Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 11

வருச நாட்டு ஜமீன் கதை - 11
News
வருச நாட்டு ஜமீன் கதை - 11

ராணி மங்கம்மாவுக்குப் பிறகு மீனாட்சிதான் ரொம்ப அழகா இருந்தா. அதே நேரத்துல பேராசைக்காரினு சொல்லுவாங்க.

மாறுகை மாறுகால் வாங்குறதுனு சொல்வாங்களே, அது மாதிரி உறுப்புக் குறைப்பு, மரண தண்டனை இதையெல்லாஞ் செய்யறதுக்கு பாளையக்காரங்க, முந்தி நாயக்க மன்னருகிட்ட உத்தரவு வாங்கியாகணும். அதுக்குப் பெறகு வந்த ஜமீன்தாருக, கலெக்டருகிட்ட உத்தரவு வாங்கணும்.

நம்ம பெரிய ஜமீன்தாரு மட்டுமில்ல, நெறைய ஜமீன்தாருக இந்த உத்தரவ ஒரு பொருட்டா நெனைக்கல. அவங்க இஷ்டத்துக்கு தண்டனைய நிறைவேத்தினாங்க. ஏன்னா... அம்புட்டு அதிகாரமும் ஜமீன்தாருக்குத்தான் இருக்குனு சனங்க நெனச்சதாலதான். அதுவுந் தவிர, சனங்கள ‘இடங்கை, வலங்கை’னு பலவகப்பட்ட சாதியா பிரிச்சு வச்சு அவங்களுக்குள்ள ஒத்துமையில்லாம இருக்கறதும் ஒரு காரணந்தான்.

மீசலாவுளு சின்னம நாயக்கர தீயில வாட்டின ஜமீன்தாரு ராமகிருஷ்ண நாயக்கரு, நேரா பளியஞ்சித்தன்கிட்ட வந்து அம்புட்டு விஷயத்தையும் சொன்னாரு.

``சாமீ... தப்புப் பண்ணிட்டீங்களே சாமீ! எது நடக்கக்கூடாதுனு நெனச்சனோ அதச் செஞ்சு போட்டீங்களே. பசு மாட்டுக்கு உசுரு போகவேண்டியது. ஆனா, மனுசன காவு வாங்கிருச்சே”னு பளியஞ்சித்தன் தலையில கை வச்சு உக்காந்தான்.

``என்னோட நெலத்துல கொஞ்சங் கூட பயமில்லாம...”

``பொறும... பொறும. ஆத்திரந்தான் கண்ண மறைக்குது. இப்போ ஆபத்து உங்களுக்கில்ல. என் குடும்பத்துக்குத்தான். சடுதியா நான் வேற எடத்துக்கு எடம் மாறணும் சாமீ!”

``என்ன செய்யணும்?” - குழப்பத்தோட கேட்டாரு ஜமீன்தாரு.

``நானும் என் சம்சாரமும் வருச நாடு மலை உச்சிக்குப் போயாகணும். எங்கூடத் தொணக்கி ரெண்டு பேத்த மட்டும் அனுப்பிவைங்க. நான் போய்ச் சேந்த பெறகு நான் இருக்கற எடத்தச் சொல்லியனுப்பறேன்”னு சொன்ன பளியஞ்சித்தன், சம்சாரம் மீனாட்சிய அவசர அவசரமா பொறப்படச் சொன்னான். வேலப்பர் மலையைவிட்டு அவங்க குழப்பத்தோட வெளியேறிப் போனாங்க.

ஜமீன்தாரு அனுப்பிவச்ச ரெண்டு ஆளுகளும் வில்லு, வேல் கம்பு, வெட்டருவா எடுத்துக்கிட்டு தொணக்கிப் பொறப்பட்டாங்க. பளியஞ்சித்தனும் மீனாட்சியும் காட்டுக்குள்ள நொழையும்போது மேகம் இருண்டுக்கிட்டே வந்துச்சு. நடந்து போற வழியில கரும்பாறை இடுக்குல விஷ ஜந்துக ஊந்து போறத சர்வசாதாரணமா பாத்தாங்க. யானைக கூட்டங் கூட்டமா மேஞ்சுக்கிட்டிருக்கற எடத்த ஒதுங்கிக் கடந்து மல மேல ஏறினாங்க. சின்னச் சின்ன ஓடையில `சலசல’னு தண்ணி எறங்கி வர, தாகத்துக்கு தண்ணிய அள்ளிக் குடிச்சாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வருச நாடு மலை உச்சி இன்னமும் நாலு கல்லு தொலைவு இருக்கும். திடீர்னு கால் எடறி மீனாட்சி கீழ சாய... சடுதியா திரும்பின பளியஞ்சித்தன் மீனாட்சியோட கையப் பிடிச்சான். அவளோட கையத் தொட்ட எடத்துல ஒரு உசுரு ஊடுருவின மாதிரி உஷ்ணம் ஏறி, அவனோட விரல்ல ஏத்த எறக்கமா ஒரு மாத்தம் தெரிஞ்சது.

அவளோட கைய நாடி பிடிச்சுப் பாத்தான் பளியஞ்சித்தன். அவன் முகத்துல ஒரு பிரகாசம் தெரிஞ்சுது. ஆமா..! மீனாட்சி வயித்துல ஒரு கரு உண்டாகியிருக்கு. அடுத்து வந்த மின்னல் வெட்டுல மழை கொட்ட ஆரம்பிச்சது.

இனி மேற்கொண்டு நடக்க வேண்டியதில்ல... இங்கனயே குடிசை போடவேண்டியதுதான்னு பளியஞ்சித்தன் முடிவெடுத்தான். கூட வந்த ரெண்டு பேர்கிட்ட இதச் சொன்னதும், `மடமட’னு குலை தழைய வெட்டிக் குடிசை போட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த எடந்தான் `ஓயாமாரி.’

மருத மரத்துக்கு அடியிலேயே உக்காந்து மீனாட்சிய மடியில படுக்க வச்சுக்கிட்டான். மீனாட்சி கண்ண மூடிக்கிட்டே பளியஞ்சித்தன் கிட்ட கேக்க நெனைச்சதக் கேட்டுட்டா.

வருச நாட்டு ஜமீன் கதை - 11
வருச நாட்டு ஜமீன் கதை - 11

``சாமீ... ஜமீன்தாருகிட்ட நெசத்தச் சொல்லிப்போடுங்க. நாம எத்தினி நாளைக்கித்தான் சிரமப்படணும்..?”

``விதி வலியது மீனாட்சி... வலியதுதான் ஜெயிக்கும். கொஞ்ச நாளு பொறுமையா இரு. ஜமீன்தாரு மனச மாத்த முடியுதான்னு பாக்கலாம். பட்டத்தக்கட்டி நாடாள வேண்டிய ராமரும் சீதாப் பிராட்டியும் காட்டுல போயி பதினாலு வருஷம் சிரமப்பட்டாங்களே... நீ சாதாரணப் பொண்ணு இல்ல மீனாட்சி. மதுரைய ஆட்சி செஞ்ச கடைசி நாயக்கர் அரசி மீனாட்சியோட மறு பிறவி. அந்த மீனாட்சி மாதிரி நீயும் கஷ்டத்த அனுபவிக்கணும்னு விதி இருக்கு!”னு சொன்ன பளியஞ்சித்தன், மீனாட்சி கண்ணுல செல்லமா முத்தம் வச்சான்.

பின்னாடி வரப்போறதைப் புரிஞ்சிக்க உதவியா இங்க ஒரு பழங்கதை... மதுரைய ஆட்சி செஞ்ச மன்னர் விசயரங்க சொக்கநாதன் தனக்கு வாரிசு இல்லனு தெரிஞ்சதும் கஜானாவுல இருந்த பணத்த அள்ளிக் கோயில், குளம்னு கொட்டித் தீர்த்தாரு. அவ்வளவு பக்திப் பழமா இருந்து என்ன செய்ய..? ராச்சியத்தக் கவனிக்காம விட்டுட்டாரு. சனங்க பஞ்சம், பசினு அலையற நேரத்துல மன்னரு செத்துட்டாரு. அவரு செத்ததும் துக்கம் தாளாத மத்த பொண்டாட்டிக உடன்கட்ட ஏறி கூடவே செத்துப்போயிட்டாங்க. அவரோட ரெண்டாவது பொண்டாட்டி மட்டும் உடன்கட்ட ஏறாம ராச்சியத்தக் கைப்பத்தி செங்கோல ஏந்திக்கிட்டா. அந்த மகாராணிதான் மீனாட்சி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராணி மங்கம்மாவுக்குப் பிறகு மீனாட்சிதான் ரொம்ப அழகா இருந்தா. அதே நேரத்துல பேராசைக்காரினு சொல்லுவாங்க.

ஆற்காடு நவாபு தோஸ்து அலியோட மருமகன் சந்தா சாகிபு, மதுரையச் சுத்தி வளச்சுப் பிடிச்சுப் போடணும்னு திட்டம் போட்டு திருச்சிக்கு வந்து சேர்ந்தாரு. அவனோட சூழ்ச்சி தெரிஞ்ச மீனாட்சி, சந்தா சாகிபுகிட்ட போயி அவள் சேத்து வச்சிருந்த மிச்ச சொச்சம் பணம், நகை நட்டு அம்புட்டையும் துப்பரவா தொடச்சிக் கொடுத்துட்டு, `நானே ராணியா இருந்துக்கிறேன்’னு கெஞ்சினா.

`உன்னோட படைகள என் பொறுப்புல விட்டுறு. உன்னைக் காப்பாத்த நானாச்சு’னு குரான் புஸ்தகத்து மேல சத்தியம் பண்ணிக் குடுத்தான் சந்தா சாகிபு.

சண்டை போடாமலேயே மதுரை ராச்சியப் பொறுப்பு சந்தா சாகிபு கைல வந்துச்சு. அம்புட்டுதான். மீனாட்சிய தூக்கி சிறைல வெச்சுட்டான்.

சந்தா சாகிபு சத்தியஞ் செஞ்சது குரான் புஸ்தகமில்ல. செங்கல் மேல செவப்புத் துணியை மூடி பொய்ச் சத்தியம் செஞ்சாருன்னு பெறகுதான் தெரிஞ்சது.

பாவம்... தன்னைப் பாதுகாத்துக்கத் தெரியாத மீனாட்சி, கடைசில நொந்து போயி நஞ்சு குடிச்சு செத்துப் போனானு கதை சொல்லுவாங்க.

நாலு வருஷம் ஆட்சி செஞ்ச கடைசி நாயக்கர் அரசி மீனாட்சியோட முடிவு பரிதாபந்தான்.

நம்ம ஜமீன்தாரு அரண்மனைக்கு வந்து சேர்ந்ததும் பிரதானி ராமய்யர், ``ஐயா... காட்டு யானை தப்பிச்சு வந்து வாழத்தோப்புல எறங்கி நாசம் பண்ணிக்கிட்டிருக்கு. வேட்டைக்குப் பழக்கப்பட்ட ஒரு நூறு நூத்தம்பது ஆளுகள அனுப்பி வெச்சிருக்கேன்”னு சொன்னாரு.

ஜமீன்தாரு ரோசனை செஞ்சாரு. `அரண்மனையில இருந்தா சனங்களுக்கு சின்னம நாயக்கரைப் பத்தி தெரியவரும்போது என்ன ஏதுன்னு வந்து ஆளாளுக்குக் கேப்பாங்க. அதனால வேட்டைக்குப் போறதே உத்தமம்’னு நெனச்சாரு.

நாட்டுத் துப்பாக்கிய எடுத்துக்கிட்டு பெரிய வீட்டு நாயக்கருக அண்ணந் தம்பி ரெண்டு பேத்தையும் சேத்துக்கிட்டு, யானை மேல ஏறிக் கௌம்பினாரு. ஆலமரத்துப் பள்ளம்னு சொல்றமே அங்க போனதும், `ஜமீன்தாரும் வந்துட்டாரு’னு வேட்டைக்காரங்க ஒரே குஷியாயிட்டாங்க. யானைதான் இன்னமும் கண்ணுக்குத் தட்டுப்படல.

கொட்டு, கொம்பு ஊதி யானைத் தடம் பாத்துக்கலைக்க... அந்தச் சமயத்துல ஒத்தையடிப் பாதையில வந்துக்கிட்டுருந்த யானைய ஜமீன்தாரு பாத்துட்டாரு.

துப்பாக்கியத் தூக்கிக் குறி வச்சுக்கிட்டிருக்கும்போதே தலைக்கு மேல `டமார்’னு வேட்டுச் சத்தம் கேட்டுச்சு. நெத்திப் பொட்டுல அடிபட்டு யானை அங்கேயே சாஞ்சு போச்சு.

``நாம சுடுறதுக்கு முந்தியே மேல இருந்து யாரு சுட்டாங்க”னு மரத்து மேல பாத்தாரு ஜமீன்தாரு. உச்சி மரத்துல ஒருத்தர் துப்பாக்கிய கைல பிடிச்சுக்கிட்டு சிரிச்சாரு.

அப்புறம் பாத்தா, அவரு வேற யாரு மில்ல... வடவீர நாயக்கன் பட்டியிலிருந்து கண்டமனூருக்கு விருந்தாளியா வந்தவரு. நம்ம ஜமீன்தாருக்கு தூரத்துச் சொந்தம். சத்தே இல்லாம தொத்தலா இருப்பாரு. அதனால `தொத்த நாயக்கரு’னு அவரக் கூப்பிடுவாங்க. இப்படிக் குறி தப்பாம யானைய அடிச்சதால தொத்த நாயக்கருக்குக் கண்டமனூர்லயே ஒரு பொண்ணு பாத்துக் கட்டி வச்சாரு. அவருக்கு `வடவீர நாயக்கர்’னு பட்டத்தையும் கொடுத்தாரு.

இப்போ, வைகை அணையில தண்ணி தேங்கி நிக்கிதே... அந்தத் தண்ணிக்குள்ளதான் அந்த வடவீர நாயக்கன்பட்டி கிராமம் முங்கிக் கெடக்குது.

ரெண்டு நாள் கடந்துச்சு.

பளியஞ்சித்தன்கூட தொணக்கிப் போன ரெண்டு பேரும் கண்டமனூர் அரண்மனைக்குத் திரும்ப வந்து ஜமீன்தாருகிட்ட அவன் இருக்கிற எடத்த ரகசியமா சொன்னாங்க. பளியஞ்சித்தனப் பத்தின விஷயம் சனங்களுக்குப் போய்ச் சேராம பாத்துக்கிட்டாரு ஜமீன்தாரு.

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan