலை, குரங்கு, நாய், பறவைகள் என்று பதப்படுத்தி வைக்கப்பட்ட ஏராளமான உயிரினங்களைப் பார்த்தோம். ஒரு மிக நீளமான பாம்பைப் பிடித்து மம்மியாக்கி வைத்ததில் அது நெளிவு சுளிவே இல்லாமல் நீண்ட தடி போல கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்தது. ஓரிடத்தில் ஒரு கிண்ணத்தில் மாதுளம்பழங்கள் போல ஆப்பிரிக்காவில் மட்டுமே கிடைக்கும் மிகப் பெரிய பேரீச்சம்பழங்கள் பதப்படுத்தப்பட்டு கன்னங்கரேலென்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே போனால் திடீரென ‘அரசர் அரசியர்களின் மம்மிக்கள்’ வைக்கப்பட்டிருக்கும் பகுதி இருந்தது. அதற்குள் நுழைய நிறைய கெடுபிடிகள். அதீத குளிரான அந்த அறைக்குள் மங்கலான விளக்கொளியில் பன்னிரண்டு கண்ணாடிப் பேழைகளுக்குள் அரச அரசியரின் மம்மிக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளே நுழைந்ததுமே எனக்கு உடல் சிலிர்த்துக்கொண்டது. நாம் ராஜராஜ சோழனையும் கட்டபொம்மனையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உருவத்தில்தான் நினைவுகூர்கிறோம்.

 அருங்காட்சியக வாசலில் அம்முவும் கீர்த்துவும்
அருங்காட்சியக வாசலில் அம்முவும் கீர்த்துவும்

நிஜத்தில் அந்த மன்னர்கள் எப்படியிருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்... இங்கே உலகப்புகழ் பெற்ற மன்னன் டூட்டன் காமன் நம் கண்முன்னால் படுத்திருக்கிறான். வெறும் ஒன்பது வயதிலேயே எகிப்தின் அரசனாக ஆகி எட்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியிலிருந்து 18 வயதுக்குள்ளாக மர்மமாக இறந்துபோன அரசன் அதே உடலுடன் இன்னும் இருக்கிறான். அந்த அறைக்குள் இரண்டு பெரிய ஆச்சர்யங்கள் என்னைத் திகைத்துப் போகச் செய்தன. ஒன்று, அங்கிருந்தவர்கள் எவரும் 40 வயதுக்கு மேல் வாழவில்லை என்பது. வெறும் 40 வயதுக்குள்ளாக அவர்கள் செய்தவற்றையும் கட்டியெழுப்பியவற்றையும்தான் உலகம் தலைமுறை தலைமுறையாக வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. மற்றொன்று, அங்கே படுத்திருந்த அரசிகளின் கூந்தல் அலங்காரங்கள் இன்னமும் அப்படியே இருப்பது.

இறந்த பின் பின்னியதோ, இறக்கப்போகிறோம் என்று தெரியாமல் அரசி தன்னை அழகுபடுத்திக்கொள்ளப் பின்னியதோ தெரியவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக அழியாமலிருக்கும் அழகிய மெல்லிய சடைப்பின்னல்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எகிப்தியர்கள் மனிதர்களுக்கு மூளை அவசியம் என்று நினைக்கவில்லை. இதயம்தான் முக்கியம் என்று நினைத்தார்கள். அதனால் அரசர்களின் உடல்களை மம்மிபிகேஷனுக்கு உட்படுத்தும்போது மூக்கின் வழியாக கம்பி போல ஒரு கருவியை நுழைத்து மூளையை உறிஞ்சி எடுத்து எறிந்துவிடுவார்கள். அரசனின் மறுமை வாழ்வுக்கு அவசியம் தேவை என்று அவர்கள் நினைத்த இதயம், நுரையீரல், ஈரல் போன்ற உறுப்புகளை அலுங்காமல் வெளியே எடுத்து மூலிகை எண்ணெய் நிறைந்த ஜாடிகளுக்குள் தனித்தனியாகப் போட்டு சவப்பெட்டிக்கு அருகில் வைத்துவிடுவார்கள். வயிற்றின் இருபுறமும் கிழித்து எஞ்சிய உள்ளுறுப்புகளையும் வெளியேற்றிய பின்னால், நாம் மோர்மிளகாய் வத்தல் போடுவதுபோல உப்பும் மூலிகை எண்ணெய்களும் கலந்த கலவையில் உடலை இரண்டு மாத காலம் ஊறப்போட்டு உலர்த்தி இறுதியாய் ஒருவகை பருத்தித் துணியால் சுற்றி இறுகக்கட்டி பெட்டிக்குள் வைத்துவிடுவார்கள். இத்தனை உபசரணைகளும் அரச குடும்பத்து உடல்களுக்கு மட்டும்தான். சாமானிய மக்களின் உடலை உள்ளுறுப்புகளை நீக்கி மூன்று நாள்களுக்குள்ளாக பதப்படுத்தி புதைத்துவிடும் வழக்கம்தான் இருந்திருக்கிறது. எகிப்தில் தோண்டத் தோண்டக் கிடைக்கும் பல்லாயிரம் மம்மிக் களில் பெரும்பாலானவை அப்பாலைவன மண்ணின் வெப்பத்தால் உடலின் நீர்ப்பதம் உறிஞ்சப்பட்டு இயற்கையாகவே மம்மியாக மாறியவை என்கிறார்கள்.

அத்தனை அரிய அருங்காட்சியகத்தை அவசரகதியில் பார்த்து முடித்து வெளியில் வந்த எங்களை, “கையோடு இதையும் பார்த்துவிடுங்கள்” என்று பாப்பிரஸ் பேப்பர் செய்யுமிடத்துக்கு அழைத்துப் போனார்கள்.

 ஊறவைக்கப்பட்ட பாப்பிரஸ்
ஊறவைக்கப்பட்ட பாப்பிரஸ்

பாப்பிரஸ் என்பது நம்மூர் நாணல் செடி போல நைல் நதிக்கரையோரம் முழுக்க செழித்து வளர்வது. அதன் தடித்த தண்டுகளைப் பட்டை பட்டையாகச் சீவி தண்ணீரில் பல நாள்கள் ஊறவைத்து, அவற்றை குறுக்கும் நெடுக்குமாய் அடுக்கி தொடர்ச்சியான அழுத்தம் மூலம், அதை ஒரு காகிதத்தாள் போல மாற்றும் முறையைக் கண் முன்னால் செய்து காண்பித்தார்கள். எகிப்திய மூதாதையர்கள் இந்த பாப்பிரஸ் தாளைத்தான் பர்சனல் டைரி போல பாவித்து எல்லாவற்றையும் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

அலைச்சலில் குழந்தைகள் சோர்ந்து போயிருந்தார்கள். ஆனால், அன்றிரவே கெய்ரோவிலிருந்து 800 கி.மீ தொலைவிலிருக்கும் அஸ்வானுக்கு நாங்கள் சென்று சேர வேண்டியிருந்தது. அஸ்வானை அடைந்தபோது இரவு 11 மணியாகியிருந்தது. அஸ்வானில் நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டல் நைல் நதியின் அக்கரையில் இருந்ததால் நள்ளிரவு 1 மணிக்கு ஒரு மோட்டார் படகிலேற்றி அழைத்துப்போனார்கள்.

நதியா... கடலா என்று வியக்கும் அளவு அகலமாகவும் ஆழமாகவும் ஓடிக்கொண்டிருந்த நைல் நதியில், கும்மிருட்டில் சொற்பக் கூரையும் பக்கவாட்டில் திறந்த ஜன்னல்களும் இருந்த மோட்டார் படகில் பயணித்தது வாழ்நாள் அனுபவம். குளிரென்றால் அப்படியொரு குளிர். எலும்புகளெல்லாம் உறைந்து போகும்படியாய் குளிர்காற்று நதியின் ஈரத்தை அள்ளி வந்து தலைமேல் கொட்டியது. 2 மணிக்கு அறையைக் காண்பித்து எங்களைத் தங்கச் சொல்லிவிட்டு, புன்னகையுடன் “காலை 4 மணிக்குத் தயாராக இருங்கள். அபு சிம்பல் கிளம்ப வேண்டும்” என்றான் அந்த வழிகாட்டி இளைஞன்.

நாங்கள் “என்னது, நாலு மணிக்கேவா..?” என்று அதிர்ச்சியில் கூவி, “நாங்க தூங்கணும். நாளைக்கு எங்கேயும் வரல” என்றோம். இப்படியாக அற்புதமான வரலாற்றுச் சின்னமான அபு சிம்பல் கோயிலை நேரில் பார்க்கும் வாய்ப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, மறுநாள் காலை 11 மணிவரை அடித்துப்போட்டது போல அசந்து உறங்கினோம். சாவகாசமாக எழுந்து சாப்பிட்டு, ஓய்வெடுத்து வெயில் தணிந்த நேரம் மீண்டும் மின்படகிலேறி சுற்றுலாவுக்கென ஒதுக்கப்படாத அஸ்வானின் ஒப்பனைகளற்ற இயல்பு வாழ்க்கையையும் கடைத்தெருக்களையும் பார்க்கக் கிளம்பினோம்.

(வாருங்கள் ரசிப்போம்)