Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 16

வருச நாட்டு ஜமீன் கதை - 16
வருச நாட்டு ஜமீன் கதை - 16

வேலப்பர் நல்ல வழியக் காட்டுறார்னு ஜமீன்தாருக்குச் சந்தோஷம். ஆனா, அந்த சந்தோஷம் ஜமீன்தாரு முகத்துலகொஞ்ச நேரங்கூட தங்கல.

சோம்பேறித்தனமா தூங்கிக்கிட்டிருக்கிற சிங்கத்தைவிட சுறுசுறுப்பா அலையற நரி எவ்வளவோ மேலு இல்லையா?

பாவம், பளியஞ்சித்தன்!

தான் யாசிக்கப்போற விஷயம் ஜெயமாகாட்டி தனக்கு சாவு நிச்சயம்னு நல்லாத் தெரிஞ்சிருந்தும் பளியஞ்சித்தன் அதுக்காக சோம்பித் திரியல.

அதுக்காகவே ஆயத்தமாகி, முயற்சி செஞ்சது அவனுக்குக் கெடச்ச ஜெயம்னுதான் சொல்லணும். தன்னோட உசுரு ஜமீன்தாரு ராமகிருஷ்ண நாயக்கரால காவு போகப் போகுதுனு தெரிஞ்சும், எத்தனையோ ஆச்சரியமான கலைகள் தெரிஞ்சு வச்சிருந்தும் அவன் தப்பிக்க வழி தேடலையே...

வருச நாட்டு ஜமீன் கதை - 16
வருச நாட்டு ஜமீன் கதை - 16

முயலு, தன்னை விட்டு ஓடும்போது கூட பளியஞ்சித்தன் கெட்ட சகுனத்தை நம்பாம நண்பர்னு சொல்லி ஜமீன்தாரு மேல முழுசா நம்பிக்கை வச்சிருந்தானே.

ஆலகால விஷம் உச்சி மண்டையில பாஞ்சு, பளியஞ்சித்தன் உருகிப்போன பின்னாடி ஜமீன்தாரும் இதை ரோசனை செய்துதான் பார்த்தாரு. அதிகார போதையில ஆத்திரத்துல எடுத்த முடிவுதான். கொஞ்சம் சாந்தமா இருந்திருந்தா, தனக்கு இப்பிடி ஒரு சாபம் கெடச்சிருக்காதே!

பளியஞ்சித்தன் அப்படி என்னத்த கேட்டுட்டான்? இதுவரைக்கும் நமக்குத் துரோகம் செய்ததில்லையே. ஆனா, தான் நண்பனுக்கு செஞ்ச துரோகத்த நெனச்சு நெனச்சு ஏங்க ஆரம்பிச்சாரு ஜமீன்தாரு.

அன்னிக்குப் பளியஞ்சித்தன் உருகி பஸ்பமான பெறகு மீனாட்சிய பாத்த ஜமீன்தாரு, அவளோட கண்ணு கறுப்புத் துணியால எதுக்காகக் கட்டியிருந்துச்சுனு புரிஞ்சுக்கிட்டாரு. தன்னோட அம்புலேயே ஆலகால விஷத்தைத் தோச்சு வச்சிருந்ததும் ஏன்னு அப்போதான் ஜமீன்தாருக்கு புரிஞ்சது.

வருச நாட்டு ஜமீன் கதை - 16
வருச நாட்டு ஜமீன் கதை - 16

தான் சாகப்போற விஷயத்தைப் பளியஞ்சித்தன் முன்கூட்டியே தெரிஞ்சு வச்சிருக்கான். இது எப்பிடி? சாவை முன்கூட்டியே தெரிஞ்சுக்கிற வித்தையை மட்டும் தனக்கு ஏன் கத்துக்குடுக்கல? ஒருவேளை, அவன் கேட்ட மூணு விஷயத்தையும் நாம செய்து குடுத்திருந்தா அதுக்குப் பெறகு நமக்குக் கத்துக் குடுத்திருப்பானோ?

அதுக்குத்தான் கடைசியா முயல் குட்டிய எனக்குத் தரவந்தானோ? என் மனசுல இருந்த பொறாமை, துவேஷம் எப்பிடி அந்த முயலுக்குத் தெரிஞ்சுது? கையவிட்டு நழுவி ஓடிப் போயிருச்சே! அந்த முயல்கிட்டதான் அந்த மந்திரம், தந்திரம் எல்லாம் இருந்திருக்குமோ? இப்பிடி ஏகப்பட்டத ஜமீன்தாரு நெனச்சு நெனச்சு உருகிப்போயிட்டாரு.

மீனாட்சி பக்கம் திரும்பிக்கூட பார்க்காம அன்னிக்கு விறுவிறுனு அரண்மனைக்குக் கிளம்பி வந்துட்டாரு ஜமீன்தார். ஆனா, மீனாட்சி ஞாபகத்துலயே அவருக்கு ரெண்டு நாளா தூக்கம் இல்ல. சாப்பிடல. அவரோட மூணு பொண்டாட்டியும் ரொம்பக் கவலையோட விசாரிக்க ஆரம்பிச்சாங்க. ஜமீன்தாரு வாய் தொறந்து ஏதும் சொல்லல. எப்பிடி வெளிய சொல்ல முடியும்?

‘சரி... எல்லாம் போகட்டும். மீனாட்சிய எப்பிடியாவது கண்டுபிடிச்சாகணும்’னு ஏக்கமா இருந்தாரு. அவளுக்கு ஏதாவது பரிகார ஒதவி செய்தாகணும்.

பாவம்! வாயும் வயிறுமா இருந்தாளே... மலைக்காட்டுல ஏறி எறங்கி நடக்க முடியுமா? அவளுக்கு வேணுங்கிறத நடுக்காட்டுல யாரு தருவா?

எந்த நேரத்துல போனாலும் ஜமீன் தாருக்கு வள்ளிக்கெழங்கும், தேனும் மொகம் ரொப்பற சிரிப்போட கொடுத்தாளே. இப்போ அவளுக்குக் கொடுக்க ஆளில்லையே!

பாத்தது, பழகினது அம்புட்டையும் ஜமீன்தாரு நெனச்சுப் பாத்தாரு.

‘அம்புட்டுக்கும் காரணம், கோபம்தான்’னு நெனச்சாரு. அந்தச் சமயமே கோபத்தை விட்டுட்டு புது மனுஷரா வெளிய வரணும்னு முடிவு செய்தாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 16
வருச நாட்டு ஜமீன் கதை - 16

கண்ண மூடி அமைதியா உக்காந்தாரு. மனசு நெலப்படல. அரண்மனைக்குள்ளவே சோகமா அலைஞ்சாரு.

மீனாட்சி தன்னோட நெனப்புல வந்து, தலவிரி கோலமா தன்னோட ஜமீனப் பாத்து சாபம் விடுற மாதிரி தோணுச்சு. அவருக்குக் கண்ணகி கதை தெரியாமலா இருக்கும்?

வேலப்பர் கோயில் மலைக்குப் போயிட்டாதான் நிம்மதினு நெனச்சாரு. போனாரு. வேலப்பர் சந்நிதானத்துல சம்மணங்காலு போட்டு உக்காந்து உருகி உருகி வேண்டுனாரு.

‘நாம செய்ய வேண்டியது பரிகாரமா? பிராயச்சித்தமா? அம்புட்டு பேரும் கிரஹஸ்தன்தானே! நமக்கு வர்ற எடஞ்சலுக்கு தேடறதுதான் பரிகாரம்! செஞ்ச தப்புக்குச் செய்றது பிராயச்சித்தம். பளியஞ்சித்தனுக்குச் செய்தது, என்னோட குத்தம். அதனால பிராயச்சித்தம்தான் செய்யணும்.”

ஜமீன்தாருக்கு அந்த ஞானம் வந்துருச்சு. மீனாட்சியத் தேடிக் கண்டுபிடிச்சு அவளையும் அவளோட சிசுவையும் காப்பாத்தியாகணும்னு முடிவு எடுத்தாரு ஜமீன்தார்.

வருச நாட்டு ஜமீன் கதை - 16
வருச நாட்டு ஜமீன் கதை - 16

அதே சமயத்துல ஒரு நல்ல சேதியும் வந்துச்சு. “மீனாட்சியும் வேலப்பர் கோயில் மலமேல ஏறி நடந்து வந்துகிட்டிருக்கா”னு ஒரு ஆளு ஓடிவந்து சொன்னான்.

வேலப்பர் நல்ல வழியக் காட்டுறார்னு ஜமீன்தாருக்குச் சந்தோஷம். ஆனா, அந்த சந்தோஷம் ஜமீன்தாரு முகத்துலகொஞ்ச நேரங்கூட தங்கல.

நெனப்புல பயமுறுத்தினது போலவே மீனாட்சி தலவிரி கோலமா முகமெல்லாம் வீங்கிப்போயி எதிர்த்தாப்புல வந்து நின்னா.

ஜமீன்தார பார்த்ததும் அவ மொகத்துல கோபமெல்லாம் மறஞ்சு போச்சு. பொங்கிக்கிட்டு பாய்ஞ்ச அழுகைய மட்டும் அவளால அடக்க முடியல.

மீனாட்சி நெனச்சிருந்தா அரண்மனைக்கே வந்து நாயம் கேட்டிருக்கலாம். அத விட்டுட்டு நேரா கோயிலுக்கு வர்றாளே!

ஜமீன்தாரு தலையைக் கீழே போட்டுக்கிட்டு, “அழாத மீனாட்சி. குத்தம் என் பக்கம்தான். அதுக்கான பிராயச்சித்தம் செய்துபோடத்தான் வந்திருக்கேன்”னு சொன்னாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 16
வருச நாட்டு ஜமீன் கதை - 16

மீனாட்சி இப்பத்தான் மொத மொதலா நிமிந்து பாக்குறா. “என்னால நம்ப முடியலை சாமி..! நீங்ககூட எம் புருஷன்கிட்ட ‘நாம ரெண்டு பேரும் அடுத்த பிறவியில ஒரே தாய் வயித்துல பிறக்கணும்’னு சொன்னீங்களே..? எங்களோட விசுவாசமான நடத்தைதானே உங்கள அப்பிடிப் பேச வச்சிருக்கு? என் புருஷன்தான் என்னைக் கண்ணைக் கட்டி காட்டுல விட்டாரு. நீங்களாவது எனக்கு வழி காட்டியிருக்கக் கூடாதா?”னு தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சா.

ஜமீன்தாரால அவள ஆத்திக் கொண்டுவர முடியலை. அவளுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுத்தாரு.

ஆச்சு; ஆறு மாசம், ஒரு வருஷம் ஆச்சு.

ஜமீன்தாரு ராமகிருஷ்ண நாயக்கரு புத்தம் புது மனுஷரா இருந்தாரு. கோயில் குளங்கள எல்லாம் சீர்செய்ய ஆரம்பிச்சாரு. நெலங்கள ஏழை உழைப்பாளிகளுக்குக் கொடுத்துப் பயிர் பருவஞ் செய்ய ஏற்பாடு செய்தாரு.

‘எள்ளு விழுந்தா எடுக்க மகாசேனை, ஆளு விழுந்தாத்தான் தூக்க ஆளில்லை’னு ஒரு காலத்துல விட்டேத்தியா இருந்த ஜமீன், எவ்வளவோ மாறி இப்போ சனங்களோட சனமா நின்னு தோள் கொடுக்க ஆரம்பிச்சது.

சொன்னா நம்பமாட்டீங்க. அரண்மனையில ஆயிரக்கணக்குல புஸ்தகம் அடுக்கி வச்சு படிக்க ஆரம்பிச்சாரு.

அப்போதான் ஒரு விஷயத்தை ‘அபிதான சிந்தாமணி’ங்கிற புஸ்தகத்துல படிச்சாரு. அதாவது சங்ககாலப் பாண்டியர்கள்ல தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்கிட்ட முக்கியப் படைத்தலைவனா இருந்தது ‘பழையன் மாறன்’னு ஒரு பளியன்தான்.

இப்படி குமரகுருபரர், சிவப்பிரகாசர், தாயுமானவர், மதுரகவிராயர், அபிராமி பட்டர் இவங்கல்லாம் எழுதின புஸ்தகங்கள வாங்கிப் படிக்க ஆரம்பிச்சாரு.

கிறுக்கு துரைனு கூப்பிட்ட காமெல்லாம் மலையேறிப் போயி, இப்போ அம்புட்டு பேரும் ஜமீன்தார் ராமகிருஷ்ண நாயக்கர மனசுல வச்சுக் கும்பிட ஆரம்பிச்சாங்க.

மீனாட்சிக்குப் பொண்ணு பொறந்துச்சு. சின்ன மீனாட்சி! அவளுக்கு வேண்டிய அம்புட்டும் ஜமீன்தாரு செய்து வெச்சாரு.

வருச நாட்டு ஜமீன் கதை - 16
வருச நாட்டு ஜமீன் கதை - 16

ஆனா, ஜமீன்தாருக்குத்தான் வாரிசு இல்லாமலே இருந்துச்சு. அதனால வாரிசுக்காக நாலாவதா ஒரு கல்யாணம் செய்துக்கிட்டாரு. ஆக, ஜமீன்தாருக்கு குப்பம்மாள், வீர சின்னம்மாள், வேலாண்டியம்மாள், பொம்மை யம்மாள்னு நாலு துணை ஆகிப்போச்சு.

பளியஞ்சித்தன் சொன்ன மாதிரியே ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு நாலு பொண்டாட்டிகளையும் கூட்டிட்டுப் போயி, புத்திர காமேட்டி யாகம் செய்தாரு. ஆயிரம் பேருக்கு அன்னதானம். பலன் ஒடனே கெடச்சது!

நாலாங் கல்யாணம் கூடுன வேளை, ரெண்டாவது ஜமீன்தாரிணி வீர சின்னம்மாளுக்கு கரு உண்டாச்சு.

என்ன கொடும..!

அரண்மனையில இருந்த அந்தக் கொன்ற மரம், நாலு இலைவிட்டு

மஞ்சளா ஒரு பூ பூத்துச்சு. சித்தன் சிரிக்கிற மாதிரியே அந்தப் பூவும் பல்லு விரிச்சி காத்துல ஆட...

பெரிய வீட்டு நாயக்கருதான் இத மொத மொதலாப் பாத்தாரு.

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு