Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு 34: சூடாய் ஒரு கோப்பைத் தமிழ் - எழுத்தாளர் சுஜாதா!

எழுத்தாளர் சுஜாதா

ஒரு மொழியின் எல்லா சாத்தியக் கூறுகளையும் தேர்ந்த இலக்கியங்களைப் படிப்பதன் மூலமே அடையமுடியும் என்பது சுஜாதாவின் பார்வை. அவருக்கிருந்த உலக இலக்கியப் பரிச்சயமும் அதற்கு உதவியது. அவரது சிறுகதைகள் செய்நேர்த்தி மிக்கவை. வாழ்வின் சில தருணங்களை மனதில் தைக்கும்படி சொல்வதில் வல்லவர்.

திருச்சி - ஊறும் வரலாறு 34: சூடாய் ஒரு கோப்பைத் தமிழ் - எழுத்தாளர் சுஜாதா!

ஒரு மொழியின் எல்லா சாத்தியக் கூறுகளையும் தேர்ந்த இலக்கியங்களைப் படிப்பதன் மூலமே அடையமுடியும் என்பது சுஜாதாவின் பார்வை. அவருக்கிருந்த உலக இலக்கியப் பரிச்சயமும் அதற்கு உதவியது. அவரது சிறுகதைகள் செய்நேர்த்தி மிக்கவை. வாழ்வின் சில தருணங்களை மனதில் தைக்கும்படி சொல்வதில் வல்லவர்.

Published:Updated:
எழுத்தாளர் சுஜாதா
"உங்க முதல் கதை எப்ப, எதில் பிரசுரமானது?" என்ற கேள்விக்கு சுஜாதா சொன்ன பதில், “முதல் கதை குமுதத்தில் பிரசுரமானது. ஆனா அதற்கு முன்பு பி.எஸ்ஸி படிக்கும்போது தெரியாத்தனமா ஒரு கதை எழுதினேன். சிவாஜி பத்திரிகை ஆபீஸ் அப்ப திருச்சி பெரியகடை வீதியிலிருந்தது. அதுதான் என்னோட முதல்கதை. அதற்குப்பிறகு எழுதல. அந்த copy என்னிடமும் இல்லை; அவங்களிடமும் இல்லை. ‘அலை ஓசை’யில் ஒரு கட்டுரைகூட எழுதியிருந்தேன், என்னோட முதல் கதையைக் கண்டுபிடிச்சுக் கொடுக்கிறவங்களுக்கு என்னோட பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து, பாதி சாம்ராஜ்யத்தையும் தர்றேன்னு. கதையும் கிடைக்கல... எனக்குப் பொண்ணும் இல்ல... சாம்ராஜ்யமும் இல்ல...” (சிரிப்பு) இப்படி எதையும் சுவையாகச் சொல்லத் தெரிந்தவர் சுஜாதா.
எழுத்தாளர் சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா

அவர் பொறுப்பாசிரியராக இருந்த ’அம்பலம்’ இணைய இதழில் ஒரு வாசகர் கேட்டார், “நாற்பது வருஷமா உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று. நீண்ட யோசனைக்குப் பிறகு சுஜாதா சொன்ன பதில்தான் அவருக்கான இலக்கிய இடம். சுஜாதா சொன்னார், ”நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்.” ஒரு வாசகனைத் தொடர்ந்து தன்னை வாசிக்க வைப்பது எளிதல்ல. கால மாற்றங்களை உள்வாங்கி, எல்லா வகையான வாசகப் பரப்பையும் வயது கடந்து தன் எழுத்துக்குள் கட்டிப்போடும் சக்தி சுஜாதாவுக்கு இருந்தது.

நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் எழுதியவர் சுஜாதா. 70 வயதைத் தொட்டபோதும் படைப்பாற்றலில் முதுமை அவரைத் தொடவில்லை. முதுமை என்ன செய்யும் என்பதை ரொம்ப ஜாலியாக ஒரு கட்டுரையில் சொன்னார். மெரினா கடற்கரையில் பெஞ்சில் உட்கார்ந்த ஒரு தாத்தா, (சுஜாதாவே அப்ப 70 வயசு தாத்தாதான்) ’யு ஆர் எ ரைட்டர். எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க பார்க்கலாம்’ என்றார். அவரைக் கட்டைவிரலால் மூக்கைத் தொடச்சொல்லி, மற்ற விரல்களை றெக்கை மாதிரி அசைக்க வைத்து, கைகளை ஏரோப்ளேன் மாதிரி விரிச்சு லேசா குதிக்கச் சொல்லிய பிறகு, ’இந்த மே 12 வந்தா வயசு 82’ என்றார் சுஜாதா. அந்தத் தாத்தாவுக்குத் தாத்தா ஆச்சர்யப்பட்டுப்போனார். ’என்ன ட்ரிக்கு இது’ என்றார் வியந்து. ’ஒரு ட்ரிக்குமில்ல சார். நேத்திக்குதான் இதே பெஞ்சில வந்து உட்கார்ந்து உங்க வயசு பர்த்டே எல்லாம் சொன்னீங்க. இப்ப மறந்துட்டீங்க.’ இதுதான் முதுமையின் சிக்கல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுஜாதா
சுஜாதா
பழசெல்லாம் சோப்பு போட்டுக் கழுவின மாதிரி பளிச்சுன்னு பத்திரமாக நினைவில் இருக்க, காலையில் நடந்தது மறந்துபோவதுதான் மூப்பின் பிரச்னை. இந்த நியூரான்களின் களைப்பை, படிப்பவருக்கு களைப்பே வராமல் 70 வயதிலும் சொல்லத் தெரிந்ததுதான் சுஜாதாவின் வெற்றி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அவருக்கு இருந்த அறிவியல் தொழில்நுட்ப அறிவு இரண்டு வகைகளில் பயன்பட்டது. அவரது புனைகதைகளில் அது கணேஷ் - வசந்த் பாத்திரங்களில்கூட வெளிப்பட்டது. தனியாகவே அறிவியல் கதைகளும் எழுதினார். அதைத்தாண்டி, நேரடியாக எளிய தமிழில் அறிவியல் நூல்கள் எழுதினார். ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக அவருக்கு 1993-ல் ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான NCTC விருதுகூட அளிக்கப்பட்டது.
எழுத்தாளர் சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா

அறிவியல் சொற்களைத் தமிழுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அவருக்கு இருந்த கருத்தைத் தனது ’கம்ப்யூட்டரின் கதை’ புத்தக முன்னுரையில் சொல்கிறார். அவர் வேலை செய்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு வரும் ஜெர்மானிய - ஜப்பானிய கம்ப்யூட்டர் வல்லுநர்களின் ஆங்கிலம் சுமார் ரகம்தான். ஆனாலும் கம்ப்யூட்டர் இயலில் ஜித்தர்கள். இது எப்படிச் சாத்தியமாயிற்று? கம்ப்யூட்டர் இயலின் புதிய வார்த்தைகளை அப்படியே தங்கள் தாய்மொழியில் சுவீகரித்துக்கொண்டு விளக்கங்களை மட்டும் தங்கள் மொழியில் எழுதிக்கொண்டார்கள். ’கம்ப்யூட்டர்’ எல்லா மொழியிலும் கம்ப்யூட்டர்தான். அதை நம்மைப்போல் கணினி, கணிப்பொறி என்றெல்லாம் ஆக்கவில்லை. இந்த இயலின் உயர் படிப்பும், அதற்கான பெரும்பான்மையான புத்தகங்களும் ஆங்கிலத்தில் இருக்கும்போது குழப்பமில்லாமல் கம்ப்யூட்டர் என்ற பெயர்ச் சொல்லையே பயன்படுத்தலாம் என்ற சுஜாதாவின் பார்வை யோசிக்க வைக்கிறது.

'கம்ப்யூட்டரின் கதை'
'கம்ப்யூட்டரின் கதை'

இந்த 'கம்ப்யூட்டரின் கதை' புத்தகத்தை எழுதும்போது, “பிற நாட்டு நல்லறிஞர்கள் வார்த்தைகளும் தமிழில் வேண்டும்” என்று பாரதியைப் பக்கத்தில் வைத்துக் கொள்கிறார். டெர்மினல், ரிஜிஸ்டர், சி.பி.யு எல்லாம் ஞானஸ்தானம் பெற்றுத் தமிழாகின்றன. இதைத் தொடர்ந்து ’சிலிக்கன் சில்லுப் புரட்சி’ தினமணி கதிரில் ஏராளமான படங்களோடு தொடராக வந்தது. அதுபோலவே எலெக்ட்ரானிக்ஸ் குறித்து இவர் எழுதிய ’காசளவில் ஒரு உலகம்’ நடைமுறைத் தமிழில் அறிவியல் கற்பித்த நல்ல புத்தகம். (வாசகர் வட்டம் வெளியீடு)

சிலிக்கன் சில்லுப் புரட்சி
சிலிக்கன் சில்லுப் புரட்சி
காசளவில் ஓர் உலகம்
காசளவில் ஓர் உலகம்

தமிழில் விஞ்ஞானக் கதைகளின் முன்னோடியாக சுஜாதா தன்னைக் கருதுவது சரியென்றே படுகிறது. ’திமிலா’, ’ஜில்லு’ போன்ற கதைகளை எதேச்சையாக எழுதவில்லை. நல்ல அறிவியல் புரிதலோடே எழுதினார். தமிழ் இனி 2000 நடத்திய மாநாட்டில் ’அறிவியல் புனைகதைகளின் கூறுகள்’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய எழுத்து உரை முக்கியமானது. அதில் விஞ்ஞானக் கதைகளுக்குள்ள கூறுகளோடு அமைந்த சில தமிழ்ப் படைப்புகளை அடையாளம் காட்டுகிறார். சீவகசிந்தாமணியை முதல் காத்திக் (gothic) கதையாகக் குறிப்பிடும் சுஜாதா, பாரதியின் காக்காய் பார்லிமென்ட் கதையை அரிதான அறிவியல் புனைகதை என்கிறார். புதுமைப்பித்தனின் ’கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ கதையை எல்லா முரண்பாடுகளையும் சொன்ன விஞ்ஞானக் கதை என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஞ்ஞானக் கதைகளால் நேஷனல் புக் டிரஸ்டின் It Happened Tomorrow புத்தகத்தில் இடம்பிடித்த சுஜாதா, பழந்தமிழ் இலக்கியங்களையும் அறிமுகம் செய்தார். புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம், திருக்குறள், ஆழ்வார்கள்... போன்ற நம் பொக்கிஷங்களை கொஞ்சம் தமிழ் தெரிந்தவர்களையும் நெருங்கிவந்து படிக்கவைத்தார். அதற்கு அவர்மீது விழுந்த புகழ் வெளிச்சமும் லேசாகப் பயன்பட்டது.
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம்

சுஜாதாவின் சிலப்பதிகார முன்னுரை சிலம்பை அசைக்க உதவுகிறது. சிலப்பதிகாரத்தை தமிழில் எழுதப்பட்ட முதல் புதினம் என்கிறார். தமிழின் முதல் புதுக்கவிதையை இளங்கோதான் ‘பாட்டிடை வைத்த உரைநடையாக’ தொடங்கினார் என்றும்; புகார், மதுரை, வஞ்சி என்ற மூன்று நகரிலும் அலையும் அந்தக் கதையை 'A Tale of Three Cities' என்கிறார் சுஜாதா. அந்த நகர்களின் தெருக்களையும் ஓசைகளையும் அங்காடிகளையும் பற்றி இளங்கோ தரும் விவரங்கள் நம்மை வசீகரிப்பதாகவும் இசை நடனம் போன்றவற்றில் இளங்கோவின் அறிவு பிரமிக்க வைக்கிறது என்றும் கூறுகிறார். சிலப்பதிகாரத்தில் வரும் இசைக்கருவிகள், யாழ் வகைகள், குழல் வகைகள், தோல் கருவிகள் மட்டும் நூற்றுக்கணக்கானவை. நடனக் கலை பற்றி, அரங்க அமைப்பைப் பற்றி, ஆட்டங்கள் பற்றி என ஒரு நூலில் இத்தனை விவரங்கள் உலக இலக்கியம் எதிலும் இல்லை என்கிறார் சுஜாதா. இவற்றின் ஊடே சொல்லப்படும் கதையின் மாந்தர்கள் உயிரோட்டம் உள்ளவர்கள். நகமும் சதையும் கொண்ட உண்மை மனிதர்கள் என்று சிலம்பை நமக்கு அறிமுகம் செய்கிறார். சிலப்பதிகாரம் தனக்குத் தந்த வியப்பாக “அதன் காலத்தைக் கடந்த நவீனம், contemporaneity, இன்றும் புதிதாக இருக்கும் கதையும் கதை சொல்லும் முறையும்” என்று சொல்லும் சுஜாதா இதை உணர வைக்கவே இந்த உரையை எழுதியதாகச் சொல்கிறார்.

ஒரு மொழியின் எல்லா சாத்தியக் கூறுகளையும் தேர்ந்த இலக்கியங்களைப் படிப்பதன் மூலமே அடையமுடியும் என்பது சுஜாதாவின் பார்வை. அவருக்கிருந்த உலக இலக்கியப் பரிச்சயமும் அதற்கு உதவியது. அவரது சிறுகதைகள் செய்நேர்த்தி மிக்கவை. வாழ்வின் சில தருணங்களை மனதில் தைக்கும்படி சொல்வதில் வல்லவர்.

அவரது கதைகளில் ஒன்று ’பார்வை.’ பிறவியிலேயே பார்வை இழந்த ஒருவர் தனது சக பயணியான பார்வை உள்ள எழுத்தாளர் ஒருவரைப் பார்த்து, ’தங்களால் எனக்கு நிறங்களைப் புரியவைக்க முடியுமா’ என்பார். கண் தெரிந்த அந்த எழுத்தாளர் யோசித்து, ’நான் ஸ்வரங்களில் ச என்றால் மஞ்சள் என்றும் ரி என்றால் நீலம் என்றும் புரிந்துகொள்ளுங்களேன்’ என்பார். அதற்கு அந்தப் பார்வை இல்லாதவர் சொல்வார், ’எனக்குத்தான் பிறவியிலேயே பார்வை இல்லையே, எப்படி மஞ்சளையும் நீலத்தையும் ச-ரி போன்ற ஓசைகளால் புரிந்துகொள்வது’ என்று. எழுத்தாளரிடம் பதில் இருக்காது. அப்போது அந்தப் பார்வை இல்லாத நண்பர் எழுத்தாளரிடம், ’ஏன் தெரியுமா உங்களால் சொல்ல முடியவில்லை? ஒரு கண் தெரிந்தவர் மற்றொரு கண் தெரிந்தவருக்காக உருவாக்கிய வார்த்தைகள் அவை. உங்கள் வார்த்தைகள் எல்லாம் கண் தெரிந்த வார்த்தைகள்’ என்பதோடு கதை முடிந்துவிடும். ஆனால் நம் ’பார்வை’ பற்றிய புரிதல் விரியும்.

வருடத்திற்கு அதிகப்படியாக 12 கதைகள் மட்டுமே எழுதியதாக சுஜாதா சொல்கிறார். மேலும் அவர் தன்னைப் பற்றிச் சொல்லும்போது,
“நான் சைன்ஸ் படித்தவன். தாய் தந்தையிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்தவன். ஶ்ரீரங்கத்துச் சூழ்நிலை. கட்டுப்பாடான நாள்கள். ஏழ்மையுமில்லாத பணக்காரத் தனமுமில்லாத நடுவாந்திர வசதிகள். பிரபந்தத் தமிழ். இவை அனைத்தையும் கலந்து ஒரு மிக்ஸி சுழற்றலில் ஒரு எழுத்தாளன் உருவானால் அதுதான் நான்.எனக்கு அப்பாலும் என் கதைகள் வாழும் வலுவான சாத்தியங்கள் உள்ளன.”
என்று எழுதினார் சுஜாதா.
சுஜாதா வீடு - ஶ்ரீரங்கம்
சுஜாதா வீடு - ஶ்ரீரங்கம்

அப்படி வாழும் பல கதைகளில் ஒன்று ’நகரம்.’ மூனாண்டிபட்டி வள்ளியம்மாவின் மகள் பாப்பாத்திக்கு வந்துள்ள மெனின்ஜைடிஸ் நோய்தான் கதை. நகரம் மெல்ல மெல்ல யந்திரமாகும் தருணங்களை அபாரமாகச் சொல்லும் கதையிது. பூட்டிக் கிடந்த கேட்டைப் பார்த்து, பயம் திகிலாக மாற, நட்ட நடுவில் நின்றுகொண்டு அழுவாள் வள்ளியம்மா. “ஒரு ஆள் அவளை ஓரமாக ஒதுங்கி நின்று அழச்சொன்னான்” என்று எழுதுவார் சுஜாதா. அந்தப் பெரிய டாக்டர் பாப்பாத்தியை உடனே அட்மிட் பண்ணச் சொல்வார். காலையில் செத்துப் போகும்யா என்பார். கதை முழுதும் மரத்துப்போன அந்த நகர மருத்துவமனையில் நாமும் வள்ளியம்மாவோடு அலைவோம். சின்ன ஆதரவுக் கரம் நீளும்போது அதைப் பற்றும் படிப்பறிவு இல்லாத வள்ளியம்மா, வெள்ளை கட்டிப் போட்டு விபூதி மந்திரிப்பதற்கு மூனாண்டிபட்டிக்கே போய்க்கொண்டிருப்பாள் கதையில். ஈவு இரக்கமில்லாத நகரம் ஒருபக்கம், அதைப் புரிந்துகொள்ள முடியாத அறியாமை மறுபக்கமாக கதை சொன்னார் சுஜாதா.

சுஜாதா நிறைய சின்னச் சின்னக் கட்டுரைகள் எழுதினார். இந்தக் கட்டுரைகள்தான் பல ரசிகர்களை அவருக்கு உருவாக்கியது. ஆரம்பத்தில் குமரிப் பதிப்பகம் வெளியிட்ட ’கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’, ’மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்’, ’சின்னச் சின்னக் கட்டுரைகள்’, ’படிப்பது எப்படி’ போன்ற தொகுப்புகள் வியந்தோதும் தமிழ் மரபை சில கேள்விகளுக்குள் தள்ளின. தமிழ் மொழிநடையில் ஒரு துள்ளலும் பாய்ச்சலும் வந்தது. எதையும் தயக்கமின்றிக் கேட்டார்.

’ராஜ ராஜ சோழன்’ சினிமா வந்த நேரத்தில் அது குறித்து எழுதும்போது, ‘ராஐ ராஜ சோழன் சிவாஜி கணேசனாக நடிக்கும் தமிழ்ப் படத்தில்’ என்று எழுதுகிறார். தொடக்கத்தில் இது ஏதோ இடம் மாறிய வார்த்தைகளாகத் தோன்றும். சற்று நிதானித்தால் வரும் சிரிப்பை அடக்கமுடியாது. ஒரு நல்ல கலைஞனை நம் சினிமா படுத்தும் பாட்டை இதைவிட நாசுக்காகச் சொல்வது சிரமம்.

1980களுக்கு முன்பே சில விஞ்ஞானம் பூசிய குட்டிக்கதைகளை அறிமுகம் செய்தார். இன்று ரஷ்யா வீசும் குண்டுகள் தொலைக்காட்சி வழியாக நம் வீட்டுக்குள்ளும் விழுகின்றன. அந்தக் கதைகள் பேசும் அழிவு துயரமானது. ஆத்மா ஒரு எழுத்தாளர். கதை எழுதி உறையிலிட்டு தபால் பெட்டியில் சேர்க்கிறார். தபால்காரர் அனுப்பியவர் பெயரைப் பார்த்ததும் பிரித்துப் படிக்க ஆவலிருந்தும், வந்ததும் படிப்போம் என்று பத்திரிகைக்கு அனுப்புகிறார். தபால் ஆபீசில் முத்திரை குத்துபவன், பத்திரிகை ஆபீஸ் பையன், ப்ரூஃப் பார்ப்பவர் ஆசிரியர் எல்லோரும் ஆசையாகப் பார்த்த அந்தக் கதை பத்திரிகையில் வெளிவருகிறது. ஆத்மாவின் தீவிர வாசகன் கடையில் வாங்கி அங்கேயே படித்ததும் விக்கி விக்கி அழுகிறான். இந்த இடத்தில் சுஜாதா சொல்கிறார், கதை எப்படி சயின்ஸ் ஃபிக்‌ஷனாக மாறுகிறது பாருங்கள் என்று. அவன் அழுவதற்கு காரணம், நடந்தது எல்லாம் பாவனை. அவனே எழுத்தாளன், தபால் பையன், ஆசிரியர், வாசகன் எல்லாம். ஏன்? அவன் ஒருத்தன்தான் பாக்கி இருக்கிறான் உலகத்தில். மூன்றாவது அணு ஆயுத உலக மகா யுத்தத்திற்குப் பிறகு தப்பிப் பிழைத்த ஒரே ஒரு ஆள் ஆத்மாதான். ’அணு ஆயுதப்போர் வந்தால் யாருக்கும் வெற்றி வராது. இருந்தால்தானே’ என்ற புதின் வார்த்தைகள் பயமூட்டுகின்றன.

படிப்பது எப்படி
படிப்பது எப்படி

’படிப்பது எப்படி’ என்ற கட்டுரையில் சில யோசனைகள் சொல்கிறார். “தினம் படியுங்கள். ஐந்து நிமிடம், பத்து நிமிடம் அல்லது ஒரு மணி. தினம் என்பதுதான் இதில் அழுத்தமான வார்த்தை. நான் சுமார் 1,500 பக்கங்கள் கொண்ட Humourous Prose என்கிற புத்தகத்தை தினம் பாத்ரூமிலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து முடித்துவிட்டேன். பாத்ரூம் என்பதை உதாரணத்துக்குச் சொன்னேன். கிடைத்த நேரத்தில் எல்லாம் படிப்பதுதான் முக்கியம். அதற்காக சாலையைக் கடக்கும்போதோ பஸ்ஸில் தொங்கும்போதோ படிக்க முயற்சி செய்யாதீர்கள். படிக்க ஆசாமி உயிருடன் வேண்டும். ஒரே சமயத்தில் நான்கு அல்லது ஐந்து புத்தகங்கள் படிப்பதில் தவறில்லை. இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் மேயலாம். துப்பறியும் கதைகளை இரண்டுமுறை படிப்பது மகா பாவம். அதற்கு பதில் நகம் வெட்டுவது, முதுகு சொறிவது போன்ற காரியங்கள் உபயோகம்.” இந்த ஸ்டைலில் படிப்பதைப் பற்றிச் சொல்லும் சுஜாதா பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள் எல்லாம் கிளாசிக் ரகம்.

’கரையெல்லாம் செண்பகப்பூ’, ’கனவுத் தொழிற்சாலை’, ’குருபிரசாதின் கடைசி தினம்’, ’காகிதச் சங்கிலிகள்’ என்று ஏராளமான நாவல்களும் குறுநாவல்களும் எழுதியவர் சுஜாதா. தமிழின் எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரே நேரத்தில் அவரின் நாவல்கள் தொடர்கதைகளாக வந்தன. சுவாரஸ்யம் அவரின் கோட்பாடு.
கரையெல்லாம் செண்பகப்பூ
கரையெல்லாம் செண்பகப்பூ

காடெல்லாம் பிச்சி

கரையெல்லாம் செண்பகப்பூ

நாடெல்லாம் மணக்குதில்ல

நல்ல மகன் போற பாதை

என்ற நாட்டுப்புறப் பாடலின் ஒரு வரியைத் தலைப்பாக்கி ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடர்கதை அன்று பெரும் வாசகப் பரப்பை அடைந்தது. கதை நெடுக நாட்டுப்பாடலின் வாசம். அதைத் தேடிவரும் கல்யாணராமன். திருநிலம் கிராமத்து ஜமீன் மாளிகையில் நடக்கும் மர்மங்கள்தான் கதை. வெள்ளி, மருதமுத்து, சினேகலதா என்று சில பாத்திரங்களால் அமைந்த கதை. வழக்கம்போல் சுஜாதாவின் வாச உரையாடல்.

உறவுகளின் போலித்தனத்தை எதார்த்த வாழ்வோடு பொருத்திய கதை ’காகிதச் சங்கிலிகள்.’ திருமணமாகி ஆறு மாதங்களே ஆன விமலாவின் தவிப்புதான் கதை. கிட்னி பழுதான மூர்த்தி இறந்துபோகிறான். ரத்த உறவுகளின் பந்தம் எப்படி காகிதச் சங்கிலியாக இருக்கிறது என்பதை வலுவாகச் சொன்ன கதையிது. சுஜாதா தனக்குப் பிடித்த கதையாக இதைச் சொன்னார். சுஜாதாவின் குறுநாவல்கள் முக்கியமானவை.

டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு
'ஒரு கொலை - ஒரு பிரயாணம்', 'கடவுள் வந்திருந்தார்', 'அடிமைகள்', 'டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு' என்று சில நாடகங்களையும் சுஜாதா எழுதியுள்ளார். பூர்ணம் விஸ்வநாதன் இயக்கி நடித்த நாடகங்களிவை.
“சரியான நாடகங்கள் போதிய அளவில் இல்லாத வறட்சி காரணமாகத் தமிழ் நாடக மேடையே வலுவிழந்துவிடுமோ என்று கலங்கிக்கொண்டிருந்த வேளையில் ஓர் அரிய வரப்பிரசாதமாக சுஜாதா கிடைத்துவிட்டார்!”
என்று பூர்ணம் விஸ்வநாதன் குதூகலிக்கிறார்.
எழுத்தாளர் சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா

சுஜாதாவின் நாடகங்களின் சமூக அக்கறையும் காட்சிகள் பிரித்த முறையும் வசீகரமானவை.

கவிதையையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவருக்கு மரபும் புதுசும் இயல்பாக வந்தன. இலக்கண விதிகளை நன்கு தெரிந்தபிறகே மீறச் சொன்னார். அவரே அடிக்கடி மரபுக் கவிதைகள் எழுதி, தமிழ் இலக்கணம் எளிது என்பதை கவிதையாலேயே புரியவைத்தார். அவர் கணையாழியில் எழுதிய ’சராசரி மனிதனுக்கு மரபுக் கவிஞனின் உபதேசம்’ அதுபோன்ற ஒரு கவிதைதான்.

“காலையிலே எழுந்திருந்தால் செய்தித் தாளில்

கற்பழிப்பு செய்திகளைப் படிக்க வேண்டாம்

காப்பித்தூள் கடன் வாங்கும் மனைவி கண்ணில்

காத்திருக்கும் நீர்த்துளியை மதிக்க வேண்டாம்"

இப்படியே தொடரும் இந்தக் கவிதை...

“சிறிதளவாய் இப்படியே தினமும் சாகும்

சின்னதொரு உரிமைதனை இழக்க வேண்டாம்"

என்று முடியும்.

ஆனந்த விகடனில் சுஜாதா எழுதிய ’கற்றதும் பெற்றதும்’ ஒரு அறிவுத் தேடல். அலெக்சாண்டர் முதல் அண்டார்ட்டிகா வரை எழுதினார். இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகம் செய்தார். சிறந்த புத்தகங்களைச் சொன்னார். சமூகத்தைச் சாடினார். எதிர்காலத் தொழில்நுட்பம் பேசினார். சுஜாதா என்னும் ஆளுமை முழுமையாக வெளிப்பட்ட தொடர் அது. புத்தகமாக வந்தும் விற்பனையில் சக்கைபோடு போட்டது.
sujatha
sujatha

நிறைய சினிமாக்களில் கதை அமைப்பதிலும் வசனம் எழுதுவதிலும் பங்காற்றினார். இன்று தேர்தலில் நாம் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சுஜாதா தலைமையிலான குழுதான் வடிவமைத்தது. முதலில் கேரளாவின் பரூர் என்னும் சிறிய நகரத்தில் பரிசோதித்து வென்றார்கள். எல்லா கோர்ட்டுக்கும் போகவேண்டி வந்தது. சுஜாதா போனார். தேர்தல் கமிஷன் இயந்திரத்தை ஏற்றது. அவர் பாணியில் சொன்னார், “இறுதியில் வென்றது காங்கிரசோ பி.ஜே.பி யோ அல்ல, டெக்னாலஜிதான்” என்று. இந்தக் கண்டுபிடிப்பிற்காக புகழ்பெற்ற ’வாஸ்விக்’ விருதை சுஜாதா பெற்றார்.

புனித வளனார் கல்லூரி
புனித வளனார் கல்லூரி
DIXITH

சுஜாதாவின் சொந்த ஊர் திருச்சி - ஶ்ரீரங்கம். இயற்பெயர் ரங்கராஜன். 1935-ம் வருடம் மே மாதம் 3ஆம் தேதி பிறந்தார். அப்பா சீனிவாசராகவன், அம்மா கண்ணம்மாள். ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் உண்டு. அப்பாவின் வேலை அடிக்கடி இடமாறியதால், ஏழு வயதிலிருந்து கல்லூரி முடிக்கும்வரை ஶ்ரீரங்கத்தில் உள்ள பாட்டி வீட்டில்தான் வளர்ந்தது, படித்தது எல்லாம். அப்பாவின் அம்மா கோதைப் பாட்டி இவர் வாழ்வில் முக்கியமானவர். ஶ்ரீரங்கம் ஆண்கள் பள்ளியிலும் புனித வளனார் கல்லூரியிலும் படித்தார். அங்குதான் அப்துல் கலாம் இவருக்கு வகுப்புத் தோழர். அப்போது கல்லூரியின் அத்தனை பரிசுகளையும் இருவரும் அள்ளிச் சென்றதாக நினைவில்லை என்கிறார். அதன் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி யில் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்தார். திருமதி சுஜாதாவை 1963, ஜனவரி 28-ல் மணந்துகொண்டார். இவர்களுக்கு ரங்க பிரசாத், கேசவ பிரசாத் என்ற இரண்டு மகன்கள். மத்திய அரசின் விமானப் போக்குவரத்திலும் பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும் பணி செய்து ஓய்வு பெற்றார். அவர் 2008, பிப்ரவரி 27 அன்று காலமானார்.

சுஜாதாவின் குடும்பம்
சுஜாதாவின் குடும்பம்
மரணம் பற்றிய கேள்விக்கு, “Nobody dies; they live in memories and in the genes of their children” என்று சுஜாதா பதில் சொன்னார். சுஜாதாகூட உற்சாகமான எழுத்தாக; தேடித் தேடிச் சேகரித்த அறிவாக நம்மோடு வாழ்கிறார்.

- இன்னும் ஊறும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism