Published:Updated:

இந்த ஆண்டின் புக்கர் பரிசு பெற்ற இரு பெண்கள்!

2019 ஆம் ஆண்டுகான புக்கர் பரிசு கனடாவைச் சேர்ந்த மர்காரட் அட்வுட் (Margaret Atwood) மற்றும் ஆங்கிலோ நைஜீரியப் பெண்மணி பெர்னடைன் எவரிஸ்டோ (Bernardine Evaristo) இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புக்கர் பரிசு
புக்கர் பரிசு ( twitter )

உலகளவில், இலக்கிய வாசகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த புக்கர் பரிசு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு லண்டனில் பிரசுரமாகும் நாவல்களுக்கு வழங்கப்படும் இவ்விருது உலக அளவில் மிகப் பிரபலமானது. புக்கர் பரிசு எனப்படும் இந்த விருது, கடந்த 1969-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அறுபதுகளின் இறுதியில், பிரிட்டனில் `ஜொனாதன் கேப்' (Jonathan Cape) என்னும் பதிப்பகத்தை நடத்தி வந்தவர் டாம் மாஸ்ச்லெர் (Tom Maschler). இவர், தனது 'ஜொனாதன் கேப் ' பதிப்பகத்தின் மூலம் பல புதிய எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்தார். புகழ்பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கேர்சியோ மார்க்வேஸ் எழுதிய 'One Hundred Years of Solitude' நூலை பிரிட்டனில் ஜொனாதன் கேப் பதிப்பகம்தான் வெளியிட்டது.

புக்கர் பரிசு
புக்கர் பரிசு
twitter

எழுத்தாளர்கள் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த டாம், நிறைய நூல்களைப் பதிப்பித்து வந்த `புக்கர் பிரதர்ஸ்' என்னும் நிறுவனத்தை அணுகி, எழுத்தாளர்களுக்கான பரிசொன்றை வழங்குவதற்கு வழிவகை செய்தார். தொடக்கத்தில் அந்த விருது புக்கர் - மக்கொன்னெல் பரிசு என வழங்கப்பட்டது. எனினும் பொதுவில் புக்கர் பரிசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. 2002 முதல் இப்பரிசுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட மான் குரூப் (Man Group) என்னும் நிதி முதலீட்டு நிறுவனம் பரிசின் பெயரை புனைவுகளுக்கான 'மான் புக்கர் பரிசு' (Man Booker Prize) என மாற்றினர். 21,000 பவுண்டுகளாக இருந்த பரிசுத் தொகை, 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 50,000 பவுண்டுகளாக உயர்த்தப்பட்டது.

மர்காரட் அட்வுட்

79 வயதான மர்கார்ட் அட்வுட் பெறும் இரண்டாவது புக்கர் பரிசு இது. கடந்த 2000 ஆம் ஆண்டு இவரது The Blind Assassin (தி பிளைண்டு அசாசின்) நூலும், தற்போது The Testaments ( தி டெஸ்டாமென்ட்ஸ்) என்னும் நூலும் இவருக்கு புக்கர் பரிசைப் பெற்றுத் தந்தது. நாவல் மட்டுமன்றி கவிதைகளும் எழுதக் கூடியவர் மர்கார்ட்.

புக்கர் பரிசு
புக்கர் பரிசு
twitter

பல முக்கிய இலக்கிய விருதுகளை வென்றுள்ள இவர் அரசியல், பெண்ணியக் கதைகள் எனப் பல தளங்களில் புனைகதைகளை எழுதியுள்ளார். இதுவரை, புக்கர் பரிசு வென்றவர்களிலேயே இவர்தான் வயது முதிர்ந்தவர்.

பெர்னடைன் எவரிஸ்டோ

60 வயதான பெர்னடைன் எவரிஸ்டா ஆங்கிலோ நைஜீரிய பெண்மணி. பிரிட்டனின் முதல் கறுப்பின நாடகக் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து நடத்தியவர். இவரது Girl, Woman, Other, நூலுக்காக இவருக்கு புக்கர் பரிசு கிடைத்திருக்கிறது.

புக்கர் பரிசு
புக்கர் பரிசு

சிறுகதை, நாடகம், கவிதை, இலக்கிய விமர்சன நூல்கள் எனப் பலவற்றை எழுதியுள்ளார். லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரியும் எவரிஸ்டோ கறுப்பின மக்கள், பெண்கள் குறித்து தொடர்ந்து பேசியும் இயங்கியும் வருபவர்.