Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 12

வருச நாட்டு ஜமீன் கதை - 12
வருச நாட்டு ஜமீன் கதை - 12

பிரபஞ்சம், பிறப்பு ரகசியம்னு என்னென்னவோ பேசினான் பளியஞ்சித்தன். ஜமீன்தாருக்கு எண்ணமெல்லாம் மீனாட்சி மேல இருந்துச்சு.

பளியஞ்சித்தன் வேலப்பர் கோயில் மலைய விட்டு வெளியேறினது ஜமீன்தாரோட பரிவாரங்களுக்கும் மாப்ள நாயக்கருக்கும் நிம்மதியா இருந்துச்சு. ஆனா, ஜமீன்தாரு மட்டும் விடிஞ்சு எந்திரிச்சா... அரண்மனை வாசல்ல இருந்த கொன்ற மரத்தையே வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கிட் டிருந்தாரு.

ஜமீன்தாருகிட்ட பொது சனங்க கொஞ்சம் பேரு வந்து, “ஐயா... பளியஞ்சித்தன் ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு கடைசியா நம்ம ஆளு சின்னம நாயக்கரையே காட்டிக் குடுத்துட்டான் பாத்தீகளா..! நீங்களும் ஆத்திரப்பட்டு இப்படி செஞ்சு போட்டீகளே. இனியாவது அவன் சங்காத்தம் வேணாம்னு முடிவு செஞ்சுருங்க”னு கொளுத்திப் போட்டாங்க.

பொறுமையா கேட்டுக்கிட்டிருந்த ஜமீன்தாரு, “இனிமேற்பட்டு பளியஞ்சித்தன் நம்ம எல்லையில இருக்க மாட்டான்”னு ஒப்புக்குச் சொல்லி சனங்கள சமாதானப்படுத்தி அனுப்பி வச்சாரு.

ஆனா, ஜமீன்தாருக்கு ஏனோ பளியஞ்சித்தன விட்டு வெலகி வரணும்னே தோணல.

அவனுக்கும் தனக்கும் ஏதோ பூர்வஜென்ம தொடர்பு இருக்கிறதா மனசார நெனச்சாரு. அவம் பொண்டாட்டி மீனாட்சியும் அவரோட மனச விட்டுப் போகாமயே இருந்தா. பளியஞ்சித்தன் சொல்றதெல்லாம் எப்பிடி அச்சான்யமா நடக்குது? அவன் கிட்ட கத்துக்க வேண்டியது அம்புட்டையும் கத்துக்கிட்டு அப்புறமா என்ன செய்றதுனு பின்னாடி பாத்துக்கலாம்னு நெனச்சாரு ஜமீன்தாரு.

பளியஞ்சித்தன் இருக்கிற எடத்தத் தெரிஞ்சுக்கிட்ட ஜமீன்தாரு, ரெண்டு நாளா தூக்கமே இல்லாம புரண்டுகிட்டிருந்தாரு. அவன சந்திச்சே ஆகணும்னு முடிவு செஞ்சாரு.

மதுரைக்குப் போறதா போக்குக் காட்டிட்டு தொணையாளுக ரெண்டு பேர்கூட சித்தன் இருக்கிற எடத்துக்கு குதிரைல பொறப்பட்டாரு ஜமீன்தாரு.

கூடவே, ஆகாரத்துக்கு அதிரசம், சுகியம் இப்படி நெறைய பலகாரம் தயாராச்சு. எத்தினி நாளைக்குத்தான் வெறும் கப்பைக் கெழங்க சாப்பிடுவாங்க? மீனாட்சிக்கு மாத்து உடுப்பும் எடுத்துக்கிட்டு, மூட்ட முடிச்சுகளைக் கட்டித் தூக்கிக்கிட்டாங்க.

மலையடிவாரத்துல குதிரைய கட்டிப் போட்டுட்டு மேல பார்த்து நடந்தாரு ஜமீன்தாரு. இந்த மாதிரி சாவகாசமா ரொம்ப தூரம் நடந்து போறது ஜமீன்தாருக்குச் சர்வசாதாரணம்தான். வேட்டைக்குப் போயி பழக்கப்பட்ட உடம்பில்லே!

ஆனா, வருச நாட்டு மலையில அவர இம்சப்படுத்தினது கொசுதான். ஒவ்வொண்ணும் வண்டு மாதிரியே இருக்கும். மலையில இருக்கிற யானைக இந்தக் கொசுக்களோட பிக்கல் பிடுங்கல் தாங்காம எல்லாச் சமயத்துலயும் மண்ண அள்ளித் தன் மேலேயே போட்டுக்கறதும், மரத்துக் கொப்ப ஒடிச்சு மேல பளீர் பளீர்னு வீசிக்கிறதும், தண்ணிக்குள்ள போயி முங்கிக்கிறதும் வேடிக்கையா இருக்கும். ஜமீன்தாருக்கும் அந்த இம்சை வந்தப்ப தாங்கல.

இதையெல்லாம் பொறுத்துக்கிட்டு பளியஞ்சித்தனப் போய்ப் பாக்கணும்னு ஏன் தோணுது? ஏதாவது விதியா? கிறுக்குத்தனமா? ஜமீன்தாருக்கே ஒரு விடுகதை மாதிரிதான் இருக்குது.

வருச நாட்டு ஜமீன் கதை - 12
வருச நாட்டு ஜமீன் கதை - 12

ஒருவழியா ஏழு கல்லு நடந்து, கொசு கடிச்சு வீங்கின முகத்தோட பளியஞ்சித்தனோட குடிசைக்குப் போயி சேந்தாரு ஜமீன்தாரு. பளியஞ்சித்தனுக்கு அவரோட வரவு சந்தோஷமா இருந்துச்சு. சம்சாரம் மீனாட்சிதான் ஒரு குழப்பத்தோட சுக்கு மல்லிக் கசாயம் போட்டுத் தந்துச்சு. அதுவும் அந்தக் குளிருக்கு இதமா இருந்துச்சு.

சித்தனைப் பார்த்த சந்தோஷக் கெறக்கத்துல கொஞ்ச நேரம் கொசுக் கடிய மறந்திருந்த ஜமீன்தாரு, “கொசு கடிக்காம இருக்க ஏதாவது செய்ய முடியாதா?”னு கேட்டாரு.

அதுக்கு பளியஞ்சித்தன், “சாமீ... ஒவ்வொரு ஜீவராசியும் ஆகாரத்த தேடிக்க ஒவ்வொரு வழி இருக்கு. மத்த ஜீவராசிகளோட ஆணவத்த அடக்குறதுக்கும் ஒவ்வொண்ணுக்கும் சக்தி இருக்கு. அதோட குணாதிசயம் அதுக்கு முக்கியம். நாம வேட்டையாடுறத நிறுத்தினா, மத்த ஜீவஜந்துக பயமில்லாம ஊருக்குள்ள வந்து மனுஷங்களுக்கு இம்ச கொடுக்கும். இங்க இருக்கற கொசு கடிக்கிறத நிறுத்தினா யானை மாதிரி பெரிய ஜீவாத்தியங்களோட புத்தி நாச வேலைல இன்னும் அதிகமா எறங்கும். உங்களுக்காக வேணும்னா கொஞ்ச நாளைக்கு கொசு வாயக் கட்டிப் போடுறேன்”னு சாதாரணமா சொன்னான்.

“கொசு வாய கட்டுறதா?” - ஜமீன்தாரு தெகச்சுப் போயி கேட்டாரு.

பளியஞ்சித்தன், மௌனமா கொஞ்ச தூரம் நடந்து போயி மூலிகச் செடிகளைக் கொண்டு வந்தான். தீ உண்டாக்கி அதுல மூலிகச் செடிகளைப் போட்டான். கண்களை மூடி ‘முணு முணு’னு என்னமோ சொன்னான். பச்சையா இருந்த மூலிகச் செடியிலிருந்து ‘குபு குபு’னு வெள்ளப் புகை மூட்டம் பரவுச்சு. அம்புட்டுதேன். சுத்து முத்தி கொசு வெல்லாம் பறக்குதே தவிர, மனுசங்க மேல உக்காந்து கடிக்கிறதாத் தெரியல.

(இப்பவும் வருச நாடு மலப் பக்கம் வந்தீங்கன்னா கொசு அலஞ்சு திரியும். ஆனா, யாரையும் கடிக்காதுனு நேர்ல பாக்கலாம். பளியஞ்சித்தன் அன்னிக்கு கொசு வாயக் கட்டிப்போட்டதுதான். அதான் அப்புறம் கடிக்கற தேயில்லைனு இங்க ஊரெல்லாம் பேசிக்குவாங்க!)

எங்க விட்டேன்... ஆங்! கொசுக்கடி ஓய்ஞ்சதும் ஜமீன்தாருக்கு சுகமோ சுகம்னு உடம்புல ஒரு திருப்தி வந்துச்சு.

“சாமீ... இன்னும் நெறைய சமாசாரம் இருக்கு. அது பெரிய விஷயமில்ல. உங்க ஜமீனுக்கு வர்ற வருமானம் அம்புட்டும் எப்பிடிக் கெப்பிடி தொலைஞ்சு போகுதுனுகூட எனக்குத் தெரியும். வரி, வட்டி, கிஸ்தி, தண்டம் எல்லாம் வசூல் செஞ்சு என்ன பிரயோசனம்? அத அத மொறப்படி பாதுகாப்பு செய்யணும். உங்க அரண்மனைல இருக்கிற கஜானாவுக்கு மனுசங்கள காவலுக்கு நெயமிக்கிறீங்க. எது எப்ப யாரால களவு போகுதுன்னு உங்களுக்குத் தெரியாது. ஆனா, எனக்குத் தெரியும். அதனால மனுசக் காவல் எந்த வகையிலும் உசத்தி இல்ல. வெள்ள எலி, கிண்ணிக் கோழி, கருமந்திக் குரங்கு, மோப்ப நாய் இதுகதான் காவலுக்கு உசத்தி. அது தானுந் திங்காது. அடுத்தவங்களையும் திங்க விடாது. இந்த ஜீவாத்தியங்கள வச்சு ஒரு உபாயஞ் சொல்றேன். அதுபடிக்கி செஞ்சுபோடுங்க சாமீ...”னு கொஞ்சம் வெவரமா சொன்னான். ஜமீன்தாரு அலண்டு அதிசயிச்சுப் போய்க் கேட்டுக்கிட்டிருந்தாரு.

“நீங்க செலவு கிலவு செய்யாம சிக்கனமா இருக்கவேண்டிய சமயம் வந்துருச்சு சாமீ. மானியப் பட்டயம் தர்றதெல்லாம் நிறுத்துங்க. உங்க ஜமீன் சொத்துகளுக்கு பாதுகாப்பு ரொம்ப முக்கியம்!”னு சொல்லிக்கிட்டே வந்தான் பளியஞ்சித்தன்.

நாழிகை போனதே தெரியல. பொழுது சாஞ்சுபோச்சு. இருட்ட ஆரம்பிச்சதால ஒரு தீப்பந்தம் கொளுத்தி மரத்துல சொருகி வெச்சாங்க.

பிரபஞ்சம், பிறப்பு ரகசியம்னு என்னென்னவோ பேசினான் பளியஞ்சித்தன். ஜமீன்தாருக்கு எண்ணமெல்லாம் மீனாட்சி மேல இருந்துச்சு. ஆனா, அவ மேல காம இச்சை மட்டும் சத்தியமா கொஞ்சம் கூட வரல. ஏன், எதுக்கு, என்னதுனு கொஞ்சங்கூடப் புரிஞ்சுக்க முடியாத ஒரு ஈடுபாடு அது.

ராத்திரி தூங்கி மறுநாள் காலைல எந்திரிச்சு வந்த வழியே எறங்கி யாருக்குந் தெரியாம கண்டமனூருக்கு வந்து சேந்தாரு.

ஒரு வாரம் போறதுக்குள்ள அரண்மனைக்கு ஒரு பவிசு வந்த தோரண தான். உக்கிராண அறையிலிருந்து மாட்டுக் கொட்டம் வரைக்கும் நெறைய திருத்தம் செஞ்சாரு ஜமீன்தாரு.

கஜானாவச் சுத்தி வெள்ள எலிகள விட்டிருந்தாரு. அதச் சுத்தி கிண்ணிக் கோழிக மேஞ்சுக்கிட்டிருந்துச்சு. மரத்துல கருமந்திக் குரங்கு தாவி வெளையாட... மோப்ப நாய்க அங்கிட்டும் இங்கிட்டும் அலஞ்சுக்கிட்டிருந்துச்சுக. யாராவது கஜானா பக்கத்துல வந்தா... வெள்ள எலி ‘கீச் மூச்’னு போடுற சத்தத்துல கிண்ணிக் கோழி கத்தும். கிண்ணிக்கோழி கத்துனாலே மேல கருமந்திக்குப் பிடிக்காது. அதுவும் பதிலுக்குக் கத்தி கூப்பாடு புடிக்கும். மோப்ப நாய்க்குச் சொல்லவே வேணாம். இவ்வளவு சத்தத்தையும் கேட்டா தூங்கிக்கிட்டிருந்தாலும் பதறி அடிச்சு எந்திரிச்சு கஜானாவைச் சுத்தி நின்னுக்கும்.

இதையெல்லாம் பளியஞ்சித்தனோட உபாயம்னு வெளிய சொல்லாம, தானே கண்டறிஞ்ச விஷயம்னு அம்புட்டு பேருகிட்டயும் சொன்னாரு ஜமீன்தாரு.

‘தோட்டத்துல ஆளுக சரியா வேலை செய்யல’ன்னு சொல்லி நாலு பேருக்கு முன்னாடி சவுக்கெடுத்து விளாசுவாரு. நெறைய வேலை வாங்கி, கொறைச்சலா கூலி கொடுப்பாரு.

இப்பிடித்தான் மாட்டுக் கொட்டத்துல கிடுகு பின்னுறதுக்கு ஒருத்தன வரச்சொன்னாரு. அவனுக்குப் பயம். சரியா பின்னாட்டி சவுக்கடி கெடைக்குமே... நெறைய வேல வாங்கி, கொறச்சலா கூலி கொடுப்பாரே! எதுக்கு வம்புனு நெனச்சு, “எனக்கு கிடுகு பின்னத் தெரியாது சாமீ...”னு சொன்னான். யாரும் வரமாட்டேங்கறாங்கனு தெரிஞ்சதும், ஜமீன்தாரே சட்டையைக் கழட்டிப் போட்டு, கிடுக வச்சு பின்ன ஆரம்பிச்சாரு. ‘கிடுகு பின்னத் தெரியாது’னு சொன்னவன், அதப் பார்த்துக்கிட்டு சும்மா நிக்கத் தெரியாம, “ஐயா, மேல இருந்து பின்னக் கூடாது... கீழ இருந்து மேல முன்னமா பின்னிக்கிட்டுப் போகணும்!”னு சொன்னான். அம்புட்டுதான்... ஜமீன்தாரு எறங்கி வந்தாரு. “இவ்வளவு ரோசனை சொல்றவன் எதுக்குப் பின்னத் தெரியாதுனு சொன்ன”னு பிடிச்சு சவுக்கெடுத்து வெளு வெளுனு வெளாசிட்டாரு.

ரெண்டு நாள் கழிச்சு...

எரசக்க நாயக்கனூர் ஜமீன்தாரிணியம்மா கண்டமனூர் அரண்மனைக்கு வந்திருந்தாங்க. அந்தம்மாவுக்கு மொத்தம் எட்டு ஆம்பளைப் பையனுக, ஒரே ஒரு பொம்பளைப் பிள்ள. அம்புட்டு பேரும் பதினெட்டாவது வயசுல செத்துப் போயிடுறாங்க. என்ன காரணம்னு தெரியல. இன்னும் மிச்சம் இருக்கிறது ஒரு பையன்தான். அவனுக்கு நெருங்கி பதினேழு வயசு வந்துருச்சு. ‘என்ன செய்றது?’னு ஜமீன்தாருகிட்ட ரோசனை கேட்டுப் போகலாம்னுதான் அந்த ஜமீன்தாரிணியம்மா வந்திருக்காங்க.

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு