Published:Updated:

உணர்தல் - சிறுகதை

உணர்தல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
உணர்தல் - சிறுகதை

நிறுவனர் தினம் என்று ஒரு நாள் வரும். அன்று வரதன் அவனது எம்.டி-யின் கையாலேயே அதைப் பெறப்போகிறான். ஆனாலும் அவனுக்குள் இப்போது ஒரு தீர்மானம்.

உணர்தல் - சிறுகதை

நிறுவனர் தினம் என்று ஒரு நாள் வரும். அன்று வரதன் அவனது எம்.டி-யின் கையாலேயே அதைப் பெறப்போகிறான். ஆனாலும் அவனுக்குள் இப்போது ஒரு தீர்மானம்.

Published:Updated:
உணர்தல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
உணர்தல் - சிறுகதை

குபுகுபுவெனப் புகையைக் கக்கிக் கொண்டிருந்தது டெம்பரிங் ஃபர்னஸ்! அது அப்படித்தான் கக்கும். அது அதன் தன்மை... அதன் உள்ளே இரும்பாலான போல்ட் நட்டுகள் ரசாயனம் கலந்த ஒரு வகை எண்ணெய்க்குள் வெந்துகொண்டிருந்தன. வெந்தபடியே ஒரு கன்வேயர் பெல்ட்டின் வழியாக நகர்ந்து வந்து திரும்ப ட்ரேக்களில் அவை விழும். அதன்பின் அந்த ட்ரேயை நகர்த்தி அதற்கு டேக் எனப்படும் அடையாள அட்டை போட்டு பேக்கிங் செக்‌ஷனுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த வேலையைத்தான் வரதன் பார்க்கிறான். இம்மட்டில் 15 வருட அனுபவம் அவனுக்கு... இந்தப் பதினைந்து வருஷ சர்வீஸுக்கு அவன் வேலை பார்க்கும் அந்த நிறுவனத்தில் கைக்கடிகாரம் ஒன்றை சர்வீஸ் அவார்டு என்கிற பெயரில் கொடுப்பார்கள்.

நிறுவனர் தினம் என்று ஒரு நாள் வரும். அன்று வரதன் அவனது எம்.டி-யின் கையாலேயே அதைப் பெறப்போகிறான். ஆனாலும் அவனுக்குள் இப்போது ஒரு தீர்மானம். இப்போது பார்த்து வரும் இந்த ஃபர்னஸ் ஆப்பரேட்டர் வேலை சுத்தமாக வரதனுக்குப் பிடிக்கவில்லை. ரசாயன எண்ணெயின் வாடை, அங்கு நிலவும் வெப்பம் அதனால் உருவாகும் வியர்வை பிசுபிசுப்பு என்று அவனுக்குப் பல சிக்கல்கள். இதனால் இந்த வேலையை விட்டுப் போய்விட வேண்டும் என்று, எப்போதெல்லாம் அந்தப் போல்ட் நட்டுகள் நிரம்பி வழியும் ட்ரேக்களைப் பிடித்து இழுக்கிறானோ அப்போதெல்லாம் நினைக்கிறான்... சில சமயங்களில் சுவாசிக்கவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. கைகளில் பொரிப்பொரியாய் புள்ளிகள்வேறு தோன்றி அவனை மிரட்டிவருகின்றன. இதற்கெல்லாம் ஒரே தீர்வுதான்... அது வேலையை விடுவது மட்டும்தான்.

இப்படி அவன் அடிக்கடி நினைத்தாலும் இந்த மனநிலை ஏனோ கலைந்தும்போய்விடுகிறது. குறிப்பாக சம்பளக் கவரை வாங்கும்போது அந்த முப்பதாயிரம் சொச்ச சம்பளம் அவனைக் கட்டிப் போட்டுவிடுகிறது. அதுபோக வருடாவருடம் இன்சென்டிவ் போனஸ் என்று ஒரு ஐம்பதாயிரம் பக்கம் வருகிறது. மருத்துவச் செலவை கம்பெனியே ஏற்றுக்கொள்கிறது. வீடு கட்ட லோன் வேண்டுமென்றால் தருவதற்கு சொஸைட்டி உள்ளேயே இருக்கிறது.

உணர்தல் - சிறுகதை

இப்படிப்பட்ட தொழிலாளர் நலச் சமாச்சாரங்கள்தான் அவனை உறுதியான முடிவெடுக்க விடாதபடி செய்துவருகின்றன.

இருந்தும் பல நேரங்களில் அவன் மனைவி மங்கல லட்சுமியிடம் அலுத்துக்கொள்வான். ``என்னைக்கு நான் எழுதிக்கொடுக்கிறேனோ அன்னிக்குத்தான் மங்கலா விடுதலை!’’

``கொடுத்துட்டு..?’’ இது அவள்.

``என்ன கொடுத்துட்டு... நீ வந்து அந்த ஃபர்னஸ்கிட்ட நின்னு பாரு தெரியும்.’’

``அதுக்கென்ன பண்ண... ஒழுங்கா காலேஜ் போய் அரியர்ஸ் வைக்காம படிச்சிருந்தா இப்படிப் புலம்ப வேண்டியிருக்காதே. அன்னிக்குக் காலைக் காட்சிக்கும் மேட்னிக்கும் கிளாசுக்கு கட் அடிச்சுட்டுப் போனதுக்குத்தான் இப்ப அனுபவிக்கிறீங்க’’ என்பாள் அவள். நீதி தேவதையே கையில் ஒரு தராசுடன் கண்களைக் கட்டிக்கொண்டு பேசுவதுபோல் இருக்கும் அவனுக்கு... கோபம் வருத்தம் என்று எல்லாம் கலந்து வரும். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. ஏதோ கஷ்டப்பட்டாலும் இப்படி ஒரு வேலை கிடைத்து ஒரு மிடில் கிளாசாகத் திகழ்வதில் அவனுக்கு உள்ளூர சந்தோஷம்தான். இந்த சந்தோஷம்தான் அவனை விடாமல் வேலையில் தொடரச் செய்துகொண்டிருக்கிறது. சில தருணங்களில் அந்த டிகிரி அரியர்ஸ் எல்லாம் எழுதி பாஸ் பண்ணிவிட்டால் என்ன என்றுகூட நினைத்தான். ஆனாலும் அப்படி பாஸ் பண்ணியதோடு மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து பி.இ படிப்பையே முடித்துவிட்ட நாச்சிமுத்துவும் ஞாபகத்துக்கு வந்து இனிமே படிக்கிறது எல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லை வராதா என்று சொன்னதும் சேர்ந்தே நினைவுக்கு வரும்.

ஆமாம்...!

நாச்சிமுத்து பி.இ முடித்தும் அந்தக் கம்பெனியில் அவனுக்கு எந்த பிரமோஷனும் கிடைக்கவில்லை. பர்சனல் மேனேஜரைப் பார்த்து தனது சர்ட்டிபிகேட்டுகளை எல்லாம் காட்டி தனக்குத் தன் தகுதிக்கேற்ப வேலை தரும்படி எழுதிக்கொடுத்தே மூன்று வருஷங்கள் ஓடிவிட்டன.

எப்போது பர்சனல் மேனேஜரைப் பார்த்துக் கேட்டாலும் ``பொறுமையா இரு... ஹெட் ஆபீஸ்ல உன்னைப் போலவே நாலு பேர் எம்.பி.ஏ, எம்.சி.ஏ முடிச்சுட்டு காத்துக்கிட்டு இருக்காங்க... அவங்களுக்கே இன்னும் எதுவும் நடக்கலை’’ என்பார்.

அந்த பதிலை எத்தனை முறைதான் கேட்பது?

ஒருமுறை ``பேசாம வேற கம்பெனியைப் பார்த்துக்கிட்டுப் போயிடேன். இங்க இருந்து ஏன் கஷ்டப்படணும்?’’ என்றே சொல்லிவிட்டார் அவர்.

அதைக் கேட்ட வரதன்கூட நாச்சிமுத்துவிடம், ``ஏன் நீ முயற்சி செய்யக் கூடாது?’’ என்று கேட்டான்.

``நான் செய்யலன்னு தெரியுமா வரதா உனக்கு?’’

``அப்படியா..?’’

``என்ன அப்படியா... எவனும் கூப்பிட மாட்டேங்குறான் வரதா! முதல் காரணம் முத்திப்போன வயசு. அடுத்து நான் இப்ப இங்க வாங்குற சம்பளம். அவனுக்கு இருபது வயசு ஃப்ரெஷ்ஷா பத்தாயிரத்துக்கும் பதினைஞ்சாயிரத்துக்கும் ஆயிரம் பேர் லைன்ல நிக்கிறாங்க, தெரியுமில்ல?’’

``அட ஆமால்ல... இங்கேயே ஆறாயிரம் ஏழாயிரத்துக்கும் அப்ரண்டிசா சாகறாங்களே..?’’

``அப்புறம் கேட்கிற?’’

இப்படித்தான் இந்தப் பேச்சுகள் முனை முறிந்துபோயின. எனவே தலையெழுத்தை நொந்துகொண்டு வேலைக்கு வந்து கொண்டிருக்கிறான் வரதன். இவன் தாத்தா ராஜாராம் ஒரு மிலிட்டரி மேஜர்! கடைசிவரை பென்சனில் வாழ்ந்தவர். எவரிடமும் எதற்காகவும் கையேந்தும் அவசியங்கள் அவருக்கு அதனால் ஏற்படவில்லை. பென்சன் பணத்தைக்கொண்டே ஆயிரம் சதுர அடியில் மதுரையின் மையப்பகுதியில் காம்பவுண்டு சுவருடன் ஒரு தனி வீட்டையே கட்டிவிட்டார்.

இன்றைக்கும் வரதன் வசிக்கும் பகுதியில் மேஜர் வீடு என்றால் அவ்வளவு பிரசித்தி. வரதன் மேஜர் வீடு மதுரை என்கிற மொட்டையான முகவரிக் கடிதமே வந்து சேர்ந்துவிட்டது என்றால் அது ஆச்சரியம்தானே!

ஏதோ அந்த வீடு பூர்வீகச் சொத்தாக இருக்கப்போய் வரதன் வரையில் மாத வாடகைத் தொல்லை இல்லை. சம்பளத்தில் நகைச்சீட்டெல்லாம் போட முடிகிறது. ஒரு படி மேலே போய் வரதன் மனைவி மங்கல லட்சுமி அந்தப் பழைய மேஜர் வீட்டைப் புதுப்பித்துக் கட்டி மேலே மொட்டை மாடியில் ஒரு தளத்தையும் உருவாக்கியதில் வரும் வாரம் கிரகப்பிரவேசம் நடக்க விருக்கிறது. இப்போதைக்கு வெகு தற்காலிகமாய் ஒரு சிறு வீட்டில் இருந்துகொண்டு கம்பெனிக்கும் போய் வந்து கொண்டிருக்கிறான். பத்திரிகையெல்லாம்கூட அடித்தாகிவிட்டது. அதைப் பார்க்கும்போது லேசாய் உருப்பட்டதுபோல ஓர் எண்ணம். மனதுக்கும் அது இதமாகத்தான் இருக்கிறது.

அன்று யூனிபார்ம், நேம்பேஜ், ஷூ என்று கம்பீரமாய் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் தீபாவும் ஸ்கூல் யூனிபார்மில் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

``டாடி... எங்க டீச்சர் நம்ப வீட்டைப் பத்திக் கேட்டாங்க டாடி’’ என்று ஆரம்பித்தாள்.

``என்ன சொன்னே?’’

``அடுத்த வாரம் குடிப்போகப் போறோம்னு சொன்னேன் டாடி.’’

``அவங்களுக்கு நாம வீடு கட்றது எப்படித் தெரியும்?’’

``ஸ்கூல் ஓப்பன் ஹவுசுக்கு மம்மி வந்தப்ப சொல்லிட்டாங்க...’’

``அப்படியா சங்கதி..?’’

``ஆமாம் டாடி, எங்க மேமுக்கு ஒரு பத்திரிகை தரணும் டாடி.’’

``கொடுத்துட்டாப் போச்சு...’’

``மம்மிய நேர்ல வந்து கொடுக்கச் சொல்லு டாடி.’’

``மங்கலம், நீ போய் நேர்ல பாத்துக் கொடுத்துட்டு வந்துடறியா?’’

``நானெல்லாம் போனா நல்லா இருக்காதுங்க. நீங்க போய்க் கொடுங்க. இப்படியே யூனிபார்மோட நீங்க போய்க் கொடுத்துட்டுப் போங்க. உங்க கம்பெனின்னா அவங்களுக்கு ஒரு தனி மரியாதை...’’

``அது சரி, எனக்கு எங்க இருக்கு நேரம்? இதெல்லாம் உன் டிபார்ட்மென்ட்.’’

``இது நல்லாருக்கா...’’

``எனக்கு நேரமில்லை மங்கலம். நீயே போயிட்டு வந்துடு.’’

``சரி... ஆமா உங்க கம்பெனில யாரையெல்லாம் கூப்பிடப் போறீங்க?’’

``என் டிபார்ட்மென்ட்ல எல்லாரையும் கூப்பிடணும். அப்புறம் என் டிபார்ட்மென்ட் ஹெட் அந்த எருமைக்கும் இன்விடேஷன் வைக்கணும். அப்புறம்

ஜி.எம்முக்கு.’’

``ஹெட்டு மேல உங்க கோபம் இன்னுமா தீரலை?’’

``அது தீரவே தீராது மங்கலா. எனக்கு மட்டுமல்ல, என் டிபார்ட்மென்ட்ல யாருக்குமே அந்த எருமையைப் பிடிக்காது.’’

``திரும்ப திரும்ப எருமையா?’’

``உன் முன்னாலதான் சொல்லமுடியும். நேர்ல சொல்ல முடியாதே!

நாங்கெல்லாம் அவன் வரையில ஆயிரத்தில் ஒருவன் சினிமாவுல வர்ற மாதிரி அடிமைகள். அவனும் அந்தப் படத்துல வர்ற ராமதாஸ் மாதிரி தான்... சரி சரி நேரமாச்சு நான் கிளம்புறேன்.’’

வரதன் பேன்ட் டக் இன்னை அட்ஜஸ்ட் செய்தபடியே வாசல்புறம் மரத்தடியில் சைடு ஸ்டாண்டு போட்டு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை உதைத்து எழுப்பியபடி மறைந்துபோனான்.

இதுதான் அவனின் அன்றாடம்.

பைக்கை ஸ்டாண்டில் போட்டுவிட்டு கேன்டீனுக்குள் நுழைந்தபோது ஊத்தப்ப சாம்பார் வாடை மூக்கை நிமிண்டியது. ஐந்து மில்லி மீட்டர் பருமனில் செம்பொன் நிறத்தில், வட்டத்தில் துளியும் பிசிரே இல்லாத ஊத்தப்ப தோசைகள்.

ஆளுக்கு மூன்று - கரண்டியில் சாம்பார் விட்டு மாளாதுபோய், குவளைக்கு மாறியதில் ஒரு குவளை சாம்பார்! தளும்பத் தளும்ப தட்டோடு போய் மேஜைமேல் வைத்துச் சாப்பிட அமர்ந்தபோது அது வாழ்வின் ஒரு அற்புதத் தருணமாக, அர்த்தமுடன் வாழும் ஒரு பொழுதாக அவ்வளவு பேருக்குமே இருந்தது.

வரதன் சாப்பிடத் தொடங்கவும் பக்கத்தில் வந்து அமர்ந்தான் ரஹ்மான்.

``இப்படி வக்கணையா சோத்தப் போட்டே நம்பள எல்லாம் பிழிஞ்சு எடுத்துடறாங்க, இல்ல வரதா?’’ என்று ஆரம்பித்தான். அவன் எப்போதுமே இப்படித்தான். நமக்குள் தோன்றிடும் ஆற்றாமைகளை ரஹ்மானோடு பேசித் தீர்த்துக்கொள்ளலாம். நன்றாகச் சொறிந்து தருவான்.

உணர்தல் - சிறுகதை

``உங்க எருமைக்கு நேத்து ஜி.எம் கிட்ட செம பூசையாமே?’’

``அப்படியா, தெரியாது ரஹ்மான்.’’

``குனிய வெச்சு நிமித்திட்டாராம்! நாமதான் இவனைப் பாத்தா முதல்ல குட்மார்னிங் சொல்லணும். ஆனா இவன் அவருக்குச் சொல்லணும்ல?’’

ஊத்தப்பம் உட்சென்றபடி இருக்க, அதைவிடச் சுவையாக இருந்தது அவன் சொன்ன செய்தி.

``ஏன், சொல்லலையா?’’

``பின்ன... அப்படியே சிரிச்சுக்கிட்டே அவரை கிராஸ் பண்ணியிருக்கான். அவர் கூப்ட்டு ஏன் குட் மார்னிங் சொன்னா குறைஞ்சு போயிடுவியா நீன்னு உடனேயே கேட்டுட்டாரு. பெப்பப்பான்னு முழிச்சிருக்கான். நீ சரியில்லையா. எனக்கு டிசிப்ளின் முக்கியம்னு கும்மி அடிச்சுட்டாரு.’’

ரஹ்மான் சொன்னது ஊத்தப்பத்தைவிட ருசியாக இருந்தது வரதனுக்கு.

டிப்பார்ட்மென்ட்க்குள் நுழையும்போதே அனல் காத்துக்கொண்டிருந்தது. ரிலீவர் முருகன் தனக்கான ஷிப்ட் முடிந்து கிளம்பிட வரதன் அந்தப் பகல் ஷிப்டுக்குப் பொறுப்பானான்.

ஃபோர்க் லிப்ட் ஆப்பரேட்டர் நடராஜன் கையை அசைத்தபடியே ஃபோர்க் லிப்டோடு கடந்து போனான். அவனை சைகை காட்டி நிறுத்தச் சொன்னான். அவன் நின்றான். வேகமாய் மேஜை டிராயரைத் திறந்து ஒரு பத்திரிகையை எடுத்துக் கொண்டு சென்று அப்படியே பக்கவாட்டில் ஃபோர்க்லிப்ட் மேல் ஏறி நின்றுகொண்டே ``அவசியம் வந்துடு பங்கு’’ என்றான்.

``நம்ப ஊட்டு விசேஷம், வராமல் இருப்பேனா’’ என்று பதிலளித்தான் நடராஜனும்.

``நைட் ஷிப்ட்தானே?’’

``பார்த்தா தெரியலையாக்கும். நைட்டேதான்! வீட்டுக்குப் போய் எப்படித் தூங்கப் போறேன்னு தெரியல. தெருவுல காளியம்மன் பண்டிகைன்னு லௌடு ஸ்பீக்கர் அலறிக்கிட்டிருக்குது. இன்னைக்கு நான் தூங்குன மாதிரிதான்’’ என்று சொல்லி கியர்ராடின் மேல் கையைக் கொண்டு சென்றான். அதற்கு அவனை `இறங்கிக்கொள்’ என்று சொல்வதாக அர்த்தம்.

வரதனும் இறங்கிக் கொண்டான். வரதன் ஃபோர்க் லிப்டில் இருந்து குதித்து இறங்குவதைப் பார்த்துக் கொண்டே வந்தான் சூப்பர்வைசர் சுந்தர். அது ஒரு விதி மீறல். லிப்டில் டிரைவர் தவிர யாரும் ஏறக் கூடாது. அது மனிதனின் பயணத்திற்கான வாகனமும் இல்லை. எனவே யார் ஏறினாலும் ஒரு கச்சேரி உண்டு.

``ஏ வரதராஜ், அறிவில்ல உனக்கு... லிப்ட்ல உனக்கு என்ன வேலை?’’ என்று கச்சேரியும் தொடங்கிவிட்டது.

``சாரி சார்... பத்திரிகை கொடுத்தேன், அதான்...’’

``நல்லா கொடு கம்பெனிக்கு வெளில... அதுக்கு ஒர்க்கிங் ஹவர்ஸ்தான் கிடைச்சிச்சா?’’

``சாரி சார்.’’

``என்ன சாரி பூரி, ஆமா என்ன பத்திரிகை?’’

``வீட்டு கிரகப் பிரவேசப் பத்திரிகை சார்...’’

``ஓ... நீ வீடு கட்டிட்டியா?’’

``ஏன் சார், கட்டக்கூடாதா?’’

``கட்டு கட்டு, அதான் கூப்ட்டு கூப்ட்டு லோன் தர்றாங்களே...’’

``இருங்க சார் உங்களுக்கும் கொடுத்துடறேன்...’’

``லஞ்ச் பிரேக்ல கொடு, இப்ப வேண்டாம்.’’

சுந்தர் சாதாரணமாகப் பேசினானா கிண்டலாய்ப் பேசினானா என்பது தெரியாதபடி பேசிவிட்டு விலகினான். சிறிது தூரம் சென்றவன் ``அப்ப கிரகப்பிரவேசத்துக்கு லீவு போடப்போறியா?’’ என்று அங்கிருந்தபடியே கேட்டான்.

``ஆமாம் சார்.’’

``எத்தனை நாள்?’’

``த்ரீ டேஸ் சார்.’’

``த்ரீ டேஸா..?’’ இழுவையாக சுந்தர் கேட்ட விதமே அது மிக அதிகம் என்பது போலிருந்தது. வரதன் வழக்கம்போல பேந்தப் பேந்த பார்த்தான்.

``ஆமா, பாஸுக்குக் கொடுத்திட்டியா?’’

``இல்ல சார்.’’

``மறந்திடாதே... பத்திரிகையைக் காட்டித்தான் நானே லீவு சேங்ஷன் பண்ணணும்.’’

``சரிங்க சார்.’’

சுந்தர் விலகிக்கொள்ள, வரதன் ஃபர்ன்னஸ் அருகே செல்லவும், அதனுள் ஆயில் கொப்பளித்துப் புகை கசிந்தபடி இருந்தது. அனல் உடல் மேல் பட்டு வியர்வை பூக்கத் தொடங்கியது. சற்றுத் தள்ளி நின்றுகொண்டே கன்வேயர் பெல்ட்டைப் பார்த்தான். அதில் போல்ட்டுகள் வரிசை யாக ஊர்வலமாகப் போய் ஆயிலுக்குள் டைவ் அடித்து மூழ்கியும் போய்க்கொண்டி ருந்தன.

சுந்தர் பேசிய பேச்சு குறிப்பாக, `ஓ... நீ வீடு கட்டிட்டியா?’ என்கிற அந்தக் கேள்வி உனக்கெல்லாம்கூட சொந்த வீடா என்று நிகழ்வாய்க் கேட்கப்பட்டது போலவே அவனுக்குள் பொருள் தந்துகொண்டிருந்தது. வரதனுக்குள் சலனம் ஆரம்பமாகிவிட்டது.

இவனாவது பரவாயில்லை, கேட்டுவிட்டான். டிபார்ட்மென்ட் ஹெட்டான அந்த எருமை, இல்லையில்லை துணைப் பொது மேலாளர் பாலச்சந்திரன் என்கிற பாலா முகத்தையே பார்த்துப் பேச மாட்டார்.

லேப்டாப் ஸ்க்ரீனைப் பார்த்தபடியேதான் பேசுவார். ஷாப் ஃப்ளோரில் அசத்தலான கண்ணாடி ஏ.சி அறையில் நல்ல குஷன் சுழல் நாற்காலியில் அமர்ந்துகொண்டு மிடுக்கு காட்டுவதில் பாலா மன்னர்!

நல்ல கறுப்பு நிறம், வழுக்கைத் தலை, முடி முளைத்துக் காது மடல்கள் என்று மனிதர் பார்க்கவே நிரடலாய் காட்சி தருவார்.

சரியான தொந்தி. அதை பெல்ட்டால் டக் இன் செய்து அடக்கியதில் அங்கும் இங்குமான பிதுக்கங்களில் லட்சங்களில் சம்பளம் வாங்கிடும் ஊட்டம் நன்றாகவே தெரியும்.

தொழிலாளர்களிடம் சற்று நெருக்கமாய்ப் பழக முற்பட்டாலும் அது சலுகைகளிடம் கொண்டு போய் நிறுத்திவிடும் என்கிற மட்டமான ஒரு கருத்தை ஒரு கொள்கையாகவே கொண்டிருப்பதால் எப்போதும் இறுக்கமாகவே இருப்பார். அவர் சிரித்தே வரதன் பார்த்ததில்லை. பேச்சிலும் பத்து வார்த்தைக்கு ஆறு வார்த்தைகள் குத்தலும் குதர்க்கமுமாகவே இருக்கும். வரதன் வாங்கும் சம்பளத்தைப் போல் ஐந்து மடங்கு வாங்குகிறார். இதுபோக கம்பெனியே கார் கொடுத்து டிரைவரையும் கொடுத்துள்ளது. வீட்டு வாடகையைக்கூட கம்பெனியே கொடுத்துவிடுவதாகக் கேள்வி... இதெல்லாம் சிலரை அந்தஸ்து பேதம் பார்க்கச் செய்யுமா என்றால், செய்கிறது என்பதுதான் வரதனின் பதில். எல்லோரின் பதிலும்கூட அதுதான்.

வரதன் ஹை ஸ்கூல்! பாலா போஸ்ட் கிராஜுவேட்... எனவே இதைப் படிப்பு படுத்தும் பாடு என்றுகூடக் கூறலாம். ஒழிந்து போகட்டும், சம்பளம்தான் கூட... அதற்காக பாலா அறைக்குள் ஒரு யூனியன் கிரேடு தொழிலாளி அவரைக் காணச் சென்றால் எதிரில் உள்ள நாற்காலியில் அமர வைத்துப் பேசக்கூடாதா என்ன?

நிற்க வைத்தேதான் பேசுவார். அதிலும் முகம் பார்க்காமலேயே பேசுவார். என் வரையில் புழு பூச்சி நீ என்று அவர் உணர்த்த முற்படுவது போலவே இருக்கும். இதை அந்த யூனியன் கிரேடு தொழிலாளி சகித்துத்தான் தீரவேண்டும். எதிரில் உட்கார முற்பட்டாலோ, இல்லை, உட்கார்ந்து விட்டாலோ அது ஒழுக்கக் குறைபாடு. அப்படி உட்கார்ந்து பேசிய பலர் அவர்களாக வேலையை விட்டுப் போகுமளவு அதன் பிறகு அழுத்தங்கள் அதிகரிக்கும்.

அப்படி வெளியேறியவர்கள் வாழ்வில் ஜெயித்துக் காட்டினாலாவது பரவாயில்லை. அவர்களில் சிலர் எலக்ட்ரிக்கல், பிளம்பராக வரதன் பார்க்கும் போதெல்லாம் ஒரு பைப் குழாய் சகிதமாகவே காட்சியளித்துள்ளனர். இன்னும் சிலர் துபாய் போய் அங்குள்ள ஷிப்யார்டில் லோடர்களாகிவிட்டனர்.

இதைப் பார்க்க யாருக்கு தைரியம் வரும். வரதன் வரையில் வந்ததேயில்லை.

இதோ இப்போதுகூட அவர் அறைக்குள் இருப்பது தெரிந்து வேண்டா வெறுப்பாய், அரை மனிதனாய் பத்திரிகையுடன் அறைக் கதவருகே கண்ணாடி வழியாக அவர் பார்ப்பதுபோல நின்றான்.

ஒரு ஐந்து நிமிடம் நிற்க விட்டு பிறகே உள்ளே அழைத்தார். வழக்கம்போல் லேப்டாப்பில்தான் கண்கள். உதடு மட்டும் ``என்னையா... எதுக்கு நிற்கிற... என்ன கைல?’’ என்று மூன்று கேள்விகளைக் கேட்டது.

``பத்திரிகை வைக்கணும் சார்.’’

``என்ன பத்திரிகை?’’

``கிரகப்பிரவேசப் பத்திரிகை சார்.’’

``பார்றா, வீடு கட்ற அளவுக்கு நீ பெரியாளா ஆயிட்டியா பலே!’’

``அவசியம் வந்திருந்து ஆசீர்வாதம் பண்ணுங்க சார்.’’

``என்னிக்கு கிரகப்பிரவேசம்?’’

``வர வெள்ளிக்கிழம சார்...’’

``பார்க்கறேன், அன்னைக்கு இங்கே எக்ஸிகியூட்டிவ் மீட்டிங் இருக்கு. வர்றது சந்தேகம்தான்.’’

எடுப்பிலேயே ஓர் எதிர்மறை பதிலைக் கூறிவிட்டு, திரும்ப கீபோர்டில் எழுத்துகளைத் தட்ட தொடங்கிவிட்டார்.

ஒரு முப்பது விநாடிகள் நின்றபடியே இருந்தவனை அதன்பின் ஒரு நொடி ஏறிட்டவர், ``நீ கிளம்பு. எதுக்கு நின்னு வேலை நேரத்தை வேஸ்ட் பண்ற... போ போய் வேலையைப் பார்’’ என்றார்.

கடைசிவரை ஒரு வாழ்த்தோ, இல்லை, வருகிறேன் என்றோ சொல்லவே இல்லை. வரதனுக்கும் இந்த அனுபவம் ஒன்றும் புதிதில்லை. எதுவும் பேசாமல் திரும்பினான். அவனது பத்திரிகை மட்டும் டேபிளின் மேல் ஒரு மூலையில் கிடந்தது.

கிரகப்பிரவேச ஏற்பாடுகள் ஒருபுறம் தடபுடலாக நடந்தபடி இருக்க, கண்ணாடி முன் நின்று தலை சீவிக் கொண்டபோது தலைமுடி சற்று பணிய மறுத்து முடி வெட்டிக்கொள்ளும் ஓர் எண்ணத் தூண்டலை ஏற்படுத்திற்று. தாடையிலும் பத்துநாள் கேச வயல். அடுத்த நொடியே பரதன் மனதுக்குள் பாபுராம்தான் ஞாபகத்துக்கு வந்தான். உடனேயே புறப்பட்டுவிட்டான்.

முக்குரோட்டு முனையில் ஒரு பத்துக்குப் பத்து இடத்தில் நான்கு பேருக்கு ஒரே சமயம் முடிவெட்டும் வகையில் நான்கு குஷன் சேர் யூனிட்டுகளைப் போட்டு, ஒன்றரை டன் ஏ.சி-யையும் போட்டிருப்பவன்...

பாபுராமை நினைக்கும் போதே அவன் மைத்துனன் ரங்கசாமி, அசிஸ்டென்ட் கோவிந்தன் ஆகியோரும் சேர்ந்தே நினைவுக்கு வருவார்கள். குஷன் நாற்காலியில் கஸ்டமரை அமரவைத்து வெண்ணிற சலவைத் துணியை விரித்து உதறி, கழுத்து வரை மூடிக் கட்டி, பின் முகத்தை ஏறிட்டுப் பத்து விரல்களால் தாடையைப் பற்றி இப்படி அப்படி திருப்பிப் பார்த்து ஒரு கணக்கெடுப்பு செய்து, இறுதியாக சீப்பை எடுத்து வாரி கத்தரிக்கோலால் சில விசைப்புகளை உருவாக்கிய படியே வந்து இவர்கள் முடி வெட்டுவது ஒரு ரசமான செயல்போல இருக்கும்.

அப்படி அவர்கள் செய்யும்போது தலையைக் கொடுத்தவர் பார்வை எங்கெல்லாம் படுமோ அங்கெல்லாம் ஒரு நடிகையின் படம். அதுவும் கவர்ச்சிப் படம். மச்சினன் ஒரு சில்க் ஸ்மிதா பக்தன். அதனால் சிலுக்கின் மூன்றாம் பிறை பட போஸ்டரில் உடனிருந்த கமல்ஹாசனை வெட்டிவிட்டு சிலுக்கை மட்டும் ஓர் இடத்தில் ஒட்டியிருந்தான். அது போக த்ரிஷா, நயன்தாரா அனுஷ்காவில் ஆரம்பித்து இப்போது தலையெடுத்துள்ள ராஷ்மிகா வரை சகலரும் அங்கே திரும்பிப் பார்த்துக் கொண்டும், உற்றுப் பார்த்துக்கொண்டும் இருந்தனர்.

இவர்களுக்கு நடுவில் ஒரு கௌதம புத்தர் போஸ்டர் ஒன்று. `அது எதற்கு பாபுராம்’ என்று கேட்டால், `படத்தைப் பாருங்க, ஆசைப்படாதீங்க. பட்டா அவ்ளோதான்னு சொல்ல ஒருத்தர் வேண்டாமா சார்?’ என்று திருப்பிக் கேட்பான். மொத்தத்தில் பாபுராம் ஒரு சுவாரஸ்யமான கேரக்டர். சிரித்துக்கொண்டே பிறந்து சிரித்தபடியே எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பாத்திரமோ என்று எண்ணச் செய்பவன்.

இவனிடம் தலையைக் கொடுக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் எண்ண வைப்பவன். வந்து அமர்ந்த உடனேயே முகத்திற்கு ஸ்பிரேயரால் சிலீர் என்று கொஞ்சம் தண்ணீர் காட்டுவான். பின் அவன் வசம் உள்ள பூந்துவாலையால் அப்படியே ஒத்தியெடுப்பான். அப்போது படுசன்னமாய் லாவெண்டர் சென்ட் வாசமும் மூக்கில் ஏறும். உடம்பு நரம்புகள் அவ்வளவும் தூங்கும் மனிதர்களைத் தட்டி யெழுப்பியதும் அவர்கள் முறுக்கிக்கொண்டு எழுந்திருப்பது போல் எழுந்துவிடும்.

பாபுராம் அடுத்து தலைப்பக்கம் போய்விடுவான். போனபடியே பேச்சும் கொடுப்பான். இப்போதும் அப்படித் தலையைக் கொடுத்திருந்த வரதனிடம் அவன் பேச்சு தொடங்கிவிட்டது. ``என்னண்ணே கம்பேனி வேலைலாம் எப்படிப் போய்க் கிட்டிருக்கு?’’

``ஏதோ போய்க்கிட்டிருக்கு பாபு. அப்புறம் நான் பல தடவை சொல்லிட்டேன். நான் உன்னைவிட பத்து வயசு சின்னவன். இந்த அண்ணன்லாம் வேண்டாம். சும்மா வரதான்னே கூப்பிடு.’’

``எனக்குப் பத்து வயசுப் பையன்கூட அண்ணன் தாண்ணே. அப்படியே பழகிட்டேன்.’’

``பேரைச் சொல்லலாம்ல?’’

``அதெல்லாம் சரியா வராதுண்ணே. உங்களுக்குப் பெரிய மனசு, சொல்லிட்டீங்க. எல்லாரும் அப்படியா? இப்ப பேரைச் சொல்றான். அப்புறம் தோள்ள கைபோடுவான்னு மனசு நோகும்படி சிலர் பேசிடறாங்கண்ணே...’’

``என்ன பாபு ராம் சொல்றே... இந்தக் காலத்திலேயுமா இப்படி?’’

``முன்னைவிட இப்பதாண்ணே ரொம்ப மோசம்... முன்ன வித்தியாசம் பாக்கிறது நல்லா துண்டாத் தெரியும். இப்ப அப்படி இல்ல... கமுக்கமா அதே சமயம் அழுத்தமா செஞ்சிடறாங்கண்ணே...’’ கை ஒருபுறம் முடிவெட்டியபடி இருக்க பேச்சும் கைக்கு சரியாக ஓடிக்கொண்டே இருந்தது.

``யாரு அப்படி என்ன செஞ்சாங்க?’’

``வேண்டாம் விடுங்கண்ணே... நாம நல்ல விஷயம் பேசுவோம். ஆமா, `டான்’னு ஒண்ணரை மாசத்துக்கொரு தடவை வந்து நிப்பீங்க. இந்தத் தடவை என்ன லேட்டு?’’

``அதுவா... வீடு கட்ட ஆரம்பிச்சதிலிருந்து எல்லாமே மாறிப்போச்சு. கல்லு, மண்ணு செங்கல்னு ஒரே போராட்டம். கொத்தனார் சித்தாளோட மல்லுக் கட்டவே நேரம் சரியாப் போச்சு.’’

``நல்ல விசயம்தான்... கட்டி முடிச்சிட்டீங்களா?’’

``ஆச்சு பாபு... வர்ற வெள்ளிக்கிழமை கிரகப்பிரவேசம்.’’

``ரொம்ப சந்தோசம்... கல்யாணம், பிள்ளைகுட்டி, வீடு வாசல் இதெல்லாம் சுழில இருந்தாதான் நடக்கும். உங்களுக்கு நல்ல சுழி.’’

``என்ன சுழியோ... ஒரு நாலு நாள் லீவு போட்டுட்டு விடியும்போதே எழுந்திருச்சு ஓடாம ஒரு பத்து மணி வரை தூங்கணும்னு பாக்கறேன். ஆனா அதுக்குக்கூடக் கொடுப்பினை இல்ல எனக்கு... நீ என்னமோ நல்ல சுழிங்கறே...’’

``இப்படித்தாங்க இருக்கணும். வயசாகிட்டா தூங்கிட்டேதானே இருக்கப்போறோம். இப்ப எதுக்குத் தூங்கணும்? ஓடுங்க... ஓடிக்கிட்டே இருங்க. அதாண்ணே ஆரோக்கியம்.’’

எப்படிப் பேசினாலும் பாபு ராமிடமிருந்து நேர்மறையான பதில்களே வந்ததில் வரதனிடம் ஓர் ஆச்சரியம். அதற்குள் தலை பாகமும் சீர்மையாகி ஒரு கச்சிதம் கண்ணாடி வழியே கண்ணில் பட்டது.

``போதுமாண்ணே?’’

``கச்சிதமா இருக்கு... போதும்...’’

``கொஞ்சம் இருங்க... மூக்கு காது மடலல்லாம் கோரை முடி வெள்ளாமையால்ல வளர்ந்து கிடக்குது’’ என்று கேட்டபடியே கத்தரிக்கோல் நுனியால் அந்த இடத்து முடிகளை ஒருவித டிக் டிக் சத்தத்துடன் வெட்டி எறிந்தான்.

உணர்தல் - சிறுகதை

இறுதியாக தலைக்கு திரும்ப ஸ்ப்ரே செய்து பின் வெட்டி விட்டு அப்படியே பத்து விரல்களால் உள் பாகம் முழுக்க மசாஜ் செய்வதுபோல ஏதோ செய்து, இறுதியாக சானிட்டைசர் பாட்டிலில் போட்டு வைத்திருந்த ஒரு ஐந்தாறு சீப்புகளில் வரதனுக்குப் பிடித்த நீலக்கலர் சீப்பை எடுத்து டிஷ்யூ பேப்பரால் அதன் ஈரத்தைத் துடைத்து ஒரு உதறு உதறி விட்டு, ``அண்ணே உங்க கைப்பட நீங்களே சீவிக்கங்க’’ என்றான். வரதனும் சீவிக் கொண்டான்.

அழுக்காய் வந்து அழகாய் மாறிவிட்ட ஒரு மிதப்பு மனத்தில் தோன்றியது. ஒரு நாற்பது நிமிட நேரம் போனதும் தெரியவில்லை. உடம்பிலும் ஒரு புத்துணர்ச்சி. பாபுராமின் நேர்மறைப் பேச்சால் ஒரு மதிப்புணர்வும் உண்டாகியிருந்தது.

சற்று ரிலாக்ஸாக அந்த ஏ.சி ஓரமாய் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து தினத்தந்தி, தினமலர், தினகரன் என்று வாசித்துவிட்டு இடையிடையே டிவி-யில் ஓடிக்கொண்டிருக்கும் வடிவேல் காமெடிக்கும் கொஞ்சம் சிரித்து விட்டுப் புறப்படும்போது பணத்தைத் தந்தான் வரதன். அப்போது மடித்துக் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்துவிட்டு, சீப்பு கத்தரி பிடித்த கையையும் கழுவிக்கொண்டு வந்துதான் அந்தப் பணத்தை வாங்கினான் பாபுராம். எப்போதுமே எல்லோரிடமுமே அப்படித்தான்.... கேட்டால் ``மகாலட்சுமிண்ணே, அலட்சியமா தீண்டிடக்கூடாது’’ என்பான்.

அவன் ஒவ்வொரு செயலுமே உலகில் ஒரு பூரணமான சந்தோஷமான மனிதனைப் பார்த்ததுபோல் பார்ப்பவரை நினைக்க வைக்கும். வரதனும் வெளியே வந்து ஸ்டார் சிட்டியை உதைத்தபோது அப்படித்தான் நினைத்தான். மனம் லேசாக இருந்தது.

அப்போது அவனது உறவினரில் ஒருவர் சலூனுக்குள் நுழைந்துகொண்டிருந்தார். அவருக்குப் பத்திரிகை வைக்கப் போனபோது அவர் மனைவிதான் இருந்தார். அவர் இல்லை. அவரைப் பார்க்கவும் பைக்கை விட்டு இறங்கி திரும்ப சலூனுக்குள் நுழையவும் அவர் குஷன் சீட்டில் ஏறி அமர்ந்தபடியிருந்தார்.

``மாமா’’

``யாரு..?’’

``நான்தான் வர்தா...’’

``ஆ நீயா... இன்விடேஷன் கொடுக்க வந்த போலிருக்குதே?’’

``ஆமாம் மாமா, அப்ப நீங்க இல்லை. அதான் இங்க உங்கள பாக்கவும் ஓடி வந்தேன். அவசியம் வந்துடுங்க மாமா.’’

``வர்றேன் வர்றேன்...’’ அவரிடம் இங்கு வைத்து அழைக்கிறானே என்கிற முகபாவத்தோடு அலட்சியமான பதில். அது வரதனுக்கும் புரிந்தது. அருகில் நின்றபடி இருந்த பாபுராமுக்கும் புரிந்தது. பாபுராம் முகத்தில் மாறாத புன்னகை. அந்தப் புன்னகையே பாபுராமையும் கூப்பிடு என்றது.

``பாபு உனக்கும்தான். அவசியம் கிரகப்பிரவேசத்துக்கு வந்துடு’’ என்றான். வீட்டைப் பற்றிய பேச்சு தொடங்கியபோதே கூப்பிட்டிருக்கலாம். இன்னமும் மதிப்பாக இருந்திருக்கும். ஆனால் கூப்பிடத் தோன்றாதபடி ஒரு மனக்கட்டு... காலகாலமாய் அப்படியே பழகி வந்துவிட்டதன் எதிரொலி.

திரும்பி வந்து பைக்கை உதைத்தபோது முன்பு நிலவிய அந்த ஏகாந்த உணர்வெல்லாம் ஆவியாகி, சம்பந்தப்பட்ட உறவினரால் மனம் சூடேறத் தொடங்கிவிட்டதுபோல் இருந்தது. சற்று சலனத்தோடுதான் பைக்கைக் கிளப்பினான்.

வீட்டுக்குள் நுழைந்தவனை மகளும் மனைவியும் தீர்க்கமாய்ப் பார்த்தனர். கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து ``சூப்பரா வெட்டியிருக்கான்’’ என்றனர். வெட்டியிருக்கான் என்கிற அந்தப் பதப் பிரயோகம் வரதனை என்னவோ செய்தது.

``பாபுராம் என்னைவிடப் பத்து வயசு பெரியவன்... சாரி பெரியவர்! மரியாதையா கூப்பிடுங்க’’ என்றான் சற்றுக் கோபமாக. பின் தானே அவனை அவன் இவன் என்று அழைப்பதையும் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் முதல் முறையாக நினைத்துக்கொண்டான்.

வெள்ளிக்கிழமை மதிய வேளை. வரதன் உட்பட எல்லோரும் கழன்றுபோய் உட்கார்ந்திருந்தனர். சாப்பாட்டுப் பந்தியெல்லாம் முடிந்து எல்லோரும் போய்விட்டிருக்க அன்பளிப்பாக வந்திருந்த பரிசுப்பொருள்கள் ஜிகினாத்தாள்களின் மினுமினுப்போடு மேஜை ஒன்றின்மேல் தெரிந்தன.

வரதனும் ஈசி சேரை இழுத்துப் போட்டு சாய்ந்திருந்தான். கடைசிவரை அவனது பாஸ் எனப்படுகிற மேலாளர் வரவேயில்லை. அந்த உறவுக்கார மாமாவும் வந்திருக்கவில்லை. இன்னும் சிலர்கூட தாங்கள் வந்திருக்காமல் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தனர். அவர்கள் வராத வருத்தம் வரதனின் மனதில் ஓர் அழுத்தக் காற்றாய்ச் சுழலத் தொடங்கியிருந்தது.

எப்போதுமே வந்தது பெரிதாய்த் தெரியாது; வராததே பெரிதாய்த் தெரியும். மனதும் அதைச் சுற்றியே வட்டமிடும். வரதன் மட்டும் விதிவிலக்கா என்ன? அவனும் அந்த நினைப்பில் கசப்பிலாழ்ந்த போது ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம். நிமிர்ந்து பார்த்தான். கையில் பெரிய ஒரு ஜிகினா பேப்பரில் கட்டப்பட்ட பார்சலுடன் பாபு ராமுவும் அவன் மனைவியும்!

அவனுக்கு ஒரே ஆச்சரியம். எழுந்து வரவேற்கத் தொடங்கினான்.

``அடடே பாபுவா... வா... வா... சாரி, வாங்க வாங்க...’’

``என்னண்ணே புதுசா மரியாதையெல்லாம்... உள்ள வரலாமாண்ணே..?’’

``ஐயய்யோ, வாங்க பாபு. நான் உங்களைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல...’’

``என்னண்ணே வான்னு கூப்பிட்டது நீங்க தானே! இப்ப எதிர்பார்க்கலைன்னா எப்படிண்ணே?’’

``நான் எங்க பாபு முறையா கூப்பிட்டேன். பேச்சுக்குத்தானே கூப்பிட்டேன்... முறையா கூப்பிட்டவங்கள்ல பலரே வராதப்ப நீங்க வந்தது எனக்கு ஆச்சரியமாதானே இருக்கும்?’’

``எப்படிக் கூப்பிட்டா என்னண்ணே, நம்பள ஒருத்தர் மதிச்சிட்டா பதிலுக்கு நாமளும் மதிக்கணும்ல. அவர் எப்படி மதிச்சாருன்னு கணக்கெல்லாமா போட்டுப் பாப்பாங்க?’’

பாபுராம், கட்டிய வீட்டைப் பாத்துக் கொண்டே பேசினான். வீட்டையும் சுற்றிக் காட்டிவிட்டு நாற்காலிகளின் அருகே சென்று ``உட்காருங்க பாபு முதல்ல... நான் ஒரு மடையன், நிற்கவெச்சே பேசிக்கிட்டிருக்கேன்’’ என்று அவரையும் அவர் மனைவியையும் அமர வைத்தான். தயங்கித் தயங்கித்தான் அமர்ந்தான் பாபுராம். அவன் மனைவி நுனி சீட்டில்தான் அமர்ந்தாள்.

``நல்லா உட்காருங்க...’’

``இருக்கட்டும்... இருக்கட்டும்...’’

அதுவரை அமைதியாக இருந்த வரதனின் மனைவி மங்கலமும் தயங்கித் தயங்கி உள்ளே போய் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவர்கள் குடிக்கத் தந்தாள்.

``இருக்கட்டும்மா... இருக்கட்டும்... இப்ப வந்தாதான் அண்ணன்கிட்ட கொஞ்சம் பேச முடியும். அதான் கடையை மூடிட்டு இவளையும் கூட்டிகிட்டு வந்தேன். இந்தாங்க இது இந்த ஏழையோட எளிய அன்பளிப்பு’’ என்று பார்சலை நீட்டினான்.

``என்ன பாபு இதெல்லாம்?’’

``பிரிச்சுப் பாருங்க ரொம்ப சந்தோஷமாயிடுவீங்க.’’

வரதனும் பிரித்துப் பார்க்கலானான். உள்ளே அவனது குலதெய்வமான கனகதுர்க்கா அம்மன் படம்.

``ஓ... எங்க குலதெய்வம் இதுதான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’’

``என்னண்ணே நீங்க நம்ம கடைக்கு முடிவெட்டிக்க வந்தப்ப எப்பவோ நீங்க சொல்லியிருந்தீங்க. அது அப்படியே ஞாபகத்துல இருந்துச்சு...’’

பதிலுக்கு வரதன் பாபுராமை பிரமிப்போடு பார்க்கலானான். கண்களில்கூட பனிப்பு.

``நல்லது, அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன். போய் கடையைத் திறக்கணும்’’ என்ற பாபுராமை சற்று அதிர்வோடு பார்த்தவன், அப்படியே திரும்பி மனைவி மங்கலத்தை சற்றுத் தள்ளி அழைத்துச் சென்று ``சாப்ட்டுப் போகச் சொல்வோமா... ரெண்டு பேருக்கு இருக்கும் தானே?’’ என்று கேட்கவும், அவள் ஒரு மாதிரி பார்த்தாள்.

``என்ன பாக்கறே... இருக்கா இல்லையா?’’

``இருக்குங்க... ஆனா அதை நான் என் மாமாவுக்கும் உங்க பாஸ் வந்தார்னா அவருக்கும்னுதான் எடுத்து வச்சிருக்கேன்.’’

``அவங்க வர்றதா இருந்தா காலையிலேயே வந்திருப்பாங்க. இனியா வரப்போறாங்க? அப்படி வந்தால் பார்த்துக்கலாம்... பாபுவை நான் சும்மா பேச்சுக்குக் கூப்பிட்டேன். ஆனா நம்ம குலதெய்வத்தையே கொண்டு வந்துட்டாப்புடி. இவங்களை சும்மா மட்டும் அனுப்பவே கூடாது.’’

``சரி... அப்புறம் உங்க இஷ்டம்...’’ மங்கலம் அரைமனதாகச் சொன்னாள். அதன்பின் பாபுராமையும் அவன் மனைவியையும் வற்புறுத்தி அமரவைத்து தானே பரிமாறி சாப்பிடச் செய்தான் வரதன். பாபு இலையில் ஒரு பருக்கையை மீதம் வைக்கவில்லை.

``சாப்பாட்டை மட்டும் எறியக் கூடாதுன்னு சொல்வாங்க என் அம்மா. அப்படி மிச்சம் வெச்ச அந்தச் சாப்பாட்டுப் பருக்கைங்க ஆத்தோரம் தேடிப்போய் ஆத்தைப் பாத்து அழுமாம்...’’ என்று அப்போதும் ஓர் அழகிய காரணத்தைச் சொன்னான்.

இறுதியாக இருவரும் புறப்படவும், ஓடிப்போய் பதில் மரியாதை நிமித்தம் வாங்கி வைத்திருந்த கிஃப்டைக் கொடுத்தான்.

``எதுக்குண்ணே இதெல்லாம்?’’ என்று நெளிந்தபடியே அரை மனதாய் வாங்கிக் கொண்டு புறப்பட்டுப் போனார்கள் பாபுராம் தம்பதியினர்.

மங்கலம் வரதனைக் கூர்ந்து பார்த்தபடியே வந்து என்னங்க நீங்க... அது உங்க பாஸ் வந்தா வர்றதுக்காக வாங்கின காஸ்ட்லி கிஃப்டுங்க என்றாள்.

``அந்தாள் பேச்சை விடு. எனக்கு இப்பதான் மங்கலம் மனசு சந்தோஷமா இருக்கு. மதிக்க வேண்டியதை மதிக்கணும்மா மங்கலம். அது தெரியாமலேயே வளர்ந்துட்டோம். அதான் கண்டவன் கிட்டல்லாம் மிதிப்பட வேண்டியிருக்கு. மதிப்பு சத்தியமா தொழில வெச்சு இல்லை மங்கலம்’’ வரதன் படப்படத்தான். ஆனால் மங்கலத்துக்கு அவன் பேசுவது புரியவேயில்லை. அவளுக்கு மட்டுமா?!