சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

தெருக்களில் உயிர்க்கும் திருச்சி!

ஓவியர் மாணிக்கவாசகம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓவியர் மாணிக்கவாசகம்

திருச்சி, காட்டூர் அம்மன் நகரில் இருக்கும் மாணிக்கவாசகத்தின் வீடே அழகிய சித்திரம்போல இருக்கிறது.

”திருச்சி, ஈரமுள்ள நகரம். முற்காலச் சோழர்களுக்கு முன்பிருந்தே திருச்சிக்கு வரலாறு இருக்கு. ஆனால் அந்த முதிர்ச்சி அதன் புறத்தோற்றத்துல தெரியாது. நான் திருச்சியோட தெருக்களை அங்குலம் அங்குலமா உள்வாங்கியிருக்கேன். கடந்த அம்பது வருஷத்துல கொஞ்சம்கூட அதன் இளமை மாறவேயில்லை. மனிதர்களுக்கு வயசாகிக்கிட்டே இருக்கு. ஆனா இந்த நகரம் அப்படியே அழகைத் தக்கவச்சிருக்கு...” உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் ஓவியர் மாணிக்கவாசகம்.

திருச்சி என்.ஐ.டியில் 35 ஆண்டுகள் கவின்கலைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு முழுநேர ஓவியராக மாறியிருக்கும் மாணிக்கவாசகம், வாட்டர் கலர், ஆயில் பெயின்ட், போர்ட்ராய்ட், மியூரல், அரூப ஓவியங்கள், பென் டிராயிங் என இடைவிடாது வரைந்து கொண்டி ருக்கிறார். திருச்சி மாநகரத்தின் 50க்கும் மேற்பட்ட தெருக்களை வாட்டர் கலரில் அவ்வளவு உயிர்ப்பாக வரைந்திருக்கிறார். ஓவியத்தின் மீதிருந்த ஆர்வத்தில் மத்திய அரசுப் பணியிலிருந்து விடுமுறை பெற்று 30 வயதில் கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கிறார்.

தெருக்களில் உயிர்க்கும் திருச்சி!

“நான் பிறந்தது உடுமலை பக்கத்துல இருக்கிற பூலவாடி கிராமத்துல. அப்பா நகைத்தொழிலாளி. சிமென்ட் தரையில கரித்துண்டு வச்சு ஆபரணங்களோட டிசைனை வரைவார். அதைப்பாத்துதான் எனக்கு சித்திரங்கள் மேல ஆர்வம் வந்துச்சு. ஆனால், கவின்கலைக் கல்லூரின்னு ஒண்ணு இருக்குன்னு அப்போ எனக்குத் தெரியாது. ஆசிரியர் பயிற்சி முடிச்சேன். போட்டித்தேர்வு எழுதி பி.எஸ்.என்.எல்ல ஆபரேட்டரா வேலை கிடைச்சுச்சு. பத்து வருஷம் வேலை செஞ்சேன். ஆனாலும் ஓவியத்தை விட்டு விலகவேயில்லை. ஊரைச்சுத்தி இருக்கிற சந்தைகளுக்கெல்லாம் போய் வரைவேன். ரியலிச ஆர்ட்ல எனக்குப் பெரிய ஆர்வம் இருந்துச்சு. ஆனாலும் அதோட நுட்பங்களோ அரசியலோ புரியாது. பொள்ளாச்சியில ஒரு கல்லூரி விழாவுக்கு ஓவியர் ஆர்.பி.பாஸ்கரன் வந்திருந்தார். அப்போ அவர் சென்னைக் கவின்கலைக் கல்லூரியில பேராசிரியர். என் ஓவியங்களைப் பார்த்த பாஸ்கரன் சார் ‘உங்களை மாதிரி ஆட்களைத்தான் கவின்கலைக் கல்லூரி எதிர்பார்க்குது. லீவ் வாங்கிட்டு வந்து சேருங்க’ன்னு சொன்னார். மேலதிகாரிகள்கிட்ட போராடி 5 வருஷம் சம்பளமில்லா லீவ் வாங்கினேன். சென்னைக் கவின்கலைக் கல்லூரியில பெயின்டிங் சேர்ந்தேன். வருமானத்துக்கு ஒரு அட்வர்டைசிங் கம்பெனியில பகுதிநேரமா வேலை செஞ்சுக்கிட்டே படிச்சேன். உடன்படிக்கிற மாணவர்களுக்கு 17 வயசு... நான் முப்பது வயசுல சேர்றேன். முனுசாமி, பாஸ்கரன், அல்போன்ஸா, மூக்கையான்னு பெரிய பெரிய ஆளுமைகள் அப்போ கல்லூரியில இருந்தாங்க. கோடுகளுக்குள்ளேயிருக்கிற உயிர், அரூபங்களுக்குள்ள இருக்கிற மாயாஜால மெல்லாம் புரிய ஆரம்பிச்சுச்சு. உருவத்தைப் புள்ளிகளாப் பார்க்குற நுட்பம் கைவந்துச்சு.

தெருக்களில் உயிர்க்கும் திருச்சி!

படிப்பு முடிஞ்சதும் திரும்பவும் பி.எஸ்.என்.எல்லில் சேர்ந்து வேலை செஞ்சுக்கிட்டிருந்த நேரத்துலதான் அல்போன்ஸா சார், ‘திருச்சி என்.ஐ.டிக்கு ஒரு ஓவியப் பேராசிரியர் தேவை... நீ போய்ப் பாரு’ன்னு சொன்னார். நான் பி.எஸ்.என்.எல்லில் வாங்கினதைவிடப் பெரிய சம்பளம்... பிடித்த ஆசிரியர் வேலை... சேர்ந்துட்டேன். வரையவும் நிறைய வாய்ப்பு கிடைச்சுச்சு. மனிதர்களோட முகங்களையும் பின்னணி வாழ்க்கையையும் காட்சிப்படுத்துறதுல எனக்குத் தீராத ஆர்வம் உண்டு. இந்தியா முழுவதும் பல முக்கியக் கண்காட்சிகளில் நான் கண்டடைஞ்ச மனிதர்கள் ஓவியங்களா இருந்திருக்காங்க. ஓய்வுக்குப் பிறகு முழுமையா என் வாழ்க்கையை ஓவியங்களால நிறைச்சுக்கிட்டேன்...” விரிவாகப் பேசுகிறார் மாணிக்கவாசகம்.

திருச்சி, காட்டூர் அம்மன் நகரில் இருக்கும் மாணிக்கவாசகத்தின் வீடே அழகிய சித்திரம்போல இருக்கிறது. நான்கு புறங்களிலிருந்து வெளிச்சமும் காற்றும் உள்ளே பொழிவதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கிறது வீடு. மேல்தளத்தில், முடிந்தும் முடிவுறாமலும் பலநூறு சித்திரங்கள் இறைந்து கிடக்கின்றன. சின்னச்சின்ன அட்டைகளில் விதவிதமான மனிதர்கள் உயிர்பெற்றிருக்கிறார்கள்.

தெருக்களில் உயிர்க்கும் திருச்சி!
தெருக்களில் உயிர்க்கும் திருச்சி!
தெருக்களில் உயிர்க்கும் திருச்சி!
தெருக்களில் உயிர்க்கும் திருச்சி!

“ஓவியத்தோட அடிப்படை ஒண்ணுதான். பிரஷ், கத்தி, பேனா, பென்சில், பேப்பர், கேன்வாஸ்னு ஊடகம் வேறுபடலாம். கோடுகள்தான் எல்லாத்துக்கும் அடிப்படை. விசாலமான அறை, மனசுக்கு உகந்த இசை. பெரிய கேன்வாஸ்னு இல்லாம, ஒரு பேருந்து நிலைய நசநசப்புல உக்காந்து ஒரு துண்டுக்காகிதத்துலகூட நாம நினைக்கிற சித்திரத்தை வரைய முடியும். படைப்புக்குள்ள ஒருங்கிணையுற எண்ணம்தான் முக்கியம். அப்படி, தெருக்களிலேயே உக்காந்து திருச்சியைக் காட்சிப்படுத்தியிருக்கேன். கட்டடக்கலை மாணவர்களைத் தெருக்களுக்கு அழைச்சிட்டுப் போய் தெருக்களையும் கட்டடங்களையும் முப்பரிமாணத்துல எப்படி டிசைன் பண்றதுங்கிறதை லைவா சொல்லிக்கொடுப்பேன். அந்தப் பயணங்கள்தான் திருச்சித் தெருக்களை முழுமையான ஓவியங்களாக்குற ஆர்வத்தை உருவாக்குச்சு.

தெருக்களில் உயிர்க்கும் திருச்சி!
தெருக்களில் உயிர்க்கும் திருச்சி!
தெருக்களில் உயிர்க்கும் திருச்சி!
தெருக்களில் உயிர்க்கும் திருச்சி!

வேறெந்தப் பெருநகரத்திலயும் திருச்சியில் ஒட்டியிருக்கிற கிராமியத்தன்மையைப் பார்க்கமுடியாது. உதாரணத்துக்கு என்.எஸ்.சி போஸ் சாலை... உயிரோட்டம் ததும்புற இடம். ஒரு பக்கம் மலைக்கோட்டை, இன்னொரு பக்கம் ஆங்கிலேயர்கள் ராணுவத் தளவாடங்கள் வச்சிருந்த பழைய கட்டடம், இன்னொரு பக்கம் பெரிய தெப்பக்குளம், இதுக்கு மத்தியில பெரிய ஜனத்திரள்... படைப்பாளியோட கண்களுக்கு இது மிகப்பெரிய அற்புதம். அதுவே சின்னக்கடைத் தெருவை கொஞ்சம் உயரத்துல இருந்து பார்த்தா நியூயார்க் சிட்டி மாதிரி இருக்கும்... இப்படி ஒவ்வொரு தெருவையும் உணர்ந்து உணர்ந்து வரைஞ்சிருக்கேன். விரைவில் அழகான கட்டமைப்புல ஒரு சித்திரத் தொகுப்பு நூலா இது வரப்போகுது...” என்கிறார் மாணிக்கவாசகம்.

நகரமயமாதல் தீவிரமாகிவரும் சூழலில் இன்னும் கிராமியப்பண்புகள் ஒட்டியிருக்கும் நகரங்களை ஆவணப்படுத்துவது காலத்தின் தேவை. ஓவியர் மாணிக்கவாசகத்தின் வழியில் அது நிகழ்கிறது!