Published:Updated:

’’அஸ்வகோஷ்கிட்ட ஒண்ணு கேட்டேன்; ஆறு ஆட்டோகிராஃப் போட்டார்..!’’ - ஆவணப்பட இயக்குநர் வம்சி

பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது எழுத்தாளர் பிரபஞ்சனின் `கருணையினால்தான்' சிறுகதையை `வலி' என்னும் குறும்படமாக எடுத்தவர். கேரளப் பெருவெள்ளத்தின்போது வயநாட்டுக்குச் சென்று இவர் எடுத்த புகைப்படங்கள், துயர்மிகுந்த காட்சிகளை நம்முன் நிறுத்தின

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். சின்ன வயதிலிருந்தே பெயின்டிங்கிலும், ஆறாம் வகுப்பிலிருந்து போட்டோகிராபியிலும் ஆர்வம் கொண்டவர். பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது எழுத்தாளர் பிரபஞ்சனின் `கருணையினால்தான்' சிறுகதையை `வலி' என்னும் குறும்படமாக எடுத்தவர். கேரளப் பெருவெள்ளத்தின்போது வயநாட்டுக்குச் சென்று இவர் எடுத்த புகைப்படங்கள், துயர்மிகுந்த காட்சிகளை நம்முன் நிறுத்தின. மேற்குவங்க மரபிசையான `Baul' பாடல்களைப் பாடும் பாடகர் சாந்தி பிரியாவை ஆவணப்படுத்தியிருக்கிறார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்துவந்த `அஸ்வகோஷ்' ஆவணப்படம் கடந்த சனிக்கிழமை அன்று பிரசாத் லேபில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இதுகுறித்து உரையாட கிறிஸ்துவக் கல்லூரியின் மாணவர் விடுதிக்குச் சென்றேன். வானுயர்ந்த மரங்களுக்கிடையே வண்ணத்துப் பூச்சிகள் பறந்ததை ரசித்தபடி உரையாட ஆரம்பித்தோம்.

முதன்முதலில் அஸ்வகோஷ் உங்களுக்கு எப்படி அறிமுகமானார், அவரைப் பற்றி ஆவணப்படம் எடுக்க உந்துதலாக இருந்தது எது?

"பத்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் ஊரில் சிறுகதை பயிற்சிப் பட்டறை நடந்தது. ஒரு வயசான தாத்தா நடக்க முடியாமல் நடந்து வந்து, அவுட் ஆஃப் ஃபோக்கஸில் ஒரு தூணுக்குப் பக்கத்தில் பச்சை நிற ஜிப்பா போட்டபடி அமர்ந்திருந்தார். பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைப்பதற்காக வந்திருப்பதால், பெரிய ஆளாக இருப்பார் என்று தன்னளவில் உணர்ந்துகொண்டேனே தவிர, அப்போதுவரை அவரை யாரென்றே எனக்குத் தெரியாது. பன்னிரண்டாம் வகுப்பு கோடை விடுமுறையில், பத்து ஆண்டுக்கு முன்பே குடும்ப நண்பராக இருந்த உமா கதிர் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். 'அஸ்வகோஷ் என்ற ஒருவரை ஆவணப்படம் எடுத்துத் தரணும்' என்றார். அஸ்வகோஷ் பற்றி எனக்குத் தெரியாததாலும், ஆவணப்படம் எடுக்கும் அளவுக்கு அனுபவம் இல்லை என்றதாலும் மறுத்தேன். ஒருமுறை பிரபஞ்சனை நேர்காணல் செய்யச் சென்றபோது, 'என்னப்பா அஸ்வகோஷ் ஆவணப்படம் எடுக்க நீ ஒத்துக்கலையாமே' என்று கேட்டதோடு, 'அஸ்வகோஷ் மிக முக்கியமான கலைஞர், அவர் இருக்கும்போதே ஆவணப்படுத்தி அதைக் கொண்டாடணும்' என்றும் சொன்னார். அதுதான் எனக்கு உத்வேகமாகவும், உந்துதலாகவும் இருந்தது."

’’அஸ்வகோஷ்கிட்ட ஒண்ணு கேட்டேன்; ஆறு ஆட்டோகிராஃப் போட்டார்..!’’ - ஆவணப்பட இயக்குநர் வம்சி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதற்கட்டப் பணிகளாக என்னென்ன செய்தீர்கள், யாரெல்லாம் உடன் இருந்தனர்?

"எடிட்டர் வெயிலும், நானும் சேர்ந்து, இரு சக்கர வாகனம், ஷேர் ஆட்டோ என எந்த வண்டி கிடைக்கிறதோ அதிலெல்லாம் ஏறி தமிழ்நாடு முழுக்கச் சுத்தியிருக்கிறோம். இப்படிக் கிட்டத்தட்ட ரெண்டு வருடங்களாக அலைந்து திரிந்தோம். ஒவ்வொரு ஊருக்கும் செல்வது, அங்குள்ள உணவுகளைச் சாப்பிடுவது எங்காவது நண்பர்களின் வீட்டில் தங்குவது, அப்படியே நேர்காணல் செய்வது என இனிமையான நினைவுகளைக் கொடுத்தன. அவரைப் பற்றிக் கேட்கக் கேட்க ஒவ்வொரு கிளையாக விரிந்துகொண்டே போனது. பின், அஸ்வகோஷ் என்பது ஒரு பேருந்தாக மனதில் படிந்தது. அப்பேருந்தில், அஸ்வகோஷ் பற்றித் தெரிந்த எல்லா மனிதர்களும் அமர்ந்திருந்தனர். நானும், எடிட்டர் வெயிலும் அதே பேருந்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் அஸ்வகோஷ் பற்றிக் கேட்கக் கேட்க அந்தப் பேருந்து நகர்ந்துகொண்டே இருந்தது."

’’அஸ்வகோஷ்கிட்ட ஒண்ணு கேட்டேன்; ஆறு ஆட்டோகிராஃப் போட்டார்..!’’ - ஆவணப்பட இயக்குநர் வம்சி

இந்த ஆவணப்படம் முழுவதும் `Mid Shot' இடம்பெற்றிருப்பதாகவும் பேசியவர்கள் எல்லோரையும் ஊர்த் தெரு, மக்கள் இல்லாமல் அறைக்குள்ளேயே எடுத்திருப்பதாகவும் விமர்சனம் வந்ததை எப்படிப் பார்க்குறீங்க?

"இது அஸ்வகோஷ் எழுத்துலகம் பற்றிய படம் அல்ல; அவருடைய மொத்த வாழ்க்கை. அவர் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து இப்போது இருக்கும் காலம் வரை உள்ள காலத்தின் ஒரு பகுதிதான் எழுத்து. ஊரின் நிலக்காட்சி இல்லை என்பவர்களை நோக்கி 'ஏன் இருக்கணும், ஏன் Mid Shot மட்டும் வைத்து ஒரு படம் எடுக்கக் கூடாது' என்று கேட்கிறேன். மொத்த ஆவணப்படமும் 50 MM லென்ஸை மட்டும்தான் பயன்படுத்தினோம். கடைசியில் அஸ்வகோஷ் நடந்துபோற காட்சிக்கு மட்டும் வேற ஒரு லென்ஸ் பயன்படுத்தினோம். இதில் இடம்பெற்ற எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் வெளியூரில் இருந்தவர்கள். ஒருவேளை, பின்புலமாக நிலக்காட்சியையோ அல்லது பேசுபவரின் அருகில் சிலை மாதிரி வேறு ஒரு பொருளையோ வைத்து லைட்டிங்கில் அற்புதமாக எடுத்திருக்க முடியும். அப்படி எடுத்திருந்தால், பார்வையாளர்களின் கவனம் பேசுபவரின் மேல் இல்லாமல் உப பொருள்களின் மீது குவிந்துவிடும். ஒரு கதையைத் திரைப்படமாக எடுப்பது, ஆவணப்படமாக எடுப்பது இரண்டுமே வெவ்வேறு வடிவம். இவரின் கதையையோ, நாடகத்தையோ நான் ஆவணப்படுத்தவில்லை. ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மையப்படுத்தி எடுத்திருக்கேன். இந்த இடத்தில் என் கேமரா யுத்திகளைக் காட்டிக்கொண்டிருக்க முடியாது. சீட்டுக்குப் பின்னாடி அமர்ந்துகொண்டு பாப்கார்ன் சாப்பிட்ட படி பார்க்கக் கூடியதல்ல ஆவணப்படம். சீட்டுக்கு முன்னாடி உட்கார்ந்துகொண்டு என்ன பேசுறாங்க என்று கேட்கக்கூடிய படமாகத்தான் இதைப் பார்க்கிறேன். ஆவணப்படம் மட்டும்தான் சுதந்திரமான வெளி. இப்படித்தான் எடுக்கணும், இப்படி எடுக்கக்கூடாது என்ற விதி கலைக்கு இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளாவில் நடைபெறும் சர்வதேச குறும்படம் & ஆவணப்படம் விழாவுக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்கே, ஒருவாரம் முழுவதும் ஆவணப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பார்த்திருக்கிறேன். அப்படிப் பார்த்த படங்களில் பழைய வரைமுறைகள் எதுவும் கிடையாது. பாகிஸ்தான் பிரசிடென்ட் பற்றி செல்போனில் ஆவணப்படம் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அவ்வாறு எடுக்கப்படும் படங்களில் தரம், நுணுக்கம், உள்ளடக்கம் பற்றிப் பேசமுடியுமா. பலபேர் பேசும் ஒருமணி நேரத்தை அமைதியாகப் பார்க்க முடியவில்லை என்றால், பயிற்சி நமக்குத்தான் தேவை என்று தோன்றுகிறது."

’’அஸ்வகோஷ்கிட்ட ஒண்ணு கேட்டேன்; ஆறு ஆட்டோகிராஃப் போட்டார்..!’’ - ஆவணப்பட இயக்குநர் வம்சி

"ஆவணப்படம் பற்றி அஸ்வகோஷ் என்ன சொன்னார், அஸ்வகோஷ் படத்தின் பலம் என்று எதைக் கருதுறீங்க?

'பெரும் வெள்ளத்தில் பழைய பொருளெல்லாம் அடித்துக்கொண்டுபோயிடும். பிறகு, புதுப்பொருள் வர ஆரம்பிக்கும். ஆனால், இந்த ஆவணப்படம் என்னைப் பிடித்து வைத்திருக்கிறது' என்றார். பிறகு, `ஒரு கையொப்பம் போடமுடியுமா' என்றேன். ஆறு கையொப்பம் போட்டுக்கொடுத்தார். கவிஞர் நரனிடம் இந்த நிகழ்வுக்கு வந்து பேசமுடியுமா என்று கேட்டேன். `நீ அஸ்வகோஷ் என்று சொன்னதும்தான், பலஆண்டுகளுக்குப் பின் நினைவில் வருகிறார்' என்றார். இப்படிப் பலபேர் மறந்துபோன ஒருவரின் வாழ்வை மீண்டும் ஆவணப்படுத்திய திருப்தி கிடைச்சிருக்கு. அஸ்வகோஷைப் பற்றி அவரும் சொல்வார், மற்றவர்களும் சொல்வாங்க. இப்படி, ஒரே நேரத்தில் ஆட்டோ-பயோகிராஃபியாவும், பயோகிராஃபியாவும் அமைந்திருக்கிறது."

’’அஸ்வகோஷ்கிட்ட ஒண்ணு கேட்டேன்; ஆறு ஆட்டோகிராஃப் போட்டார்..!’’ - ஆவணப்பட இயக்குநர் வம்சி

பவாசெல்லதுரை, ஷைலஜா மகன் வம்சி என்ற காலம் போய் வம்சியின் அப்பா - அம்மா இவர்கள் என்ற நிலையை அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

திருவண்ணாமலையில் உள்ள வீட்டுக்கு வரலாம், தங்கலாம், சாப்பிடலாம், உரையாடலாம் என்கிற நம்பிக்கை பொதுவெளியில் இருக்கிறது என்றால், அதுக்குக் காரணம் அப்பா மட்டுமல்ல; அம்மா மற்றும் வீட்டில் உள்ள அனைவரும்தான். பள்ளி முடிந்து கல்லூரி ஆரம்பிக்கும் வரை என் பெயருக்கு முன்னால் இனிஷியலே போடல. அது ஏன் என்றே தெரியல. அப்பாவுக்கு அது தெரியாது. ஆனால், அம்மா திட்டுவாங்க. என் அப்பா பெயரை வைத்து அடையாளப்படுவதில் எனக்கு சங்கடம் இருக்கு. அப்படிப் பயன்படுத்தினால், என்னை வேறுமாதிரி பார்ப்பாங்க. பிரபலம் என்கிற ஓர் ஒளிவட்டத்தின் பின் நான் அடையாளப்படுவதில் துளியும் விருப்பமில்லை.

எத்தனையோ பேர் ஒரு வாய்ப்புக்காக அலைக்கழியும் வாழ்க்கை வாழ்வதை நானே நேரில் பார்த்திருக்கேன். நானும் சொந்தத் திறமையால் வளரவே ஆசைப்படுகிறேன். அவர் ஓர் எழுத்தாளராகவும், கதைசொல்லியாகவும் சமூகப் பொறுப்பாளராக, செயல்படுபவராகவுமே அவரை நான் பார்க்கிறேன். நிறைய இடங்களில் இவ்வளவு பரிணாமமிக்க ஒருவரை `அப்பா' என்று எப்படிச் சுருக்குவது என்றும் தோன்ற ஆரம்பிக்கிறது. ஒரு பாசிட்டிவான விலகல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் இருக்கும்போது அவர் அருமை தெரியவில்லை. இப்போது சென்னையிலிருந்து ஒரு மூன்றாவது மனிதனாகப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. இதேபோல் அம்மாவைப் பற்றிச் சொல்லவும் நிறைய இருக்கு."

’’அஸ்வகோஷ்கிட்ட ஒண்ணு கேட்டேன்; ஆறு ஆட்டோகிராஃப் போட்டார்..!’’ - ஆவணப்பட இயக்குநர் வம்சி

அப்பா பெயரைப் பயன்படுத்தக் கூடாது, அப்பாவின் வெளிச்சத்தில் வளரக் கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால், சின்ன வயசிலேயே பல்வேறு திறமைகள் உள்ள ஆளுமைகளைச் சந்திப்பதற்கும், அவர்களிடம் கலந்துரையாடுவதற்குமான சூழல் அவரால்தான் உண்டானது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?

"கண்டிப்பாக முடியாது. அந்தச் சூழல் இல்லையென்றால், நான் ஒன்றுமே இல்லைதான். பத்தொன்பது ஆண்டுகளாக அப்பா என்னென்ன செய்கிறாரோ, அவற்றையெல்லாம் கூட இருந்து பார்த்திருக்கேன், பகிர்ந்திருக்கேன். சொல்லப்போனால், பிரபலங்கள் வீட்டுக்கு வரும்போது பயத்துல நான் பேசவேமாட்டேன். துணை இயக்குநர், வேலைவாய்ப்பு கேட்டு வருபவர்கள் வீட்டுக்கு வந்து மூன்று நாள்கள், மாதக் கணக்கில் தங்கும்போது, அவர்கள் என் அறையில்தான் தங்குவார்கள். அப்படியான காலங்களில் குடும்பத்தோடு உறங்காமல், அவர்களோடு தங்க ஆரம்பித்தேன். அப்போது அவர்கள் படித்த புத்தகங்கள், கேட்ட இசை, பார்த்த சினிமாக்கள் பற்றி உரையாடல் நிகழும். நீ இப்படித்தான் இருக்கணும் என்று எனக்கு ஒருபோதும் அப்பா வகுப்பு எடுத்தவர் கிடையாது. மௌனமாகக் கடந்துபோகிற எத்தனையோ சாப்பாட்டு அறைகளுக்கு முன்பு, வெறுமனே சாப்பாட்டுக்கான இடமாக மட்டுமல்லாமல் இலக்கியத்தை, சினிமாவை, இசையை, நாடகத்தை, பக்தியை, அரசியலை என எல்லாவற்றையும் பரிமாறிய இடமாக எங்கள் வீட்டுச் சமையலறை இருந்தது."

அஸ்வகோஷ் ஆவணப்படம் எடுக்குபோது, அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்தீர்கள். இப்போது அஸ்வகோஷ் என்பவர் என்னவாக உங்கள் மனதில் பதிந்திருக்கிறார்?

"மக்களுக்காக எழுதுகிறேன் எனச் சொல்கிறவர்கள், மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் தெருமுனைக்கு வந்து போராடுவதில்லை. சிலபேர் குரல்கூட கொடுக்கமாட்டேங்கிறாங்க. இந்தக் கூண்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்த ஓர் ஆளுமையாக அஸ்வகோஷ் இருக்கிறார். இதை உணர்த்தும் குறியீடாகத்தான் எல்லாக் காட்சிகளையும் அறைக்குள்ளே வைத்து கடைசிக் காட்சியில் அவர் தெருவில் நடந்துபோவதாக எடுத்துள்ளேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு