Published:Updated:

``எதற்கு இந்தத் தேவையில்லாத ஆணிகள்?'' - உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு நினைவலைகள்

கவிஞர் சுரதா

எதனைப் பற்றியும் அஞ்சாமல் தடாலடிக் கருத்துகளைக் கூறுபவர் சுரதா. அவற்றில் உண்மையும் இருந்ததால் மறுப்பதும் கடினம். “புதுக்கவிதைக்கு வடிவம் இல்லையே, வடிவம் இல்லாதது எப்படி நிலைக்கும்?” என்றார்.

``எதற்கு இந்தத் தேவையில்லாத ஆணிகள்?'' - உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு நினைவலைகள்

எதனைப் பற்றியும் அஞ்சாமல் தடாலடிக் கருத்துகளைக் கூறுபவர் சுரதா. அவற்றில் உண்மையும் இருந்ததால் மறுப்பதும் கடினம். “புதுக்கவிதைக்கு வடிவம் இல்லையே, வடிவம் இல்லாதது எப்படி நிலைக்கும்?” என்றார்.

Published:Updated:
கவிஞர் சுரதா
”தேவையான ஆணி எது? தேவையில்லாத ஆணி எது?" என்னும் கேள்வியின் வழியே “ஆணியே புடுங்க வேண்டாம்” என்ற பேச்சுத் தொடர் வடிவேலினால் புகழ்பெற்றது. அவர் கூறுவதற்கும் முன்பாகவே ’தேவையில்லாத ஆணியைப் பிடுங்கியவர்’ பாரதிதாசன் வழிவந்த கவிஞர் என்றால் வியப்பாக இருக்குமில்லையா? ஆம். ஓர் அஞ்சலட்டையின் இறுதியில் சுப்புரத்தினதாசன் என்று தம் பெயரை எழுதுவதற்கு இடம் போதவில்லை. அதனைச் சுருக்கி சு.ர.தா. என்று எழுதினார். காலப்போக்கில் அவ்வாறே தம் பெயரை எழுதத் தொடங்கினார். பெயரெழுத்துகளுக்கு நடுவில் “எதற்கு இந்தத் தேவையில்லாத ஆணிகள்?” என்று கருதியவர் அவற்றைப் பிடுங்கிவிட்டார். ஆணி பிடுங்கப்பட்ட அப்பெயரே ‘சுரதா’ என்று நிலைத்தது.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை பாரதியாரால் மறுமலர்ச்சி பெற்றது. பாரதியார்பால் கொண்ட பற்றின் காரணமாகவே புதுவைக்காரரான சுப்புரத்தினம் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். தாசன் என்பதற்கு அடியவர், தொண்டர் என்று பொருள். தாசன் என்று முடியுமாறு புனைபெயர் வைத்துக்கொள்வது அன்றைய போக்காக இருந்தது. அதனால்தான் முத்தையா என்பவர் கண்ணதாசன் ஆனார். கம்பதாசன், வாணிதாசன் என மேலும் சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்கும் ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ” என்பவை பாரதிதாசனின் புகழ்பெற்ற வரிகள். நாகப்பட்டினத்தை அடுத்த பழையனூரில் 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாளில் பிறந்த இராசகோபாலன் அவ்வரிகளைக் கேட்கிறார். அந்நொடியில் இளைஞர் இராசகோபாலன் அதனை இயற்றிய பாரதிதாசன்மேல் பற்றுக்கொண்டு ‘சுப்புரத்தினதாசன்’ ஆனார். பாரதிதாசனின் இருப்பிடம் தமிழ், கவிதை, இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுடைய இளைஞர்களின் வேடந்தாங்கலாக விளங்கியது. புதிது புதிதாக இளைஞர்கள் வருவதும் தங்குவதும் போவதுமாக இருப்பார்கள். சுப்புரத்தினதாசனாகிய இராசகோபாலனும் பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துகொண்டார். இருபது ரூபாய் திங்களூதியம் பெற்றுக்கொண்டு பாவேந்தரிடம் இரண்டாண்டுகள் பணியாற்றினார். படியெடுக்கும் பணியில் இருந்தமையால் கவிஞரின் கவிதையாக்க முறைகள், உத்திகள் கைவருகின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிறகு பி.யு. சின்னப்பா நடித்த ‘மங்கையர்க்கரசி’ என்ற படத்திற்குக் கதை வசனம் எழுதும் வாய்ப்பு வருகிறது. மங்கையர்க்கரசி, அமரகவி, ஜெனோவா ஆகியவை சுரதா பங்காற்றிய திரைப்படங்கள். தியாகராஜ பாகவதர் பிற்காலத்தில் எடுக்க முயன்ற ‘புதுவாழ்வு’ என்ற திரைப்படத்திற்கும் சுரதாவே எழுதினார். பத்துப் படங்கள்வரைக்கும் கதை வசனம் எழுதியிருப்பினும் அவற்றில் மேற்சொன்னவை உள்ளிட்ட சில படங்களே வெளிவந்தன. சின்னப்பாவிற்கும் பாகவதருக்கும் என்ன வேறுபாடு என்பதற்குச் சுரதா தரும் பதில் சுவையானது. “ஒரு ரூபாய் கிடைத்தால் பாகவதர் ஓர் ஆப்பிள் வாங்கிச் சாப்பிடுவார். சின்னப்பா ஒரு ரூபாய் மொத்தத்திற்கும் பூவன் பழங்கள் வாங்கிச் சாப்பிடுவார்.”

சுரதாவின் முதலாவது கவிதைத் தொகுப்பிற்குச் ‘சாவின் முத்தம்’ என்று பெயரிட்டார். முதல் தொகுப்பிற்கே இப்படிப் பெயர் வைக்கலாமா என்று நண்பர்கள் வினவியுள்ளனர். இளமையிலேயே பகுத்தறிவுக் கொள்கைப் பற்றாளர் என்பதால் அது குறித்து அஞ்சியதேயில்லை. “கவிதை என்பது வரப்பிரசாதமில்லை. கற்றுக்கொண்டு உழைத்தால் வருவது” என்பதில் உறுதியான கருத்துடையவர். தம்மை ’மொழிப்பற்றாளர்’ என்று கூறுவதையும் அவர் ஏற்கவில்லை. “இது மொழிப்பொறுப்பு. பற்று வைத்தல் இன்னொன்றைச் சிறப்பாகக் கண்டவுடன் மாறிவிடக்கூடியது” என்றார்.

தமிழ்
தமிழ்

"நீங்கள் எப்படிக் கவிதை எழுதுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு “எதனையும் மாறுபட்ட பார்வையோடு நீண்ட நெடுங்காலம் நிலைத்து நிற்பனவற்றைக் கூறுவதற்கு என்னிடம் நிறையவே உள்ளன என்பதால் எழுதுகிறேன்” என்றார். “ஒரு முயலைப் பார்த்ததும் தும்பைப் பூப்போன்ற முயல் என்பார்கள். பஞ்சுடல் பசுங்கண் பாய்முயல் என்பார்கள். நான் ஒதுங்கி வேறுமுறையில் சலவை முயல் என்பேன்” என்கிறார். இதுதான் அவருடைய மாறுபட்ட பார்வை. இந்தத் திறமையால்தான் சுரதா புதுப்புது உவமைகளைப் படைத்தார். ”பெருந்தீ மீதிலே ஈ மொய்ப்பதுண்டோ?” என்பது பழைமையான சொல்முறை. அதனை அடியொற்றி அப்படியே மாற்றி “நீலவான் மீதிலே நிழல்படுவதுண்டோ?” என்று எழுதினார். அவ்வரியைக் கேட்டவுடன் ‘அமரகவி’ திரைப்பட முதலாளி ஈப்பன் என்பவர் ஐந்நூறு அன்பளிப்பாகத் தந்தாராம்.

மெய்ச்சிலிர்ப்பு ஏற்படுத்துகின்ற உவமைகளால் ‘உவமைக் கவிஞர்’ என்றழைக்கப்பட்டார். நாணத்தால் தலைசாயும் பெண்ணைப் “பிழிந்ததொரு புடவையைப்போல் குனிந்துகொண்டாள்” என்பார். நடிகைகளைப் பற்றி அவர் எழுதியவை ‘சுவரும் சுண்ணாம்பும்’ என்ற தொகுப்பாய் வந்தன. “தீக்குச்சு மருந்துபோல் தேகம் கறுத்துள்ள” என்பது வாணிஸ்ரீயைப் பற்றிய வரி.

எதனைப் பற்றியும் அஞ்சாமல் தடாலடிக் கருத்துகளைக் கூறுபவர் சுரதா. அவற்றில் உண்மையும் இருந்ததால் மறுப்பதும் கடினம். “புதுக்கவிதைக்கு வடிவம் இல்லையே, வடிவம் இல்லாதது எப்படி நிலைக்கும்?” என்றார். “மரபு வடிவம் இல்லாமல் இருப்பதால் இப்போதைக்குப் புதிதாகத் தெரிகிறது” என்பது அவரது கணிப்பு. அது உண்மையும்கூட. தற்போது தம் புதுமையை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்ற இக்கட்டில் புதுக்கவிதையுலகம் இருக்கிறது.

“தேசியப் பாடல்களும் தியாக வாழ்வும் பாரதியாருக்குப் புகழ் வெளிச்சம் தந்தன. அவர் இறக்காமல் தொடர்ந்து எழுதியிருப்பாரேயானால் அந்தப் புகழ் மங்கியிருக்கும். பாரதிதாசனுக்குச் சமுதாய இயக்கங்களால் புகழ் கிடைத்தது. கண்ணதாசனுக்குத் திரைத்துறை உதவுகிறது. கவிதையில் எளிமை என்பது பத்தாம் நூற்றாண்டிலிருந்தும் பட்டினத்தாரிடமிருந்தும் தொடங்குகிறது” போன்ற கருத்துகள் இலக்கியப் பரப்பில் சலசலப்பை ஏற்படுத்தின.

பாரதியார்
பாரதியார்
“கவிதை எழுதுவது எளிய செயலில்லை. அதற்கு ஆழ்ந்த படிப்பும் கடின உழைப்பும் வேண்டும். கவிதை எழுதுவதற்குப் பதிலாக ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை கொடுத்தால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.”
சுரதா

“உடுமலை நாராயண கவிக்குப் பதினெட்டாயிரம் பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும். கவிதை எழுதுவோர்க்கு நாற்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் பாடல்கள்வரை மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்” என்பது கவிதை எழுத வருவோர்க்குச் சுரதா காட்டும் வழிமுறை.

சுரதா எழுதிய திரைப்பாடல்கள் எண்ணிக்கையில் முப்பது. எம்ஜிஆரின் 'என் 'தங்கை திரைப்படத்திற்கு எழுதிய “ஆடும் ஊஞ்சலைப் போலவே அலை ஆடுதே” என்பதுதான் சுரதாவின் முதற்பாட்டு. முதல் பாடலின் முதல்வரியே உவமைதான். “அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு, ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே, ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா, கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே” போன்ற பாடல்கள் சுரதாவினுடையவை.

சுரதா
சுரதா

“ஒரு திரைப்படத்திற்குப் பல கவிஞர்கள் பாடல் எழுத வேண்டும். ஒரே பாடலைக்கூட இரண்டு மூன்று கவிஞர்கள் சேர்ந்து எழுதலாம். தமிழ் மரபிலேயே அதற்கு எடுத்துக்காட்டு உண்டு. இரட்டைப் புலவர்கள் என்பவர் இருந்தனர். ஒருவர் முதலிரண்டு அடிகளைப் பாட மற்றவர் இறுதி இரண்டு அடிகளால் முடித்து வைப்பார். திரைப்பாடலில் ஒருவர்க்குப் பல்லவி நன்றாக வரும், இன்னொருவர்க்குச் சரணம் நன்றாக வரும். அவர்கள் இருவரும் சேர்ந்து எழுதினால் என்ன தவறு? மக்களுக்குச் சிறந்தது சென்று சேர்வதுதான் நோக்கமாக இருக்க வேண்டும்.” என்று அதிரடியாகக் கூறியவர் சுரதா.

தம் வாழ்நாள் முழுவதும் இலக்கியம், தமிழ், கவிதை சார்ந்து ஓயாது ஊக்கமுடன் இயங்கிக்கொண்டிருந்தவர் சுரதா. எழுதுபவர்களைவிடவும் பதிப்பிப்பவர்களும் இதழ் நடத்துபவர்களும் தமிழுக்குச் சிறந்த தொண்டு செய்கிறார்கள் என்று கருதினார். ”காவியம், இலக்கியம், ஊர்வலம், விண்மீன், சுரதா” ஆகிய பெயர்களில் இதழ்களை வெளிக்கொணர்ந்தார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். சுரதாவின் கவிதைகளில் மூன்றாம்பால் கூறுகள் தூக்கலாக இருக்கும்.

சுரதா
சுரதா

புதிது புதிதாய் எதனையேனும் செய்வது அவருடைய வழக்கம். வீட்டுக்கு வீடு கவியரங்கம் என்று ஒருவகையை அறிமுகப்படுத்தினார். அவர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிதை படித்திருக்கின்றனர். கப்பல் கவியரங்கம், படகுக் கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், விமானக் கவியரங்கம் என்று பலவாறு முயன்றவர். 'கவிஞர் காலண்டர்' ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில்கூட இருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

“எனக்குப் பொடிபோடும் பழக்கத்தைத் தவிர வேறெந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. அதனால் நான் நோயினால் சாகமாட்டேன்.” என்று உறுதியாக நம்பினார். அவர் நம்பியதற்கொப்பவே நீண்ட வாழ்க்கையை வாழ்ந்தார். தமிழ்நாட்டரசு கவிதைக்கென்று வழங்கத் தொடங்கிய பாரதிதாசன் விருதினை முதலாமவராகப் பெற்றவர் சுரதா. எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து சூன் 20ஆம் நாள் 2006ஆம் ஆண்டு மறைவுற்றார்.