Published:Updated:

வருச நாட்டு ஜமீன் கதை - 17

வருச நாட்டு ஜமீன் கதை - 17
வருச நாட்டு ஜமீன் கதை - 17

பழனி போய்ச் சேர்ந்ததும் பல்லக்கை இறக்கினாங்க. ஆனா, ஜமீன்தாரு ரொம்ப நேரமா இறங்கவே இல்ல. என்னமோ ஏதோனு பதறிப்போயி பல்லக்குத் திரைய விலக்கிப் பாத்தா...

பெரிய வீட்டு நாயக்கரு ஜமீன்தாருகிட்ட போயி, “கொன்ற மரத்துலதான் பளியஞ்சித்தன் தன்னோட சாப சக்தி அம்புட்டையும் எறக்கி வச்சிட்டுப் போய்ட்டான்! இத வெட்டி வைகை ஆத்துக் கரையில வச்சு தீயில எரிக்கணும். அந்தச் சாம்பலை தண்ணியில கரைச்சுப் போடணும். நம்ம ஜமீனுக்குக் கெட்ட சகுனமே அந்த மரந்தான். நம்ம வம்சாவளி தழைக்கணும்னா அந்த மரத்த துரும்பு தெரியாம அழிச்சுப் போடணும். அப்புறம் பாருங்க...

சாபமாவது, பூதமாவது...”னு சொல்லி முடிக்கறதுக்குள்ள -

“கொஞ்சம் நிறுத்துங்க. நான் ஏற்கெனவே செஞ்ச பாவம் போதும். என்னோட சினேகிதர் ஞாபகமா இருக்கிற இந்த மரத்த வெட்ட மாட்டேன். அது பட்டுப் போயிருந்தாலுஞ் சரி. நான் உசுரோட இருக்கிறவரைக்கும் இது உறுதியா இருக்கும்”னு சொன்ன ஜமீன்தாரு, படியிலயிருந்து எறங்கி வந்து அந்த மரத்தை ஆறுதலா தடவிக்குடுத்தாரு.

பளியஞ்சித்தன் உருகிச் செத்த பெறகு ஜமீன்தாரு ஒவ்வொரு கோயிலா பல்லக்குல போயி அன்னதானம் செய்துக்கிட்டிருந்தாரு.

இப்பிடி காசு பணத்தக் கணக்கு பாக்காம, வீரபாண்டி கோயிலுக்குப் பக்கத்துல ராஜகம்பளத்தாருக்கு ஒரு மண்டபம் கட்டினாரு. தெப்பம்பட்டி மலையடிவாரத்துல குலதெய்வம் ஜக்கம்மாளுக்கு கோயில் கட்டினாரு. இன்னிக்கும் பேர் சொல்ற மாதிரி தேனிக்குப் பக்கத்துல இனாமா எடங்குடுத்து அரண்மனைப்புதூர், காமாட்சிபுரம்னு ஊருகள உருவாக்கினாரு. திருப்பதி தேவஸ்தானத்துக்கு தன்னோட எடைக்கு எடை நாணயங்கள அனுப்பி வச்சாரு.

பழனி ராஜ வீதியில ஒரு மண்டபத்தைக் கட்டி, ஒவ்வொரு தைப்பூசத்துக்கும் அங்க போயி தங்கி இருந்து பழனியாண்டவர கும்பிடணும்னு வேண்டிக்கிட்டாரு.

இப்போ ஜமீன்தாரிணி வீர சின்னம்மாவுக்குக் கரு உண்டானதும் பழனி கோயிலுக்குப் பல்லக்குல பொறப்பட்டுட்டாரு. பளியருங்கதான் பல்லக்கைத் தூக்கிட்டு நடந்தாங்க.

பழனி போய்ச் சேர்ந்ததும் பல்லக்கை இறக்கினாங்க. ஆனா, ஜமீன்தாரு ரொம்ப நேரமா இறங்கவே இல்ல. என்னமோ ஏதோனு பதறிப்போயி பல்லக்குத் திரைய விலக்கிப் பாத்தா...

ஜமீன்தாரு ராமகிருஷ்ண நாயக்கரு கோயில் பக்கமா தலையத் திருப்பி கை கும்பிட்ட நெலயில கண்ணு மூடி இருந்தாரு. பல்லக்குலயே அந்த மகானுபாவரோட உசுரு பறந்து போயிருந்துச்சு!

‘ஜமீன்தாரு கடைசி கடைசியா செஞ்ச புண்ணியந்தான் அவரோட காலு தரையில படாம உசுரு பிரிஞ்சது’னு சனங்க பேசிக்கிட்டாங்க.

பாவம், கண்டமனூர் அரண்மனையில அவர் விட்டுட்டுப் போறது நாலு விதவைகளும் அதுல ரெண்டாவது ஜமீன்தாரிணி வீர சின்னம்மா வயித்துல வளர்ற நாப்பத்தெட்டு நாள் சிசுவுந்தான்.

ஜமீனுக்கு அடுத்த வாரிசு வேணுமில்லையா? பொறக்கிறது ஆணா, பொண்ணா?

வருச நாட்டு ஜமீன் கதை - 17
வருச நாட்டு ஜமீன் கதை - 17

ஆண் பொறந்தா அவருக்கே பதினெட்டாவது வயசுல ஜமீன் வாரிசுப் பட்டம் கட்டிருவாங்க. பொண்ணு பொறந்தா..?

அதுக்குத்தான் ஜமீன்தாரோட பங்காளிக ஆர்வமா காத்துக்கிட்டிருக்காங்க. வயித்துக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கிற உசுரு ஆம்பள உசுரா இருக்கப்போயிதான் ஜமீன்தாருக்கு இந்த முடிவுனு அவங்களுக்கு எங்க தெரியப்போகுது?

வாரிசு உரிமை தனக்குத்தான் வேணும்னு பங்காளி ராமசாமி நாயக்கரு ஒத்தக்கால்ல நின்னாரு. வெள்ளக்கார கலெக்டர் துரைகிட்ட பிராது கொடுத்துட்டு காத்துகிட்டிருந்தாரு.

நல்லவேள... ஆண் கொழந்தை பொறந்துச்சு.

‘சிசு முகத்தப் பாக்காம ஜமீன்தாரு கைலாச பதவி அடஞ்சுட்டாரு. அப்பன் முகத்தப் பாக்க சிசுவுக்கும் கொடுத்து வெக்கல. பளியஞ்சித்தன் சாபம் சரியா பலிச்சிருச்சே’னு சனங்க ஒரு பக்கம் கவலைப்பட்டாலும் மறுபக்கம் ஆண் வாரிசு பொறந்துருச்சுனு சந்தோஷமா கொண்டாடினாங்க.

மதுரை கலெக்டர் துரை அந்தக் குழந்தைக்கு இங்கிலீஸ்ல அத்தாட்சி கொடுத்தாரு. அந்த மைனர் குழந்தைக்கு பதினெட்டு வயசு வர்ற வரைக்கும் கலெக்டர் பொறுப்புல கோர்ட் வார்டு மூலமா தத்து எடுத்து வளர்க்க முடிவு செஞ்சாங்க.

இங்கிலீஸ் சொல்லிக்குடுக்க ‘ஜார்ஜ் கெல்’னு ஒரு பிரிட்டிஷ்காரனை நெயமிச்சாங்க. அவரு கண்டமனூர் அரண்மனையிலயே தங்கி உலக விஷயம் எல்லாம் அந்த மைனருக்கு சொல்லிக் குடுத்தாரு.

அரண்மனையில சாப்பாட்டு மேஜை, அந்தர் விளக்கு, சுவர் அலங்காரம், பூந்தொட்டி இப்பிடி எல்லாமே இங்கிலீஸ் காரங்க பழக்கத்துக்கு மாறிப்போச்சு. பாய்லர் மோட்டாரு போட்டு மந்தை கெணத்துலயிருந்து அரண்மனைக்குத் தண்ணி கொண்டு வந்தாங்க.

சென்னப் பட்டினத்துக்குப் போயி எல்லாத்தையும் நேர்முகஞ் செய்து வச்சு, ‘கோட்டு, சூட்டு, பூட்டு’னு பழக்கி விட்டாரு.

திருவாங்கூர் மகாராஜா பையன்கூட சென்னப் பட்டினத்துலயே தங்கி மூணு வருஷம் படிச்சாரு. அப்போதான் வித விதமா போட்டா படம் பிடிச்சுருக்கிறாரு. இங்கிலீஸ் பொம்பளைங்களோட கை குலுக்கிப் பழகுறதுல அந்த மைனருக்கு அலாதிப் பிரியம். மைனரா இருக்கிறபோதே மது, மாது, விருந்துனு ஒரே தடபுடல்தான்.

இப்போ புரிஞ்சுபோச்சா.. இவருதான் நான் மொத மொதலா கதையில ஜனகத்தோட பின்னி வெச்சு சொல்ல ஆரம்பிச்ச சின்ன ஜமீன்தார் சாமியப்ப நாயக்கரு. இவருக்குத்தான் பதினெட்டாவது வயசுல கண்டமனூர் ஜமீன்தாரா பட்டம் கட்டுறாங்க.

சென்னப் பட்டினத்துல இருந்த ஜனகத்த சாரட் வண்டியில தூக்கிட்டு வந்தது, வைகை ஆத்துக்கரையில அவளுக்குச் ‘சின்ன அரண்மனை’ கட்டி வச்சது, மயிலாடும்பாறையில யானைகள கூட்டிக்காட்டி வெள்ளக்காரனுக்கு தன்னோட ஜமீன் ஐவேஜ் என்னன்னு காட்டினது, கல்யாணமே செய்துக்க மாட்டேன்னு இருந்தவருக்கு மாம்பாறைப் பொண்ணு வேலுத்தாயம்மாவைக் கல்யாணம் செய்து வச்சது எல்லாமே உங்களுக்குத் தெரிஞ்சதுதானே.

வேலுத்தாயம்மாவுக்கும் கரு உண்டானதால அரண்மனையில இருந்த பட்டுப்போன கொன்ற மரம் இருவத்தி நாலு வருஷத்துக்கு அப்புறமா, திரும்பவும் நாலு இலை தளிர்விட்டு மஞ்சளா ஒரே ஒரு பூ பூத்துச்சுனு சொல்லி முடிச்சிருந்தேன்.

இப்ப சொல்லுங்க... ஜமீன்தாரு சாமியப்ப நாயக்கருக்கு, செத்துப்போன பளியஞ்சித்தனும் அவனோட வாரிசு சாபமும் நெனப்புக்கு வருமா, வராதா? நம்ம ஜமீன்தாரு உசுருக்கு பயந்து நடுங்கறது வாஸ்தவந்தானே. இதுக்குத்தான் கல்யாணமே செய்துக்க மாட்டேன்னு அடம்பிடிச்சாரு.

பெரிய வீட்டு நாயக்கருக்கு இப்போ வயசு எழுபதுக்கு மேல ஆச்சு. ஜமீன்தார சமாதானப்படுத்தினாரு.

“நீங்க அம்மா வயித்துல இருக்கும் போதே இந்த மரத்தை வெட்டிடலாம்னு சொன்னேன். உங்க அப்பா பெரிய ஜமீன்தாரு எம்பேச்சைக் கேக்கல. வெட்டவே கூடாதுனு தடுத்துட்டாரு. இப்பவும் சொல்றேன். அந்த மரத்தை வெட்டி எரிச்சுப்போடுங்க, சாபமெல்லாம் ஒண்ணும் செய்யாது”னு கேட்டுக்கிட்டாரு. அப்பாவுக்குச் சொன்னதயே இப்ப மகனுக்கும் சொன்னாரு பெரிய வீட்டு நாயக்கர். காரியதரிசி சீனிச்சாமி நாயக்கரும் அதாஞ் சரின்னாரு.

அதுபடிக்கு, ரெண்டு ஆளுகள விட்டு அந்த மரத்த வெட்டச் சொல்லிட்டாரு ஜமீன்தாரு. கோடாலி, வெட்டருவா அம்புட்டும் எடுத்துக்கிட்டு அந்த மரத்தை வெட்டப் போகும்போது.. சர்ர்ர்ருனு ஒரு கருநாகப் பாம்பு சீறிப் பாஞ்சு ஒருத்தன ஒரே போடாப் போட்டுச்சு. அந்த எடத்துலயே அவன் நொர தள்ளி செத்துப் போனான். தப்பிச்சேன், பொழச்சேன்னு ஓடிப்போன இன்னொருத்தன் ஜன்னி வந்து ரெண்டாம் நாள் வாயப் பொளந்துட்டான்.

அதுக்குப் பெறகு அந்தக் கொன்ற மரத்த வெட்டுறதுக்கு யாருக்கும் துணிச்சல் வரல. எவ்வளவோ ஜோசியர்கள அரண்மனைக்குக் கூட்டிக்கிட்டு வந்து அவங்களுக்கு காசு பணத்தை அள்ளி அள்ளிக் குடுத்ததுதான் மிச்சம்.

வருச நாட்டு ஜமீன் கதை - 17
வருச நாட்டு ஜமீன் கதை - 17

நம்ம ஜமீன்தாரு விரக்தியடஞ்சு ‘விதி விட்ட வழி’னு தாடி வளக்க ஆரம்பிச்சாரு. குடும்பக் கவலை வேற.

ஒரு பக்கம் ஜனகம்... மறுபக்கம் வேலுத்தாயம்மா.

வேலுத்தாயம்மா இருக்காங்களே... வெவரமான பொம்பள. ஓரளவு படிச்சவங்க. சேலை கட்டுறதுல ஆகட்டும், சாப்பாடு விஷயமாகட்டும், பேசுறதுல ஆகட்டும் எல்லாத்துலயும் ஒரு கட்டன்ரேட்டா இருப்பாங்க. கொஞ்ச வயசுதான். ஆனா, ஒரு கெழவிக்கு இருக்கற அறிவோட வேல செய்வாங்க. அரண்மனைக்கு வந்த புதுசுல அமைதியாத்தான் இருந்தாங்க. அதுக்குப் பெறகு நம்ம ஜமீன்தாரோட பழக்க வழக்கத்த மாப்ள நாயக்கருக அப்பிடி இப்பிடினு கோள் சொல்லி மூட்டி வெச்சுட்டாங்க.

அதுமட்டுமில்ல... விடிஞ்சு எந்திரிச்சா தேவகோட்டை செட்டியாரு ஆளுக கடன் பாக்கிய வசூல் செய்யணும்னு வந்து அரண்மனைல காத்திருக்க ஆரம்பிச்சாங்க.

அன்னிக்கு ஜமீன்தாரு ஜென்ம நாளு. வேலுத்தாயம்மாவோட அண்ணன் குமரக் கதிரைய நாயக்கரு அரண்மனைக்கு வந்திருந்தாரு. வாசல்ல இருந்த கடன் காரங்களைப் பாத்து நேரா உள்ள போயி தங்கச்சி வேலுத்தாயம்மாகிட்ட, “நீ வாயும் வயிறுமா இங்க கெடந்து தவிக்கிற. உம் புருஷன் அந்தத் தட்டுவாணி சிறுக்கி வீட்டுல தோச பணியாரம் சாப்பிட்டுக் கிட்டிருக்காரு. இப்பிடித்தான் நீ குடும்பம் நடத்துற லட்சணமா?”னு கொஞ்சம் ஒரக்கவே ரோசப்படுத்தினாரு.

வேலுத்தாயம்மாவுக்கு உச்சி மண்டையில கோவம் பத்திக்குச்சு. கண்ணப் பாத்தப்பவே தெரிஞ்சது.

அம்புட்டுதான். சின்ன அரண்மனைப் பக்கம் என்னிக்குமே போகாத வேலுத் தாயம்மா, அன்னிக்கு வெடுக் வெடுக்குனு நடந்து வைகை ஆத்தங்கரைக்குப் போனாங்க. அரண்மனை மேல ‘வாணி விலாசம்’னு எழுதியிருந்த சுண்ணாம்பு எழுத்து பளிச்னு கண்ணுல பட்டுச்சு. காவக்காரனுக வாயப் பொத்தி குனிஞ்சு கும்பிடு போட்டு வழிவிட்டானுக. ‘இன்னிக்குத்தாண்டா அரண்மனையில தீபாவளி’னு மனசுக்குள்ள நெனச்சு ‘களுக்’னு சிரிச்சுக்கிட்டாங்க.

உள்ள நொழஞ்சு பாத்தா... அண்ணங்காரன் சொன்னது சரியாத்தான் இருந்துச்சு.

ஜமீன்தாரு ஒரு கையால ஜனகத்தோட இடுப்ப வளச்சு பிடிச்சிருந்தாரு. பக்கத்துல ஒட்டி ஒரசி நின்னுகிட்டு அவருக்கு பணியாரத்த ஊட்டி விட்டுக்கிட்டிருந்தா ஜனகம். அவமேல ஏகப்பட்ட நகைகள் மின்னிக்கிட்டு இருந்துச்சு. புதுச் சேலை யோட ஜரிகை கண்ண உறுத்துச்சு.

விடுவிடுன்னு நேரா நடந்துபோன வேலுத்தாயம்மா, பணியாரத் தட்டப் பிடுங்கி ஜனகத்து மேலயே வீசி எறிஞ்சா.

“ஏண்டி, உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? நீ சல்லாபம் நடத்துறதுக்கு எம் புருஷன்தான் கெடச்சாரா? இப்பமே இந்த இடத்த விட்டுட்டு ஓடிப்போயிரு. இல்லன்னா நடக்கிறதே வேறயாக்கும்”னா.

ஜமீன்தாரு வேலுத்தாயம்மாகிட்ட ஓடிப்போயி, “இந்தா பாரு, உனக்கு ஜனகம் ஏதாவது தொந்தரவு தந்தாளா? அவ பாட்டுக்குத் தனியா இருக்கா. உன்ன யாரு இங்க வரச் சொன்னது?”னு கேட்டாரு.

“என்ன யாரு வரச் சொல்லணும்? எனக்கு அதிகாரமில்லையா? நான் யாருனு இவளுக்குத் தெரிய வேணாமா? மாம்பாறை ஜமீன்தாரு பொண்ணு! இவ விலாசம் நாறிப்போனவ. இவளுக்கு ஒரு வாணி விலாசமாம்... நம்ம வம்சத்தையே நாசம் பண்ண வந்தவ. வௌங்குவாளா? அந்த ஜக்கம்மா நல்லா கேப்பா.”

“இப்போ என்ன குடி முழுகிப் போச்சுனு இந்தக் கத்து கத்தற?”

“இனிமேதான் குடி முழுகணுமா? அங்க வந்து வாசல்ல உக்காந்து இருக்காங்களே... அந்தக் கடன்காரங்கள வந்து பாருங்க. எல்லாத்தையும் இவகிட்ட கூட்டிக்கிட்டு வந்து விடுங்க. இவளுக்குத் தான அம்புட்டு நகைகளும் செஞ்சு போட்டீங்க. வக்கத்தவளுக்குப் போயி வக்காலத்து பேசுறீங்களே?”னு கத்திக் குமிச்சுட்டா வேலுத்தாயம்மா.

திரும்பி வாசலப் பாத்து நடக்க ஆரம்பிச்சாங்க. அப்போதான் அந்த போட்டா படத்தை - சென்னப் பட்டினத்துல வெச்சு ஜமீன்தாரும் ஜனகமும் எடுத்த போட்டா படத்தைப் பார்த்தா. ஜமீன்தார கோபமா திரும்பிப் பார்த்துட்டு அந்த போட்டா படத்தை வெடுக்குனு பிடுங்கி தரையில போட்டு ஒடச்சா.

ஜனகம் அதுவரைக்கும் ஒண்ணுமே பேசல. அழுதுகிட்டே நின்னுக்கிட்டு இருந்தா.

வேலுத்தாயம்மா கோபமா சீறிக்கிட்டுப் போன பின்னாடி ஜனகம், ஜமீன்தாரோட கையப் புடிச்சு, “நீங்க போயி சமாதானப்படுத்துங்க. பாவம் புள்ளத்தாச்சி. என்னப் பத்திக் கவலைப்படாதீங்க. நான் ஒண்ணும் நெனக்கமாட்டேன், போயிட்டு வாங்க”னு அனுப்பி வெச்சா.

ஜமீன்தாரு அரண்மனைக்குப் போயி வேலுத்தாயம்மாவ சமாதானப்படுத்த முயற்சி செஞ்சாரு.

“உன் வயித்துல இருக்கிற குழந்தைதான் எனக்கு எமனா வரப்போகுது. நான் அதுக்குப் பயந்து செத்துக்கிட்டிருக்கேன். நீ வேற இடையில வந்து என்ன நிம்மதி இல்லாம செய்துகிட்டிருக்கியே, இது நாயமா?”

“நீங்க செய்றது மட்டும் நாயமா? எதுக்கு சாபம், சாவுனு பயப்படுறீங்க. நீங்க கூட்டிக்கொண்டு வந்து வெச்சிருக்கீங்களே, ஜனகம்னு ஒரு பூதம்... அத மொதல்ல வெரட்டுங்க. அப்புறமா பேய்க்கும் பயப்பட வேணாம், பிசாசுக்கும் பயப்பட வேணாம்.”

“வாய மூடுறயா இல்லயா? ஜனகம் இன்னிக்கு வந்தவ இல்ல. உன்னக் கல்யாணம் செய்துக்கிறதுக்கு முந்தியே இங்க வந்தவ. தெரிஞ்சுக்கோ. உனக்கு என்ன குறை வெச்சிருக்கேன்? எதுக்கு இப்படிக் கத்தற?”

அப்பத்தான் வேலுத்தாயம்மா ஒண்ணு கேட்டா!

- தொடரும்

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan

அடுத்த கட்டுரைக்கு