Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 13

வருச நாட்டு ஜமீன் கதை - 13
வருச நாட்டு ஜமீன் கதை - 13

கலெக்டர் துரை இருக்கும்போதே நம்மளோட தைரிய வீரிய கம்பீர பராக்கிரமத்தைக் காட்டிப் போடணும்னு துரை முடிவு எடுத்தாரு.

‘ஒருத்தருக்கு செல்வம் சேரும் போது தேங்காய்க்குள்ள இளநீர் மாதிரி சிறுகச் சிறுக தன்னால உள்ளூரப் பெருகும். அது கைவிட்டுப் போறபோது யானை விழுங்கின விளாம்பழம் மாதிரி நல்லா தெரிஞ்சே வெளியே போகும்’னு பெரியவங்க ஒரு நாட்டு வாக்கியம் சொல்வாங்க.

கண்டமனூர் ஜமீன் எல்லையில இருக்கற அழகான கிராமங்கள்ல அழகாபுரியும் ஒண்ணு. அங்க சுக ஜீவனம் நடத்திக்கிட்டிருந்த வைரவஞ் செட்டியாருக்கு ஒரு ஆச. நெறைய நெலம் சேக்கணும். ஜமீன்தாருகளுக்கு கட்டுப்படாம அவங்களுக்கு இணையா தனியா ஒரு ஜமீன்தாரு மாதிரி துரைத்தனம் செய்யணும்னு நெனைச்சாரு.

பெரிய ஜமீன்தாரு கிறுக்கு துரை சிறுபிராயத்துல தாயாரு வெள்ளைத் தாயம்மா பொறுப்புல வளர்ந்தாருனு ஏற்கெனவே சொல்லியிருந்தனில்லையா... அந்தச் சமயத்துல குடும்பக் கடன நேர்த்தி செய்யறதுக்கும் சில்லறைச் செலவுக்கும் அந்த வைரவஞ் செட்டியாருக்குத்தான் பண்ணை நெலத்தைக் குத்தகைக்குக் குடுத்து பத்தாண்மை பயிர் செஞ்சுக்கச் சொல்லிவிட்டிருந்தாங்க.

எரசக்க நாயக்கனூர் ஜமீன்தாரிணி வீரகாமுல்லும்மாகிட்டயும், சூலப்புரம் தொப்பையசாமி நாயக்கர் கிட்டயும், பாலகோம்பை ஜமீன்தார் பங்காளிக கிட்டயும், இதே மாதிரி நெலங்கள குத்தகைக்கு வாங்கி, சுத்த சர்வமானியம்னு நெனச்சு அனுபவிச்சு வந்தாரு செட்டியாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 13
வருச நாட்டு ஜமீன் கதை - 13

நல்ல வருமானம் வரும். வருசம் பூரா பருத்தி வெளைஞ்சு தள்ளும். செம்மண் பூமியில விளச்சல் செம போடு போடும். ஆனா, நெலத்துச் சொந்தக்காரங்களுக்குக் குத்தகைப் பணமோ, ஜமீனுக்குத் திறைப் பணமோ கட்டறதில்லை. ஏகப்பட்ட பணம் வைரவஞ் செட்டியாருகிட்டே தங்கிப்போச்சு.

அதுமட்டுமில்ல, தேவதானப்பட்டியிலிருந்து தனக்கு வேண்டிய ஏகப்பட்ட குடும்பங்கள கொண்டு வந்து அழகாபுரியில குடிவெச்சாரு.

தன்னோட சேனை ஆளுக மாதிரி தீனி போட்டு வளத்து துரைத்தனம் செஞ்சுக்கிட்டிருந்தாரு. அவங்களும் விசுவாசமா தொண்டூழியம் செஞ்சுக்கிட்டிருந்தாங்க.

பத்துப் பதினைந்து வருஷம் கழிச்சு இப்போ ராமகிருஷ்ண நாயக்கரு ‘ஜமீன்தாரு’ பட்டம் கட்டின பெறகு, எந்தெந்த ஜமீன்தாருக கிஸ்தி கட்டாம பணம் நிலுவைல வச்சிருக்காங்கனு சோதனை செய்றதுக்கு மதுரை கலெக்டர் துரை அரண்மனைக்கு வந்திருந்தாரு.

ஜமீன்தாரு கர்ணத்தைக் கூப்பிட்டு வெவரம் கேக்கும்போதுதான் இந்த வைரவஞ் செட்டியாருகிட்ட ஏகப்பட்ட பணம் நிலுவைல இருக்குனு தெரிய வருது. செட்டியார் பத்தி ஜமீன்தார் விசாரிக்கிறார்னு தெரிஞ்சவுடனேதான் எரசக்க நாயக்கனூர் ஜமீன்தாரிணி வீரகாமுல்லும்மா இவரத் தேடி வந்தாங்க. அவங்ககூட சூலப்புரம் தொப்பைய நாயக்கரும் வந்தாரு. ஜமீன்தாருகிட்ட வந்து அந்த நெலத்தை மீட்டுக் குடுக்கச் சொல்லி இவங்க மன்றாடினாங்க.

ஜமீன்தாரு மணியக்காரங்கள அழகாபுரிக்கு சடுதியா அனுப்பி வைரவஞ் செட்டியார பணத்தோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னாரு. ஆனா, செட்டியாரு மணியக்காரங்கள பிடிச்சு வச்சுகிட்டு ஒரு ஆள மட்டும் திருப்பி அனுப்பினாரு.

“மகாராஜா... செட்டியாரு வர மாட்டாராம். மொரண்டு பிடிக்கிறாரு. நேரடியாக மதுர கலெக்டர் துரைக்கு கிஸ்தியக் கட்டி ஏழெட்டு கிராமத்தை கேட்டு வாங்கி, தனி ஜமீன்தாரா இருக்கப்போறேனு சொல்றாரு மகாராஜா..!”

இதக் கேட்டதும் ஜமீன்தாருக்கு வந்த கோபம் கணக்கு வழக்கில்ல. இதுமாதிரி நாலு பேரு சேந்துட்டா, அதவிட பெரிய தீம்பு கெடயாதே! ‘சேரச் சேரச் செடியும் பகை’னு சொல்வாங்க. உடனேவே களைய வெட்டிப் போடணும்னு நெனைச்சாரு.

கலெக்டர் துரை இருக்கும்போதே நம்மளோட தைரிய வீரிய கம்பீர பராக்கிரமத்தைக் காட்டிப் போடணும்னு முடிவு எடுத்தாரு.

கலெக்டர் துரை ஜமீன்தாரு பக்கம் இருக்கிறதால பிரதானி ராமய்யர் தலைமைல சேனை ஆளுகளச் சேத்தாரு. கண்டமனூர்ல இருந்து தெப்பம்பட்டி வழியா அழகாபுரிக்குப் போக... மணியக்காரன் பட்டியிலிருந்தும் பாலகோம்பையிலிருந்தும் ஜமீன்தாருக்கு ஆதரவா சனங்க திரண்டுவர... செட்டியாரு ஆளுக கத்தியெடுத்துக்கிட்டு சரி மல்லுக்கு நின்னாங்க.

இன்னபிற சனங்க முஷ்டி யுத்தம் பண்ணி, பதுமாசன பந்தனம், கந்தாசன பந்தனம், நாகபந்தனம், கேசகேசற பந்தனம் எல்லாம் செஞ்சு கை கலந்தாங்க.

செட்டியாரு தன்னோட வீடு மேல இருந்து வேடிக்கை பாக்க, இன்னொரு பக்கம் ஜமீன்தாரு, கலெக்டரு துரைகிட்ட தன் சேனையாட்களோட வீரத்தைக் காட்டி மெச்சிக்கிட்டிருந்தாரு.

கடைசியா வைரவஞ் செட்டியாரு கீழ எறங்கி வந்து தோல்விய ஒப்புக்கிட்டு நெலத்தையும் பணத்தையும் ஒப்படைச்சாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 13
வருச நாட்டு ஜமீன் கதை - 13

எரசக்க நாயக்கனூர் ஜமீன்தாரிணி வீரகாமுல்லும்மா நெலத்தை மீட்டுக் கொடுத்து, அவங்களோட கடைசிப் பையனுக்கு அம்மயநாயக்கனூர் ஜமீன் பொட்டிசெட்டி பட்டியில அக்குலம்மான்னு ஒரு பொண்ணையும் பாத்து கல்யாணம் செஞ்சு வெச்சாரு கிறுக்கு துரை.

சூலப்புரம் தொப்பையசாமி நாயக்கருக்கும் தன்னோட நெலம் தனக்கே கெடச்ச சந்தோஷம். அவரு சும்மா இருப்பாரா? தன்னோட வகையறாவுல தங்கச் சிலையாட்டம் ரொம்ப ரொம்ப அழகான ஒரு பொண்ண ஜமீன்தாருக்குக் ‘கத்திக் கல்யாணம்’ செஞ்சு வச்சாரு. இப்படித்தான் ஜமீன்தார் வாளுக்கு மூணாவது பொண்டாட்டியா வேலாண்டியம்மா வந்து சேந்தா.

ஜமீன்தாரோட பேரு, புகழ் மத்த ஜமீனுக்கும் அமோகமா பரவி வந்துச்சு. அவருகிட்ட ஏதோ ஒரு அருள் ஏறியிருக்குன்னு சனங்க நம்ப ஆரம்பிச்சாங்க. கிறுக்கு துரைய கடவுள் மாதிரி கும்பிட ஆரம்பிச்சாங்க.

ஆனா, தனக்கு இவ்வளவு பேரும் புகழும் சாமரமும் வந்ததுக்குப் பளியஞ்சித்தன்தான் காரணம்னு நெனைச்சாரு. ஆனா, இதை எப்படி வெளியே சொல்ல முடியும்?

அரண்மனை வாசல்ல இருக்கற கொன்ற மரம் பச்சைப் பசேல்னு பளியஞ்சித்தனை ஞாபகப்படுத்திக் கிட்டே இருந்துச்சு. ஜமீன்தாரு அந்த மரத்துக்குத் தானே தண்ணி மொண்டு ஊத்தி சந்தோஷப்பட்டாரு.

வேட்டைக்குப் போகப் போறதா போக்குக் காட்டி தனக்கு வேண்டிய தொணையாளுகள மட்டும் கூட்டிக்கிட்டாரு. தின்பண்டங்களையும் உடுப்புகளையும் மூட்டையா கட்டித் தூக்கிக்கிட்டு பளியஞ்சித்தனைப் பாக்கக் கிளம்பிட்டாரு ஜமீன்தாரு.

ஓயாமாரினு சொல்ற எடத்துல யானைக, தன்னிச்சையா அச போட்டுக்கிட்டு சந்தோஷமா திரியற எடத்துலதான் பளியஞ்சித்தனும் பொண்டாட்டி மீனாட்சியும் அஞ்சாத வாசம் பொழப்பு நடத்திக் கிட்டிருக்காங்கனு ஜமீன்தாருக்கு மட்டும்தான் தெரியும்.

காடு மலை ஏறி அந்த ஓயாமாரிக்குப் போய்ச் சேர்ந்ததும் பளியஞ்சித்தன் பொண்டாட்டி ஒரு தட்டுல பச்சிலை எரிச்சு ஜமீன்தாருக்கு ஆரத்திச் சுத்தி எடுத்தா. மூணாவதா கல்யாணம் செய்தாரில்லையா அதுக்கு ஒரு மரியாதையாம்.

“எனக்கு ஜமீன்ல ரொம்ப நல்ல பேரு. அதுக்கு காரணம் நீதான். மறு பிறவினு ஒண்ணு இருந்தா, அடுத்த பிறவியில நாம ரெண்டுபேரும் ஒரு தாய் வயித்துல பிறக்கணும்”னு ஜமீன்தாரு பளியஞ்சித்தன்கிட்ட கண் கலங்கினாரு.

“இது சம்பந்தமாத்தான் உங்ககிட்ட நானும் ஒண்ணு கேக்கணும் சாமீ. இப்ப இல்ல... அதுக்கு சமயம் மெதுவா நெருங்கிக்கிட்டு இருக்கு!” - கொஞ்ச நேரம் கண்ண மூடி உக்காந்தான் பளியஞ்சித்தன்.

“மறுபிறவினு ஒண்ணு இருக்கா?” - ஜமீன்தாரு கேட்டாரு.

“இருக்கு சாமீ... ஏழு பிறவி மனுசப் பிறவி! புழு பூச்சியா, பல்லி பாம்பா, பறவையா, நாய் பசுவாப் பொறந்து குரங்காப் பொறந்து அப்புறமா மனுசப் பிறவியா பொறக்கிறான்!”

“கூடு விட்டுக் கூடு பாயுறதுனு சொல்வாங்களே... நான் கத்துக்க முடியுமா..?”

“உங்களாலயும் முடியாது, என்னாலயும் முடியாது சாமீ..! ஏன்னா, மனுசனோட முதல் பிறவியிலதான் கத்துக்க முடியும். தன் உசுர மாய்ச்சு அடுத்த உடம்புல புகுந்துக்கலாம். ஆனா, மறுபிறவி எடுத்தவன் கத்துக்க முடியாது!”

வருச நாட்டு ஜமீன் கதை - 13
வருச நாட்டு ஜமீன் கதை - 13

“விதி..?”

“எல்லா உசுருக்கும் இருக்கு சாமீ. விதி வலியது, விதிய மாத்த முயற்சி செய்யலாம். ஆனா, மனுசனுக்கு உள்ள கோப குணம் அந்த விதிய மாத்த விடாது. கோபம் உத்தமனிடத்தில் கண் இமைக்கிற சமயத்துக்கும், மத்திமனிடத்தில ரெண்டு நாழிகை சமயத்துக்கும், அதமனிடத்தில் ராத்திரி சமயம் வரைக்கும், பாவிகிட்ட மரண பரியந்தமும் இருக்கும். அதனால, சாந்தம்தான் விதியை மாத்திப் போடும். நீங்களும் நானும் அந்த முயற்சியச் செய்யவேண்டிய கட்டாயம் வந்துக்கிட்டிருக்கு”னு சொன்ன பளியஞ்சித்தன் கொஞ்ச நேரம் கண்ண மூடித் தாடியத் தடவி கண் தொறந்தான்.

தூரத்துல பாறை மறவுல ஒளிஞ்சிருந்து யாரோ எட்டி எட்டிப் பார்க்கற மாதிரி பளியஞ்சித்தனுக்குத் தெரிஞ்சது. அவன் பார்வை பாய்ஞ்ச பக்கம், ஜமீன்தாரு திரும்பிப் பாத்தாரு. அம்புட்டுதான்... அந்த ஆளு விருட்டுனு அந்தப் பாறைய விட்டுக் கீழே குதிச்சு ஓட ஆரம்பிச்சாரு.

அந்தாள விட்டுவச்சா தனக்கு ஏதோ ஆபத்துனு ஜமீன்தாருக்கு ஏனோ தோணிப் போச்சு.

கொஞ்சமும் யோசனை பண்ணாம வில்லை எடுத்து குறிபார்த்து அம்பு ஏவினாரு. கழுத்துல அம்பு பாஞ்சு சங்கு ஒடஞ்சு அந்த எடத்துலயே அலறிக்கிட்டு சுருண்டு விழுந்தாரு அந்த ஆளு. பக்கத்துல போயிப் பாத்தா... ஐயையோ... அது கதிர்வேல் சாமி நாயக்கரு! பஞ்சாயத்து பெரசிடண்டா இருந்தாரே காமுலு பொம்மு - அவரோட தாத்தா.

கடமலைக் குண்டுல இருக்கிற கதிர் வேல்சாமி நாயக்கரு எப்பவுமே ஜமீன்தாருகூடதான் வேட்டைக்குப் போவாரு. ஆனா, கொஞ்ச நாளா ஜமீன்தாரு தன்னைக் கூட்டுச் சேத்துக்காம தனியா எங்கியோ போறாரேனு சந்தேகப்பட்டு ஜமீன்தாருக்குத் தெரியாம அவரு பின்னாலேயே மறஞ்சு மறஞ்சு பின் தொடர்ந்து போனாரு. இந்தக் கதி ஆயிட்டாரு.

வேட்டைக்குப்போன எடத்துல தவறுதலா அம்பு பட்டுறுச்சுன்னு சொல்லி அந்தக் குடும்பத்துக்கு அஞ்சு குழி நெலம் எழுதி வச்சாரு ஜமீன்தாரு.

அதேசமயத்துல ஆலகால விஷம் தயார் செய்ய விஷ மூலிகைச் செடிகள பறிச்சுக்கிட்டிருந்தான் பளியஞ்சித்தன்.

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு