Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 14

வருச நாட்டு ஜமீன் கதை - 14
வருச நாட்டு ஜமீன் கதை - 14

ஜமீன்தாரு, மீனாட்சி கொடுத்த சுக்கு மல்லியக் குடிச்சுக்கிட்டே, “நம்ம ஜமீன் எல்லைல கொசு கடிக்கறதே இல்லைனு சனங்க சந்தோஷப்படுறாங்க. நீ தீயில எரிச்ச மூலிகையோட பேரு என்ன?”னு கேட்டாரு.

எதிரி நாட்டுச் சேனைகளை அழிச்சு ஒழிக்கக் கத்தியெடுத்துச் சண்டை போடுறது கட்டுப்படியாகாத சமயத்துல தந்திர உபாயங்களும் இருந்துச்சு.

எதிரி நாட்டுச் சேனைகள் தங்கியிருக்கற எடத்துல தோதான சந்தர்ப்பம் பாத்து விஷ மூலிகைப் பொடிய குடிதண்ணீர்ல கலந்து விட்டுருவாங்க. அம்புட்டு பேரும் சீதபேதி வந்து எழுவத்திரண்டு தடவ வயித்தப் பிடிச்சிக்கிட்டு வெளிய ஓடுவான். அப்புறம் எங்கிட்டு கத்தியச் சுழட்டிச் சண்டைபோடுறது?

சேங்கொட்டைப் பால் எடுத்து எதிரியோட ஆகாரத்துல சேத்துட்டா போதும்... ஒவ்வொருத்தன் மேலயும் ஒரு அணுகுண்டு போட்டது மாதிரிதான். உடம்பெல்லாம் பாளம் பாளமா வெடிச்சு ரத்தம் வத்திச் செத்துப்போவான். `சேங்கொட்டைப் பால்’னு சொல்றது வேற ஒண்ணுமில்ல... நம்ம சட்டையில செங்கல் நிறத்துல சலவைக்காரரு குறி போடுறாரே... அந்தப் பால்தான்.

அரண்மனைக்கு நெருக்கமான சித்தர்ககிட்டயிருந்து இந்த மாதிரி விஷ மூலிகைச் சூரணங்கள் வாங்கி வச்சுக்குவாங்க. சித்தர்களுக்குத்தான் விஷ மூலிகைகள் பத்தியும், அதனால பாதிக்கப்பட்டவங்களுக்கு விஷ முறிவுச் சாறு, சூரணம், லேகியம் கொடுத்து உசுரு பொழைக்கச் செய்யவுந் தெரியும்.

நாவிச் செடி, நாவிக் கெழங்குனு வருச நாட்டு மலைக் காடுகள்ல நெறைய இருக்கும். கார்த்திகை மாசம் அமோக வௌச்சல் இருக்கும். அதுல வெண் நாவி, கரு நாவி எல்லாம் இருக்கு. இப்ப என்ன விஷயம்னா... விஷம்தான் விஷயம்! இந்தக் கெழங்க சுத்தம் பண்ணாம புண்ணு மேல தடவினாலே போதும்... உடம்பெல்லாம் நீலம் பாஞ்சு கத்தியில்லாம ரெத்தமில்லாம ஆளு பரலோகம் போய்ச் சேந்துருவான்.

எதுக்குச் சொல்லவரேன்னா... அந்தக் காலத்துல சில மகாராஜா, மகாராணிகளக் கூட இப்படித்தான் நஞ்சு வச்சு கொன்னு போட்டிருக்காங்க.

நம்ம பளியஞ்சித்தனும் நாவிச் செடி, நாவிக் கெழங்கு, குண்டுமுத்துப் பருப்பு, நேர்வாளம், அலரிப் பட்டை, வீரம், சூரம், ரசம், சங்குப் பாஷாணம், சேங்கொட்டைப் பால் இந்த மாதிரி ஆளக் கொல்லுற விஷ மூலிகைகள கொஞ்சங் கொஞ்சமா சேத்துக்கிட்டு வந்து பாறை இடுக்குல வச்சிருந்தான்.

அதுமட்டுமில்ல... உசுரையே உற்பத்தி செய்யற குங்குமப்பூ, அகண்ட கஞ்சிகாரிச் செடி, நீரடி முத்து, அமுக்குரா கெழங்கு, அதிமதுரம், சீரகம், அசோகமரப் பட்டை, மாதுளம் பழ ஓடு, அவிரிச் செடி இன்ன பிற மூலிகைச் செடிகளையும் குடிசைக்கு வலது பக்கமா சேத்து வச்சிருந்தான். பெரிய சுரக்காயும் இருந்துச்சு.

மீனாட்சி, ``நம்ம ஜமீன்தாருகிட்ட உண்மையைச் சொல்லி நாம ரெண்டு பேருமே விடுபட்டு வேற மலைக்குப் போயிரலாம். ஜமீன்தாருதான் உங்களுக்கு நல்ல நண்பராயிட்டாரே... நீங்க சொல்ல வந்தத ஒடச்சுச் சொல்லிப்போடுங்க. எனக்கென்னவோ பயமா இருக்கு” - பளியஞ்சித்தனோட கையப் புடிச்சுக் கிட்டா மீனாட்சி.

“பயப்படாதே மீனாட்சி. அதுக்கான சந்தர்ப்பம் கூடி வந்துக் கிட்டிருக்கு. ஜமீன்தாரு இன்னிக்குக் கண்டிப்பா வருவாரு. அவருக்காகவும் எனக்காகவும் சில கடமைகள் செய்ய வேண்டிய கால நேரம் நெருங்கிக் கிட்டிருக்கு. நல்ல நண்பர்களோட சொல்லக் கேக்காத நெறைய மன்னர்க முடியிழந்தும் போயிருக்காங்க; முடிவடைஞ்சும் போயிருக்காங்க. ஜமீன்தாரு நமக்காக என்ன செய்யறாருனு பாக்கலாம்”னு அமைதியா சொன்னான் பளியஞ்சித்தன்.

அந்தக் காட்டுல மழை பேஞ்சு, ஓஞ்சு போயிருந்துச்சு. ஜமீன்தாரு கிறுக்கு துரை காலடியில சருகுச் சத்தம் கேக்காம நடந்து ஓயாமாரிக்கு வந்து சேந்தாரு.

ஜமீன்தாரு, மீனாட்சி கொடுத்த சுக்கு மல்லியக் குடிச்சுக்கிட்டே, “நம்ம ஜமீன் எல்லைல கொசு கடிக்கறதே இல்லைனு சனங்க சந்தோஷப்படுறாங்க. நீ தீயில எரிச்ச மூலிகையோட பேரு என்ன?”னு கேட்டாரு.

“காஞ்சுபோன கெர்ப்பி புல்லக் கசக்கியும், மாம்பூவை கசக்கியும், அக்கினிக் கொடிவழி இலைக்கு நடுவில வச்சு மந்திரத்தச் சொல்லி எரிச்சேன். அம்புட்டுத்தான் சாமீ...”னு பளியஞ்சித்தன் சாதாரணமா சொன்னான்.

ஜமீன்தாரு சிரிச்சுக்கிட்டே, “அந்த மந்திரத்த நான் உச்சரிக்க முடியாதா?”னு கேட்டாரு.

“தவஞ் செய்யணும் சாமீ..! மனசு வலிக்க தவஞ்செய்யணும். தூக்கம்கூட ஒரு தவம்தான். அதுவும் அளவுக்கு மீறினா கனவு வந்துரும். அதனால கண்ணு முழிச்சுக்கிட்டு தூங்கணும். அதுதான் தவம். சகலமும் நம்ம மூளைக்குக் கட்டுப்பட்டு மந்திரம் கைவசமாயிடும் சாமீ..!”

“எனக்கு என்னென்ன கைவசமாகும்?”

“இதான்... இந்தச் சுரக்காய்க்கு உள்ள இருக்கறதும் உங்க கைவசம் ஆகும்!”னு சொன்ன பளியஞ்சித்தன், அந்தச் சுரக்காய கொதிக்கற தண்ணியில போட்டான்.

ஜமீன்தாரு கண் கொட்டாம பாத்துக்கிட்டிருந்தாரு.

கொஞ்ச நேரங் கழிச்சு சுரக்காய வெளியில எடுத்தான். ஆவி பறந்துக்கிட்டிருந்த அந்தக் காய ஜமீன்தாருக்கு முன்னால வச்சு பளியஞ்சித்தன், “இத நேர்வசமா அறுத்துப் பொளந்து பாருங்க சாமீ”னு சொன்னான்.

ஜமீன்தாரு திருக்கைக் கத்திய எடுத்து சுரக்காய மெல்ல வகுந்தாரு. அட..! உள்ளயிருந்து உசுரோட ஒரு பச்சைக்கிளி றெக்கையடிச்சுப் பறந்து ஒரு சுத்துச் சுத்தி ஜமீன்தாரு தோள் மேல வந்து உக்காந்துச்சு.

“சாமீ... இது சாதாரணக் கிளி இல்ல.. வேட்டை முன்னோடி! நீங்க வேட்டைக்குப் போனா, உங்களுக்கு முன்னாடி உசரப் பறந்து போயி, எங்கன யானை இருக்கு, எங்கன புலி, கரடி, மான், மயில் இருக்குனு பாத்துட்டு வந்து சைக சொல்லும். எல்லாம் மூலிகையோட மகாத்மியம். இத வச்சுக்கங்க”னு சொன்னான்.

ஜமீன்தாரு ஆச்சரியத்தோட பார்த்து அந்தக் கிளியக் கைவிரல்ல எடுத்து முத்தம் வெச்சாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 14
வருச நாட்டு ஜமீன் கதை - 14

(இந்த வித்தையெல்லாம் தொட்டப்பநாயக்கனூர் ஜமீன் அரண்மனையில ரொம்ப நாளா செஞ்சுக்கிட்டிருந்தாங்க. சுகியம் மாவுக்குள்ள குருவிய வச்சு எண்ணெயில போடுவாங்க. சூடான சுகியத்தைப் பிச்சு எடுத்தா உள்ளேயிருந்து உசுரோட குருவி பறந்துபோகுமாம். அந்தப் பக்குவத்துல, மூலிகை ரசம் தடவி குருவிக்குச் சூடு பரவாம சுகியம் தயார் செஞ்சுருக்காங்கனா பாத்துக்கங்க.)

பளியஞ்சித்தன் மருதோன்றிப் பூவை எடுத்துக்கிட்டு வந்து ஜமீன்தாருகிட்டயும், ரெண்டு தொணையாளுக கிட்டயும் குடுத்து, “இந்தப் பூவுக்கு ‘மூதேவி’னு பேரு. மூக்குல வச்சு நல்லா மோந்து பாருங்க”னு சொன்னான்.

ஜமீன்தாரு கொஞ்சம் தயங்கினாரு. அவரு தயங்குறதுக்கும் காரணமிருக்கு இல்லையா?

இப்பிடித்தான்... இந்த அரண்மனை வைத்தியர்களுக்கு பெருந்தொல்லை என்ன தெரியுமா? மன்னர்களுக்கு மூலிகை மருந்துகளைக் குடுத்து சாப்பிடவெக்கிறதுதான்! வாய் வழியா சாப்பிடச் சொன்னா ஒமட்டுவாங்க. அதனால மூலிகைய மூக்கு வழியா மோந்து பார்த்தாலே நோய் குணமாகுற மாதிரி செய்வாங்க.

ஜமீன்தாருகளுக்கு மாசம் ஒரு தடவ பேதி மருந்து கொடுத்தாகணும்.

நேர்வாளம்னு ஒரு மூலிகை இருக்கு. ஆமணக்கு விதை மாதிரி இருக்கிற அதோட விதை பருப்பச் சுத்தம் செய்யாம அப்பிடியே ரோசாப் பூவுல தடவி மூக்கு வழியா நல்லா மோந்து பார்த்தா கடுமையா பேதி போகும். இந்த மாதிரி நோவாத வைத்திய மொறைக்குப் பேருதான் `ராஜ வைத்தியம்’. (இவையனைத்தும் வாய்வழிக் கதைகளாகக் கூறப்படுபவையே. அறிவியல் பூர்வமானவை அல்ல)

அப்போ திடீர்னு, மீனாட்சி வாந்தியெடுக்கற சத்தம் கேட்டுச்சு.

ஜமீன்தாரு என்ன ஏதுனு பதறினாரு. பளியஞ்சித்தன், “பதட்டப்பட வேண்டியதில்லை சாமீ... அது மசக்கை வாந்தி”னு சொல்லிட்டு மரத்து நிழலைத் தாண்டி நடந்து கண்ணுக்கு மேலே கை நிழல் கொடுத்து வானத்தைப் பாத்தான்.

அவன் கண்ணுக்கு மட்டும் ஏதோ நட்சத்திரம் தெரிஞ்ச மாதிரி சந்தோஷமும் இல்லாம, கவலையும் இல்லாம ஒரு மத்திமமான புன்னகை அவன் தாடிக்குள்ள தெரிஞ்சுது.

அவனோட முக ரேகை ஜமீன்தாருக்கே வித்தியாசமா இருந்துச்சு. மருதோன்றிப் பூவுல இருந்து நல்ல வாசம் வர்றது தெரிஞ்சதும் நல்லா மோந்து பாக்க ஆரம்பிச்சாரு ஜமீன்தாரு.

“எனக்குத்தான் வாரிசு இன்னும் வரலை. அதுக்குத் தோதான சமயம் எப்போ வரும்?”னு கேட்டாரு.

“கவலைப்படாதீங்க சாமீ... அதுக்குத்தான் மூலிகைகள் தயார் செஞ்சுக்கிட்டிருக்கேன். அதே சமயத்துல உங்க பூர்வ புண்ணிய பாவ தோஷம் கழிக்க நீங்க நாலாவதா ஒரு கல்யாணம் செய்தாகணும் சாமீ..! அந்த நாலு ஜமீன்தாரிணிகளையும் ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயிலுக்குக் கூட்டி கிட்டுப் போயி, ‘புத்திர காமேட்டி யாகம்’ செய்தாகணும். அதுக்குப் பெறகு நான் குடுக்கப் போற மூலிகைக் கலயத்துல, சுத்தமான மழைத் தண்ணியத் தேக்கி வச்சு, குடிக்கறவங்களுக்கு ஆண் வாரிசு பலப்படும் சாமீ..!”னு சித்தன் சொல்லிக்கிட்டிருக்கும்போதே ஜமீன்தாரு கண் சொருகி தூங்கித் தூங்கி விழுந்தாரு.

தொணையாளுக ரெண்டு பேரும் எப்பவோ தூங்கியிருந்தாங்க. மருதோன்றிப் பூ வாசனை இவ்வளவு சீக்கிரம் கெறங்கவைக்கும்னு அவங்களுக்குத் தெரியாது.

இதுதான் நல்ல சந்தர்ப்பம்னு பளியஞ்சித்தன் அவசர கதியில எறங்க ஆரம்பிச்சான். சூரியனும் அவசரமா எறங்கிக்கிட்டிருந்துச்சு.

பளியஞ்சித்தன் குடிசைக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு அடுப்பு வெச்சான். இடது பக்கம் மாட்டுச் சாணத்தை எரிச்சு, கலயத்துல உசுர உண்டாக்குற, மலட்டுத்தனத்தப் போக்குற மூலிகைகளைப் பிரிச்சு பதப்படுத்திச் சாறெடுத்து சூரணம் லேகியம் தயார் செய்ய ஆரம்பிச்சான்.

வலது பக்கம் இருக்கற அடுப்புல அசுவச் சாணம்னு சொல்ற குதிரைச் சாண எருவு எரிச்சு, அந்தக் கலயத்துல மனுஷ உசுரக் கொல்லுற ஆலகால விஷம் தயாரிக்க ஆரம்பிச்சான்.

நாழிகை கடக்க... இடது கலயத்துல நீரெல்லாம் ஆவியாகி, வத்தி பச்சையா உசுரு லேகியம் தெரண்டு கலயத்துலயே ஒட்டிக்கிச்சு.

வலது பக்கக் கலயத்துல மஞ்சள் புகை வத்தி கன்னங்கரேர்னு வண்டி மசி மாதிரி கொடிதான ஆலகால விஷம் தேங்கி நின்னுச்சு. அந்தக் கலயத்த எடுத்துக்கிட்டு தூங்கிக் கிட்டிருந்த ஜமீன்தாரு பக்கத்துல போனான் பளியஞ்சித்தன்.

ஜமீன்தாரோட தலைமுடியில ஒண்ண உருவி அந்தக் கலயத்துல போட்டதும் அது சுருங்கி பஸ்பமாயிருச்சு.

ஜமீன்தாருக்குப் பக்கத்துல இருந்த அம்புகள்ல ஒண்ண எடுத்து அதோட கூர் முனைய கலயத்துல இருந்த விஷத்துல முக்கி எடுத்தான்.

சரியா, சூரியன் மேற்கு மலைக்குள்ள எறங்கி மறையற சமயம் வந்துச்சு.

வடக்குப் பக்கமா திரும்பி நின்னு வில்லுல அந்த விஷ அம்பைப் பூட்டி, விசைய மேல இழுத்துக் கண்ண மூடி மந்திரம் சொன்னான் பளியஞ்சித்தன்.

இன்னும் ஜமீன்தாரும் தொணையாளுகளும் மீனாட்சியும் கண்ணு முழிச்சுப் பார்க்கலே.

அடுத்த கட்டுரைக்கு