Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 10

வருச நாட்டு ஜமீன் கதை - 10
வருச நாட்டு ஜமீன் கதை - 10

மாப்ள நாயக்கரும் ஜமீன்தாரோட நடவடிக்க பிடிக்காம கொஞ்சம் சல்லப்பட்டுத்தான் இருந்தாரு. பளியன் பேச்சக் கேட்டு கிறுக்கு துரை சாமியாராவே போயிருவாரோனு பயம் வந்துருச்சு.

கரு இல்லாத முட்டையில்ல...

குரு இல்லாத வித்தையில்ல!

நம்ம கிறுக்கு துரை பால வயசுல இருந்து உத்தேசமா கத்துக்கிட்ட வில் வித்த, கோதா சண்ட, குதிரயேத்தம், யானையேத்தம் இதையெல்லாந் தாண்டி பளியஞ்சித்தன்கிட்ட கத்துக்க வேண்டியது என்னமோ இருக்குனு நெனச்சாரு.

ஏற்கெனவே, கம்பளத்து நாயக்கருக ஆன்ம பலம், உடல் பலம் உள்ளவங்கதான். வித்தைகள் தெரிஞ்சவங்கதான். ஏவல், பில்லி சூனியம் ஏவுறது, ரத்தம் கக்குறதுனு சொல்லி சனங்கள கட்டுப்படுத்தி அவங்களோட அதிகாரத்துக்குக் கீழ கொண்டு வந்தாங்க.

‘தீயில சுட்ட புல்லு மொளைக்கும், காத்துல விட்ட சொல்லு பலிக்கும். கம்பளத்து நாயக்கன் வாயில விழாதீங்க’னு சொல்லுவாங்க. டாம்பீகமான வாழ்க்கை கெடச்சதும் இந்தப் பெருமைகள மொறப்படி சனங்ககிட்ட கொண்டு போகாம விட்டுட்டாங்க.

ஆனா, பளியஞ்சித்தனுக்கு இந்த வித்தையெல்லாம் எப்பிடி கைவந்துச்சுனு ஜமீன்தாரு ஆச்சரியப்பட்டாரு. தாயாரு சொல்லிக் குடுத்த மகேந்திரஜாலக் கதைகள்ல வர்ற மாதிரி, கூடுவிட்டுக் கூடு பாயுற வித்தையெல்லாம்கூட, பளியஞ்சித்தனுக்குத் தெரியுமானு கேக்கணும். அதுக்கு முந்தி அவக இனத்துக்கு ஏதாச்சும் சகாயஞ் செய்தாகணும்னு நெனச்சாரு.

ஜமீன்தாரு திடீர்னு கார்வார் ரங்கசாமி பிள்ளை, கர்ணம், நாட்டாமை எல்லாரையும் கூப்பிட்டாரு.

“வருச நாட்டு மலையில இருக்கிற பளியர்க, காடர்க, இருளர்க, மண்ணாருக அம்புட்டு பேத்துக்கும் வீடு கட்டிக் குடுக்கணும். அதுக்குத் தோதான சகாயம் பண்ணுங்க”னு உத்தரவு போட்டாரு.

கிறுக்கு துரை இப்பிடியெல்லாம் பளியன பத்தின நெனப்புலயே இருந்ததால வந்துச்சு வென...

மாப்ள நாயக்கரும் ஜமீன்தாரோட நடவடிக்க பிடிக்காம கொஞ்சம் சல்லப்பட்டுத்தான் இருந்தாரு. பளியன் பேச்சக் கேட்டு கிறுக்கு துரை சாமியாராவே போயிருவாரோனு பயம் வந்துருச்சு. லௌகீகம் மறந்து காட்டாத்து வெள்ளத்துல வேலப்பர் கோயில்ல விழுந்தவங்க நெறையப் பேரு கோமணத்தக் கட்டிக்கிட்டுச் சாமியாரா போனதுண்டு. அந்த மண்ணுந் தண்ணியும் அந்த வேலயச் சுளுவாச் செஞ்சு போடும்.

‘ஜமீன்தாரு போக்குல பெரிய மாத்தம் கண்டுபோச்சு’னு அவரு கூடவே சுத்திட்டிருந்த பரிவாரக் கூட்டத்திலயும் ஒரே பேச்சா இருந்துச்சு. கொஞ்ச நாளா சனங்களுக்கு ஈட்டு நெலம் கொடுக்கிறது, பரிசு பட்டம் கொடுக்கிறதுனு எதுவும் செய்யல. ஆத்திரப்பட்டு பரிவாரங்களைச் சேந்தவங்க ஒரு முடிவுக்கு வந்தாங்க.

பிரதானி ராமய்யர்கிட்ட போயி பளியனப் பத்திப் பொல்லாங்கு சொன்னாங்க. “இப்பிடியே நெலம போனா, சனங்ககிட்ட ஜமீன்தாருக்கு மருவாதையிருக்காது. ஜமீன்தாரு கிட்ட எதையாவது சொல்லி, நம்ம பக்கம் தெச திருப்பிக்கொண்டு வாங்க”னு கேட்டுக்கிட்டாங்க. ராமய்யரும் அதாஞ்சரின்னாரு.

ஜமீன்தாரு தனியா இருக்கற சமயமாப் பாத்து ராமய்யர், “ஐயா... இன்னிக்கு ஜம்புலிபுத்தூர் பெருமாள் கோயில்ல தைப்பூசத் திருவிழாக்கு பந்தக்கால் போடுறாங்க. சாயங்காலம் நாட்டியம் இருக்கு. கோயில் தர்ம கர்த்தாவான நீங்க வந்துதான் ஆரம்பிச்சு வெக்கணும்னு கேட்டுக் கிட்டாங்க. நீங்க ஜம்புலிபுத்தூர் போயி கலந்து ரொம்ப நாளாச்சா... அதனால கண்டிப்பா வருவீங்கனு சொல்லிட்டேன்”னு மூடுமந்திரமா சொன்னாரு.

“ஆனா, இன்னிக்கு வேலப்பர் கோயிலுக்குப் போயி பளியஞ்சித்தன பாக்கணும்னு சொன்னேனே..?”

வருச நாட்டு ஜமீன் கதை - 10
வருச நாட்டு ஜமீன் கதை - 10

“ஆமாங்க ஐயா... அதவிட முக்கியம் ஜம்புலிபுத்தூர்தானுங்க... சனங்க கூட்டம் உங்களுக்காகக் காத்துக் கிட்டிருக்கும். அதோட நாட்டியம் ஆடுற ரெண்டு பொண்ணுகளையும் இன்னிக்குத்தான் பொட்டுக் கட்டி கோயிலுக்கு விடுவாங்க. மொத மொதலா உங்க கையாலதான்...”

ஜமீன்தாருக்கு உள்ளுக்குள்ள சபலம் உருக ஆரம்பிச்சுது. “புரியுது... புரியுது... அப்போ இன்னிக்கு ஜம்புலிபுத்தூர் போறோம்.”

ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாளு கோயிலு ஏக ஜொலிப்பா இருந்துச்சு. கோயிலச் சுத்தியும் உள்ளயும் ஏகப்பட்ட பொண்ணுக ஆஞ்சுக்கிட்டிருந்தாங்க. கண்டாமணி வௌக்கு, தூண்டாமணி வௌக்கு சுத்தி எரிய, அந்த வெளிச்சத்துல ரெண்டு பொண்ணுகளும் ஒண்ணு சொன்னாப்பிடி நாட்டியம் ஆடிக்கிட்டிருந்தாங்க.

அவங்களோட எளமையான அங்க அசைவு, அடவு எல்லாமே நம்ம ஜமீன்தார சுண்டியிழுத்து வச்சுருச்சு. சங்கீத லயம்... சிருங்கார நயம்! பொண்ணுகளோட கண் புருவம் ஒசந்து ஒசந்து அடங்கி, ஜமீன்தார எதுக்கோ காத்திருக்கச் சொல்லுச்சு.

ராத்திரி காத்திருந்தாரு. சயன அறையில சுகந்த மணம். ஜமீன்தாரு நெனச்சுக்கூடப் பார்க்கல. ஏக சமயத்துல ரெண்டு பொண்ணுகளும் சயன அறைக்குள்ள வந்தாங்க. பதினாறு வயசுதான் இருக்கும். மொகம் வெக்கத்துல செவந்துபோயி கதவையே பிடிச்சுக்கிட்டு நின்னாங்க.

ஜமீன்தாரு பக்கத்துல போயி பன்னெண்டு பவுனு ரெட்ட வடச் சங்கிலிய கழுத்துல போட்டாரு. ரெண்டு பேத்தையும் ரெண்டு கையால மெல்லமா அணைச்சுப் பிடிச்சாரு. புறாக்களத் தொட்ட மாதிரி ஒரு இதமா... ஒரு பதமா... சுக ஸ்பரிசமா இருந்துச்சு.

அவங்க ரெண்டு பேரு மாராப்பையும் மெல்ல விலக்குறப்ப, பூசாரி கட்டின புதுத் தாலி அவங்க தனங்கள்ல படிஞ்சு பிரகாசமா இருந்துச்சு.

ஜமீன்தாரு கட்டில்ல சாய... சிரிச்ச முகத்தோட ஒரு புறா அவரோட கால அமுக்கிவிட, இன்னொரு புறா மதுவ ஊத்திக் கொடுத்துச்சு. ஜமீன்தாரு மதுவ விலக்கி, அந்தப் பொண்ணோட கன்னத்த ரெண்டு கையால தாங்கி, உதட்டுலருந்து உறிஞ்சினாரு. கொஞ்ச கொஞ்சமா ரெண்டு பொண்ணுகளுமே கண் சொக்கிப் போனாளுக. மூடியிருந்த கண்ணுக்குள்ள, தங்கக் கதவுக தெறந்து வெள்ளிக் காசு சிந்த, சொர்க்கவாசல் தெரிஞ்சது. ஜமீன்தாரு தன்வசம் போயி... மனோரதம் தீர... எப்போ தூங்கினாருனு அவருக்கே தெரியாது.

ஜமீன்தாரு, மதியம் தூங்கி எந்திரிச்சதும்... குளத்து மணியகாரங்க, தோட்டக் காவக்காரன், தலையாரி மூணு பேரும் அரண்மனைக்கு வந்து பவ்யமா நின்னு, “நம்ம பண்ணை நெலத்துல மூணு நாளா ஒரு மாடு வந்து, நல்லா வௌஞ்ச கருத மேஞ்சுட்டுப் போயிருது. மாட்டுத் தடம் பாத்துப் போனாலும் அந்த மாடு கண்ணுக்குச் சிக்கமாட்டேங்குது. எங்கிருந்து வருது... எங்கிட்டுப் போகுதுனே தெரியல. யாரோட மாடுனு ருசுப்படுத்தவும் முடியலீங்க சாமீ..!”னு சொன்னாங்க.

பளியஞ்சித்தன்கிட்ட போயி ஆதியோட அந்தமா அம்புட்டையும் சொன்னாரு ஜமீன்தாரு.

பளியஞ்சித்தன் கொஞ்சநேரம் கண்ண மூடித் தொறந்தான். “சாமீ... அது லேசுப்பட்ட மாடு இல்ல. மீசலாவுளு! சின்னம நாயக்கரோட மாடு. தம்புரான்சாமி மாடு. அந்த மாடு தெக்க போனா, வடக்க போன மாதிரி கால் தடம் தெரியும். கெழக்க போனா, மேக்கால போன மாதிரி தரையில குளம்பு திரும்பிப்பதிஞ்சிருக்கும். அதுக்குக் கால் அமைப்பு அப்பிடி. ஆளுக தல தட்டுப்பட்டா நெலத்துக்குள்ள வந்து மேயாது. சின்னம நாயக்கரத் தவிர வேற யாருக்கும் அந்த மாடு கட்டுப்படாது சாமீ!”னு சொன்னான்.

வருச நாட்டு ஜமீன் கதை - 10
வருச நாட்டு ஜமீன் கதை - 10

(சின்னம நாயக்கரு சூராதி சூரருதான். பெரிய மீசை, அவரு மாடுகளத்தான் ‘மீசலாவுளு’னு சொல்லுவாங்க. முந்தி ஒரு தடவ தனி ஆளா ஒரு கரடிகூட மல்லுக்கட்டி, அதக் கொன்னு தூக்கிட்டுப் போனதுக்கு, பேரையூர் ஜமீன்தாரு அவருக்கு அஞ்சு குழி நெலமும், ஏழு பசுமாடுகளையும் தந்தாருன்னா பாத்துக்கங்க.)

“அவரோட மாடுதான் வந்து பயிர மேஞ்சதுனு எப்பிடி அடையாளங் காணுறது?”னு ஜமீன்தார் கேட்டாரு.

“அதுக்கு ஒரு சூத்திரம் இருக்கு சாமீ! பயிர் மேல மஞ்சப் பொடிய தெளிச்சுப் போட்டு வந்துருங்க. சாயங்காலமா சின்னம நாயக்கரோட தொழுப்பட்டிக்கு போனீங்கன்னா உங்க கண்ணுக்கு ருசுவாயிரும்”னு பளியஞ்சித்தன் சொன்னான்.

பளியஞ்சித்தன் சொன்ன மாதிரியே வேலியோரம், பயிர் மேல மஞ்சப் பொடிய தெளிச்சுப்போட்டு வந்துட்டாங்க. சாயங்காலம் மாடு வந்து கருத மேஞ்சுட்டு ஓடிப்போன அடையாளம் தெரிஞ்சது.

ஜமீன்தாரு நேரா சின்னம நாயக்கரு தொழுப்பட்டிக்கு குதிரையில போனாரு. போற வழியிலயே கைல ஒரு சின்ன கட்டய வெச்சுக்கிட்டு மாடுக கூட்டத்தோட சின்னம நாயக்கரும் போய்க்கிட்டிருந்தத பாத்தாரு.

நம்ம ஜமீன்தாரு கண்ணுக்கு அந்த மஞ்சப் பொடி ஒட்டின மாடு மட்டும் நல்லாத் தெரிஞ்சது.

குதிரையிலிருந்து எறங்கினாரு. எந்த வாதாட்டமும் வச்சுக்கல.

ஜமீன்தார்கூட வந்த சேவகமார்க சின்னம நாயக்கரோட கையையும் காலையும் கட்டி, நெருப்பு மூட்டி அந்த நெருப்புல வாட்டினாங்க.

பெரிய மீசையும் தலைமுடியும் கருகிப் போச்சு. உடம்பெல்லாம் தீப்பொக்கலம். செத்துப் போனார்னு நெனச்சு ஜமீன்தார் குதிரையில ஏறிப் போயிட்டாரு.

கொஞ்ச நேரங்கழிச்சு மெதுவா எந்திரிச்சு... நடந்து... கண்டமனூர் எல்லையத் தாண்டி வயல்பட்டிக்குப் போற பாதையில ‘கல்லுக்குட்டை’ன்ற எடத்துல போய் விழுந்தாரு சின்னம நாயக்கரு. சனங்க சுத்தி நின்னுக்கிட்டு பதறிக்கிட்டிருந்தாங்க.

மல்லதொட்டி குபேந்திர பாண்டியனோட தாத்தா சென்னப்ப நாயக்கர்கிட்ட நடந்தது அம்புட்டையும் விலாவாரியா சொல்லிட்டு சின்னம நாயக்கர் உசுர விட்டாரு.

(அதுக்குப் பெறகு சின்னம நாயக்கரோட தம்புரான்சாமி மாடு தெச தப்பி கம்பம் கவுண்டர் வீட்டுக்குப் போயிருச்சு.

சின்னம நாயக்கரோட பேரன் கம்பத்துக்குப் போயி கவுண்டர் தொழுவுல இருந்த அந்த மாட்டை அடையாளம் கண்டுபிடிச்சாரு.

கவுண்டருக மொதல்ல விட மாட்டேன்னு சொன்னாங்க. “உங்க மாடுன்னா நீங்க கூப்பிட்டா வருமா?”னு கேட்டாங்க.

வருச நாட்டு ஜமீன் கதை - 9

பேரன் ஒரு கம்பிளிய போத்திக் கிட்டு புல்லாங்குழல் எடுத்து ஊதி மாடுகள கூப்பிட்டாரு. தம்புரான்சாமி மாடுக வர்க்கம் அம்புட்டும் தனியா பிரிஞ்சு வெளிய ஓடி வந்துச்சு.

இப்பவும் சின்னம நாயக்கரோட சமாதி இருக்கிற எடத்துலதான் அந்தத் தம்புரான் சாமி மாடுகளுக்கு தொழுபட்டி கட்டியிருக்காங்க.)

அத்தோட முடிஞ்சுதா...

‘சின்னம நாயக்கர் செத்ததுக்கு பளியன்தான் காரணம்’னு ஊர் சனங்க கொதிச்சுப் போயி திரண்டு வந்தாங்க..!

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு