Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 15

வருச நாட்டு ஜமீன் கதை - 15
வருச நாட்டு ஜமீன் கதை - 15

“ஜமீன்தாருகிட்ட அம்புட்டையும் கேக்கப்போறீங்களா?” - புருஷன் முக ரேகையை ஆர்வத்தோட பார்த்துக் கேட்டா மீனாட்சி.

காலைல மொதல்ல கண்ணு முழிச்சுப் பாத்தது மீனாட்சிதான்.

அவ நியாயப்படி இன்னிக்குச் சூரியன் கண்ணு முழிக்கக் கூடாது. கண்ணுக்கெதிரா பாறைமேல பளியஞ்சித்தன் ஒத்தக் கால்ல நின்னு அம்பு பூட்டி, கண்ண மூடி தவத்துல இருந்தான்.

கூரான அம்பு முனையில ஆலகால விஷத்தோட அனல் பறந்துச்சு. அவனோட உடம்புல வலது பக்கம் வானத்தோட செவப்பு நெறம் பிரதிபலிச்சது.

விதிப்படி சூரியன் எந்திரிக்க... பளியஞ்சித்தன் கண்ணத் தொறக்க சரியா இருந்துச்சு. பாறையிலிருந்து எறங்கி வில்லையும் அம்பையும் ஜமீன்தாருக்குப் பக்கத்துல வச்சான். இன்னும் ஜமீன்தாரு எந்திரிக்கல.

பளியஞ்சித்தன் முதல் வேலையா ஒரு கறுப்புத் துணிய எடுத்துக்கிட்டு மீனாட்சிக்குப் பக்கத்துல வந்தான்.

“மீனாட்சி, இன்னிக்கு நடக்கறது எதையும் நீ கண்ணால பாக்கக்கூடாது. நானே ஆகாரம் தயார் செய்யறேன். தேசாந்தரமெல்லாம் சுத்தி நான் சேத்து வச்சிருக்கற ஞானத்துக்கு இன்னிக்குதுதான் தீட்சண்யம் கெடைக்கப் போகுது!”

வருச நாட்டு ஜமீன் கதை - 15
வருச நாட்டு ஜமீன் கதை - 15

“ஜமீன்தாருகிட்ட அம்புட்டையும் கேக்கப்போறீங்களா?” - புருஷன் முக ரேகையை ஆர்வத்தோட பார்த்துக் கேட்டா மீனாட்சி.

“பயப்படாத... ஜமீன்தாருகிட்ட நான் பக்குவமா சம்பாஷிக்கிறேன். உன் வயித்துல இருக்கற சிசு, அரண்மனை அத்தாட்சியோட பொறக்கும். கவலைப்படாதே... தெகிரியமா இரு”னு சொல்லி, மீனாட்சியோட கண்ணு புருவங்களுக்கு நடுவுல முத்தம் வச்சான். மீனாட்சி வயித்துல இருந்த சிசு சிலிர்த்துச்சு. கண்டமனூர் அரண்மனை வாசல்ல இருந்த கொன்ற மரமும் அதே நேரம் சிலிர்த்துச்சு.

மீனாட்சியோட கண்கள கறுப்புத் துணியால கட்டினான் பளியஞ்சித்தன்.

ஜமீன்தாரு முறுக்குவிட்டு புதுத் தெம்போட எந்திரிச்சாரு. மீனாட்சியோட கண்ணுல இருந்த கறுப்புத் துணியத்தான் முதல்ல விசாரிச்சாரு. ‘அது ஒரு விரதம்’னு பளியஞ்சித்தன் சொல்லி சமாளிச்சான். இன்னிக்குக் கறுப்பு நாள்னு ஜமீன்தாருக்கு அப்போ தெரியாது.

கடமைகள் அம்புட்டையும் முடிச்சிட்டு, குடிசயக் கடந்து நடந்து போயி, வேங்கை மரத்துக்கடியில உக்காந்தாங்க.

பளியஞ்சித்தன் தயக்கமில்லாம ஆரம்பிச்சான் -

“சாமீ... நீங்க அரசர் குலம். தெய்வத்துக்குச் சமமானவரு. நான் யாசிக்கறது எல்லாமே உங்களுக்குக் கோபத்தைத் தூண்டும். ஆனா, நீங்க சாந்தமா இருந்து, நம்ம நட்பை உறுதிப்படுத்தற சமயம் இன்னிக்குத்தான் வந்திருக்கு.

காரணமில்லாம காரியங்கள் கெடையாது. யாசகமானாலும் தனக்குனு யாசிப்பது இகழ், உலகத்துக்குனு யாசிப்பது புகழ். செயல் ஒண்ணுதான்; ஆனா கருத்து வேற வேற இல்லையா?

சிவபெருமானைக் கல்லால அடிச்ச சாக்கிய நாயனாரையும், வில்லால அடிச்ச விஜயனையும், பிரம்பால அடிச்ச அரிமர்த்தன பாண்டியனையும், காலால மிதிச்ச கண்ணப்பரையும் காத்து அருள் செஞ்சாரு.

ஆனா, அதே சிவபெருமானை பூ வில்ல வளச்சு புஷ்பக் கணைகளா வீசுன மன்மதனை, நெருப்புக் கண்ணு தொறந்து எரிச்சுக் கொன்னாரு. தெய்வத்தை மயக்கச் செய்யணும்னு மன்மதனோட நோக்கமா இருந்துச்சு!”

ஜமீன்தாரு நெத்தியச் சுருக்கி, “புதிர் வேணாம். உன்னோட நட்பு வேணும். உனக்கு என்ன வேணும்?”னு கேட்டாரு.

“சாமீ... உங்களச் சொல்லால அடிக்கறேன்னு தவறா நெனக்கப்படாது. சாந்தமா கேளுங்க”னு சொன்ன பளியஞ்சித்தன், ஒரு விதைய எடுத்து முன்னால வச்சான். அவனே தொடர்ந்து -

“இந்த மீனாட்சி யாரு தெரியுமா? உங்க வம்சத்துல வந்த ஒரு ஜமீன்தாருக்குப் பொறந்தவதான். அதனால மீனாட்சிக்குத் தாய்மாமன் மாதிரி நீங்கதான் இருந்து உபகாரஞ் செய்யணும்! அவ வகுத்துல பொறக்கப்போற சின்ன மீனாட்சி உங்க வம்சத்துக்குத் துணையா இருக்கப் போறா! இனி எத்தனை காலத்துக்கு நாங்க இந்த அத்துவானக் காட்டுல அஞ்ஞாத வாசம் வாழ முடியும்? உங்க குடும்பத்துல ஒண்ணா எங்களயும் சேக்கணும்!”

ஜமீன்தாரு கண்ணச் சுருக்கினாரு.

“அப்புறம்..?”

பளியஞ்சித்தன் ரெண்டாவது விதைய எடுத்து முன்னால வெச்சான்.

“இந்த வருச நாட்டு மண்ணுல பொறந்து, இந்த மண்ணுலயே வளந்த எங்க இனத்துப் பளியர்க இன்னும் எத்தன நாளைக்குத்தான் பல்லக்குத் தூக்கிகளா இருப்பாங்க? பளியர்க கண்டுபிடிச்ச வேலப்பர் கோயிலுக்கு பண்டாரகர்கள் பூசாரியா இருக்காங்க. அவங்கள ஒதுக்கிப்போட்டு, பளியர்களுக்கு வேலப்பர் கோயில் பூசாரி உரிமையைப் பட்டயம் எழுதித் தரணும்!”

“ம்... அப்புறம்..?”

மூணாவது விதைய எடுத்து முன்னால வெச்ச பளியஞ்சித்தன், “சாமீ... உங்களோட ஜமீன் அதிகாரத்துல என்னப் பிரதானியா நெயமிச்சு சனங்களுக்கு என் முகத்தை ருசுப்படுத்திப் போடணும். அரிய நாதர் மாதிரி உங்களுக்குப் பக்க பலமா இருந்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நெலங்கள எல்லாம் நான் செழும்பாக்குறேன்!”

மடமடனு சொன்ன பளியஞ்சித்தன், கண்ண மூடி மௌனமாயிட்டான்.

வருச நாட்டு ஜமீன் கதை - 15
வருச நாட்டு ஜமீன் கதை - 15

ஜமீன்தாரு, பளியஞ்சித்தன கூர்மையா பார்த்தாரு. அவன் முகத்துல எந்த உணர்ச்சியும் கண்டுபிடிக்க முடியல.

‘பூசணிக்காய்க்கு ஒரே விதை’னு ஆரம்பிச்ச சங்காத்தம், தேனு தினை மாவுனு பல்கிப் பெருகி, மீசலாவுளு சின்னம நயக்கரு செத்த பெறகு பளியஞ்சித்தனோட அஞ்ஞாத வாசத்தால ஜமீன்தாரு கத்துக்கிட்ட வித்தை அம்புட்டும் தானே கண்டுபிடிச்ச வித்தைனு சனங்கள நம்பவைக்கற அளவுக்கு வளந்து போச்சு.

இனிமேற்பட்டு, வருச நாட்டு மலையில பளியஞ்சித்தன் இன்னும் உசுரோடதான் இருக்கான், அவனோட ஜமீன்தாருக்கு சங்காத்தம் தொடருதுனு சனங்களுக்குத் தெரிசா என்ன நெனப்பாங்க? ஜமீன்தாரு, “நீ கேக்கறதெல்லாம் வாஸ்தவம்தான். இதையெல்லாஞ் செய்யலைனா என்ன மறுவார்த்தை வச்சிருக்க?”னு அமைதியா கேட்டாரு.

“நீங்க கத்துக்கிட்ட வித்தை முதக் கொண்டு கொசுக்கடியக் கட்டிப் போட்ட மந்திரம் வரைக்கும் எல்லாத்தையும் கட்டுப் பிரிச்சுப் போடுவேன்!”னு தயங்காம சொன்னான்.

ஜமீன்தாரு, கோபத்தை அடக்கி நிதானத்தை வரவழைச்சுக்கிட்டாரு.

“நீ கேக்கறது அம்புட்டும் நாயமானதுதான். எது நல்லதோ அத நேர்த்தியா செய்துபோடுறேன்”னு ஒரு மூடுமந்திரமா சொன்னாரு.

சந்தோஷப்பட்ட பளியஞ்சித்தன், “சாமீ... உங்களுக்கு நேத்து ஒரு கிளி கொடுத்தேனில்லையா, அது மாதிரி இன்னிக்கு ஒரு முயல் தரப்போறேன். அதை என் உசுரா நெனச்சு வளத்தேன். அதோட மகிமையச் சொல்றேன்”னு சொன்ன பளியஞ்சித்தன், குடிசைக்குப் பக்கத்துல வெளையாடிக் கிட்டிருந்த முயலப் புடிச்சுக்கிட்டு வந்தான்.

ஜமீன்தாருகிட்ட கொடுக்கப் போகும்போது, முயல் நழுவித் தாவி, ஓட்டம் பிடிச்சு, பாறைகளுக்கு நடுவில கிணறு மாதிரி இருந்த பள்ளத்துல வழுக்கி உள்ள விழுந்துச்சு.

பளியஞ்சித்தனுக்கு ஏதோ தன்னோட உசுரு நழுவிப்போற மாதிரி கெட்ட சகுனமாத் தெரிஞ்சுது. இருந்தாலும், ஜமீன்தாரு மேல நம்பிக்கை வச்சு, அந்தப் பள்ளத்துல கவனமா எறங்கித் தண்ணியில விழுந்த முயலத் தூக்குறபோது, அந்தத் தண்ணியில ஜமீன்தாரோட பிம்பம், வில்லு அம்போட அலை அலையா தெரிஞ்சுது.

ஆலகால விஷத்துலக் கூர் முனை கட்டின அம்பு, அனலாப் பறந்தடிச்சு வந்து பளியஞ்சித்தனோட உச்சந் தலையில ஆழமா பொளந்துச்சு. அதேசமயம் அரண்மனையில இருந்த கொன்ற மரம் ஒரு ஆட்டம் ஆடி பளியஞ்சித்தன் தலையில இருந்து சூடான ரத்தம் கொதிச்சுத் தெறிச்சு, எரிமலைக் குழம்பு மாதிரி விசிறியடிச்சது. அந்த விஷ அம்பு ஒவ்வொரு நூலா அவனோட தலைக்குள்ள எறங்க ஆரம்பிச்சது.

ஜமீன்தாரு இடுப்புல கைவச்சு பளியசித்தனப் பாத்துக்கிட்டேயிருந்தாரு.

ஒரு கையால அம்பைப் பிடிச்சுக் கிட்ட பளியஞ்சித்தன், “சாமீ... விதி வலியது. உங்க கையால என் தலை போற சமயம் இன்னிக்குத்தான்னு ஏற்கெனவே எனக்குத் தெரியும். அத மாத்திக் காட்டணும்னு எவ்வளவோ முயற்சி செய்தேன். விதிகிட்ட நாம ரெண்டு பேரும் தோத்துப் போனோம்.

இது நானே தயாரிச்ச ஆலகால விஷம். வலி இருக்காது. ஆனா, என் ரத்தத்துல முழுசாக் கலந்ததும் நான் பஸ்பமாயிடுவேன்.

என்னை அம்பு ஏவி அடிச்சதுல எனக்கு வருத்தமில்ல. அரச மரத்த வெட்டினா அதுக்குப் பேரு விறகு. சந்தன மரத்த வெட்டினா அப்பவும் அதுக்குப் பேரு சந்தன மரம்தான். என்னோட நட்பை யாரும் குறை சொல்ல முடியாது.

நட்புதான் விதியை மாத்தக்கூடிய சக்தியான ஆயுதம். அந்த நட்பை அலட்சியப்படுத்திட்டீங்க.

மனுசர்களுக்கு நட்பு மாதிரி வேற என்ன ஆபரணம் இருக்க முடியும்? நண்பனுக்குத் தீம்பு வர்றபோது அத நீக்கக் கூடயிருந்து துன்பப்படுறதுதான் நட்பு. முகம் வாடலாம். நண்பனோட மனசு வாடக் கூடாது.

ஆராய்ச்சி செஞ்சு பழகின நண்பன அப்புறம் சந்தேகப்படக்கூடாது. எனது நண்பராகிய உங்களோட செய்கைக்கு உங்களோட அறியாமைனோ, என் மேல உள்ள மிகுதியான உரிமைனோ எப்பிடி எடுத்துக்க முடியும்?

வருச நாட்டு ஜமீன் கதை - 15

ஊழ்வினைனு எடுத்துக்கிறேன். விதி வலியது. இந்த பாதகக் காரியம் நடந்ததுக்கு நானேதான் காரணம்.

கலிங்க நாட்டுல கபிலபுரத்திலிருந்து சங்கமன்னு ஒரு நகை வியாபாரி, சிங்கபுரம் வந்து நகை வாணிபஞ் செய்தான். அவனோட பகைவன் இன்னொரு நகை வியாபாரி பரதன். அந்தப் பரதன் அரசர்கிட்ட போயி, ‘சங்கமன், பகையரசனோட ஒற்றன்’னு பொய் சொன்னான். சிங்கபுர மன்னரு ஆராயாம கோபம் வந்து சங்கமனக் கொன்னு போட்டாரு.

சங்கமனக் கொல்றதுக்குக் காரணமாயிருந்த பரதன்தான் மறுபிறவியில கோவலனாப் பொறந்தான். கண்ணகியோட கால் சிலம்ப விற்கப்போனவன், ‘கள்வன்’னு சொல்லி பாண்டி மன்னரால கொலையுண்டு மாண்டுபோனான்.

அதுமாதிரிதான் நான் போன பிறவியில அரியநாதரா பொறந்து, எத்தன பேர் தலைய எடுத்திருப்பேனோ? இந்தப் பிறவியில உங்க கையால என் தலை போறதும் முன்செய்த தீவினதான் காரணம்.

ஆனா, விருந்தோம்பலுக்கு இலக்கணமா இருந்த என் பதிவிரதை மீனாட்சி முகத்துல நீங்க எப்பிடி முழிக்கப் போறீங்க? அவ வயித்துல வளர்ற சிசுவுக்கு என்ன பதில் வெச்சிருக்கீங்க? அவளோட சாபத்துக்கு முன்னாடி நீங்க நிக்க முடியுமா? சாபக்கட்டுப் பாவம் என் பொண்டாட்டிக்குச் சேரக்கூடாது.

என் சிசுவப் பார்க்காம நான் எப்பிடி சாகப்போறேனோ, அதே மாதிரி நீங்களும் உங்க வம்சாவளியும் மூணு தலைமுறைக்கு சிசுவப் பார்க்காமலே உறவு அந்துபோகும். இது வேலப்பர் மேல ஆணை.

வில்லத்து, விசையத்து...

கல்லத்து, கருமலையத்து...

கொடியத்து, கொன்னவன் உயிரத்து...

‘ஆ’ன்னவன், ‘ஊ’ன்னவன் அத்தன பேரும்

சொல்லத்து, சொன்னவன் நாவத்து...

கரு முளச்சு, பட்டமரம் தளச்சு...

தகப்பன் முகத்துல புள்ள முழிக்காம,

புள்ள முகத்துல தகப்பன் முழிக்காம,

வம்சாவளியத்து, தலைமுறையத்து...

அந்தக் காடே எதிரொலிச்சு அடங்க...

பளியஞ்சித்தன் உருகி உருகி பஸ்பமாகிப் போனான்.

அரண்மனையிலிருந்த கொன்ற மரத்தோட இலைகள் அம்புட்டும் உருகி, கண் இமைக்கிற நேரத்துல அது பட்ட மரமாச்சு!

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு